வேகவேகமாக வாழ்வு

This entry is part [part not set] of 30 in the series 20010819_Issue

ரே குர்ஸ்வெய்ல்


September 4, 2001 By Ray Kurzweil (pc magazine)

நிஜமான மனிதர்களுக்கும், கணினி உருவாக்கும் பொய் மனிதர்களுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத, நம் ஐம்புலனையும் உள்ளடக்கிய ஒரு சுற்றுச்சூழலை அளிக்கும் ஒரு இணைய வலை 2030ஆம் வருடத்தில் இருக்கப்போவதை கற்பனை செய்து பாருங்கள்.

எதிரே நிற்கும் ஒரு வெளிநாட்டு மனிதர் தம் மொழியில் பேசுவதை உடனுக்குடன் மொழி பெயர்த்து நமது மூக்குக் கண்ணாடிகளுக்குள், நமக்குப் புரியும் மொழியில் எழுதிக் காண்பிக்கும் ஒரு நாளை யோசித்துப் பாருங்கள். உலகத்துக்கு ஸப்-டைட்டில் போட்டாற்போல.

அப்புறம், நமது மூளைக்குள் இருக்கும் மூளை நரம்புகள் (neurotransmitters) சொல்லும் விஷயத்தைப் புரிந்து கொண்டு வேலைசெய்யும் நானோபாட்கள் (nanobots – ஊசி முனையை விடச் சிறிய ஆனால் விவரமுள்ள இயந்திரங்கள்) நம் உடலெங்கும் பரவி நமது அறிவை பல மடங்கு பெருக்கும் ஒரு நாளை யோசித்துப் பாருங்கள்.

இத்தகைய காட்சிகள் நமக்கு மிக மிக எதிர்காலக் காட்சிகள் போலவும் 2030க்குள் நடக்க இயலாதது போலவும் தோன்றலாம்.

19ஆம் நூற்றாண்டில் இருந்த மனிதர்கள், தொலைபேசியை (காதைப் பொறுத்தவரை அது ஒரு பொய்யான நிஜம் virtual reality) எதிர்கொண்டது போல, நாம் இது வரை யோசிக்காத வலிமைகளை நம்மை இன்று யோசிக்க வைக்கின்றன.

வரலாற்றில் முதல்முறையாக, நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஒரு மனிதரோடு ‘இரு ‘க்க முடிந்தது அப்போதுதான்.

பெரும்பாலான மனிதர்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் போது, தொழில்நுட்பத்தின் வளர்ச்சியையும், அதன் வேகத்தையும் , நீண்டகால இடைவெளியில் அதன் சக்தியையும் மிகக் குறைத்து மதிப்பிடுகிறார்கள்.

மக்கள் இன்றைய தொழில்நுட்ப வேகம் தொடரும் என்றும், அதே போல அதற்கு சமூக விளைவுகளும் பின் தொடரும் என்றும் நம்புகிறார்கள்.

இதை நான் உள்ளுணர்வினால் உருவான நீள்கோட்டுப் பார்வை என அழைக்கிறேன்( intuitive linear view).

ஆனால் மாறுவதின் வேகமும் துரிதமாகி வருவதால், எதிர்காலம் நம் இன்றைய எதிர்ப்பார்ப்பை விட ஆச்சரியமானதாக இருக்கும்.

உண்மையில், வரலாற்றை நாம் தீவிரமாகப் பரிசோதித்துப் பார்த்தால், தொழில்நுட்ப வளர்ச்சி, விரி மடங்கு வளர்ச்சிகொண்டது (exponential) என்று தெரிகிறது.

வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், 21ஆம் நூற்றாண்டில் 100 வருட வளர்ச்சியைப் பார்க்கமாட்டோம். நாம் 20000 வருட வளர்ச்சியை பார்ப்போம். (இன்றைய வளர்ச்சிவேகத்தில் கணக்கிட்டால்)

விரிமடங்கு வளர்ச்சி ( Exponential growth) எல்லா பரிணாம வளர்ச்சிக்கும் பொதுவான ஒரு குணம்.

நாம் இதனை எல்லா மிகச்சிறிய இயந்திரங்கள் செய்வது (miniaturization), தொலைத்தொடர்பு (communication), மரபணு அளத்தல் (genomic scanning), மூளையை அளத்தல் (brain scanning) போன்று இன்னும் எல்லாத்துறைகளிலும். காணலாம்.

