அப்துல் கையூம்
–
இந்தியாவிலிருந்து பிரான்சு போகிற வழியில் டிரான்ஸிட் பயணியாக பஹ்ரைன் வந்த என் நண்பனை அழைத்துக் கொண்டு காரில் ஒரு ரவுண்டு புறப்பட்டேன். பெட்ரோல் நிரப்புவதற்காக பங்கில் வண்டியை நிறுத்தியபோது “மும்தாஜ், ஜய்யித் – எது வேண்டும்?” என்று பங்க் ஊழியர் வினவ, நான் “மும்தாஜ்” என்று என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தேன். இந்த உரையாடலைக் கண்காணித்த நண்பன் என்னைப் பார்த்த பார்வையே சரியில்லை.
“சினிமா வட்டாரத்துலே மட்டுமில்லே, இங்கே கூட மும்தாஜ் மேடம் எவ்ளோ பிரபலமா இருக்காங்க பாத்தியா?” என்று மேலும் நான் கலாய்க்க, ‘பெக்கே பெக்கே’ என்று பேய்முழி முழித்த அவனிடம் “மும்தாஜ் என்றால் உயர்தர பெட்ரோல் வகை; ஜய்யித் என்றால் சற்று மட்ட ரகம்”; என்று விளக்கம் தந்த பிறகுதான் குழப்பம் தீர்ந்து சகஜ நிலைக்கு திரும்பி வந்தான் அவன்.
“ஷாஜஹான் மும்தாஜுக்காக தாஜ்மஹாலைக் கட்டினான். நீங்க மும்தாஜுக்காக அட்லீஸ்ட் ஒரு அஞ்சு மீட்டர் புடவையாவது கட்டி விடக் கூடாதா?” என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பட்டிமன்ற பேச்சாளர் ஒருமுறை அடித்த ஜோக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தேன் நான்.
“அந்த அம்மாவுக்கு துணியைக் கொஞ்சம் போர்த்தி விடுங்கப்பா” என்று திரையுலக இயக்குனர்களுக்கு அட்வைஸ் கொடுக்கிற சாக்கில், பாவம் எப்பவோ இறந்துப் போன ஷாஜகான், மும்தாஜ் இவர்களுடைய தலையையும் போட்டு உருட்டுகிறார்களே என்று அவர்களுக்காக பரிதாபப்பட்டேன்.
காதலனும் காதலியும் கடற்கரை மணலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்களாம். “கண்ணே உனக்காக தாஜ்மகால் கூட நான் கட்டத் தயார்” என்று டயலாக் பேசினானாம் அவன். “தாஜ்மகால் கட்டுறது அப்புறமா வச்சுக்குங்க. மொதல்லே என் கழுத்துலே தாலியைக் கட்டுறதுக்கு ஒரு வழி பண்ணுங்க” என்றாளாம் அவள்.
ஏ.ஆர்.ரகுமான் பாட்டு பாடுவதற்கு ‘தாஜ்மகால்’ ஒரு பாடுபொருளாக பயன்பட்டிருப்பதைப் போல, இந்த காதலிக்கு ‘தாஜ்மகால்’ தாலி கட்டச் சொல்வதற்கு உதாரணமாக பயன்பட்டிருக்கிறது. ‘காமெடி டிராக்’ மற்றும் ‘ஜோக்’ எழுதுபவர்கள்கூட ‘ஆ.. ஊ..’ என்றால் தாஜ்மகாலை வம்புக்கிழுத்து சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள்.
ஷாஜகான் – மும்தாஜ் காதல் ஜோடியின் ஓவியச்சித்திரத்தை கண்ணுற்றபோது “எங்களை வச்சு காமெடி கீமெடி ஒண்ணும் பண்ணலியே” என்று பரிதாபமா கெஞ்சுவது போலிருந்தது.
‘ஷாஜகான், மும்தாஜ் இவர்களைப் பற்றி சிறு குறிப்பு வரைக’ என்று வினாத்தாளில் வந்த கேள்விக்கு, “ஷாஜகானைப் பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை ஆனால் மும்தாஜுக்கு இப்பொழுதுதான் மார்க்கெட் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது” என்று பதில் எழுதினானாம் ஒரு கிராதக மாணவன்.
