திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்
‘உதவி ஒத்தாசை ‘ செய்வது என்பதற்கு பரிமாணங்கள் நிறைய. கேளாமலே செய்வது. கேட்டுச் செய்வது. கேட்டும் செய்யாமலிருப்பது. பேருக்காகச் செய்வது. பின்னுக்கு உதவும் என்று காரியத்தோடு செய்வது. விட்டாக் கானும் என்று வேண்டா வெறுப்பாகச் செய்வது, உதவி செய்து விட்டு உபத்திரவமாகவும் இருப்பது. நாலு பேருக்குத் தெரிய புளுகுனித்தனத்தில் ‘ஓம் ‘ பட்டுவிட்டு இரண்டாம் பேருக்குத் தெரியாமல் கையை விரிப்பது, அலைக்கலைத்து ஏய்ப்பது, ஒளித்துத் திரிவது, வீட்டில் இல்லையென மனைவி மூலம் சொல்வது, நாயை அவிழ்த்து விடுவது .. .. .. .. இப்படிப் பல. மனிதர்கள் தம் வாழ்க்கையில் ஏதோவொரு கட்டத்தில் இந்தப் படிகளில் ஒன்றிலோ அல்லது சிலவற்றிலோ தங்களை இனம் கண்டு கொள்கிறார்கள்.
செல்வம் – கேளாமலே செய்ய நினைக்கிற ரகம். நினைத்தாலும் வாய் விட்டுக் கேட்கக் கூச்சப்படுபவன். சலூனை இன்னும் வெளிச்சமாக்கலாமே என்று அந்தோனியிடம் சொன்னது – அவராகக் கேட்கட்டும் என்றுதான். கேட்டால் பத்தோ பதினைந்தோ கொடுப்போம், திருப்பித் தராவிட்டாலும் பரவாயில்லை என்ற தீர்மானம். வேறு யாருக்காவது இப்படி வாய்ப்புக் கிடைத்திருந்தால் மலாரடியாக வாய் வைத்திருப்பார்கள். அந்தோனி அந்த வல்லமை இல்லாதவர்.
கதைப் பிராக்கில் சற்றும் எதிர்பாராமல் தம்பி ஜெயத்தைப் பற்றி அந்தோனி கேட்டதும் செல்வத்தின் எண்ணம் திசை மாறிவிட்டது. நானூறு ரூபாயை அப்படியே பொத்திக் கொடுத்துவிட்டு அதுவாவது அவரை முழுதாகச் சேரட்டும் என்ற விருப்பத்தில் அப்பதான் ஏதோ அவசர சோலி ஞாபகத்தில் வந்தவனைப் போல் நடை கட்டினான்.
தெருவில் நாலு எட்டு வைக்கவில்லை – சிறுக்கென்று தோளை உராய்ந்து ஊடறுத்துச் சென்ற ஆட்டோவுக்குள் – ஆரது செவ்வந்தியா ?.. .. .. ஏய் செவ்வந்தி – தடுமாறி சத்தமிட நினைப்பதற்குள் ஆட்டோ கூப்பிடும் எல்லையைத் தாண்டிவிட்டது.
தலைமயிரை வெட்டாற்று வாங்கோ பக்கில் தண்ணி இறைச்சு வைக்கிறன் என்று தங்கை சொல்ல நீ உன்ர வேலையைப் பாரம்மா என்று சொல்லிவிட்டு சலூனுக்கு வந்தவன்தான். திடாரென எங்கு போகிறாள் ? ஆரது பக்கத்தில் கிழவி ?
அவனுக்கு முடுக்கிக் கொண்டு வந்தது. வேகமாக நடந்தான் வீட்டுக்கு. ஆட்டோ சந்தியால் திரும்பி விட்டதா என நடந்து கொண்டே திரும்பிப் பார்த்தான். பாய்ந்து போன ஆட்டோ சடசட சத்தத்தோடு சந்தியில் நின்று கொண்டிருந்தது. இரண்டு துப்பாக்கி ஆமிகள் பக்கத்தில் நிற்பதும், ஆட்டோவிலிருந்து அறிமுகஅட்டையை நீட்டிய காப்பணிந்த செவ்வந்தியின் கையும் தெரிந்தது. ஆமியைக் கண்டால் அறணையைக் கண்ட மாதிரி அவனுக்கு.
