தமிழில்/எஸ். ஷங்கரநாராயணன்
”வில்லியம் கூம்ஸ். ரெண்டு ஓ.” மெலனி பாலிங்கர் அப்பாவிடம் தொலைது¡ரத்தில் இருந்து தொலைபேசியில் சொன்னாள். ”கூப்பிடும்போது, சீப்பு வருமே, கோம்ஸ், அதைப்போல. சொல்லுங்கப்பா…”
பாலிங்கர் திரும்பி அந்தப் பெயரைச் சொன்னார்.
”முழுப்பேரும் சொல்லுங்க.”
”தெரியுண்டா. ஏன் சொல்லச் சொல்றே?”
”அப்பா, அவரை வீட்டுக்கு அழைச்சிட்டு வரேன். நாங்க கல்யாணம் பண்ணிக்கலாம்னிருக்கோம்.”
அவருக்குப் பேச வரவில்லை.
”அப்பா, கேட்கறீங்களா?”
”ம்”
”அப்பறம்?”
மீண்டும் அவருக்குத் திண்டாட்டமாய் இருந்தது.
”அப்பா?”
”ம்… முக்கியமான சமாச்சாரம்தான்.”
”அவ்ளதானாப்பா?”
”ஸ். அதாவது, மெலனி, அபார ஜரூர்… இல்லே?”
”அப்டில்லாம் இல்லப்பா. நீங்களும் அம்மாவும் எத்தனைநாள் காத்திட்டிருந்தீங்க?”
”அது ஞாபகமில்லை. ஆக அதுனாலதான் இந்த முடிவுன்றியா?”
”நீங்க ஆறு மாசமா யோசிச்சிட்டிருந்தீங்க. அப்புறம் ஒரு அஞ்சுமாசம் ஓடிட்டது. ஆனா அதைவெச்சி நாம பேச வேணாம். நானும் வில்லியமும் அஞ்சு மாசத்துக்கும் மேல பழகினவங்கதான். இப்ப இருபத்திமூணு முடியப்போகுது எனக்கு. அம்மாவின் கல்யாணவயசைவிட ரெண்டு வருஷம் ஜாஸ்தி… அப்ப அந்தக் காலம் வேறன்னுல்லாம் பேச வேணாம்…”
”இல்ல” என்றார். ”எல்லாம் ஒண்ணுதான்-னு நினைக்கிறேன்.”
”அப்பறம்?” அவள் கேட்டாள்.
”ம்” பாலிங்கர் சொன்னார். ”உன் வாழ்க்கையைப் பத்தி… ரொம்ப சந்தோஷம்.”
”உங்க குரல் அப்பிடிச் சொல்லலியே?”
”நான் சந்தோஷப்படறேன். மாப்ளையை நான் உடனே பாக்கணுமே?”
”நிஜமாவா? சத்தியமா? சும்மாவாச்சும் சொல்றீங்களா?”
”நல்ல சேதி கண்ணே. ஆச்சரியப்படுத்திட்டே, அது வாஸ்தவந்தான். எனக்கு விஷயம் உள்ள இறங்க அவகாசம் வேணாமா? திடுதிப்னு… நானும் அம்மாவும்… நீ ஒருத்தரோட பழகறதே தெரியாது எங்களுக்கு. ஆனா, அதைப்பத்தி என்ன, எனக்கு சந்தோஷம்தான். அந்த வாலிபனை உடனே நான் பாக்கணும்.”
”சரி. இப்ப இன்னொரு விஷயம் நீங்க தெரிஞ்சிக்கணும்.”
”நான் தயார்” என்றார் பாலிங்கர். புதிதாய்க் குடிவந்த வீட்டின் சமையலறை. இந்த வீட்டை மகள் அறிந்ததில்லை. ஜன்னலுக்கு அப்பால் அவர் மனைவி. மேரி. சிவப்புத் துவாலையைப் போர்த்திக்கொண்டு, வெள்ளை மஸ்லின் சட்டையும், ஜீன்ஸ் சாராயுமாய்த் தோட்ட வேலையில் இருந்தாள். இளமையாய் சந்தோஷமாய்… அவர்கள் ரொம்ப காலமாக சந்தோஷமாக இல்லைதான்.
”ம், இதை அத்தனை இதுவாச் சொல்ல முடியாது.” ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து மகளின் குரல். ”வேணா அப்பறமாச் சொல்…”
”இல்லல்ல. எதுவானாலும், சொல்லு. நான் எடுத்துக்கறேன்.”
உண்மையில் அவரே அவளிடம் சேதி ஒன்று பகிர வேண்டியிருந்தது. ஒரு ஒருவாரம் முன்னாடி அவரும் மேரியும் விலகிக்கொள்ள தீர்மானம் எடுத்திருந்தார்கள். பேசி விவாதித்து முடிவு எடுக்கிற நேரமாய் இருந்தது. மெலனி வீட்டுக்கு வரட்டும், சொல்லிக் கொள்ளலாம் என்றிருந்தார்கள். ஆனால், மெலனி வரும்போது கூட வேறொருவரை அழைத்து வருகிறதாக இருக்கிறாள்…
மறுமுனையில் அவள் தையலும் கையுமாய் இருந்தாள். ”தெர்ல, அப்பா. நான்… கடவுளே… எப்பிடி அதைச் சொல்லறது?”
காத்திருந்தார். சிகாகோவில் இருக்கிறாள். நாலு வருஷம் முன்னால் படிக்க அனுப்பியது. பட்டம் வாங்கியபின் அதே ஊரில் ஒரு தனியார் செய்தித்தாளில் வேலையும் ஏற்றுக் கொண்டாள். சர்லோட்ஸ்வில் பகுதி மையத்திலான இந்தச் சிறு வீட்டுக்கு இவர்கள் மாறிக் கொண்டார்கள். இடமாற்றம் சில நல்லம்சங்களைக் கொண்டு வரலாம் என நப்பாசை. வரவில்லை. மணமாகி இத்தனை வருஷம். இப்போது மனசு ஒட்டுவதாய் இல்லை.
”அப்பா?” என்றாள் அநாதரவாய்.
”சமத்தே, கேட்டுட்டிருக்கேன்.”
”சரி, இதப்பாருங்கப்பா…” என்றாள் அவள். ”நீங்க திட்டக்கூடாது… சத்தியம் பண்ணுங்க.”