“ஷாஜகான் தாஜ்மகாலைக் கட்டினார். சோழ மன்னர் எதைக் கட்டினார்?” என்று வகுப்பிலே ஆசிரியர் கேட்டதற்கு “சோழ மன்னர் வேட்டி கட்டினார் சார்.” என்ற சொன்ன மாணவனின் குசும்பை என்னவென்றுச் சொல்வது?
அது மட்டுமா? “தாஜ்மகாலை கட்டியது யார்?” என்று வரலாற்றாசிரியர் கேட்டிருக்கிறார். “நான் பொறக்கிறதுக்கு முன்னாடி நடந்த விஷயத்தையெல்லாம் நோண்டி நோண்டி கேட்டா எனக்கெப்படி சார் தெரியும்?” என்று கோபத்துடன் பதில் சொன்னானாம் மாணவன்.
“இதுகூட ஒனக்குத் தெரியலியே பெஞ்ச் மேலே ஏறி நில்லு”ன்னு ஆசிரியர் அந்த மாணவனைக் கண்டிக்க, பெஞ்ச் மேலே ஏறி நின்ற மாணவன் ஜன்னலை எட்டிப்பார்த்து விட்டு “இப்பவும் தெரியலே சார்” என்று கூறி இருக்கிறான். இந்த ‘லொள்ளு’வை என்னென்பது?
“தாஜ்மகாலைக் கட்டியது யார்?” என்ற இதே ரீதியிலான மற்றொரு கேள்விக்கு “கொத்தனார்” என்று நெத்தியடி பதிலைக் கூறி வாத்தியாரையே பாடாய் படுத்தினானாம் இன்னொரு மாணவன். “ஏன் கேட்டோம்?” என்று நொந்து போயிருப்பார் அந்த ஆசிரியர் பாவம்.
இதை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டது நான் அண்மையில் பார்த்த தொலைக்காட்சி விளம்பரம். 99 ஏக்கர்ஸ்.காம் ரியல் எஸ்டேட்காரர்களின் விளம்பரப் படமிது. (பார்க்க : http://www.youtube.com/watch?v=1-gsMqNCasc )
ஷாஜகானும் மும்தாஜும் ‘குடுகுடு’ வயதை எட்டி பழுத்த பழமாகி விட்டார்கள். பாவம், இன்னும் ஷாஜகானுக்கு தாஜ்மகால் எழுப்புவதற்கு பொருத்தமான காலிநிலம் கிடைத்த பாடில்லை.
“பேகம்! கவலைப்படாதே. எப்பாடு பட்டாவது தாஜ்மகால் உனக்காக அவசியம் கட்டுவேன். இது ஷாஜகானின் வாக்கு” என்று மன்னர் ஆறுதல் கூற;
“ஆமா! 400 வருஷமாக இதே பல்லவியைத்தான் பாடி புருடா விட்டுக்கிட்டு இருக்கீங்க. இதுவரை ஒண்ணுமே செய்தபாடில்லே” என்று அலுத்துக் கொள்கிறார் மும்தாஜ்.
“ ஹூ..ம். கட்டத்தான் நினக்கிறேன். நல்ல இடம் கிடைத்தால்தானே? நான் என்ன செய்வேன்” என்று தன் புலம்பலை வெளியிட்டு;
“போங்க! எப்படியாவது கட்டடம் கட்டுவதற்கு உடனே ஒரு நல்ல இடத்தை தேடிப்பிடித்து கொண்டு சீக்கிரம் வாங்க!” – ‘லொக் லொக்’ என்று இருமிக் கொண்டே தன் பணியாட்களுக்கு உத்தரவிடுகிறார் பேரரசர் ஷாஜகான்.
