ஸஹாரா

This entry is part [part not set] of 32 in the series 20070531_Issue

எஸ். ஜெயலட்சுமி


”ப்ரியா இந்தியாவுக்கு என்னிக்கு வராள்?” கேட்டுக்கொண்டே காலண்டரைப் பார்த்தேன். மறு முனையிலிருந்து ஏப்ரல் 16ம் தேதி என்று பதில் வந்தது.ப்ரியாவுக்கு 21ம் தேதி இண்டர்வ்யூ இருக்கு.விசா ரிநியூ பண்ண வேண்டும். அத்னால் அவர்கள் கண்டிப்பாக 21ம் தேதி டில்லியில் இருக்க வேண்டும்.அதன் பின் சவுத் டூர் போக வேண்டும்.பழநி, சமயபுரம்,திருச்சி போக வேண்டும்.ப்ரியாவின் 2வது குழந்தை மயங்க்(சந்திரன் என்று அர்த்தமாம்)கின் முதல் பிறந்த நாள்20ம் தேதி வருகிறது.அதை டில்லியில் அவ்ள் மாமனார் வீட்டில் கொண்டாட வேண்டும்.இதற்கு நடுவில் சிங்கப்பூர் விசிட் வேறு.சிங்கப்பூரில் குருவின் குழந்தையைப் பார்த்து காப்பு,தொட்டில் எல்லாம் போட்டு விட்டு நல்லபடியாக மே6ம் தேதி நியூஜெர்சி போக வேண்டும்.

ப்ரியா என் தங்கையின் பெண்.அவள் கணவன் சத்யம் சாப்ட் வேரில் ஆடிட்டராகப் பணி புரிகிறான்.அமெரிக்கா போய் மூன்று வருஷங்களாகின்றன.விசாவைப் புதுப்பித்துக்கொள்ள கட்டாயம் டில்லி வர வேண்டுமாம்.என் தங்கை பையன் குரு சிங்கப்பூரில் எழெட்டு வருஷங்களாக யிருக்கிறான்.என் தங்கை கமலா மருமகளின் பிரசவத்திற்காக டில்லியிலிருந்து சிங்கப்பூர் வந்திருக்கிறாள். குரு சிங்கபூரில் யிஷ¤ன் அவின்யூவில் இருக்கிறான்.என் தம்பி ராஜுவின் ·ப்ளாட்டும் யிஷ¤ன் அவின்யூவில் தான் இருக்கிறது.இரண்டு பேர் வீட்டிற்கும் நடந்து போகிற தூரம் தான்.அதனால் நானும் கமலாவும் சேர்ந்து போய் அவள் பேரன்களுக்காக டிரஸ் எல்லாம் வாங்கினோம்.அடிக்கடி என்.டி. யு. சி. நார்த் பாயிண்ட், போன்ற பெரிய கடைகளுக்கும் வேறு சில சிறிய கடைகளுக்கும் போய் ப்ரியா கேட்ட சாமான்களெல்லாம் வாங்கினோம்.லிட்டில் இந்தியா போய் சில சாமான்கள் வாங்கினோம்.

ப்ரியா நியூஜெர்சியிலிருந்து நேராக 14ம் தேதி இரவு டில்லி வந்து அவள் அப்பாவுடன் சேர்ந்து 15ம்தேதி இரவு சஹாரா ·ப்ளைட்டில் இரவு 9 மணிக்குக் கிளம்பி 16ம்தேதி காலை சிங்கப்பூர் நேரப்படி காலை 7மணிக்கு வருவார்கள் என்று குரு சொன்னான். குருவின் மனைவி ரேகாவிற்கு குறித்த நாட்களுக்கு ஒரு மாதம் முன்னதாகவே சிசேரியன் செய்து குழந்தையை எடுக்கும் படி ஆயிற்று.அதனால் குழந்தை எடை குறைவாகவே இருந்தது.அதனல் வழக்கம்போல் 12ம் நாள் காப்புக் கல்யாணம் தொட்டில் போடுவது, எல்லாவற்றையும் ஒத்திப் போட்டு விட்டோம்.இருக்கிறது ஒரு அத்தை .அவளும் வரப்போகிறாள் அமரிக்காவிலிருந்து! அவள் வந்தப்பறமே எல்லாத்தையும் ஒன்ணா நடத்திடுவோம் என்று என் தங்கை சொல்லி விட்டாள்.அவளும் ப்ரியாவுடன் சேர்ந்து டில்லி போக 19ம்தேதிஸஹாரா ·ப்ளைட்டில் டிக்கெட்டும் எடுத்து வைத்து விட்டாள்.

