மலர்மன்னன்
ஃபிப்ரவரி 03 அண்ணா நினைவு நாள் கட்டுரை
—
தேசிய உணர்வும் ஆன்மிக ஈடுபாடும் மிக்க நகரத்தார் சமூக இளைஞர்கள் சிலர் 1917 ஆம் ஆண்டு காரைக்குடியில் ஹிந்து மதாபிமான சங்கம் என்ற பெயரில் ஒரு பொது நலப் பணிக்கான அமைப்பைத் தோற்றுவித்திருந்தனர்.
தமிழ் இதழியல் முன்னோடிகளுள் குறிப்பிடத் தக்கவரும், விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை வாசம் செய்தவரும், ஆழ்ந்த ஆன்மிக நாட்டம் உள்ளவரும், நகரத்தார் சமூகத்திற்கே உரித்தான ஈகைக் குணம் மிக்கவருமான ராய. சொக்கலிங்கம் (1898-1974), தமது சகா சொ. முருகப்பாவையும் இன்னும் சில நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு தொடங்கிய சங்கம் அது.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் கடையத்தில் இருந்த காலத்தில் ரா.சொ. அழைப்பை ஏற்று, 1919 செப்டம்பர் 9 அன்று காரைக்குடி சென்று ஹிந்து மதாபிமான சஙகத்தில் உரையாற்றியும் தமக்கே உரித்தான இடிக் குரலில் பாடல்கள் பாடியும் மகிழ்வித்தார் என்பது சங்கத்தின் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்ச்சி. இங்கேதான் பாரதியாரின் புகழ்பெற்ற செங்கோல் ஏந்திய கோலத்தில் அவர் அமர்ந்திருக்கும் புகைப் படம் எடுக்கப்பட்டது!
ராஜாஜி, திரு.வி.க. எனப் புகழ் வாய்ந்த தலைவர்கள் பலரும் பங்கேற்ற சிறப்பு, காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்திற்கு உண்டு. மேன்மை மிக்க ஆன்மிகத் தலைவர்களும் அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்துள்ளனர்.
இவ்வளவு பெருமை வாய்ந்த காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தின் பொன்விழா ஆண்டாக 1967 ஆம் ஆண்டு அமைந்தது. அண்ணா அவர்கள் தமிழ் நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்றுப் பணியாற்றிக் கொண்டிருந்த ஆண்டு!
முதல்வர் அண்ணா அவர்கள் ஒரு பள்ளிக்கூடத் திறப்புவிழாவில் பங்கேற்றபோது அதில் கலந்துகொண்ட ஹிந்து மதாபிமான சங்கத் தலைவர் ராய. சொ., சங்கத்தின் பொன்விழாவைத் தொடங்கி வைக்க வேண்டும் என்று அண்ணாவிடம் கேட்டுக்கொண்டார்.
’ஒருவேளை, மாநிலத்தின் முதலமைச்சராக நான் இருக்கிறேன் என்பதால் ஒரு சம்பிரதாயத்திற்காகவே ஹிந்து மதாபிமான சங்கத்தின் பொன்விழாவைத் தொடங்கிவைக்க நீங்கள் என்னை அழைத்தாலும், முதலமைச்சராக அல்ல, அண்ணாதுரையாகப் பொன்விழாவில் கலந்துகொள்கிறேன்’ என்று வாக்களித்து, ராய. சொ. அவர்களுக்கு அண்ணா வியப்பூட்டினார்கள்.
வாக்களித்தவாறே அண்ணா அவர்கள் செப்டம்பர் 9, 1967 அன்று காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கப் பொன்விழாக் கூட்டத்தில் பங்கேற்று, பொன்விழாவை ஆரம்பித்துவைத்து ஓர் அருமையான உரையினை ஆற்றினார்கள்.