”அதுல்லாம் எப்பிடி முடியும் மெலனி?”
”அப்ப திட்டுவீங்க… கோபப்பட மாட்டேன்னு சத்தியம் பண்ணிக் குடுங்க.”
”சமத்தே, நானும் உன்னாண்ட ஒண்ணு சொல்லப் போறேன். நீயும் கடுப்பாகக் கூடாது, எனக்கு சத்தியம் பண்ணு.”
”சத்தியம்” என்றாள் அவள் – மனசில், என்ன ஆகப் போவுதோ?
”ம்” என்றார். ”இப்ப நீ சொல்லு. எதுனாலும் சொல்லு.” மனசில் ஒரு எண்ணம், அதிர்ச்சியாய்த் தாக்கியது. ”மெலனி… நீ… நீ கர்ப்பமாய் இல்லேல்ல? இல்ல, இருக்கியா?”
அவள் கேட்டாள். ”உங்களுக்கு எப்பிடித் தெரியும்?”
அவருக்கு நெஞ்சடைத்தது. ”அட கடவுளே, நிஜத்தில்…”
”யேசுவே…” அவள். ”சட்னு கண்டுபிடிச்சிட்டீங்க. ஆச்சர்யம்…”
”அப்டின்னா, நீ முழுகாம இருக்கே.”
”ம். கடவுளே, நீங்க எதிராளி மனசைப் படிக்க அறிஞ்சவர் அப்பா.”
”அப்டில்லாம் இல்ல மெலனி… நீ பேசறதை வெச்சி ஒரு யூகம்… இது, நிச்சயமாத் தெரியுமா?”
”ஆமாமாம், நிச்சயம். ஆனா அது இல்ல சிக்கல். நான் அப்பறமா, சொல்லட்டுமா…”
”ஏன் அப்பறமா?”
”மத்த விஷயத்துக்கும் நீங்க பழகிக்கற வரைக்கும்…”
அவர் பதில் பேசவில்லை. மறுபக்கம் அவள் குழப்பமாய் இருந்தாள். பெருமூச்செறித்தாள். பேச முயன்று நிறுத்திக் கொண்டாள்.
”தெர்ல” என்றாள் கடைசியாக. சட்டென்று அறையில் இருக்கிற இன்னொரு நபரிடம் அவள் பேசுவதாக உணர்ந்தார்.
”பெண்ணே, அம்மாவைக் கூப்பிடட்டுமா?”
”இல்லப்பா. முதல்ல உங்ககிட்ட சொல்லிறணும். எல்லாம் சொல்லி முடிச்சிட்டா நல்லது.”
”எல்லாம் முடிச்சிர்றதுன்னா? மெலனி, என்ன பேசிட்டிருக்கோம் நாம. அம்மாவைக் கூப்பிடறேன்.” கொஞ்சம் இடக்கு பண்ண ஏனோ தோணியது. ”ஏன்னா, நான் கர்ப்பமா ஆனதில்லையே!”
”அட விஷயம் அது இல்லப்பா. அதை நீங்களே யூகிச்சிட்டீங்க.”
காதோடு தொலைபேசியை அழுத்திக் கொண்டார். ஜன்னல் வெளியே குனிந்தும் நிமிர்ந்தும், கையுறையால் கீழ் முதுகுத்தண்டை வருடியபடி மனைவி. உடற்பயிற்சி. ஓ மேரி!
”கேட்கறீங்களா?” என்றாள் மகள்.
”இரு” என்றார். ”ஒரு நிமிஷம். உட்கார்ந்துக்கிட்டா நல்லதா? ம், உட்கார்ந்துக்கறேன்.” மேஜையருகில் இருந்து ஒரு நாற்காலியை இழுத்து உள்ளே அடங்கிக் கொண்டார். மறுமுனையில் அவளது மூச்சு. து¡ரத்து இணைப்பு. தொலைபேசி இரைச்சலாய்க் கூட இருக்கலாம். ”சரி” என்றார். தொண்டை உள்ளிழுத்தது. ”சொல்லு.”
”வில்லியம் என்னைவிடக் கொஞ்சம்… வயசு கூடியவர்…” என்றவள், மூச்சுத் திகைப்பாய் உணர்ந்தாள்.
சிறிது விட்டு அவர் ”அதான் விஷயமா?” என்றார்.
”ம், அது எவ்வளவுன்னு…”
”சரி சரி.”
அவள் தன்னைத் தானே து¡க்கி நிறுத்திக் கொள்ளப் போராடினாள். பெருமூச்சு. மெளனம். ”நான் நினைச்சதைவிட கஷ்டமாகப் போகுது…”
”ஏய், நீ கர்ப்பமா இருக்கிறதை விட எக்குத்தப்பா எதாவது சொல்லப் போறியா?”
அவள் பேசவில்லை.
”யம்மாவே, நீ மீதியைச் சொல்லி முடி.”
”ம், நீங்க அப்பிடிக் கேட்டதுக்கு என்ன அர்த்தம்?”
”மெலனி, மனசுக்குக் கஷ்டமான விஷயம்னு நீதானே சொன்னே?”
பதில் இல்லை.
”அடப் பெண்ணே, சொல்லும்மா.”
”நான் கல்ணாயம் கட்டிக்கப்…” நிறுத்தினாள். ”அப்பா, வில்லியம் அறுபது வயசுக்காரர். அறுபது…. அறுபத்திமூணு வயசு.”
எழுந்து நின்றுவிட்டார். வெளியே ஜன்னலுக்கப்பால் மனைவி மீண்டும் வேலையை ஆரம்பித்திருந்தாள். துலிப் செடிகளிடையே களை பறித்தவாறிருந்தாள். ஒளியூடுருவும் காலைக் கோடை. வீதி நெடுக அவரவர் வீடுகளில் வாசல் தோட்டத்தில் ஜனங்கள் புல்லும் பூவுமாய் இருந்தார்கள்.
”கேட்டுதா அப்பா? அதுனால பிர்சனை எதுவுமே இல்லை. ஏன்னா, அவர் அறுபத்திமூணு வயசு இளைஞர்தான்! வாலிபமும் ஆரோக்கியமும் உள்ளவர். ஜார்ஜ் பேர்ன்ஸ் மாதிரி…”
”ஜார்ஜ் பேர்ன்ஸ்?” என்றார். ”மெலினி, புரியல்ல, அதாரது?”
