விலை மகள்

This entry is part [part not set] of 27 in the series 20090507_Issue

விசா



அவர்கள் சாலையில் இறங்கிய போது மணி இரவு பதினொன்றாகியிருந்தது.
மேன்ஷனில் பல அறைகளில் சனிக்கிழமை இரவு கொண்டாட்டங்கள் தொடங்கியிருந்தன. சாலையில் மக்கள் வெள்ளம் ஏறக்குறைய வடிந்திருந்தது.
சனி இரவு. ரங்கு முதல் முறையாக ஒரு பெண்ணுடன் சல்லாபிக்கப்போகும் இரவு. அவள் பெயர் புவனேஷ்வரி.

சிட்டி இதில் எக்ஸ்பர்ட். அவளின் நிரந்தர வாடிக்கையாளன். சிட்டி ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் அவள் வீட்டுக்கு போய்விடுவான். வந்து இரவு அனுபவங்களை ஒரு திரைக்கதை போல் சொல்வான். ரங்குவுக்கு பிளாட்பாரம் புத்தகங்கள் வாங்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை.
அவன் சொன்ன இன்ப கதைகளில் சூடாகி மயங்கி போய் இன்று அரைகுறை தைரியத்தோடும் ஏராளமான உற்சாகத்தோடும் புறப்பட்டான்.

சிட்டி இதுவரை சொன்ன அனுபவங்களை சேகரித்து புவனேஷ்வரி என்ற பெயருக்கு ஒரு அனந்தமான உருவத்தை ரங்கு கற்பனை செய்து வைத்திருந்தான்.

ரங்குவுக்கு இருபது வயது. குடும்பம் திருநின்றவூரில் வசித்து வந்தது.. தினமும் போய் வர கஷ்டம் என்பதால் அவன் வேலை செய்யும் பாத்திர கடைக்கு அருகிலேயே ஒரு மேன்ஷனில் சிட்டி வாசு இவன் என மூன்று பேரும் ஒரு அறையில் தங்கியிருந்தார்கள். வாசு சுத்த சைவம். சாமியார் ஆகப்போகிறவன். நிஜ சாமியார். ரங்குவின் அப்பா பொறுப்பில்லாமல் குடும்பத்தின் மீது அக்கரையில்லாமல் உல்லாசியாய் திரிந்தார். அதுவே ரங்குவை சிறு வயதில் வேலைக்குத் தள்ளியது. அவன் வருமானத்தை குடும்பம் எதிர்பார்க்கிறது என்பதில் ஒரு சிறிய கர்வமும் ரங்குவுக்கு உண்டு. அதுவே இது போன்ற பாவ காரியங்களை அவனுக்கு .ஞாயப்படுத்தியும் காட்டியது.

சிட்டி ஏதோ புண்ணிய ஸ்தலத்துக்கு போவாது போல் ஆழ்ந்த யோசனையில் இருந்தான். பின்னால் ரங்கு. அவனுக்கு இணையான வேகத்தில் கிட்டத்தட்ட ஓட வேண்டியிருந்தது.

முதல் முறையாக செய்யப்போகும் அந்த காரியத்தின் இன்ப கிளர்ச்சியும் திகிலும் எதிர்பார்ப்பும் கற்பனைகளும் பரபரப்பும் அவனை பறக்கவேண்டும் போல் சொல்லியது.

“ஏய்…சிட்டி முன்னாடியே நானும் வரேன்னு சொல்லிட்டியாடா”

“அதெல்லாம் ஒண்ணும் சொல்ல வேண்டாம். நான் சொன்னா கேட்டுக்குவா.”

“அப்புறம் அங்க போனப்புறம் இல்லேன்னுட போறா.”

ரங்கு உள்ளங்கை வியர்வையை சட்டையில் துடைத்தான். சிறிது நேரம் கழித்து மீண்டும்.

“டேய் எனக்கு பயமா இருக்குடா. அங்க வந்து நான் ஏதும் பண்ணுவேன்னு எனக்கு நம்பிக்கையில்லை.” என்றான்.