சற்று நேரத்திற்குள், “பாபர் ரோடு, ஹுமாயூன் ரோடு, அக்பர் ரோடு, ஜஹாங்கீர் ரோடு, அனார்கலி ரோடு, இங்கெல்லாம் காலி நிலம் ரெடியாக இருக்கிறது மன்னா” என்று கூறி லேப்டாப் சகிதம் ரியல் எஸ்டேட்காரர்கள் வரைபடத்தைக் கொண்டுவந்து காட்டுகிறார்கள்”
அதோடு விட்டிருந்தாலாவது பரவாயில்லை. “தாஜ்மகால் கட்டுறதுக்கு பைனான்ஸ் வேணுமானாலும் ஏற்பாடு செய்து தர்றோம் மன்னா” என்று அவருக்கு ஆலோசனை தருகிறார்கள். கஷ்டகாலம்டா சாமி.
நல்லவேளை இந்த காமெடிக் கூத்தை எல்லாம் காண்பதற்கு அந்த மாமன்னன் இன்று நம்மோடு இல்லை. இருந்திருந்தால் “உலகமே போற்றுகின்ற அதிசயத்தை கட்டுனேன் பாருங்க; எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்” என்று புலம்பித் தள்ளியிருப்பார்.
ஷாஜகானைக் காட்டிலும் மும்தாஜை நாமெல்லோரும் நினைத்துப் பார்க்க வேண்டியது அவசியம். அதிலும் குறிப்பாக அசைவப்பிரியர்கள் அவரை மறக்கவே கூடாது. மும்தாஜ் ஒரு பேரழகி என்று சரித்திரம் போற்றுவதினாலா? ஊஹூம். நிச்சயமாக அதனால் இல்லை.
அசைவ உணவு வகைகளிலேயே தலைச்சிறந்த கண்டுபிடிப்பாக கருதப்படுவது ‘பிரியாணி’ என்பது நம் எல்லோருக்கும் தெரியும். நாவுக்கு இதமாக இல்லத்தரசி சமைத்துவிட்டாலே ‘இதை தயாரித்த விரல்களுக்கு மோதிரம்தான் செய்துபோட வேண்டும்’ என்று டயலாக் அடிப்பவர்களை நாம் பார்த்திருக்கிறோம்.
பாரெல்லாம் போற்றக்கூடிய இந்த சுவைமிகு உணவு வகையை கண்டு பிடித்தது யார் தெரியுமா? பேரரசி மும்தாஜேதான். இந்த ஒரு கண்டுபிடிப்புக்காகவே, இந்த ‘சூப்பர் சமையல்காரி’யின் நினைவாக தாராளமாக தாஜ்மகாலை கட்டலாம். உலகளவில், பிரியாணியின் பெருமையை அறியாதவர்கள் யார்தான் இருக்க முடியும்? அரபிகள் பிரியாணி என்றால் உயிரையே விட்டு விடுகிறார்கள். ஹைதரபாத் மன்னர் நிஜாம் சமையலறையில் மட்டும் 49 வகையான பிரியாணி தயாரித்து பரிமாறப்படுமாம்.
நளன் நினைவாக ‘நளபாகம்’ என்று கூறுவதைப்போல் மும்தாஜ் பேகம் நினவாக ‘மும்தாஜ்பாகம்’ என்று புகழ்மாலை பொழிந்தால் என்ன?
நம் சினிமாத்துறையினர்கள்கூட “ஷாஜகான்” என்றும் “தாஜ்மகால்” என்றும் திரைப்படங்களுக்கு தலைப்பிட்டு விமோசனம் தேடிக் கொண்டார்கள். இன்னும் “மும்தாஜ்” பெயரில் படம் எடுக்க வேண்டியதுதான் பாக்கி. இந்த மேட்டர் டி.ராஜேந்தர் காதில் தப்பித் தவறி விழுமேயானால் மும்தாஜையே கதாநாயகியாக்கி அவரே இணைந்து ஆடிப்பாடி படத்தையும் வெளியிட்டு விடுவார்.
நம் டைமண்டு கவிஞர் “50 KG தாஜ்மகால் எனக்கே எனக்கா?” என்று எழுதினாலும் எழுதினார், எனக்கு அபிஷேக் பச்சனை திரையில் பார்க்கும் போதெல்லாம் ஏனோ தெரியவில்லை ஷாஜகான் ஞாபகம்தான் வருகிறது. 50 KG தாஜ்மகாலை தனதாக்கிக் கொண்டவர் அவர்தானே?
