நரேந்திரன்
காத்ரீனும், ராம்ஜியும் லாஸ்வேகாஸில் கல்யாணம் பண்ணிக் கொண்டார்கள். காரில் உட்கார்ந்து கொண்டே கல்யாணம் செய்து கொள்ளும் வசதி சூதாட்ட நகரமான லாஸ்வேகாஸில் மட்டுமே உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கல்யாணம் பண்ணிய கையோடு, சியாட்டிலுக்கு ஹனிமூன் போனார்கள், அங்கே ஒரு அழகான மலை வாசஸ்தலத்தில் ஒருவாரம் தங்கி இருந்தார்கள் என்பது போன்ற செய்திகள் காற்றோடு கசிந்து வந்தன. இத்தனை நாள் பழகிய நண்பர்கள் ஒருவரையும் ராம்ஜி தன் கல்யாணத்திற்கு அழைக்கவில்லையே என்பது பற்றிய துக்கம் ஒருபக்கம் இருந்தாலும், விருப்பமில்லாதவர்களைக் குறை கூறி என்ன பிரயோஜனம் என்ற எண்ணமும் கூடவே வந்தது.
எங்களால் ‘ராம்ஜி ‘ என்று செல்லமாக அழைக்கப்பட்ட ராம்கோபால் ஒரு பக்கா தமிழன் என்பதை இந்த இடத்தில் சொல்லியாக வேண்டும். அவனை விட மூன்று வயது கூடியவளான காத்ரீன் ஒரு வெள்ளைக்காரி. அமெரிக்கக் குடிமகள். ஒரே அலுவலகத்தில், கூட வேலை செய்த இடத்தில் பற்றிக் கொண்ட காதல் தீ, கடந்த நாலைந்து மாதங்களாக ஒரே அப்பார்ட்மென்ட்டில் ‘லிவிங் டுகெதர் ‘ வரை கொண்டு வந்து விட்டிருந்தது. நானில்லாமல் அவளில்லை, அவளில்லாமல் நானில்லை என்ற அளவிற்கு ஒட்டிக் கொண்டு திரிந்தார்கள் என்றார்கள் ‘லாயத்திற்கு ‘ வந்த நண்பர்கள். ‘காத்ரீன் மிக அழகாக, தந்தச்சிலை போலிருப்பாள். ராம்ஜி கொடுத்து வைத்தவன் ‘ என்பார்கள் பெருமூச்சுடன். நான் பார்த்ததில்லை.
நான் வேலை செய்யும் இடமும், ராம்ஜி வேலை செய்யும் இடமும் ஒரு பெருநகரத்தின் வெவ்வேறு மூலைகளில் இருந்தன. வெவ்வேறு இடங்களில் தங்கி இருந்தோம். எனவே, சந்தித்துக் கொள்ளும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. எப்போதாவது ‘லாயம் ‘ பக்கம் போகும்போது ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிக் கொள்வதுடன் மட்டுமே எங்கள் தொடர்பு நின்றிருந்தது.
‘லாயம் ‘ என்று எங்கள் நண்பர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட வைத்யாவின் அப்பார்ட்மென்ட்டில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் நாங்கள் கூடுவது வழக்கம். நான், ராகவ், குணசேகரன், ராஜ், சந்திரா, ராம்ஜி இவர்களுடன், ‘குமட்ஸ் ‘ என்று விளிக்கப்பட்ட கும்ட்டே போன்றவர்களும் அவ்வப்போது லாயத்திற்கு வந்து போவார்கள். ஹைனிகனும், மாலிபூவும், ப்ளாக் லேபிலும் வெள்ளமெனப் பாய்ந்து விடிய விடிய கூத்து நடக்கும்.
நாற்பது வயதைத் தொட்டுக் கொண்டிருக்கும் நிரந்தர பிரம்மச்சாரியான வைத்யாதான் எங்கள் அனைவருக்கும் ‘குரு ‘. எங்களுக்குள் நடக்கும் சின்னச் சின்ன சண்டைகள், பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் வைத்யாவிடம்தான் போகும். பிரச்சனைகளில் ‘குரு ‘ சொல்வதுதான் கடைசித் தீர்ப்பு. அதற்கு மேல் அப்பீலில்லை. ஒரு மாதிரியான ஃபாதர்லி ஃபிகர் என்றும் வைத்துக் கொள்ளலாம். சமயங்களில் எரிச்சலூட்டினாலும் நான் அதிகம் கண்டு கொள்வதில்லை. தூரதேச வாழ்க்கையின் வெறுமையைக் குறைக்க இது போன்றதொரு அரவணைப்பு தேவையாயிருந்தது.
