பொன்னையா கருணாகரமூர்த்தி
ஏதாவது அலுவலகங்களில் 17 அக்ஷரங்களாலான Karunaharamoorthy என்கிற எனது பெயரை வாசிக்க நேர்ந்தால் வாசித்தானதும் வாசித்தவர் தனக்கு மூச்சிரைப்பதுபோலப் பாசாங்கு பண்ணுவார். சிலர் அந்தப்பெயருக்கு என்ன அர்த்தம் என்றும்வேறு கேட்பார்கள். முதல் வார்த்தையான கருணையே ஜெர்மனில் Barmherzigkeit என்று வரும். அதற்கே 14 அக்ஷரங்கள், முழுவதும் விபரிக்க 100 அக்ஷரங்களுக்கு மேலேயாகும் தேவையா என்பேன், மூர்ச்சையாகிவிடுவார்கள்.
ஒரு தனித்தமிழன்பர் நீங்கள் உங்கள் பெயரை அருளாளநம்பி என்று மாற்றித் தூயதமிழில் வைக்கலாமேயெனப் பரிந்துரைத்தார். ஆனானப்பட்ட மூத்தவரே வடமொழிப்பெயரையும், மஞ்சள் சால்வையையும் விட்டுவிடாது இன்னும் பற்றிப்பிடித்திருக்கும் போது எனக்கென்ன வந்தது?
நமக்குத்தொழில் இங்கு சாரதீயம். வாடகைவண்டி தேவையென்று ஒரு வாடிக்கையாளர் வாடகைவண்டி நடுவத்தை அழைத்ததும் அவர் இருக்கும் பகுதியில் அவருக்கு அண்மையாகவுள்ள வண்டித்தரிப்பிடத்தில் முதலாவதாக நிற்கும் வாடகை வண்டியின் சிறிய காட்சித்திரையில் பயணியின் பெயர் , விலாசம், பயணப்படவுள்ள நேரம், போகவிரும்பும் இலக்கு, குழந்தைகள் இருந்தால் அவர்களின் தொகை, கூடவரும் பயணிகளின் எண்ணிக்கை பற்றிய விபரங்கள் இலத்திரனியல் சமிக்கைகளாக வந்து விரியும்.
அன்றும் அப்படித்தான் எனது திரையில் ஃப்ரான்ஸ் கஃப்கா என்கிற பெயர் வந்து விரிந்ததும் ஃப்ரான்ஸ் கஃப்காவின் தீவிர வாசகனான நான் விபரிக்கமுடியாத பரவசத்துக்கு ஆட்பட்டிருந்தேன். இப்படி ஒரு பரவசத்தை நான் முதன்முறை இந்தத்தொழிலை ஆரம்பித்த அன்றும் அதிசயமாக அஞ்சனா என்கிற ஒரு இந்தியப்பெயர் வந்து என் மொனிட்டரில் விழுந்தபோதும் அடைந்தேன். இந்த கஃப்கா ரேகல் விமானத்தளத்துக்குப் போவதாக இருந்தார். கிட்டத்தட்ட அரைமணி நேரச்சவாரி. மெதுவாக அவரிடம் ’உங்கள் பெயர் ஃப்ரான்ஸ் கஃப்காவென்று இருக்கிறதே……… உங்களுக்கும் கஃப்காவை ரொம்பப்பிடிக்குமா’ என்று கேட்டேன்.
“ ப்ச்…….. அதெல்லாம் என் அப்பன் பண்ணின கூத்து. சிலவேளை அவருக்கு அந்தப்பெயர் பிடித்திருந்திருக்கலாம்.” என்று வேண்டாவெறுப்பாகப் பதில் தந்தார்.
“ ஃப்ரான்ஸ் கஃப்கா எழுத்தாளரெல்லாம் போற்றுகிற பிரமாதமான எழுத்தாளர்.” என்றேன்.
“அதெல்லாம் எனக்குத்தெரியாது. நான் கஃப்காவைப் படித்ததுமில்லை” என்றுவிட்டு வெளியே பார்த்துக்கொண்டு வந்தார். எனக்கும் வேண்டாத விஷயத்தைத் தொட்டுவிட்டோமோவென்றிருக்க மௌனம் காத்தேன். பின் கஃப்காவாகவே தொடர்ந்தார்.
