வெடிக்காய் வியாபாரம்

This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue

ஹரி கிருஷ்ணன்


வள்ளுவருக்கு ஒரு சிறப்பு உண்டு. எத்தனையோ சிறப்புகளில் இதுவும் ஒன்றென்று சொல்ல வந்தேன். வள்ளுவர் ஒரு கிறிஸ்தவரே என்பது தொடங்கி ஒவ்வொருவரும் அவரவர் மதத்தைத்தான் வள்ளுவர் கடைப்பிடித்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சி செய்திருக்கிறரார்கள். இப்படி அனைவரும் செய்கிறார்கள் என்றால், சம்பந்தப்பட்டவர் எவ்வளவு தூரம் விரும்பப்படுகிறார் என்பது வெளிப்படை. இவன் நம்மைச் சேர்ந்தவன் என்று எந்த மனிதன் கருதப்படுகிறானோ, அவன் அனைவராலும் மதிக்கப்படுபவன் என்பதில் என்ன ஐயம் இருக்க முடியும்?

பாரதிக்கும் இந்தப் பெருமை உண்டு. அவனுடைய மத அடையாளங்களைச் சொல்ல வரவில்லை. அவன் மதங்களுக்கு அப்பாற்பட்டவன். கம்யூனிஸ்டுகள் தொடங்கி, மிகப்பெரும்பான்மையான சமூக அரசியற் பிரிவினர் பாரதியில் தம்
லட்சியங்களைக் காணுவதில் மகிழ்ச்சி அடைகின்றனர். இதில் நமக்கும் மகிழ்ச்சியே. எங்கெங்கு மனித நேயம் அடிநாதமாக இருக்கிறதோ அங்கெல்லாம் பாரதி நேசிக்கப்படுவான்.

ஒரு காலத்தில் விளையாட்டாக பாரதியை ஒரு தீவிரவாதியாகச் சித்திரித்தார்கள். “பாரதி ஒரு நக்சலைட்” என்று ஒரு கட்டுரை எழுதி தான் எழுதிய கட்டுரைத் தொகுப்பிற்கே இந்தத் தலைப்பினைச் சூட்டினார், திரு. கோ. பன்னீர்செல்வம். இவர் தினமணி இதழின் துணையாசிரியராகப் பணியாற்றியவர். தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராய் இருந்தவர். தனியொரு மனிதனுக்குணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற லட்சியத்தையே நக்சலைட்டுகள் கடைப்பிடிக்கின்றனர். ஆகவே பாரதியும் ஒரு நக்சலைட்டே என்று எழுதினார் அவர். இது உண்மையல்ல என்றாலும் ரசிக்கத்தகுந்த வாதம் என்பதால் யாரும்
பொருட்படுத்தவில்லை.

ஆனால் சமீபகாலமாக ஒரு போக்கு கவலை தருவதாக இருக்கிறது. பாரதியை ஒரு தீவிரவாதியாகச் சித்திரிக்கும் போக்கு ஒருபுறம். மதவாதிகளும் மதவெறியர்களும் பாரதி தம்மைச் சார்ந்தவனே என்று கொண்டாடிக் கொள்ளும் வேடிக்கை ஒருபுறம். மத விஷயத்தைப் பார்ப்பது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. அதனைத் தனியே பார்ப்போம்.

தொலைக்காட்சியில் ஒரு பட்டிமன்றம் நடைபெற்றது. அல்லது வழக்காடு மன்றம். நடுவர் அரசியலிலும் இலக்கியத்திலும் பெயர் பெற்றவர். பாரதி ஒரு தீவிரவாதியா என்று தலைப்பு. வாதிட்டவர்களோ பெரும் பேச்சாளர்களாக மதிக்கப்படும் இரண்டு பெண்கள். தீவிரவாதியே என்று வாதிட்டவர் பாரதியின் வசன கவிதை என்றறியப்படும் காட்சியிலிருந்து பின்வரும் பகுதியைப் படித்தார்.

ஆண் நன்று. பெண் இனிது.
குழந்தை இன்பம். இளமை இனிது.
முதுமை நன்று.
உயிர் நன்று. சாதல் இனிது.