‘பொங்கல் மூட்டத்தில வீட்டில நிக்காம எங்க போறாள், வரட்டும் இன்டைக்கு ‘
தீப்பெட்டிக் குச்சை உரைச்ச மாதிரி பளீரென்று கிளம்பியது ஆத்திரம். காலுக்கும் கைக்குமாக ஆமி நிற்கிற ஊரில் தனித்துப் போகிற தங்கச்சி கரச்சலின்றி திரும்பி வரவேண்டுமே என்ற ஏக்கம் சார்ந்த ஆத்திரம். தொத்துப்பறியில் காட்சிகள் மாறிப் போகிற ஊர் இது. குளிச்சு முழுகி சாமி கும்பிட்டு நிம்மதியாக சாப்பிட சப்பாணி கொட்டுகிற நேரம் பார்த்து குண்டு வெடிக்கும். வாய்க்குள் போன கவளம் தொண்டைக்குள் சிக்கிக் கொள்ளும். விக்கல் விட்டு விட்டு வரும்.
மாமர உச்சியில் ஒரு நோஞ்சான் கொப்பில் காலைத் தாங்கிக் கொண்டு எட்டாத கொப்பில் தொங்கும் முற்றிய காயைப் பறிக்க கை நீட்டுவான் ஜெயம். அப்பா கண்டு விட்டு குத்துக்கரணம் அடிப்பார்.
“டேய் தம்பி இறங்கடா தொத்துப்பறியில நிக்காதை கவனம் கவனம் ”
கொப்பிலிருந்து சறுக்காமல், காலில் சிராய்ப்பில்லாமல் அடிகிடி படாமல் இறங்கும் வரைக்கும் பதைபதைப்புத்தான். தலைகிலை எல்லாம் வியர்த்து வழிந்துவிடும். இனி ஏறினாயென்டால் காலை முறிச்சுப் போடுவன் றாஸ்கோல் என்று கத்துவார். அது ஆத்திரமா, கோபமா, சினமா, பயமா ?
வேட்டியைப் போல சால்வை, அப்பரைப் போல பிள்ளை. ‘சால்வை ‘ முணுமுணுத்துக் கொண்டே உள்ளே வர, விறாந்தையிலிருந்து பேப்பர் பார்த்துக் கொண்டிருந்த ‘வேட்டி ‘ கேட்டது.
“என்ன தம்பி புறுபுறுத்துக் கொண்டு வாறாய்”
“ஒன்டுமில்லை”
அவனுக்கு சின்னம்மாவோடுதான் இப்ப கதை. இருந்த ஆத்திரத்தில் முடிவெட்டியதை மறந்து விறாந்தையில் ஏறிவிட்டான்.
“தம்பி கிணத்தடிக்குப் போ வாறன்.”
அடுப்படியில் இருந்த சின்னம்மாவுக்கு மணந்து விட்டது. முடி வெட்டிவிட்டு வந்தால் நேரே கிணற்றடிக்குத்தான் போக வேனும். அம்மாவின் கண்டிப்பான கட்டளை. அங்கு சாறன் துவாய் முழுகச் சீயக்காய் எல்லாம் காத்திருக்கும். தப்பித் தவறி விறாந்தையில் ஏறினால் அவ்வளவுதான். மயிர் வெட்டின துடக்கோடு வீட்டுக்குள்ள வந்திற்றியோ என்று வையத் தொடங்கினால் விறாந்தை கழுவி அது காய்ந்த பிறகும் சத்தம் நிற்காது.
அம்மாவுக்கும் சின்னம்மாவுக்கும் இந்த மாதிரி விசயங்களில் மகா ஒற்றுமை. செல்வம் கிணற்றடிக் கொடியில் சட்டையைக் கழட்டி எறிந்து விட்டு சின்னம்மாவிற்காக கறுபுறுவென்று காத்திருந்தான்.
“நல்லா ஒட்ட வெட்டிப் போட்டான் போல கிடக்குது.”.. .. .. சின்னம்மா சீயக்காய் ஏனத்தை பக்கத்தில் வைத்துவிட்டுக் கேட்டாள். சின்னம்மா சொன்னதை அவன் கண்டு கொள்ளவில்லை. உள்ளுக்குள் அடுப்பு பற்றிக் கொண்டிருந்தது.
