நரேந்திரன்
Roll on, thou deep and dark blue Ocean–roll!
Ten thousand fleets sweep over thee in vain;
Man marks the earth with ruin–his control
Stops with the shore.
– Lord Byron
கிறிஸ்டொபர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்பது நாமனைவரும் படித்தறிந்த ஒரு விஷயம். ஆனால், உண்மை அதுவல்ல; கொலம்பஸ¤க்கு பல ஆண்டுகள் முன்பே சீனர்கள் அமெரிக்காவைக் கண்டடைந்தார்கள் என்பது ஆராய்ச்சியாளர்களில் ஒரு சாராரின் வாதம். வட அமெரிக்க கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளிலும், மெக்ஸிகோ போன்ற தென் அமெரிக்க நாடுகளிலும் சமீப காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட சீன முத்திரைகளையும், பீங்கான் பொருட்களையும், பதினைந்தாம் நூற்றாண்டில் சீனர்களால் துல்லியமாக வரையப்பட்ட அமெரிக்க வரைபடங்களையும் அதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர் அவர்கள்.
கொலம்பஸ், 1492-ஆம் வருடம் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்பதே இன்று பரவலாக அறியப்படும் வரலாறு. ஆனால் அவர் அமெரிக்காவை அடைவதற்கு முன்பே, அதற்கு ஏறக்குறைய 18 வருடங்களுக்கும் முன்பாகவே, அவரிடம் அமெரிக்கக் கண்டம் குறித்தான வரைபடம் இருந்ததாகத் தெரிகிறது. அதனைக் கொலம்பஸே தனது கடற்பயணக் குறிப்பேடுகளில் (Ship Logs) எழுதியும் வைத்திருக்கிறார். கொலம்பஸ¤டன் அமெரிக்கா நோக்கிப் புறப்பட்ட கப்பல் அணிகளின் ஒரு பிரிவிற்குத் தலைமை தாஙகிய கேப்டன் மார்டின் அலான்ஸோ (Martin Alanso Pinzon), தானும் அவ்வாறான ஒரு அமெரிக்க வரைபடத்தை வாடிகனிலிருந்த அன்றைய போப்பின் நூலகத்தில் கண்டதாக விவரிக்கிறார். எனவே, ஏற்கனவே கண்டறியப்பட்டு, வரைபடம் உள்ள ஒரு இடத்தை எவ்வாறு ஒருவர் அதனைப் புதிதாகக் கண்டுபிடித்ததாகக் கூறமுடியும்? என்பது ஆராய்ச்சியாளர்களின் வாதம்.
கொலம்பஸின் அமெரிக்க கடல்வழிப் பயணத்திற்கான நிதியுதவி செய்தவர்கள் ஸ்பெயின் நாட்டின் அரச குடும்பத்தினர்கள். அந்த அரச குடும்பத்துடன் கொலம்பஸ் செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தின்படி, அப்பயணம் துவங்குவதற்கு முன்பாகவே அவர் அமெரிக்க வைஸிராயாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்கிற செய்தியானது அந்த வாதத்தை மேலும் வலுவாக்குகிறது.
அதே கேள்வி, அட்லாண்டி மற்றும் பசிபிக் சமுத்திரங்களை இணைக்கும் ஜலசந்தியை (Strait of Magellan) முதன் முதலாகக் கண்டறிந்தவராக அறியப்படுகிற போர்சுக்கீசிய மாலுமியான மெக்கெல்லனை (Magellan) நோக்கி வைக்கப்படுகிறது. 1520-ஆம் வருடம் மெக்கெல்லன் மேற்கூறிய ஜலசந்தியை நெருங்குமுன் அவரது கப்பலில் இருந்த உணவும், தண்ணீரும் தீர்ந்து போக, அவரது மாலுமிககளும், ஊழியர்களும் கப்பலில் தென்பட்ட எலிகளைத் தின்று ஜீவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். தாங்கள் வழி தவறிவிட்டதாக நினைத்துக் கொண்ட மாலுமிகள், பயணத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் ஸ்பெயினுக்கே திரும்பவேண்டும் என்ற கோரிக்கையுடன் எஸ்டெபென் கோம்ஸ் (Esteben Gomez) என்பவரின் தலைமையில் கலகம் செய்தனர்.