சாதல் இனிது என்ற சொற்களைத் திரும்பத் திரும்பப் படித்தார். ஒரு தீவிரவாதியால் மட்டுமே சாதல் இனிது என்று எண்ண முடியும் என்று கூறினார். இது என்ன விபாணதம் என்று தோன்றியது எனக்கு. நல்ல காலம் தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா என்ற அடியை விட்டுவிட்டாரே என்ற நிம்மதியும் உண்டானது. (ஆமாம். தீவிரவாதியைத் தவிர வேறு யாருக்குத் தீயைத் தீண்டினால் இன்பம் தோன்றும்?

பாரதி தீவிரவாதியா? தீவிரவாதிதான். பாரதியே சொல்கிறான். அதாவது திலகரின் பேச்சை மொழிபெயர்த்துச் சொல்கையில் பின்வருமாறு சொல்கிறார்.

“நம்முடைய ராஜாங்க விவகாரங்களின் சம்பந்தமாக இப்போது இரண்டு வார்த்தைகள் ஏற்பட்டிருக்கின்றன. அதாவது நிதானஸ்தர்கள். தீவிரஸ்தர்கள். இந்த இரண்டு வார்த்தைகளும் கால சம்பந்தமான குறிப்பையுடையன. ஆதலால் இவற்றின் அர்த்தங்களும் காலம் மாறமாற மாறிக்கொண்டே வரும். இன்றைக்குத் தீவிரக் கட்சியார் என்று அழைக்கப்படுவோர்கள் நாளைக்கு நிதானஸ்தர்களாய் விடுவார்கள். எது போலென்றால் நேற்றுவரை தீவிரக் கட்சியென்றழைக்கப்பட்டோர் இன்று நிதானஸ்தர்கள் என்று சொல்லப் படுவது போல.” (The Tenets of the New Party – புதிய கட்சியின் கொள்கைகள் – திலகர் பேச்சு – பாரதி மொழிபெயர்ப்பு.)

அந்நாளில் காங்கிரசில் மிதவாதியரென்றும் தீவிரவாதியரென்றும் இருபிரிவினர் இருந்தனர். பாரதி திலகரைப் பின்பற்றிய தீவிரவாதியே. ஆனால் பயங்கரவாதமும் தீவிரவாதமும் சமமான பொருளுடைய சொற்களாகக் கருதப்பட்டும்
பயனபடுத்தப்பட்டும் வரும் இன்றைய சூழலில் பாரதிக்கும் வெடிகுண்டு கலாசாரத்திற்கும் தொடர்பேற்படுத்தி அவரை வேறுவிதமான ஹீரோவாகச் சித்திரிக்கும் அபாயம் வெகுவாகவே இருக்கிறது. வெடிகுண்டும் கையுமாக அலைந்திருப்பாரோ என்று இனி வரும் காலம் நினைக்கக் கூடும்.

ஆயின் அப்படி ஒரு கருத்து இதுவரை இருந்ததே இல்லை என்று கூறமுடியாது. பாரதியுடன் தொடர்புள்ள ஒரு சிலரின் கருத்துக்களைப் பார்க்கும்போது பாரதிக்கு அப்படிப்பட்ட ஒரு எண்ணம் இருந்திருக்கக் கூடுமோ என்ற ஐயப்பாடு எழாதிருக்க வாய்ப்பில்லை. அப்படிச் சில கருத்துக்களைப் பார்த்துவிட்டு பாரதி இதுபற்றி என்ன சொல்கிறார் என்பதை அவர் எழுத்துக்கள் மூலமாகப் பார்ப்போம்.

எழுத்தாளர் பி. ஸ்ரீ. பாரதி வாழ்ந்த காலத்தில் மாணவராக இருந்தவர். பாரதியை நேரில் கண்டு பழகியவர். பாரதி நான் கண்டதும் கேட்டதும் என்ற புத்தகத்தில் பி. ஸ்ரீ. சொல்வது இது.