தொடக்கத்தில் அண்ணாவை வரவேற்று உரையாற்றிய சங்கத் தலைவர் ராய. சொக்கலிங்கம், முதல்வராக அல்ல, அண்ணாதுரையாகப் பொன்விழாவில் பங்கேற்பதாக அண்ணா தெரிவித்ததைக் குறிப்பிட்டு, அதன் உட்பொருளை வெகுவாகச் சிலாகித்தார். ஆகவே, நமது முதலமைச்சர் அண்ணா அவர்கள் மதத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க முடியாது என்றார். அது அண்ணா அவர்களுக்குப் பேசுவதற்கு அடி எடுத்துக்கொடுத்த மாதிரி ஆகிவிட்டது!
அன்று காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கப் பொன்விழாவைத் தொடங்கி வைத்து அண்ணா அவர்கள் ஆற்றிய உரை, அண்ணாவின் குறிப்பிடத்தக்க உரைகளுள் ஒன்று.
மதத்திற்கு மனிதன் அப்பாற்பட்டவனாக இருக்கிறான் என்பதைவிடவும் மனிதனுக்கு அப்பாற்பட்டு மதம் இருக்கிறது என்பதுதான் இன்று இருக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று என்று அண்ணா அன்றைய தமது உரையில் சொன்னார்கள். மதத்திற்கு அப்பாற்பட்டவன் அல்ல, ஆனால் மதத் துப்புரவாளன்-மதச் சீர்திருத்தக்காரன் என்று தம்மை வர்ணித்துக்கொண்டார்.
’’ நம்முடைய ராய். சொ. அவர்கள் எடுத்துச் சொன்னபடி, மிகப் பெரியவர்கள், நாட்டினுடைய வரலாற்றிலே பொறிக்கத்தக்க நற்செயல்களைச் செய்தவர்கள், பெரும் புலமை பெற்றவர்கள், சிறந்த கவிஞர்கள், இவர்கள் எல்லாம் இந்த மன்றத்திற்கு வந்திருக்கிறார்கள் என்று அவர்கள் குறிப்பிட்டார்கள். இவ்வளவுபேர் வந்து சேர்ந்த இடத்தில், அப்படி ஒரு பூங்காவில், அரசர்களும், அரசிளங்குமரிகளும், அரசிளங்குமரர்களும் உலாவினாலும் ஒவ்வொரு வேளையில் காவல்காரன் நுழைவதைப் போல அவ்வளவு பெரியவர்களும் வந்து சேர்ந்த இடத்திற்கு நானும் வருவதற்கு வாய்ப்புக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் ஒரு பூங்காவில் அரசர்களும் அரசிளங்குமரர்களும் மட்டுமல்ல, சிற்சில வேளைகளில் காவல்காரன் வந்துபோவது பூங்காவுக்கேகூட நல்லது. ஆகையினாலேதான் இதிலே நான் வந்து கலந்துகொள்ள வேண்டும் என்று ராய. சொ. விரும்பினார்கள் என்று நான் கருதுகிறேன்’’ என்று அண்ணா சொன்னபோது பெரும் கரவொலி எழுந்தது.
மனதிற்கு அப்பாற்பட்டு, மனித உணர்ச்சிகளை மதியாமல், மனித குலத்திற்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளைத் தீர்க்காமல் மனித குலத்திலே தோன்றுகிற வேற்றுமைகளைக் களையாமல், மனிதர்களின் மனதிலே தோன்றுகிற மாசுகளைத் துடைக்காமல் மதம் இருக்குமானால் மனிதனுக்கு மாண்பு அளிக்காமல் ஒரு மதம் இருக்குமானால் அப்படிப்பட்ட மதத்தை மனித குலத்திற்கு அப்பாற்பட்ட மதம் என்று நாம் சொல்லலாம் என்றார், அண்ணா.