“முதல் வாட்டி அப்படிதான் இருக்கும். நான் பஸ்ட் டைம் ஒண்ணுமே பண்ணாம ஐநூறு ரூபா கொடுத்துட்டு வந்தேன் தெரியுமா?”

இப்போது சிட்டி ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டான். ரங்கு அதை வாங்கி ஒரு இழு இழுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.

“டேய் புவனேஷ்வரின்னு கூப்பிடலாமா….?”
“புண்ணாக்குன்னு கூட கூப்பிடு வருவா”
“வாசு சொல்வான் இந்த மாதிரி பொம்புளைங்க எல்லாம் அரக்கி மாதிரி இருப்பாளுங்க கெட்ட வார்த்தை எல்லாம் பேசுவாங்கன்னு. அப்படி எல்லாம் பண்ணா நான் பய்ந்திடுவேன். சில பொம்புளைங்க தண்ணி அடிக்குமாமே?”

ரங்குவின் பேச்சு அவனுக்கு எரிச்சலாய் இருந்தது.

“த்தா….அமைதியா வரமாட்ட. அவ ரொம்ப ஹோம்லி. கல்யாணம் ஆகி குழந்த எல்லாம் இருக்கு.”

“குழந்தை எல்லாம் வச்சுகிட்டா இத பண்றா. எனக்கு என்னமோ உறுத்துதுடா.”

“மூட கெடுக்காத. பேசாம வா.”

அவர்கள் இப்போது ரயில்வே டிராக்கை கடந்து வந்துகொண்டிருந்தார்கள். பிளாட்பாரத்தில் பிச்சைகாரர்களின் டிரான்சிஸ்டரில் பழைய பாடல் ஒலித்தது.

“ஒரு நிமிஷம் இருடா பிஸ் அடிக்கணும்.”
“எத்தன வாட்டிடா போவ.”
“பயத்துல தானா வருதுடா.”

“அவ பாவம். புருஷன் கை குழந்தையோட விட்டுட்டு போயிட்டான். ரெகுளர் கிடையாது. எப்பவாவது ரொம்ப தெரிஞ்சவங்க கிட்ட தான். அக்கம் பக்கத்துல யாருக்கும் தெரியாம இத பண்றது…….அவ டெயிலரிங் எம்பிராயிடரிங் எல்லாம் பண்ணுவா….நல்லா சமைப்பா தெரியுமா.? ரொம்ப சாது” என்று அவளுக்கு ஒரு பாராட்டு ஓலையே வாசித்தான் சிட்டி. ரங்கு முடித்துவிட்டு ஜிப்பை மேலே இழுத்தான்.

ரங்குவுக்கு பல சந்தேகங்கள் எழுந்தன. முதல் முறை என்பதன் திகில். எக்கச்சக்கமாக குழம்பினான். நிதானமில்லாமல் அவன் பின்னால் தொடர்ந்து நடந்தான்.

ரயில்வே டிராக் ஓரமாய் அந்த சாலை முழுக்க சாக்கடை தாராளமாய் ஓடியது. அதை தாண்டி கடப்பது பெரிய சவாலாக இருந்தது. மூத்திர வாடை நிரந்தரமாய் வீசியது. பல குடிசைகளின் மேல் கட்சி கொடியும் டிஷ் ஆன்டனாவும் காவலுக்கு இருந்தன. தெருவில் மனிதர்களை விட நாய்கள் அதிகமாய் தென்பட்டன.

“இந்த ஏரியா ரொம்ப மோசம் அலர்ட்டா வா. சிக்கினா டவுசர அவுத்து விட்டுடுவானுங்க.”

சட்டென்று இடது புறம் திரும்பி அந்த சேரிக்குள் நுழைந்தான்.

ரங்குவுக்கு இப்போது உற்சாகம் பெருகியது. ஒரு பெருத்த எதிர்பார்ப்பு அவன் கண்களில் ஆடியது. புவனேஷ்வரி. ஒரு முறை பெயரை உச்சரித்து பார்த்தான்.