“ஒரு நண்பரின் வீட்டிலே சிலர் கூடிப் பேசிக்கொண்டிருந்தபோது டாக்டர் அப்பாவு பிள்ளையும் அங்கே இருந்தார். பழைய அரசியல் நினைவுகள் சிலருக்கு வந்தன. பொதுவாக அவற்றைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது பாரதியார் குறுக்கிட்டார். ‘டாக்டர், நீரும் நானும் அந்தக் காலத்தில் ஒருநாள் வெடிகுண்டுகளைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோ மல்லவா?’ என்று கேட்டுவிட்டார். போலீஸ் கெடுபிடி குறைவில்லாமல் இருந்த காலமாதலால் டாக்டர் சிறிது நடுங்கினார். ஒருவர் ஓடிப்போய் வாசற்பக்கத்தில் யாராவது
உளவாளி நின்று கொண்டிருக்கக் கூடுமோ என்று பார்த்தார்.

பாரதியார் டாக்டரை நோக்கி, அந்த வழி தவறு என்று தெரிந்துகொண்டேன். பகைவனுக் கருள்வாய் என்றுகூடப் பாடியிருக்கிறேன்….’ என்ற பீடிகையுடன் அந்தப் பாட்டைப் பாடிக் காட்டினார். அந்தச் சமயம் நான் அங்கே இல்லை. நண்பர் சொல்லக் கேட்ட செய்திதான்.”

மேற்படி சம்பவம் பாரதிக்கு ஏதோ ஒரு சமயத்திலேனும் கொலை வழியில் நம்பிக்கை இருந்திருக்குமோ என்று எண்ணத் தூண்டுகிறது. ஆனால் இந்தச் சம்பவம் பி. ஸ்ரீ. அவர்கள் முன்னிலையில் நடந்ததல்ல. செவிவழிச் செய்தியே.

பாரதியின் வாழ்வும் நூல்களும் என்ற நூலை எழுதிய திரு. வை. சச்சிதானந்தன் அவர்கள், பாரதியின் நண்பரான நாராயண அய்யங்கார் சொன்னதை மேற்கோள் காட்டுகிறார்.

பாரதி மேற்படி நாராயண அய்யங்காருக்கு ஒரு வங்காள வாலிபனை அறிமுகப்படுத்தி அவரைக் கல்கத்தாவிலிருந்து வரவழைத்திருப்பதாகக் கூறினாராம். வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணரான அவர், கையில் இரண்டு வெடிகுண்டு தயாராக வைத்திருக்கிறார் என்றும், தன்னைப் போலீஸார் கைது செய்தாலோ, கெட்ட எண்ணத்தோடு நெருங்கினாலோ அவர்கள் வெடிகுண்டுக்கு இரையாவார்கள் என்றும் கூறினாராம். 50000 வெடிகுண்டுகளைத் தயாரித்து, வீசப் பழகிக்கொண்டால் வெள்ளையர்களைச் சுலபமாக ஒழித்துவிடலாம் என்று அவர் கூறினாராம். பாரதி பற்றி நண்பர்கள் என்ற நூலிலிருந்து அவர் மேற்கோள்காட்டுவது இது. (பாரதியாரின் வாழ்க்கையும் நூல்களும் – வை. சச்சிதானந்தன் – பக்கம் 45).

படிப்பதற்குச் சுவையாய் இருக்கும் இது எவ்வளவு தூரம் உண்மையாய் இருக்கும் என்பது ஐயத்திற்குரியது. தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு கருப்புப் பூனை வைத்துக் கொள்ளுமளவுக்கு பாரதிக்கு நிதி ஆதாரம் இருந்ததா? கல்கத்தாவிலிருந்து வந்திருந்த அந்த வாலிபர் தேச பக்தியின் காரணமாகப் பாரதியைப் பாதுகாப்பதைத் தன் கடமையாகக் கருதி ஒரு சேவையாகவே
இதனைச் செய்தார் என்று வைத்துக்கொண்டால் கூட, அவர் உயிர் வாழத் தேவையான உணவிற்கு பாரதி என்ன ஏற்பாடு செய்திருக்க முடியும்? தன் உற்றார் உறவினரை விட்டுவிட்டுக் கல்கத்தாவிலிருந்து பாண்டிச்சோ஢க்கு வந்து பாரதியைப்
பாதுகாப்பதில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் அளவுக்குப் பாரதியின்பால் அவருக்கு என்ன ஈடுபாடு? ஒரு தாகூரையோ, அரவிந்தரையோ பாதுகாப்பதை விட்டுவிட்டு இவர் ஏன் பாரதிக்குச் சேவை செய்ய வந்தார்? தெரியவில்லை.

