அரவிந்தன் நீலகண்டன்
பாரதத்தின் வரலாற்றில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆரிய படையெடுப்பு என்ற ஒன்று நிகழ்ந்ததா எனும் கேள்வி என்றோ நடந்த ஒரு நிகழ்வு குறித்த அறிவியல் தேடல் என்ற நிலையிலும், அதற்கும் அப்பால் பல நூற்றாண்டுகளாக இந்த தேச மக்களின் வாழ்வுடன் ஒருங்கிணைந்து விட்ட பல விஷயங்களை குறித்து புதிய பார்வையை கொடுக்கும் அறிதல் முறையை பாதிக்கும் சித்தாந்த அடித்தளம் என்ற முறையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் பாரத அரசியலில் அதிகாரம் சார்ந்த பல நிலைபாடுகளிலும் இக்கோட்பாடு மெய்ப்பிக்கப்படுவதும், பொய்ப்பிக்கப்படுவதும் குறிப்பிட்ட சாராருக்கு பலம் அளிப்பதாக உள்ளதால் இக்கோட்பாட்டினை ஆராய்வோரின் அரசியல் உள்நோக்கம் எதிரணியினரால் பேசப்பட்டு மிகத் தீவிர, உணர்ச்சி ரீதியிலான அடிப்படையில் விவாதங்கள் முத்திரை குத்தலாக மாறி அறிவியல் முன்னகர்தலுக்கு வழி வகுக்காது போய்விடும் அபாயமும் உள்ளது.
ஆரிய இன மற்றும் படையெடுப்புக் கோட்பாடு இரு தன்மைகளுடன் முன் வைக்கப் படுகிறது.
1) கடும் ஆரிய படையெடுப்புக் கோட்பாடு: சற்றேறக்குறைய 3500 ஆண்டுகளுக்கு கைபர், போலன் கணவாய்கள் மூலம் இந்தியாவில் குடியேறிய கால்நடை மேய்க்கும் நாடோடி இனமான இந்தோ ஐரோப்பியர்கள் இங்குள்ள பூர்வீக குடியினரை வெற்றி கொண்டனர். இந்த வெள்ளை நிற நாடோடிகள் தம்மை ஆரியர்கள் என அழைத்தனர். இப்பதிவுகளே ரிக் வேதத்தில் காணப்படும் ‘ஆரிய:தஸ்யு ‘ மோதல்கள். தஸ்யுக்கள் பாரதத்தின் பூர்வீகக்குடிகள். கருமை நிற சப்பை மூக்குடைய இவர்கள் சிவனை வழிப்பட்டு வந்தனர். மேலும் தாய் தெய்வ வழிபாட்டுடையவர்கள். ஆரியர்கள் இயற்கை வழிபாட்டாளர்கள். இந்திரன், அக்னி ,மித்திரன் ஆகியவர்களை வழிபட்டனர். அக்னி வழிபாடு, சோமபானச் சடங்குகள் ஆகியவை இவர்களது மதச் சடங்குகளில் முக்கியமானவை. கால்நடை மேய்க்கும் இவர்களுக்கு பசு வழிபாடும் முக்கியமானது. ஆரியல்லாதாரை வெற்றி கண்ட பின் இவர்கள் எழுப்பிய சமுதாய அமைப்பில் பாரதத்தின் பூர்வீகக் குடிகள் சூத்திரர்கள் அல்லது அதி சூத்திரர் ஆக்கப்பட்டனர். திராவிட இனத்தைச் சார்ந்த இப்பூர்வீகக் குடிகள் உயர்ந்த நகர்ப்புற நாகரிகம் ஒன்றை உருவாக்கியிருந்தனர். அதுவே சிந்து சமவெளி நாகரிகம். இந்நாகரிகத்தை ஆரிய படையெடுப்பு சுவடற்று அழித்தது. அதன் பின் வரலாற்றில் கவிழ்ந்த வைதீக கால இருள் திரை விலகுகையில் பாரத வரலாற்றின் மேடையில் கங்கை சமவெளி நாகரிகத்தை காண்கிறோம். அது ஆரிய திராவிட கூறுகளுடன் இன அடிப்படையில் அமைந்த வர்ணாஸ்ரம சமூக கட்டமைப்புடன் விளங்குகிறது. சென்ற இரு நூற்றாண்டுகளின் இந்தியவிய லாளர்களால் வேத இலக்கிய அடிப்படையிலும், அகழ்வாராய்ச்சியாளர்களான மார்ட்டிமர் வீலர், சர் ஜான் மார்ஷல் ஆகியோரால் அகழ்வாய்வு அடிப்படையிலும் இக்கோட்பாடு முன்வைக்கப்படுகிறது.
