வினாக்கள் வியப்புகளாகட்டும்

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

ஜடாயு


விடைகள் கொண்ட வினாக்கள்
மதிப்பெண்கள் பெறுகின்றன
வினாக்கள் கொண்ட வினாக்களே
அறிவுக் கண்களைத் திறக்கின்றன

விடை கிடைக்காத வினாக்கள்
வாழ்க்கை முழுதும் துரத்திக் கொண்டிருக்கின்றன
ஒவ்வொரு வன்முறைக்குப் பின்னும்
ஒவ்வொரு காயத்திற்குப் பின்னும்
ஒவ்வொரு வக்கிரத்திற்குப் பின்னும்
அவை
ஒளிந்து கொண்டிருக்கின்றன

விடையே இல்லாத வினாக்கள்
என்ன செய்வது இவற்றை ?
கேள்விக் குறியின் கோணலை நிமிர்த்துங்கள்
வினாக்கள் வியப்புகளாகட்டும் !

எவ்வளவு அழகாய் இருக்கிறது இந்தப் பூ !
எத்தனை கோடி இன்பங்கள் !
மனித மனம் எத்தனை விசித்திரமானது !
வியப்புகள் அன்றோ வாழ்வின் சுவை !

வெள்ளந்திக் குழந்தையின் வினாக்களும்
வேதாந்த ஞானியின் வினாக்களும்
வியப்புகளின் பரிமாணங்களே
கேள்விகளே வேள்விகள் ஆனால்
அங்கே
புதிய உபநிஷதம் பிறக்கிறது

(c) ஜடாயு (jataayu_b@yahoo.com)

Series Navigation

ஜடாயு

ஜடாயு