“சின்னம்மா செவ்வந்தி எங்க ?”
சொல்ல மறந்திற்றன் என்று சொல்லத் தொடங்கினாள் சின்னம்மா
“இதில உவர்மலைக்கு. இப்ப வந்திருவாள்.”
கோயிலோ டியூசனோ, எங்கு போவதென்றாலும் அவன்தான் செவ்வந்தியைக் கூட்டிப் போவான். அவன் இல்லாவிட்டால் அப்பா. அவருக்கும் முடியாவிட்டால், தம்பி கூடப் போவான். ராணியோ சாந்தியோ தனித்துப் போனது கிடையாது. பள்ளிக்கூடத்துக்கு மட்டும் கூடப்படிக்கிற பிள்ளைகளோடு போய் வருவார்கள். அப்படி வளர்ந்தவர்கள்.
“உவர்மலைக்கா ? ஏன் தனிய அனுப்பினீங்க ? ”
“அது ஒன்டும் பயமில்லையனை. உவர்மலை முந்தியப் போல இல்லை. முழுக்க தமிழ்ச்சனம்தான்.”
“நான் அதைச் சொல்லேல்லை. இவளுக்கென்ன அவசரம் இப்ப அங்க போறதுக்கு. ஆரந்தக் கிழவி ?”
செல்வத்தின் ஆத்திரம் கொழுகொம்பில் துளிர்விட்டுப் படர்ந்த வெற்றிலைக்கொடி போல செவ்வந்தியில் ஏறி சின்னம்மாவில் பரவி கிழவியில் வந்து நின்றது.
“இஞ்ச விடு தலை தேய்ச்சு விடுறன்”
“நீங்க கதையை மாத்தாதீங்க. பொங்கல் நாத்தில குமர்ப்பிள்ளையை உவர்மலைக்கு விட்டுட்டு நிக்கிறீங்க”
இப்படித்தான் அப்பாவும் ஒன்றென்றால் ஒன்பதாய்க் குதிப்பார். அதே குணம். அதே பாய்ச்சல். அதே பயம். அதே வாரப்பாடு. சிரித்தால் அவன் இன்னும் ஆத்திரப்படுவான் என்பதால் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டே சொன்னாள் சின்னம்மா.
“அது தம்பி, தம்பலகாமத்து மனுசி. அவணம் அவணமா நெல் அளந்து சீவிச்ச குடும்பம். பிறந்து வளந்த இடத்தில இருக்கேலாம சனம் ஓடேக்குள்ள இதுகள் மாங்குளத்துக்குப் போச்சுதுகள். அங்கயும் இருக்க விடாம விதி துரத்திப் போட்டுது. குண்டு போட்டதில மனுசியும் குமராகிற வயசில பேத்தியுந்தான் குடும்பத்தில மிஞ்சினது. தப்பினம் பிழைச்சம் என்டு ஊருக்கு ஓடி வர வவுனியாவில பிள்ளைக்கு ஐடிகாட் இல்லையென்டு நிப்பாட்டிப் போட்டான். மனுசி இங்க வந்து அலைஞ்சு உலைஞ்சு திரிஞ்சுது. சாப்பிட வழியில்லாம அந்தோனியார் கோயிலுக்கு முன்னால இருந்து பிச்சையெடுத்துது. பாவமென்டு செவ்வந்தி ஒருநாள் கூட்டிவந்து சாப்பாடு குடுத்தது. விதானையிட்டை கேட்டுப் பாத்தம். றெட்குறொஸ் கந்தோருக்குப் போய்க் கதைக்க. பெரியவன் வந்தவுடன வரச் சொன்னாங்கள். நீ சலூனுக்குப் போன கையோட மனுசி வந்து நிக்குது. பெரியவன் வந்திருக்கிறானாம். ஆளைவிட்டாப் பிடிக்கேலாதாம்”
‘விக்கிரமாதித்தன் பெருங்கதை ‘ சொல்லி நிறுத்தினாள் சின்னம்மா. அவனுக்கு விசர் இன்னும் கூடிற்று.