”ச், இந்த நக்கலெல்லாம் வேணாம் அப்பா.”
”இல்லல்ல, நீ என்ன சொல்லிட்டிருந்தே?” மனசு வெறுமையாய் இருந்தது.
”வில்லியமுக்கு வயசு அறுபத்திமூணுன்னு சொன்னேன்…”
”வில்லியம்? யாரு வில்லியம்?”
”நான் கட்டிக்கப் போறவர்…”
”இரு. இரு. நீ காதலர்ன்றே. நீ கட்டிக்கப் போறவர், அவர்… அவருக்கா அறுபத்திமூணு?”
”வாலிப 63.”
”63?”
”அப்பா?”
”ஆறு அடி மூணு அங்குலம், அதுமாதிரிச் சொல்லலே, இல்லியா ?”
பதில் இல்லை.
”மெலனி?”
”ம்”
”பெண்ணே, இது தமாஷ¤க்காகத்தான். இல்லியா? நீ கிண்டல் அடிக்கறே என்னை, இல்லியா?”
”அப்டி இல்லப்பா…” அவள் சொன்னாள். ”என்னால நம்பவே முடியல.”
”உன்னால நம்ப முடியல்ல…” என்றார் அவர். ”நம்பறா மாதிரி இல்லல்ல…”
”அப்பா?” என்றாள். ”நான் அப்பவே சொன்னேன்.” அறையில் இருக்கிற மற்ற நபரிடம் பேசுகிறாள் போலும். குரல் விலகிப் தேய்ந்தது.
”மெலனி, சரியா ·போனை கிட்ட வெச்சிக்கிட்டுப் பேசு…”
”கஷ்டமான விஷயம்தான்” என்றாள் அவள். ”உங்களை ரொம்ப அழுத்தறேன்… தெரியுது.”
”ச், இல்லல்ல” அவர் சொன்னார். இரத்தம் அதிர்கிறது உள்ளே. ”அதைவிட அதிகமாயிருக்கு அவஸ்தை. மெலனி, அப்பிடித்தானா? இல்லை, வானிலை அறிக்கை மாதிரி…. சொல்லி நடக்காமப் போகுதே, அதுமாதிரி வேடிக்கையா?”
”இதெல்லாம் நான் எதிர்பார்த்திருக்கணும்…”
”மன்னிச்சுக்க” என்று சுருதி இறக்கினார். ”ஆனா, ஒண்ணு உன்னைக் கேட்கணும்…”
”ச் பரவால்ல.” அவளும் சகஜபாவனை கொண்டாடினாள். ”என் காரியத்தை நான் பாத்துக்கத் தெரிஞ்சவள் அப்பா. எதும் தடாலடியா எடுத்தம் கவுத்தோம்னு நான் பண்ணல.”
அவர் இடைமறித்தார். ”அது சரி, கடவுளே, வேற யாரோ அவசரப் பட்டுட்டாங்க. இல்லியா?”
”அப்பா?”
”அவரை அப்படித்தான் கூப்பிடறியா நீ? இல்ல, நான் அப்பா. அவர்? தாத்தா!”
”இதைக் கிண்டலாக் கூட எடுத்துக்க முடியாது” என்றாள் அவள்.
”நானும் கிண்டலாச் சொல்லல, மெலனி. போகட்டும். என் கேள்வி அதல்ல.” அவர் நிறுத்தினார். ”தயவுசெஞ்சி மன்னிச்சுக்க, ஆனா எனக்குத் தெரிஞ்சாகணும்.”
”வாஸ்தவத்தில் உங்களுக்குத் தெரியன்னு எதுவுங் கிடையாது அப்பா. நான் பெரிய பெண். குடும்ப முறைக்காக நான் பேசிட்டிருக்கேன்…”
”அது எனக்குப் புரியுது. ஒரு சம்பிரதாயம், அதேதான். நல்லாவே சொன்னே. சரி, அதே மரியாதைக்கு, மெலனி, சொல்லு… உன் வயித்துக் குழந்தை… அதுக்கு அப்பா…. அவர்தானா?”
”ஆமாம்”. அவள் குரல் தாழ்ந்தது.
”கேள்வி கேட்டதுக்கு வருந்துகிறேன். ஆனா எல்லாம் கூட்டிக் கழிச்சுப் பாக்கணும். பாரு, நீ போடற குண்டையெல்லாம் ஒரே தடவையா நான் வாங்கிக்கணும், இல்லியா?”
”உங்க அவஸ்தை புரியுது, நான் முதல்லியே சொன்னேனே?”
”நீ புரிஞ்சிக்கிட்டதா நான் நினைக்கல. என் நிலைமை உனக்குப் புரியவில்லை…”
”சரி” என்றாள். ”நான் உங்களைப் புரிஞ்சிக்கவில்லை. நீங்க எப்பிடி இதை எடுத்துக்குவீங்க, அதை நான் சரியாப் புரிஞ்சிக்கிட்டேன்னு நினைக்கிறேன்.”
கொஞ்ச நேரம் மெளனம். தொலைபேசியில் து¡ர இணைப்பின் அலையிரைச்சல் மாத்திரம்.
”பெண்ணே, இது சரியா வருமா? நல்லா யோசிச்சிட்டியா?”
”கண்டிப்பா, பந்தயம் வைப்பேன் அதைப் பத்தி!” என்றாள் உற்சாகமாய்.
”நல்லது, ஆனா, கர்த்தரே…” பாலிங்கர் சொன்னார். ”அவருக்கு வயசு என்னைவிட ஜாஸ்திம்மா, குழந்தே! அவரு… அவரு என்னை விடவும் ரொம்ப வயசாளி.” பேசும்போதே அந்த வயசுக் கணக்கு மனசையே பாரமாக்கியது. ”குட்டிப்பெண்ணே, 19 வருஷம். அவருக்கு என் வயசாகும் போது, இப்பத்தைய உன் வயசைவிட எனக்கு ரெண்டே வருஷந்தான் அதிகம்.”
”அதைப் பத்தி என்ன?”
”மெலனி, இந்த டிசம்பரோட எனக்கு 45. நான் 44 வயசு வாலிபன்.”
”எனக்கு உங்க பிறந்த நாள் தெரியும் அப்பா.”
”ம், அட ஆண்டவா, அந்த மனுசர் உங்க அப்பாவை விட 19 வயசு கூடுதலானவர்!”
