இந்திரா பார்த்தசாரதி
தொலைக்காட்சி வந்த புதிதில் திரைப் படங்களுக்கு இனி எதிர்காலம் இல்லையென்று ஆரூடம் சொன்னவர்களின் வாக்குப் பொய்த்துவிட்டது. அதுபோல், இணையத்தில் நூல்கள் வரத்தொடங்கியவுடன், அச்சு யந்திரங்களை இனி அரும்பொருளகத்தில்தான் பார்க்க வேண்டியிருக்கும் என்று நம்பியவர்களுடைய கனவும் பலிக்கவில்லை. கணிணியின் சொர்க்கமாகிய அமெரிக்காவில், கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு அச்சில் அனைத்துத்துறையிலும் வெளிவந்திருக்கும் தரமான புத்தகங்களின் எண்ணிக்கை 6% அதிகரித்திருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
தமிழ்நாட்டைப் போல், அரசாங்க நூல்நிலயங்களை மட்டும் நம்பி, அமெரிக்காவில் புத்தகங்கள் அச்சிடுவதில்லை. தனிப்பட்ட முறையில், தரமான நூல்களைக் கொண்ட நூல்நிலையம் தமக்கென்று இருக்கவேண்டுமென்று நினக்கின்றவர்கள், தமிழ் நாட்டைத்தவிர, உலகெங்கும்( இந்தியா உட்பட) அதிகம் என்று தோன்றுகிறது.இப்பொழுது, தமிழ் நாட்டில் இந்நிலைமையில் சற்று முன்னேற்றம் காணப்படுவதாகத்
தெரிகிறது.தரமான எழுத்து, நூல்நிலையங்களை நம்பியோ, விருதுகளை எதிர்பார்த்தோ தோன்றுவதில்லை. இயல்பான படைப்பாளியால் எழுதாமல் இருக்கமுடியாது.
‘என்னால் பாடாமல் இருக்க முடியாது,
பாடும் ஏதேனும் ஒரு பறவை போல் குரலெழுப்பித்தான் ஆகவேண்டும் ‘
என்கிறார் ஆங்கிலக் கவிஞர் ஆல்ஃப்ரெட் டென்னிஸன்.
எழுதுவதின் மூலம் தன் அடையாளத்தை அவன் கண்டு கொள்ள முயல்கிறான். தன்னுடைய உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடிகிறது எனும்போது அவனுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவனுடைய அடையாளத்துக்கு ஒரு புதிய பரிமாணம் கிடைக்கிறது. விருது, அவன் அடையாளத்தை அவனுக்கே உறுதிப் படுத்தும் அங்கீகாரம்.விருது பெறுகின்றவர்கள் எல்லாருமே சிறந்த எழுத்தாளர்கள் என்று சொல்லிவிடவும் முடியாது. மிகச் சிறந்த படைப்பாளிகளுக்கு உலக அரங்கில் விருது கிடைக்காமலும் போயிருக்கிறது. உயர்ந்த சான்றுகள், டால்ஸ்டாய், ஜேம்ஸ் ஜாய்ஸ்..
இந்த ஆண்டு இலக்கிய நோபல் விருது, விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. பரிசு பெற்றிருப்பவர், பிரிட்டிஷ் நாடக ஆசிரியர் ஹெரால்ட் பின்டர்.(Harold Pinter). ஐயன் ஜாக் (Ian Jack), நையல் ஃபர்கூஸன்( Niall Fergusson) போன்றவர்கள் இந்த விருது அவருக்குக் கொடுக்கப்பட்டிருப்பதைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள்.ஐயன் ஜாக் நம் தாகூர் பெயரை எதற்காக வம்புக்கு இழுக்கிறார் என்பதுதான் புரியவில்லை. ஐயன் ஜாக் எழுதுகிறார்: ‘ இவ்வாண்டு ஹெரால்ட் பின்டருக்கு இப்பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. பேர்ல் பக்( Pearl Buck), ரவீந்திரநாத் தாகூர், பெட்ரான்ட் ரஸல், வின்ஸ்டன் சர்ச்சில் போன்ற படிக்கமுடியாத நோபல் விருது பெற்ற படைப்பாளிகளின் பட்டியலில் இன்னொரு பெயர்! ‘ இவ்வாறு கூறியதோடு