“ அப்பருக்கு கஃப்காவைப் பிடிக்குமென்றால் அவர் தன்னுடைய பெயரைக் கஃப்காவென்று மாற்றிவைத்திருக்கவேண்டும். அவர் எப்படி எனக்குக் கஃப்காவென்று பெயர் வைக்கலாம்………………… எனக்குங்கூடத்தான் முள்ளெலி (Hedgedog/Igel) என்றால் கொள்ளை இஷ்டம். அதற்காக அவரை நான் இனிமேல் முள்ளெலி என்று கூப்பிட்டால் அவருக்குச் சம்மதமா? “
கஃப்கா தன் பெயர் விஷயத்தில் எரிச்சலடைந்திருக்கிறார் என்பது தெரிந்தது.
பேச்சின் திசையை மாற்றி அன்று அவரிடமிருந்து தப்பித்தேனென்று வையுங்களேன்.
பெர்லினில் ஒருநாள் நகர்வலம் வந்துகொண்டிருக்கையில் ஒரு ரெஸ்ரோரென்டின் பெயர் ஏதோ குருகுலம் என்று வித்தியாசமாகப் பட்டது. வண்டியைத்திருப்பி ஒரு வட்டமடித்து வந்து மீண்டும் வாசித்துப்பார்த்தேன். ’குருகுல கர்மா’ என்றிருந்தது. பக்கத்தில் மறிடிம் ப்ரோ ஆர்ட்ட, என் எச், ஜாலி ஹொட்டல், நான்கு பருவ காலங்கள் என்று பல பெரிய ஹொட்டல்கள் இருப்பதால் எப்போதும் சனப்புழக்கம் இருக்கும் ஏரியா அது. இரண்டு வாரங்கள் கழித்து கூட்டம் அதிகம் இல்லாத ஒரு நேரமாகப்பார்த்து அதனுள் நுழைந்தேன். நட்பாகப் புன்னகைத்த பரிசாரகர் கனதியான நெகிழியில் உறையிட்ட மெனுவைக்கொண்டு வந்து தந்தார்.
உள்ளே பார்த்தால் அனைத்துமே லத்தீன் அமெரிக்கவகை மற்றும் பொதுவான அய்ரோப்பிய உணவுவகைகளுமே இருந்தன. பரிசாரகரிடம் பேச்சுக்கொடுத்து ’இந்தியப்பெயரை வைத்துக்கொண்டுள்ள ரெஸ்ரோறெண்டில் ஒரு இந்தியவகை உணவுதானும் இல்லாதது ஏன்’ எனக்கேட்டேன்.
”தனக்கும் தெரியவில்லை, தன் செஃப்பை (முதலாளியை) க் கேட்டால் பதில் தெரிய வரலாம்” என்றார்.
“உங்கள் முதலாளியை நான் எப்போது பார்க்கலாம்?” என்று கேட்டேன்.
“ தன் பிள்ளையைப் பள்ளியிலிருந்து கூட்டிவரப்போயிருக்கிறார் ஒரு அரைமணி நேரத்துக்குள் எப்படியும் வந்துவிடுவார்” என்றார்.
ஒரு சலாட்டுக்கும் கோப்பிக்கும் வரவழைத்துச் சாப்பிட்டுகொண்டிருக்கவும் பரிசாரகர் தன் செஃப் வந்துவிட்டதாகவும் சாப்பிட்டு முடித்தானதும் நீங்கள் அவரை நேரே அலுவலக அறையுள் சென்றுசந்திக்கலாம்……… உங்கள் ஆர்வத்தைத் தெரியப்படுத்தியிருக்கிறேன் என்றும் சொன்னார்.