ஆனால் மெக்கெல்லன் கலகத்தைத் திறமையாக அடக்கியதுடன், தங்களது கப்பல் வழி தவறிவிடவில்லை என மீண்டும், மீண்டும் கலகக்காரர்களிடம் உறுதியாகக் கூறியதாகத் தெரிகிறது. இறுதியில் மெக்கெல்லன் அந்த ஜலசந்தியைக் கண்டடைந்ததும், பின்னர் அதற்கு அவரது பெயர் சூட்டப்பட்டதும் வரலாறு. அவருடன் பயணம் செய்த ஒரு மாலுமி எழுதிய குறிப்புகளின்படி, மெக்கெல்லனிடம் ஸ்பெயின் அரசரிடமிருந்து பெறப்பட்ட ஒரு வழிகாட்டி (Chart) இருந்ததைக் கண்டதாகக் கூறுகிறார். மெக்கெல்லன் இப்பயணம் புறப்படுவதற்கு முன்பாகவே அவரிடம் எழுதப்பட்ட ஒரு வழிகாட்டி இருந்தது உண்மையெனில், அவர் எவ்வாறு மேற்கண்ட ஜலசந்தியைக் கண்டறிந்ததாகக் கூறமுடியும்?
மெக்கெல்லன் மேற்கண்ட பயணத்திற்குத் தயாராவதற்கு பனிரெண்டு ஆண்டுகளுக்கும் முன்பாக, 1507-ஆம் வருடம் ஆஸ்டிரியாவைச் சேர்ந்த மார்ட்டின் வால்ட்சீமுல்லர் (Martin Waldseemuller) என்பவரால் பதிப்பிக்கப்பட்ட வரைபடங்களில் அமெரிக்கா மற்றும் பசிபிக் பகுதிகள் இருந்தன. அத்துடன், மெக்கெல்லன் புறப்படுவதற்கு நான்காண்டுகளுக்கு முன்னர் 1515 ஆம் வருடம், ஜொஹேன் ஸ¤னர் (Johanne Shooner) என்பவரால் பதிப்பிக்கப்பட்ட இன்னொரு வரைபடம் ‘ஸ்டெரெயிட் ஆ·ப் மெகெல்லன்’ ஏற்கனவே “கண்டுபிடிக்கப்பட்டதாக” குறிப்பிடுகிறது.
மேற்கண்ட வரைபடங்கள் குறித்தான சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. ஜொஹேன் ஷ¤னர் பல்கலைக் கழகத் தேர்வுகளில் தோல்வியுற்று, University of Erfurt-இலிருந்து பட்டம் பெறமுடியாமல் வெளியேறியவர். ஒரு சிறிய கிராமத்தில் பயிற்சி பாதிரியாராக பணிபுரிந்தவர். அவரால் எவ்வாறு இத்தகையதொரு வரைபடத்தை, அதுவும் மெகெல்லெனுக்கும் முன்பாகவே வெளியிட முடிந்தது? அடுத்தவராஅன மார்ட்டின் வால்ட்ஸ்மில்லர் கடலைத் தன் வாழ்நாளில் பார்த்தறியாதவர். இருப்பினும் அவர் வெளியிட்ட வரைபடத்தில் மெக்ஸிகோவின் சியர்ரா மாட்ரெ (Sierra Madre) மற்றும் அமெரிக்காவின் சியர்ரா நெவாடா (Sierra Nevada) போன்ற இடங்கள் ஆச்சரியமூட்டும் வகையில் தெளிவாகக் குறிக்கப்பட்டிருந்தன.
ஐரோப்பிய மாலுமிகள் துணிவும், கடுமையான உழைப்பும் உடையவர்கள் என்பதில் யாதொரு சந்தேகமுமில்லை. இருப்பினும் அமெரிக்கக் கண்டத்தின் கண்டுபிடிப்புகளில் அவர்களின் பங்களிப்பு எதுவும் இல்லை. கொலம்பஸ¤ம், மக்கெல்லனும் உலகைச் சுற்றிவந்த முதல் மானிடர்கள் அல்ல. அந்தப் பெருமை சீனர்களையே சாரும் என்பது ஆராய்ச்சியாளர்களில் ஒரு சாராரின் முடிவு.
ரோமானியப் பேரரசு வீழ்ந்த பின் ஐரோப்பா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. அதனை ‘ஐரோப்பாவின் இருண்டகாலமாக’ குறிப்பிடுகிறார்கள் வரலாற்றாசிரியர்கள். பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவிற்குக் வந்த சீனர்கள் மூலமாகப் பெறப்பட்ட அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அறிவினைக் கொண்டு ஐரோப்பா renaissance எனப்படும் மறுமலர்ச்சிக் காலத்தைத் துவக்கியது.
