விரதம்

This entry is part [part not set] of 29 in the series 20021110_Issue

க. அருள்சுப்பிரமணியம், திருகோணமலை


சந்தானம் தன்னை ஐந்து மணிக்கு எழுப்பி விடும்படி சொல்லியிருந்தார். மனைவியின் கையால் “கட்டில் காப்பி” குடித்துப் பழக்கப்பட்டவர் அவர். இன்று அவருக்குக் காப்பி கிடைக்காது. சத்தியராணி நான்கு மணிக்கு வைத்த எலாம் அடிக்கு முன்னரே எழுந்து விட்டாள். கலைந்திருந்த கூந்தலை அள்ளிக் கொண்டை முடித்தபடி முற்றத்து லைட்டைப் போடுவதற்கு குசினிக்குள் வந்தாள். நேற்று வீடெல்லாம் தூசி தட்டிச் சுத்தமாகக் கழுவி விட்டதால் ஈரப்பசுமை கவ்வியது. கழுவிக் கவிழ்க்கப்பட்டிருந்த எவர்சில்வர் பாத்திரங்களுடன் புதுப்புடவை கட்டிக் கொண்ட பெண் போல சமையல் கட்டு பொலிவு காட்டியது,

முதல் வேலையாக முற்றத்தில் நீர் தெளித்து கூட்டுமாறால் பட்டுப் போலப் பெருக்கி விட்டாள். மண் மெலிதாய் மணந்தது. துளசிமாடத்தைத் துப்புரவாக்கி நீர் ஊற்றி விட துளசிச்செடி நிமிர்ந்து நின்றது போல் தோன்றிற்று. நுனிக் குருத்தை நோகாமல் உருவி முகர்ந்தபடியே கிணற்றடிக்கு நகர்ந்தாள்.

போன வாரம் தொடர்ந்து கொட்டிய மழையினால் கிணற்று நீர் கைக்கெட்டியது. முதல் வாளி நீரை தலையில் வார்க்க தோள் சில்லிட்டு நடுங்கிற்று. ஈரத்தலையைத் துவட்டிய சிறிய துவாயை கூந்தலோடு சேர்த்து முடித்துக் கொண்டு சுவாமியறைக்குள் வர ஐந்து மணி அடித்தது, சூலமங்கலம் சகோதரிகளின் கந்தசஷ்டி கவசக் கசட்டை அழுத்தி விட்டாள். கந்தசஷ்டி கவசம் அந்தப் புதிய பொழுதிற்குப் பொருந்தி இனிமையாய் இசைக்கத் தொடங்கிற்று. வீபூதிக் கோடுகள் நெற்றியில் ஏற வள்ளி தெய்வயானை சமேத முருகப் பெருமான் படத்தைத் தொட்டு விட்டு தட்டத்துடன் வெளியே இறங்கினாள் சத்தியா.

சுவரோர நித்திய கல்யாணி ஐப்பசிப் பனியில் குளித்துச் சிலிர்த்து பெயருக்கேற்றாற் போல் வஞ்சனையில்லாமல் பூத்திருந்தது. கிணற்றடிச் செம்பரத்தை மட்டும் பகலவன் வரும்வரை மொட்டு விரிக்க மாட்டேன் என்று முறைத்தது. தட்டு நிறைய மலர்கள் கொய்து கழுவியபின் வீட்டிற்குள் வர கோயிலுக்குள் காலடி வைப்பது போன்ற தூய்மை அவளை ஒட்டிக் கொண்டது. குத்துவிளக்கு தட்டங்களை புளி போட்டுத் தேய்த்துக் கழுவி வைத்ததால் பொன்னுக்கு நிகராக மின்னின. கணவனை எழுப்புவதற்காக அறைக்குள் நுழைந்தாள் சத்தியா. அவர் ஏற்கனவே எழுந்து பெட்சீட்டை மடித்துக் கொண்டிருந்தார்.

