விருப்பமும் விருப்பமின்மையும் (எனக்குப் பிடித்த கதைகள் -33 -வண்ணதாசனின் ‘தனுமை ‘)

This entry is part [part not set] of 27 in the series 20021027_Issue

பாவண்ணன்


நெருக்கமான வாசகர் அவர். ஓராண்டுக்கும் மேலாகப் பார்த்துக்கொள்ள இயலாமல் சூழல் நெருக்கடியானதாக மாறிப் போனது. திடுமென ஒருநாள் இரவில் தொலைபேசியில் அழைத்தார். மறுநாள் பெளர்ணமி. ஞாயிறும் கூட. ஒக்கேனக்கல் அருவியில் நல்ல குளியல் போடலாம் வாருங்களேன் என்றார். விடிந்ததும் கிளம்பி விட்டேன். நண்பகல் வேளையில் அங்கே சென்று சேர்ந்த போது பேருந்து நிலையத்திலேயே காத்திருந்தார். தங்கும் விடுதிக்கு ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தார். அருவியை நெருங்க முடியாத அளவுக்குக் கூட்டம் நெரிகிறது. பொழுது சாயட்டும், போகலாம் என்றார். வழியிலேயே சாப்பாட்டை முடித்துக் கொண்டு அறைக்குச் சென்றோம்.

பார்க்க இயலாத ஓராண்டில் விடுபட்டிருந்த எல்லா விஷயங்களையும் பேசித் தீர்த்தோம். பேச்சு மெல்ல திருக்குறளின் பக்கம் திரும்பியது. ‘காதலியின் அன்பைப் பெற முடியாதவர்களுக்கு மடல் ஏறுவதைத் தவிர வேறு வழியில்லை ‘ என்ற குறளை மிகுந்த வலியுடன் ஆட்சேபித்தார் நண்பர். ‘ஒருத்தியை நான் பார்க்கிறேன். விரும்புகிறேன். விருப்பம் காதலாகவும் மாறுகிறது. ஆனால் அவளுக்கு என் மீது நாட்டமில்லை. என் காதல் ஒருதலைக் காதலாக நின்று விட்டது. காதல் உணர்வு முழுக்க முழுக்க உள்மனத்தில் ஊறிப் பெருகும் ஒன்றாகும். அது ரத்தத்தோடும் நினைவோடும் கலந்திருக்கிறது. நான் காதலித்தவள் என்னைக் காதலிக்கவில்லை என்பதற்காக மடல் ஏறி என் காதலை அம்பலப்படுத்துவது எந்த விதத்தில் நியாயமாகும் ? அனிச்சமும் அன்னத்தின் துாவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம் என்று எழுதிய கையால் வள்ளுவரால் இதை எப்படி எழுத முடிந்தது ? அனிச்சமே நெருஞ்சியாகத் தைக்கிற மென்மைக் குணமுள்ள பெண், தான் கிடைக்காததால் மனம் வெறுத்து மடலேறும் ஆடவனைப் பார்க்கும் காட்சியால் எந்த அளவுக்கு மனம் நொந்து போவாள் ? ‘ என்றார். அவர் குரல் கனிந்திருந்தது.

‘மடல் ஏறுவதன் மூலம் அவள் மனமிரங்கித் தன் காதலை ஏற்றுக் கொள்ளக் கூடும் என்கிற நப்பாசையால் அக்காட்சி காட்டப்பட்டிருக்கலாம். காதல் உணர்வு ஓர் ஆடவனை எச்செயலையும் செய்யத் துாண்டக் கூடும் என்பதற்காக வள்ளுவர் அதைச் சொல்லியிருக்கலாம் ‘ என்றேன் மெதுவாக. எனக்கே என் வாதத்தில் நம்பிக்கை இல்லை. ‘எப்பிடிங்க ? கண்ணடிச்சாவே வராத பொம்பளை கைய பிடிச்சி இழுத்தா வந்துடப் போறா ? ‘ என்றார் புன்சிரிப்புடன் நண்பர். எனக்கு உண்மையிலேயே சிரிப்பு வந்து விட்டது.

முழுநிலவு வானில் படரத் தொடங்கி விட்டது. பால்போன்ற வெளிச்சம் எங்கும் பரவியது. மரக்கிளைகளின் இடுக்கில் வெளிச்சம் கசிவதைப் பார்க்க அழகாக இருந்தது. விடுதியிலிருந்து அருவியை நோக்கி நடந்தோம். இரைச்சலிடும் அருவியின் கீழே அரைமணிநேரம் நின்று குளித்த பிறகு விலகி ஆற்றின் ஓட்டத்தில் உட்கார்ந்து குளிக்கத் தொடங்கினோம். பேச்சு மறுபடியும் ஒருதலைக் காதலின் மீது திரும்பியது. ‘யாரிடமும் சொல்லப்படாமல் மனத்துக்குள்ளேயே ஒளித்து வைக்கப்படும் ஒருதலைக் காதல் பாவமானதா ? ‘ என்று கேட்டார் நண்பர். ‘இல்லை ‘ என்றேன் நான். அவர் மறுபடியும் ‘அப்படியென்றால் குற்றமானதா ? ‘ என்று கேட்டார். அதுவும் இல்லை என்றேன்.