சீனப் பேரரசரின் தூதுவர்கள் 1434-ஆம் வருடம் ஐரோப்பாவின் டஸ்கனியை (Tuscany) அடைந்து, அன்றைய போப்பான யுஜீனியஸ் IV (Eugenius IV) என்பவரை ·ப்ளாரன்ஸில் (Florance) சந்தித்தார்கள். வாடிகனின் ஆவணங்களில் இச்சந்திப்பு பற்றிய குறிப்புகள் உள்ளன. சீனர்கள் போப்பிடம் தங்களிடமிருந்த அறிவியல் தகவல்களை (பெருவாரியாக இயற்பியல் குறித்த தகவல்கள்), உலக வரைபடங்கள் (பின்னாளில் கிறிஸ்டபர் கொலம்பஸால் உபயோகிக்கப்பட்டதாக நம்பப்படுபவை), கடற் பயண வழிகள் பற்றிய தகவல்கள், வானவியல், கணிதம், அச்சுக்கலை, கட்டிடக்கலை, இரும்புக் கனிமங்கள் தயாரித்தல், கட்டுமானத் தொழில்நுட்பங்கள், ராணுவத்தளவாட வடிவமைப்பு, நில அளவியல் போன்ற தொழில் நுட்பங்கள் குறித்தான தகவல்களை அவருக்கு அளித்ததாகத் தெரிகிறது. அவ்வாறு பெறப்பட்ட அறிவின் அடிப்படையே லியானார்டோ-டாவின்ஸி போன்றவர்கள் வடிவமைத்த பொறியியல் இயந்திரங்களுக்கும், கலிலியோவின் மற்றும் கோபர்நிகஸின் கண்டுபிடிப்புகளுக்கும் அடிப்படையாக அமைந்தது.
***
பதினைந்தாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சீனா உலகின் மிக வலிமையான நாடாக உருவெடுத்தது. மிங் வம்ச அரசர்களின் கீழ் சீனாவின் நிலப்பரப்பு விரிவடைந்ததுடன், புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளிலிலும் பெரும் முன்னேற்றம் கண்டது. ஏறக்குறைய உலகின் சரிபாதியை ஆண்டுகொண்டிருந்த மங்கோலியப் பேரரசு அழிவின் விளிம்பில் இருக்க, தைமூரின் மரணத்திற்குப் பிறகு குறிப்பிடுமளவிற்கு வலிமையுள்ள மங்கோலிய அரசர்கள் எவரும் உருவாகவில்லை. பல பகுதிகளிலும் தோற்கடிக்கப்பட்ட மங்கோலியர்கள், சீனாவின் குன்மிங் (இன்றைய திபெத்) பகுதியை மட்டும் ஆண்டு கொண்டிருந்தார்கள்.
மங்கோலியர்களின் கீழ் வதைபட்ட சீனர்கள் அதனை மறந்திருக்க நியாயமில்லை. எனவே மிங் அரசின் படைகள் குன்மிங்கைத் தாக்கி அதனைக் கைப்பற்றின. அதனைத் தொடர்ந்து, போரிடத் தகுதியுள்ள மங்கோலிய ஆண்கள் அனைவரையும் கொன்று குவித்தார்கள் சீனர்கள். மங்கோலியச் சிறுவர்களின் ஆணுறுப்புகள் சிதைக்கப்பட்டன. அதிர்ச்சியிலும், வேதனையிலும் பல சிறுவர்கள் உயிரழந்தார்கள். தப்பிப் பிழைத்தவர்கள் மிங் அரசரின் அந்தப்புரத்திற்கு பணிவிடை செய்ய அனுப்பி வைக்கப்பட்டார்கள். அவ்வாறான சிறுவர்களில் ஒருவர்தான் ஸெங் ஹெ (Zheng He). சீனத் தளகர்த்தர் ஒருவரின் கண்ணில் பட்ட ஸெங் சிறை பிடிக்கப்பட்டு, மிங் இளவரசர் ஸ¤ டி-க்கு (Zhu Di) உதவியாளராக பணிபுரிய அனுப்பி வைக்கப்பட்டார். மா ஹெ-யின் புத்திசாலித்தனம் மிங் அரசரைக் கவர, அவரைக் கல்வி பயில அனுப்பி வைக்கிறார். அவருடன் கைப்பற்றப்பட்ட மற்றவர்கள் ‘அரவாணி’களாக அந்தப்புரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில், எதிர்பாராமல் கிடைத்த இந்த வாய்ப்பு ஸெங்கின் வாழ்க்கையை திசை மாற்றியது.