உண்மையில் நாம் இரட்டிப்பு விரி மடங்கு வளர்ச்சியைப் பார்ப்போம். அதாவது, மடங்கு வளர்ச்சியே, மடங்கு வளர்ச்சி வேகத்தில் வளர்கிறது.

உதாரணமாக, ஆரம்பகாலத்தில் மரபணு ஆராயும் வேலையை (genome project) ஆரம்பித்தபோது, டிஎன்ஏ, அடித்தள ஜோடிகளை அளந்த வேகத்தைப் பார்த்து, முழுதும் அளந்து முடிக்க 10000 வருடங்கள் ஆகும் எனக் கணக்கிட்டார்கள்.

இருந்தும், வேலை ஒரே வருடத்தில் முடிக்கப்பட்டது. ஏனெனில், டிஎன்ஏ அளக்கும் தொழில்நுட்பம், இரட்டை மடங்கு வளர்ச்சி வேகத்தில் வளர்ந்தது.

இன்னொரு உதாரணம், இணைய வளர்ச்சி.

நான், கடந்த 25 வருடங்களாக, எவ்வாறு தொழில்நுட்பம் வளர்கிறது என்று பார்க்க, பல கணித மாதிரிகளை உருவாக்கி வந்திருக்கிறேன்.

1990இல் எத்தகைய கணினி சக்தி நம்மிடம் இருக்கும் என்றும், எப்படி மருத்துவ சிகித்சை இயந்திரமயப்படுத்தப்படும் என்றும், கணினிமயப்படுத்தப்பட்ட ஆயுதங்கள் வரும் என்றும், புத்திசாலியான முதலீடு மென்பொருள்கள் வரும் என்றும், நான் 1980இல் இந்த கணித மாதிரிகளைக் கொண்டு செய்த கணிப்புகள் ஏறத்தாழ புள்ளி மாறாதவை.

இந்த கணித மாதிரிகள் (mathematical models) எதிர்காலத்தைப் பார்க்கும் ஜன்னலாகவும், 30 வருடங்களில் எப்படி எதிர்காலம் இருக்கும் என நான் யோசிக்கும் காட்சிகளுக்கு அடித்தளமாகவும் இருக்கின்றன.

கணினி தனி நபர்களுக்காக உருவாகிவிட்டது. இன்று கணினி தனிமனிதனிடம் வெகு அன்னியோனியமாகி விட்டது.

ஆரம்பகாலத்து கணினிகள் மிகவும் பெரியவை. கண்ணாடிச் சுவர்களுக்குள் இவை பாதுகாக்கப்பட்டிருந்தன.

பிசி என்னும் தனி கணினி எல்லோருக்கும் நெருக்கமாய் வந்தது.

அடுத்த படியாக, கணினி மிகவும் மனிதனுக்கு நெருங்கியதாக, ஒட்டுறவு கொண்டாடும் வண்ணம் ஆகிவிடும்.

2010ஆம் வருடத்தில், கணினி எல்லா இடங்களிலும் இருக்கும். நம் உடை, மூக்குக்கண்ணாடி, நமது உடல், நமது மூளை என்று எல்லா இடங்களுக்கும் சென்று தன் வடிவம் இழந்து கண்ணுக்குத் தெரியாமல் போய்விடும்.

இதன் எல்லாவற்றும் கீழே, எல்லா நேரங்களிலும் மிக அதிக சக்தியுள்ள செய்தித்தொடர்பு சாதனங்களோடு, இணையத்தோடு இணைக்கப்பட்டிருக்கும்.

மருத்துவ நோயறிதலுக்காக, கணினிமயப்படுத்தப்பட்ட மிகச்சிறிய சாதனங்கள் நம் உடலெங்கும் பயணம் செய்துகொண்டிருக்கும்.

மூளை நரம்பியல் சேதங்களைக் கட்டுப்படுத்தவும், மூளையில் இருக்கும் கட்டிகளையும் அகற்றவும் நம் மூளைக்குள் இன்றே செலுத்தப்படும் சிறிய உபகரணங்கள், பல விதமான விஷயங்களுக்காகப் பயன்படுத்தப்படும். கண்பார்வை அற்றவர்களுக்கு பார்வை கொடுக்கவும் இந்த உபகரணங்கள் பயன்படுத்தப்படும்.

கணினியோடு இணைந்த சிறிய சாதனம், கண்ணுக்குள் இருக்கும் ரெடினாவுக்குள் நேரடியாக ஒளிப்படம் அனுப்பும். நமது மூக்குக்கண்ணாடிக்குள்ளும், நமது காண்டாக்ட் லென்சுக்குள்ளும் இந்த கணினி இருக்கும்.