”எல்லாக் கணக்கும் என்ட்ட இருக்கு அப்பா. சரி, அம்மாட்டக் குடுங்க…”
”மெலனி, கொஞ்சம் என் வயசு அளவுக்காவது ஆள் நீ பார்த்திருக்க முடியாதா? கொஞ்சம் ஏப்ப சப்பையா ஒரு நாற்பது வயசில்…”
”நிறுத்துங்கப்பா” என்றாள் அவள். ”தயவு செஞ்சி… அப்பா, நான் என்ன பண்றேன், எனக்குத் தெரியும்ப்பா.”
”உன் குழந்தைக்குப் பத்து வயசுன்னும் போது அவர் வயசு என்ன தெரியுமா? தெரியுமா உனக்கு? அதைப் பத்தி கொஞ்சமாச்சும் யோசிச்சிப் பாத்தியா?”
அவள் பேசவில்லை.
அவர் பேசினார். ”எத்தனை குழந்தைங்க பெத்துக்க ஆசைப்படறே?”
”அதெல்லாம் பத்தி யோசனையில்லை. இந்த நிமிஷம் இது. மத்ததைப் பத்தி அக்கறை இல்லை எனக்கு.”
திரும்ப உட்கார்ந்தார். வேற மாதிரி சொல்ல யோசித்தார். இந்தக் கலவரம் தெரியாமல் வெளியே அவர் மனைவி. ஜன்னல் மறைப்புத் தட்டிகளின் ஊடே அவரைப் பார்த்துவிட்டுக் கையாட்டினாள். சிநேகபாவம், என்றாலும் சுமுகமாய் அது இல்லை. பாலிங்கர் திரும்ப அவரும் கையாட்டினார். ”மெலனி?” என்றார். ”வில்லியமை எங்க பார்த்தே, சொல்லலாமா? அதாவது உன்னைவிட 40 வயசு மூப்பான ஒருத்தரை. கல்லு¡ரியில் முதியோர், இளையோர் கலந்து படிக்கறாங்களா என்ன?”
”நிறுத்துங்கப்பா” என்றாள் அவள்.
”இல்ல, எனக்கு அது தெரியணும். ஒரு செய்தித்தாளில் இந்த விஷயத்தை வாசித்திருந்தால், இந்த விவரத்தைத் தெரிந்து கொள்ள ஆர்வப் பட்டிருப்பேன். பத்திரிகைக்கே ·போன் பண்ணி விசாரித்திருப்பேன்.”
”அம்மாவைக் கூப்பிடுங்க.”
”எப்பிடி அவரைச் சந்திச்சே, சொல்லு. சொல்ல மாட்டியா?”
”கர்த்தரே…” என்றாள் அவள். பேசவில்லை. பாலிங்கர் காத்திருந்தார்.
”அவர் பேராசிரியர். உங்களையும் அம்மாவையும் போல. கல்லு¡ரியில். எனக்கு இலக்கியம் எடுத்தார். இலக்கியத்தில் அவருக்குத் தெரியாத படைப்பே இல்லை. அவரைப்போல புத்திசாலி நான் பார்த்ததில்லை. அவருடைய பேச்சு அலுக்கவே அலுக்காது. உங்களுக்கு அதைப் பற்றியெல்லாம் தெரியாது.”
”இனிமே நீ வேற என்ன செய்யப் போறே, மெலனி. நிறைய நிறைய வெறும் பேச்சு…”
”நீங்க சொல்றது தவறுன்னு சொல்ல என்கிட்ட நிரூபணம்… வளர்ந்துக்கிட்டிருக்கு!”
கட்டுப்படுத்த முடியாமல் கேட்டார். ”இப்பிடிப் பேசச் சொல்லிக் குடுத்தாராக்கும்?”
”நான் ·போனை வைக்கப் போறேன்…”
”நானும் ஒண்ணு சொல்லணும்னேன்… நீ கேட்டுக்கறேன்னு சத்தியம் வேற பண்ணினியா இல்லியா?”
”ம்” என்றாள் பளிச்சென்று. ”கேட்டுட்டிருக்கேன்…”
தரையில் கட்டைவிரலால் தாளம் போடுகிறாளோ? விளக்கம் கோரக் காத்திருக்கிறாள். அந்தப் பரபரப்பு. யோசித்தார் அவர். ”அவர் பேராசிரியர், இல்லியா?”
”சொல்ல வந்த உங்க விஷயம் அது இல்லை… இல்லே?”
”ஆனா நீ, அவர் பேராசிரியர்னு சொன்னே.”
”ஆமாம், சொன்னேன்.”
”என்னைக் கிறுக்கன்னு நினைக்காதே மெலனி. எனக்கு விஷயம் பழகணும். அவர் கெளரவப் பேராசிரியர்தானே?”
”அது மதிப்புக்குரியதுன்னா, ஆமாம்! ஆனா நீங்க…”
”அதில்லை மெலனி. கெளரவப் பேராசிரியர்னா பதவி ஓய்வு பெற்றவர். நீ கல்லு¡ரிக்குத்தானே போனே?”
அவளிடம் பதில் இல்லை.
”மன்னிச்சுக்கோ, ஆனா கடவுளே, நியாயமான கேள்வி அது.”
”புண்ணாக்கு! அல்பத்தனமான கேள்வி.” கண்ணீரை அடக்கப் பிரயத்தனப் படுகிறாள், என்று சொல்ல முடிந்தது
”இப்ப அங்க உங்கூட அவர் இருக்காரா?”
”ம்” என்றபோது குரல் உடைந்தது.
”அட கடவுளே.”
”அப்பா ஏன் இப்பிடிப் பேசறீங்க?”
”நாம தனியா இதைப் பேசியிருக்கலாம்னு நினைக்கறியா? வேற ·போன்ல அவரும் கூட கேட்டுட்டிருக்காரா?”
”இல்ல”
”நல்ல வேளை. ஆண்டவருக்கு நன்றி.”
”நான் வைக்கப் போறேன்.”
”இல்ல வெச்சிறாதே. நாம அமைதியா இதைப் பேசலாம். நாம பேச வேண்டியதிருக்கு.”
அவள் செருமி, மூக்குச் சிந்தினாள். அதுவரை ·போனை யாரோ வாங்கிக் கொண்டார்கள். ஏதோ கரகர சத்தம். அவள் திரும்ப வாங்கிக் கொண்டாள். ”ம்” என்றாள்.
