கோவி.கண்ணன்
பெரியநல்லூர் பெயருக்கு ஏற்றபடி இல்லாத ஒரு சின்ன கிராமம். ஆறு கிலோமிட்டர் அருகில் உள்ள பக்கத்து டவுனுக்கு போகவேண்டும் என்றால் வசதி உள்ளவர்கள் கட்டை வண்டியிலும், மற்றவர்கள் கால் நடையாகவும் தான் செல்ல வேண்டும் ரோடு அவ்வளவு மோசம். மற்றபடி நல்ல விளைச்சல் கொடுக்க கூடிய படி நீர் நிலைகள் நிறைந்த ஊர்.
அந்த ஊரில் அடுத்த கிராமம் கண்ணுக்கு தெரியும் கடை கோடியில், சுடுகாட்டை ஒட்டியபடி அந்த கிழவியின் குடில் இருந்தது. கிழவியின் பெயர் செல்லாத்தா. செல்லாத்தாவிற்கு எழுபத்தைந்து வயது இருக்கும். ஒன்டிக்கட்டை கிழவி. கிழவிக்கு அந்த ஓட்டை குடிலைத்தவிர துணையாக ஒரு வேப்பமரமும் இருந்தது.
கிழவி மழையோ, காற்றோ அதிகமாகவோ இருந்தால் கஞ்சி வைப்பதற்காக குடிசைக்குள் செல்வாள், மற்றபடி எப்பொழுதும் அந்த வேப்ப மரத்தடியில் தான், எந்நேரமும் எதாவது ஒப்பாறி வைத்தபடி கால் நீட்டி உட்கார்ந்திருப்பாள்.
வயது ஆனதால் செல்லாத்தாவை யாரும் வேலைக்கு கூப்பிடுவது இல்லை. கிழவிக்கு ஜீவனம் என்றால் அவள் பொறுக்கி சேகரிக்கும் முள் விறகு தான். அதனால் காலையிலோ, சாயந்தரத்திலோ வேப்ப மரத்தடியில் அவளைப் பார்க்க முடியாது. அப்படி வெளியில் போகும் காலில் முள்குத்தினால் சேகரிக்க ஒரு முள் குச்சியாவது கிடைத்ததே என்று சந்தோசமாக எடுத்து வைத்துக்கொள்வாள். அந்த விறகுகளை அந்த ஊரின் நடுவில் அமைந்திருக்கும் ராமாயி இட்டெலி கடையில் குடுத்துவிட்டு இரண்டு இட்டிலியில் அவள் காலை வயிற்றுப்பாடு, பின்பு பெட்டிகடை வெற்றிலை பாக்கு என அவளுடைய வாழ்க்கை ஓடும்.
அறுவடை காலங்களில் வயல் வெளிகளில் இரைந்து கிடக்கும் நெற்கதிர்களைப் பொறுக்கி கொஞ்சம் காசுக்கும் கஞ்சிக்கும் மாற்றிக் கொள்வாள். யாராவது தோட்டம் சுத்தம் செய்யச் சொன்னால் செய்வாள். முடிந்து வைத்திருக்கும் சில்லறையில், அரிசி நொய் வாங்கி சாயங்காலத்தில் நிறைய தண்ணீர்விட்டு காய்சிய கஞ்சிதான் மற்ற வேளைகளில் அவள் உணவு.
கிழவி புருசன் முப்பது வருசத்துக்கு முன்னமே செத்து போய்விட்டான், அவன் வைத்தது தான் அந்த வேப்பமரம், இருந்த ஒரு மகனும், ஜாதி கலவரத்தில பதினைந்து வருசத்துமுன்பு வெட்டி கொல்லப்பட்டான். அதை நினைத்துதான் கிழவி எப்பொழுதும் ஒப்பாறி வைத்துக் கொண்டிருப்பாள்.
மவராசன் போனவழி எம்மவனும் போனானே ?
மல்லுக்கட்ட போயிருந்தா சொல்லிப்புட்டு போவானே
மசானம் போன மவன் எனக்கு மண்ணு போட வருவானா ?
என்று ஒப்பாறி நீண்டு கொண்டிருக்கும்.
கிழவிக்கு வாய் கொஞ்சம் அதிகம், யாராவது வம்புக்கு இழுத்தால், அவர்கள் ஏன் இவளிடம் பேச்சு கொடுத்தோம் என்று நினைக்கும் அளவுக்கு பதில் பேசிவிடுவாள்.