அந்த குப்பத்தின் இருட்டுக்கு வெளியே பளிச்சென்று ஒரு தெரு . தெருவின் தொடக்கத்தில் ஒரு ஓட்டு வீடு. பிறகு பெரிய மைதானம் சிறிய வீடுகள் என அந்த தெரு கேட்பாரற்று வெறிச்சோடி கிடந்தது. சிட்டி நேராக அந்த ஓட்டு வீட்டின் வாசலில் போய் நின்றான். ரங்குவுக்கு இப்போது இதயம் படபடப்பது வெளியே கேட்டது.

சிகரெட்டை ஓங்கி இரு இழு இழுத்து புகையை வெளியேற்றினான். ரங்குவை ஒரு முறை பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்தான். பிறகு மெதுவாக கதவை அணுகி ரகசியமாய் தட்டினான். மூன்று முறை தட்டவேண்டியிருந்தது. பிறகு தான் உள்ளே இருந்து வளையல் சத்தத்தோடு இன்னொரு ரகசியம். யாரு. நான் தான் சிட்டி. கதவு அளவோடு திறந்துகொள்ள இருவரும் அவசர அவசரமாக உள்ளே நுழைந்தார்கள். சிட்டி உடனே பழக்கத்தில் கதவை தாழ் போட்டான்.

ரங்கு முதல் முறையாக புவனேஷ்வரியை பார்த்தான். மிதமான வெளிச்சத்தில் அவன் கற்பனை செய்து வைத்திருந்த அந்த அழகிக்கும் இவளுக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இருக்கவில்லை. சேலை கவனிப்பில்லாமல் விடப்பட்டிருந்தது. நெற்றியில் பொட்டு இடம் மாறி இருந்தது. கூந்தல் அசட்டையாய் கலைந்திருந்தது. தாரள மயத்தால் அவளின் அழகுகள் அடிக்கோடிட்டு காட்டப்பட்டிருந்தன.ரங்கு இரத்தமெல்லாம் ஒரே இடத்துக்கு பாய்வதாய் உணர்ந்தான். அவளை ஒரு முறை முழுதாய் பார்த்து உதட்டை கடித்துக்கொண்டான். பெருமூச்சு விட்டான். அவள் ரங்குவை முறைத்தபடி சிட்டியை பார்த்து கேட்டாள்.

“யாரிவன்?”
“என் பிரண்டு தான். உன்ன பாக்கணுமுண்ணான் கூட்டியாந்தேன்.”
“இண்ணைக்கு வேண்டாம் சிட்டி நாளைக்கு வா.”

“ஏன் உடம்புக்கு எதுனாச்சும். எனக்கு பரவாயில்லை நான் நாளைக்கு கூட வரேன். இவனுக்கு மட்டும்….. ரொம்ப நம்பி வந்துட்டான்” என்றபடி சிட்டி ரங்குவின் தோளை உரசினான்.
அவள் மறுத்தாள். “வேண்டாம் நீ போயிட்டு நாளைக்கு வா ஒரு பிரச்சன என்றாள்.”

“பிரச்சனையா என்ன ஆச்சு. அக்கம் பக்கத்துல தெரிஞ்சு ……..?”

“இல்லடா பெரிய ஆபத்துல மாட்டிகிட்டேன்டா” என்றவளின் குரல் உடைந்திருந்தது. சொல்ல வந்ததை நிறுத்திக்கொண்டு ரங்குவை விரோதமாய் பார்த்தாள்.

“பறவாயில்லை சொல்லு நம்ம பய தான் ”

அவள் நின்றிருந்த இடத்திலிருந்து விலகி சிட்டியின் அருகில் வந்து அவன் கைகளை பலமாக பற்றிக்கொண்டாள். பதட்டத்தோடு ஒப்பித்தாள்.

“சிட்டி நம்ம தாமு இல்ல ஆட்டோ டிரைவர் அவன் ஒரு கிரக்கியை கூட்டிட்டு வந்தான். பார்ட்டி செம ஸ்பீடா தான் இருந்துது. ஒரு குவாட்டர் கூடவே வாங்கிட்டு வந்து புள்ளா குடிச்சிது. அப்புறம் படுத்து அஞ்சு நிமிஷம் தான் நெஞ்ச புடிச்சுகிட்டு ஏதோ வலிப்பு வந்தது மாதிரி கைய கால அடிக்க ஆரம்பிச்சிடிச்சு.”