எந்த மதமாக இருந்தாலும், அதைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கின்ற கருத்துகள், ஏடுகளிலே குறிக்கப்பட்டிருக்கின்ற தத்துவங்கள், அவற்றுக்குப் பெரியவர்கள் தருகின்ற விளக்கங்கள் இவைகளில் ஒன்றைக்கூட யாரும் மறுத்துவிடுவதற்கு இல்லை. ஆனால் நடைமுறையிலே வருகின்ற நேரத்தில், தந்த விளக்கத்திற்கு ஏற்ற அளவுக்கு நடைமுறை இருக்கிறதா என்ற கேள்வி எழுகின்ற நேரத்திலேதான் பெருமூச்சு விட வேண்டியிருக்கிறது என்று சொன்னார் அண்ணா.
நம்முடைய சமுதாயம் மிகத் தொன்மையான சமுதாயம், எனவே அதில் கறைகளும் கசடுகளும் சேர்வது இயற்கை என நினைவூட்டிய அண்ணா, அவ்வப்போது அவற்றை அகற்றிச் சுத்தம் செய்ய வேண்டும் என்றார். மதத்தில் ஏறிவிட்டிருக்கிற கறைகளை, அழுக்குகளைத் துடைப்பதற்காக ஏற்பட்டிருக்கிற துப்புரவாளன் என்ற முறையில் தம்மைக் கருத வேண்டும் என அண்ணா கூடியிருந்தோரிடம் கேட்டுக்கொண்டார். இந்த விஷயத்தில் ராம கிருஷ்ண பரமஹம்சரையும் சுவாமி விவேகானந்தரையும் அண்ணா சிலாகித்துப் பேசினார். அதிலும் விவேகானந்தரைப்பற்றிக் குறிப்பிடுகையில், விவேகானந்தரைவிட ஹிந்து மதத்தைத் துப்புரவு செய்வதற்கு முயற்சி எடுத்தவர்கள் வேறு எவரும் இல்லை என்று தைரியமாகச் சொல்லலாம் என்றார்.
ஹிந்து குடிமைச் சட்டத்தில் காலத்திற்கு ஏற்ற விதிகளைச் செய்தும், ஆலயப் பிரவேசம் போன்ற சீர்திருத்தங்களைச் சம்பிரதாயங்களில் நடைமுறைப்படுத்தியும் துப்புரவு செய்யப்பட்டதை நினைவிற் கொண்டு, ஜவஹர்லால் நேருவும் துப்புரவு செய்வதில் தமது அறிவாற்றலைப் பயன்படுத்தியதாக அண்ணா குறிப்பிட்டார். இத்தகைய துப்புரவுக்காரர்களால் மதம் அழியாது என்று சொன்ன அண்ணா, மதத்தில் உள்ளது அத்தனையும் உண்மை, புரிந்தாலும் புரியாவிட்டாலும் அது எழுதியிருப்பது போதும் இன்றைய நடைமுறைக்கு ஒப்பி வந்தாலும் வராவிட்டாலும் அதுவே போதும் என்று இருக்கிறார்களே, அவர்களால்தான் மதத்திற்கு அழிவு, அவர்கள்தான் தங்களுடைய மதத்தைக் கெடுப்பவர்கள், அவர்களால்தான் எந்த மதமும் பாழ்படும் என்று அண்ணா அவர்கள் பொடிவைத்துப் பேசினார்கள்.
ஹிந்து சமுதாயத்தில், மதத்தின் பெயரால் நடைமுறைப்படுத்தப்பட்ட குடிமைச் சட்டங்களும், சம்பிரதாயங்களும் அவ்வப்போது தக்க திருத்தங்கள் செய்யப்பட்டு வருவதைத்தான் அண்ணா அவர்கள் மதத்தைத் துப்புரவு செய்தல் என்று குறிப்பிட்டார்கள். அவ்வாறான துப்புரவுகள் பலரது முயற்சியால் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் சான்றுகளுடன் தெரிவித்தார்கள். இவ்வாறான துப்புரவு மேற்கொள்ளப்படாத மதம் பாழ்படும், அதில் துப்புரவை மேற்கொள்ளத் துணியாதவர்கள் தங்கள் மதத்தைத் தாமே கெடுப்பவர்கள் என்றார்.
