பாலுமகேந்திராவுடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல்
***
‘சில சமயங்கள்ல்ல நான் ரொம்ப கோபமா உணர்றன். கண்ணீரை, அவலங்களை, வேர்வையை இவங்க காசாக்கிட்டு இருக்கறாங்க ‘.
***
யரா : மாதவி முகர்ஜிக்கும் ரேவுக்கும் இருந்த, இரண்டு பக்கமும் கொழுந்து விட்டெறிந்த நேசம் பற்றிச் செய்தி வந்தது.
பாலு : ஆமா. அவங்க குடும்பத்துக்குள்ள கூட, இது பிரச்சினைய உருவாக்கிச்சு.. இதைப் பத்தி யாரு கவலைப்பட்டா ? ஏன நீ இத எனக்குச் செய்யறே ? அப்படான்னு அந்த மனுஷன் அழாக்குறையா ஒரு நேர்முகத்துல சொல்லியிருந்தான். இதுக்குள்ள இந்தப் படத்தினுடைய இன்னொரு பரிமாணத்தப் பார்த்தமுன்னா, இது அந்தக் காலத்துல இருக்கக்கூடிய ஒரு சுத்தமான வங்காள அறிவுஜீவி அப்புறம் தனிப்பட்ட மனிதர்களுக்கிடையிலான கதையா இருந்தாலும், அந்தக் காலத்திலிருந்த ஒரு சமூகச் சூழல துல்லியமாப் பதிவு பண்ற ஒரு ஆவணமாத்தான் அந்தப் படம் இன்னைக்கும் இருக்குது. அந்த வகையில ரேயினுடைய சாருலதாவாக இருந்தாலும் சரி, அபராஜிதாவாக இருந்தாலும் சரி , அபு சன்சாராக இருந்தாலும் சரி, நான் முன்னாடி சொன்ன மாதிரி பிரதித்வந்தி ஜனசத்ரு மாதிரி வெளிப்படையான அரசியல் பேசுன படங்கள் தவிர, இது வரைக்கும் அவர் எடுத்த எல்லாப் படங்களுமே சமூக ஆவணங்கள் தான். அந்தந்தக் காலகட்டத்தில் இருக்கக் கூடிய சமூகங்களைப் பிரதிபலித்த, உறவுகளை¢ப பிரதிபலித்த ஆவணங்கள்தான். அறுதியாகச் சமூகத்தினுடைய சட்டதிட்டங்கள் போன்றதெல்லாம் உறவுகளுக்குள்ள கட்டுண்டதுதான்..
தனிமனித உறவுங்கள நான் விடல்ல்ல. ஜெயலலிதா, மூப்பானார்ன்னு நான் போறன். இதுவும் உறவுகள் சம்பந்தமானதுதான். இது ஒரு கட்சிக்கும் இன்னொரு கட்சிக்குமான உறவு. ஓரு கட்சியில இருக்கக்கூடிய தொண்டனுக்கும் தலைவனுக்குமான உறவு. இந்தத் தலைவனுக்காக இந்தக்கட்சியில அவன் இருக்கானா, கொள்கைக்காக இருக்கானா என்கிற இதப் பத்தின பகுப்பாயவுக்கு நான் போறப்ப, தனிமனித உறவகளப்பத்தி நான் சித்தரிக்கறன்னு நீங்க கொள்ளக் கூடாது. உன்னதமான படங்கள் என்பன ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்ட படங்கள்தான். ரேயினுடைய படங்கள் எல்லாமே ஒரு வகையில தாய்க்கும் மகனுக்கும் உள்ள அன்னியமாதல் -ஏலியனேஷன் -பத்தியதுதான். மகன் வளரும் போது உருவாகும் அன்னியமாதல்..
நான் நேச்சர் சேனல்ல்ல ஒரு படம் பார்த்தன். கங்காரு பத்தியது. அதுக்கு அதனுடைய பாக்கெட்டுக்குள்ளயே முலைகள் அமைஞ்சிருக்கு. அதனுடைய குட்டி பால் குடாச்சிட்டிருக்கு. அதுக்குள்ள உட்கார முடியாதளவுக்கு இது வளர்ந்திருச்சு. அந்த விவரணக்காரன் அப்ப சொல்றான் : இப்போது அந்தத் தாய்க்குத் தெரியும் : நிச்சயமாகப் பிரிவு என்பது இப்போது வந்துவிட்டது. தாய்க் கங்காரு, குடிச்சிட்டிருந்த அந்தக் குட்டிய ரொம்ப மெல்லமாக வெளித்தள்ளுகிறது. குடிச்சிட்டிருந்த குட்டி அத எதிர்பார்க்கல்ல. முதல் முதலா இப்பிடி நடக்குது. ஒரு நம்ப முடியாத பிரமிப்போடயும் பயத்தோடயும் குட்டி, தாயப் பார்க்குது. தாய் இதக் கவனிக்காம திரும்பிப் போய்ட்டே இருக்குது. அங்க அது இயற்கையா இருக்கு, அன்னியமாதல் அங்க இருக்கு,. பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையில, பிரதானமாக, குறிப்பா மகன் வளரும்போது, மகனுக்கும் தாய்க்குமான அன்னியமாதல் இருக்குது. அபராஜிதாவுல ரொம்ப ரொம்ப அழகா ரே அதக் காண்பிச்சிருக்காரு. இது வந்து ஒரு பிரபஞ்ச உண்மை. இது மனிதர்களுக்கு மட்டுமே உரியதல்ல, எல்லா உயிரினங்களுக்கும் உரியது..
எனக்கு அடிப்படையா என்ன படறுதுண்ணா, சில் சமயங்கள்ல்ல, எனக்கு நிச்சயமாத் தெரியல்ல, இப்பிடி இருக்கலாம், இந்த விமர்சனங்கள் அல்லது விமர்சனப் பார்வைகள் எல்லாத்தையுமே, பாத்திகட்டி வகைப்படுததித் தீர வேணும் என்கிற வேகம், அதக் கொஞ்சம் நிதானப்படுத்தி சினிமா சம்பந்தமா கொஞ்சம் பிரக்ஞைபூர்வமா இருக்கலாமோண்ணு தோணுது.
யரா : நீங்க சொன்னபடி ரேயினுடைய படங்கள்ல்ல தனிப்பட்டதையும், அரசியல் ரீதியானதையும் பிரிச்சுப் பாரக்கமுடியாது என்கிறது உண்மைதான்.. ஆனா அவருடைய படங்கள்ல்ல எல்லாமே ஒன்றுக் கொன்று தொடர்பள்ளதாகத்தான் இருக்குது.. ரேயினுடைய படங்கள். பிரதித்வந்தி, ஜனசத்ரு அப்புறமாக அவருடைய கடைசிப் படமான அகாந்துக் போன்றத எடுத்துட்டுப் பாத்தமுன்னா, அவருடைய வளர்ச்சியில ஒரு திருப்பம் ஒன்று இருக்கறதப் பாரக்கமுடியும்.
ரேயினுடைய படங்கள நான் அடிக்கடி திரும்பத் திரும்பப் பாரக்கறதுண்டு ஒரு முறை பத்து நாள்ல்ல, அவருடைய முழுப் படங்களையும் பார்த்தேன். அவருடைய பிற்காலத்திய படங்கள்ல்ல, அதீதமாக அரசியல் திருப்பம் இருந்ததுங்கற முக்கியமான வித்தியாசத்த அப்ப என்னால பார்க்க முடிஞ்சது.. என்னுடைய நண்பன் விசுவநாதனுடைய கேள்வி கூட, மணிரத்தினத்தினுடைய படங்களோட நம்ம விவாதத்த சத்பந்தப்படுத்தியது கூட, அந்த மாதிரித்தான்னு நான் நெனைக்கிறன்.
பாலு : நீங்க சொல்றபடி, ரேயினுடைய பத்துப் பண்ணிரண்டு படங்கள ஒன்னாப் பாரக்கக்கூடிய சந்தரப்பம் எனக்கு அமஞ்சது.. ஏறககுறைய, நிங்க உணர்ந்த மாதிரித்தான் நானும் உணர்ந்தேன். அதிக அளவுல, பிரகஞை பூர்வமா அரசியல் ரீதியில் படங்கள் இருக்க வேணுமங்கற சுயபிரக்ஞையோட, ரே¢ முயற்சி பண்றதப் பாரக்க முடிஞ்சது.. எனக்கு அவுருடைய படங்கள் மூலம் நான் புரிஞ்சிக்கிட்ட வகையிலையும், தனிப்பட்ட முறையில் தெரிஞ்சுகிட்ட வகையிலையும், அவரோட நேரடியா பேசிப்பழகுன அனுபவத்திலிருந்து அவரப் புரிஞ்சிட்ட வகையிலையும், வங்காளத்திலையும் சரி, பிற இடங்கள்ளையும் சரி, ரே மேல இப்படியான கடுமையான விமர்சனம் இருக்குது. அதாவது மனித உறவுகள் என்கிற அம்சத்திலிருந்துதான் ரே சிந்திக்கிறார் என்கிற விமர்சனம். இவர் அரசியல் பிரசசினைகளைத் தொட்டதே கிடையாது என்கிற விமர்சனம் இருந்தது. தபன் சின்ஹா, புத்ததாஸ் குப்தா போன்றவங்க இப்பிடி விமரசனங்கள முன் வச்சாங்க. பிற்காலத்திய படங்கள்ல்ல வெளிப்படையான அரசியல் வற்றதுக்கு, அதுவும் ஒரு காரணமா இருக்கலாம். பிற்காலத்துல ஆத்மார்த்தமாகவே இப்படியான படங்கள் கொண்டுவர வேண்டிய தேவைகள் இருக்கங்கறத அவர் உணர்ந்திருந்தாருங்கறதும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம்.
ஓரு படைப்பாளி, தன்னுடைய சிந்தனைப் போக்க பிடிவாதமாக் கடைபிடிக்கிறாருன்னோ, சில காலங்களக்கப்புறம் மாற்றிக் கொள்ளக்கூடாதுன்னோ அல்லது அதிலிருந்த மாறுபடக் கூடாதுன்னோ, விடபடக் கூடாதுன்னோ சொல்றதுக்கு யாருக்கும் எந்தவித உரிமையிங் கிடையாது.