2) மென் ஆரிய இன புலம் பெயர்தல் கோட்பாடு: அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன் மற்றும் மைக்கேல் விட்சல் போன்ற மொழியிலாளர்களால் இன்று முன்வைக்கப்படும் இக்கோட்பாட்டில் ஆரிய படையெடுப்பைக் காட்டிலும் ஒரு மொழிக் குடும்பம் சார்ந்த குழுவின் புலப்பெயர்ச்சியே முன் வைக்கப்படுகிறது.ஆனாலும் மைக்கேல் விட்ஸல் அண்மையில் ‘தி ஹிண்டு ‘ பத்திரிகையின் ‘ஓபன் பேஜ் ‘ பகுதியில் எழுதி வந்த விவாதக் கட்டுரைகளில் குறிப்பிடுவது போல இப்புலப்பெயர்வு பூர்வீக குடிகளுடனான வன்முறையினை தவிர்க்க முடிந்திருக்காது. தன் அடிப்படையில் இக்கோட்பாடு கடும் கோட்பாட்டினை சற்று மாற்றங்களுடன் முன்வைக்கிறது.
வேதத்தின் கால நிர்ணயம் இக் கோட்பாட்டின் மெய்ப்பித்தலில் பெரும் இடம் வகிக்கின்றது. இக்கோட்பாடின் படி வேதத்தின் காலம் கி.மு. 1500 முதல் 1200 வரை. இக் கால நிர்ணயம் சிந்து சமவெளி நாகரிகம் வேதத்திற்கு முந்தையது (மற்றும் மாறுபட்டது) என நிறுவுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இக்கால நிர்ணயம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஆரிய படையெடுப்பும் நடந்த வரலாற்று நிகழ்வாக ஏற்கப்பட கூடிய உறுதிப்பாடடையும். ஆரிய படையெடுப்புக் கோட்பாட்டின் இருதய ஆதாரம் இதுவல்ல எனினும் முக்கிய ஆதாரங்களில் இதுவும் ஒன்று. ஆனால் இது பொய்ப்பிக்கப்படும் பட்சத்திலோ ஆரிய படையெடுப்புக் கோட்பாட்டின் வாத சங்கிலியில் முக்கிய கண்ணி அறுபட்டு விடும். இதுவே வேதத்தின் கால நிர்ணயத்திற்கு ஆரிய இன கோட்பாட்டில் நிலவும் முக்கியத்துவம்.
வேதங்கள் உருவாக்கப்பட்ட காலத்தை நிர்ணயித்தவர்களுள் முதன்மையானவர் மாக்ஸ் முல்லரே. அக்கால ஐரோப்பிய அறிவுலகில் பழம் நாகரிகங்களின் கால நிர்ணயத்தில் ‘நோவா கால பெரும் பிரளயம் ‘ எனும் விவிலிய புனை நிகழ்வு பெரும் பங்கு வகித்தது. வேத கால நிர்ணயத்தில் மாக்ஸ் முல்லருக்கும் அது அடிப்படையாக அமைந்தது. அபே துபாய்ஸ் (1770=1848)எனும் பிரான்ஸ் கிறிஸ்தவ போதகரின் ‘ஹிந்து பழக்க வழக்கங்கள் அவர்களது சடங்குகள் ‘ எனும் நூலின் 1897 ஆம் ஆண்டு பதிப்பின் முன்னுரை மாக்ஸ் முல்லரால் எழுதப்பட்டது. விவிலியத்தில் கூறப்படாத மக்கள் இனங்களின் தோற்றத்தை விவிலியத்தில் கூறப்பட்டுள்ள இனக்குழுக்களுடன் இணைக்கும் துபாய்ஸ்ஸின் முயற்சி குறித்து அம்முன்னுரையில் மாக்ஸ் முல்லர் ‘இந்தியர்களின் முட்டாள்தனமான மூடக்கதைகளுக்கு பதிலாக ‘ இந்தியர்களின் தோற்றம் குறித்த ‘ஆணித்தரமான வரலாற்று உண்மை ‘ என குறிப்பிட்டார். துபாய்ஸ் இந்த ‘ஆணித்தரமான வரலாற்று உண்மை ‘ யினை பின்வருமாறு விளக்கியிருந்தார், ‘நோவாவின் கால பிரளயத்திற்கு பிறகுதான் இந்தியாவில் மக்கள் குடியேற்றம் ஏற்பட்டது. நோவாவின் சந்ததிகள் தங்கியிருந்த செனார் சமவெளிகள் இந்நாட்டிற்கு அருகாமையில் இருப்பதால் விரைவில் வளமையான இந்நாட்டில் நோவாவில் சந்ததியினரில் ஒரு பிரிவினர் குடியேறினர்….