அன்றைக்கு வைத்யாவின் அப்பார்ட்மென்டிற்குள் நுழையும் போதே ஒரு வித இறுக்கமான சூழ்நிலை நிலவுவது தெரிந்தது. பெண்டாட்டியைப் பறி கொடுத்தவர்கள் மாதிரி ‘உம் ‘மென்று இருந்தார்கள் எல்லோரும். ஏறக்குறைய அத்தனை பேரும் வந்திருந்தார்கள். வைத்யா எதுவும் பேசாமல் ‘வா ‘ என்பது போலத் தலையை ஆட்டினார். அவர் எதிரில் ராம்ஜி தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தான்.
ராம்ஜி, காத்ரீனை கல்யாணம் செய்து கொள்ளத் தீர்மானித்திருக்கிறான் என்ற செய்தி அரசல் புரசலாக ஏற்கனவே என் காதுகளை எட்டி இருந்தது. எனவே, நடப்பதை ஓரளவு யூகித்தேன். ராம்ஜி, காத்ரீனைக் கல்யாணம் பண்ணிக்கொள்வது அவன் இஷ்டம். அப்படியே விட்டிருக்கலாம்தான். ஆனால், லாயத்து உறுப்பினர்களை அம்மாக்கோழி மாதிரி அடைகாக்க நினைக்கும் வைத்யாவினால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதைப் பற்றித்தான் விவாதித்துக் கொண்டிருந்திருப்பார்கள் என்று என்னால் உணர முடிந்தது.
‘ராம்ஜி….நல்லா யோசிச்சுப் பாரு….ஒன்னோட அப்பா, அம்மா மனசு என்ன பாடுபடும்னு ? கல்யாண வயசுல இருக்கிற உன் தங்கச்சிக்கு இதுனால ஏதாவது பாதிப்பு வந்தா என்னடா பண்ணுவே ? ‘ என்றார் வைத்யா.
‘அதைப் பற்றி உங்களுக்கென்ன கவலை ? ‘ என்றான் ராம்ஜி முகத்திலடித்தாற் போல.
அமெரிக்காவின் நிரந்தரக் குடியுரிமை (க்ரீன் கார்ட்) வைத்திருக்கும் ராம்ஜி, இருபத்தெட்டு வயது இளங்காளை. ஆரக்கிள் டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர். கை நிறைய சம்பாதித்துக் கொண்டிருந்தான். கூடவே கொஞ்சம் தலைக்கனமும். கொஞ்சம் என்றா சொன்னேன் ? இல்லையில்லை. நிறையவே.
வைத்யா முகத்தில் கோபம் எதையும் காட்டாமல், ‘இதோ பாரு ராம்ஜி….தெரிஞ்சே ஒருத்தன் கிணத்துல குதிக்கிறத பாத்துகிட்டு என்னால சும்மா இருக்க முடியாது. வெள்ளைத்தோல்காரிக்கு காதல் உன் மேல் இல்லை. நீ சம்பாதிக்கிற பச்சை நோட்டு மேலதான் காதல். புரிஞ்சுக்கோ… ‘ என்றார் வலிய வரவழைத்த புன்னகையுடன்.
‘கேத்ரீன் ஒன்றும் அப்படிப் பட்டவளில்லை. என் மேல் உயிரையே வைத்திருக்கிறாள். அவளைப் பற்றி உங்களுக்கென்ன தெரியும் ? ‘ என்றான் ராம்ஜி எரிச்சலுடன்.
இதே ரீதியில் விவாதம் நடந்து கொண்டிருந்தது. வைத்யாவிற்கு இது தேவையில்லாத வேலை என்றே எனக்குப் பட்டது. ராம்ஜி ஒன்றும் பச்சைக் குழந்தையில்லை. நல்லது கெட்டது தெரியாமலிருக்க. தேவையில்லாத பெஸ்டரிங்…
கடைசியில் அது நடந்தே விட்டது.
ராம்ஜி, முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடிக்க ‘ஹேய்…ஷட்டப் ஓல்ட் மேன்…எனக்கு அழகான பெண் கிடைத்திருப்பது உனக்கு வயிற்றெரிச்சல்…நாற்பது வயசாகியும் நமக்கு இப்படி ஒரு பெண் கிடைக்கவில்லையே என்று…அதுதான் கண்டபடிக்கு உளறுகிறாய்….நீ ஒரு ஜெலஸ் சன் ஆஃப் எ பி$#!….நீ ஒன்றும் எனக்கு அறிவுரை சொல்ல வேண்டியதில்லை….ஆ$ ஹோ#!… ‘ என்று கத்திக் கதவை அடித்து மூடிவிட்டுப் போனான்.