யரா : எழுத்தாளர்களுககு சினிமாவின் பாலான விலக்கத்துக்குக் காரணம், அவங்களுடைய போலித்தனமான ஒழுக்க, அறவியல் காரணங்கள் ஒரு அம்சம்ன்னு நாங்க பார்க்கலாம். ஆனா இடதுசாரிகளும், ஓரளவு புரட்சிகரமான காரணங்களுக்காக சினிமர்வக்குள்ள வந்தவங்களும, இந்தக் காரணங்களுக்காக விலகி இருந்தாங்கன்னு நாம சொல்லமுடியாது. ஏன்னா, இது ஜனங்க கிட்ட போகக் கூடிய மிகப் பெரிய ஜனரஞ்சக ஊடகம். காங்கிரஸ் கட்சியினுடைய ஆரம்பகாலப் பிரச்சாரங்கள் சினிமா மூலம் போனது. தேசபக்தி, தேசியம என்று போனது. அதற்குப் பிறகு இதனுடைய வலிமைய உணர்நது கொண்டவங்க திராவிட அரசியல் இயக்கத்தினர். ஆனா இடதுசாரிகளப் பாத்தீங்கன்னா கேரளாவுலையும் வங்காளத்திலையும் ஓரளவுக்கு சின்னமாவுக்குள்ள வந்திருக்காங்க. படைப்புக்களையும் இன்னக்கி வரைக்கும் குடுத்துட்டு வர்றாங்க. தமிழகத்துல இடதுசாரிகளுடைய பார்வையும் வந்து இந்த இலக்கியக்காரர்களுடைய சுத்த சுயம்பவான கலாச்சாரம், உயர்ந்த கலாச்சாரம் என்கிற பார்வையிலிருந்து வந்ததாக இருக்கலாம்.
பாலு : அநாவசியமான ஒரு வெறுப்பு, ஒரு காழ்ப்புணர்வு. இது. ஒரு கீழான ஊடகம்ன்னு அவங்க நினச்சாங்களே தவிர, இதனால சினிமாவோட தங்களச் சம்பந்தப்படுத்திக்கக் கூடாதுன்னு ஒதுங்கி நின்ன அந்தப் பெரியமனுஷத்தனம், அது ஒரு காரணம்ன்னு நா நெனக்கிறன்.
யரா : ஒழுக்கம் சம்பந்தமா நம்முடைய உரையாடல்வழி இயல்பாவே நாம வந்ததனால சொல்றன. ஆஸ்கர் வைல்ட்டை சமப்பாலுறவுக்காக ஜெயில்ல போட்டதுக்காக, இப்ப பிரித்தானிய நீதி அமைப்பு வந்து மன்னிப்புக் கேட்டிருக்குது.. அதே மாதிரி திருட்டுக் குற்றத்துக்காக ஜெனே ஜெயிலுக்கப் போயிட்டு வந்தார். பிற்பாடு அவர் மகத்தான படைப்பாளியாத் திகழ்ந்தார். ரோமன் போலன்ஸ்க்கி, சிறுமிியோட பாலுறவு கொண்டார்ங்கற வழக்கு இருக்கிறதனால அவர் அமெரிக்காவுக்குப் போக முடியாது. ஏன்னா, பிடி ஆணை இருக்குது. இப்ப வளர்ந்த நிலையில் இருக்கிற அந்தப் பொண்ணுகிட்ட போலன்ஸ்க்கி நேரடியா மன்னிப்புக் கேட்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இருதாரம்ங்கற அடிப்படையில, ஜெயகாந்தன், பாலகுமாரன் போன்றவங்களும் தமிழ்நாட்டுல இருக்காங்க. அதே மாதிரி இப்ப மெளனிக்கும் ஒரு பொண்ணுக்கும் உறவிருந்த விஷயத்த நகுலன் சொல்றார். ஜி நாகராஜன, இப்பிடி இருந்தார். ஆனா அவருடைய கதைத் தொகுப்பு வாழ்க்கைக் குறிப்பில கூட, இது சம்பந்தமா விரிவா மட்டுமல்ல, குறைந்த பட்சம் பேசக்கூட தயங்கற ஒரு போக்கு இங்க தமிழ்ச்சூழல்ல்ல இருக்கு. இது ஒரு வகையில் எழுத்தாளர்களுடைய ஒழுக்கம் சார்ந்த வேஷம்ன்னுதான் நா நெனக்கிறன். இப்ப தலித் கலாச்சாரம், உயர் கலாச்சாரம் சம்பந்தமான விவாதங்கள்ல்ல கூடப் பாத்தீங்கன்னா, அறவியல், ஒழுக்கம் சம்பந்தமான மதிப்பீடுகள் சார்ந்த பிர்ச்சினைக மேல வருது.
மார்க்கஸிஸ்ட்டுகளும், அநேகமா அறவியல் ஒழுக்கப் பிரச்சனைல பாத்தீங்கன்னா, பிற்போக்குவாதிகளாத்தான் இருக்காங்க. அதே மாதிரி, இவர்களுடைய பெண்கள் தொடர்பான பார்வையும் திராவிட இயக்கத்தவர்களுடைய பார்வையிலிருந்து விஷேமா மாறுபட்டதுன்னு சொல்லமுடியாது.
பாலு : இன்னுஞ் சொல்லப்போனா, திராவிட இயக்கத்தவர்களுடைய பெண்கள் சம்பந்தமான பார்வையுங்கூட, ஒரு மிக மிகப் பிற்போக்கான பார்வையாத்தான் இருந்து வந்திருக்கு. மேடையில பேசருதுக்கும், எழுத்துல பண்றதுக்கும், இவங்க நேரடியா பெண்கள நடத்தறதுக்கும் மிகப் பெரிய வித்தியாசங்கள் இருக்கு. ஊருக்குத்தா உபதேசம், தனக்கில்லீங்கறதுதான் அவங்க கிட்ட இருக்குது. பிராமணர்கள் என்று சொல்லப்படுகிறவர்களின் சனாதன அணுகுமுறை மாதிரியே இவங்களிடமும் இருக்கிறதாலததான் இப்பிடியிருக்குது.. ரொம்ப விநோதமாயிருக்கு.
சங்க இலக்கியத்துல நீங்க எடுத்தீட்டாங்கன்னா, பரத்தையருக்கு இடமுண்டு. விலை மாதர்களும் சமூகததின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அங்கமாக இருந்தார்கள். கற்பை வந்து அவங்க பெண்களுக்குத்தான் வலியுறுத்தினார்களேயொழிய, ஆண்களுக்கு வலியுறுத்தவில்லை. அங்கிருந்தே இந்த ஆணாதிக்க சமாச்சாரம் இருந்துட்டு வருது. இன்னக்கி வரைக்கும் இருக்குது. சங்க இலக்கியத்துல இருந்த அந்த விலைமாதர்கள், பரத்தையர்கள், தேவதாசிகள் போன்ற மனிதர்களெலல்ாம் கொஞ்சங் கொஞ்சமா தரை விரிப்புக்குக் கீழே போயிட்டாங்க -அன்டர் த கார்ப்பெட்- முன்னாடி தைரியமாப் போய் வந்தவங்க, இப்ப முக்காடு போட்டுட்டுப் போகனுமாம். இந்தக் சனாதனப் பார்வை¢ இன்னும் எனக்குப் புரியல்ல.
யரா : அரசியல்ல்ல நாங்க பாரத்தமுன்னா, இங்கிருக்கிற அரசியல் தலைவர்கள் பெரும்பாலும, இரண்டு மூன்று மனைவியர் வச்சிருக்காங்க. வெளிப்படையா இத வந்து ஒரு அரசனுக்குரிய அங்கீகாரமா கொண்டாடப்படற விஷயமா ஆக்கிப் போட்டாங்க. அல்லது, பல்வேறு வகையான உறவுகள் கூட, அண்ணன், அண்ணி, புரட்சித் தலைவர, புரட்சித் தலைவி என்கிற மாதிரி விஷயங்கள் கூட, அங்கீகரிக்கப்பட்ட விஷயமா, வெகுஜனப் பிரக்ஞையில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விஷயமா ஆகியிருக்கு. எம்முடைய கலாச்சாரம் ரெண்டு பெண்டாட்டிக் கலாச்சாரம் என்று சொல்கிற பாலகுமாரன் கூட, ஞுானவான் என்று பிற்காலத்தில் கொண்டாடப்படற சூழல் இருக்குது.
இப்ப கலைஞுர்கள்ல்ன்னு நாங்க எடுத்திட்டம்ன்னா, பிரான்சில சைமன்திபோர், ஸார்த்தர் உறவெல்லாம் இப்ப வெளிப்படையா வந்திருக்கு. தான் நேசிச்ச ஆரான்கிற வலதுசாரி அமெரிக்க எழுத்தாளரோட வாழாம, ஸார்த்தரோட தன்னைப் பினைச்சிட்டாருந்த திபோரினுடைய கடிதங்களெல்லாம் இப்ப பிரசுரமாயிருக்குது. டால்ஸ்டாய் பிச்சினையிலிருந்து, ரஸ்ஸல்லிருந்து இப்பிடிப் பல்வேறு சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களுக்கு திருமணம் கடந்த உறவுகள் இருந்திருக்கு. இப்ப இதையெல்லாம் மிகச்சாதாரணமாக அணுகக்கூடிய சூழல் வந்திருச்சு.
கார்ல் மார்க்ஸூக்குக்கூட திருமணம் கடந்த உறவு இருந்தது. இந்த விஷயமா விமர்சனபூர்வமாப் பாரக்கிற மேற்கத்திய மார்க்சியர்கள் அதை சாதாரணமானதா இப்ப ஒப்புக் கொள்ளவும் செய்யறாங்க. மனிதர்கள புனிதர்களா நாங்க பாரக்கத்தேவயில்ல. மனிதர்களாவே பார்ப்பம். ஏன்னா, நாங்க அப்பிடித்ததான் இருக்கிறம். இன்னும் இந்த பாலியல்பு சம்பந்தமான பொய்மைகளெல்லாம். அநேகமா ஒடஞ்சிட்டு வருது. ஓருவனுக்கு ஒருத்தி, ஒரே ஒருததரோடதான் தொடர்ந்து உடல் சார்ந்த உறவு வெச்சுக் கொண்டிருக்கோனும, என்பது இப்ப உடமை சார்ந்த விஷயங்கள்ல்ல ஒன்னாப் போயிட்டது.