வீட்டுத்தரைக்கு ‘டைல்ஸ்’ போடுவதா அல்லது ‘மார்பிள்ஸ்’ போடுவதா என்று முடிவெடுக்கத் திணறியபோது கடை சேல்ஸ்மேன் (அவர் பெயரும் ஷாஜகான்தான்) சலவைக்கற்களைப் பற்றி ஒரு பெரிய விளக்கப்பாடம் நடத்தி எனக்கு மூளைச் சலவை செய்தார். ஒரே மாதிரியான ரேகை பொருந்தி வருவது போல் ஒரே பாறையிலிருந்து எடுக்கப்பட்ட சலவைக்கற்கள் விலை சற்று அதிகமாம். முழு வெள்ளை நிறத்தில் காணப்பட்ட உயர்தர சலவைக்கற்களின் விலை கன்னாபின்னாவென்று இருந்தது.
அன்றைய தினம் ஷாஜகான் (சேல்ஸ்மேன் அல்ல; தாஜ்மகாலைக் கட்டிய அதே பேர்வழிதான்) என்னிடமிருந்து வசமாக வாங்கிக் கட்டிக் கொண்டார். ஊரு உலகத்துலே இருக்குற எல்லா வெள்ளைக் கற்களையும் திரட்டி தன் வீட்டுக்காரிக்காக மணிமண்டபம் கட்டி டிமாண்ட் ஏற்படுத்தி விட்டு விட்டாரே என்று அவரை மனதுக்குள் திட்டித் தீர்த்து விட்டேன்.
இவ்வேளையில், கூத்தாநல்லூர் ஈன்ற கவிஞர் திலகம் சாரணபாஸ்கரன் அவர்கள் 1958-ஆம் வருடம் ‘மணிச்சரம்’ என்ற கவிதைத் தொகுப்பில் எழுதிய ‘தாஜ்மஹல்’ என்ற கவின்மிகு கவிதை என் நினைவுக்கு வந்தது.
“சிற்பிகளில் தேர்ந்தவரைத் திணற வைத்து,
சிந்தனையில் தோய்ந்தவரைத் தெளிய வைத்து,
கற்பனையில் மிக்கவரைத் தெளிய வைத்து,
காவியஞ்செய் புலவர்களை வியக்க வைத்து,
அற்புதத்தின் அற்புதமாய் உயர்ந்து நிற்கும்
அழகுமிகு தாஜ்மஹலை நெருங்க லானோம்;
‘நற்கனவு இன்றைக்கே பலித்த’தென்று
நாயகியாள் நவின்றிட்டாள் ‘ஆமாம்’ என்றேன்”
தன் இல்லத்துணைவியுடன் தாஜ்மகாலைச் சுற்றிப் பார்த்ததாகக் கூறும் அந்தக் கவிதை மிகவும் யதார்த்தமாக இருக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால் அதை அவர் எழுதும்போது (1958) அவருக்கு மனைவியே இல்லை என்பது மட்டுமல்ல, தன் வாழ்நாளில் அவர் தாஜ்மகாலை நேரில் போய் காணவே இல்லை என்பதுதான் சுவராஸ்யம்.
“தாஜ்மகால் நிறைவாழ்வு வாழ்ந்த ஒரு தம்பதியரின் (மும்தாஜ் – ஷாஜகான்) நினைவுச்சின்னம். அதைக் காணச் செல்வோரும் தம்பதி சமேதராகவே செல்ல வேண்டும் என்பதற்காகவே ஒரு மனைவியையும் துணைக்கு அழைத்துக் கொள்ள வேண்டிய அவசிய மேற்பட்டது” என்று சாரணபாஸ்கரனே 19 ஆண்டுகட்குப் பிறகு (1-1-1977) எழுதிய உரை ஒன்றில் இதைப்பற்றிய தன்னிலை விளக்கம் அளித்திருந்தார்.