ப்ரியாவும் குழந்தைகளும் வந்தால் அவர்களை எங்கெங்கெல்லாம் கூட்டிக்கொண்டு போக வேண்டும் என்று ப்ளான் பன்ண ஆரம்பித்தோம்.”16ம் தேதி ஞாயித்துக்கிழமை குருவும் வீட்டில் இருப்பபான் அவளும் கார்த்தால ஒம்பது மணிக்கெல்லாம் வந்துடுவா.அதனால மத்தியானம் நாலு மணிக்கு காப்பு,தொட்டில் எல்லாம் போட்டு விடலாம்”,என்றாள் கமலா.அதன் பின் யார் யாரையெல்லாம் கூப்பிட வேண்டும் என்று லிஸ்ட் போட ஆரம்பித்தார்கள். ரேகா தனக்குத்தெரிந்த நிறையப் பேர்களைச் சொல்லிக் கொண்டே போனாள். கமலாவுக்கு அவ்வளவு பேரையும் கூப்பிட்டால் சமாளிக்க வேண்டுமே என்று கவலை.குருவின் ·ப்ளாட் ஒன்றும் அவ்வளவு பெரிசில்லை.ப்ரியா வேறு ஏகப்பட்ட சாமான்கள் கொண்டு வருவாள். குழந்தையோட ப்ராம் பெரிய சூட்கேஸ், அப்பாவ வேறு ரெண்டு சூட்கேஸ் கொண்டு வரச்சொல்லியிருக்கேன். எல்லாம் அந்த ரூமையே அடச்சிடும். ஜெட் லாக்கில குழந்தைகள் வேறு தூங்கும். மாப்பிள்ளைக்கும் ஜெட் லாக் இருக்கும்.எல்லோரும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துண்டு தூங்கினாத்தான் வெளில சுத்திப் பாக்க முடியும்,” அதனால எல்லோரையும் கூப்பிட வேண்டாம்.மாமா மாமி பெரியம்மா மட்டும் போறும் என்று முடிவு செய்தார்கள்.

அடுத்ததாக அவர்களை எங்கெங்கெல்லாம் கூட்டிக் கொண்டு போகலாம் என்று ப்ளான் பண்ண அரம்பித்தார்கள்.ப்ரியாவும் நாகராஜும் இப்பொழுது தான் முதல் தடவையாக சிங்கப்பூர் வரா. அதனால கட்டாயம் சந்தோசா ஐலண்ட் போகணும்.அப்பறம் ச·பாரி போகணும்,ஜுராங் பேர்ட் பார்க்,போகணும்,லிட்டில் இந்தியா,சைனா டவுண் போகணும் என்று குருவும் ரேகாவும் மாறி மாறி சொன்னார்கள். குரு,”நான் போனில் பேசும் போதெல்லாம் என் மருமான் ஆதித்யா மாமா என்ன ச·பாரி கூட்டிண்டு போவேளான்னு விடாம கேட்டுண்டேயிருக்கான்.சிங்கம்,புலி,யானை யெல்லாம் நம்பள ஒண்ணும் பண்ணாதா? கடிக்காதா?யானை முட்டாதான்னு கேட்டுண்டேயிருக்கான்.அதெல்லாம் ஒண்ணும் பண்னாது நாம்ப பத்திரமா கார்ல உட்கார்ந்தி ருப்போம்னு பதில் சொல்லுவேன்.அந்தக் குழந்தையை ஏமாத்தக் கூடாது என்று கண்டிப்போடு சொன்னான். அதன் பின் என்ன கிப்ட் வங்கலாம் என்று விவாதித்தார்கள்.ஆதித்யாவுக்கு ஒரு காமிரா வாங்க வேண்டும் என்றான் குரு.அஞ்சு வயசுப் பையனுக்குக் காமிரவா என்று எனக்கு அதிசயமாக இருந்தது.என்ன பெரியம்மா கொழந்தைகளெல்லாம் இப்போ கம்ப்யூட்டர்ல வெளையாடரா தெரியுமா? என்றான்.குழந்தை மயங்கிற்கு பிறந்த நாள் பரிசாக என்ன வாங்கலாம் என்று மீண்டும் விவாதம்
தொடர்ந்தது.