அப்பிடிப் பாரக்கும்போது, உங்க மேல ஒரு அவதுாறு இருக்கு. சேது பாலாவினுடைய குங்குமம் நேர்முகம், அந்த நேர்முகத்துக்குப் பின்னால ஆனந்தவிகடன்ல்ல வந்த விவாதங்கள்,- நான் இத எப்பிடி விளங்கிக் கொள்றன்னு பாத்தீங்கன்னா, எங்களுடைய சமூகத்துல வந்து சில அடிப்படையர்ன மதிப்பீடுகள் இருக்கு, அந்த மதிப்பீடகள்ல்ல இருந்துதான் இந்த விஷயத்த எல்லோரும் பாரக்கறாங்க. ஆனா கலைஞுனுக்கு பல்வேறு விதங்கள்ல்ல, மட்டங்கள்ல்ல பழகக்கூடிய வாய்ப்புக்கள் நெறைய இருக்கு. அவனுக்கு வந்து இந்த கற்பு சம்பந்தமான விஷயங்களோ, குறிப்பிட்ட உறவுக்கள்ல்ல சிறைபட்டிருக்கோணும்ங்கறதோ ரொம்ப அருகிப் போன ஒரு சூழல்லதான் அவன் செயல்பட வேண்டியிருக்கு. அப்படிப் பார்க்க இந்த உறவுகள் வந்து மிகச் சாதாரணமா நிலவுது. தத்துவவாதிகளினுடைய வாழக்கையிலிருந்து, கலைஞுர்களுடைய வாழ்ககையிலிருந்து இதெல்லாம் முன்வைக்கப்பட்டிருக்குது.
இங்கவந்து தமிழ்ச்சூழல்ல்ல ரெண்டு பொண்டாட்டிக் கலாச்சாரம்ா- ஆணாதிக்கப் பார்வையில அது பலதார மணங்கற அமைப்புக்குள்ள, ஆண்களினுடைய பெருமிதமாக் கொணடாடப்பட்டுவருது.. இப்படியான உறவுகள்ல்ல பெண்கள் வந்து இங்க துணை ஆள்தானேயொழிய -ஸப் ஆர்டினேட்- ஆளுமைகள் அல்ல. திராவிட அரசியல்வாதிகளுக்கிறுக்கிற இரட்டை மதிப்பீடுகள், தீவிர இலக்கியாதிகளுக்கிருக்கிற இந்த ரெட்டை மதிப்பீடுகள் மற்றது வந்து பாலுறுவுல பெண்களுக்கு இருக்கிற சுதந்திரம், ஒரு ஆணும் பெண்ணும் மனத்தளவுல முதிர்ச்சி பெற்றருருந்தா, அவங்களால பல்வேறு விஷயஙுகள ஒண்ணா அடையாளப்படுத்திக்க முடியுமுன்னா, அவங்களுக்கு பகிர்ந்து கொள்றதுக்கு அதனது நீட்சியா என்ன இருக்கு ? உடம்புதான் இருக்கு. இத அவங்க ரெண்டு பேருந்தான் தீர்மானிக்கனும். ஓரு வகையில இங்க வேறொரு விதத்தல அது அங்கீகரிக்கப்பட்ட மரபா கூட இருந்திருக்குது. இப்படியான சூழல்ல ஏன் உங்க மேலவந்து ஒரு அவதுாறு இருக்குது ? பல்வேறு சினிமாக் கலைஞுர்கள எங்களுக்குத் தெரியும். பெண்கள வந்து தொடர்ந்து கொச்சசைப்படுத்தற, சதா சுரண்டிக் கொண்டிருக்கிற, தங்களை நிலைநாட்டிக் கொண்ட கதாநாயகர்கள், டைரக்டர்கள் வந்து இங்க இப்படி குற்றம் சாட்டப்படறதில்ல. உங்க மேல மட்டும் இப்பிடி தனிமைப்படுத்தி அவதுாறு பண்றதுக்கான காரணம் என்னன்னு நீங்க நினைக்கிறீங்க ?
பாலு : இதுக்கு தனிப்பட்ட் அரசியல் காரணங்கள் நெறய இருக்கு. நான் வந்து இந்தியாவுல என்னுடைய புனா திரைப்படக்கழகப் படிப்பு முடிஞ்சு, இந்தத் தொழில்ல்ல நான் வேல செய்ய ஆரம்பிச்ச உடனே,. இங்கே ஜாம்பவான்கள் என்று கருதப்பட்ட ஒலிப்பதிவுத்துறை ஜாம்பவான்கள் எல்லோரையும் ஓரங்கட்னேன். துாக்கிப்போட்டேன். என்னை அரை மனதாகவே அங்கீகரிக்க வேண்டிய ஒரு கட்டாயத்துக்கு இங்குள்ள அறிவாளிகளும், சாதாரண மக்களும் வந்தாங்க.
அப்ப நான் படங்கள இயக்கத் தொடங்கினேன். இயக்குனர் என்று வந்ததுமே, என்னுடைய கோகிலா, மூடுபனி, மூன்றாம்பிறை என வரிசையாக வந்த படங்கள், அது வரைக்கும் தமிழ்நாட்டுல பயிலப்பட்டு வந்த படங்களிலிருந்து கனிசமான அளவு மாறுபட்டிருந்தது. சர்வதேசிய சினிமாவை நான் அறிந்திருந்ததால், புனா திரைப்படக் கழகத்தில் நான் படித்ததால், எனது சுய அடையாளத்தினால், ஊடகத்தில் எனது தனித்த தொனியினால், மாறுபட்டிருந்தது. அது வரைக்கும் இருந்த ஒளிப்பதிவு செய்யப்பட்ட நாடகங்கள், இன்னைக்கி வரைக்கும் தொடர்ற இந்த நாடகத் தன்மையைக் கொண்ட, முழுக்க முழுக்க வசனங்களையே நம்பியிருந்த சிளிமாவிலிருந்து நான் முழுவதுமாக மாறுபட்டு, சினிமா ஒரு காடசிருப ஊடகம் என்பதையும், ஒலி என்பதை அதற்க்குத் தேவைப்படும்போது மட்டும் உபயோகிக்க வேண்டும் என்றும் நான் மாறுபட்டு நின்ற நிலையை, தவிர்க்கவியலாமல் அதன் வெற்றி காரணமாக தமிழகத்தில் மட்டுமல்ல, அகில இந்திய ரீதியிலும் தவிர்க்கமுடியாமல், அங்கீகரிக்க வேண்டிய ஒரு நிலை ஏற்ப்பட்டது.
நான் வந்து இந்த நாட்டைச் சாரந்தவனல்ல என்கிற சமாச்சாரம் என் மீதான அவதுாறுகளுக்கான காரணங்களில் ஒன்றாக இருந்திருக்கலாம் என இன்று நினைக்கிறேன். அது ஒரு மூனாந்தரக் காரணமாகத்தான் இருந்திருக்கும்ன்னு நான் நெனக்கிறன். நான் வந்து இவன் யார், என்ன, எங்கிருந்து வந்தான், இவன் பூர்வீகம் என்ன என்ற ஒன்னுமே தெரியாம, இந்தத் தொழில் துறைக்குள்ள வந்தன். ஒரு பெருவெடிப்பு, சினிமா உருவாக்குதலில், அறியப்பட்ட எல்லா நிலைகளிலும் ஒரு பெருவெடிப்பு. அதிறல் எங்கும் எழுந்தது. இதற்கு எப்படி எதிர்வினை வெய்வதென்பது தெரியாமல், என்னை எப்படிக் காயப்படுத்துவது என்று கூடத் தெரியாமல் அந்த அயோக்கியர்கள் என்னக் கவனிச்சிட்டிருந்தாங்க. இப்படியான சூழலுக்குள்ள நா வந்து மிக நுணுக்கமான ஒரு படைப்பாளி என்கிறதின் காரணமாக, அந்த நுணுக்கமான சென்ஸிடிவிடி காரணமாக பல விஷயங்கள் நேர்ந்தது.
ஒரு தாய்க்குப் பிறந்த இரண்டு குழந்தைகள். இதில் ஒரு பையன் ஒரு உன்னதப் படைப்பாளியாக மாறுகிறான் ஒருவன் ஒரு சர்வ சாதாரண சாமன்யனாகவே இருக்கிறான். இருவரும் ஒரே பெற்றோருக்குப் பிறந்தவர்கள், ஒரே சூழலில் வளரந்தவர்கள்தான். இருவுரும் ஏறக்குறைய ஒரே பாடங்கள் படித்தவர்கள். அனுபவங்களுக்கு உட்பட்டவர்கள்தான். ஆனா இத்தனைப் பொதுத் தன்மைகள் இருந்தும், இந்த ஒரே பெற்றோருக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒருவன் உன்னதப் படைப்பாளியாகவும் ஒருவன் சாமான்யனாகவும் மாறிப் போனதின் சூட்சமம் என்ன ? எங்கெயொ எதோ ஒரு இடத்துல பிரகைஞை பூர்வமாகவோ விபத்தாகவோ இந்தப் படைப்பு என்கிற வித்து ஊன்றப்பட்டிருக்குது. அது இவனுடைய சொந்த முயறசியினாலோ அல்லது யாருடைய துாண்டுதலிலோ வளர்க்கப்பட்டிருக்கிறது.
இநதப் படைப்பாற்றல் இந்தக் கலாச்சாரம் தனக்குள் இருக்கிறது. என்று அவன் உணர்ந்து கொண்ட காலத்திலிருந்து, அவனது முதல் முயற்சிகளில் இருந்து, தன்னைத் தானே வளர்த்துக் கொள்ள முற்படுகிறான். தங்களைத் தாங்களே இதை உணரந்து கொண்டபோதும், இதை வளர்த்துக் கொள்ளாததால் பிறர் தேங்கிப் போகிறார்கள். சாமானியனால் பாரக்கமுடியாத விஷயங்களை என்னால் பாரக்கமுடிகிறது. அவனால் உணரமுடியாத விஷயங்களை என்னால் உணரமுடிகிறது. வாழ்க்கையையும, வாழ்தலையும் பற்றி என்னுடைய பார்வை மிக, மிக, மிக நுணுக்கமாக கூர்மைப்படுத்தப்படடிருக்கிறது. ஆகவேதான அவனால் அனுமானிக்க முடியாத, பார்க்க முடியாத, உணரமுடியாத விஷயங்களை நான் உணர்ந்து கொள்கிறேன்.
இப்படி நான் உணர்ந்த கொண்டவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்கிற வெறி எனக்குள் ஏற்படும்போது, என் கையில் அதற்கான ஒரு ஊடகமும் சாத்தியப்பட்டிருக்கும் பொழுது, படைப்புச் சாத்தியப்படுகிறது. இதுல எதோ ஒன்னில்லைன்னா படைப்புச் சாத்தியமில்லை. இந்த நுணணுணர்வு காரணமா, நான் வந்து ஒரு படைப்பாளியா மாறியிருக்கிறன். இந்த நுண்ணுணர்வு இல்லேங்கற பட்சத்துல, நான் வந்து நிச்சயமா ஒரு படைப்பாளியா இருக்கமுடியாது.