அவள் புருவம் விரிய கண்கள் படபடக்க முகமெல்லாம் பய ரேகைகள் அப்பட்டமாய் தெரிந்தன.

” நான் பயந்துட்டேன் சிட்டி. தண்ணி எல்லாம் கொடுத்து பாத்தேன். கேக்கல. கொஞ்ச நேரத்துல மயங்கிடிச்சு. நான் என்ன பண்ணுவேன் தனியா….. அக்கம் பக்கத்துல சொல்ல முடியுமா. இப்போ பாத்தா மூச்சு இல்ல. செத்துடிச்சு. உள்ள தான் கட்டில்ல கெடக்கு”

சிட்டி நிதானமாக கேட்டுக்கொண்டிருந்தான். ரங்கு பதறிப்போனான். தன் கைகள் நடுங்குவதை உணர்ந்தான். இன்ப உணர்ச்சிகளெல்லாம் ஒரே நொடியில் வற்றிப்போய் பயம் வியர்வை துளிகளாய் முகத்தில் அரும்ப தொடங்கியது.

“எல்லாம் என் தலையெழுத்து நான் செஞ்ச பாவத்துக்கு தான் இப்படி கடவுள் என்ன சோதிக்கிறான். அக்கம் பக்கத்துல தெரிஞ்சா என் மானமே போயிடும்” என்று அழத்தொடங்கினாள்.
அவளது குழந்தை தொட்டிலில் சலனமில்லாமல் தூங்கிக்கொண்டிருந்தது. சிட்டி அவளை கண்டித்தான்.

“நீ ஏன் கண்டவன எல்லாம் சேக்குற.” அவள் படபடத்து உடனடியாக

“தாமு வேண்டப்பட்ட ஆளுன்னு விட்டுட்டு போயிட்டான்” என சத்தமாக அழுதாள்.

ரங்குவுக்கு நிலமையின் தீவிரம் புரிய ஆரம்பித்தது.வாசல் கதவை பார்த்துக்கொண்டான். வெளியே நடமாட்டத்தை கிரகித்தான். அந்த அறையின் சுற்று வட்டாரத்தை ஆராய்ந்தான். நடுக்கம் அவன் உடலின் எல்லா பாகங்களுக்கும் இப்போது பரவியிருந்தது. சட்டையில் வியர்வையை துடைத்துக்கொண்டான். இந்த வீட்டுக்குள் ஒரு பிணம். ஒரே நொடியில் இன்ப சுரங்கம் மரண பள்ளத்தாக்காய் மாறியது போல் உணர்ந்தான்.

“சிட்டி வந்துடுடா போயிடலாம். இது வேற விவகாரம். போலீஸ் கேசுன்னு போயிடும்.”

போலீஸ் என்ற வார்த்தையை கேட்டவுடன் அவள் மீண்டும் ஓங்கி அழுதாள். சிட்டியின் கைகளை இறுக்கமாய் பிடித்துக்கொண்டாள்.
“போயிடாத சிட்டி ஏதாவது ஹெல்ப் பண்ணு. எனக்கு உன்ன விட்டா யாரையும் தெரியாது. பிளீஸ் டா….” என கெஞ்சினாள்.
குழந்தை தொட்டிலில் சலனமில்லாமல் தூங்கிக்கொண்டிருந்தது.

சிட்டி “யாரந்த ஆளு இதுக்கு முன்னாடி வந்திருக்குறானா? பாடியை பாக்கலாமா?” என்று கேட்டான். ரங்கு அவன் சட்டையை பிடித்து இழுத்து

“வேண்டாம் டா போயிடலாம். ”

“டேய் ரங்கு பாவம்டா அவ. தனியா என்ன பண்ணுவா. அவ என்ன கொலையா பண்ணிட்டா? வந்த இடத்துல செத்துட்டான்.”