“அதுக்குள்ள எழும்பீற்றீங்களா”

“எல்லாம் நிறைஞ்சிருக்கிற மாதிரி இருக்கு சத்தியா”

சந்தானம் முற்றத்தில் இறங்கினார். எண்ணை வைத்துச் சீராக வாரிய தலையாக முற்றம் மிளிர்ந்த போது சத்தியாவின் முகம் முன்னுக்கு வந்தது. வழக்கத்தில், முற்றத்தைக் கூட்டுவதுதான் அவரது முதல் வேலை. இன்று – “ஒன்றுக்கு, இரண்டிற்கு”… எல்லாவற்றையும் தாமதமில்லாமல் முடித்துக் கிணற்றடியில் முழுகி விட்டு வீட்டிற்குள் வந்தார்.

“பிள்ளைகளை எழுப்பேல்லையா”

“இனிமேல்தான்”

முத்துக்குமாரசுவாமி கோயிலில் பத்து மணிக்கு அபிஷேகம் ஆரம்பம். சந்தானம் கந்தசஷ்டி விரதம் பிடிக்கத் தொடங்கி இது ஏழாவது வருடம். இரவில் ஒரு கப் பாலுடன் ஏதாவது பழம் மட்டுமே உணவு. பாறனைப் பூசையோடு விரதம் முற்றுப் பெறும் வரை கடும் ஆசாரம். அந்த ஏழு நாட்களும் அவருக்குத் தேவைகள் அதிகமில்லை. வீட்டு வேலைகள் எதையும் கொடுக்காமல் புருசனை நோக விடாமல் பார்த்துக் கொள்வாள் சத்தியா. அவள் அவரைப் போல முழு உபவாசமில்லை. ஒரு நேர உணவாக ஒரு கீரை ஒரு பருப்பு என்று தனக்கும் பிள்ளைகளுக்குமாகச் சிறிதாகச் சமைத்துச் சமாளித்துக் கொள்வாள். தகப்பனின் சாட்டில் பிள்ளைகளுக்கு இரவில் நிறையப் பழங்கள் கிடைக்கும்.

பிள்ளைகளை வெளிக்கிடுத்தி பள்ளிக்கு அனுப்பியதும் அவர் கோயிலுக்குப் போகும் ஆயத்தங்களைப் பார்த்தாள். அவரது நெற்றியிலும் மார்பிலும் வீபூதி துலங்கியது. இன்னொரு முறை பார்க்க வைக்கும் கம்பீரத் தோற்றம். பரந்த மார்பை பட்டுச் சால்வையால் போர்த்துக் கொண்டு புறப்பட்ட புருசனை வழியனுப்பிவிட்டு பின்னால் நின்று பெருமையோடு பார்த்தாள்.

தெருக்கதவோரம் யாரோ நிற்பது போல ஊசாட்டம் தெரிந்தது. முத்தையாவின் தலைக்கறுப்பைக் கண்டதும் அவனைப் பார்க்க விருப்பமில்லாதவராக கதவைத் திறக்காமலே கதைத்தார் சந்தானம்.

“முத்தையா, அடுத்த கிழமை வா”

அவன் ஒன்றும் பேசாமல் போய் விட கதவுக் கொழுக்கியை மாட்டி விட்டுப் புறப்பட்டார். சந்தியில் திரும்பும் போது நாட்டின் நித்திய நிகழ்ச்சியான “ஐடென்டிகாட் சோதனை” நடந்து கொண்டிருந்தது. அதன் விழுமியங்களில் ஒன்றான “தலையாட்டியும்” ஒரு வாகனத்தில் இருந்தார். பளிச்சென்ற புதிய துவக்குகளுடன் பெண் பொலிசாரும் “தமிலில்” மிரட்டினார்கள். ஐடியை எடுத்து வராதது உறைக்க, கோயிலுக்கென்று வைத்த காலை திருப்ப மனமில்லாமல் நடப்பது நடக்கட்டுமென்று நடந்தார் சந்தானம். விடலைப்பருவ மாணவர்கள் கூட்டமொன்றை வித்தாரமாகச் சல்லடை செய்வதில் குறிப்பாயிருந்த அரச ஆயுததாரிகள் அவரைக் கவனிக்கத் தவறி விட அவர் கோயிலுக்கு விரைந்தார்.