“பெரிய ஆள் இவ, போன உடன இந்தா கூட்டாற்றுப் போ என்டு விட்டுறுவாங்கள் என்ன! தான் போக வழியில்லை. மூஞ்சூறு விளக்குமாத்துக்கட்டையும் இழுத்துக் கொண்டு போச்சுதாம்”
சின்னம்மா வாய் திறக்கவில்லை.
“நாங்களே வழி தெரியாம முழிச்சுக் கொண்டு நிக்கிறம். இவ போயிற்றா இன்னம் பிரச்சனையை விலைக்கு வாங்க”
“பாவந்தம்பி மனுசி. இன்டைக்கோ நாளைக்கோ குமராகிற வயசு பெட்டைக்கு. ஆறு மாசமா ஆமி முகாமில விட்டுட்டு மனுசி விடுற கண்ணீரை ரெண்டு கண் கொண்டு பாக்கேலாது. அங்க நடக்கிறதை பேப்பரில பாத்தா நெஞ்செல்லாம் பதறுது. எத்தனை இடங்களில பிள்ளைகளைக் கற்பழிச்சு மண்ணில புதைச்சும் போட்டாங்கள். கேக்க எடுக்க ஆளில்லாத மாதிரி எல்லாம் நடக்குது. ஏதோ எங்களால முடிஞ்சதைச் செய்தா அந்தப் புண்ணியமென்டாலும் எங்கட பிள்ளையைக் கொண்டு வந்து சேர்த்திராதா தம்பி”
சின்னம்மாவின் தொண்டை கரகரத்துக் கேட்டது. கண்ணீர் விடப் போகிறாள் என்று அர்த்தம். தராசுத் தட்டில் படியைத் தூக்கிப் போட்ட மாதிரி சட்டென்று ஆத்திரம் கீழே இறங்கிற்று.
“சரி சரி நீங்க தொடங்காதீங்க. என்னன்டாலும் பிள்ளையை தனிய விட்டிருக்கக் கூடாது. அப்பிடியென்ன அவசரம். கொஞ்சம் நின்டிருந்தா கூட நானும் போயிருப்பனே”
“தம்பி பயப்பிடாதயனை. ஐஞ்சு வருசமா அங்க இருந்திட்டு வந்தனி. அதுதான் ஒன்டென்டோனை பதகளிக்கிறாய். இங்க சனத்துக்கு கஷ்டமும் துன்பமும் பட்டுப் பட்டு பழகிப் போச்சுது.”
“அதுக்குச் சொல்லேல்லை சின்னம்மா. பேசி எல்லாம் முற்றாயிருக்கிற நேரத்தில இப்பிடி தனிய ஏறியிறங்கிறதைப் பாத்தா சனம் என்ன நினைக்கும் ”
“ஒன்டும் நினைக்காதுகள். நீ மனதைப் போட்டுக் குழப்பாதை”
கதைத்துக் கொண்டே தலையைத் தேய்த்து முடித்து விட்டாள் சின்னம்மா. இரண்டு சருவச்சட்டி தண்ணீர் அள்ளி தலையில் வார்த்துவிட்டு இனி தலையில வாரனை என்று சொல்லிவிட்டு நடந்தாள்.
கொஞ்ச நேரத்தில் வீடு கழுவும் சத்தம் கேட்டது. விளக்குமாறால் தண்ணீரை வாரிக் கூட்டித் தள்ளும் ஓசை. அவன் தலையை உணர்த்திக் கொண்டே குசினி வாசலால் வீட்டிற்குள் ஏறினான். அடுப்பில் வெந்தயக் குழம்பு வாசம்.
“சின்னம்மா பொங்கல் சாமான் வாங்கிறேல்லையா ? ”
“துண்டு எழுதி வைச்சிருக்கிறன். முதல்ல சாப்பிடு”
செல்வத்திற்கு தீபாவளி சித்திரைவருசம் தைப்பொங்கல் நாளென்றால் நித்திரை வராது. பசி எடுக்காது. எல்லாம் நிறைந்த மாதிரி ஒரு முட்டாயிருக்கும். இப்ப அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் மனதிற்குள் சின்ன மத்தாப்பு.