எனது கருத்துப்படி வடக்கு வழியாக அவர்கள் குடியேறினர். அவ்வாறு நுழைந்தவர்களின் மூதாதையர் காக்கஸ் அருகே இருந்தனர். ‘. துபாய்ஸை மாக்ஸ் முல்லர் இந்தியாவினைக் குறித்த ‘முழுமையான நம்புதற்குரிய அறிவு படைத்தவர் ‘ என முன்னுரையில் கூறியிருந்தார்1. இந்த கி.மு 4004 இல் உலகு படைக்கப்பட்ட புனைவின் அடிப்படையில் எழுந்த ‘முழுமையான நம்புதற்குரிய அறிவு ‘ பின்னர் மாக்ஸ் முல்லரின் வேதகால நிர்ணயத்தில் பெரும் பங்கு வகித்தது. எனவே மாக்ஸ் முல்லர் வேதங்களின் கால அளவை கி.மு. 1500 முதல் 1200 வரைக்குள்ளாக கொண்டு சென்றதில் எந்த வியப்பும் இல்லை. ஆனால் அவருக்கே இதில் நிறைவு இல்லை. அவரது மறைவுக்கு சில காலம் முன் வெளியிடப்பட்ட அவரது புகழ் பெற்ற ‘இந்திய தத்துவத்தின் ஆறு மரபுகள் ‘எனும் நூலில் அவர் , ‘வேத மந்திரங்கள் கி.மு. 1500 இல்
இயற்றப்பட்டவையோ, கி.மு.15,000 இல் இயற்றப்பட்டவையோ உலக இலக்கியங்களில் அவற்றின் இடம் மறுக்கப்படாத அளவு முக்கியத்துவம் வாய்ந்தது. ‘
விவிலிய புனைகதை தாக்கத்தால் எழுந்த இந்த கால நிர்ணயம் பின்னாளில் வரலாற்று உண்மையாக மாற்றப்பட முக்கிய காரணம், வேதங்களில் இரும்பு ( ‘ஐயஸ் ‘) குறிப்பிடப்படுவது. எனவே வேதகாலம் இரும்புப் பயன்பாட்டுக் காலத்தினுெடே அல்லது அதற்கு பின்னாதாகத்தான் இருக்க வேண்டும்.மற்றொரு முக்கிய ஆதாரம், குதிரைகள் பயன்பாடு இந்திய பிரதேசத்தில் கி.மு. 1500 களுக்கு பின்னரே ஏற்பட்டதால் குதிரைகள் குறித்து பேசும் வேதங்களின் காலமும் கி.மு. 1500 களுக்கு பின்னரே இருக்கவேண்டும். இவ்வாதங்கள் சிந்து சமவெளி நாகரிகத்தை வேத கால நாகரிகத்திலிருந்து வேறுபடுத்தி காட்டவும் பயன்படுகின்றன. இந்த இருவாதங்களும் இன்று பொய்ப்பிக்கப்பட்டுள்ளன. இன்று ஆரிய புலப்பெயர்வு கோட்பாட்டாளர்கள் கூட ஐயஸ் எனும் சொல் உலோகங்களுக்கான பொதுச்சொல் என்பதையும் அது வேதத்தில் தாமிரம் போன்றவற்றை குறிப்பிட பயன்படுத்தப்பட்டதை ஏற்றுக் கொள்கின்றனர்2. குதிரையைப் பொறுத்த வரையில் பாரதத்தின் குகைவாழ் மக்கள் காலம் தொட்டு குதிரை இந்தியாவில் அறியப்பட்டு வந்துள்ளது. ‘திராவிட ‘ மொழிகளில் ‘இந்தோ ஐரோப்பிய ‘ பதமல்லாத குதிரை எனும் பதம் உள்ளது. மேலும் சிந்து சமவெளி அகழ்வாய்வுகள் பலவற்றிலும் குதிரை எலும்புகள் அனைத்து தளங்களிலும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.(இது குறித்து விளக்கமாக பின்னர்.)