‘ஏ…ன் ஆத்தா, வேப்ப மரத்த பாத்து, என்னத்த யேசிச்சிக்கிட்டுருக்க, வேப்ப மரத்தில எலந்தபழம் வருமான்னா ? ‘
‘வாடி எ…ஞ்ச் சக்காளத்தி, உன் புருசன் குடுக்குற புள்ளைய எந்த கெளையில கட்டி ஆட்டலாமுன்னு பாக்குரேன்… ‘
‘ஐயையோ, நான் வர்ரேன் ‘ என்று ஓட்டமெடுத்தாள் கேட்டவள்
அப்புறம் ஒருநாள், ஒரு இளைஞன்
‘கிழவி நீ வேனும்னா பாரு, ஒரு நா நீ துங்கிறப்ப, இந்த மரத்தை வெட்டி சாய்ச்சு தூக்கிட்டுத்தான் போப்போறேன் ‘
‘போட போக்கத்தப் பயலே, காலுகையு நல்லாதான இருக்கு, கிழவி மடியில தான் கைய வெக்கனுமா, வெட்டிபுடுவேன் வெட்டி ‘ என்றாள்
அந்த மரத்தில் எல்லோருக்கும் ஒரு கண், வெட்டி வித்தா எப்படியும் ஒரு இரண்டாயிரத்துக்கு போகும், கிழவியிடம் கேட்டு பார்த்தார்கள்
கிழவி மசிந்து கொடுப்பதில்லை.
‘எம் புருசனும் போயி, மவனும் போயி, ஒன்டி கட்டை எனக்கு இந்த மரம் ஒன்னுதான் தொணையா இருக்கு ‘
‘கொடுக்க மாட்டேன்யா, கொடுக்கமாட்டேன், என் சாவு இந்த மரத்துக்கு கீழ தான் ‘
என்று மறுத்துவிடுவாள் கிழவி.
அன்று ஒருநாள் காலை பத்து மணி இருக்கும் லேசாக தூரிய தூற்றல் மரத்தின் அடியில் படுத்து கிடந்த அவளை எழுப்பி விட்டது, கிழவிக்கு உடம்பு சரியில்லை, கையில் காசும் இல்லை
ரொம்ப நேரம் எழுந்து நடக்க முடியாமல் மரத்தின் மீது சாய்ந்து கால் நீட்டி படுத்திருந்த கிழவி, வெற்றிலையை மென்றுவிட்டு, தண்ணீரை கொப்பளித்து குடித்து விட்டு
மெதுவாக எழுந்தாள்
‘ராமியிகிட்ட இன்னெக்கு இட்டெலி கடன் கேக்க வேண்டியது தான் ‘ என்று நினைத்துக் கொண்டு மெதுவாக ஊர்ந்து நடந்து சென்றாள்.
இராமயிக்கும் வேறு வழியில்லை, கிழவிக்கு எடுத்துவச்ச இட்டெலி, இனிமேலும் யாரும் வாங்க வரமாட்டங்க, பரவாயில்லை என்று முனுகிகொண்டு கிழவிக்கு கடனுக்கு இட்டெலியை குடுத்தாள்.
இட்டெலியை தின்ற கிழவிக்கு தெம்பு வர, திரும்பி தன் குடிசையை நோக்கி நடந்தாள்
கிழவிக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது
எல்லோரும் அதே திசையில் பதட்டத்துடன் ஓடிக்கொண்டிருந்தார்கள்.