கமலாவுக்கு அவள் கவலை.ஏப்ரல் மாதம் ரொம்ப மழை பெய்யும் என்று சொல்லியிருந்தார்கள்.அதற்கேற்றாற்போல் பத்து நாட்களாக பெரிசா மழை பெஞ்சிண்டேயிருக்கு.அவா இருக்கப் போறதே மூணு நாள் இதில எங்கெங்கெல்லாம் போக முடியும்?மழை பெஞ்சா குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு அலைய முடியுமா?தொடர்ச்சியாக அலைச்சல் இருப்பதால் குழந்தை களுக்கு ஒத்துக்கொள்ள வேண்டுமே என்ற கவலை.பதினைந்து நாளக்கு முந்தி தான் எல்லோருக்கும் வைரல் ·பீவர் வந்து உடம்பு கொஞ்சம் சரியா ஆயிருக்கு.சிங்கப்பூரில் மழை,டில்லியில் வெய்யில்,தமிழ் நாட்டில் அக்னி நக்ஷத்திரம்! க்ளைமேட் சேஞ்சாகிக் கொண்டே போனால் எல்லோரும் நல்லபடியாக யு. ஸ். ஏ.போய்ச்சேர வேண்டுமே என்ற கவலை அவளுக்கு.ஆனால் குருவும் ரேகாவும் வருகிறவர்களை எல்லா இடங்களுக்கும் எப்படியாவது கூட்டிக் கொண்டு போய் விடவேண்டும் என்று ஆர்வமாக இருந்தார்கள்.’அம்மா கவலையே படாதே.மழை பெஞ்சா என்ன,டாக்ஸியில போயிடலாம்,”என்றான் குரு.’சரி,பார்க்கலாம் என்றாள்” கமலா.

அடுத்ததாக அவர்கள் வரும் அன்று என்ன சமையல் என்று ப்ளான் பண்ண ஆரம்பித்தோம்”.அம்மா வழக்கமா செய்யற சமையல் வேண்டாம்.ரேகா பன்னீர் போட்டு ஒரு டிஷ் செய்வாள். காலி டாலும் ராஜ்மாவும் போட்டு தால் செய்வாள்.புலாவும் பூரியும் பண்ணுவோம்.”என்றான் குரு.’அக்கா நான் சக்கப் பாயாசம் பண்ணிக் கொண்டு வருகிறேன்.” என்றாள் கிரிஜா.அவள் கேரளாவில் பிறந்தவள்.”சாலட்டும் பன்ணிக்கொண்டு வரேன் என்றாள். முக்கியமானத மறந்துட்டோமே,தொட்டிலுக்கு பயுறு சுண்டல் பண்ணணும் என்று நினைவு படுத்தினேன் நான்.நல்ல வேளை ஞாபகப் படுத்தினாய்.இல்லாவிட்டால் மறந்தே போய் விடும் என்றாள்,” கமலா.பதிமூன்றாம் தேதி இரவே இந்தோனேஷியாவிலிருந்து என் தம்பி சிங்கப்பூர் வந்து விட்டான் என் தம்பி.14ம் தேதி குட் ·ப்ரைடே,த்மிழ்ப்புத்தாண்டு,வேறு,15,16இரண்டு நாட்களும் சனி ஞாயிறு என்பதால் அவனுக்கும் அவர்களைப் பார்க்க முடியும்.