அண்ணா அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த மிகக் குறுகிய காலம் முழுவதும், சென்னையில் ஒரு மேற்கு ஜெர்மனி செய்தி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட ஹிந்துஸ்தானத்து நிறுவனம் ஒன்றின் செய்தியாளனாகத் தினந்தோறும் தலைமைச் செயலகம் சென்று அரசின் செயல்பாடுகள் தொடர்பான செய்திகளைத் திரட்டும் பணியில் நான் மிகத் தீவிரமாக இயங்கி வந்தேன். மிகுந்த பொறுப்புணர்வோடும், எந்தவொரு திட்டமானாலும் அதனால் நேரடியாக மக்களுக்கு எந்த அளவுக்குப் பலன் என்று பார்த்துப் பார்த்துப் பணியாற்றும் நேர்மையுடனும் முதலமைச்சர் அண்ணா பணியாற்றி வருவதை உன்னிப்பாகக் கவனித்துப் பெருமிதம் கொள்ளும் உன்னத வாய்ப்பினை எனது வாழ்நாளில் பெற்றேன். நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒவ்வொரு நாளையும் அனுபவித்த நாட்கள் அவை (அண்ணாவின் மறைவிற்குப் பின் அண்ணா இல்லாத தமிழக அரசின் தலைமைச் செயலகம் செல்ல மனம் பொறாமல் பெங்களூருக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு கர்நாடக மாநிலத்திற்கான செய்தியாளனாகப் பணியைத் தொடர்ந்தேன். காவிரி தொடர்பாகப் பேச்சு நடத்த அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி பெங்களூர் வந்த போது, ஒருமுறை அவரோடு கூடவே லிஃப்டில் பயணம்செய்து சில சங்கடமான கேள்விகள் கேட்டு, காவிரி விஷயத்தில் அவர் போதிய கவனம் செலுத்தாதைக் கண்டறிந்து திகைத்ததும் இப்போது நினைவுக்கு வருகிறது!).
அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில், சில சமயம் நிருபர்கள் கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் என்னை கவனித்துவிடும் அண்ணா, அருகில் அழைத்து, உடன் வருகிறாயா என்று கேட்பார்கள். எங்கே என்றுகூடக் கேட்காமல் அவசரமாகத் தலையசைப்பேன். வீட்டுக்குத் தகவல் தெரிவிக்காமல், மாற்றுத் துணிகூட இல்லாமல் அப்படியே புறப்பட்டு விடுவேன். அண்ணன் கூப்பிட்ட குரலுக்கு உடன் செவிசாய்ப்பதைவிட உலகில் வேறு முக்கியமான விவகாரம் என்ன இருக்கக்கூடும்?
அப்படித்தான் அண்ணா அவர்கள் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கப் பொன்விழாவுக்கு என்னையும் அழைத்துச் சென்றார்கள். அன்றைய சுப தினத்தில் அண்ணா ஆற்றிய அரிய உரை என் மனதில் நன்கு பதிந்துள்ள போதிலும், சரி பார்த்துக்கொள்வதற்காகவும், சான்றுக்காகவும் ஏதேனுமொரு ஆவணம் இன்றியமையாததாக இருந்தது. நல்ல வேளையாக, தி.வ. மெய்கண்டார் விடாப்பிடியாக நடத்திவரும் இளந்தமிழன் என்ற மாத இதழில், அதன் செப்டம்பர் 2009 இதழில் முதல்வர் அண்ணா காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தில் ஆற்றிய உரை இடம் பெற்றுள்ளது என் நினைவுக்கு வந்தது. இக்கட்டுரை எழுத எனக்கு மிகவும் உதவியாக இருந்தது, தி. வ. மெய்கண்டாரின் இளந்தமிழன் செப்டம்பர் 2009 இதழ். இதற்காக அவருக்கும் இளந்தமிழனுக்கும் நன்றி (இளந் தமிழனுக்கு இந்த உரையை ஒலிப்பதிவாக அளித்து உதவியவர், காரைக்குடி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த பேராசிரியர் இராம. இராமநாதன்).