‘தைப் பொங்கல் ‘.
பொங்கலன்று சூரியன் கிழக்கில் தலை காட்டுகிற அந்தக் கணம்தான் முக்கியம். தென்னோலைக்கிடையில் நுழைந்து நடு முற்றத்தில் ஒளிக்கீறுகள் விழுகிற நேரம். கிழக்கு வெளிக்கத் தொடங்கிய உடனேயே அடுப்பிலிருக்கிற பொங்கல் பானையில் இரண்டு கையாலும் அரிசியை அள்ளிப் போடும்படி அப்பாவிடம் சொல்வாள் சின்னம்மா. பச்சைக் குழந்தையை வாங்கி தொட்டிலில் போடும் பக்குவத்தோடு அப்பாவும் அரிசியை பானையில் இடுவார்.
செல்வத்திற்கு மிகவும் பிடிக்கிற நேரமோ வேறு.
அது பொங்கலுக்கு முந்திய இரவு. பட்டாசுகள் வெடிக்கிற இரவு. சீனவெடிக்கட்டுகளும் மத்தாப்புகளும் வாங்கி வருவார் அப்பா. முழுக்கவும் கொளுத்தித் தீர்ப்பது செல்வந்தான். வெடிக்கட்டின் மூலையைப் பிய்த்து திரிகளை கூட்டாகத் திரித்து அடுப்புத் தணலில் பட்டும் படாமலும் பிடிக்க திரி சர்ரென்று சீறும். திரி சீறுவதற்கும் வெடியை எறிவதற்கும் இடையில் உள்ள நேரந்தான் நிதானமாகச் செயற்பட வேண்டிய நேரம். கொஞ்சம் தவறினாலும் கையில் வெடித்து காயமாக்கிவிடும்.
செல்வத்திற்கு வெடி கொளுத்துவது தண்ணி பட்டபாடு. அவன் எறியவும், சீறுகிற வெடி முற்றத்தில் விழவும். டொம் டொம் பட் பட் என வெடித்துச் சிதறவும் நேரம் துல்லியமாக இருக்கும். கையில் வைத்து சிலம்பமாடுகிற மத்தாப்புகளில் அவனுக்கு பெரிதாக அக்கறையில்லை. தம்பி தங்கச்சிமாருக்கு அவைகளை பரோபகாரத்தோடு தானம் செய்து விட்டு தன் பங்கிற்கு இருக்கப்பட்ட அத்தனை சீனவெடிகளையும் கொளுத்தி முடிப்பான்.
இப்போது சீனவெடி வெடிக்க முடியாது. அதைப் பார்த்து ரசிக்க தம்பியுமில்லை. தம்பியில்லாததால் பொங்குவதற்கு மனமும் இல்லை. ஏதோ சம்பிரதாயத்திற்கு அடுப்படிக்குள் பொங்குவதாகத்தான் இருந்தாள் சின்னம்மா. செல்வம் விடவில்லை.
வெறிச்சோடிப் போயிருக்கும் வீட்டில் கலகலப்பு பொங்க வேனும். சூரியபகவான் எங்கள் குறைகளையெல்லாம் நீக்குவார். வருசத்திற்கொரு முறை அவருக்குப் பொங்குவதை நிறுத்தக் கூடாது. பால் பொங்கி வழிகிற மாதிரி சின்னம்மாவின் மனம் ஆறுதலால் பொங்கி வழிய வேனும்.
“சின்னம்மா நீங்க ஒன்டுக்கும் கவலைப்படாதீங்க தம்பியைக் கண்டு பிடிச்சுக் கொண்டு வாறது என்ர பொறுப்பு. தம்பியை நினைச்சு பொங்குவம் சின்னம்மா”
மேசையை அரக்கிவிட்டு பெட்டகத்தை தூக்கி வைத்து கதிரைகளை அப்புறப்படுத்தி பாய் தலகணிகளை முற்றத்து வெய்யிலில் காயப் போட்டு கிணற்றில் தண்ணீர் அள்ளிக் கொடுத்து சின்னம்மாவோடு கூடமாட உதவி செய்தான்.