நாரயண அய்யங்கார் இன்னொன்றும் சொல்கிறார்:

“இந்நாட்களில் விபின் சந்திர பாலின் கூட்டுறவினாலும், பாலகங்காதர திலகா஢ன் தீவிர கொள்கைகளிலுள்ள ஆழ்ந்த பற்றினாலும் பாரதியாரின் வாழ்வில் புயல் வீச ஆரம்பித்தது. வீட்டில் பின்பற்றி வந்த பழைய பழக்க வழக்கங்களையும் பண்பாடுகளையும் அடியோடு விட்டுவிட்டார்.”

சுருக்கமாகச் சொன்னால், திலகருடன் சேர்ந்து பாரதி கெட்டுப்போய் விட்டார் என்கிறார்! பழைய பண்பாடுகளை அடியோடு கைவிடும்படி பாரதியைத் தூண்டிய இத்தகைய தொடர்புகள் எத்தனை மோசமாயிருந்திருக்கும் என்றல்லவா எண்ணத் தோன்றுகிறது? திலகரைப் பற்றியும் விபின சந்திரரைப் பற்றியும் இவர் பேசியிருப்பதைக் கேட்டிருந்தால் பாரதி என்ன செய்திருப்பான்? புதுச்சோ஢யில் (வ. வே. சு. ஐயா஢ன் நண்பரான) ஒரு பிரபல வக்கீல், பழக்கம் காரணமாக, “ஏன் சார்! ஒங்க டிலக் இப்போ எப்படி இருக்கான்?” என்று கேட்டதற்காக, பெயரைத் தவறாக உச்சா஢த்ததற்காகவும், ஒருமையில் திலகரைக் குறிப்பிட்டதற்காகவும் பாரதிக்கு வந்த ஆவேசத்தை வ. ரா. அவர்கள் எழுதியிருப்பதைப் படித்தால் நாராயண அய்யங்காருக்கு என்ன நேர்ந்திருக்கும் என்று கற்பனை செய்ய முடிகிறது. எனவே, திலகரைப் பற்றியே இவ்வளவு பேசும் இவர் வார்த்தைகளுக்கு எவ்வளவு மதிப்பு தர முடியும்? நண்பர்கள்!

டாக்டர் ச. சு. இளங்கோவன் வேறொரு தகவலைத் தருகிறார். வ. வே. சு. ஐயரும் பாரதியாரும் புதுவையில் மண்பொம்மைக் கலைஞர்களிடம் சொல்லி பாரத மாதா பதுமையொன்று செய்யச் சொன்னார்கள். இந்தப் பதுமையின் படம் இளங்கோ அவர்களின் புத்தகத்திலும், ரா. அ. பத்மநாபன் வெளியிட்ட சித்திர பாரதியிலும் வெளியாகி இருக்கிறது.

இந்திய விடுதலை வீரர்களுக்குப் பயன்படும் சிறு துப்பாக்கி முதலிய கருவிகளைப் பாரதமாதா பதுமைகளில் மறைத்துப் புதுச்சோ஢யிலிருந்து சென்னைக்குக் கொண்டு செல்லப்படுவது வழக்கமாக இருந்தது. அவ்வாறு துப்பாக்கிகள் மறைக்கப்பட்ட பாரதமாத மண்பொம்மைகள் அடங்கிய ஒரு பெட்டியைச் சென்னைக்குக் கொண்டு சென்று, தமக்குத் தொ஢ந்த நண்பர்களிடம்
சேர்ப்பிக்குமாறு பாரதியார், பாரதிதாசனுக்குப் பணித்தார். (பாரதிதாசன் பார்வையில் பாரதியார் – டாக்டர் ச. சு. இளங்கோவன் – பக்கம் 59) இதற்கு ஆதாரமாக அவர் குடும்ப விளக்கு நூலின் 54-55 பக்கங்களைக் காட்டுகிறார். ஒருவா஢ன் வாழ்க்கைக் குறிப்புக்குக் காவியங்களும் கற்பனை நூல்களும் ஆதாரமாக முடியுமா?