எந்த ஒரு நுண்ணுனர்வு என்னைப் படைப்பாளியாக மாற்றியிருக்கிறதோ, என்னைப் படைப்பாளியாக உலகில் அறிய வைக்கிறதோ, இதே நுண்ணுணர்வு என்னுடைய தனிப்பட்ட வாழ்ககையலெ என்னை நாறடித்துக் கொண்டிருக்கிறது. காரணம்,. எனது அன்றாட வாழ்க்கையில் சாதாரண சூழுநிலையில் கூட நான் அதீதமாக எதிர்வினை செய்தேன். வாழ்க்கையில் அதீதமாக எதிர்வினை செஞ்சா எதிர்காலம் இதுக்குத் தாங்காது.. உங்களது வாழ்வில் எல்லாவற்றுக்கும் அதீதமாக எதிர்வினை செய்தீர்களானால், அப்பறம் நீங்கள் அதற்கான விலையைத் தரத்தான் வேண்டும்.. ஓரு படைப்பாளியினுடைய ஆயுதமே படைப்பைப் பொறுத்த இந்த அதி உணர்ச்சிவயமாயிருப்பதுதான். ஆனா தனிப்பட்ட வாழ்ககையிலெ அது மகா மோசமா என்னைக் காயப்படுத்தியிருக்கு. இத நான் என்னுடைய சிருஷ்டிக்கு மட்டுமே வச்சக்குவேன், என்னுடைய தனிப்பட்ட வாழ்ககையில மாட்டேன்னா முடியாது.
நான் ஒரு அதிர்வுல இருக்கறன். நான் ஒரு அலை வரிசையிலே இருக்கறன். நான் ஒரு ஆணாக இருக்கிற பட்சத்தில், இந்த அலை வரிசையிலே இருக்கிற ஒரு பெண்ண நான் சந்திக்கறன்.. பல விஷயங்களை படைப்பாற்றல் ரீதியாக நான பகிர்ந்து கொள்றன். நீங்க இப்பச் சொன்ன மாதிரி, இந்தப் பகிர்ந்து கொள்ளல் படைப்பாற்றல் ரீதியாக, ஆத்மார்த்த ரீதியாக, அறிவார்ந்த அளவில் பல விஷயங்களை நிங்கள் பகிர்ந்த கொள்கிறீர்கள். ஏனெனில் நிங்கள் இருவருமே அந்த அலைவரிசையில் இருக்கிறீங்க. அந்த அலை வரிசையில் செயல்படுறீங்க, என்கிறப்ப எல்லாத்திலையும் இருக்கிற இந்தப் பகிர்தல் வந்து முழமையடறது என்பது, இருவரையும் ஒன்றுபடுத்தி, அப்புறமாக இயல்பாகவே உடல் ரீதியிலான பகிர்வுக்குத்தான் இட்டுச் செல்லும். இது அழுத்தமாக தனிப்பட்ட விஷயம். சம்பந்தப்பட்ட இருவருடையதுமான பிரச்சினை இது. இது பொதுமைப்படுத்தப்பட முடியாதது. பொதுமைப்படுத்தவும் கூடாதது.. ஆனா ஒரு சமூகக் கட்டுப்பாடு, சமூகக் கண்ணோட்டம், சமூகத்தினுடைய அங்கம் என்கிற ஒரு கோணத்திலிருந்து பாரக்கறப்ப, இந்தக் குறிப்பிட்ட இருவரும் செய்து கொண்டிருப்பது தவறு என்று சுட்டிக்காட்டப்படலாம். எள்ளி நகையாடப்படலாம். ஓதுக்கி வைக்கப்படலாம். துரதிருஷ்டவசமா, என்னை அவதுாறு செய்தால், நான் சென்ற காலத்திலிருந்து தொடங்க விரும்புகிறேன்.
நான் தமிழ் நாட்டுல சினிமாவுக்குள்ள வந்தபோது அன்னக்கி இங்கிருக்கிற வின்ஸன்ட், மார்க்கஸ் பார்ட்லே போன்றவங்கெல்லாம் ஒளிப்பதிவுன்னா பாலு மகேந்திராதான்னாங்க.. ஓரளவு இன்னக்கும் அவர்தான். இதில வந்து எனக்கு கனிசமான கர்வம் இருக்கு. இத வந்து அநாவசியமான அவயடக்கத்துல நான் சொல்லாம விட்ப போறதில்ல. தென்னிந்திய சினிமாவினுடைய முகததை மாற்றியது அல்லது மாற்றத்த தொடங்கிவைத்தது என்னுடைய ஒளிப்பதிவுதான்.
இப்ப வந்து அற்பதமான ஒளிப்பதிவாளர்கள் இருக்கிறார்கள் என்கிறதுல அசாத்தியமான சந்தோஷம் எனக்கு இருக்கு. காரணமென்னன்னா, ஏறக்குறைய எல்லோருமே என்ன மாதிரி முறைப்படியா இன்ஸ்டிட்யூட்ல படிச்சிட்டு வந்தவங்க. அதுல எனக்கு சந்தோஷம் இருக்கு. நான் வந்த காலத்தில எனக்கு இருந்த பாண்டித்யம்- இதுக்கும் மேல நான் ஒரு எழுத்தாளன். என்னுடைய எழுத்தப் பாரத்தப்ப, யார்ரா இவன் ? எங்க வக்கிறது இவன ? பக்கத்திலயே வரமுடியலையே ? நமக்கு. இவனுடைய சினிமாவுக்குப் பக்கத்தில, இவனுடைய எழுத்துக்குப் பக்கத்தில, இவனுடைய ஒளிப்பதிவுக்குப் பக்கத்துல வர முடியலியே என்கிற ஆதங்கம். என்னோட பணிபுரிந்த பெண்களுக்கும் எனக்கும் இருந்த உறவுனால, என்னுடைய சொந்தக் காரணத்தினால ஏற்பட்டுப் போன தவிர்க்க முடியாத சில தொடர்புகளால, இவர்கள் ரொம்பவும் கொச்சையா, பாலுமகேந்திரான்னா இப்படித்தான்யா என்று, என்மீது குற்றச்சாட்ட வைக்க முடிஞ்சது. ஏன்னா இந்த ஒரே ஒரு குற்றச்சாட்டத்தான் அவங்களால எனக்கு எதிரா வெக்க முடிஞ்சது. நான் தண்ணி போடறதில்ல. அப்ப அதையும் என்ற மேல வெக்கமுடியாது. இன்னும் ஒரு விஷயம். இதுல நா மட்டுந்தான்னு இல்ல, எல்லாக் காலகட்டத்திலயும் ஏறக்கறைய தொன்னுாத்தி ஒன்பது சதவீதமானவங்க, இந்தத் திருமணத்துக்கு அப்பாலான உறவுகள அன்றும் இன்றும் வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் ரகசியமாக. நான் பகிரங்கமா, ஆமாய்யா, வெச்சிட்டிருக்கேன்யான்னு சொன்னன். அதுல எந்த விதமான கூச்சமோ, இவனுக்குப் பயப்படவேணும்ங்கற நிர்ப்பந்தமோ எனக்கு இருக்கல்ல. அது அவங்கள இன்னுங் கோபப்படுத்திச்சு. அட கூப்டுட்டு வர்றான்யா அபப்டான்னாங்க , அவனுடைய இயலாமையின் காரணமாக, அவன் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அவனால முடியாமல் போனதனால என் மேல ஒரு குற்றச்சாட்டா இத வெச்சாங்க. இதுதான் நடந்தது..
எனக்குத் தெரியும்.. நான் உறவு கொண்டிருந்தேன், சிருஷ்டி பூர்வமாக என்னுடன் இயைந்திருந்தவர்களுடன், அதனது நீட்சியாகவே அதனது அதிறலாகவே உடல் ரீதியான பகிர்வு என்பது தவிர்க்க முடியாததாக இருந்தது.. சமூகக் கண்ணோட்டத்தில இது தப்புங்கறதும், திருமணம்ங்கற நோக்கிலிருந்து இது தப்புங்கறதும் எனக்குத் தெரியும். ஆனாலும் இந்தத் தப்புக்களை நான் செய்தேன. இன்றும் செய்து கொண்டிருக்கிறேன்.
அதே சமயததில, என்னுடைய மனைவியப் பத்தி நெனச்சுப் பாரக்கிறன். அவங்களப்பத்தின கடுமையான வருத்தங்கள் எனக்கு இருக்குது. எந்தக் காலத்திலும் என்னைப் போன்ற ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைப்பட்டிருக்க வேண்டிய பெண்ணல்ல அவங்க. அது அவங்களுடைய துரதிருஷ்டம். எனக்கு இப்ப ஒரே ஒரு திருப்தி. என்னப் பொறுத்த வரைக்கும் இந்தச் சமாச்சாரம், அந்தக் கண்ணோட்டத்திலிருந்து பாரக்கறப்ப, இது தப்புண்ணு எனக்குத் தெரியறதுனால, அந்தக் கணணோட்டத்திலிருந்து பாரக்கறப்ப அது தப்புன்னு எனக்கு ஒரு குறற உணர்வு இருக்கறதுனால, அவங்ககிட்ட கனிவா இருப்பதுக்காக என்னுடைய இயல்பான வழிகளுக்கு அப்பாலெல்லாம் நான். போறன்.. அவங்களச் சந்தோஷப்படுத்த, ஆனால் எதுவும் போதுமானதல்ல. இது ஒரு நிரந்தர இருதலைநிலை. நான் ரொம்பத் துயரமாக உணர்கிறேன. துரதிருஷ்டவசமாக நா இப்பிடி இருக்கிறன்.
அவங்களுக்கு வந்து, காலைல ஒன்பது மணிக்கு எந்திரிச்சு வேலக்கிப் போய்ட்டு, சாயந்தரம் அஞ்சுமணிக்கு வந்து, வீட்டுலயே இருக்கக்கூடிய, வாரத்துல ஒரு நாளக்கி இல்லைன்னாலும் மாசத்தில ஒரு நாளக்கி வெளியில கூட்டிட்டுப் போயி, இவங்களோடயெ வருஷம் முண்ணுாத்தி முப்பததி அஞ்சு நாளும் இருந்து, இவங்களோடயெ வாழ்க்கை நடத்தி, இவங்களுக்கே புள்ளப் பெத்து, ஆயிரமாயிரமாயிரம் லட்சோபலட்சம் புருஷன்மார்கள்ல்ல ஒருத்தனா நா இருக்கனும். என்னக் கட்னது அவங்களுக்கேற்பட்ட மகா மகா மகா துரதிருஷ்டம். தவிர்க்கமுடியாத சோகம்.