இது அடுத்த படிக்கு நம்மை இட்டுச்செல்லும். மிகவும் நிஜத்தன்மைவாய்ந்த, முப்பரிமாண, ஒளி-ஒலி இணைந்த பொய்யான நிஜம் (visual-auditory virtual reality). நோக்கி.

இதுபோல, கண்ணின் ரெடினாவுக்குள் ஒளிப்படம் காட்டும் சாதனங்கள், நமக்கு முழுமையாக சூழலில் மூழ்கிய, பொய்நிஜ சுற்றுப்புறத்தைக் காணத் தருவதுடன், உண்மையான சுற்றுப்புறத்தின் மேலே இன்னொரு பொய்நிஜ உருவங்களை ஏற்றவும், உண்மையான சுற்றுப்புறத்தையே மாற்றவும் உதவும்.

மனிதர்கள், இந்த சுற்றுப்புறங்களின் ஊடாக., வாயாலும், மனத்தாலும் இடும் கட்டளைகள் மூலமும், உடலின் அசைவு மூலமும் நகரவும், செல்லவும் முடியும்.

ஒரு இணையத்தளத்துக்குச் செல்வது என்பது பெரும்பாலும், அதன் பொய்நிஜ சுற்றுப்புறத்துக்குச் செல்வதாகவும் (உதாரணமாக, காடுகள், மலைகள், கடற்கரைகள், விவாத அறைகள் (conference rooms) போன்றவை) இருக்கும்.

இவை இன்றைய கரடுமுரடான வீடியோ விவாத அறைகளுக்கு மாற்றாக இருக்கும். 2010இல் பொய்நிஜம் என்பது நிஜத்தைவிட நிஜமானதாக இருக்கும்.

அடுத்தவரது கண்ணைப்பார்த்துப் பேசவும், நண்பரைச் சுற்றி நீங்கள் நடக்கவும், இருவரும் ஒரே அறையில் இருக்கும் உணர்வுடன் இவை இருக்கும்.

கணினியிலும், நமது உடலில் இருக்கும் உடைகளின் உள் இருக்கும் மானிகள் நமது உடலின் அசைவை அளந்து அவற்றை முப்பரிமாணத்தில் பொய்நிஜ உலகத்தில் நம்மை ஒளிப்படமாகக் காட்டும்.

அத்தோடு கூடவே, நாம் இன்னொருவராக நம்மைக் காட்டிக்கொள்ள வாய்ப்புகளும் அறிமுகப்படுத்தப்படும்.

ஆனால் அசைவுகளின் முழுமையான தன்மை கிட்டாமல் இன்னமும் கட்டுக் கடங்கினதாய்த் தான் இருக்கும்.

கணினியால் செயற்கையாக உருவாக்கப்பட்ட நிஜம்போன்ற மனிதர்களோடு பேசவும், அவர்களோடு நமது இயற்கையான பேச்சு மொழியில் பேசவும் இயலும்.

இவற்றை நாம், விஷயங்களைக் கேட்டுப்பெறவும், எதையாவது வாங்கவும் விற்கவும் பயன்படுத்துவோம்.

இதுபோன்ற அவதாரங்கள், நமக்கு எங்கு செல்லவேண்டும், எப்படிச் செல்லவேண்டும், இப்போதைக்கு எங்கு இருக்கிறோம் என்பதை அறியவும், நமது மூக்குக்கண்ணாடி மூலம் நமக்கு விஷயங்களைச் சொல்லவும் உபயோகப்படுத்தப்படும்.

இந்த பொய்நிஜ அவதாரங்கள் சுமார் 2010ஆம் ஆண்டில் டூரிங் தேர்வைக் கடக்காது. (அதாவது நாம் இவைகளை நிஜம் என்று நம்பி ஏமாற மாட்டோம். டூரிங் சோதனை என்பது, செயற்கை அறிவின் விதிகளைச் சொல்கிறது. – மொ பெ)

ஆனால், 2030இல் நம்மால் நிஜமான ஆளுக்கும், கணினியால் உருவாக்கப்பட்ட ஆளுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது.