அப்பார்ட்மென்ட் ஒருமுறை அதிர்ந்து அடங்கியது.
— 0 —
திருமணம் முடிந்த கையுடன் காத்ரீன் வேலையை விட்டு விட்டதாகவும், நாங்கள் இருந்த இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி ஒரு பணக்கார ஏரியாவில் இருக்கும் அப்பார்ட்மென்டிற்குக் குடிபோனதாகவும், ராம்ஜி திருமணப் பரிசாக அவளுக்கு ஒரு புத்தம் புதிய BMW கார் வாங்கிக் கொடுத்ததாகவும் பின்னொரு நாளில் சந்திரா சொல்லித் தெரியவந்தது. கல்யாணம் முடிந்ததிலிருந்து லாயத்துப் பக்கம் தலை காட்டவில்லை அவன்.
ராம்ஜியின் பெற்றோர்களுக்கு இதுவெல்லாம் தெரியுமா என்பது பெரிய சஸ்பென்சாகவே இருந்தது.
அப்புறம் ஒரு ஆறு மாதம் வரை ராம்ஜியிடமிருந்து செய்தி ஏதும் இல்லை. எதைப் பற்றியும் யோசிக்க நேரமில்லாமல் வேலைகள் அதிகமாகி இருந்தன எனக்கு. ஏறக்குறைய எல்லோரும் அவனை மறந்து விட்டிருந்தார்கள். வைத்யாவிற்கு வேலை மாற்றலாகி ஒக்கலஹோமா போய்விட்டார். ‘லாயம் ‘ கலைந்து விட்டிருந்தது.
ஒரு மாலை மயங்கும் நேரத்தில் சந்திராவிடமிருந்து ஃபோன். சாதாரண குசல விசாரிப்புகளுக்குப் பிறகு, ராம்ஜிக்கு ஏதோ பிரச்சினை இருப்பது போலத் தெரிவதாகவும், அவனைப் பார்க்கப் போகலாமா என்று கேட்டான்.
‘இத்தனை நாட்களாக ஒரு ஃபோன் கூடச் செய்யாதவனை நான் ஏன் போய்ப் பார்க்க வேண்டும் ? ‘ என்றேன்.
‘இன்னா பண்றது மாமே! அல்லாரும் ஃப்ரண்ட்சுங்கதான்…அதெல்லாம் கண்டுக்காதே! ‘ என்றான் சந்திரா.
மாலை ஐந்து மணிவாக்கில் கிரீன்வுட் மாலுக்கு வெளியே சந்திப்பதாகவும், அங்கிருந்து இரண்டு பேரும் சேர்ந்து ராம்ஜி வீட்டிற்குப் போகலாம் என்றும் முடிவாயிற்று.
— 0 —
காலிங் பெல்லை அடித்தவுடன் கதவைத் திறந்த பெண் மிகவும் அழகாக இருந்தாள். அவள்தான் காத்ரீனாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
ஒரு ‘தம்மாத்தூண்டு ‘ ஷார்ட்சும் அதை விடச் சிறிதான ‘துக்ளியூண்டு ‘ மேல் சட்டையும் உடலை மறைத்துக் கொண்டிருந்தன. வைக்கோல் நிறக் கூந்தலை நேர்த்தியாக உச்சியில் முடிந்து கொண்டை போலப் போட்டிருந்தது அழகாக இருந்தது.
லேசான முகச்சுளிப்புடன், ‘என்ன வேண்டும் ? ‘ என்றது பதுமை.
‘ராம்ஜி இருக்கிறாரா ? நாங்கள் அவரின் நண்பர்கள் ‘
‘உள்ளே வாருங்கள். ஹீ இஸ் இன் த பெட்ரூம் ‘.
வீடு முழுக்கச் சாமான்கள் இறைந்து கிடந்தன. எல்லாமே புத்தம் புதியவை என்பது பார்த்தாலே தெரிந்தது. ஹோம் தியேட்டரும், ஸ்டாரியோவும், உடற்பயிற்சி உபகரணங்களும், பள பளக்கும் பர்னிச்சர்களும்….ராம்ஜி உண்மையிலேயே ராஜ வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருக்கிறான் போலிருக்கிறது.
ஆட்டுத் தாடியுடன், கண் புருவத்தில் வளையங்கள் குத்தப் பட்டிருந்த ஒரு வெள்ளைக்காரன் கையில் பீர் பாட்டிலுடன் சோபாவில் அமர்ந்திருந்தான். எங்களைப் பார்த்தவுடன் ‘ஹாய் Dudes! ‘ என்றான். உதடுகளில் லிப்ஸ்டிக் கரைபோல சிவப்பாகத் தெரிந்தது.