இதோ அவர்கள் டில்லியிலிருந்து கிளம்பி விட்டார்களாம்.செல்லில் பேசினார்கள்.அங்கு மணி ஒன்பது என்றார்கள்.டாக்ஸியில் ஏர்போர்ட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.ஆதித்யாவும் பேசினான்”அங்கிள் ஐ யாம் கமிங் டு சிங்கப்பூர்.வில் யூ டேக் மீ ச·பாரி?கேன் ஐ ஸீ லயன்,டைகர்,எலி·பெண்ட்?என்று கேட்டான்.அவனிடம் ஒன்று சொல்லிவிட்டால் மறக்கவே மாட்டான்.சாமான்களை செக்கின் பண்ணி விட்டுப் பேசுகிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள்.கமலா தூங்கப் போய் விட்டாள்.காலையில் சீக்கிரமே எழுந்து குளித்து விட்டு ஏர்போர்ட் போகவேண்டுமே!அவர்கள் எல்லோரும் வந்து விட்டால் சாவகாச மாகக் குளிக்க முடியாது.எனக்குத் தூக்கம் வரவில்லை.பாதியில் விட்டிருந்த நாவலைப் படிக்க ஆரம்பித்தேன் .கொஞ்சம் கண் அயுர்ந்து விட்டேன் என்று நினைக்கிறேன்.

திடீரென்று குரு சப்தமாகப் பேசிக் கொண்டே அவன் பெட் ரூமிலிருந்து வெளியே வந்தான்.முதலில் என்னவென்றே புரியவில்லை.கமலாவை எழுப்பினான்.பின் ஹிந்தியிலும் இங்கிலீஷிலும் ஏதோ படபடவென்று பொரிந்து தள்ளினான்.ஏதோ பிரச்சனை என்று புரிந்தது.தூக்கக் கலக்கத்தில் என்னவென்றே எனக்குப் புரியவில்லை.குரு கோபமாக வெளியே சென்றான்.கமலா,”பணம் இருக்கா,செல் எடுத்துக் கொண்டாயா?இப்பப் போனால் முடியுமா? ஒரிஜினல் இருக்கா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டாள்.ஸஹாரா,ஸஹாரா என்ற வார்த்தை மட்டும் புரிந்தது.ஒரு நிமிஷத்தில் மனசு எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி விட்டது.குரு போன பின் கமலாவிடம் கேட்டேன் என்னவென்று.குரு ஏர்போர்ட்டுக்குப் போயிருக்கிறான் என்றாள்.

”ஸஹாரா ஸஹாராவாக இல்லை” என்றாள்.ஸஹாரா என்றால் ஹிந்தியில் ஆதரவு என்று அர்த்தமாம்.குரு இதற்குமுன் எத்தனையோ பேர்களுக்கு விசாவின் ஜெராக்ஸ் காப்பி அனுப்பியிருக்கிறான்.அவர்களும் இந்தியாவிலிருந்து வந்து விட்டுப் போயிருக்கிறார்கள்.ஸஹாரா ஏர் லைன்ஸ் புதிதாக இப்பொழுது தான் சிங்கப்பூருக்கு ·ப்ளைட் விடுவதால் இவன் அனுப்பிய நகலை ஒப்புக்கொள்ள மறுத்து விட்டார்களம். அதனால் ப்ரியா குடும்பம் வரமுடியாத சூழ்நிலை.கமலாவின் கணவர் மட்டும் காலையில் வருகிறாராம்.

ஸஹாரா ஸஹாராவாக இல்லை. ஆனால் ஸஹாராவாக(பாலை வனமாக) ஆகி விட்டது என்றேன் நான்.

Series Navigation

எஸ் ஜெயலட்சுமி

எஸ் ஜெயலட்சுமி