ஸெங்கின் பெற்றோர் மங்கோலிய வழி வந்த முஸ்லிம்கள். அக்காலத்திலேயே அவரது பாட்டனாரும், தகப்பனாரும் மெக்காவிற்குப் புனிதப் பயணம் சென்று வந்தவர்கள். 1371-ஆம் வருடம், இன்றைய சீன யுனான் மாகாணத்தின் மேற்குப் பகுதியில் பிறந்த ஸெங், தனது பதினோராவது வயதிலேயே குர்-ஆனை முழுமையாக ஒப்பிக்கும் ஆற்றல் பெற்றவராக இருந்திருக்கிறார். அவரது பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் மா ஹெ என்பதாகும் (Ma He – மொஹம்மது என்பதின் சீன வடிவம்). ஏற்கனவே கூறியபடி, ஸெங் ஒரு ‘அரவாணி’ என்பதறிக.
1402-ஆம் வருடம் நடந்த ஒரு புரட்சிக்குப் பின்னர், இளவரசர் ஸ¤ டி சீனாவின் புதிய அரசராகப் பதவியேற்றார். அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான மா ஹே-க்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதுடன், ஸெங் ஹெ (Grand Eunuch) என்ற பட்டத்துடன் அந்தப்புர திருநங்கைகளின் தலைவராக அறிவிக்கப்படுகிறார். அக்கால சீன அரசில் இரண்டு பெரும் சக்திகள் செயல்பட்டுக் கொன்டிருந்தன. ஒன்று, மாண்டரின்கள் எனப்படும் சீன அரசவைப் பிரபுக்கள். மற்றொன்று, சீன அந்தப்புரத்தில் பணி புரிந்த திருநங்கைகள். சீன அரசாங்கத்தால் எடுக்கப்படும் எந்தவொரு முக்கிய முடிவின் பின்னனியிலும் மேற்கண்ட இரு சக்திகளின் குறுக்கீடுகளும் இருந்தன. அரசர் ஸ¤ டியின் காலத்தில் மாண்டரின்களின் அதிகாரம் குறைந்து, அரவாணிகள் வலிமை பெற்றார்கள்.
மிங் அரசர்களின் வலிமையையும், சீனப் பேரரசின் உன்னதத்தையும் உலகின் பிற பாகங்களில் வசிக்கும் “நீள மூக்குடைய காட்டுமிராண்டிகளுக்கு” எடுத்துக் கூறும் வகையில், இந்தியப் பெருங்கடல் பயணத்திட்டம் ஒன்று சீன அரசரால் அறிவிக்கப்படுகிறது. அக் கடற் பயணத்திற்குத் தலைமை தாங்கும்படி ஸெங் ஹெ-யைப் பணிக்கிறார் அரசர். பயணத்திற்குத் தேவையான கப்பல்களைக் கட்டும் பணி ஸெங்கின் மேற்பார்வையில் இன்றைய ஷாங்காய் நகரிலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் டாய்காங் (Taicang) என்ற இடத்தில் அமைந்த லியுஜா (Liuija) துறைமுகத்தில் ஆரம்பிக்கப்படுகிறது (அதன் மிச்சங்கள் இன்றைக்கும் அப்பகுதியில் காணப்படுகின்றன). ஸெங்கும், அவரது உதவியாளர்களும் சீனாவெங்கும் பயணம் செய்து உலக நாடுகள் குறித்த விபரங்களையும், வரைபடங்களையும், நீரோட்ட மற்றும் காற்று வீசும் காலங்கள் குறித்தான விவரங்களையும், ஜலசந்திகள், வானியல் தகவல்கள் போன்றவற்றை சேகரிக்க ஆரம்பித்தார்கள். அக்காலத்தில் வான சாஸ்திரத்தில் சிறந்து விளங்கிய அரேபியர்கள் பலரையும் ஸெங் தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.
ஸெங்கின் மேற்பார்வையில் மாபெரும் பொருட் செலவில் கட்டப்பட்ட சீனக் கப்பல் அணிகள் மிகப் பெரியவை. ஏறக்குறைய சிறியதும், பெரியதுமான 317 கப்பல்கள் அந்த அணியில் இருந்திருக்கின்றன. பிற நாட்டு அரசர்களுக்கு அளிக்க வேண்டிய பட்டுத் துணிகளும், பீங்கான் சாதனங்களையும், இன்ன பிற பரிசுப் பொருட்களையும் தாங்கிய 62 பொக்கிஷக் கப்பல்கள் அந்த அணியில் இருந்திருக்கின்றன. 140 மீட்டர் நீளமும், 57 மீட்டர் அகலத்துடன் 50 அறைகளை உடைய அப் பொக்கிஷக் கப்பல்கள் ஒன்பது பாய்மரங்கள் (Mast) கொண்டதாக இருந்தன. ‘Swimming Dragons’ என்றாழைக்கப்பட்ட அக்கப்பலில் ஏறக்குறைய 1000 பேர்களுக்கும் மேலானவர்கள் தங்க இயலும். ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகு அட்லாண்டிக் கடலைக் கடந்த நீராவிக் கப்பல்களை விடவும் இரண்டு மடங்கு பெரியவை அவை. புயல்களைக் கடந்து செல்லும் வலிமையும், வாரக் கணக்கில் நிற்காமல் செல்லும் திறனும் பெற்றவை. ஒரு டன்னுக்கும் மேலான பொருட்களை ஏற்றிச் செல்லும் வலிமையுடையவை.