மட்டுமில்லாமல் தாகூரைத் தனிப்பட்டமுறையிலும் தாக்குகிறார் ஐயன் ஜாக். இவர் ‘நியூயார்க் டைம்ஸ் ‘ன் பிரபல புத்தக விமர்சகர். ‘Granta ‘ என்ற புகழ்பெற்ற பிரசுரத்தின் ஆசிரியர். தாகூர் 1911ல் ‘கீதாஞ்சலி ‘ அவரே செய்த ஆங்கில மொழிபெயர்ப்புடன் இங்கிலாந்து சென்றார். அங்கு, அவருடைய ‘கீதாஞ்சலியின் ‘ கையெழுத்துப் பிரதி புகைவண்டியில் பயணம் செய்தபோது காணமல் போய்விட்டது. அவருடன் இருந்ததோ ஒரு பிரதிதான்! ஆனால் அதிர்ஷ்டவசமாக, தொலைந்துபோன லக்கேஜ் வைத்திருக்கும் இடத்தில் அதைப் பத்திரமாக வைத்திருக்கிறார்கள். ஐயன் ஜாக் எழுதுகிறார், “ காணாமல் போயிருந்தால், இலக்கியத்துக்குப் பெரிய நஷ்டம் ஏதுமில்லை. ஆனால் தாகூருக்குத்தான் பண நஷ்டம்( நோபல் பரிசு) ஏற்பட்டிருக்கும்! ‘
தாகூரை இப்படிக் கிண்டல் செய்யும் இவர் , இலக்கியத்துக்காக முதன் முதல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர், Sinclair Lewis யை இந்தப் பட்டியலிலிருந்து விட்டு விட்டர் என்பது தெரியவில்லை. எத்தனைப் பேர் இப்பொழுது இவருடைய நாவல்களைப் படிக்கிறார்கள் ?
ஹெரால்ட் பின்டரை இவர்கள் தாக்குவதற்கு என்ன காரணம் ? பின்டர், முப்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து அமெரிக்க அரசாங்கத்தின் அரசியலைக் கடுமையாக விமர்ஸித்துக் கொண்டு வருகிறார். இப்பொழுது கூட, விருது ஏற்புரையில், ‘132 நாடுகளில், 702 இடங்களில் இராணுவத் தளவாடங்கள் வைத்து உலகை ஆட்டிப் படைக்கும் ஆதிக்க மனப்பான்மையுடைய அமெரிக்கா ‘ என்று சாடியிருக்கிறார்.
இவர் இலக்கியவாதியா, அரசியல்வாதியா என்பது இவர்கள் கேள்வி.
இதில் வேடிக்கை என்னவென்றால், பின்டரின் புகழ்பெற்ற நாடகங்களைப்(The Birthday Party, Homecoming, The Room, Betrayal, Dumb waiter, Landscape, Silence) படிக்கின்றவர்களுக்கு, அவர் நாடகங்களில் துளிக்கூட அவருடைய அரசியல் ஆக்ரோஷக் குரல் கேட்கவில்லை என்பதுதான் ஆச்சர்யம். அகத்திணை, அவர் நாடகங்கள், புறத்திணை, அவருடைய அரசியல் கோட்பாடுகள், அறிக்கைகள். ‘ என் ஆழ்மனத்துப் படிமங்கள்தாம் என் நாடகப் பாத்திரங்கள். அவர்கள் எனக்கு மட்டுமல்ல, அவர்களுக்கே அந்நியர்கள். ஒருவர் பேசும் பேச்சு மூலம், அவர் சொல்லாமலிருக்கும் அவருடைய உள்ளுணர்வுகளை நம் உணர வேண்டும். இந்நிலையில், மெளனமும் ஒரு சக்தி வாய்ந்த மொழியாகிறது. ‘
அவருடைய நாடகங்களில், உரையாடல்களுக்கு இடைப்பட்ட மெளனத்தை ஓர் அற்புதமான உத்தியாக அவர் பயன்படுத்துகிறார். இம்மெளனம், மன இறுக்கத்தை அதிகரிக்கக் கூடியது. சொற் சிக்கனம், சொல்லிச் சொல்லி உறைந்து போய் அர்த்தம் இழந்து போன வார்த்தைகள், திரும்பத் திரும்பச் சொல்லுதல் போன்ற பலவையான உத்திகளால் தம்முடைய பகைப் புலனுக்குத் தேவையான ஒரு சூழ்நிலையை இவரால் உருவாக்க முடிகிறது. தேர்ந்த இயக்குனர், சிறந்த நடிகர்கள் இருந்தால்தான் இவர் நடகங்கள் மேடையில் வெற்றிப் பெற முடியும்.அத்தனை நுணுக்காமனவை அவை.