”அவர் உன்கூட அங்க இன்னும் இருக்காரா?”
”ஆமா” என்ற குரலில் விரைப்பு.
”எங்க இருக்கார்?”
”ஐயய்ய”
”மன்னிக்கணும். எனக்கு தெரியணும். அவர் உட்கார்ந்திருக்காரா?”
”என் பக்கத்தில் அவர் இருக்க நான் நினைக்கிறேன் அப்பா. நாங்க ரெண்டு பேருமே இப்ப சேர்ந்து இருக்கணும்னு நினைக்கிறோம்.”
”அவர் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறேன்றார்…”
”ஆமா” என்றாள் பொறுமையிழந்து.
”நான் அவரோட பேச முடியுமா?”
அவள் பேசியது அவருக்குக் கேட்கவில்லை. சில விநாடிகள் அவர்களுக்குள் கிசுகிசுப்பாகப் பேசிக் கொண்டார்கள் போல. அப்புறம் அவள் பேசினாள். ”சத்தியமா அவரை நீங்க நையாண்டி பண்ணக் கூடாது.”
”மெலனி, அப்டின்னு அவர் சத்தியம் வாங்கிக்கச் சொல்றாரா?”
”ச்… உறுதியாச் சொல்லுங்க” என்றாள். ”இல்லாட்டி ·போனை வெச்சிடறேன்.”
”சரி. சத்தியம். சத்தியமா நான் அவரை எடுத்தெறிஞ்சி பேச மாட்டேன்…”
சிறு சப்தங்கள். ஓர் ஆணின் குரல். ”ஹலோ சார்?” சாதாரணக் குரல். உள்ளொடுங்கிய, தொலைபேசியில் கேட்காத குரல். புகைப்பாரோ? ”எனக்குப் புரியுது… இந்த சமயம்…”
பாலிங்கர் இடைமறித்தார். ”புகைப்பீர்களா?”
”இல்லையே.”
”சரி, சொல்லுங்க.”
”ம். உங்க கஷ்டம் அதை நான் புரிஞ்சிக்கறேன்…”
”மெலனி, அவளும் புரிஞ்சிக்கிட்டிருக்கிறதாச் சொல்றா…” பாலிங்கர் சொன்னார். ”அதாவது, நீங்க அப்பிடி நினைச்சிக்கறீங்க…”
”மெலனியை உங்களோட பேசச் சொன்னதே நான்தான் சார்.”
”அப்பிடின்னா அது நல்ல விஷயந்தான். இதை நான் சகஜப்படுத்திக்க நாளாவும்னு தெரிஞ்சி, அதுனாலதான்… நீங்க, மெலனி கர்ப்பமாறவரை… காத்திருந்தீங்களாக்கும்?”
மறுமுனையில் அவர் மெலிதாய்ப் பெருமூச்சு.
”ஆக நீங்க இலக்கியத்தில் பேராசிரியர்…”
”ஆமா சார்.”
”என்னை சார் போடாதீங்க. ஏன்னா, நான் ஒரு பொடியன் இங்க…”
”குத்தல்லாம் வேணாம் சார்.”
”ஓ அப்டில்லாம் இல்ல. தானா இந்தச் சூழல்ல வாய்ல வந்தது. உண்மைல… மிஸ்டர். கூம்ஸ், சரியா?”
”சரி சார்”
”கூம்ஸ். சீப்புக்கு வருமே!…”
மறுமுனையில் பதில் இல்லை.
”இதெல்லாம் எனக்கு ஒத்துக்க எத்தனை நாளாவும்னு நீங்க நினைக்கறீங்க? எனக்குப் பழகறதுக்குள்ள உங்களுக்கு எழுபது ஆரம்பிச்சிருமா? உங்களைவிட இருபத்தியோரு வயசு சின்னவ என் பெண்டாட்டி. அவளுக்குப் பழக எத்தனைகாலம் ஆகும்னு நினைக்கறீங்க?”
”… …”
”அதும் என் சம்சாரத்துக்கு, நீங்க மகா வயசுக்காரர்… கடவுளே!”
”… …”
”உங்க முதல் பேர்… திரும்பச் சொல்லுங்க…”
மறுமுனையில் அவர் பெருமூச்சுடன், ”ரிங் ஆ·ப் பண்ணிறலாம்னு தோணுது.”
”ரிங் ஆ·ப்னீங்கதானே? ரிங் ஆ·ப். நீங்க எந்தப் பக்கத்து, எந்த நாட்டு ஆளு?
”அமெரிக்காதான். கொரியா சண்டையில் இருந்தேன்.”
”’முதலாம்’ உலகப் போரிலா!”
”… …”
”எத்தனை முறை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?” பாலிங்கர் கேட்டார்.
”நல்ல கேள்வி. நீங்கள் இப்படிக் கேட்டதில் மகிழ்ச்…”
”ஆனால் நான் வகுப்பறைல இல்லை. எத்தனைன்னு சொன்னீங்க?”
”என்னைப் பேச விட்டீங்கன்னா, சொல்லலாம்.”
”… …”
”ரெண்டு சார். ரெண்டு முறை நான் மணம் முடித்தவன்.”
”விவாகரத்தா?”
”ரெண்டு மனைவியுமே இறந்துட்டாங்க.”
”ஆகா, புரியுது. அந்த மாதிரி உங்களுக்கு எதும் ஆயிறாதுன்னு நீங்க உறுதி பண்ணிக்க முயற்சிக்கறீங்க!…”
”இதெல்லாம் நல்லால்ல. நான்… ·போனை…” அவர் தடுமாறி, பேச்சை நிறுத்தி விட்டார்.
”எந்த மாதிரி இதுல்லாம் ஆவணும்ன்றீங்க?” என்று அழுத்தமாய்க் கேட்டார் பாலிங்கர்.
”வதைக்கப்டாது. அதையில்ல நான் எதிர்பார்த்ததுன்னு சொல்றேன்.”
”என் பெண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை நானே அமைச்சுக் குடுக்கு முன்னால அவளே தேடிக்கிட்டதை நான் சந்தோஷமா எடுத்துக்குவேன்னு நினைச்சீங்களா?”
”… …”
”உங்களுக்கு வேற குழந்தைகள் இருக்கா?”
”ம். மூணு வாச்சது.” அந்தக் குரலில் முரட்டுத்தனமான இறுக்கம் வந்திருந்தது.