படைவீரர்கள், மருத்துவர்கள், வான சாஸ்திர நிபுணர்கள், வியாபாரிகள், மொழிபெயர்ப்பாளர்கள், மத குருமார்கள், அரசு நிர்வாகிகள் என ஒரு சிறிய நகருக்குத் தேவையான அளவிற்கு ஏறக்குறைய 27,870 பேர்கள் அக்கப்பல்களில் பணிபுரிந்தார்கள். பல வேறுபட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றிய ஸெங்கின் கப்பல்களில் இந்தியர்கள் பலரும் குறிப்பாக தமிழர்களும், மலையாளிகளும் பணிபுரிந்திருக்கிறார்கள். ஒவ்வொரு கப்பலுக்கும் ஒரு அரவாணி தலைமை தாங்கியிருக்கிறார். அவரின் கீழ் பணிபுரிந்த கப்பலின் அதிகாரிகள் திசை காட்டிகளைப் படிப்பதில் நிபுணர்களாக இருந்திருக்கிறார்கள்.
ஸெங் ஹெ-யும் அவரது மாலுமிகளும் தங்கள் முதல் பயணத்தின் இரண்டு ஆண்டுகளை இன்றைய வியட்நாம், இந்தோனேஷியா, ஸ்ரீலங்கா மற்றும் இந்தியாவில் கழித்தார்கள். தொடர்ந்த 28 ஆண்டுகளில், ஸெங் ஹெயின் கப்பல்கள் மேலும் ஆறு பயணங்களைத் தொடர்ந்தன. ஏறக்குறைய 3,00,000 கிலோமீட்டர்களை ஸெங் ஹெ-யின் கப்பல அணிகள் கடந்திருக்கின்றன. உலகை 7 1/2 முறை சுற்றி வருவதற்குச் சமானம் அது.
ஸெங் ஹெயின் முதல் பயணம் இன்றைய வியட்நாம், ஜாவா, சுமத்ரா, ஸ்ரீலங்கா,சாம்பா, மலாக்கா மற்றும் இந்தியாவின் கொச்சி, காலிகட் துறைமுகங்களை சென்றடைந்தது. ஸெங்கிற்கு இந்தியாவின் காலிகட் (கோழிக்கோடு) மிகவும் பிடித்த இடம். அவரு ஏழு உலகப்பயணங்களில் ஆறுமுறை காலிகட்டிற்கு வந்திருக்கிறார். தென் இந்திய நாடுகளின் முன்னேற்றமும், வளமும் குறிந்த்து ஸெங் ஆச்சரியமடைந்ததாகத் தெரிகிறது. பல நாடுகளுக்கு விஜயம் செய்த ஸெங்கின் கப்பல் அணிகள் அங்கிருந்த ஆட்சியாளர்களை சீன அரசருக்கு அடிபணிய பணித்தார்கள். ஆசியாவைத் தனது ஆளுமையின் கீழ் கொண்டுவரும் ஒரு முயற்சியாக அது நோக்கப்பட்டது. புதிய கடல் வழிகளும், சீனப் பட்டு மற்றும் பீங்கான் பொருட்களுக்கான புதிய சந்தைகளையும் கண்டறிய உதவியது. சீனா முன்பு கண்டிராத பல அபூர்வ கலைச் செல்வங்களையும், விலங்குகளையும் சீனாவிற்குக் கொண்டு சேர்த்தார் ஸெங்.
சீன அரசருக்கு அடிபணிய மறுத்தவர்கள் மீது ராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஏறக்குறைய 37 நாடுகளின் அரசர்கள் சீன அரசருக்குத் தாங்கள் பணிவதாக அறிவித்துத் தங்களின் பிரதிநிதிகளை சீனாவிற்கு அனுப்பிவைத்தார்கள். இதற்கு எதிராக கலகம் செய்த சுமத்திரா அரசரைக் கைது செய்து, அவரைச் சீனாவிற்குக் கொண்டு சென்றார் ஸெங். அடிபணிய மறுக்கும் மற்றவர்களுக்குப் பாடமாக இருக்கும் நோக்கில் அவருக்கு சீன அரசரால் மரண தண்டனை வழங்கப்பட்டது.