மனித உறவுகளுக்கிடையே இருக்கக்கூடிய மிகவும் சிக்கலான ஆழ்மனப் பிரச்னைகளையும், வாழ்க்கையில் மெளனமாக ஏற்படும் எதிர்பாரான அதிர்வுகளையும் ( ‘silent menace ‘),தமக்கே உரித்தான நாடக மொழியில்(understatement) சொல்லவல்ல பின்டரின் ஆவேசமானஅரசியல் முகம் ஆச்சர்யத்தைத்தரக்கூடியதுதான். பின்டர் கூறுகிறார்: ‘ ‘குடிமகன் என்ற முறையில் அரசியியல் சார்பாக எனக்கு ஏற்படுகின்ற என் தார்மீககக் கோப உணர்வுகளை நான் சொல்லத்தயங்க மாட்டேன். ஜார்ஜ் புஷ்ஷும்,டோனி ப்ளயரும் அப்பாவியான மக்களைக் கொன்று குவித்த சமூகத் துரோகிகள், கொலைகாரர்கள் ‘ எண்று வில்ஃப்ரெட்ஓவென் விருது பெற்ற போது அவர் பேசியுள்ளார். இப்பொழுதும், நோபல் பரிசு ஏற்புரையில், ‘ கலை, சத்யம், அரசியல் ‘ என்ற தலைப்பில் அமெரிக்காவின் சர்வதேச அராஜகத்தைப் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார்.
ஆனால் அவருடைய அரசியல் கொள்கைகளுக்காக, அவர் நோபல் பரிசு பெறத் தகுதியானவர் அல்லர் என்று கூறுவது பொருந்தாது.
‘Vanity Fair ‘ என்கிற பத்திரிகையின் கலையுலக நிருபர் Christopher Hitchens எழுதுகிறார்: ‘ எப்பொழுதோ ஒரு காலத்தில் இரண்டோ அல்லது மூன்றோ சுமாரான நாடகங்களை எழுதியவருக்கா நோபல் பரிசு ? இலக்கியம் செய்வதை விட்டு விட்டு இவர் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் ? ‘
இது நியாயமான கேள்வி அன்று. அரசியல் பிரக்ஞை இருந்திராவிட்டால், பாரதி என்கிற ஒரு மாபெரும் கவிஞன் உருவாகியிருப்பானா என்பது சந்தேகந்தான். ஒரு படைப்பாளியின் இலக்கியம் வெறும் அரசியல் அறிக்கையாக இருக்கக்கூடாது, உண்மைதான். ஆனால், இலக்கியவாதிக்கு எதற்கு அரசியல் உணர்வு வேண்டுமெபது அடாவடித்தனம்.
ஷேக்ஸ்பியருடைய சரித்திர நாடகங்கள் அனைத்தையும் ஒருங்கு சேரப் படிக்கும்போது, அதிகாரபோதை என்பதுதானே இந்நாடகங்களின் கதாநாயகனாக நமக்குத் தெரிகிறது ? ‘The Grand Mechanism of History and the ladder of political success ‘ என்பார் யான் காட் (Jan Kot).பெரும்பான்மையான அமெரிக்க விமர்சகர்களுக்கு என்ன வருத்தம் என்றால், நாடகத்துக்கு நோபல் விருது என்றால், அது அமெரிக்க நாடக ஆசிரியராகிய எட்வர்ட் ஆல்பிக்குக் கிடைத்திருக்கவேண்டும் என்பதுதான்.(.Eugine O ‘neilக்குப் பிறகு, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க நாடக ஆசிரியர் யாருமில்லை)..எட்வர்ட் ஆல்பியும், ஹெரால்ட் பின்டரும் அநேகமாக ஒரே வகை நாடக ஆசிரியர்கள்தாம். இருவருமே ஸ்தாபனத்தை(Establishment) எதிர்ப்பவர்கள். புஷ்ஷிடமிருந்து விருது பெறுவதற்காக வெள்ளை மாளிகைக்குச் செல்ல மறுத்தவர். அமெர்க்கர்களுகுக் கொடுக்கவில்லை என்ற அவமானத்தைவிட பெரிய அவமானம், அமெரிக்காவைத் தொடர்ந்து தாக்கிவரும் ஒரு பிரிட்டிஷ் நாடக ஆசிரியருக்கு இப்பரிசு கிடைத்திருக்கிறதே என்றுதான். ‘ அடுத்த ஆண்டு இலக்கியப் பரிசு ஃபாரன்ஹீட் ‘ என்ற திரைப்பட(அமெரிக்காவை கடுமையாகத் தாக்கி எடுத்த படம்) இயக்குனர் மைக்கேல் மூருக்குத்தான். இந்த வகையில் ஓர் அமெரிக்கருக்குக்கிடைக்கக் கூடுமென்று நாம் சந்தோஷமடையலாம் ‘ என்றுஇன்னொரு கலை விமர்சகர் எழுதுகிறார்.