தி. வ. மெய்கண்டார், தமிழ் நாட்டின் அரசியல், சமூகம், பண்பாடு தொடர்பான கிடைத்தற்கரிய பழம்பெரும் ஆவணங்களையும் தகவல்களையும் தமது இளந்தமிழன் மாத இதழில் தொடர்ந்து வெளியிட்டுவருகிறார். இந்த அரும்பணிக்காக அவருக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். மிகுந்த சிரமத்துடன் அவர் ஆற்றிவரும் இப்பணியை ஆதரிப்பதும் நமது கடமை. ஆண்டுக் கட்டணம் உள்நாடு எனில் ரூ 120/- தான். வெளிநாடுகளுக்கு யு. எஸ். டாலர் 50/- (விமானத் தபால் உள்ளிட்டது). கட்டணம் அனுப்ப வேண்டிய முகவரி:
இளந்தமிழன் மாத இதழ்,
அஞ்சல் பெட்டி எண் 637,
7, கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை 600 004 தமிழ்நாடு.
நூறாண்டுகளுக்கும் முற்பட்ட மிகவும் அரிய செய்திகளும் புகைப்படங்களும் அடங்கிய பழைய இளந்தமிழன் பிரதிகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.
++++
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! ஒவ்வொரு கருந்துளைக் குள்ளே ஒரு பிரபஞ்சம் ஒளிந்திருக்கலாம் [கட்டுரை: 72]
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -1)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -2)
- கண்மலாரத கடவுள்
- மௌனமாய் மரணிக்கும் கதைகள் ….
- கூப்பிட்டும் கேட்டிராத குரல்கள்..
- செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 24
- இவர்களது எழுத்துமுறை – 23 நகுலன்
- ” சுப்ரபாரதிமணியனின் “ நாளை மற்றொரு நாளல்ல” திரைப்படக்கட்டுரைகள் நூல்:
- ”கனவு” இலக்கிய கூட்டம்
- பீல்சமூக மன்றத்தின் தீபாவளி, நத்தார், புதுவருட, தைப்பொங்கல் கொண்டாட்டம்
- கடவுளும் கண்ணீர்த் துளிகளும்
- மழை நிலை
- தொழில் தெய்வம்..
- ஓர் குரல்
- தோல்வியை தோல்வி அடையச் செய்வோம்
- சலனமற்றுக் கரையும் துயரங்கள்
- சொல்லெறி
- கருவெட்டா தமிழ் அணுக்கள்!
- கவிதையுரை
- தை மகளே வருக! தைரியமே தருக.
- அஞ்சலி : கலைஞன் மாசிலாமணி – மழைப் பொழுதில் வீழ்ந்த ஆலமரம்
- ஒரு கவிதை:
- எங்கே அது..?
- தோழி
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -13
- நோன்பு
- வாள்
- மாறித்தான் போயிருக்கு.
- பிரசவ வைராக்கியம்…
- குடியேறியவர்களின் தேசமா இந்தியா?
- நலிந்த மெலிந்த பேதலித்த நிலையில் தமிழகமும் இந்தியாவும்
- அகலப் பாதை!
- நினைவுகளின் சுவட்டில் – (60)
- ஹிந்து மதாபிமான சங்கப் பொன்விழாவில் முதல்வராக அல்ல, அண்ணாதுரையாக!
- சீன மரபு காட்டும் ஒருபால் உறவு – பாதி கடித்த ருசிமிகு பீச் பழம்
- விதுரநீதி விளக்கங்கள் – 2
- தற்கொலைப் பறவைகளின் வானம்
- நெருஞ்சி முள் தைக்கிறது
- M.ராஜா கவிதைகள்
- பயணம்
- எந்த சாமியிடம்