யரா : இந்தப் பிரச்சின உஙுகளுடைய தொழில் சார்ந்த வளர்ச்சிய எந்த அளவுக்குப் பாதிச்சிருக்குது ?. அல்லது பாதித்திருக்கக் கூடுமா என்கிறதப் பத்தி என்ன சொல்றீங்க ? ஏன் இந்தக் கேள்வியக் கேட்கறன்னா, உங்களோட நடிச்ச பெண்கள் வந்து பெரும்பாலும் உங்களோட சேர்த்துப் பேசப்பட்டாங்க. அப்ப பிரபலமா இருக்கிற சில கதாநாயகிங்க வந்து, இந்தக் காரணத்துக்காக உங்களுடைய படங்கள்ல்ல நடிக்கறதுக்குத் தயக்கம் காட்டலாம, ஒங்களோட அசோஸியேட் பண்ணிக்கறதுல அவங்களுக்கு பிரச்சினைக இருக்கக் கூடும், அப்பிடி உங்களுடைய தொழில் வளரச்சியில இது பாதிப்பக் குடுத்ததா ?
பாலு :. அந்தக் கோணத்திலிருந்து எனக்குப் பிரச்சினையே வரல்ல்ல. இப்பிடி ஒரு குற்றச்சாட்டு என்னப் பத்தி வெளியில இருக்கிறதால, அந்த வகையில முழுமையா யாருக்கும் எந்தத் தயக்கமும் இல்லை. இந்தக் காரணத்தால மட்டுமல்ல, வேறு எந்தக் காரணத்தினாலயும் என்னோடு சேர்ந்து செயல்படறதுல தயக்கத்தக் காட்டின பெண் சினிமாக்காரர்கள் யாருமே இல்லைங்கறத, நான் கர்வத்தோடேயே சொல்லிக்கிறன். எனக்கு உங்களுடைய படங்கள்ல்ல ஸார், ஒரு ஷாட்ல இருந்தா போதும் ஸார், அப்பிடான்னு சொல்லக்கூடிய ஒரு நெலமைதான் அன்னிக்கும் இருந்தது. இன்னைக்கும் இருக்குது. அது எவ்வளவு பெரிய நடிகையானாலும் சரி. ஓன்னும் வேண்டாம் ஸார், ஒரு ஸ்டில்லு எடுத்துக்குடுங்க ஸார்ன்னு, சொல்ற நடிகைங்கதான் இன்னைக்கி இருக்காங்க.
ஆனா, இந்த உறவுகளோட சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் மகா மோசமா என்னுடைய தொழில் வளர்ச்சிய பாதிச்சிருக்கு. அது என்னுடைய தனிப்பட்ட வாழ்ககையையும் பாதிச்சிருக்கு. அர்ச்சனாவோட எனக்கு எட்டு வருஷ் ரிலேஷன்ஷிப் இருந்தது. தேசிய விருது பெறற்வராக அவரை உருவாக்கினேன். அவங்கள நா மதிக்கிறன். அவங்கள ஒரு மிகமுக்கியமான நடிகையா உருவாக்கினேன். இன்னைக்கிம் அவங்க வந்து அதுக்கான பக்தியோடயும் மரியாதையோடயும் இருக்காங்க. அவங்க எஙுகேயோ இருந்து கொண்டிருக்கிறாங்க என்கிறதும், என்மேல எப்பவும் வாரித்துாவ மாட்டாங்க என்கிறதும் எனக்குத் தெரியும். நானும் அப்டிப்பட்டவனில்லை ஏனென்றால் அவங்க மனத்தளவில் முதிர்ச்சியடைந்தவங்க.. பாலாவைப் போல இல்லை. இப்ப என் பிரார்த்தனையெல்லாம் கவலையெல்லாம, எனக்கு இந்தப் பாலா செஞ்ச துரோகத்துக்குக் கடவுள் அவன தண்டிக்கக் கூடாதுங்கறதுதான்.
அர்ச்சனா முழக்கவும் கலாச்சார ரீதியில் முதிர்ச்சியானவர். இவ்வகையில் என்னைக் குறித்து அவரது நேர்முகத்தில் ( அவள் சஞ்சிகை : நேர்முகம் : தமிழ்நாடு : 1999 ) முன்வைக்க அனைத்து உரிமைகளும் கொண்டவர் அவர். என்னன்னா, அர்ச்சனாவோட இருக்கறப்ப அது என்னப் பாதிச்சது. தொடர்ந்து என்னுடைய படங்கள்ல்ல அவங்கள உபயோகப்படுத்தீட்டு இருந்தன். பிரதான காரணம், அவங்க என்னுடைய பாத்திரங்களுக்குப் பொறுத்தமானவங்களா இருந்தாங்க.. நானே மண்ணெடுத்து நானே ஒரு பொம்மைய உருவாக்கி வச்சிருக்கிறேன். இந்தப் பொம்மை நான் உருவாக்கின என்னுடைய படங்களுக்குப் பொறத்தமா இருக்கிற பட்சத்துல நான் உபயோகப்படுத்திக்கிறன். அடி மனத்தில, அத நான் உணர்ந்துதான் இருந்தன், அவங்கள உள்கொள்வதாக நான் திரைக்கதையை உருவாக்கினேன். அது அப்படி இருக்கிற சாத்தியமுண்டு.. எனக்குத் தெரியாது. அடிமனத்தில் அப்படி இருந்திருகக்லாம்..
எங்கம்மாவினுடைய பாதிப்பு காரணமா, பல வருஷங்களுக்கப்புறம் நா வீடுன்னு ஒரு படம் பண்ணன். ஆனா தயாரிப்பாளர்கள் என்ன சொல்வாங்கன்னா : அட அவரு கிட்டப் போனா அவுரு அர்ச்சனாவச் சொல்வாரய்யா, என்று சொன்ன உதாரணங்களும் உண்டு. அதுவும் ஒரு பாதிப்புத்தான்.
அன்னிக்கும் இன்னிக்கும் நான் விரும்பற மாதிரி படமெடுக்க என்னை விடுவியா ? நீங்கள் கேட்டவை மாதிரி ஒரு படமெடுக்க்ச சொல்லக்கூடாது. நான் அப்ப இருந்த என்னுடைய பொருளாதார நிலை காரணமா அல்லது அப்ப இருந்த ஏதோ ஒரு பைத்தியகாரத்தனமான மனநிலை காரணமா, நா நீங்க கேட்டவை, எனக்குப் பிடிச்சவையல்ல, நீங்கள் கேட்டவை அப்பிடான்னு சொல்லி நா எடுத்தன். ஆனா நீ சொல்லி நா எடுக்க மாட்டேன். இது என்னுடைய உரிமை, உன்னுடையதல்ல.. நா இந்த வாட்டி கொஞ்சம் எறங்கி வர்றன். வீடுன்னா யாரு வேணுண்ணாலும் எடுக்கலாய்யா, இதுல வித்தையா இருக்கு ? ஒரு வியாபாரப் படம் எடுக்கச் சொல்லு அவர, அப்படான்னு. சில முட்டாள்கள் கேட்டாங்க. பக்காவா ஒரு வியாபாரப் படம, முட்டாள்தனமா ஒரு படம், முட்டாள்தனமான ஒரு பரிட்சையா இப்பிடியும் என்னால படமெடுக்கமுடியும்னு வேண்டாத ஒரு பரிட்சை, தவிர்த்திருக்கக்கூடிய ஒரு பரிட்சைதான, நான் அதப் பண்ணுணன்.
யரா : ஷோபாவினுடைய பிரச்சினை உங்கள நெறயப் பாதிச்சதுன்னு நெனக்கிறன். உங்க மேல வந்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லற மாதிரித்தான் குமுதத்துல உங்களுடைய நினைவுகள நீங்க எழுதினீங்க
பாலு :. ஓரு கொலைகாரனைப் போல நான் வேட்டையாடப்பட்டேன். இன்னைக்கிம் சொல்றனே. ஓரு முதலமைச்சர்,- ஒரு தமிழ் நாடு போலீஸ் சூப்பரன்டென்ட் போன்றவங்க, ஒரு தற்கொலய கொலயாக்குற முயற்சியில ஈடுபட்டிருந்தாங்க. உண்மையும் சததியமும் கடவுளும் என் பக்கத்துல இருந்ததால, ( எனக்கு வந்து இங்க பணபலம் கிடையாது. ஆள் பலம் கெடயாது. உறவுன்னு சொல்லிக்கறதுக்கு ஒரு மனுஷங்கெடையாது, அப்படியான கடுந்தாக்குதல். ) .நான் வெளீல வரமுடிஞ்சது. எல்லோருமே திட்டித் தீத்துட்டிருந்த ஒரு சமயத்துல நா வாய் மூடிட்டிருந்தன்.
அந்த மாதிரியான ஒரு சூழ்நிலைல, எனக்கும் ஷோபாவுக்கும் இருந்த உறவு என்ன மாதிரியானதுன்னு எனக்குத் தெரியும். அவ எதுக்கு அந்தவிதமான ஒரு முடிவெடுத்தாங்கறதும், அதுக்கு யார் பொறுப்பு என்கிறதும் கூட எனக்குத் தெரியும். நான் இந்தக் காரணங்கள அப்பச் சொலலீட்டிருக்கல. இப்பவும் சொல்லல்ல. இனியும் சொல்லப் போறதில்ல. ஏன்னா சொல்ல வேண்டிய அவசியமுமில்ல. சொன்னாலும் எவரும் அதைப் புரிந்து கொள்ளப் போவதிலலை. அது தேவையில்ல.
இப்படியெல்லாம் இருந்தப்ப, நான் திருப்பி அடிச்சது மூன்றாம் பிறைங்கற படத்த வச்சு. மறுபடியும் இவங்களுக்கு என்ன பன்றதுண்ணு தெரியல்ல. பாலுமகேந்திரா அழிஞ்சான், நம்மதான் இனிமேல்ன்னு, சினிமா பீல்ட்ல நெனச்சிட்டிருந்தவங்க, அவன் இனித் தலையெடுக்க முடியாதுன்னு நெனச்சிட்டிருந்தவங்க, நான் மறுபடி இந்தக் கவித்துவமான படத்தோடு வந்தபோது, மூன்றாம் பிறை எனகிற படத்தோடு வந்தபோது, மறுபடியும் அவர்கள் பின்தள்ளப்பட்டார்கள். எங்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிட்டாங்க. அந்த அத்தியாயம் அதோட முடிஞ்சது..