நோபல் விருதுகளைப் பொருத்த வரையில் ( குறிப்பாக இலக்கியம், சமாதானம் ஆகியத் துறைகளில்) அமெரிக்காவுக்குக் கொஞ்சம் செல்வாக்கு உண்டு என்று கூறுவார்கள். அப்படி இருக்கும்போது, இவ்வாண்டு எப்படி பின்டருக்குக் கிடைத்தது என்பதுதான் உலக இலக்கிய அரங்கில் ஒரு பெரிய ஆச்சர்யம். ஐரோப்பிய யூனியன் நாடுகளின் அரசியல் குரல், அமெரிக்காவைப் பற்றிக் கவலைப் படாமல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது என்பது காரணமாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
இந்த ஆண்டு புலிட்ஸர் பரிசு பெற்றிருக்கும் நாவலாசிரியர் மெரிலின் ராபின்ஸன்.அவருடைய நாவல் ‘Gilead ‘ என்பதற்குப் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு கிறிஸ்துவப் பாதிரிமார் குடும்பத்தைப் பற்றிய கதை. இது பற்றியும் இலக்கியச் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. ‘ ராபின்ஸனுடைய முன்பு எழுதப்பட்ட இன்னொரு நாவல், ‘ The Housekeeping, இதைவிடச் சிறந்த நாவல், அதற்கு புலிட்ஸர் பரிசு கொடுக்கப் பட்டிருக்கலாம். இந்த நாவலை முழுவதும் படிக்க முடிந்தவர்களுக்கு இன்னொரு புலிட்ஸர் பரிசு தரலாம் ‘ என்று ஓர் இலக்கிய விமர்சகர் எழுதியிருக்கிறார்.
நான் அந்த நாவலைப் படித்துமுடிக்க முயன்றேன், வாசகன் என்ற முறையில் புலிட்ஸர் பெற முடியுமோ என்ற ஆவலுடன். படிக்க முடியவில்லை.
ஸல்மான் ருஷ்டியின் ‘ ஷாலிமர்-தி க்ளொன் ‘ ( Shalimar- the clown) என்ற நாவல் இவ்வாண்டு புக்கர் பரிசு பெறும் என்று உறுதியாக நம்பினார்கள்.ஆனால் அது இவ்வாண்டு புக்கர் பரிசு குறுகிய பட்டியலில் கூட இடம் பெறவில்லை. ‘இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறோம் ‘ என்று காரணம் சொன்னார்கள் பரிசு பெற்ற நூல், ‘ தி ஸீ (The Sea). ஆசிரியர், ஜான் பான்வில்(John Banville).
இரண்டுமே ஒருவகையில் பார்க்கப்போனால், ‘மன அசை ‘ போடும் நாவல்கள்தாம். ருஷ்டி காஷ்மீரைப் பற்றி அசை போடுகிறார். ருஷ்டிக்கு காஷ்மீர் தொடர்பு உண்டு என்று இந்த நாவலைப் படித்த பிறகுதான் எனக்குத் தெரியும்.( அவருடைய தாய்வழி
பாட்டனார் காஷ்மீரைச் சேர்ந்தவர்). காஷ்மீரில், ஹிந்துக்களும் முஸ்லீம்களும் கலாசார வகையில் எப்படி இரண்டறக் கலந்திருந்தார்கள் என்பதைப் படிக்கும்போது,
இப்பொழுது நமக்கு மனத்தில் துக்கம் ஏற்படுகின்றது. அரசியல், இந்த அழகான நாட்டைச் சின்னாபின்னமாக ஆக்கிவிட்டதே என்ற துயரம்.