“எனக்கு தைரியம் இல்லடா சிட்டி. எனக்கு பயம். இங்க வர்றதுக்கே எவ்வளவு பயந்தேன். இப்போ இங்கே ஒரு சாவு. வேண்டாம் ஏதோ பெரிய தப்பு நடக்க போகுது. என்ன விட்டுடுடா நான் போயிடுறேன்.” என்றான்.

அவள் இப்போது ரங்குவை வெறுப்போடும் சிட்டியை ஏக்கத்தோடும் பார்த்தாள்.

ரங்கு
“வெளியே போயிடலாம். போய் போலீசுக்கு போன் பண்ணலாம். அவங்க கிட்ட எல்லா உண்மையும் சொல்லலாம்.”

“ஏது இவ விபசாரம் பண்றதையும் சேத்தா. கோமாளி மாதிரி பேசாத. குழந்தை இருக்குடா. ”

அவள் இப்போது வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விட்டு

“கடவுளே….இனி ஒரு நாளும்…இப்படி ஒரு காரியம் செய்யமாட்டேன்….பிச்சை எடுத்தாவது….என் குழந்தையை காப்பாத்துவேன்……என்ன ஒரு வாட்டி….மன்னிச்சிடு……..இந்த ஒரு வாட்டிக்கும் என்ன காப்பாத்து கடவுளே…….கடவுளே….ளே……அக்…அக்….அக்…” என அழுதாள்.

“அழாத வெளியே கேக்கும்……பண்ணலாம். அந்த ஆளோட அட்ரஸ கண்டுபுடிச்சு வீட்டுக்கு தகவல் சொல்லலாம்.” என்றான் சிட்டி

அந்த யோசனையை அவள் திடமாய் நிராகரித்தாள்.

“வேண்டாம். சொந்தகாரங்க நம்புவாங்களா. நான் தான் கொன்னுட்டேன்னு போலீசுல சொல்லிடுவாங்க. இந்த ஆளு இந்த நேரத்துக்கு இங்க எதுக்கு வந்தார்….அப்படி இப்படி…..பேப்பர்ல போட்டோ எல்லாம் போட்டுடுவாங்க……..ஐயோ……அ….வேண்டாம்……வேண்டாம்” என்று அலறினாள்.

“அப்ப என்ன தான் பண்ணலாங்குற?”
“அந்த ஆளா தூக்கிட்டு போய் வெளியே எங்கயாவது போட்டுட்டு வந்துடுங்க பிளீஸ்.”

ரங்கு தீர்மானித்துவிட்டான்.

“இதற்கு மேல் இங்கு இருப்பது விவகாரம். இங்கிருந்து உடனடியாக நகர்ந்தாக வேண்டும். தாமதம் கூடாது. சிட்டி வரமாட்டான். அவனுக்கு அவள் மேல் இரக்கம். எனக்கு இல்லை. சிட்டி கடன் பட்டிருக்கிறான். நான் இல்லை. புறப்படவேண்டும்.”

“சிட்டி என்ன மன்னிச்சிடுடா. நான் கிளம்புறேன்.” என்று அவன் முடிவுக்கு காத்திராமல் கதவை திறக்க போனான்.

“சரி போ. நீ இங்க வர்றதுக்கே உச்சா போனவன். பயந்தாங்கொள்ளி. நீ இங்க இருந்தா காரியத்த கெடுத்துடுவ. போ. போற வழியில ஆள் நடமாட்டம் எப்படி இருக்குன்னு பாத்துட்டு போன் பண்ணு. அப்புறம் மேன்ஷன்ல போய் அமைதியா தூங்கு யாரு கிட்டயும் மூச்சு விடாத. நான் இதுக்கு ஒரு வழி பண்ணிட்டு வர்றேன்.”