என்னை ஒரு ஜெர்னலிஸ்ட் என்று அவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டேன். சில பத்திரிகையாளர்கள் தங்களுக்குப்பிடித்த உணவகங்கள் பற்றித் தங்களுக்குப் பிடித்த பத்திரிகைளில் சுருக்கமாக எழுதுவதுண்டு. இது அவர்கள் வியாபாரத்துக்கு ஆதாயமாகிவிடுவதுண்டு. அதனால் அவர் என்னை ஒரு கனவானைப்போல வரவேற்றார். எனது கேள்வியை நேரடியாகவே அவரிடம் கேட்டேன். ஸ்பானிஷ் உச்சரிப்புடன் அவர் ஜெர்மன் பேசிய பாணியில் அவரும் ஜெர்மன்காரர் அல்ல என்பது தெரிந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடத்தில் ஒரு ஸ்பானிஷ் -கொலொம்பிய ரெஸ்ரோறென்ட் இருந்ததாகவும் அதையே தான் வாங்கிச் சில உள்ளக மாற்றங்கள் செய்துகொண்டு புதிதாக ஆரம்பித்தாகவும் சொன்னார். வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவகத்தின் பெயரைமாத்திரம் கொண்டு அங்கே எந்த நாட்டுவகை உணவுகளுள்ள உணவகம் என்று தெரிந்துவிடாதவகையில் ஒரு பெயரைத்தேடியபோது ஒரு ஜெர்மன்காரர்தான் தனக்கு அந்தப் பெயரைப் பரிந்துரைத்ததாகவும் சொன்னார். பொதுவாக புதிதாக உள்ள எதையும் பரீட்சித்துப்பார்க்கும் ஆர்வம் ஜெர்மன்காரர்களுக்கு மிக அதிகம். Neugierigkeit என்பர்
இப்போ நீங்கள் சொல்லித்தான் அது இந்தியமொழியிலான பெயரென்று தெரியவருகிறதென்றும் சொன்னார்.
நானும் குலகர்மா என்கிற புதைக்கப்பட்ட பிணத்தை மீட்டெடுத்து அவருக்குக் காட்ட விரும்பவில்லை. அவரும் அதன் அர்த்தத்தை என்னிடம் கேட்கவில்லை. அடுத்தமுறை குடும்பத்துடன் வந்து விருந்தாடச்சொன்னார்.
இன்னொரு உணவகத்தின் பெயர் ’கர்மா’. ஆனால் அதன் சொந்தக்காரர் ஒரு இந்தியர். இராஜஸ்தான்காரராக இருக்கவேண்டும். மிக மட்டமான உணவு. ஒருமுறை தமிழகத்திலிருந்து வந்திருந்த ஒரு கவிதாயினியையும் அவர் கணவரையும் அங்கே அழைத்துப்போயிருந்தேன். அவர் பிரியாணியில்” நெய்யின் வாசமே இல்லை இன்னாய்யா பிரியாணி இது…?” என்று பரிசாரகரின் கழுத்துப் பட்டியைப்பிடிக்காத குறையாக உலுப்பவும் அவர் பயந்தே விட்டார். ஆனாலும் என் நண்பன் ஒருவனுக்குப் பிடித்தமான பூச்சிமருந்து மணம் வீசும் ’ஓல்ட் மொங்’ அங்கு கிடைக்குமாதலால் அடிக்கடி அங்கு போவோம். இன்னும் பெயரிலேயே இந்திய உணவகம் என்று தெரியவேண்டும் என்பதற்காக கங்கா, காவிரி, காந்தி , புத்தா என்றெல்லாம் பெயர்களை வைத்துக்கொண்டு தண்டூரி சிக்கனும் , பன்றி கிறிலும் , கொத்துரொட்டியும் பண்ணிக் கொண்டிருக்கிற பல உணவகங்கள் ஐரோப்பாவின் மூலை முடுக்கெங்கணும் இருப்பது தெரிந்ததுதானே?
இன்னும் வேடிக்கையான பெயர்களைக்கொண்ட சில உணவகங்கள் அல்லது பார்கள்:
Allein stehende Frau – தனிமைப்பெண்.
Beer 1000
Besenkammer – துடைப்பங்கள் வைக்கும் அறை
Bla Bla Bla
Freaks Ecke – Freaks Corner
Extraklein – மிகவும் சின்னது
Geraeuchskammer – சத்தமான அறை
Ficken 2000 – முயங்கல் 2000
Frau mit Monk – துறவியும் ஸ்திரியும்
Froeliche Frosch – சந்தோஷத்தவளைகள்
Gemuetliche Dicke – Jovial / Homely குண்டுமாமா
Kumpelnest – நண்பர்களின்கூடு
Rundecke – வட்டமான மூலை
Scharf Edge – கூரான விளிம்பு /வாதாரை
Was du willst – நீ விரும்புவது
White Rash –
Bastard –
Flirt Café-
Bunte என்பது இங்கே Rheinland மாநிலத்தில் ஒரு நகரம். பெயர். அங்கே நம் தமிழர்கள் போய் தொழில் தேடவோ , குடியிருக்கவோ விரும்புவதில்லை. அங்கே குடியிருக்கும் ஒருவரை நீர் எங்கே இருக்கிறீர் என்று கேட்டால் பலவாறும் நெளிவாரே தவிர உடனே பதில் சொல்ல மாட்டார். காரணம் அவ்வூரின் பெயர்தான். அதைச்சரியாக ஜெர்மனில் உச்சரித்தால் அசலாக நம்ம பக்கத்துக் கெட்டவார்த்தையைப் போலவே ஒலிக்கும்.