சரி. அப்படியே வைத்துக்கொள்வோம். பெட்டிபெட்டியாக துப்பாக்கிகளையோ, எறிகுண்டுகளையோ கடத்திச் சென்றுவரத் தேவையான நிதி பாரதிக்கு எங்கேயிருந்து கிடைத்தது? புதிர். ஒரு பெட்டியில் பத்து பதுமைகள் என்று
வைத்துக்கொண்டாலும் பத்து கைத்துப்பாக்கிகள் கடத்தப்பட்டன என்று பொருள். எப்படி இத்தனை துப்பாக்கிகளை பாரதி வாங்கினான்? எந்த கஜானாவைக் கொள்ளையடித்தான்? புதிர். அல்லது பாரதி வேறு யாரிடமிருந்தோ ஆயுதங்களைப் பெற்று அவற்றை இவ்வாறு விநியோகித்தான் என்றால், யார் அந்த யாரோ? யார் இந்தியத் தீவிரவாதிகளை ஊக்குவிக்க பெட்டி நிறைய ஆயுதங்களைத்
தந்திருப்பார்கள்? புதிர். பாண்டிச்சோ஢யில் பாரதி முதலானவர்களைக் கண்காணிக்க என்றே அலைந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஒற்றர்களிடம் சிக்காமல் இது எப்படி நடந்திருக்க முடியும்? புதிர். Bharathi and Imperialism -A Documentation என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் பாரதி சம்பந்தப்பட்ட போலிஸ் ஒற்றர் குறிப்புகள் ஓரிடத்திலும் பாரதிக்கும் ஆயுதக்
கடத்தலுக்கும் தொடர்பிருந்ததாகச் சொல்லவில்லையே? புதிர்.

பாரதி இப்படிச் சொன்னார் அப்படிச் செய்தார் என்று சொல்பவர்கள் ஒருபுறம் இருக்கட்டும். ஆயுதக் கலாசாரத்தைப் பற்றி பாரதி என்ன நினைத்தான்? அவன் எழுத்துக்களை விடவும் வலிமையான ஆதாரம் வேறென்ன இருக்க முடியும்?

வாஞ்சிநாதனை நாமறிவோம். கலெக்டர் ஆஷ்துரையைக் கொலை செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இளைஞர் குழுவின் தலைவராயிருந்த நீலகண்ட பிரம்மச்சாரி, பாரதி விஜயா பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றியபோது, துணையாசிரியராகப் பணியாற்றியவர். வாஞ்சிநாதனுக்குப் புதுச்சோ஢ கரடிக்குப்பத்தில் துப்பாக்கிப் பயிற்சி அளித்த வ.வே.சு. ஐயர், பாரதியின் நெருங்கிய நண்பர். ஆஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 1911-ல் சிறைத் தண்டனை அனுபவித்த திரு. கே. ஆர். அப்பாதுரை, பாரதியின் மைத்துனர். இவ்வளவு நெருங்கியவர்கள் சம்பந்தப்பட்ட இந்தக் கொலையைப் பற்றி பாரதி என்ன சொல்கிறான்?

இத்தகையதொரு நிகழ்ச்சி இரண்டாம் முறையாக நடைபெறாதது சென்னை ராஜதானிக்குப் பெருமை சேர்ப்பதாகும் என்றும், சென்னை ராஜதானியில் பயங்கரவாதக் குழந்தை இறந்தே பிறந்தது என்றும் திருப்தி தொ஢விக்கிறான். கணவனும் மனைவியுமாக (பாரதியின் மொழியில் பார்வதி பரமேஸ்வரர்களைப் போல) கலெக்டர் ஆஷும் அவன் மனைவியும் விடுமுறைக்காகச் சென்றுகொண்டிருக்கையில், அவர்கள் தனித்திருக்கையில், தங்களுக்குள் அன்பு பாராட்டிக் கொண்டிருக்கையில் இப்படிக் கொன்றதில் தனக்கு உடன்பாடில்லை என்று சந்தேகத்திற்கிடமில்லாமல் தொ஢விக்கிறான். (The Political Evolution in the Madras Presidency – பாரதியின் ஆங்கிலக் கட்டுரை.) இந்தக் கொலை மட்டுமல்ல. வேறெந்தக் கொலையும் பாரதியின் கண்டனத்திற்குத் தப்பியதில்லை.