ரங்கு கதவை திறந்து, ஆயிரம் பேய்களின் ஆதிக்கத்திலிருந்து ஒரு நொடியில் விடுபட்டவன் போல் நடுக்கத்தோடு தெருவில் இறங்கி நடந்தான். தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை. இரண்டு தெரு வந்த பிறகு அந்த வீட்டை மீண்டும் பார்த்தான். வீட்டில் இப்போது ஒரு அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அந்த வீடு பாவ கூடாரம் போல் காட்சியளித்தது. ரயில்வே டிராக்கை வந்தடைந்த போது மணி பன்னிரெண்டு. பிச்சைக்காரர்கள் டிரான்சிஸ்டரை அணைத்துவிட்டு தூங்க தொடங்கியிருந்தனர்.

ரங்குவுக்கு இன்னும் பயம் போகவில்லை. அரை மணி நேர இடைவெளியில் இத்தனை திருப்பங்களும் அதிர்ச்சிகளும் அபாயங்களையும் அவன் எதிர்பார்த்ததில்லை. ஏதேதோ கற்பனை செய்துகொண்டு போனான். ஏ ஏமாற்றம். அதைவிட அபாயம். போகிற போது இருந்த உற்சாகத்தின் அளவில் பல மடங்குகள் பயந்திருந்தான். தான் வந்த பிறகு அந்த வீட்டில் என்ன என்ன நடக்கலாம் என யூகித்த படியே நடந்தான்.

“அவர்கள் பிணத்தை என்ன செய்வார்கள். மைதானத்தில் புதைத்துவிடுவார்களா. வெளியே எங்காவது கொண்டு போய் போடுவார்களா. அப்படி போகும் போது மாட்டிக்கொண்டால். நிச்சயம் தன்னையும் அந்த குற்றத்தில் போலீஸ் சம்மந்தப்படுத்தும். நானும் அங்கு இருந்தேனே. அவள் உளறிவிடுவாள். இரண்டு பேரு வந்தாங்க சார். எச்சரிக்கை இல்லாத அபலை பெண். ”

அவள் வீட்டுக்கு இன்பம் அனுபவிக்க ஒருவன் வருகிறான். வந்த இடத்தில் மரித்து போகிறான். அவள் பிணத்துக்கு காவல் இருக்கிறாள்.

தொட்டிலில் தூங்கும் அந்த குழந்தையை நினைத்துக்கொண்டான். அவனுக்கு பரிதாபம் வந்தது.

விபசாரம் எத்தனை கொடுமையானது. அதை விட கொடுமை பசி. ஒரு குழந்தையின் பசி.

மேன்ஷன் அருகில் வந்தவுடன் செல் போனில் சிட்டியின் எண்களை தேடினான். சட்டென்று ஏதோ உதைக்க “போலீசிடம் அவர்கள் சிக்கியிருந்தால் மொபைலை போலீஸ் கைபற்றியிருக்கும்” செல் போனை பாக்கெட்டில் நழுவவிட்டான். ஒரு பி.சி.ஓவுக்கு போய் சிட்டியை அழைத்தான்.

சிட்டி மூன்று முறை ஹல்லோ சொன்ன பிறகு தான் ரங்கு பேசினான்.

“டேய் ஆள் நடமாட்டம் அவ்வளாவா இல்ல. சரி என்ன பண்ணப்போறீங்க” என பொறுமையில்லாமல் கேட்டான்.

“பொறம்போக்கு பிசிஓலேருந்து கேக்குற கேள்வியா பொத்திகிட்டு ரூமுக்கு போய் படு.”

ரங்குவுக்கு அறையில் உறக்கம் வரவில்லை. ஏதோ ஒரு ஆபத்து தன்னை தொடரந்து வருகிறது என்பதை மட்டும் அவன் மனம் ஓயாமல் உளறிக்கொண்டிருந்தது. வெளியில் வண்டி சத்தம் கேட்கும் போதெல்லாம் ஜன்னல் வழியாக பார்த்தான்.

“போலீஸ் வண்டியா இருக்குமோ. முதலாளியிடம் லீவு சொல்லிவிட வேண்டும் காலையில் முதல் டிரெயினை பிடித்து ஊருக்கு போய் ஒரு இரண்டு நாள் கழித்து வரலாம்.” மீண்டும் போர்வைக்குள் போய் வெகு நேரம் போராடினான். மூன்று மணிக்கு மேல் உறங்கிப்போனான்.