‘என்னாங்கடி இப்படி ஓடுறிங்க, டவுன்லேர்ந்து கொழா போட்டவன் யாராவது வந்திருக்கானா ? ‘
கிழவிக்கு நின்று பதில் சொல்லக் கூட யாரும் தயாரக இல்லை. அப்படி ஒரு ஓட்டம் ஓடினார்கள்
கிழவி தன் குடிசை இருக்கும் இடத்தில் சற்று தொலைவை அடைந்ததும், கவனித்துவிட்டாள்
ஆம் அவள் குடிசை அருகில் தான் ஒரே கூட்டம்
‘என் வீட்டு வாசல்ல ஏன் இவ்வளவு பேரு நிக்கிறானுங்க, என்னான்னு தெரியலயே, கிட்ட போயி பாப்போம் ‘ என்று நினைத்துக் கொண்டு முன்னேறினாள்
குடிசையை நெருங்க, நெருங்க அவளை முந்திக் கொண்டு ஆண்களும் பெண்களும் அங்கு ஓடிவந்து நின்று கொண்டிருந்தார்கள்
அருகில் செல்ல செல்ல ‘ஆத்தாடி, மகமாயி ‘ என்று குழவை சத்தம் காதை கிழித்துக் கொண்டு கிழவிக்கு கேட்டது
கூட்டத்தை விளக்கி உள்ளே நுளைய முனைந்தாள் கிழவி. முடியவில்லை, இடுக்கு வழியாக பார்த்தாள், வேப்ப மரத்தை சுற்றி பத்தடி விட்டு எல்லோரும் வட்டமாக நின்று கொண்டிருந்தார்கள்
ஒரு பெரிசு கையில் ஒரு நீண்ட கழியை வைத்துக் கொண்டு,
‘தீட்டு பட்டுடும் யாரும் நெருங்காதிர்கள், அங்கேர்ந்தே பாருங்க ‘ என்று பயமுறுத்திக் கொண்டிருந்தார்
வேப்ப மரத்தடியில் சிவப்பாக இரத்தம் போல வழிந்திருந்தது
அதற்குள் யாரோ ஒருவர்,
‘இது தெய்வ குத்தமா தான் இருக்கனும், நாம மூனு வருசமா, பொங்க வெக்கல… அதான் ஆத்தா கோபத்த காட்டுறா ‘
இன்னொரு பெண் சம்பவத்தை விவரித்தாள்
‘சாணியள்ள வந்த மொட்ட பட்டம்மாதான் மொதல்ல பாத்திருக்கா ‘
‘பாத்துட்டு, ஒளரிக்கிட்டே ஊருக்குள்ள ஓடிவந்தவதான் எல்லாத்தையும் சொன்னா ‘
‘செல்லாத்தாவோட வேப்பமரத்தடியில ரத்தம் கொட்டுதுன்னு ‘ என்று வேர்க்க வேர்க்க அதிர்சியாக சொன்னவள்,
‘இங்க வந்து பாத்தா அது நெசம்தான் ‘ என்றாள். எல்லோரும் வாயை பிளந்தார்கள்
அதற்குள் நிறைய பெண்கள் ‘ஆத்தா, மாரியம்மா… ‘ சாமியாடி சரிந்தார்கள்
கிழவி மெல்ல கண்களை இடுக்கி வேப்ப மரத்தடியில் பார்த்தாள்
அவளுக்கு புரிந்தது, ஏதோ சொல்ல வாயெடுக்கு முன்
‘டேய்… போயி ஒரு உண்டியல கொண்டாங்கடா, கெடாய வெட்டுங்கடா, கோழிய அறுங்கடா ‘ என ஒருவர் கத்த
கிழவி வாயை மூடிக்கொண்டு, மவுனமாக பார்த்துக்கொண்டிருந்தாள்
அதற்குள் எல்லாம் வந்து சேர்ந்தது,
கிழவி எல்லோரையும் விலக்கிவிட்டு மரத்திற்கு முன் நின்று கொண்டு கூட்டத்தை பார்த்து, ஆட ஆரம்பித்தாள்
‘டேய் ஆத்தா என் கனவுல வந்து சொன்னாடா, இந்த ஊருல யாரும் எனக்கு பொங்க வெக்கல அதனால ஊரவிட்டே போறேன்னு சொன்னாடா… ‘
‘இவ என் வீட தேடி வந்திருக்க, செய்யறத செஞ்சிட்டு போங்கடா, வெள்ளி, செவ்வா வெளக்கேத்துங்கடா, இல்லேன்னா ஊரவிட்டு போய்டுவா ‘
‘ரொம்ப கோவமா இருக்கா, இவ இன்னுமே இங்க தான் இருக்கனும், உட்டுடாதிங்கடா ‘
‘சரி செல்லாத்தா கெழவி அப்படியே செஞ்சிடுறோம், ஆத்தா கோவம் கொறஞ்சு, நல்ல வெளச்சல கொடுக்கனும் ‘ என்றார்கள் கோரசாக
கிழவிக்கு மட்டும் தெரியும்,
வழக்கமாக வெற்றிலை போட்டு சற்று தள்ளி துப்புபவள், இன்று உடம்பு முடியாததால், மரத்தடியிலேயே துப்பியதும், மழை காரணமாக அது வழிந்து ரத்தம் போல் எல்லோருக்கும் தெரிந்தது.