1411-ஆம் வருடம் இலங்கையின் மத்திய மற்றும் தென் பகுதியில் இருந்த இரண்டு புத்த சபைகள், ஹிந்துக்களான வடபகுதித் தமிழர்கள் மீது தாக்குதல்கள் நடத்தினர். தமிழர்களுக்கு ஆதரவாக ஸெங்கின் செயல்பாடு இருப்பதாகக் கருதிய அந்நாட்டு பவுத்த அரசர், அவரைத் தாக்கியதாகவும், வேறு வழியின்றி போரில் ஈடுபட்ட ஸெங், அவரைத் தோற்கடித்தார். பின்னர் அந்த அரசரையும் அவரது குடும்பத்தினரையும் கைது செய்து சீனாவிற்குக் கொண்டு சென்றதாகவும் தெரிகிறது. கடலை விடுத்து கரையில் இறங்கி ஸெங் செய்த ஒரே போர் அது மட்டுமே. அது குறித்தான குறிப்புகள் கல்லே (Galle) கல்வெட்டில் இன்றும் காணப்படுவதாகத் தெரிகிறது. இலங்கை அரசர், புத்தரின் புனிதப்பல்லை சீனப் பேரரசருக்கு அளிக்க மறுத்ததால் ஸெங் எடுத்த நடவடிக்கை அது என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.
ஸெங்கின் கடல் பயணம் உலகில் பெரும் மாற்றத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. ஆறாவது முறையாக 1433-ஆம் வருடம் காலிகட்டிற்கு வந்த ஸெங் அங்கு தனது 62-ஆம் வயதில் மரணமடைந்தார். அவரது உடலைச் சுமந்து கொண்டு சீனக் கப்பல்கள் சீனம் திரும்பின. மிங் அரசரின் மரணத்திற்குப் பின் துவங்கிய வாரிசுரிமைப் போர்களூம், ஆட்சியமைப்பில் மாண்டரின்கள் வலிமை பெற்றதும் ஸெங் போன்றவர்களின் முக்கியத்துவத்தைக் குறைத்தன. புதிய கப்பல்கள் கட்டுவது தடை செய்யப்பட்டது. ஸெங்கின் பெரும்பாலான ஆவணங்களையும், வரைபடங்களையும் மாண்டரின்கள் எரித்து விட்டார்கள். சீனா தனது கதவுகளை மூடிக்கொண்டது.
***
ஸெங் கேரளத்தின் மீது கொண்ட அன்பு ஆத்மார்த்தமானது. கோழிக்கோட்டின் (காலிகட்) மீது மாளாக் காதலே கொண்டிருந்தார் எனலாம். இன்றைய கொச்சி துறைமுகப்பகுதிகளில் உபயோகிக்கப்படும் மீன்பிடி வலைகளிலும், கதகளியிலும் சீனர்களின் பாதிப்பு இருப்பதை எவரும் மறுக்க இயலாது.
மலபாரின் துறைமுகங்கள், இந்தியப் பெருங்கடல் வழியாக நடந்த வாசனைத் திரவிய வர்த்த்கத்திலும், பட்டு வர்த்தகத்திலும் பல நூற்றாண்டுகளாக முக்கிய இடம் வகித்து வந்தன. 14-ஆம் நூற்றாண்டில் கோழிக்கோடு அரசர் ஸமோரின் (வாண விக்ரமன்) தலைமையில் ஒரு தனி நாடாக மாறியிருந்தது.
அட்மிரல் ஸெங், 1430-ஆம் ஆண்டு காலிகட்டை வந்தடைகிறார். இந்தியத் துறைமுகங்களுக்கு அவரது கப்பல்கள் கொண்டு வந்த பொருள்களை விலைப்பட்டியலிடவே மூன்று மாதங்கள் பிடித்ததாகத் தெரிகிறது. அவரது இரண்டாது பயணத்தின் போது காயல்பட்டினம், கோயம்புத்தூர், கொச்சி போன்ற பகுதிகளுக்குச் சென்றார் ஸெங்.
ஸெங் ஹெ-யின் மலபார் வருகை குறித்த விவரங்கள் அவருடன் வந்த மொழிபெயர்ப்பாளர்களால் (மா ஹ¥வான், ·பெய் க்சின் மற்றும் காங் ஸெங்) குறிப்புகளாக எழுதப்பட்டன. இம் மூன்று மொழிபெயர்ப்பாளர்களும் தனித்தனியே பிற்காலத்தில் எழுதிய புத்தகங்களில் ஸெங்கின் கோழிக்கோடு விஜய செய்திகளைத் தொகுத்து எழுதியிருக்கிறார்கள். முக்கியமாக மா ஹ¥வானின் “The Overall Survey of the Ocean Shores” கோழிக்கோடு பற்றிய கீழ்க்காணும் குறிப்புகளைத் தருகிறது.