இந்நிலையில் வேதத்தின் கால நிர்ணயம் குறித்த மாற்றுக் கருத்துகளை காணலாம். மாக்ஸ் முல்லர் காலத்திலேயே அவரது வேதகால நிர்ணயம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. இலக்கிய வரலாற்றுப் பார்வையுடன் தன் ஆராய்ச்சியினை மேற்கொண்ட மெளரீஸ் விண்டர்நிஸ், ‘வேதம் போன்றதோர் மகத்தான இலக்கியத்தின் வளர்ச்சியை விளக்க, கி.மு. 1200 அல்லது கி.மு. 1500 போன்றதோர் பிற்கால கட்டத்தை ஏற்றுக் கொள்வது இயலாத காரியம் ‘ 3என்கிறார். பால கங்காதர திலகர் மிருகசீரிஷ விண்மீன் கூட்டங்கள் குறித்த வேத இலக்கிய தகவல்களின் அடிப்படையில், வேதத்தின் காலத்தை கி.மு.4500 என கணிக்கிறார்4. ஹெர்.ஜெக்கோபியும் சற்றேறக்குறைய இதே முடிவுக்கு வருகிறார்5. பொதுவாக இவர்களது கால நிர்ணயம் பின்னால் ஏற்பட்ட அகழ்வாய்வு கண்டுபிடிப்புகளால் (அதாவது சிந்து சமவெளி நாகரிக கண்டுபிடிப்பால்) பொய்ப்பிக்கப்பட்டுவிட்டதாக ஆரிய படையெடுப்புக் கோட்பாட்டாளர்கள் கூறுகின்றனர்6. ஆனால் சிந்து சமவெளி அகழ்வாய்வுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்ட சர்வ தேச ஆய்வாளர்களும் கி.மு 4500 முதல் கி.மு 3000 வரைக்கும் வேதத்தின் காலத்தை கொண்டு செல்கின்றனர்7. வெகு அண்மையில் வெளியான ஓர் ஆய்வுத்தாள் ‘பீரோ டெஸ் லாங்க்கிடியூட் ‘ எனும் பாரீஸ் சார்ந்த விண்மீன் ஆய்வு மைய மென் பொருள் மூலம் செய்த கணிப்பின் அடிப்படையில் வேதத்தில் கூறப்படும் விண்மீன் மண்டல் நிகழ்வு நடைபெற்றிருக்க வேண்டிய காலத்தினை கி.மு. 4137 இல் நடந்ததாக பதிவு செய்கிறது8. வலுவான மொழியியல் அடிப்படையில் வேதங்களை விட மிகவும் பிற்பட்ட காலத்தில் இயற்றப்பட்டதாக கருதப்படும் வேதாங்க ஜோதிஷம் ஆரிய இடப்பெயர்கை கோட்பாட்டாளரான வானவியல் பேராசிரியர் ராஜேஷ் கோச்சரால் வேதாங்க ஜோதிஷம் கூறும் விண்மீன் மண்டல அமைப்புகளின் அடிப்படையில் கி.மு. 1400 என கணிக்கப்படுகிறது9. இது வெகு இயல்பாக வேத காலத்தை மிக முன்னோக்கி நகர்த்தி விடுகிறது என்பதனை பெல்ஜிய இந்தியவியலாளர் எல்ஸ்ட் சுட்டிக் காட்டுகிறார். பேரா. ராஜேஷ் கோச்சரின் அவரது துறை சார்ந்த இம்முடிவு அவரது பிற கோட்பாடுகளை கேள்விக்குள்ளாக்குவது வேடிக்கை.
ஆக, வேதத்தின் காலம் நிச்சயமாக கி.மு.1500க்கும் குறைந்தது 2500 ஆண்டுகள் முற்பட்டது. ஆனால் வேதத்தின் விவரணங்களோ மிகத் தெளிவாக பாரத நிலச் சூழலில் உருவானவை. எனில் சிந்து சமவெளி நாகரிகம் எவ்வாறு வேத நாகரிகத்தோடு தொடர்பில்லாது தனிப்பட்ட நாகரிகமாக இருக்க முடியும் ? சிந்து சமவெளி நாகரிகத்தை வேத நாகரிகத்தோடு மாறுபடுத்துவதாக கூறப்படும் பல கூறுகளும் விரிவான ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
***
பயன்படுத்த பட்ட நூல்கள் & இணைய ஏடுகள்
1. அபே துபாய்ஸ், ‘Hindu Manners, Customs and Ceremonies ‘, ஆங்கில மொழி பெயர்ப்பு, H.K.ப்யூசாம்ப், ஆக்ஸ்போர்ட் , 1906 (முன்னுரை, துபாய்ஸ் மேற்கோள், பக்கம் 101) .