ருஷ்டியை ஒரு stylist. மொழி அவர் ஏவலுக்காகக் காத்துக் கொண்டிருப்பதைப் போல் தோன்றும். இந்நடையில், ஓர் இந்தியச் செவ்வியல் மணம் (Indian classical flavour) வீசுவதைப் போல் எனக்குப் படுகிறது. அவருடைய magical realism பாணி இந்தியப் பண்பாட்டுப் பின்னணியில் பார்க்கும்போது மிகவும் இயல்பாக இருக்கிறது என்று சொல்ல முடிகின்றது. . ருஷ்டியின் நாவலில் கதை முக்கியமல்ல. கதை சொல்லப்படும் விதந்தான் எனக்கு முக்கியமாகப் படுகின்றது.
ஜான் பான் வில்லின் நாவலும்(The Sea) நல்ல நாவல்தான். மனைவியை இழந்த மனத்துயரை ஆற்ற கடலோரப் பகுதிக்குச் செல்கிறான் நாவலின் நாயகன். அங்குதான் எங்கோ அவனுடைய இளைமைப் பருவத்தை அவன் தொலைத்துவிட்டான். மீண்டும் அதைக் கண்டெடுக்கிறான். இளைமைப் பருவத்தில் அங்கிருந்த இரட்டைச் சகோதரிகளுடன் அவனுக்கிருந்த நளினமான காதல் மிகவும் மென்மையான குரலில் அழகாகச் சொல்லப்படுகிறது.
இப்பரிசு பற்றியும் விவாதம் இல்லாமலில்லை.
Zane Smith என்ற இளம் ஆப்பிரிக்க-பிரிட்டிஷ் பெண் எழுத்தாளருக்குத்தான் இப்பரிசு கிடைத்திருக்கவேண்டும் என்ற சர்ச்சை எழுந்தது. ஸ்மித்தின் நாவல் குறுகியப் பட்டியலிலும் இடம் பெற்றிருந்தது. நாவலின் பெயர், ‘ On Beauty ‘. ‘நியூயார்க் டைம்ஸ் ‘ தேர்ந்தெடுத்த இந்த ஆண்டு பிரசுரமான பத்து சிறந்த நாவ்லகளில் ஒன்று. ஹார்வெர்ட் பல்கலைக் கழகப் பின்னணியில் கலாசார அரசியியலைப் பகைப்புலனாகக் கொண்டது.,. இனம் பற்றிய விவாதங்கள், ஒரு குடும்பப் பின்னணியில், நேர்மையாகவும், ஒளிவு மறைவு இல்லாமலும் அழகாகச் சொல்லப்படுகின்றன. ஒரு வலது சாரி கறுப்பரைக் கதா பாத்திரமாக அமைக்க, ஒரு கறுப்பு எழுத்தாளருக்கு அசாத்தியத் துணிவு வேண்டும்.
நான் இவ்வாண்டு படித்த நாவல்களிலே எனக்கு மிகவும் பிடித்த நாவல், Jose Saramago என்ற போர்த்துகீசிய நாவலாசிரியர் எழுதியுள்ள ‘The Double ‘. இவ்வாசிரியர் ஏற்கனவே நோபல் பரிசு பெற்றுவிட்ட காரணத்தினால், இது விவாதத்துக்குள்ளாகவில்லை. ஒரு தனி மனிதனின் தனித்வத்துக்கு, அவனைப் போலவே அச்சாக இருக்கும் இன்னொருவனால் உளவியல் சவால்கள் ஏற்படுகின்றன. இருவரும் அடியோடு வேறுபட்ட குணச்சித்திரங்கள். எது அசல், எது போலி என்ற அடையாளச்சிக்கல் பிரச்னைகளைக் கதாநாயகன் சிலுவையாகச் சுமக்கிறான்.
இப்பொழுது நான் சொல்லப் போவது விருது பற்றிய விவாதம் இல்லை. படைப்பாளியின் கருத்துச் சுதந்திரம் பற்றிய விவாதம் சமீபத்தில் துருக்கியில் நடந்து வருகிறது. தமிழ் நாட்டில், தமிழ்ப் பண்பாட்டுக்கு உரிமை கொண்டாடும் அரசியல் கட்சிகளால் தூண்டப்பட்டு, ‘கற்பு ‘ பற்றிய சர்ச்சை நீதி மன்றத்துப் போயிருப்பது போல், துருக்கி தேசியவாதிகள், ஓர்ஹான் பமுக் (Orhan Pamuk) என்ற பிரபல எழுத்தாளரின் மீது, அவர் துருக்கி தேசியத்தின் எதிரி என்று வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.