– காலிகட் ராஜ்ஜியமானது மேற்கில் கடலும், கிழக்கில் கோயம்புத்தூரையும், தெற்கில் கொச்சியையும், வடக்கில் ஹொனாவரையும் எல்லைகளாகக் கொண்டிருந்தது.
– காலிகட்டின் மஹாராஜா வாண விக்ரமன் புத்தமதத்தைச் சேர்ந்த பிராமணர். அவரது படைத்தலைவர்கள் அனைவரும் முஸ்லிம்களாக இருந்தார்கள்.
– அப்பகுதியில் நிலவிய வழக்கப்படி, அரசரின் மரணத்திற்குப் பின்னர் ஆட்சி பீடம், அரசரின் சகோதரி மகனைச் சென்றடைந்தது.
– சீனப் பேரரசர், அட்மிரல் ஸெங் ஹெ மூலமாக வெள்ளியினால் செய்யப்பட்ட சீன அரச முத்திரையையும், பல பட்டயங்களையும் காலிகட் அரசருக்கு அனுப்பி வைத்தார். அதனைக் கொண்டாடும் விதமாக அட்மிரல் ஸெங் ஹெ, கோழிக்கோட்டில் ஒரு நினைவு வளைவினையும், கல்வெட்டினையும் நிறுவினார்.
– கோழிக்கோடு அரசின் நாணயங்களில் 60 சதவீத பொன்னும், 40 சதவீத வெள்ளியும் கொண்டதாக இருந்தது.
– கோழிக்கோட்டின் மக்கள் மிக நேர்மையானவர்களாகவும், நம்பிக்கைக்குரியவர்களாகவும் இருந்தார்கள்.
– இந்த ராஜ்ஜியத்தின் மக்கள் பட்டுப் புழுக்களிலிலிருந்து நூல் நூற்று, அவற்றின் மூலம் பல வண்ணத் துணிகளை நெய்யும் திறன் கொண்டவர்களாக விளங்கினர்.
– சிகப்பு நிற அரிசியுடன், டர்னிப், வெங்காயம், இஞ்சி, கத்தரிக்காய் போன்றவை கோழிக்கோடு ராஜ்ஜியத்தில் விளைந்தன.
– கோழிக்கோடு அரசரின் உத்தரவின்படி, அந்த ராஜ்ஜியத்தின் தட்டர்கள் ஐம்பது அவுன்ஸ் தங்கத்தை தலைமுடியளவிற்கு மெலிதாக நூலைப் போன்று இழுத்துப் பின் அதனை ஒரு கச்சையாக நெய்யதனர். அதில் முத்துக்களையும், பவழங்களையும் கோர்த்த கோழிக்கோடு அரசர், அதனை அவரது சீனத் தூதுவரான நாராயணா என்பவர் மூலமாக சீன அரசருக்கு பரிசாக அனுப்பி வைத்தார்.
– மிங் அரசின் அரச பாதுகாப்புக் குறித்த குறிப்பேடுகளில் கண்டபடி, காலிகட்டைச் சேர்ந்த ஷாபான் என்பவர் நான்கிங் நகரப் பாதுகாவலராகப் பணியாற்றி வந்திருப்பதாகத் தெரிகிறது. அட்மிரல் ஸெங் ஹெயால் பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அவர், பின்னர் பதவி உயர்வும் பெற்றிருக்கிறார். இன்னொரு கோழிகோட்டுக்காரரான ஷாசொசு, நான்கிங்கின் ராணுவப் பிரிவில் பணியாற்றியதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அட்மிரல் ஸெங் அவரது ஆறாவது கடைசி காலிகட் பயணத்தின் போது ஏப்ரல் 1433, காலிகட்டில் மரணமடைந்தார். அவரது நினைவாக காலிகட்டில் நிறுவப்பட்ட கல்தூண் ஒன்று, ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக காலிகட்டில் இருந்திருக்கிறது. 1613-இல் காலிகட்டில் பயணம் செய்த கிறிஸ்தவ பாதிரியாரான கோதினோ டி எரடியா (Godhino de Eredia), தான் அதனைக் கண்டதாகக் அவரது பயணக் குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார்.