நமது பொய்நிஜ சுற்றுப்புறத்தை இன்னும் அதிகமாக முன்னேற்றும் தொழில்நுட்பம் நானோ பாட் தொழில்நுட்பம். மிகச்சிறிய இந்த புத்திசாலி இயந்திரங்கள் நமது இரத்ததில் இருக்கும் சிவப்பு செல்கள், வெள்ளைசெல்கள் அளவு இருந்து கொண்டு, நம் மூளைக்குள் நமது மூளையில் இருக்கும் நியூரான்களுக்கு நேரடியாகச் செய்தி கொடுப்பதன் மூலம், நம்மை இன்னொரு நிஜத்துக்கு அழைத்துச் செல்லும்.

இந்த நானோபாட்களை நம் உடலுக்குள் குடித்தோ, அல்லது ஊசிமூலமோ ஏற்றிக்கொள்ளலாம்.

மாக்ஸ் பிளாங்க் அறிவியல் மையத்தில் இருக்கும் அறிவியலறிஞர்கள் ஏற்கெனவே மின்னணு அடிப்படையான நியூரான் டிரான்ஸ்மிட்டர்களைக் கொண்டு ஒரு உயிருள்ள அட்டை (leech)யை கணினி மூலம் கட்டுப்படுத்தி இருக்கிறார்கள்.

அவர்களால் ஒரு பக்கத்திலுள்ள ஒரு நியூரான் மின்சாரம் அனுப்பும்போது அதனைக் கண்டுபிடிக்கவும், அதனை மின்சாரம் அனுப்பும்படித் தூண்டவும், அப்படி மின்சாரம் அனுப்பினால் அதனை நிறுத்தவும் முடியும். இதன் மூலம் அவர்களால் செயற்கையான மின்னணு நியூரான்களுக்கும், இயற்கையான உயிரியல் நியூரான்களுக்கும் இடையேயான இருவழி தகவல் தொடர்பை ஏற்படுத்த முடிந்திருக்கிறது.

இன்று, நமது மூளைகள் ஏறத்தாழ, வடிவமைப்பில் நிலையானவை, மாறாதவை.

நாம் நமது மூளையிலுள்ள நியூரான்களுக்கு இடையேயும், நியூரான்களுக்கு உள்ளேயும், தொடர்புகளை தொடர்ந்து நமது கல்வியின் பொருட்டாக உருவாக்கிக் கொண்டே இருந்தாலும், நமது மூளையின் சக்தி சுமார் நூறு டிரில்லியன் இணைப்புகளுக்குள்ளேயே முடிந்து விடுகிறது.

ஆனால், நானோபாட்கள் என்னும் இந்த சிறிய இயந்திரங்கள், வயர்லெஸ் மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடியும் என்பதால், புதிய நியூரான் இணைப்புகளை உருவாக்கவும், முன்பு இருக்கும் நியூரான் இணைப்புகளை எளிதில் முறிக்கவும் (உயிரியல் நியூரான் மின்சாரத்தை தடுப்பதன் மூலம்) எளிதில் இயலும். ஏன் இன்னும் உயிரியல், மின்னணு நியூரான்கள் சேர்ந்த ஒரு கலவை வலையை பின்னவும் முடியும்.

மூளையை விரிவாக்க நானோபாட்களை உபயோகப்படுத்துவது, இன்றைய மருத்துவத்துக்காகவும் அறுவைச் சிகித்சைக்காகவும் மட்டுமே நானோபாட்டுகளை பயன்படுத்துவதிலிருந்து வெகுவாக முன்னேறியது.

மூளையில் வைக்கப்படும் புதிய உபகரணங்கள், பெரிய அளவில் பகுக்கப்பட்ட புத்திசாலித்தனமான நானோபாட்டுகள் (massively distributed intelligent nanobots), புதிதாகச் சேர்க்கப்படும் டிரில்லியன் புது இணைப்புகள் மூலம் நமது ஞாபகச் சக்தியை பல மடங்கு விரிக்கும்.

நமது உணர்வுகளான, கண், காது, மூக்கு, தோல் போன்றவற்றிலிருந்து வரும் உணர்வுகளை பிரித்து ஆராய்ந்து புரிந்து கொள்ளும் உயிரியல் நியூரான்கள் அருகே இந்த புதிய நானோபாட்டுகள் அமர்ந்து அவைகளின் வேலையை பகிர்ந்து கொள்ளும்.

இந்த புதிய நானோபாட்டுகள், இணையத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய மென்பொருள்கள் மூலம், புது புரோகிராம் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதால், புதிய புதிய முறைகளில் இவற்றை செயலாற்ற வைக்கவும் முடியும்.