”அவங்கல்லாம் என்னென்ன வயசு, கேட்கலாமா?”
காத்திருந்தார். அவர் மனைவி உள்ளே வந்தாள். கண்ணாடிப் பூசாடியில் தண்ணீரை ஊற்றி, கையில் கொண்டு வந்திருந்த பூக்களை அடுக்கினாள். அவருக்கு முதுகு காட்டியபடி நின்றிருந்தாள். மறுமுனையில் பேச்சே இல்லை. ”மன்னிக்கணும்” என்றார் பாலிங்கர். ”என் மனைவி இப்பதான் உள்ள நுழையறா. நீங்க பேசினதைக் கேட்கல நான். உங்களுடைய எந்தப் பெண்ணுக்காவது, என் மகள் வயசு காணுமா?”
”நான் சொன்னேன். என் கடைசிப் பையனுக்கு 38.”
”உங்களுக்குத் தெரியுது. அவன் என் மகளைக் கல்யாணம் கட்ட ஆசைப்பட்டா, நான் திகைப்பேன்… அந்தளவு வயசு வித்தியாசம்.” பாலிங்கரின் மனைவி கையைத் தாளில் துடைத்தபடி அவரை நோக்கி விஷயம் விளங்காத கவலையுடன் வந்தாள்.
”நான் முன்னமே சொல்ட்டேன், திரு பாலிங்கர். உங்க மனசு எனக்குப் புரியுது. விஷயம் என்னன்னா, இங்க ஒரு பெண் கர்ப்பமா இருக்கா. நாம ரெண்டு பேரும் அவளை நேசிக்கிறோம்.”
”இல்ல” என்றார் பாலிங்கர். ”அப்பிடியில்லை விஷயம். விஷயம் என்னன்னா, நீங்க வேற யாருமில்லை, ஒரு மோசமான, கற்பழிக்கிற காமகொடூரன். Statutory rapist. அதான் விஷயம்…” அவர் மனைவி தோளைப் பற்றிக் குலுக்கினாள். அவர் அவளைப் பார்த்தார். தலையைக் குலுக்கிக் கொண்டார்.
”என்னாச்சி?” அவள் கிசுகிசுத்தாள். ”மெலனிக்கு ஒண்ணில்லியே?”
”அப்டி திட்டிட்டா அத்தோட சமாச்சாரம் முடிஞ்சிட்டதா என்ன?” மறுமுனையில் குரல்.
”ஒரு நிமிஷம்” பாலிங்கர் சொன்னார். ”ஒரு கேள்வி. பொல்லாத உங்க பல்கலைக்கழகத்தில் என்னா அது, கொள்கை, வர்ற பிள்ளைங்களைத் துணிய அவுத்துப் பாக்கறதுன்னு?”
”அட கடவுளே!” அவர் மனைவியின் குரல். மறுமுனையில் அந்தக் குரல் திக்கித் திணறியது.
”சொல்லுங்க!”
”நாங்க செயல்பட்டப்ப மெலனி என்ட்ட படிக்கல…”
”ஓ அப்டிதான் சொல்லிக்குவீங்களா? நாங்க செயல்பட்டோம்!…”
”நான் மெலனிட்டப் பேசறேன்…” என்றாள் அவர் மனைவி.
”இங்க பார்…” என்றார் அவளிடம். ”சித்த சும்மா இரு.”
மெலனி ·போனை வாங்கிக் கொண்டிருந்தாள். ”அப்பா? அப்பா?”
”நான் இங்கதான் இருக்கேன்…” என்றார் அவர். ·போனைப் பிடுங்க முயன்ற மனைவியைத் தவிர்த்தபடியே.
”அப்பா, நாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறம். இதுல நீங்க செய்ய எதுவுமில்லை. புரிஞ்சிக்கிட்டீங்களா?”
”மெலனி…” அவர் சொன்னார். தானறியாமல் கோபம் எகிறியிருந்தது. ”கர்த்தராணை, அடியே உன் காதலருக்கு என்வயசு நீ பிறந்தப்ப… என்ன கருமாந்தரம்டி இது, குழந்தே. நீ சரியா இருக்கியா? பைத்தியம் கிய்த்தியம் பிடிச்சிட்டதா உனக்கு?”
அவரைத் தள்ளிவிட்டு அவர் மனைவி ·போனைப் பறிக்க வந்தாள். அவர் கொடுத்து விட்டார். எழுந்து நின்று கொண்டிருந்தார்.
”மெலனி” அவள் பேசினாள். ”தங்கமே, பாரு குட்டி…”
”வெச்சிரு…” பாலிங்கர் சொன்னார். ”கடவுளே. வை. ·போனை வெச்சிரு…”
”எய்யா நீங்க அந்த அறைக்குப் போங்க. நான் பேசிக்கறேன்…” என்றாள் மனைவி.
”அவகிட்ட சொல்லு. எனக்கே நிறைய மனுசாளைத் தெரியும். நாற்பது வயசில் நல்லாத்மாக்கள். எவனை வேணாலும் கட்டிக்கட்டும். நாற்பது வயசுக் குழந்தைகள். தொட்டிலாத்மாக்கள்… யாரை வேணாப் பண்ணிக்கட்டும். சொல்லு அவகிட்ட.”
”ஜாக். நிறுத்தறீங்களா?” தொலைபேசியை நெஞ்சில் அழுத்திக் கொண்டாள். ”நம்ம விவகாரம் பத்தி எதும் அவகிட்ட பேசினீங்களா?”
சிறிது கழித்து, ”இல்ல” என்றார்.
அவருக்கு மறுபுறம் திரும்பிக் கொண்டாள். ”மெலனி, என்னம்மா இதெல்லாம்? என்ன விஷயம் சொல்லு.”
அவளை விட்டுவிட்டு அவர் வெளியே வந்தார். கூடம். முற்றம். திரும்ப சமையலறையைச் சுற்றி வந்தார். உடம்பு படபடத்து சோர்ந்து நடுங்கிக் கொண்டிருந்தது. மேரி நின்ற நிலையில் தலையை அவ்வப்போது ஆட்டிக் கொண்டு, ரெண்டு கையிலுமாகத் தொலைபேசியை அழுத்தி¢க் கொண்டு, தோளை குறுக்கிக் கொண்டிருந்தாள், குளிரில் நடந்தாப் போல.