சின்னம்மா கைச்சுறுக்காக காரியத்தில் இறங்கியிருந்தாள். குனிந்த குனி நிமிராமல் மூலைகளில் நீர் தேங்க விடாமல் கூட்டித் தள்ளிக் கொண்டே வந்து சாமியறை விறாந்தை குசினி எல்லாம் கழுவி முடித்தாள். ஈரம் காயாத இடங்களில் சாக்குகளை விரித்துவிட்டாள். அடுப்புத் தணல் எடுத்து சாம்பிராணிப் புகை காட்டினாள். சாமியறை வீடு கிணற்றடி வாழையடி துளசியடி என்று வளவு முழுக்க காட்டிய சாம்பிராணி மணந்தது,
செல்வத்திற்கு பசிக்களை. தானே போட்டுச் சாப்பிடத் தொடங்கினான். வாசல் கதவு திறந்து ஆரோ வருவது போலிருக்க ஜன்னலால் எட்டிப் பார்த்தான்.
செவ்வந்தி! பின்னால் ஒரு வெள்ளைக்காரர்!
karulsubramaniam@yahoo.com
- ஆசியப் புலம் பெயர்ந்தோர் பற்றிய சர்வே
- வைரமுத்துக்களின் வானம் -9
- ராஷஸ சதுரங்கப்பலகையிலிருந்து இறங்குகின்றன பாம்புகள் (கூட்டுக்கவிதை )
- வருவான், குதிரை ஏறி வருவான்(கூட்டுக்கவிதை)
- மொழியெனும் சிவதனுசு
- தனக்குத் தானே பேசிக்கொள்ளும்
- க்வாண்டம் இயற்பியலின் பரிணாமம்-2: ஸ்க்ராட்டிஞ்சரின் பூனையும், பெரிலியம் ஐயனியும்
- ஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையகத்தின் மகத்தான விஞ்ஞானப் பொறியல்துறைச் சாதனைகள்(1954-2004)
- கடிதங்கள் – நவம்பர்-20, 2003
- கடிதங்கள் – ஆங்கிலம் – நவம்பர் 20, 2003
- இந்த வாரம் இப்படி (xenophobic நான், பாபி ஜிண்டால், ஈராக்கில் இத்தாலி வீரர்கள், அறம்)
- உதயமூர்த்தியின் ‘எண்ணங்கள்’ – 2
- காசி யாத்திரை
- கலக்கம்
- ஜிம் ஜோன்ஸின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
- ஜாதீயம் என்கிற ஒற்றைப் பரிமாணப் பார்வை
- குறிப்புகள் சில- நவம்பர் 20,2003
- தமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 4
- மூளைச் சலவையின் ஆற்றல்: 900 சாவுகள் கற்றுத் தரும் ஒரு கொடிய பாடம்
- நாச்சியார் திருமொழி
- ஆதி – ஒரு புதிய தமிழ் மாத ஏடு
- எனக்குப் பிடித்த கதைகள் – 86-புன்னகை என்னும் தற்காப்பு ஆயுதம்: திலீப்குமாரின் ‘மூங்கில் குருத்து ‘
- வீணாகப் போகாத மாலை
- பிரமைகளும், பிரகடனங்களும்-2
- பொறியில் சிக்காத பிதாமகன்.
- தொடரும் உல்டா.. தமிழ் சினிமாவில்…
- எங்கே நமக்குள் சாதிவந்தது ?
- நலங்கெடப் புழுதியில்…
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்து மூன்று
- நூருன்னிசா
- அந்த நாலுமணிநேரம்
- நந்தகுமாரா நந்தகுமாரா
- காத்திருந்து… காத்திருந்து….
- கனவின் கால்கள்
- அலுவலகம் போகும் கடவுள்
- குழந்தைகள் தினம் ( 14 நவம்பர் 2003 )
- எது மரபு
- கலியுகம்
- அன்றைக்கு அப்படியே போயிருந்தால்
- விடியும்!- (23)
- உனைப் பெற்ற நிறைவுக்கு ஈடு இல்லை
- முரண்பாடுகளில்…
- விடாத வீடு
- குனிந்த மலை
- குளம்
- நான் நானில்லை
- புரியாமல் கொஞ்சம்…
- ஒன்று நமது சிந்தனை
- தமிழ்
- காதல் லட்சம்
- மெளனம்…