வீர நாயகர்களுக்கும் விதியால் பலியானவர்களுக்கும் வணக்கம்

This entry is part [part not set] of 30 in the series 20020909_Issue

பாரி பூபாலன்


அமெரிக்கா மிகத் தீவிரமான ஆர்வத்துடன் இருக்கிறது. செப்டம்பர் 11 தின நாயகர்களுக்கு நினைவு கூர்ந்து வணக்கம் சொல்வதற்கு. தபால் தலைகளுடனும், மரியாதையுடன் நினைவு கூறும் அறிக்கைகளுடனும் உயிர்த் தியாகம் செய்தவர்களின் குடும்பத்திற்கு பதக்கங்களும் என்று தீவிரமான ஆர்வத்துடன் இருக்கிறது. பத்திரிக்கைத் துறையினரும், தொலைக்காட்சி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டிருகின்றன செப்டம்பர் 11 தினத்தை எவ்வாறு நினைவு கூர்வதென்று.

இருந்தாலும், இது சரிதானா என கேள்வி கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது ஒரு தேவையில்லாத ஆர்வமா ? தீயணைப்புத்துறையினரையும் காவலர்களையும் கண்மூடித்தனமாக வணங்குகிறோமா ? இவர்கள் உண்மையிலேயே வீர நாயகர்களாய், சுய உணர்வால் உந்தப் பட்டு தியாகம் செய்தவர்களா ? அல்லது விதியின் விளைவாய் அந்த கொடும் செயல்களுக்குப் பலியானவர்களா ? இதை எவ்வாறு தீர்மானிப்பது ? 3000த்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் யாரை தேர்ந்தெடுப்பது ? ஒரு வழக்காடு மன்றமே நடந்து கொண்டிருக்கிறது.

செய்யும் தொழில் நிமித்தமாய் உயிரிழந்த சேவகர்களுக்கும், காவலர்களுக்கும் மரியாதை தரும் அளவில், ‘2001ன் வீர நாயகர்கள் ‘ என்ற பெயருடன் புதிதாக ஒரு தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது, பலத்த விளம்பரத்துடன். ஆனால் அதே உணர்வுடன் தன் வேலையை செய்யும் பொருட்டு அதிகாலையிலேயே உலக வர்த்தக மையம் சென்று, தன் இருக்கையில் அமர்ந்து பணி புரிந்ததால் உயிரிழந்த சாதாரண ஊழியர்களைப் பற்றி எந்த தபால் தலையுமில்லை. இப்படி உயிரிழந்த அந்த ஊழியர்களின் உறவினர்கள் இந்த தபால் தலைகளைப் பற்றிய விளம்பரங்களைப் பார்க்கும் போது சங்கடப்பட்டு நோகிறார்கள். ‘ஏனிந்த வேறுபாடு ? எல்லோரும் சக மனிதர்கள். எல்லோர் உயிரும் ஒன்றுதான். அவர்களும் செய்யும் தொழில் மரியாதையாய் தியாகம் செய்தவர்கள். அவர்கள் நினைவாய் தபால்தலை எங்கே ? ‘ என்று உறவினர்கள் கேட்கிறார்கள்.

விழுந்து நொறுங்கிய விமானத்தில் பயணித்து உயிரிழந்த பயணிகளிடையே சண்டையிட்டு உயிர் துறந்தவர் என அடையாளம் காட்டப்பட்டவர்களுக்கு, அரசு தங்கப் பதக்கம் வழங்குவதாய் ஏற்பாடு. ஆனால் இது உயிரிழந்த எல்லோருக்கும் இல்லை. மேலும் சில விருதுகள் வணிக மையத்தில் உயிரிழந்த பணியாளர்கள் சிலருக்கு வழங்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. ‘இஇது எதனை அடிப்படையாய்க் கொண்டது ? எப்படி இதனைத் தீர்மாணிக்கிறார்கள் ? ‘ சிலருக்கு வேதனையாய் இருக்கிறது. ‘எனது தாய், வீர உணர்வுகளுடன் பிறந்தவள். இயல்பாகவே ஒரு தலைவி அவள். பிறருக்கு உதவும் குணம் கொண்டவள். தன் நாட்டை பக்தியுடன் நேசிப்பவள். அந்த கொடுமைகள் நடக்கும் போது, அவற்றின் நடுவே, அவளால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருந்திருப்பாள் என்பதில் துளிகூட சந்தேகம் இல்லை. எப்படி அவளை மறந்து விட நாங்கள் அனுமதிப்போம் ? அத்தாட்சி எதுவும் இல்லையென்றாலும், அவளுக்கும் பங்குண்டு, இந்த பதக்கங்களிலும், மரியாதையிலும் ‘ என தாயிழந்த மக்கள் பொறுமுகின்றனர்.

‘உயிரிழந்த அனைவருக்கும் விருதுகளும் பதக்கங்களும் என்பது, அந்த விருதுகளுக்கு உரிதான பெருமையைக் குறைத்துவிடும் ‘ என சிலர் கூறுகிறர். ‘ஆனால் இந்த ஏற்பாடு விருதளித்து பரியாதைப் படுத்தப் படாதவர்களின் நிலையை கீழ்மைப் படுத்துவதாய் தோன்றவைக்கிறது ‘ என வேறு சிலர். ‘விபத்துகளும், அதன் விளைவாய் உயிரிழப்பும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதுவும் செய்யும் பணியின் நடுவே. ஆனால், சிலர் இருக்கிறார்கள். எப்பொழுதும் வீரமும் தியாகமும் நிறைந்த உணர்வுகளுடன். தனது கடமையை மீறி ஒரு படி மேலே சென்று நிறைவாய்ச் செய்யும் சிலர் இருக்கின்றனர். அவர்களை வேறுபடுத்திக் கெளரவிக்கவேண்டும். இழந்த எல்லா உயிர்களையும் நினைவு கூர்வதாய் மரியாதை செய்ய வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. அதே சமயத்தில். எல்லா மனிதர்களும், உயிர்களும் சமமாயினும், இந்த உணர்வுகளை மதிப்பதாய் அந்தப் பதக்கங்கள் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வீரர்களையும், தியாகிகளையும் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி தேர்ந்தெடுக்கப்படுவதின் அடிப்படை எல்லோருக்கும் தெரிவதாய் வெளிப்படுத்தப்பட வேண்டும் ‘ என இன்னும் சிலர்.

அரசும் சமூகமும் கெளரவிக்கிறதோ இல்லையோ, ‘எனது மகன் ஒரு வீரன் ‘ என நினைவு கூறும் பெற்றோர்களும், ‘எனது தாய் ஒரு தியாகி ‘ என பெருமைப்படும் மகனும், ‘உங்கள் தந்தை பயங்கரவாதிகளுடன் போரிட்டு உயிரிழந்தவர் ‘ என தனது மக்களுக்கு நினைவுறுத்தும் தாயும் தங்களது வாழ்க்கையை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

***

pariboopalan@hotmail.com

Series Navigation

பாரி பூபாலன்

பாரி பூபாலன்