அதிகாலை ஐந்து மணிக்கு கதவு தட்டும் சத்தம் கேட்டு போர்வையை உதறி எழுந்தான். சிட்டி தான் என்பதை உறுதி செய்த பிறகே கதவை திறந்தான். சிட்டி குடித்திருந்தான். தலை சட்டை எல்லாம் கலைந்து சோர்வாய் காணப்பட்டான். ரங்கு எச்சரிக்கையாய் கதவை சாற்றிவிட்டு “என்னடா பண்ணினீங்க?” என்றான்.
“என்ன பண்றது அவ ரொம்ப பயந்துட்டா. கால புடிச்சு கதற்றா. அப்புறம் ஆட்டோக்காரன் தாமுவுக்கு போன் போட்டு வர சொல்லி மூணு பேரா பொணத்த டிராக்காண்ட போட்டுட்டு வந்துட்டோம். தாட்டியான ஆளு. செம கனம். பாவம் டிராக் ஓரமா நிறைய நாயுங்க வேற இருந்திச்சு. திரும்பி பாக்காம வந்துட்டோம்.”

“டேய் யாரும் பாத்திருக்கமாட்டாங்களே. ஆட்டோ நம்பர வச்சு டிரேஸ் பண்ணி.”
“ஒண்ணும் ஆகாது. ”
“கை ரேகை எல்லாம் பதிஞ்சிருக்கும்டா. மோப்ப நாய் நேரா அவ வீட்டுக்கு தான் போய் நிக்கும். ”
“நீ ஏன்டா இவ்வளாவு அல்லு விடுற. நாம என்ன கொலையா பண்ணிட்டோம். அவ குழந்தையை கூட்டிட்டு பெங்களூர் போயிட்டா.”

“நானும் ஊருக்கு போறேன்டா. எனக்கு என்னமோ பயமா இருக்கு.” என்றான் ரங்கு.

சிட்டி போதையில் சிரித்தான்.

“பொணத்தை எப்படிடா தூக்கினீங்க. நல்ல வேள நான் வந்துட்டேன். என்னால அதெல்லாம் தாளாது. திருப்பி மேன்ஷனுக்கு வரவே எவ்வளவு பயந்தேன் தெரியுமா?இந்நேரத்துக்கு டிராக்காண்ட கூட்டம் கூடியிருக்கும் இல்ல. போலீசுக்கு சொல்லியிருப்பாங்க. நாயிங்க வேற இருந்திச்சுன்னு சொல்ற. அந்தாளோட விதிய பாத்தியா. தாசி வீட்டுல வந்து செத்திருக்கான்.”

சிட்டி எழுந்து அசட்டையாக சட்டையை கழட்டினான். டவல் எடுத்துக்கொண்டான்.
சிறிது நேரம் ஏதோ யோசனையில் இருந்தான். பிறகு உற்சாகமாய்

“மச்சி இத கேளேன். ஆட்டோகாரன் தாமு இருக்கானே செம சார்ப். வந்த உடனே அந்த பொணத்தோட கையில இருந்த வாட்ச் அப்புறம் செல் போன் எல்லாம் உசார் பண்ணிகிட்டான். நான் அந்த ஆளோட பர்சை மட்டும் உருவிகிட்டு வந்துட்டேன்.” என்று ஒரு கருப்பு நிற பர்சை எடுத்து கட்டில் மேல் எறிந்தான்.

ரங்கு அந்த பர்சை ஆர்வமாய் பார்த்து மெல்ல கையில் எடுத்தான். திறந்தான்.கைகள் நடுங்க பதறியபடி அதை கீழே எறிந்தான். பர்ஸ் இரண்டு பக்கமும் விரிந்து விழுந்தது. ஒரு நிமிடம் தரையில் கிடந்த அந்த பர்சை உற்று பார்த்துவிட்டு நிமிர்ந்த போது அவன் கண்கள் கலங்கியிருந்தன.

தழுதழுத்த குரலில் “சிட்டி இது எங்க அப்பாவோட பர்சுடா.” என்றான்.


mailinfranki@gmail.com

Series Navigation

விசா

விசா