யரா : ஏற்கனவே நீங்கள் சொன்னபடி உங்களுக்கு இருக்கிற தனிப்பட்டபடியிலான மற்றது அரசியல் காரணங்களால, நிங்க செயல்படறதுல உங்களுக்கிருக்கிற பல்வேறு இடையூறுகள் அல்லது தடைகள என்னால புரிஞ்சு கொள்ள முடியுது. உங்களுடைய படங்கள்ல்ல வீடுன்னு பாத்தீங்கன்னா, அதிகாரவர்க்கம் சம்பந்தமான கடுமையான விமர்சனமொன்று கறாரா இருக்குது.
பாலு : எத்தன வன்முறையும் காமிக்க முடியாத, எத்தன வன்முறையக் காமிச்சாலும் கிடைக்க முடியாத ஒரு சாட்டையடி,. அதிகாரவர்க்கத்துக்கு எதிரா, வீடு படத்தில இருக்கு.
யரா : அதே மாதிரி யாத்ராவிலயும் போலீஸின் மிருகத்தனம் சம்பந்தமான கடுமையான விமர்சனமும் சில காட்சிகள்ல்ல இருக்கு.
பாலு : யாத்ராவுல அந்த போலீஸ் மிருகத்தனத்தச் சொல்றீங்க. அரசியல் சினிமாவுக்குப் போகாதததுக்கு என்னுடைய காரணம் என்னன்னனா, நான் அப்பிடிப் போகவேணுமின்னு விரும்பினா நான் ரொம்ப தீவிரத்தோடத்தான் அதுக்குள்ள போவன். நா வந்து ஒரு பயங்கரவாதியினுடைய தீவிரத்தோட அதுக்குள்ள நுழைவன். அதுத்குள்ள நுழையறப்ப, அதனுடைய நெருப்பு என்னையே வந்து அழிச்சிருமோன்ற பயம் அன்னைக்கும் இருந்தது இன்னைக்கிம் இருக்குது. காரணங்கள நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறன். என்னுடைய பின்ன்ணி, நான் இங்க வந்திருக்கிறதுனுடைய சூழல், இந்தக காரணங்களால அந்த விஷயங்கள வருத்தத்தோட தவிர்க்க வேண்டிய சூழலல்ல நான் இருக்கிறன். நான் அதையும் மீறிப்பண்ணுணேன்னா, நானே இங்க மிஞ்சமாட்டேன்னு எனக்கொரு பயமிருக்கு. அது சரிதானா தப்பா எனக்குத் தெரியல.
யரா : ஆனா, உங்க மாதிரிப் படைப்பாளிகள் வந்து, புவியியில் ரீதியலான வரலாற்று ரீதியிலான விஷயங்களையெல்ாம் இடம் மாற்றிக் கொண்டு போகலாம். நீங்க இந்தச் சூழலல்ல சொல்ல நினைக்கிற விஷயங்கள, இதே மாதிரி அரசியல் நிலைமைகள் இருக்கிற வேற புவியயில் நிலைமையில வச்சுச் சொல்லாம். ஓரு வகையில், உலகில் பல கஞைர்கள் கடைப்பிடிக்கிற சினிமா டெக்னிக்ல இதுவும் ஒண்ணா இருக்குது. கென்லோச் அமெரிக்காவினுடைய சர்வதேசியத் தலையீட்டையும், ஆக்கிரமிப்பையும் கண்டிச்சு நிகரகுவப் புரட்சியைப்பத்தி, நிகரகுவாவுல போயி எடுக்கறதன் மூலம் ஐரோப்பாவுல இருக்கிற மக்களுக்குசு சொல்றாரு. ஏன்னா ஒடுக்குமுறையும், ஒடுக்குமறைக்கெதிரான போராட்டமும் பிரபஞ்சமளாவித்தான் இருக்குது.
பாலு : நான் ஐம்பதுகளைக் கடந்துட்டேன், அப்பிடாங்கற உணர்வ இபபோ எனக்குள்ள இருக்கிறது. அந்த மாரடைப்பு நடந்த பின்னால, இந்த உலகத்திலேயே நாந்தான் மிக ஆரோக்கியமான மனிசன் அபப்டின்னு ஒரு நொடி நினச்சன. அடுத்த நொடி நான் புரிஞ்சிட்டன், நானும் சாகப்போகிறவன்தான். வாழ்வு சம்பந்தமான என்னுடைய முழுக் கண்ணோட்டத்தையும் அந்தநிகழ்வு மாற்றிடிச்சு.. எனக்குப் பிரக்ஞை இருந்தது. ஆட்டோவப்பிடிச்சு என்னுடைய வீட்டுக்கு பக்கத்திலிருந்த மருத்துவ மனைக்கு நான் போய்ச் சேர்ந்துட்டன்.. அவங்களுக்கு என்னை அடையாளந் தெரியல.. சாதாரணமா ஒருத்தன் லுங்கியோட மயக்கம் போட்டு விழுந்தான்னா, மருத்துவமனை அவனை உள்ள எடுத்துக்காது.. மறுபடியும் கடவுள் என் பக்கமிருந்தார். ஆறு மணிக்கு வந்திருந்த தலைமை மருத்துவருக்கு என்னைத் தெரிஞ்சிருந்தது. பிற்பாடு என் மனைவி வந்தாங்க. வாழ்ககை சம்பந்தமான எனது முழக் கண்ணொட்டத்தையும் அந்த நிகழச்சி மாத்திரிச்சு. எனக்கு இது, நாளைக்கும் நடக்கலாம். இந்த நொடியே நேரலாம். அல்லது மூன்று வருஷம் பின்னாடி நடக்கலாம். என்னுடைய இப்போதைய ஆறுதல் அல்லது வருத்தங்கள் எல்லாம் என்னன்னா,. இன்னும் ரெண்டு மூணு விஷயங்கள் செய்ய வேண்டியிருக்கு. என்னுடைய ஊடகத்துல, என்னுடைய படைப்புல, நான் இன்னும் கொஞ்சம் படங்கள் செய்ய வேணும்.. அப்பறம் தனிப்பட்ட வாழக்கையிலே மாசம் நிரந்தரமா ஒரு பத்தாயிரம் ருபா சம்பாதிக்கறதுக்கான ஒரு வழி பண்ணனும். இந்த ரெண்டும் சாத்தியிப்படற ஒரு சூழுநிலைல நான் தயார். என்னுடைய கடைசிப் போராட்டத்துக்கு நான் தயாராயிடுவேன். எனக்கு ஒரு வீடிருக்கு. என் மகன் கவனிச்சுகுக்குவான். முழுக்க அவன் கவனிச்சுக்குவான். இவனுடைய பராமரிப்பு இல்லாம, என் புருஷன் மூலமா எனக்கு மாசம் பத்தாயிரம் ருபா வருது, பத்தாயிரம் கூட வேண்டாம், அஞ்சாயிரம் ருபா வருது என்கிற ஒரு சூழல் என் மனைவிக்கு அமையும்ன்னா, என்னுடைய கடைசி நிமிடங்கள கொஞ்சம் கலவரமில்லாம ஆகும.
யரா : அரசியல் ரீதியில, குறிப்பிட்டு, தனிப்பட்டு உங்களுக்குப் பிரச்சினைகள் இருக்குதுன்னு வச்சுக்களாங்க பாலு, ஆனா வெகுமக்களினுடைய வாழ்வு சார்ந்து, இங்கிருக்கிற நெருக்கடியான பல பிரச்சினைகள் இருக்கு இல்லீங்களா-
பாலு : பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால, இலங்கை அகதிகள் அனுபவத்த வச்சு ஒரு படம் பண்ண ஆரம்பிச்சன். தமிழ்நாட்டுக்கு வர்ற் அகதிகளுடைய அனுபவங்கள் பத்தி ஒரு படம். இது ராஜிவ்காந்தி பிரச்சினை நடக்கிறதுக்கு முன்னால. மட்டக்களப்பு ஜெயில் உடைப்பை அடிப்படையா எடுத்துக்கிட்டன். முழு ஆவணங்கள், ஆதாரங்களையும் சேகரிச்சேன். . அகதிகள் பிரச்சினை எல்லாத்தையுமே முழக்கவும் சமரசமில்லாத படமா எடுக்கலாம்ன்னு ஒரு முயற்சீல இருந்தன். பாதி வழியில நான் நிறுத்தப்பட்டேன் இந்த விஷயம் பற்றி இனி நாம் பேசவேண்டாம். தெளிவான நேரடியான அறிவுறுத்தல் வந்தது. நான் நிறுத்திட்டன். வாழ்க்கையில் நானா தேடிக்கிட்ட, என் வாழ்க்கையில ஏறப்பட்ட பிரச்சினைகள,. இந்தப் பிர்ச்சனைகள் வந்து என்னை அலைக்கழித்த அவலம், அது சொல்லிமாளாது. இது நானா தேடிக்கிட்டதுதான். வேற யாரையும் காரணம் சொல்லமுடியாது. இது எல்லாமே என்னை கனிசமான அளவு திசைதிருப்பிட்டது. என்னுடைய இயல்பான சிந்தனையையே இது பாதிச்சது. ஓரு வேளை இதெல்லாம் இல்லாம இருந்திருந்தா, நான் வீடு, சந்தியாராகம் மாதிரி இன்னும் நாலஞ்சு படமாவது எடுக்க முடிந்திருக்குமா என்கிற ஒரு எண்ணம், சில சமயங்கள் எனக்குள்ள தோன்றதுண்டு.
அதே சமயத்துல, என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில ஏற்பட்ட அவலங்களும், அலைக்கழிப்புகளும், இது எல்லாமே என்னுடைய சினிமாக்கள்ல்ல வந்து, அத உன்னதப்படுத்தியிருக்கிறது என்கிறதையும்,. அதெல்லாம் இல்லாம இருந்திருந்தா, மூன்றாம் பிறைலெ, அந்தக் கடைசிக் காட்சி அப்பிடி இருந்திருக்காதோ ? மூன்றாம் பிறைலெ ரெயில்வே ஸ்டேஷன்ல, அந்தக் கடைசிக் காட்சீல ஏற்பட்ட, அந்த எழுத்தில சொல்லி மாள முடியாத அந்த வலி, அந்தப் பிரிவினுடைய சோகம் வராமலே போயிருக்குமோ ?, அந்தக் காலகட்டத்தில நா இருந்த ஒரு மனநிலையில, அந்தக் காலத்தில என்னுடைய மனநிலையில் ஒரு தெறிப்பைத்தான் அது பிரதிபலிக்கிறது. ஷோபாவின் மரணத்தின் பின்னான உடனடியான தருணம் அது.