Bunte என்பதற்கு வர்ணங்கள் என்று ஒரு அர்த்தமும் உண்டு. இன்னும் Bunte என்றொரு பெண்கள் மாதாந்தியும் இருக்கிறது. இருந்தும் அங்கேபோகும் ஒருவரை ” எங்கே போகிறாய்? ” என்றொரு தமிழர் கேட்டால் “ பண்டாவுக்கு “ என்றுதான் சொல்வார். இலக்குப் புரியப்படும்.
ஜெர்மன் மொழியில் இன்னுமொரு சிரமம். ஊரில் நமக்கு 5 கிலோ புண்ணாக்கு தேவையாக இருந்தால் ஒரு கடையில் போய் நாம்
புண்ணக்கு/புள்ணாக்கு/புள்நாக்கு/புண்நாக்கு/புணாக்கு/பும்நாக்கு/புநாக்கு/புன்னாக்கு/புன்னக்கு/புநாக்கு/பும்நாக்கு/புணாக்கு/புண்ணொக்கு/புண்ணோகு/பிண்னக்கு/பிண்நக்கு/பின்நக்கு/பின்னக்கி/பின்னாக்கு/பிண்ணக்கி/பிண்ணாக்கு/பூணாக்கு இவ்வாறு எப்பிடித்தான் சொன்னாலும் நம்மாளுக்குப் புரிந்திடுமில்லையா?
ஜெர்மனில் அதுதான் நடக்காது ஒருவார்த்தையை அச்சொட்டாய் உச்சரிக்காமல் காலேஅரைக்கால் மாத்திரை அசைத்துச்சொன்னோமாயின் புரியமாட்டான் , உங்களை வேற்றுக்கிரகத்துஆசாமியைப்போலப் பார்த்துக்கொண்டு நிப்பான் இவன். சில இடங்களில் வெகு ஜாக்கிரதையாக இருக்கத்தான் வேண்டும்.
Nidersachsen என்கிற மாநிலத்தில் Voitze என்னும் ஒரு சிறிய நகரமுமிருக்கிறது, நம்மவருக்கு மிகவும் ஆபத்தானது. ஆபத்தென்பது அந்தப்பெயரில்தான். ஜெர்மனில் சிலவார்த்தைகளில் முதல் எழுத்தாக V வந்தால் அது ஆங்கில F ஐப்போல் உச்சரிக்கப்படும். உம்: Volkswagen என்பதை Folkswagen என்றேதான் சொல்வர். அவ்வாறே இங்கும் Voitze என்பதை Fo என்று ஆரம்பித்து நடுவில் வரும் i ஐயும் ’இய்ய்ய்’ என்று எக்ஸ்டிரா அழுத்தி Fo- iiit -ze என்பதுபோல் உச்சரிக்கவேண்டும், அப்படி அழுத்தாமல் சும்மா Fotze என்றோமாயின் கதை கந்தலாகிவிடும். பெண் இலிங்கத்தை இழித்துச்சொல்லும் மரபில் ஒரு பலான கெட்டவார்த்தை அது!
இன்னும் ஜெர்மனில் தொங்கிகொண்டிருக்கும் வஸ்துக்களை/அங்கங்களை எல்லாம் Schwanz என்றுதான் சொல்வர், அந்த வகையில் ஒரு நாயின் வாலும் Schwanz தான் அதன் லிங்கமும் Schwanz தான்!
CNN இல் வணிகத்துறை சம்பந்தப்பட்ட செய்தி வாசிப்பார் ஒருவர். அவரது குண்டுக்கண்கள் ஒரு தவளையினதைப்போல வெளிப்பிதுங்கிக் கொண்டிருக்கும். மிகவும் மெலிந்து ஒல்லியான தாடை எலும்புகள் வெளியேதுருத்திக்கொண்டிருக்கும் அவரை முதன்முதலில் பார்த்தபோது ’என்ன இவர் ஒரு தேரையைப்போலிருக்கிறாரே’ என்றுதான் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். சற்று நேரத்தில் அவரது பெயர் திரையின் அடியில் தோன்றியது Mr.Todd. அது Toad (தேரை) என்பதுபோலில்லை?