இந்த நானோபாட்டுகளை தாம் இருக்கும் இடங்களிலிருந்து விலகி கழிவுப்பொருளாக உடலிலிருந்து வெளியே செல்ல ஆணையிடவும் முடியும். எனவே நாம் நானோபாட்டுகளால் ஆளப்பட்டுவிடமாட்டோம்.

இத்தோடு கூட, புதிய பொய்நிஜ சுற்றுப்புறங்களில், நமது உணர்வுகளை காரணமில்லாமலேயே உருவாக்கவும் ஆணையிடலாம். நமக்கு உணர்ச்சிகளையும், பாலுணர்வு சந்தோஷங்களையும், இன்னும் பல உணர்வு அனுபவங்களையும் இந்த நானோபாட்டுகள் நமது நியூரான்களுக்கு கொடுக்க ஆணையிடலாம்.

நாம் ‘நிஜ ‘ நிஜத்தை அனுபவிக்க வேண்டுமென்றால், நமது நானோபாட்டுகளை சும்மா இருக்க ஆணையிடலாம்.

பொய்நிஜத்துக்குச் செல்ல விரும்பினால், நமது நிஜ நிஜத்திலிருந்து வரும் உணர்வுகளை அனுபவிப்பதை நிறுத்த ஆணையிட்டுவிட்டு, நம் பொய்நிஜ சுற்றுப்புறத்திலிருந்து வரும் உணர்வுகளை நம் மூளைக்கு அனுப்ப ஆணையிடலாம்.

நமது மூளை நம் கால்களையும் கைகளையும் ஆட்டவேண்டி ஆணையிடும்போது, நானோபாட்டுகள் அந்த ஆணைகளை தடுத்து நிறுத்தி, நம் பொய்நிஜ கால்களையும் கைகளையும் ஆட்டுவதாக திருப்பி விடலாம்.

நானோபாட்டுகள் சம்பந்தமான இன்னொரு விஷயம், ‘அனுபவ அலைப்பாய்ச்சல் ‘(experience beamer)

சுமார் 2030இல், மக்கள் தங்களது எல்லா உணர்வுகளையும் இணையத்தில் ஒளிஒலிபரப்பலாம். இன்று மக்கள் தங்களை வெப்காம் என்னும் இணைய ஒளிபரப்பு செய்வது போல, நானோபாட்டுகள் நம் மூளையில் அறியும் எல்லா உணர்வுகளையும் இணையத்தில் ஒளிபரப்பலாம்.

ஒரு இணையத்தளத்துக்குச் சென்று, அங்கு மற்ற ஒருவரின் அனுபவங்களை நாம் உணரலாம். ( ‘Being John Malkovich ‘ ஜான் மால்கோவிச்சாக இருப்பது ‘ என்ற படத்தில் பலர் ஜான் மால்கோவிச்சாக வாழ்வது போன்ற ஒரு கற்பனை நிஜமாகலாம்)

முக்கியமான சுவாரஸ்யமான அனுபவங்கள் ஆவணப்படுத்தப்பட்டும், பிறகு அவரவர் இந்த திருப்பி வாழ்ந்தும் பார்ப்பது இயலக்கூடியதாகும்.

இந்த மிகவேகமாக வளர்ந்து வரும் கணினியியல், தொலைத்தொடர்பு, சிறுயபொருளாக்குதல் போன்றவை நம் மூளையைப்பற்றிய நம் அறிவை இன்னும் வேகமாக்கும். இவை இன்னும் பல திறமையுள்ள நானோபாட்டுகளை உருவாக்க நமக்குத் துணை புரியும்.

இருமுனையுள்ள கத்தி போல இந்த தொழில்நுட்ப வளர்ச்சி நம்மை வெகுகாலம் வாழவைத்தாலும், அந்தப்பொழுதில் நம்மை ஆரோக்கியமாகவும் வாழவைத்தாலும், நம்மை இன்னும் சுதந்திரமானவர்களாகவும், வேலைப்பளுவை குறைத்து வாழவைத்தாலும், நமக்கு இன்னும் பல ஆபத்துகளையும் கொண்டு வரும்.

21ஆம் நூற்றாண்டில், நமது ஆபத்துகளும் பல மடங்காகும்.

கோடிக்கணக்கில் நாம் நானோபாட்டுகளை உருவாக்க வேண்டி வரும் என்பதை யோசித்துப்பாருங்கள்.