ராம்ஜி கட்டிலில் சுருண்டு படுத்திருந்தான். ஆல் இஸ் நாட் வெல் என்பது பார்த்தவுடனேயே தெரிந்தது. கண்கள் சிவந்து, முகம் வீங்கி…
‘ஒன்றுமில்லை. கொஞ்சம் காய்ச்சல். அதுதான் இப்படி ‘ என்றான் ராம்ஜி. செயற்கையாக வரவழைத்த ஒரு சிரிப்புடன்.
அதற்கு மேல் அவனைத் தோண்டித் துருவ விருப்பமில்லாமல், கொஞ்ச நேரம் பொதுவான விஷயங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்து விட்டு வந்து விட்டேன்.
வெளியே போகையில் மனசு கனத்தது.
— 0 —
இது நடந்து இரண்டு வாரங்களிருக்கும். ஒரு மத்தியான நேரத்தில் ராம்ஜியிடமிருந்து ஃபோன்.
‘ஹாய்…திஸ் இஸ் ராம்ஜி…இந்தியாவிலிருந்து பேசுகிறேன்…எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா ? ‘
‘அடப்பாவி…எப்போது போனாய் இந்தியாவிற்கு ? ஒருவரிடமும் சொல்லக் கூட இல்லை. என்னவாயிற்று ? ‘ என்றேன்.
‘வெல்…உனக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. கொஞ்சம் சொந்தப் பிரச்சினைகள்…அது பற்றி பேச நேரமில்லை. என்னுடைய லாப்-டாப்பும், டாக்குமெண்ட்களும் என்னுடைய அப்பார்ட்மென்ட்டில் இருக்கின்றன. காத்ரீனிடம் கேட்டு வாங்கி பார்சலில் அனுப்பி வைக்க முடியுமா ? ஆகும் செலவை நான் அனுப்பி வைத்து விடுகிறேன் ‘ என்றான் ராம்ஜி.
‘இதைச் செய்ய நான் எதற்கு ? காத்ரீனே அனுப்பி வைக்க மாட்டாளா ? உன் மனைவிதானே அவள் ? ‘ என்றேன் சிறிது குத்தலுடன்.
‘ஃபோன் வெறுமனே ரிங் ஆகிக் கொண்டே இருக்கிறது. லைனில் ஏதேனும் கோளாறு இருக்கும் என்று நினக்கிறேன் ‘ என்றான்.
குரலில் ஒரு அடிபட்ட பறவையின் வேதனை.
‘ஆல்ரைட்…சனிக்கிழமைவாக்கில் அங்கு போகிறேன். எதற்கும் காத்ரீனிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டால் நல்லது. ஈ-மெயிலாவது அனுப்பலாமே ? ‘ என்றேன்.
‘முயற்சி செய்கிறேன்….லாப்-டாப் இல்லாவிட்டல் கூடப் பரவாயில்லை. டாக்குமெண்ட்ஸ்தான் முக்கியம்…எப்படியாவது அனுப்பி வை.. ‘ என்றான்.
‘நோ ப்ராப்ளம்ஸ்… ‘
‘அப்புறம் இன்னொரு விஷயம்…. ‘ என்று இழுத்தான். ஏதோ சொலவதற்குத் தயங்குவது நன்றாகப் புரிந்தது.
‘சொல்லு ‘ என்றேன்.
‘ஒன்றுமில்லை. என் பேங்க் அக்கவுண்ட்டில் ஏதோ பிரச்சினை. ஜீரோ பேலன்ஸ் காட்டுகிறது. அக்கவுண்டில் பத்தாயிரம் டாலருக்கு மேல் இருந்தது. அதைப் பற்றி கேத்ரீனிடம் கொஞ்சம் கேட்க முடியுமா ? ‘
‘பணம் எங்கும் போகாது. கவலைப்படாதே. உன் பர்சனல் அக்கவுண்ட்தானே அது ? ‘
‘இல்லை. ஜாயிண்ட் அக்கவுண்ட்…. ‘
அடப்பாவி சண்டாளா! மோசம் போனாயே! என்றது மனது.
‘கேட்டுப் பார்க்கிறேன். வேறெதும் விஷயமிருக்கிறதா ? ‘
‘….வேறொன்றுமில்லை…அப்புறம் பேசுகிறேன்…தேங்க்ஸ் எ லாட்… ‘ என்று இணைப்பைத் துண்டித்து விட்டான்.