இன்னொரு ஜெர்மன்காரரின் பெயர் Zufall. அதாவது தற்செயலானது ஒரு விபத்தைப்போல, இவரும் தற்செயலாகத்தான் ஜனித்திருப்பாரோ?
பிரசவவலியை அனுபவித்தவர்களிடமே அந்தவலியை நினைவுபடுத்த நமக்கு அதிகம் வார்த்தைகள் தேவையிராது. உங்களுக்கும் எப்போதாவது ஒரு விருந்திலோ அல்லது வேறெங்கிலுமோ பரிச்சயமில்லாத திராவகங்கள் எதையாவது அதிகமாக உள்ளே விட்டுக்கொண்டு அவஸ்த்தைப்பட்ட அனுபவங்கள் இருந்திருக்கும். அது வாந்தியாக வெளியேவந்து தொலைக்குமுன் அது உங்களைப் படுத்துமே ஒரு பாடு. அந்த உணர்வை ஜெர்மனில் Uebel என்பர். அந்த அவஸ்த்தையைக் குறிப்பாகச்சுட்ட எனக்குத்தெரிந்தவரையில் குமட்டல் என்பதைத்தவிர தமிழில் வேறு வார்த்தைகள் எதுவும் இருப்பதாகத்தெரியவில்லை. இதே Uebel என்பதற்குள்ள இன்னொரு அர்த்தம் Devil என்பது. காருண்யாவின் (என் மகள்) ஆசிரியர் ஒருவரின் பெயரும் Uebel என்பதுதான். அப்பெயரின் பொருள்பற்றி காருண்யா அவரிடம் வியந்தபோது அவர் வெகு இயல்பாகச்சொன்னது:
“நான் ஒருவேளை என் அம்மாவின் கணவனின் உயிரியல் குழந்தையில்லையோ?”
அப்படி இன்னொருவர் பெயர் Geraeuch. அதாவது சத்தம். இரைச்சல் பேர்வழி.
அப்படியே கம்பியாணி, கலப்பை, கடப்பாரை, முள்ளுக்கரண்டி, கற்றாழை, இடைஞ்சல் என்கிற அர்த்தத்தில் எல்லாம் ஜெர்மன் பெயர்கள் இருப்பது தெரிந்ததுதான்.
பொதுவாக எவருக்கும் புலம்பெயர்ந்து வாழநேர்ந்தால் தாய்மொழியின் மீதான ஈர்ப்பும் காதலும் அதிகமாகிவிடும். அப்படியாக ஈர்ப்புடன் அய்ரோப்பாவில் வாழும் தமிழர்கள் தம் பிள்ளைகளுக்கு தூய தமிழ்ப்பெயர்களையே தேடித்தேடி வைப்பார்கள். சிலர் லத்தீன், கிரேக்க வேரிலிருந்துவரும் பெயர்களையும் ஃபிரெஞ்சு, ஜெர்மன் பெயர்களையும் வைத்துவிடுவதுண்டு. இந்த எதுக்குள்ளும் அகப்படாதிருக்கும் சில விநோதப் பெயர்களைப்பற்றியும் சொல்லி இதை நிறைவுசெய்ய விருப்பம்.
ஒரு இந்துப்பெற்றோரின் பெண்ணுக்கு பெயர் கதீஜா. அது ஒரு இஸ்லாமியப்பெயர் என்கிற விபரமே அவர்களுக்குத்தெரியாது. (ஒரு இந்து இஸ்லாமியப்பெயரை வைத்திருக்கப்படாது என்ற அர்த்தம் இங்கில்லை) அப்பெயர் பற்றி மேலும் அவர்களிடம் விசாரித்ததில் பின்வரும் தகவல் கிடைத்தது. அப்பா பெயர் கதிரேசன். அம்மா பெயர் சறோஜா. இருவர் பெயர்களையும் பிரித்து துண்டுகளை மாற்றி ஒட்டியதில் கதீஜா என்றபெயர் கிடைத்ததாகத் தகவல் வந்தது. மீதிப்பாதிகளையும் பிரித்துப்பிரித்து ஒட்டினால் இன்னும் எத்தனை பெயர்கள்தான் ஜனிக்குமோ?