சற்று நேர அமைதிக்குப் பிறகு இளம்வயதில் தாம் காதலித்த ஒரு பெண்ணைப் பற்றிச் சொன்னார் நண்பர். அவர் எஸ்.எஸ்.எல்.சி. முடித்து ஏதோ ஒரு வக்கீலிடம் குமாஸ்தாவாக இருந்தார். வக்கீலின் வீட்டுக்கருகே இருந்த தட்டச்சு நிலையத்துக்குப் பயிற்சிக்காக வந்து போகும் பெண்ணொருத்தியை மனதார விரும்பியிருக்கிறார். ஓராண்டுக் காலத்தில் ஒருநாள் கூட அந்தப் பெண்ணிடம் அதைப் பற்றிப் பேசவில்லை. பேசித் தன்னால் அந்தப் பெண்ணைக் காதலித்திருக்க முடியும் என்றும் ஒருவேளை அக்காதலால் வேகவேகமாகத் திருமணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் தன் சொந்த வாழ்க்ககை நிலையோ குடும்பச் சூழலோ அதற்கு இடம்தராது என்பதால் தன் காதலை மனத்துக்குள்ளேயே புதைத்துக் கொண்டதாகச் சொன்னார். நினைத்ததைப் போலவே இரண்டே ஆண்டுகளில் அந்தப் பெண் திருமணமாகிப் போய் விட்டது என்றார். இப்பவும் அந்தப் பெண்ணை நினைத்துக் கொண்டால் மனம் நிரம்பி விடுகிறது என்றும் எதிர்பாராத ஒரு பூரிப்பு பொங்கி வழிந்து ஆனந்தம் தருகிறது என்றும் சொன்னார். அதே நேரத்தில் வக்கீல் வீட்டுக்கருகே இருந்த பால்காரர் வீட்டுப் பெண் ஒருத்தி கொடுத்த காதல் கடிதத்தை அவளிடமே திருப்பித் தந்து தன் விருப்பமின்மையைத் தெரிவித்ததையும் சொன்னார். கடைசியில் ‘என்ன விசித்திரம் பாருங்கள் நண்பரே, நான் காதலித்த பெண் என்னைக் காதலித்தாளா இல்லையா என்று தெரிந்து கொள்ளவே முடியவில்லை, என்னைக் காதலித்த பெண்மீதோ எனக்கு நாட்டமே ஏற்படவில்லை. ஆனால் எந்தப் பெண்ணுக்கும் வலியைத் தருகிற விதத்தில் நடந்ததில்லை நான் ‘ என்று சொல்லிச் சிரித்தார். மீண்டும் ‘வள்ளுவர் அப்படி செய்திருக்கக் கூடாது என்றுதான் தோன்றுகிறது ‘ என்று முடித்தார். பேச்சு கூட எவ்வளவு போதை தரக்கூடியது என்பதை அன்று புரிந்து கொண்டேன்.

நள்ளிரவைக் கடந்து கொண்டிருந்தது. ஆனாலும் எங்கள் குளியல் முடியவில்லை. குளிர்ந்த தண்ணீரை அள்ளிஅள்ளி முகத்தில் வழிய விட்டபடி ‘இந்த விசித்திர முரண்சங்கிலிதான் எல்லாரையும் பிணைத்திருக்கிறது நண்பரே ‘ என்றேன். சட்டென்று என் மன ஆழத்திலிருந்து வண்ணதாசனின் ‘தனுமை ‘ சிறுகதை மிதந்து வந்தது. உடனே அவரிடம் ‘தனுமை கதையைப் படித்திருக்கிறீர்களா ? ‘ என்றேன். ‘படித்திருந்தால்தான் என்ன நண்பரே, உங்கள் வாயால் ஒருமுறை சொல்லுங்களேன், கேட்கிறேன் ‘ என்றார்.

கதையில் கல்லுாரி இளைஞன் ஞானப்பன் அனாதை இல்லமொன்றின் தோப்பில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருக்கிறான். வழக்கமாக உடைமுட்கள் நிரம்பிய ஏரிப்பக்கம் செல்கிறவன்தான். சற்றே காலைத் தாங்கித் தாங்கி நடக்கக் கூடிய தனலட்சுமி என்கிற தனு கல்லுாரி வண்டியைப் பிடிக்க தம்பியுடன் அனாதை இல்லத்துத் தோப்புப் பக்கம் வருவதைத் தற்செயலாகக் கண்டறிந்ததால் படிக்குமிடத்தை மாற்றிக் கொள்கிறான். தனுவின் மீது அவனுக்கு அளவு கடந்த நாட்டம். இத்தனைக்கும் ஒரு வார்த்தை பேசவில்லை. சரியாகக் கூடப் பார்த்துக் கொள்ளவில்லை. கிட்டத்தட்ட ஒருதலைக்காதல். அவள் தனக்காகப் பிறந்தவள் என்று எண்ணிக்கொள்வதல் ஏதோ ஒரு இன்பம். அதே அனாதை இல்லத்தில் பாடம் சொல்லித் தருகிற டெய்ஸி என்கிற டாச்சருக்கு இவன் மீது நாட்டமாக இருக்கிறது. அவள் பார்வை, பேச்சு எல்லாவற்றின் அடிப்படையிலும் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன என்று புரிந்தும் ஒதுங்கி ஒதுங்கி வருகிறான் ஞானப்பன். இதுதான் முரண். ஞானப்பனை நினைக்கும் டெய்ஸி. தனுவை நினைக்கும் ஞானப்பன்.