கோயில் லவுட்ஸ்பீக்கரில் சீர்காழி தோத்திரம் பாடிக் கொண்டிருந்தார். கால் கை அலம்பி, காவல் வைரவரை வணங்கிய பின்னர் உள்ளே போய் திருநீற்றைச் சாற்றிக் கொண்டு சாஷ்டாங்கமாக விழுந்தார் சந்தானம். உள்வீதியைச் சுற்றி வந்து, பூரண கும்பங்களுக்கு அருகே சப்பணமிட்டிருந்த ஐயரின் பக்கமாக வந்தார். அபிஷேகம் ஆரம்பமாயிற்று. கோயில் முழுக்க நிசப்தமாக அந்தணரின் வேத பாராயணம் மட்டுமே கேட்டது. ஐயர் சாடை காட்ட சால்வையை இடுப்பில் கட்டிக்கொண்டு பணிவாக அமர்ந்துகொண்டார். பெயர் நட்சத்திரம் கேட்டு அவரது விரலில் தருப்பை அணிவித்து விட்டார் ஐயர்.

ஐயர் கற்பூரத்தைக் கொழுத்தி நுழைக்க அபிஷேகத் தீ சிறிதாக எரியத் தொடங்கிற்று. தொடர்ந்து நெய்யை ஊற்ற தீப்பிழம்புகள் மேலெழுந்தன. பால் பழம் தேன் படிப்படியாக வேள்விக்குள் சொரியப்பட நறுமணப்புகை உட்பிரகாரத்தை நிறைத்துக் கொண்டது. சந்தானம் வைத்த கண் வாங்கவில்லை. தூய்மையும் பக்தியும் நேற்றே அவரைப் பற்றிக் கொண்டு விட்டன. மனத்தை உறுத்தாத உணவும் அதனால் இயல்பாகவே ஏற்படுகிற திமிரற்ற நல்லெண்ணங்களும் ஒரு புனித வளையத்தை அவரைச் சுற்றிப் போட்டிருந்தது.

‘முருகா எல்லாச் சீவராசிகளுக்கும் இந்த அமைதி கிட்ட வேண்டும். ஒன்றையொன்று அழிக்காத ஜீவகாருண்யம் நிலவ வேண்டும். அன்பும் அஹிம்சையும் எங்கும் மலர வேண்டும்’. சந்தானம் எழுந்து நின்று அபிஷேகப் பொருட்களை வேள்வித் தீயிலிட்டார். மிச்ச மீதமிருந்த எல்லா மன அழுக்குகளையும் அந்தத் தீயில் போட்டுப் பொசுக்குவது போன்று அவர் உணர்ந்தார்.

பூசை முடிய ஒரு மணியாயிற்று. திருநீறு சந்தனம் எல்லாம் வாங்கி முறையாகச் சாற்றிக் கொண்டு வெளிப்பிரகாரத்திற்கு வந்தார். இன்றைக்கு அவரது பூசை. விசேட அபிஷேகத்திற்குமாகச் சேர்த்து எட்டாயிரம் ரூபாய் கொடுத்திருந்தார். அவர் ஆட்டோ வண்டியில் ஏற பக்கத்தில் பூசைத்தட்டத்தை ஏற்றி மரியாதையாக வழியனுப்பி வைத்தார் கோயில் கணக்குப்பிள்ளை. வழியில் ஐடென்டிகாட் கோஷ்டியைக் காணவில்லை.