மனதுக்குள்,
‘இனிமே, வயித்துக்காக வெயில்ல வெறகு பொறுக்க வேண்டியதில்லை, வேப்ப மரத்துக்கும் நான் சாகிறவறைக்கும் ஆபத்து வராது ‘ நினைத்து சந்தோசப்பட்டுக் கொண்டாள்
முதன் முறையாக அந்த மரம் அவளுக்கு, ஆத்தா மகமாயி போலவே தெரிந்தது, எல்லோரையும் போல அவளும் கையெடுத்து மரத்தை நோ
க்கி அர்த்தத்துடன் கும்பிட்டாள்.
மரமும் தண்ணீர் விட்டு வளர்த்து இது நாள் வரையில் தன்னை காத்ததற்கு நன்றி சொல்லுவது போல் சந்தோசமாக அவளைப்பார்த்து தலையை அசைத்து கொண்டிருந்தது.
கோவி.கண்ணன்
சிங்கப்பூர்
- நால்வருடன் ஐவரானேன்
- பின்நவீனத்துக்குப் பின்:அதிநவீனத்துவம் (Hypermodernism) சில குறிப்புகள்
- மஸ்ஸர்ரியலிசம்(MASSURREALISM)இலக்கியத்தில்
- புராண நிகழ்வை பிறிதொரு தளத்தில் விரிவடையச் செய்யும் புத்துருவாக்கம்
- கொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை
- மாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம்
- அலையாத்திகாடுகளில் நுழைந்து திரியும் பட்டாம்பூச்சிகள் : முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அளித்த ‘நெய்தல் மண்ணுக்கோர்சாசனம் ‘
- தொகுதிப் பங்கிடு-ஒரு கற்பனை
- நேரம் கேட்டால்கூடச் சொல்லாதே!
- “ஹால் டிக்கெட்”
- தீம்தரிகிட மாத இதழ் இணைய இதழாகிறது
- உலகமயமாக்கலில் எழும் சில சந்தேகங்கள்
- வனப்பிரஸ்தம் – குந்தியின் தனிமையும், தேடலும்
- பெரியாரும், சிறியாரும்
- நம்பமுடியாமல்…
- இந்திரா பார்த்தசாரதியுடன் ஒரு நாடகப் பயிற்சி முகாம்
- யேல் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் திரைப்படங்கள்
- தேயும் விரல்களும், தோய்ந்த நஞ்சும்
- சான்றோர் சமூகமும் கோவில் நுழைவுப் போராட்டமும்
- கடிதம் – ஆங்கிலம்
- கடிதம் ஆங்கிலம்
- கடிதம்
- கடிதம் ஆங்கிலம்
- தமிழகக் குடும்ப வாழ்க்கை (நேற்று – இன்று – நாளை)
- அறிவியல் புனைக்கதை : என்னை யாரென்று எண்ணி எண்ணி
- வேம்பு
- ஒரு மயானத்தின் மரணம்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 14
- தொ ட ர் க தை- ராகு கேது ரங்கசாமி -3
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஏழு: ‘கோட்டை வாசலும், கோட்டையடியும் வெயிலுகந்தபிள்ளையார் ஆலயமும் ‘
- புலம் பெயர் வாழ்வு (6)
- உயிரா வெறும் கறியா ?
- வாசிப்புக் கலாசாரம்
- சிறு தெய்வங்களுக்கு நேர்ந்துள்ள அபாயம்
- ஸ்டாலின் முதலமைச்சர் ஆனால் என்ன தப்பு ?
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-14) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- இறை மறுப்பாளர் நீட்சேயின் இன்ப அறிவியல் (GAY SCIENCE BY FREDRICH NIETZSCHE)
- கீதாஞ்சலி (66) எனது கடைசிக் காணிக்கை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- கவிதை
- பெரியபுராணம் – 82 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கவிதைகள்
- அலறியின் கவிதைகள்
- முதலாம் பிசாசின் நடத்தை
- நினைவலையில் காற்றாலை
- வெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்வெளிப் பயணங்கள்!
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -3 (சென்ற வாரத் தொடர்ச்சி)