ஸ்பெயின் அரசர் அல்போன்ஸாவும், விக்டோ ரியா மஹாராணியின் பேத்தி ஏனாவும் திருமணம் செய்துகொண்டு ஊர்வலமாய்த் திரும்பி வருகிறார்கள். அவர்கள் மீது அனார்கிஸ்டுகளால் குண்டு வீசப்படுகிறது. அரச தம்பதியர் பிழைத்துக் கொண்ட போதிலும் அவர்கள் ஏறிச் சென்ற வண்டி சின்னபின்னமாகிறது. குதிரைகள் மடிந்து விடுகின்றன. பொது மக்களில் பலர் இறந்துவிடுகின்றனர்.
உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் ஸான் ஜெனிரோ ஆலயத்திலிருந்து கிளம்பிய அரச தம்பதியர் கண்ணீருடன் அரண்மனையில் நுழைகின்றனர்.

இந்த நிகழ்ச்சியை செய்திக் கட்டுரையாகத் தருகிறான் பாரதி. யாருக்கு? எந்தப் பெண்கள் திமிர்ந்த ஞானச் செருக்குடன் விளங்கவேண்டும் என்று விரும்பினானோ அந்தப் பெண்களுக்கு. சக்ரவர்த்தினி என்ற பெண்கள் பத்திரிகையின் ஆசிரியராக இருந்து கொண்டு. வெடிகுண்டு என்றால் என்ன, அனார்கிஸ்டுகள் என்றால் யார், ராஜதந்திர செளகா஢யங்கள் என்றால் என்ன என்று எல்லாவற்றையும் விளக்குகிறான். பின் வரும் வா஢களைக் கவனியுங்கள்.

“இந்த விவாகத்தின்போது வெடிகுண்டு எறிந்த மாத்யூ மாரல் என்பவன் தன்னைப் பிடிக்க வந்த போலிஸ் சேவகனைச் சுட்டுக் கொன்ற பிறகு தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்துபோய்விட்டான். உயிரை வெறுத்து இந்தக் கூட்டத்தார் இப்படி ஓயாமல் பெரும் பாதகங்கள் செய்வதன் காரணம் என்ன என்பது யோசனை புரியத் தகுந்த விஷயம்.” இதற்குப் பிறகு அனார்கிஸ்டுகளுடைய நியாயத்தை விளக்குகிறான். இந்தச் செய்திக் கட்டுரையின் கடைசி வா஢கள் நோக்கத் தக்கன.

“இவர்களுடைய நினைப்பு ஒருவேளை நியாயமாயிருந்த போதிலும் இவர்களது செய்கை மிகவும் மிருகத்தனமானது என்பதில் தடையில்லை.”

கிங்ஸ்போர்டு என்ற மாஜிஸ்திரேட் முஸாபர்பூருக்குக் கல்கத்தாவிலிருந்து மாற்றலாகி வந்தார். இவர் கல்கத்தாவில் பிரெசிடென்சி மாஜிஸ்திரேட்டாக இருந்தபோது தேசபக்தர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்கினார். எனவே இவரைக் கொல்வதற்காக பிரபுல்லா சக்கி, குதிராம் போஸ் என்ற வங்காள இளைஞர்கள் எறிந்த குண்டு திருமதி கென்னடி என்பவரையும் கொன்றுவிட்டது.
இந்த நிகழ்ச்சியின் தொடர்பாகத்தான் அரவிந்தர் முதலானோர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அரவிந்தர் இதில் சம்பந்தப்படவில்லை என்று பின்னால் விடுவிக்கப்பட்டார். பாரதி இது குறித்து The Political Evolution in the Madras Presidency என்ற ஆங்கிலக் கட்டுரையில் குறிப்பிடுவது இது.