சந்தியால் ஆட்டோ திரும்பியபோது சிறு அசம்பாவிதம். சைக்கிளில் வந்த மீன்காரன் ஆட்டோவோடு முட்டி விட்டான். மீனும் கணவாயும் நிறுவைத் தராசும் தெருவில் அசிங்கமாக விழுந்து சிதற வாய்த்தர்க்கம் வெடித்தது. கைத்தர்க்கத்துக்கும் போய் விடும் அபாயம். விரதகாலமானதால் சரியாக வியாபாரம் நடக்கவில்லை போலும். நட்டத்தை இதில் ஈடுகட்டிவிடும் துடிப்பு மீன்காரனின் காட்டுக் கத்தலில் தெரிந்தது. கொஞ்சமாய் கீறுப்பட்ட தன் வாகனத்தைத் திருத்த உன்னை விற்றாலும் காணாது என்று ஆட்டோக்காரன் இறங்காமலே முறைத்தான். யாரில் பிழை என்று சுற்றி நின்ற சனம் கேட்டது. உள்ளிருந்த சந்தானத்தையும் பூசைத்தட்டத்தையும் மாறி மாறிப் பார்த்தது. மீனும் கணவாயும் கலந்து நாற அவர் அருவருப்புடன் மூக்கை மூடிக்கொண்டார். விரதகாலத்தில் இது தேவைதானா என்ற கவலை வந்தது. மீன்காரனுக்கு ஆதரவு கூடிவிடும் ஆபத்தின் சாயல் தெரிய ஆட்டோக்காரன் சாதுரியமாக சனத்தை விலக்கிக் கொண்டு பறந்தான். வீட்டு வாசலில் காத்திருந்து புருசனை வரவேற்றாள் சத்தியா. அவரது முகத்தில் பசிக்களையைக் கண்டாள்.

அவர் இரவுப் பூசைக்குப் போய்த் திரும்பியதும் சர்க்கரை போட்டுப் பிரட்டிய விளாம்பழத்தையும் கற்கண்டு சேர்த்துக் காய்ச்சிய பசும் பாலையும் சுடச்சுடக் கொடுத்தாள் சத்தியா. மகள் வசந்தி வாய் ஊறியபடி விளாம்பழத்தை விரலால் தொட “அப்பா சாப்பிட்டாப்பிறகு தாறன்” என்றாள். அவர் மகளுக்கு ஒரு வாய் ஊட்டி விட்டு கிண்ணத்திலும் எடுத்துக் கொடுத்தார். ஒரு நாள் விரதத்திலேயே முகத்தில் கொழுப்பு வற்றி வடிவாயிருந்தார்.

விரத நாட்கள் மெதுவாக நகர உடற்பாரம் குறைந்து அவர் இலேசானார். சூரன் போரன்று சுவாமி தூக்கினார். எல்லா மக்களும் சூரக்குணங்கள் ஒழிந்து நிரந்தரத் தூய்மை பெற வேண்டுமென அவர் உள்ளம் முத்துக்குமரனை வேண்டிக் கொண்டது. அன்றிரவு அவித்த மரவள்ளிக் கிழங்கும் மிளகாய் கூடப் போட்டு அரைத்த காரப் பச்சடியும் சேர உபவாசத்தை முடித்துக் கொண்டார். அடுத்த நாள் அதிகாலை பாறனைப் பூசைக்குப் போய் வந்ததும் ஏழு வகை மரக்கறிகள் புடை சூழ வடை பாயசம் மோதகம் சேர்த்து பாறனை செய்தார். வேப்பமரத்து நிழலில் சாய்மனக்கதிரையைப் போட்டு விட விச்ராந்தியாய் கண் மூடினார் அவர். வெற்றிலைத் தட்டத்தை பக்கத்தில் வைத்து விட்டுப் போனாள் சத்தியா.

தெருக்கதவைத் தட்டும் சப்தம் கேட்டது.

“ஆரது”.

“நான்தான் ஐயா”

“ஆ முத்தையாவா வா”ஸஸஸஸபணிவாக வந்து நின்றான் முத்தையா.

“என்ன முத்தையா”

“உங்கட விரதம் முடிஞ்சிற்றுதல்லோ, நாளைக்கு ஞுாயிற்றுக்கிழமை. நிலாவெளியிலிருந்து நல்ல கொழுத்த ஆடு ரெண்டு வந்திருக்கு. பங்கு இறைச்சி கொண்டு வரட்டோ”

“நல்லதாப் போச்சு……ரெண்டு பங்கு தனி இறைச்சியாக் கொண்டு வாவன். எலும்பையும் கொழுப்பையும் போட்டிறாதை என்ன”

பங்கு இறைச்சிக்கு ஓடரைப் பெற்றுக் கொண்ட முத்தையா முகமலர்வோடு இடத்தை விட்டு நகர்ந்தான்.

***

karulsubramaniam@hotmail.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்