”மேரி?” கூப்பிட்டார். பதிலில்லை. படுக்கையறைக்குள் போனார். கதவைச் சாத்திக் கொண்டார். ஜன்னல் வழியே பொன்வண்ணக் கதிர்கள். அறையில் நீள நிழல்களின் ஆக்கிரமிப்பு. திடீரென்று அவர் தான் தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டிருப்பதை கவனித்தார். மூச்சை ஆழ இழுத்து, மனசை அடக்க முயன்றார். அடுத்த அறையில் இருந்து அவர் மனைவியின் குரல். ”ம்ம்… நான் ஏத்துக்கறேன். ஆனா என்னால…”
வார்த்தை தேய்ந்தது. காத்திருந்தார். சில நிமிடங்கள் கழித்து அவள் அந்த அறைக்கதவைத் தட்டிவிட்டு, பின் உள் நுழைந்து பார்த்தாள்.
”என்னாச்சி?”
”அவங்க தீர்மானமா இருக்காங்க.” வாசல் நிலைப்படியில் நின்றிருந்தாள் அவள்.
”இங்க வா.”
அவர் பக்கத்தில் வந்து சாவகாசமாய் உட்கார்ந்தாள். சற்று நகர்ந்து அவள் உட்கார அவர் இடம் தந்தார். அவளை லேசாய்க் கட்டிக் கொண்டார். அசட்டுத்தனமாய் உணர்ந்து உடனே விலக்கிக் கொண்டார். ரெண்டு பேராலுமே எதுவும் பேச முடியவில்லை. அவர்கள் தங்களைப் பற்றி பேசித் தீர்த்தவை எல்லாம் இடையே பாறைபோல் நின்றன. மனைவி. மண்ணும் மலருமான தோட்டத்து வாடை.
”கடவுளே” என்றாள் அவள். ”எனக்கு யோசனையே அத்துப் போச்சு.”
”நாம ஒரு குழந்தை பெத்துக்குவம். மெலனியின் பாப்பாவுக்கு ஒரு அத்தையோ சித்தப்பனோ?”
மேரி ஒரு உயிரற்ற சிரிப்பு சிரித்துவிட்டு, திரும்ப அடங்கி விட்டாள்.
”நம்மப் பத்தி அவகிட்டப் பேசினியா?” என்றார் அவர்.
”ச்” என்றாள். ”சந்தர்ப்பம் அமையல. என்னால சொல்ல முடியுமா, அதே தெரியல.”
”அவளுக்கு இது ஒரு விஷயமாவே இருக்குமோ இருக்காதோ?”
”இல்லல்ல. அப்டி எடுத்துக்கிற முடியாது.”
படுக்கையறைத் தொலைபேசி ஒலி அவர்களைப் பதறடித்தது. அவர் தொலைபேசியை எடுத்து அவளுக்குப் பிடித்தார். ”ஹலோ?” என்றவள், ”இருக்காரு…” என்று அவரிடம் தந்தாள். ”ஹலோ” என்றார் அவர்.
மெலனியின் கண்ணீர்க் குரலில் கோபம். ”என்னவோ அவரைச் சொல்லியிருக்கீங்க. சொல்லுங்க. என்ன அது?” அழுகை. குரலைச் செருமிக் கொண்டாள். ”என்ன சொன்னீங்க?”
”அதெல்லாம் ஒண்ணில்ல கண்ணு. எனக்கு இப்ப ஞாபகம் கூட இல்ல.”
”ஒண்ணு தெரிஞ்சுக்கங்கப்பா. உங்களை விட நான் நல்லாதான் இருப்பேன் அப்பா, அது எத்தனை கஷ்டகாலமா இருந்தாலும்! நான் சமாளிச்சுக்குவேன் அதிலேயே.”
”ஆமா” என்றார். ”உன்னால முடியும்.”
”வெச்சிர்றேன். அப்பறமாச் சொல்றேன் வரோமா இல்லையான்னு. அம்மா இல்லைன்னா, வர்றாப்லகூட இருந்திருக்காது.”
”அப்பறம் பேசலாம்” என்றார் அவர். ”கண்ணே, நீங்க ரெண்டு பேருமே எனக்கு இன்னும் அவகாசம் குடுக்கணும்.”
”எங்க ரெண்டுபேரைப் பொறுத்தவரை இனிமே யோசிக்க எதுவும் கிடையாது.”
”அப்டில்லாம் இல்லம்மா. கல்யாணம்ன்றது…” வார்த்தை சிக்கியது. மூச்சு வாங்கிக் கொண்டார். ”எல்லாக் கல்யாணத்துலயும் கூடிக் கலந்து பேச நாலு விஷயம் இருக்கத்தான் இருக்கு.”
”எனக்கு என்ன தெரியும்ன்றது எனக்கு நல்லாவே தெரியும்.”
”ம் ம்” என்றார் பாலிங்கர். ” உன் வயசில் அப்படித் தோணும், சமத்தே.”
”விடைபெறுவோம்.” அவள் சொன்னாள். ”மேல எதுவும் இல்லை.”
”புரியுது” பாலிங்கர் சொன்னார். தொலைபேசி இணைப்பு துண்டுபட்டபின், மடியில் அந்த ஒலிக்கருவியை வைத்திருந்தார் கொஞ்ச நேரம். அருகில் மேரி. அவளிடம் அசைவேயில்லை.
”ம்” என்றார். ”என்னாலயும் சொல்ல முடியல.” தொலைபேசியை பீடத்தில் வைத்தார். ”ஹா, அறுபத்திமூணு வயசில் எனக்கு மாப்ளை!”
”இந்த மாதிரி நடந்திருக்கு” – அவர் மேல் கைபோட்டவள், எடுத்துக் கொண்டாள். ”எனக்கு நடுங்கிட்டது. ஆனா அதான் வேணும்ன்றா அவ.”
”கேடுகாலம். மேரி, உனக்குத் தெரியுதில்ல, அந்தத் தடியன்… அவளோட வாத்தியார்!”
”என்ன பேச்சு இது? நம்ம பொண்ணு அது. நம்ம பொண்ணைப் பத்தியாக்கும் பேசறீங்க. அவ, செய்யற காரியத்தை, யோசனை பண்ணிச் செய்யறான்னு கூட உங்களால அவளை மதிக்க முடியல.”
இரண்டு பேருமே பேசவில்லை.