இறுதியில் மறந்த குடையை எடுக்க வந்த டெய்ஸி டாச்சர் ஞானப்பனைப் பார்த்து ‘உட்கார்ந்து படிக்க நாற்காலி வேணுமா ? ‘ என்று கேட்கிறாள். அவன் ‘வேணாம் ‘ என்று மறுக்கிறான். உடனே அவள் ‘நேரமாய்டுச்சின்னா லைட்ட போட்டுக்கிறது ‘ என்கிறாள். அதற்கும் அவன் ‘வேணாம் ‘ என்று மறுக்கிறான். உடனே எதிர்பாராத விதமாக ‘தனலட்சுமிதான் வேணுமாக்கும் ‘ என்றபடி ஓரடி முன்வந்து அவனே எதிர்பாராத விதமாக இறுக்கி அணைத்துவிட்டுச் செல்கிறாள் ‘

‘அவள் கட்டிப் பிடித்தது காமத்தாலா ? ‘ நண்பர் கேட்டார்.

‘அப்படி ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும் ? அதுவும் காதலை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று நாம் எடுத்துக் கொள்ளலாமே. சாத்தியிருக்கும் வேலிப்படலை மெல்லத் திறந்து வழியை ஏற்படுத்துவதன் வழியாக ஞானப்பன் தனுவின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவது சரியென்றால் டெய்ஸி அணைப்பின் வழியாகத் தன் காதலை வெளிப்படுத்தியதும் சரிதானே ‘

‘மடல் ஊர்ந்து வந்து காதலை வெளிப்படுத்துவது போலவா ? ‘ என்று மறுபடியும் மடலிடம் வந்து நின்றார் நண்பர்.

‘அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது நண்பரே. சம்பந்தப் பட்டவளுக்கு வலிக்கக் கூடும் என்று அவனுக்கும் தெரிந்திருக்கலாம். எல்லா வழிமுறைகளும் தோற்ற பிறகு, ஆபத்தான இந்த முறையைத் தேர்ந்தெடுத்திருக்கலாமோ என்னமோ ‘

சில நிமிடங்கள் மெளனத்தில்கழிந்தன. ஆறு நகரும் சத்தத்தை எங்களால் கேட்க முடிந்தது. பெளர்ணமி வெளிச்சத்தில் ஆற்றின் ஓசையும் காற்றின் கீதமும் ஏதோ வேறு உலகத்தில் இருப்பதைப் போன்ற உணர்வை எங்களுக்குக் கொடுத்தது.

நண்பர் மெளனத்தைக் கலைத்தார். ‘மடல்வெளிப்பாட்டு முறையை வள்ளுவர் வேண்டுமென்றால் ஆதரித்துக் கொள்ளட்டும், என்னால் ஆதரிக்க முடியாது. ஒரு காதல் மென்மையாக மட்டுமே வெளிப்படுத்தப்பட வேண்டும், விருப்பமில்லை என்றால் மென்மையாக மட்டுமே மறுக்கப்பட வேண்டும் ‘

எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டவராக அவர் காணப்பட்டதால் மேற்கொண்டு தொடராமல் பேச்சை மாற்றியபடி கரையேறினேன் நான்.

*

எழுபதுகளில் எழுத்துலகுக்கு அறிமுகமான முக்கியமான சிறுகதையாளர் வண்ணதாசன். மிக நுட்பமான தகவல்களையும் இடக்குறிப்புகளையும் பாத்திரங்களின் மனநிலைையைப் பிரதிபலிக்கக் கூடிய கண்ணாடிகளாக எழுத்தில் மாற்றும் திறம் வாய்ந்த படைப்பாளி. அஃ என்னும் இதழாசிரியராக இருந்த பரந்தாமனுடைய கைவண்ணத்திலும் வடிவமைப்பிலும் 1976ல் வந்த ‘கலைக்க முடியாத ஒப்பனைகள் ‘ என்னும் தொகுப்பில் ‘தனுமை ‘ கதை இடம்பெற்றுள்ளது. அந்த ஆண்டின் மிகச் சிறந்த சிறுகதையாக இலக்கியச் சிந்தனையால் தேர்ந்தெடுக்கப் பட்டது. 2001 ஆம் ஆண்டில் இதுவரை எழுதப்பட்ட இவரது சிறுகதைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு ‘வண்ணதாசன் கதைகள் ‘ என்னும் தலைப்பில் புதுமைப்பித்தன் வெளியீடாக வந்துள்ளது.

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்