ஒருத்தர் உங்களுடைய வாழ்ககைக்குள்ள வந்துட்டு, திடாரென்று மறஞ்சிர்றார்.. ஏப்படி ? எங்கே ? என்ன மாதிரி ?. யாரும் உங்கள நம்ப மாட்டாங்க. , நீங்க என்ன சொன்னாலும் நம்ப மாட்டாங்க. படுகொலை. அந்த வலி அங்கிருக்கு. அந்த நசிவுல இருக்கு. அந்த உணர்வு நிஜமானது. எனது சொந்த வலியின் கீழ் நான் வாழ்ந்து கொண்டிருந்தேன். நான் சொன்னா கேக்க மாட்டாங்கடா. இதப் பார். இதோ உருமாதிரியாகவே -பிகரேட்டிவ்லி- இருக்கு,பாத்துக்குங்க. ஓளங்கள்ன்னு என்னுடைய மலையாளப்படம். அதுக்கு ஒரு அற்புதமான கடிதம் எனக்கு வந்தது. எரிக் ஸீகலுடைய மேன் வுமன் அன்ட் எ சைல்ட் என்ற நாவல அடிப்படையா வச்சு அத எமுதினன். அந்தப்படம் திருமணம் மீறிய உறவு பத்தியது. கேரளாவின் ஏதோ ஒரு இடத்திலிருந்து, ஏதோ ஒரு அன்னையிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. சிருஷ்டித்த கடவுளுக்கு உன் வழியிலான நன்றி சொல்லல்தான் ஒளங்கள் படம், அப்படான்னு எழதியிருந்தது.. சகோதரி வெரோனிகா. ரெண்டுவரி எழுதி எனக்கு லெட்டர்ல அனுப்பறாங்க. அதுதான் எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பாராட்டு.
யரா : நீங்க உங்களுடைய திரைப்படக் கழக நாட்களுக்கு முன்னாடி, இலங்கையில் இருந்த காலத்தில, நீஙுகள் எழுதிக் கொண்டிருந்த கால்த்தில எழுதிக் கொண்டிருந்த பல்வேறு எழுத்தாளர்கள், எஸ். பொ, டொமினிக் ஜீவா, செ.யோ போன்றவங்க. மற்றது உங்க நெருங்கிய நணபராக இருக்கிறவர் கணேசலிங்கன் ஒரு திவிரமான அரசியல் நாவலாசிரியர். இப்படியான முந்போக்கு, நற்போக்கு, கலை இலக்கிய விவாதங்கள நடந்த பின்னணியில இருந்து நீங்க உருவாகியிருக்கீங்க. இலங்கைத் தமிழ் எழுததுக்கள்ல்ல அரசியல் உணர்வுங்கறது முக்கியமான அம்சம்.- ஒரு காலத்தில வர்க்கப் பார்வை, அப்புஙும் டானியல் மாதிரி இருக்கறவங்க முன்வச்ச தலித் பார்வை, அதுக்கப் பிறகு இப்ப உக்கிரமா வர்ர தமிழ் இன விடுதலை¢ப் பார்வை. இப்படிப் பார்ததமுன்னாா அதி உயர் அரசியல பிரக்ஞையுள்ள பின்னணியிலிருந்து வந்த உங்ககிட்டிருந்து வந்த படைப்பகள்ல்ல, இது வரைக்கும் மனிதப் பரிமாணம்தான் அதிகமா இருக்குதேயொழிய, அரசியல் பரிமாணம் அதிகமா இல்லை. நீங்கள் வளர்ந்ந சூழலல்ல வநது அரசியல் பரிமாணம் என்கிறது ஒரு முக்கியமான விஷயம். ஒரு சில படங்கள்ல்ல இருக்கிற ஒரு சில காட்சிகள்ல்ல தவிர, யாத்ரா பட நக்ஸலைட் சித்திரவதை மற்றது போலீஸ் வன்முறைக் காட்சிகள் தவிர, உங்க படங்கள்ல்ல அரசியல் பரிமாணம் எனகிறது இல்ல. இது வந்து பிரக்ஞைபூர்வமாக நிங்க கடைபிடிக்கிீறதுன்னா, அதுக்கு என்ன காரணம் ? அல்லது அடி மனத்தில அப்பிடி நேர்ந்ததா ? ஏன் இந்த அரசியல் பிரக்ஞை வெளிப்படையா உங்க படைப்பகள்ல்ல இலலாம இருக்குது ?
பாலு : சமகாலத்திய இந்திய எழுத்தாளர்களோடு ஒப்பிடும் போது, இலங்கைத் தமிழர்கள் தங்களுடைய வாழ்வுல எதிர்கொண்டு வர்ற பல்வேறு அழுத்தங்கள் நெருக்கடிகள் போன்றவைகள் அவங்களுடைய எழத்துக்கள்ல்ல வருது. அந்த எழுத்துக்கள வந்து இப்ப சமீப காலங்கள்ல்ல இன்னும் உக்கிரமா இருக்குது. நமக்கு மேலோட்டமான சில பிரச்சினைகள் தான் இருக்குது. சில சம்பவங்கள், அதுக்கும் மேல வாழ்ககையினுடைய சில குருரங்கள் அப்படின்னு என்னுடைய படங்கள்ல்ல வெளிப்படையா அரசியல் இல்லாமப் போனதுக்கு இந்த ரெண்டு காரணங்களுமே பொருந்தும்.
எனக்கு வந்து இயல்பாகவே தெருவில யாராவது சண்டை போட்டுட்டிருக்காங்கன்னா, நா அடுத்த தெருவில போயிருவன். ஏனக்குச் சண்டை பிடிக்காது.. நான் வன்முறையை வெறுக்கிறேன். வன்முறையோடு சம்பந்தப்பட்ட எதையும் நான் வெறுக்கிறேன்.. நான் அரசியல் பொய்களை முற்ற முழுதாக வெறுக்கிறேன்.. இது வந்து இயற்கைககும் அப்பாற்பட்ட ஒரு அதீதமான வெறுப்பா எனக்கு முன்னால இருக்குது , அரசியலோட சம்பந்தப்பட்ட பல சமாச்சாரங்கள், அதனால வரக்கூடிய மிக மோசமான வன்முறை, ஏமாற்றரதும் ஜனங்கள முட்டாள்கள் ஆக்கறதும், இம்மாதிரி அதன் மேல இருக்கிற அதீதமான வெறுப்பு காரணமாவே மனத்தளவில நான் இந்தப் பக்கத்தில நிற்கறன். நான் அதைப் பாரக்க மாட்டேன். என்கிற மாதிரியான ஒரு உளவியல் காரணம் அதுல இருக்கலாம்ன்னு, இப்ப என்னால யோசனை பண்ணமுடியுது. அது ஒரு காரணம்.
இந்த விஷயங்கள் என்னை ரொம்பக் கோபப்படுத்துது. இதுக்குள்ள நா போனேன்னா, ரொம்ப வன்மையாப். போவன். நா வன்மையா இதுக்குள்ள போற சமயத்தில, நீங்க சொன்ன ரெண்டாவது காரணம் அதுககுள்ள வருது. நான் இன்னக்கி இதத் தொட்டேன்னா, மேலோட்டமா இதத் தொடமாட்டன். எனது முழு வேகத்தோட, எனது முழுக் கோபத்தோட, எனது முழு ஆழத்தோட ஈடுபாட்டோடதான் இதத் தொடுவன். அப்பிடியான ஒரு மூர்க்கமான கோபத்தோடயும், மூர்க்கமான வேகத்தோடயும் இதுக்குள்ள நுழைவேங்கறதுனால, உள்ள போனா நா மேலோட்டமா நின்னு நயமெல்லாம் பாத்திட்டிருக்கமாட்டன்,. சட்டையைப் புடிச்சுக் கேட்கற அளவுககுத்தான் என்னால முடியும். அந்த அளவுக்குக் கோபமும் இருக்கு எனக்குள்ள. இப்பிடிப் போறப்ப, இதனுடைய விளைவுகள் என்னவா இருக்கும் என்கிறத நா யோசன பண்ணிப் பார்க்கறன். ஏன்னுடைய பிண்ணனி, என்னுடைய வாழ்ககையை நேரடியாகப்பாதிக்கும். எனனுடைய படைப்பை நேரடியாகப் பாதிக்கும்.. என்ன மட்டும் பாதிச்சாப் பரவாயில்லை. இது வந்து என்னுடைய தார்மீகக் கோபம், இது வந்து பாலு மகேந்திரா என்கிற தனி மனிதனோட் சம்பந்தப்பட்ட விஷயம்.
இது வந்து ஒரு குற்ற உணர்வோடயும், ஒரு வெட்கத்தோடயும்தான் நா சொல்லிக் கொள்ள வேண்டிய விஷயம். இதுல கனிசமான வகையில சுயநலமான எணணமும் இருக்கு. இதுக்குள்ளப் போகும்போது,. இது என்ன மட்டுந்தா பாதிக்கப் போகுதுன்னாப் பரவாயில்ல, என்னுடைய மனைவியப் பாதிக்கப் போகுது. ஏன்னுடைய குழந்தையப் பாதிக்கப் போகுது. அவங்களுக்கு, எனக்கிருக்கிற ஆழ்ந்த ஈடுபாடோ, ஆழ்ந்த பார்வையோ, கோபங்களோ இல்லாம இருக்கலாம் அல்லது இருக்கலாம. அது வேற விஷயம். இது என்னோட சம்பந்தப்பட்ட கேள்வி மட்டுமல்ல, நான் எனக்குள்ளயே கேடடுக் கிட்டிருக்கிற, இன்னைக்கு மட்டும் எனக்கு விடை கிடைக்காத ஒரு கேள்வி. என்னுடைய தனிப்பட்ட கோபங்களுக்காக, என்னுயை தனிப்பட்ட பிடிவாதங்களுக்காக, ஊடகத்தின் மீது எனக்குள்ள பிடிப்பு காரணமாக, நான் வகுத்துக்கொண்ட எல்லைகள் அல்லது என்னுடைய விருப்பம் இதற்குள்ளதான் நான இயங்கியவன். இப்படித்தான இயங்குவேன்.. இதுக்காக என் கையில் கொடுகக்ப்பட்ட அல்லது என் கையில் கொடுக்கப்பட்ட வித்தை, இந்த சினிமா எனகிற மொழி அதில் எனக்கிருக்கிற பாண்டித்யம், இதில நான் என்னுடைய படைப்பு நலன மட்டுமே பிரதானப்படுத்தியது சரியா அபப்டான்னு எனனையே நான் கேள்வி கேடடுக் கொள்றன்.