பமுக், ஸ்விஸ் பத்திரிகை ஒன்றுக்குத் தந்த பேட்டியில் கூறியிருக்கிறார்: ‘ 1915லிருந்து தொடர்ந்து துருக்கியில் வசிக்கும் சிறுபான்மை இன மக்களாகிய ஆர்மீனியர்களையும் குர்டுகளையும்(Kurds) படுகொலை செய்து வரும் அக்கிரமத்துக்கு துருக்கி அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். ‘ அவ்வளவுதான், துருக்கியப் பண்பாட்டுத் தரகர்கள் கொதித்து எழுந்திருக்கிறார்கள். துருக்கித் தலைநகராகிய அங்காராவில் கலகம், கார் எரிப்பு, கல் வீச்சு, கடைசியில் நீதி மன்ற விவகாரம். இப்பொழுது நீதி மன்றம் கூறிவிட்டது: ‘ அரசாங்கம் அவர் பமுக் மீது வழக்குத் தொடர்ந்தால், விசாரணக்கு எடுத்துக் கொள்ளப்படும் ‘. அரசாங்கம் இப்பொழுது பெரிய குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. ஐரோப்பிய யூனியனில் சேரும் தருவாயில், அதற்குக் குறுகிய தேசியக் கண்ணோட்டம் என்று காண்பித்துக் கொள்ளவும் முடியாது, துருக்கியின் தேசியவாதிகளைப் பகைத்துக் கொள்ளவும் இயலாது.
ஆகவே, விருதுகளைப் பற்றியும், கருத்துச் சுதந்திரம் பற்றியும் எழும் விவாதங்கள் தமிழ்நாட்டுக்கு மட்டும் உரிய பிரத்யேக அடையாளம் இல்லை. விருது பெறுவதும், பெறாமல் போவதும், ஒரு படைப்பாளி சந்திக்க வேண்டிய,உத்தியோக ரீதியானஆபத்து (Professional hazard). இரண்டு நிலைகளிலும் அவனுடைய அடையாளம் அவனுக்கு உறுதியாகின்றது.
—-
nadaadur2k@yahoo.com
- நான் கண்ட சிஷெல்ஸ் – 13. சிஷெல்சில் பெண்கள் வாழ்க்கை
- அடுத்த திண்ணை வெளியீடு மார்ச் 17 அன்று வெளிவரும்
- வருந்துகிறேன்
- கடிதம் – ஆங்கிலம்
- கடிதம்
- கடிதம்
- திரும்பவும் திண்ணையில் அமரும் துணிவு பெறுகிறேன்
- கடிதம் – ஆங்கிலம்
- கடிதம்
- அம்பேத்கரின் மதம் குறித்த சிந்தனைகள்
- பெண் எழுத்துக்கள் ஆண்களைச் சாடுவதற்கு நியாயங்கள் குறைவுதான் : மொழிபெயர்ப்பாளர் மீனாட்சி புரியுடன் சந்திப்பு
- தாவோ வாழ்வியல் (மூலம் : திரேக் லின்)
- சாரங்கா குண சீலனின் பரதநாட்டிய அரங்கேற்றம்
- விருதுகளும், விவாதங்களும்,கருத்துச் சுதந்திரமும்
- சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள் – 5
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! (இலக்கிய நாடகம் – பகுதி 5.)
- உண்மையின் ஊர்வலங்கள் (3)
- ஐன்ஸ்டைன் புவியீர்ப்பு ஆயும் விண்ணுளவி, நூறாண்டுக்குப் பிறகு நீடிக்கும் ஐன்ஸ்டைன் நியதிகள் -2 [100 Years of Einstein ‘s Theories
- பெரியபுராணம் – 79 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கவிதைகள்
- தோழன் புஸ்பராஜாவுக்கு
- வாழ்க்கை
- தேய்பிறைக் கோலம்!
- நிலவுகள் எப்போதும் கறுப்பு
- நாணல்
- இ.பா. எனும் கல் விழுந்த குளமாகிறது என் மனம்
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஐந்து: நல்லூர்க் கோட்டையும் மதில்களும்!
- புலம் பெயர் வாழ்வு (3)
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 11