ரிசீவரைக் கீழே வைக்கும் போதுதான் அது உறைத்தது. ராம்ஜி திரும்பி வரப் போவதில்லை.
— 0 —
சனிக்கிழமை.
ராம்ஜியின் அப்பார்ட்மென்ட் அழைப்பு மணியை ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக அழுத்திக் கொண்டிருந்தேன். உள்ளிருந்து சத்தம் எதுவும் வரவில்லை.
சந்தேகத்துடன் கதவைத் தள்ளியவுடன், மளாரென்று திறந்து கொண்டது.
காலியாக இருந்தது அப்பார்ட்மென்ட். ஒரு தூசி தும்பு கூட இல்லாமல். நேற்றைக்குத்தான் கழுவி விட்டாற் போல். வெறுமையாக….
டி.வியும், ஸ்டாரியோவும், பர்னிச்சர்களூம், இன்ன பிறவும் போன இடம் தெரியவில்லை….
சத்தம் கேட்டு, எதிர் ஃப்ளாட் கிழவி எட்டிப் பார்த்தாள்.
‘She vacated the apartment last week. அவள் கணவனுக்கு வேலை மாற்றலாகி இருக்கிறதாம் ‘
‘எந்த ஊருக்கு மாற்றலாகி இருக்கிறது என்று தெரியுமா ? ‘
‘Oh…somewhere in India…!!! ‘ என்றாள் கிழவி. சிரிக்காமல்.
எனக்கு வைத்யாவின் முகம் கண் முன் தோன்றி மறைந்தது.
—- *** —-
narenthiranps@yahoo.com
- ரஜினிக்கு ஒரு பகிரங்க மடல்
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -20)
- வசந்தம் காணா வாலிபங்கள்
- வாழ முற்ப்படுதல்….
- ரம்…ரம்மி…ரம்யா
- வெள்ளைக் குதிரை
- கதை 05-எஜமானும் அடிமையும்
- பெண்கள் சொத்துரிமை
- வாரபலன்- ஏப்ரல் 22,2004 – மூட்டை மூட்டையாய் பூச்சி, பத்திரிகை மோதல், பிரகாச விபத்து, மருந்து மகிமை , ‘அடியடி ‘க்கலாம் வாங்க
- துக்ளக் ‘சோ ‘வின் தொலை நோக்கு!
- யாருக்காவது ஓட்டு போட்டுதான் ஆக வேண்டுமா ?
- “கொட்டகைகளை மூடுவோம் !: மூடி விட்டுப் போங்களேன் !
- வெள்ளையடித்த கல்லறைகள்….
- நம் தடுமாறும் ஜனநாயகம்
- துக்ளக் ‘சோ ‘வின் கனவு!
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 2
- அணிந்துரைகள்
- அங்கே இப்ப என்ன நேரம் ?
- புத்தகங்கள் – என் எஸ் நடேசன், பா அ ஜெயகரன் , செழியன்
- ஒரு நாவல் -இரண்டு வாசிப்பனுபவங்கள்
- கவிதை உருவான கதை-3
- கடல் புறாக்களும், பொன்னியின் செல்வனும்
- ஹலீம்
- கடிதங்கள் – ஏப்ரல் 22,2004
- கடிதம் ஏப்ரல் 22,2004
- தாயே
- நீயும்…
- இரு கவிதைகள்
- சத்தியின் கவிக்கட்டு 4
- எல்லை!
- பழுதாகிச் சுழலும் கடிகாரங்கள்
- இறுதி சில நொடிகளில்
- உன் நினைவுகள்
- அறைகூவல்!
- ….<> உள்ளத்திற்கோர் தாலாட்டு <>….
- காடுகளால் ஆன இனம்
- விட்டில் என்றொரு பொய்
- தமிழுக்கு அவனென்றும் பேர்…
- பிசாசின் தன் வரலாறு-2
- தமிழவன் கவிதைகள்-இரண்டு
- அன்று புர்ியாதது இன்று பு ாிந்தது.
- எழில் எது ?
- அவரே சொல்லி விட்டார்
- அப்பா இல்லாமல் பிறந்த எலிகள்
- தொழில்நுட்பச் செய்திகள்
- ஐரோப்பிய ஆசியக் கடல் மார்க்கத்தைச் சுருக்கும் சூயஸ் கால்வாய் [The Suez Canal (1854-1869)]
- மைக்ரோசாஃப்ட் செய்திகள்
- ரேடியோ இயற்பியல் முன்னோடி போஸ்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்- 16
- இழப்பு