இத்தாலியிலிருந்து தமிழ்பத்திரிகையில் முழுப்பக்கப்படமும் அறிவிப்பும் கொடுத்து அட்டகாசமாகப் பிறந்தநாள் கொண்டாடியவொரு தமிழ்க்குழந்தையின் பெயர் ஜோனியா. அதை யோனியா என்றுதான் மாற்றி எழுதினாலும் விபரீதந்தான். ஆய்ந்ததில் நம்மவர் பெயர்களில் பலவகை இலிங்கங்களை இணைத்துச் சூடிக்கௌரவம் செய்ததுபோல் , யூதர்களும் தொன்மங்களில் ஜோனியை மகிமைப் படுத்தியிருப்பார்களோ என்னவோ ஹீப்ருமொழியில் Yoniya என்னும் பெயர் உண்டு. ப்ரெஞ்சிலும் ஹீப்ரூ வேருடனான Johnnia, Johnnie என்கிற பெயர்கள் உண்டுதான் ஆனாலுமவை Jonna என்றே உச்சரிக்கப்படும்.
இன்னும் இங்குள்ள தமிழ்மறவர் தம் குழந்தைகளுக்குச்சூடியுள்ள விநோதமானதும் அர்த்தமற்றதுமான பெயர்கள் சில……………….
ஷறீகா, ஷறீகன், ராவண்யா, ஷயானா, டிலக்ஷன், உபேர், உபேஷ், உகேஷ், சோ, லபூனா, டமீத்தா, ஜஷிகா, ஜஷிகன், றஷ்வர், றொஹொன், றொபேஷ், சாரணா, சஜானா, ரக்ஷணா. இந்தப் பெயர்ப்பட்டியல் இன்னும் நீண்டுவரும். எனக்குத்தான் எழுதச் சலிப்பு வருகிறது.
06.06.2010 பெர்லின்.
- கொருக்குப்பேட்டை: தனிநாடு கோரிக்கையின் தார்மிக நிலைப்பாடு (ஒரு கற்பனை ரிப்போர்ட்)
- யாரிடமும் சொல்லாத சோகம்
- ஜன்னல் பறவை:
- தொலைவானில் சஞ்சரிக்கும் ஒற்றைப் பறவை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் – காதல் என்பது என்ன ? கவிதை -28 பாகம் -4
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -10
- ஆ·பிரிக்காவின் ஓக்லோ யுரேனியச் சுரங்கத்தில் இயங்கிய பூர்வீக இயற்கை அணு உலைகள் கண்டுபிடிப்பு ! (Fossil Reactor & Geo-Reactor)(கட
- நிகண்டு = எழுத்தின் அரசியல்
- பார்வை: பல நேரங்களில் பல மனிதர்கள்/ பாரதி மணி
- பத்துப்பாட்டுணர்த்தும் மலர்ப்பண்பாடு
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -15
- நற்றமிழ் வளர்த்த நரசிம்மலு நாயுடு
- தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம்(சிங்கப்பூர்) வழங்கும் இம்மாதத்திற்கான பட்டிமன்றம்
- கம்பராமாயண முற்றோதல் நிறைவு விழா
- அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் நடத்திய சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப்போட்டி முடிவுகள்
- பாரிசு நகரில் தமிழ் இலக்கிய விழா 12 -ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்
- திரு. மு. சிவலிங்கம் அவர்களின் விழி வேள்வி (விகடன் பிரசுரம்) என்னும் நூல் வெளியீடு விழா
- வேத வனம் விருட்சம் 86
- வலி
- விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபtத்திரெண்டு
- அன்பாலே தேடிய என்…
- பெறுதல்
- முள்பாதை 30
- கிடை ஆடுகள்
- பொது நீராதாரத்தில் பாகிஸ்தானின் குயுக்தி
- A Travel to Grand Canyon (ஃக்ராண்ட் கன்யானுக்குள் ஒரு பயணம்)
- புறத் தோற்றம்
- கால்களின் அசமகுறைவு
- மலேசியா ஏ.தேவராஜன் கவிதைகள்
- யாழ்ப்பாணத்துத்தமிழ் -மொழி- இலக்கியம்- பண்பாடு
- முப்பது ஆண்டுகளில் பரிதி மண்டல விளிம்பைக் கடந்த நாசாவின் வாயேஜர் விண்கப்பல்கள் ! (Voyager 1 & 2 Spaceships)
- நினைவுகளின் சுவட்டில் -(48)
- விநோதநாம வியாசம்
- இரண்டாவது முகம்
- களம் ஒன்று – கதை பத்து -முதல் கதை -உதட்டோடு முத்தமிட்டவன்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -18
- அம்மாவின் கடிதம்
- நண்டு