பண்டு தொட்டு கண்டம் விட்டு கண்டம் வரும் பார்வையாளர்கள், அண்டம் புகழும் இந்த அதிசயத்தைக் கண்டு ‘ஆஹா ஓஹோ’ என்று புகழ்ந்து தள்ளும் போது நாம் மட்டும் தண்டமாய் இன்னும் இதை பார்க்காமல் இருக்கிறோமே என்று எண்ணினேன்.
ஆண்டுதோறும் 25 லட்சம் பேர்கள் தாஜ்மகாலை காண்பதற்கு வருவதாக கருத்துக்கணிப்பு சொல்கிறது. இருபத்து லட்சத்து ஒண்ணாவது நபராக நானும் தாஜ்மகாலை பார்வையிட முடிவுச் செய்து, காதல் சின்னத்தை தனியாக காணச் செல்லுதல் உசிதமல்ல எனக் கருதி மனைவியையும் அழைத்துக் கொண்டு ஆக்ராவுக்குப் புறப்பட்டேன்.
சிப்பிக்குள் ஒளித்து வைத்திருக்கும் முத்தினைப் போல, செங்கல் மண்டபங்கள் சூழ்ந்த வளாகத்தினூடே வெள்ளை வெளேரென்று பிரமாண்டமாக காட்சி தந்தது அந்த உலக மகா அதிசயம். உள்ளே நுழைந்ததும் ஈசலாய் மொய்த்துக் கொண்டார்கள் கேமாரவும் கையுமாக சுற்றிய நபர்கள்.
தாஜ்மகாலின் நுழைவாயிலின் எதிரே நடுநாயகமாக வீற்றிருந்த அந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து பார்த்தேன். உலகத் தலைவர்கள் எத்தனைப்பேர்கள் அமர்ந்த சிம்மாசனம் இது என்று எண்ணிப் பார்த்தேன்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன், முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷர்ரப் இவர்கள் எல்லோரையும் இந்த இடத்தில் வைத்து நான்தான் படமெடுத்தேன் என்று ஒருவர் போட்டோ ஆல்பம் சகிதமாய் வந்து ஆதாரத்தைக் காட்ட “ஆஹா.. இவ்வளவு பிரபலமான புகைப்பட வல்லுனரா இவர்?” என்று வியந்து திரும்புவதற்குள் இன்னும் நாலைந்து பேர்கள் அதே மாதிரியான போட்டோவை ஏந்திக் கொண்டு என்னை முற்றுகையிட நான் சற்று உஷாராகி விட்டேன்.
தாஜ்மகாலை உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டுமா? தாஜ்மகாலின் மினாராவின் உயரத்துக்கு எம்பிக் குதிக்க வேண்டுமா? இரு விரல்களால் தாஜ்மகாலின் குவிமாடத்தை பிடித்து அலக்காகத் தூக்க வேண்டுமா? எப்படி வேண்டுமானாலும் எடுத்து தருகிறோம் போட்டோ என்றார்கள்.
எனக்கும் இதுமாதிரி போட்டோவிலாவது தாஜ்மகால் மேலிருந்து குதித்து ஸ்டண்ட் அடித்து பார்க்கலாமே என்ற ஆசை வந்தது. (உண்மையிலேயே குதித்தால் கை, கால்கள் என்னாவது?)
“மொதல்லே இந்த இடத்துலேந்து நகருங்க . நம்மோட டிஜிட்டல் கேமராவுலே எடுத்தாலே போதுமானது” என்று என் மனைவி என்னை அன்பாய் துரத்த, அந்த புகைப்பட வல்லுனர்களிடமிருந்து என்னை விடுவித்துக் கொண்டு நுழைவாயிலிருந்து நகர்ந்தேன். தாஜ்மகால் மேலிருந்து ‘டைவ்’ அடிக்கிற என்னாசை நிறைவேறாமலேயே போனது,
“முகலாய சாம்ராஜ்ய தீபமே – சிரித்த
முகத்தோடு நினவில் கொஞ்சும் தீபமே
மும்தாஜே முத்தே என் பேகமே – பேசும்
முழுமதியே என் இதய கீதமே”
என்ற மருதகாசியின் அமரகீதம் சிதம்பரம் ஜெயராமனின் குரலில் என் காதோரத்தில் அசரீரியாய் ஒலித்துக் கொண்டேயிருந்தது.