‘இந்திய பயங்கரவாதிகளால் உபயோகிக்கப்பட்ட முதல் குண்டு திருமதி கென்னடி என்ற பெயர் கொண்ட ஐரோப்பிய மாதின் மீது தவறுதலாக வீசப்பட்டது. இது ஆங்கிலோ இந்தியாவைக் கொந்தளிக்கச் செய்தது. என்ன பரிதாபம்! புதிய இந்தியாவின் மறுவிழிப்படைந்த ரஜபுதனத்து வீரத்தின் மீது எப்படிப்பட்ட ஒரு விமரிசனம்! எப்படிப்பட்ட ஒரு தவறு! இந்தியாவை விடுவிக்க ஒரு
பெண்மணியின் மீது வீசப்பட்ட குண்டு!’ (ஆங்கிலத்தினின்று மொழிபெயர்ப்பு.)

இந்தியாவை விடுவிக்க ஒரு பெண்மணி மீது குண்டு வீசப்பட்டதே என்று வருந்துகிறான். அதுவும் எத்தகைய இந்தியாவில்? பெண்ணை ஆதிசக்தி (பாரதி ஆங்கிலத்தில் குறிப்பிடுவதுபோல் Primordial Force, the Divine Feminine) என்று தொழும் இந்தியாவில்.

இதே சம்பவத்தைப் பற்றி பாரதி தமிழில் எழுதியிருப்பதை சீனி. விசுவநாதன் உள்நாட்டுப் பத்திரிகை அறிக்கையிலிருந்து எடுத்துத் தருகிறார். “இந்தக் காட்டுமிராண்டித் தனமான காரியங்களில் வங்க மாநிலத்தில் இருக்கும் நம் மக்களில் சிலர் ஈடுபட்டிருப்பது நமக்கு வருத்தம்தான் என்பதைக் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டியிருக்கிறது…. இந்நாட்டில் உயிர்ச்சேதம் உண்டாக்கும் அழிவுமுறைகளை அனுமதிக்கக் கூடாது என்ற அரசாங்கத்தின் கருத்திற்கு – இந்த நாட்டிலே உயிர்ச்சேதம் விளைவிக்கும் கருவிகளை உபயோகிக்கக் கூடாது என்ற கருத்திற்கு நாமும் உடன்படுகிறோம்.” இந்த பாரதியா பெட்டி பெட்டியாகக் கைத்துப்பாக்கிகளை வினியோகித்திருப்பான்?

மதன்லால் திங்ரா என்றொரு இளைஞன் லன்டனில் கர்சன் விலியைக் கொன்றான். மதன்லால் திங்ரா தூக்கிலிடப்பட்டு சிறைச்சாலையிலேயே புதைக்கப்பட்டான். இதற்குச் சில நாட்கள் கழித்து கிளாஸ்கோவில் ஒரு பருத்தி ஆலை தீ விபத்துக்குள்ளானது. இரண்டரை லட்சம் பவுன்ட் நஷ்டம் ஏற்பட்டது. மதன்லால் திங்ராவின் உடலைக் கொடுக்க மறுத்ததால் அக்னி பகவான் சீற்றமுற்று இவ்வாறு செய்தார் என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் வ.வே.சு. ஐயர் இந்தியா பத்திரிகைக்குச் செய்தி எழுதினார். இதனை வெளியிட்ட அடுத்த வாரம் பாரதி ஒரு துணைத் தலையங்கம் எழுதினான். அதில்,

“அற்பத்துக்கெல்லாம் ஸந்தோஷித்துப் பழி வாங்கும் இழிவான குணம் ஆரியர்களுடையதல்ல. நமது நாட்டில் ஒரு நாளும் கேட்டிருக்க முடியாத வெடிகுண்டு முதலிய பயங்கரமான செயல்கள் அநாகா஢கமானவை…” என்று குறித்தார். இது தொடர்பாகக் கிளம்பிய விவாதமே பாரதியை இந்தியா பத்திரிகையை விட்டு விலக வைத்தது என்று ரா. அ. பத்மநாபன் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும் பாரதியையும் வ. வே. சு. ஐயரையும் ஒத்திட்டுச் சொல்கையில் ரா. அ. ப. அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “பாரதிக்கு வெடிகுண்டு மார்க்கத்தில் நம்பிக்கை இல்லை. வெறுப்பு. சட்டபூர்வமான முயற்சிகளில் பரிபூர்ண நம்பிக்கை கொண்டவர் அவர். ” (நூல்: வ. வே. ஸு. ஐயர் – ரா. அ. பத்மநாபன் – பக்கம் 79.) இவரைப்போய் பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படுத்துவது பொருந்துமோ?