1498ஆம் ஆண்டு மே மாதம் போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த வாஸ்கோ-ட-காமா, கோழிக்கோட்டிலிருந்து பதினெட்டு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் கப்பாடில் வந்திறங்கினார். சீனர்கள் மீண்டும் திரும்பிவிட்டதாக எண்ணிய கோழிக்கோடு அரசர் அவரை வரவேற்கச் சென்றிருக்கிறார். பின்னர் 16-ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்கள் நிரந்தர வியாபார கேந்திரங்களை வடக்கிலிருந்த கண்ணூரிலும், தெற்கிலிருந்த கொச்சியிலும் அமைத்தனர். கோழிக்கோடு அரசர் அதனை எதிர்த்த போதும், அவரால் போர்ச்சுக்கீசியர்களுக்கு எதிராக ஒன்றும் செய்ய இயலவில்லை. இறுதியில் 1509-ஆம் ஆண்டு காலிகட் அரசாங்கம், சாலியாரில் போர்ச்சுக்கீசியர்களுக்கான நிரந்தர வியாபார கேந்திரம் அமைக்க அனுமதியளித்தது. போர்த்துக்கீசியரின் எதிரிகளான டச்சுக்காரர்களுடன் கூட்டு சேர்ந்த கோழிக்கோடு அரசரின் பிற்காலச் சந்ததியினர், 17-ஆம் நூற்றாண்டின் மத்தியில் மலபாரின் வாசனைத் திரவிய (spiace trade) வணிகத்தைக் கைப்பற்றினர். பின்னர் 1766-ஆம் வருடம் ஹைதர் அலி, கோழிக்கோட்டையும், வடக்கு மலபார் கடற்கரையையும் கைப்பற்ற, சென்னையை மையமாகக் கொண்டு ஆட்சி புரிந்து கொண்டிருந்த பிரிட்டிஷ்காரர்கள் அவருட போர் புரிய ஆரம்பிக்கிறார்கள். அதுவே ஆங்கிலோ-மைசூர் போராக பிற்காலத்தில் சரித்திரத்தில் இடம்பெறுகிறது.
சீன மிங் அரசர்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் தங்கள் கப்பல் படையை நிறுத்தியிருந்தால் போர்த்துக்கீசிய, டச்சு, பிரிட்டிஷ் படைகளுக்கு அது ஒரு சவாலாக அமைந்திருக்கும். சீனர்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியிலிருந்து வெளியேறியது ஐரோப்பியர்களுக்கு மிகவும் சாதகமாகப் போனது. இல்லாவிடில் தெற்காசிய வரலாறு வேரொரு பாதையில் சென்றிருக்கக்கூடும்.
நன்றி : வார்த்தை, மார்ச் 2009
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதலில் ஏகாந்தம் >> கவிதை -10
- சுவர்க்கம்
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அசுரக் காந்த ஆற்றல் படைத்த பூதக் காந்த விண்மீன் புரியும் பாதிப்புகள்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -4
- “மாற்றம்”
- தமிழ் சேவைக்கு இயல் விருது.
- எழுத்தாளர் “நிலக்கிளி” அ.பாலமனோகரனின் “BLEEDING HEARTS” நூல்
- சங்கச் சுரங்கம் – 16: நெடுநல்வாடை
- விமர்சனக் கடிதம் – 1 ( திரு.பாரதிமணியின் ‘பல நேரங்களில் பலமனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து)
- நிழலாடும் கூத்துகள் : களந்தை பீர்முகம்மது எழுதிய ‘பிறைக்கூத்து’ நூலுக்கு கவிஞர் யுகபாரதியின் முன்னீடு
- மலையாள இலக்கியத்தின் மாபெரும் ஆளுமை: “வைக்கம் முகம்மது பஷீர் -காலம் முழுதும் கலை”
- வயதாகியும் பொடியன்கள்
- மலைகளின் பறத்தல்
- மகாகவியின் ஆறுகாவியங்கள் வெளியீடு
- பேராசிரியர் ஏ.எஸ். முகம்மது ர·பி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
- நாகூர் ரூமியின் இலக்கிய அறிவு
- பேராசிரியர் நாகூர் ரூமிக்கு பதில்கள்
- வைகைச் செல்வியின் ஆவணப்படம் வெளியீட்டுப் படங்கள்
- விருட்ச துரோகம்
- என்றாலும்…
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஐந்தாவது அத்தியாயம்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -38 << ஆயிரம் விழிகள் எனக்கு >>
- வேத வனம் விருட்சம் 36
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 3
- ஸெங் ஹெ-யின் பயணங்கள்
- மரமணமில்லாத மனிதர் : பாரதியின் கடிதங்கள்-(தொகுப்பு: ரா.அ.பத்மநாபன்)
- கதைசொல்லி சாதத் ஹசன் மண்டோவின் மறுபக்கம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தேழு
- ஞாபக வெளி
- பட்டறிவு
- திமிர் பிடிச்சவ