பணம் குறைவாக இந்த நானோபாட்டுகளை உருவாக்கும் வழி, இந்த நானோபாட்டுகளை சுயபிரதி எடுக்கும் படி உருவாக்குவதுதான். (உயிரியல் முறையில் நாம் இப்படித்தான் சுயபிரதி எடுக்கிறோம்)

சில உயிரியல் சுயபிரதி (biological self-replication) எடுப்பது என்பது சில வேளைகளில் தவறான திசையில் சென்று கேன்ஸராக மாறுவது போல, ஒரு நானோபாட்டை தவறாக உருவாக்கும் ஒரு சுயபிரதி கெட்டுப்போய் அளவுக்கு மீறி நானோபாட்டுகள் வளர்ந்து நம் வாழும் இந்த உலகும், அதில் உள்ள உயிரியல் மற்றும் உயிரியல் அல்லாத விஷயங்களும் அழிந்து போகும் வாய்ப்பு இருக்கிறது.

யார் நானோபாட்டுகளை கட்டுப்படுத்துவார்கள் ? அமைப்புகள் (அரசாங்கம், அல்லது தீவிரவாதக்குழுக்கள்) அல்லது புத்திசாலித்தனமான ஒரு தனிமனிதர் கண்டுபிடிக்க முடியாத சிறிய நானோபாட்டுகளை தண்ணீரிலும், உணவுப்பாதையிலும் தெளித்து மக்கள் சமூகத்தையே பாதிக்கலாம்.

இந்த ‘உளவு ‘ நானோபாட்டுகள் நம்மை கண்காணித்து, நம் சிந்தனைகளை பாதித்து, ஏன் நம் சிந்தனைகளையும், நம் செயல்களையும் கூட இறுக்கமாக நம்மை அறியாமல் கட்டுப்படுத்தலாம்.

இந்த நானோபாட்டுகள் மென்பொருள் வைரஸ் போன்றவைக்கும் இரையாகலாம்.

இன்றைக்கு நாம் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப ஆபத்துக்களை சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவரிடம் விளக்கினால், அவர் ஏன் இப்படி ஒரு ஆபத்தை விலைகொடுத்து வாங்க வேண்டும் எனச் சொல்லியிருப்பார்.

ஆனால், 2001இல் இருப்போரில் எத்தனைபேர், சென்ற நூற்றாண்டுக்கு, அதன் வியாதிகள் நிரம்பிய, வறுமை நிறைந்த, அழிவுகளும் போர்களும் நிறைந்த சென்ற நூற்றாண்டுக்கு செல்ல விரும்புவார்கள் ?

நமது மனித இனத்தின் பெரும்பாலான மனிதர்கள் இன்னும் முந்தைய வழியிலேயே வாழ்ந்து வருகிறார்கள். அந்த ஒரு காரணத்தாலேயே நாம் நமது தொழில்நுட்ப வளர்ச்சியை தொடர்ந்துகொண்டே செல்லவேண்டும். இதன் மூலம் வரும் நமது பொருளாதார முன்னேற்றத்தையும் தொடர்ந்து எடுத்துச் செல்லவேண்டும்.

என்னுடைய எதிர்பார்ப்பில், இந்த தொழில்நுட்பத்தின் நல்ல முறை பிரயோகங்கள்தான் அதிகமாக இருக்கும், இன்றைக்கு இருப்பதுபோல.

அதே நேரத்தில், முக்கியமாக, தேவைப்படும் நல்லமுறையில் இந்த தொழில்நுட்பத்தை எதிர்க்கும் லுட்டைட் இயக்கமும் (Luddite movement) வளரும்.

புதிய தொழில்நுட்பத்தை மனிதர்கள் மூன்று படிநிலைகளில் எதிர்கொள்கிறார்கள். முதலாவது ஆச்சரியமும், அதிசய உணர்வும், இரண்டாவது இதன் சக்திக்கான மிகுந்த எதிர்பார்ப்பும்; புதிய தீவிரமான ஆபத்துகளைப்பற்றி மிகுந்த பயமும் எனலாம் இறுதியாக எந்தச் சரியான வழியும், கவனமான பொறுப்பான முறையில் தொழில்நுட்பத்தை உபயோகிப்பதும், ஆபத்துகளை சரியான முறையில் எதிர்கொள்வதும் ஆகும் (என்று நம்புவோம்.).

Series Navigation

ரே குர்ஸ்வெய்ல்

ரே குர்ஸ்வெய்ல்