தமிழ் நாட்டாருக்கு இறுதி விண்ணப்பம் என்ற தலைப்பில் பாரதி சூர்யோதயம் பத்திரிகையில் எழுதியதன் இந்தப் பகுதியைப் பாருங்கள்:

“சகோதரர்களே, ஒரு வார்த்தை மட்டும் சொல்லுகிறேன். இன்னொரு முறை சொல்ல எனக்கு சந்தர்ப்பம் கிடைக்குமோ கிடைக்காதோ – அதுவே சந்தேகத்திலிருக்கிறது. ஆகையால் இந்த ஒரு வார்த்தையை மனத்தில் பதிய வைக்கும்படி உங்கள் பாதங்களில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன்.

அதாவது, எது வந்தாலும் அதைர்யப்படாதேயுங்கள். மாதாவை மறந்துவிடவேண்டாம். நியாயந் தவறான செய்கைகள்
செய்யவேண்டாம். .. .. .. .. நியாயமான சட்டங்களை மீற வேண்டாம். அநியாயமான சட்டங்களை எடுத்து விடுவதற்கு இயன்ற முயற்சியெல்லாம் செய்ய வேண்டும்.”

அதிதீவிரவாதியான வ.வே.சு. ஐயர் காந்தியைச் சந்தித்த பின் (இரண்டாவது சந்திப்பில்) தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார். காந்தி இந்தியாவிற்கு வருவதற்கு முன்னரேயே பாரதி கொலைவழியை மறுத்தார். எதிர்த்தார். அதனால்தான்,
பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்
அதனினும் திறன்பரி துடைத்தாம்
அருங்கலைவாணர் மெய்த்தொண்டர் தங்கள்
அறவழி யென்றுநீ யறிந்தாய்.

என்று மஹாத்மாவுக்குப் பஞ்சகம் பாடினார். “வெடிக்காய் வியாபாரத்தில் நமக்குத் துளியும் நம்பிக்கை இல்லை” என்று பாரதியே குறிப்பிட்டுவிட்ட பிறகு வேறென்ன சொல்வதற்கு இருக்கிறது?

கொலைவழி அந்நியனால் மேற்கொள்ளப்பட்டாலும் நம்மவரால் மேற்கொள்ளப்பட்டாலும் கண்டிக்கத் தக்கதே என்பது பாரதியின் தீர்மானமான முடிவு. அரசியல் கொலைகளை ஆதரித்து பாரதியின் எழுத்துக்களில் ஒரு வார்த்தையைக் கூட காண முடிவதில்லை என்பதே உண்மை.

பாரதியின் துலாக்கோல் காய்கறிக்கடைத் துலாக்கோலன்று. தங்கம் நிறுக்கும் பெளதீகத் துலாக்கோல். அந்நியன் செய்யும் கொலை தவறென்றால், தன்னைச் சேர்ந்தோர் செய்யும் தனிமனிதக் கொலை வீரத்தின்பாற் பட்டது என்று அதனால் ஒப்புக் கொள்ள முடியாது. பாரதியின் நேர்மை தனித்தலைப்பில் ஆராயத் தக்கது. அதனைத் தனியே காண்போம்.


(இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படும் தொலைக்காட்சிப் பட்டிமன்றம் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்றது. நடுவர் நெல்லை கண்ணன். பங்கேற்ற இரண்டு பெண்மணிகளில் ஒருவர் சுதா சேஷையன். இன்னொருவர் நிர்மலா சுரேஷ்
(என்று நினைவு). இவர்தான் பாரதி ஒரு தீவிரவாதியே என்று பேசியவர்.)
hari.harikrishnan@gmail.com

Series Navigation

ஹரி கிருஷ்ணன்

ஹரி கிருஷ்ணன்