“பணம் படைத்தவன் படத்துலே எம்.ஜி.ஆரும், கே.ஆர்.விஜயாவும் முகலாய உடையிலே சுத்தி சுத்திவந்து ஆடிப்பாடினது இந்த கோபுரத்து மாடத்து மேலேதான்” என்று என் மனைவியிடம் தமாஸ் பண்ணினேன்.
“புரியாம பேசாதீங்க. அதெல்லாம் கிராபிக்ஸ் வேலை” என்று அவள் எனக்கு சீரியஸாக பதிலளிக்க; புத்திசாலித்தனமாக ஜோக் அடிப்பதாக நினைத்துக் கொண்டு இப்படி கிறுக்குப் பட்டம் வாங்கிக் கொண்டோமே என்று எனக்கு நானே நொந்துக் கொண்டேன்.
எங்களோடு சேர்ந்து சுற்றிய ஒரு கிண்டல் பேர்வழி தன் மனைவியிடம் கமெண்ட் அடித்துக் கொண்டு வந்தார். “கிரிமினல் வேஸ்ட்; கிரிமினல் வேஸ்ட்” என்று பொறிந்துத் தள்ளிய அவருடைய உரையாடலை ஆர்வத்துடன் ஒட்டுக் கேட்டேன்.
“சேச்சே.. பொண்டாட்டிக்காக அரசாங்க பணத்தை எடுத்து இந்த மாதிரி கிரிமினல் வேஸ்ட் பண்ணியிருக்கானே இந்த ஆளு” என்று தன் மனைவியிடம் ஷாஜகானுக்கு டோஸ் விட்டுக் கொண்டிருந்தார்.
“தாஜ்மகால் நித்தியத்துவத்தின் கன்னத்தில் தயங்கி நிற்கும் ஒரு துளி கண்ணீர்” என்றாராம் தாடிக்கவிஞர் தாகூர். எது எப்படியோ, ‘அது சோகத்தின் வெளிப்பாடு’ என்ற எண்ணம் மெல்ல மெல்ல மறைந்து, ஷாஜகானையும், மும்தாஜையும் வைத்து நாம் இப்போது செமையாக காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் உண்மை.
vapuchi@hotmail.com
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! பூகோளத்தின் நுண்ணிய ஈர்ப்பியல் தளப்படம் வரையும் ஈசாவின் விண்ணுளவி
- வார்த்தை மார்ச் 2009 இதழில்
- டாக்டர் அண்ணா பரிமளம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள்
- 2004ல் சிவகாமி சிங்கை வந்தபோது
- வரலாற்றில் பெண்கள்
- மீண்டும் ஒருமுறை
- ஷாஜகானும் மும்தாஜும் காமெடியும்
- தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம்: (எந்தத் தேர்தலாயிருந்தால் என்ன?)
- சங்கச் சுரங்கம் – 6 : பொருநர் ஆற்றுப்படை
- சை.பீர்முகம்மது அவர்களின் பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் சிறுகதை நூல் வெளியீடு
- ரமேஷ் பிரேம் இணைந்து வெளியிட்டிருக்கும் “உப்பு” கவிதைத் தொகுப்பு
- நான் கடவுள் – உலகப் பார்வையில்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -28 << உன்னைப் புண்படுத்தினேன் ! >>
- கடவுளின் பசி/பகட்டு நாகரிகமும் சன்னாசி கிழவனும்
- ஒரு கார்ட்டூன் சித்திரக்காரனின் திட்டமிட்ட மரணம்
- நீளும் விரல்கள்…
- நிமிடக்கதைகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் << அலைகளின் கீதங்கள் >> கவிதை -3 (பாகம் -2)
- வேத வனம் விருட்சம் 28
- அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 5- ஆ. இரா. வேங்கடாசலபதி
- பாரதி மணி என்னும் பன்முக ஆளுமை
- ஆத்ம சக்தி ஓங்க வேண்டும்!!
- தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள் – (2)
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தேழு
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865)காட்சி -5 பாகம் -1
- பிங்கி
- வெளிச்சம்
- எதிர்கொள்ளுதல்