”யார் கண்டா?” என்றாள் அவர் மனைவி.. ” கொஞ்சநாள் அவங்க சந்தோஷமா இருக்கலாம்.” அவள் குரலில் ஒரு சோகம். மனசில் நினைவுகளின் அலைபுரட்டல் என அறிந்தார். அவருக்கும் மேரியுடனான எளிமையான ஆரம்பகால உல்லாச கணங்கள் நினைவு வந்தது. பழைய வீடு. வேறு அறைகள். மெலனி. பாப்பாவின் சவாரிவண்டி வராண்டா. அம்மாவின் துணிகள் சுருட்டிய உடல். இத்தனை வருஷத்தில் அந்தக் காட்சி மாத்திரம் சட்டென்று ஏன் கவனம் பெற வேண்டும். மூச்சு தவிர வேறில்லாத அமைதி. அவரைச் சுற்றி ஒரு மாய வியூகம். மேல்தோலில் சுருக்கம் ஓடி உடனே அடங்கி விட்டது. நெஞ்சில் குப்பென ஒரு கனம். மூச்சடைப்பு. மனைவியைப் பார்த்தார். திரும்பிக் கொண்டிருந்தாள். தன் மடியின் துணியை அவள் நீவி விட்டபடி யிருந்தாள். பிறகு எழுந்து கொண்டாள். ”ம்” என்றாள். ”வேலை கிடக்கு” என வெளியே போனாள்.
”மேரி?” என மெல்ல அழைத்தார். அவள் கண்டுகொள்ளவில்லை. கதவைத் திறந்து கூடத்துக்கு வந்து, சமையலுள்ளுக்குப் போனாள். குனிந்து உடலை நீட்டி படுக்கையருகே விளக்கைப் போட்டு படுத்துக் கொண்டார். அமைதி. சுவர்ச் சித்திரங்கள். நிழல் உருவங்கள் அவரிடம் உரக்கப் பேச, அவர் கவனத்தைப் பெற முயன்றன. கண்ணை மூடிக் கொண்டபோது சமையலறையில் பாத்திரம் உருட்டும் சலனங்கள். பூவடுக்குதல். தண்ணீர்க் குழாய்ச் சத்தம். மேரி, என மென்மையாய்க் கூப்பிட்டார். அவள் வரை எட்டியிராது. அவள் திரும்பிப் பார்த்திருந்தால் சொல்லவும் அவரிடம் எதுவும் கிடையாது.
>>>
Richard Bausch
Aren’t You happy for me?
மெம்·பிஸ் பல்கலைக்கழகத்தில் கெளரவப் பேராசிரியர் இவர். கதைகளில் உரையாடல்களூடே அபாரமான அழுத்தம் தருகிறார். அமெரிக்க வாழ்வை இப்படி தேங்காய் விடல் உடைப்பு உடைத்த கதை அபூர்வமாயிருக்கிறது. கதையில் என்ன யதார்த்தம் வைத்தாலும் அது – நமக்கு அசாத்திய த்வனியைத்தான் தர முடியும்.
அறுபத்தி மூணு வயசு ஆளின் பெயரை ‘கோம்ஸ்’ என்று சீப்பு போல உச்சரிக்கச் சொன்னதை நுணுக்கமாய் எள்ளியிருக்கிறார். பெண்ணிடம் பாலிங்கர் செய்தித்தாளில் இதை வாசித்திருந்தால், விவரம் கேட்டு நாளிதழுக்கே ·போனில் பேசி விசாரித்திருப்பேன், என்கிறதாக ஒரு கட்டம். பெண் வேலைபார்க்கிற நாளிதழிலேயே செய்தி வருவதாக ஒரு கற்பனை என்னில் எழுந்தது!
முழுதும் உரையாடல்களில் கதை அமைகிறதில் வாழ்க்கைச் சூழல் மண்ணீரம் போல ஒட்ட முடியாமல் போகிறது. வருத்தம் கிருத்தம் எதுவும் கிடையாது. ஒரு சந்தி சிரிச்ச நிலையை சிரிச்சிக்கிட்டே சொல்லிடலாம். கொரியச் சண்டையில் பங்கேற்ற அமெரிக்கர்கள் கொரியப்பெண்களைச் சூறையாடியதை எதிர்ப்புக் குரலில் பதிவு செய்ததை கவனித்தேன்.
பாலிங்கரின் மனைவி மேரி, இன்னொரு கல்யாணம் முடிக்கக் கூட சித்தப் பட்டிருக்கலாம். இளமையும் கலகலப்பும் அவள் மீளப் பெற்று வருகிறாப் போல பாலிங்கர் கவனிக்கிறார். ஓ அமெரிக்கா!
- புலம் பெயரும் மக்களைப்பற்றின சில படங்கள்
- பாரத தேசத்துக்குப் படைப்பலம் அளித்த விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம் -7
- ஒரு கணம்
- மெய் எழுத்து ஏடு ஜூலை முதல்
- மீனாட்சிபுரம் முஸ்லிம்கள் பற்றி திரு.வெங்கட்சுவாமிநாதன் சமூகத்திற்கு…
- PhD மாணவர்களின் நிலை
- மும் மொழி மின் வலை இதழ்
- அற்றைத்திங்கள் நிகழ்ச்சி
- சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 2-ஆம் தேசிய கருத்தரங்க அறிவிப்பு
- கடிதம் (ஆங்கிலம்)
- அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை கவிதைத் திருவிழா
- பேராசிரியர் சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு
- அர்த்தமுள்ள அறிமுகங்கள்
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 19
- நகுலனின் நினைவில்
- இலை போட்டாச்சு! – 30 அடை
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 11
- காதல் நாற்பது (22) கொடுமை இழைக்கும் இவ்வுலகம் !
- பயம்
- பெரியபுராணம்- 132
- உம்மா
- தந்தை மகற்கு ஆற்றும் நன்றி
- நிலமகளின் குருதி! (தொடர்ச்சி) – 2
- ஊதா நிறச் சட்டையில்…
- நாற்காலிக்குப் பின்னால்
- ஆறும் ஒன்பதும்
- தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் பதினொன்று: இளங்கோ இலங்கா ஆன காதை!
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்: 8 காட்சி: 2 பாகம்: 2)
- சுளுக்கெடுப்பவர்
- கால நதிக்கரையில் .. – 7
- விவாகங்கள் விகாரங்கள் விவாதங்கள்