2. விட்ஸல் மைக்கேல், Electronic Journal of Vedic Studies (EJVS), Vol.7 May 25, 2001. ஆரிய புலப்பெயர்வு ‘ கோட்பாட்டிற்கான ஆதாரங்களை முன்வைக்கும் இக்கட்டுரையின் தொடக்கத்தில் பேரா.விட்ஸல் ‘ஐயஸ் ‘ எனும் பததினை இரும்பென மொழி பெயர்த்தமையை தவறென குறிப்பிடுகிறார்.
3. மெளரீஸ் விண்டர்நிஸ், History of Indian Literature (முதல் பதிப்பு 1907), 1987 பதிப்பு மோதிலால் பனார்ஸிதாஸ், புது தில்லி, Vol 1. பக் 288.4. பால கங்காதர திலகர், ‘The Orion or the researches into the antiquity of Vedas ‘ (1893, மறு பதிப்பு 1994)
5. ஹெர். ஜெக்கோபி, ‘Der Vedische Kalender and das Aletr des Veda ‘ 1895 மேற்கோள் காட்டப்பட்ட ஆய்வுதாள் எஸ்.என்.சென், ‘ஐரோப்பிய மொழி ஆய்வுகள் ஒரு பார்வை ‘ ஆய்வு நூல், Indian Journal of History of Sciences (IJHS), 20, 1985. EJVS, Vol.7 May 25, 2001
7. ஜெ.டெப்பர்ட் ‘Rudras Geburt: Systematische Untersuchungen zum inzest in der mythologie der Brahmanas, 1977 திலகரின் வேதகால நிர்ணயத்துடன் ஒத்து கி.மு 3400 முதல் கி.மு. 2200 வரை கொடுக்கும் இந்த ஆய்வு மேற்கோள் காட்டப்பட்ட நூல்: ஸ்டெல்லா க்ராம்ரிஸ்ச், ‘The Presence of Siva ‘, பிரின்ஸ்டன் பல்கலைகழக பதிப்பகம், 1981.
8. K.C. ஹரி, ‘Search for an ancient epoch in Indian Astronomy ‘, IJHS, 2,2000 (பக் 109:115).
9. பேரா. ராஜேஷ் கோச்சர், ‘The Vedic People, their History and Geography ‘, Orient Longman, புது தில்லி, 1999, பக் (26,112), எல்ஸ்ட், ‘An update on Aryan invasion debate ‘, Voice of India.
***
hindoo_humanist@sify.com
***
வெப்மாஸ்டர் குறிப்பு
இதில் இருக்கும் படம் http://story.news.yahoo.com/news ?tmpl=story&u=/021030/168/2k3kj.html என்ற இணையத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.
- சொல்லுவதெல்லாம்
- என் கதை
- அழைப்பிதழ்
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது…(தொடர்கவிதை ெ3)
- யாருக்கும் நான் எதுவுமில்லை
- உதய கீதம்
- புதையல்
- வாழ்வும் கலையும்
- இனிப்பும் ஆபத்தும் (எனக்குப் பிடித்த கதைகள் – 35 -சார்வாகனின் ‘கனவுக்கதை ‘)
- அ.முத்துலிங்கத்தின் படைப்புலகம்
- உலகத்தின் மிகப்பெரிய தங்க புதையலின் ரகசியம்
- பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் (George Gamow1904-1968)
- அறிவியல் மேதைகள் சார்லஸ் டார்வின் (Charles Darwin)
- வளர்சிதை மாற்றம்
- குழந்தைகள் பற்றிய எட்டுக் கவிதைகள்
- விரதம்
- சொல்லியிருந்தால்…
- தீவுகள்
- அன்பைத் தேடி…
- தேடல்
- முதல் சினேகிதி
- தன்னாட்சி.. ?
- மதமாற்றத் தடைச் சட்டமும் தமிழ் நாட்டின் அரசியலும்
- மன அஜீரணத்துக்கு மருந்து.
- வாழ்வும் கலையும்
- வேதத்தின் கால நிர்ணயமும் ஆரிய படையெடுப்புக் கோட்பாடும் : ஒரு மறு பார்வை
- தமிழக ஆறுகளைச் சிதைக்கும் மணற் குவாரிகள்
- கணவன்
- சபா- தீபாவளி ஸ்பெஷல்