என்னோட ஆரம்பிச்சு, எனக்கு அப்பறம் ஆரம்பிச்ச சினிமா இயக்குனர்கள எல்லாம் சுத்திப்பாத்தா, இந்தப் பிரச்சினையே எனக்கு பெப்ஸி படைப்பாளி பிரச்சினை¢ நடக்கிறப்பத்ான் வந்தது. அவங்க ஒரு போர்டு வண்டியில வந்த எறங்கறாங்க. ஓரு ஹோண்டா சிட்டியில வந்த எறங்கறாங்க. இவங்க பின்னணி என்ன்னனு பாத்தா, ரெண்டு படம் பண்ணியிருக்காங்க. மோசமான படங்க. நா ஆட்டோவில போய் எறங்கறன்.
என் வீட்டுல, என் மனைவி பால்கார்டு மாத்தறதுக்கு, அடுத்த வீட்ல கடன் வாங்க வேண்டியிருக்குது. இப்படி ஒரு பொருளாதார நிலைல நா இருந்துகிட்டிருக்கிறன். அப்ப இந்தக் கேள்வி முன்னால வருது. என்னுடைய பிடிவாதங்களுக்காக, நான் வகுத்துக் கொண்ட எல்லைகளுக்காக, நம்பிக்கைகளுக்காக, என்னுடைய சினிமா மேல எனக்கு இருக்கக்கூடிய இந்த வெறிகொண்ட இந்தப்பற்றுதல்ன்னால, நா இயங்கிட்டு வந்து, என் கையில் இருக்கிற இந்த வித்தைய முழுக்க முழுக்க எனககே எனக்குன்னு நா வெச்சிகிட்டு இருந்ததால,. இதனால மத்த இயக்கனர்கள், சினிமாக்காரர்கள் அவங்களுடைய மனைவி மக்களுக்குக் கொடுக்க முடிந்த சுகவாழ்க்கையை நிராகரித்தது, ஒரு சரியான முடிவுதானா என்பது இன்னும் எனக்கு முடிவு தெரியாத ஒரு கேள்வியாக இருக்கிறது. ஒரு கார், ஒரு டெலிபோன், அடுத்த மாசக்கடசி வருதுன்னா ஒரு பயம், இதோடு சேர்ந்த ஒரு வாழ்க்கை. என்னுடைய பிடிவாதங்களை நா கொஞ்சம, கொஞ்சம் விட்டுக குடுத்திருந்தன்னா, எனக்கிருந்த அந்த அடிப்படை சமாச்சாரங்களை என்னுடைய மனைவிக்கோ, என்னுடய குழந்தைக்கோ, என்னுடைய காதலிக்கோ, யாருக்கோ கொடுத்திருக்கலாமே, இவங்களத் துன்புறுத்துறதுக்கு எனக்கு என்ன உரிமையிருக்கு, இது சுயநலமில்லயா, அவங்களுக்கும் சினிமாவில எனக்கிருக்கிற வெறிக்கும் என்ன சம்பந்தம் ? என்கிற என்னுடைய கேள்விக்கு நா விடையில்லாம இருககிறன். நீங்க கேட்ட சமாச்சாரத்துக்கும் இந்தச் சுயநலந்தா காரணம். நா வன்மையா இதுக்குள்ள போவன். அதுக்காக என் கையிலிருக்கற சினிமாவ வச்சிட்டு என்ன பண்ணறதுங்கறது எனக்குத் தெரியும். ஆனா இதக்குள்ள நா போணண்ண, நா ஏற்கனவே இவங்கள ரொம்ப மோசமான நிலைமைக்கு ஆளாக்கி வெச்சிருக்கிறன். என்னுடைய தனிப்பட்ட வாழ்ககையில எனக்கேற்பட்ட விபத்துக்கள், அவலங்களாலேயும் அவங்க நொந்து போயிருக்காங்க, இப்ப இதையும் சேர்த்து அவங்க தலையில சுமத்தறதுக்கு நா ஆயத்தமா ?
யரா : இந்தக் கேள்விய நான் ஏன் கேட்க வேண்டியீருக்குதுண்ணா பாலு, இப்ப வந்து உலகம் பூரா தமிழ்படங்களுக்கு இலங்கைத் தமிழர்களுடைய பரவலால உலக மார்ககட் உருவாகியிருக்குது. இது அல்லாம ஹாலிவுட் தொழில் நுட்ப சாத்தியத்தையும் உலகமயமாதலையும் பயன்படுத்தி, தங்களுடைய ஸ்கில்லையும் பயன்படுத்தி, சில தமிழ்ப்படங்கள, உலக அளவில வியாபாரம் பண்ணறாங்க. இப்படியான படங்கள ரெண்டுவகையாப் பிரிக்கலாம், ஒண்ணு இலங்கைத் தமிழ் மக்களின் துயரங்கள வச்சுப் படம் பண்றது மற்றது ஆங்கிலப்படங்கள், இலக்கியங்களோட அபத்தமா தமிழ் படங்கள ஒப்பிட்டு விளம்பரம் பண்ணி படம் விக்கறது.
முதல் வகைக்கு தெனாலி, டெர்ரரிஸ்ட் – அமெரிகக் நடிகர் இயக்குனர் ஜான் மல்கோவிச்சினுடைய சொந்தப் படம் மாதிரி விளம்டபரம் பன்றாங்க- மாதிரிப் படங்களச் சொன்னா, இரண்டாம் வகைக்கு கண்டுகொண்டேண் கண்டு கொணடேன் – ஸென்ஸ் அன்ட் ஸென்ஸிபிளிட்டியினுடைய தமிழ் வடிவம்ங்கறாங்க- அப்புறம் வன்முறைபத்திய இந்தியன் மாதிரியான சங்கர் படங்கள்ன்னு சொல்லாம்.
மர்லின் மன்றோவுக்கு பாவாடை காத்தடிச்சு இடுப்புக்கு மேல துாக்குற காட்சி மாதிரி, அதே ஹேர் டிரஸ்ஸோட அதே அடர்ந்த நிற பாவாடையோட இவங்களுடைய தமிழ்ப் படங்கள்ளேயும் ( இந்தியன் மற்றும் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்) பாவாடை காத்துக்குத் துாக்குது. இந்திய சினிமா இப்பிடித்தான் உலக சினிமாவோட தன்ன அடையாளப்படுத்திக் கொள்ளுது.. இந்தச் சூழலல்லதான் துயரமான அசலான வாழ்முறை அனுபவங்களக் கொண்ட மக்களைச் சார்ந்த உங்களுக்கு, ஒரு சினிமாக்காரரா பொறுப்பிருக்கும்ங்கற அக்கறைளையும், இப்படங்கள் மீதான கோபத்திலையும்தான் இந்தக் கேள்வியக் கேட்டன்.
பாலு : நல்லாப் புரியது. இங்கேயிருக்க்கூடிய ஒரு சில படைப்பாளிகள், ஒரு சில இயக்குனர்கள், வாழ்ககையின் அவலங்களை, வாழ்க்கையினுடைய அநியாயங்களை, அதனுடைய சோகங்களையெல்லாம் நாங்க தொடரோம் என்கிற பாவ்லா பண்ணிக் கொண்டு, ( அந்த உணர்வுகள் எதுவமே அவங்களுக்குக் கிடையாது) சினிமாஸ்கோப் திரையில் காண்பிக்க இது நல்ல கச்சாப் பொருள், இதக் காசாக்கிக்கலாம், காசாக்கப்படவேண்டிய ஒரு நல்ல கச்சாப்பொருள்தான் இதுன்னு மனுசக்குள்ள சந்தோஷப்பட்டுக்கிட்டு, இந்த மாதிரி விஷயங்கள தொட்டுகிடடிருக்காங்க. உங்களவிட அதிகமான கோபம் எனக்கிருக்குது. அந்தக்கோபங்கள நா சில சமயங்கள்ல வெளிப்படுததவும் செஞ்சிருகக்ன். பாட்டும் கூத்துமாச் சொல்ற உள்ளடக்கமா இது ?
எந்த விஷயத்துக்குமே ஒரு அடிப்படை மரியாதை இருக்கில்லியா ? சொல்லாதய்யா. இது உன்னுடைய நோக்கமல்ல. இது வந்து உன்னத்தாக்கி, ஒரு தார்மீகமான ஒரு கோபம் உனக்குள்ள ஏற்ப்பட்டுவரல்ல, காசுக் கண்ணோட்டத்தில இத மாத்தி அப்புறம் இந்தப் பிரச்சினையையும் மக்களையும் நீ தொட்டு முட்டாள்கள் மாதிரி மக்களப் பாவிக்கிற,. நீ ஒரு சமூகப் பொறுப்புள்ள இய்க்குனர் என்று உனக்கு அங்கீகாரம் கிடைக்குது. தலைகுனிஞ்சு அத நீ ஏத்துக்கற. என்னப் போல உங்களப் போல சிலர் இருந்தாலும், பார்வையாளன் ஒரு கையாலாகாத பார்வையாளனாக இருக்கிறான். ஓன்னஞ்செய்ய முடியல்ல. சில சமயங்கள்ல்ல நான் ரொம்ப கோபமா உணர்றன்.
கண்ணீரை, அவலங்களை, வேர்வைய இவங்க காசாக்கிட்டு இருக்கறாங்க.
***
yamunarn@hotmail.com
- இலையுதிர்க் காலம்.
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது -4( தொடர்கவிதை)
- வலி
- வாழ்வும் கலையும் (இறுதிப்பகுதி)
- ஆவலும் அப்பாவித்தனமும் (எனக்குப் பிடித்த கதைகள் – 36-வைக்கம் முகம்மது பஷீரின் ‘ஐஷூக்குட்டி ‘)
- ஊசியின் காதும் ஒடுங்கிய தெருவும் (கபீர் தாசாின் சிந்தனைகள் பற்றி சில குறிப்புகள்)
- செயற்கைக் கதிரியக்கம் ஆக்கிய ஐரீன் ஜோலியட் கியூரி [Irene Joliot Curie] (1897-1956)
- அறிவியல் மேதைகள் ரூதர் ஃபோர்ட் (Ruther Ford)
- பாட்டு படும் பாடு
- நீங்கள் இன்று…
- படிக்க மறந்த கவிதை
- நலமுள்ள நட்பு
- பால்
- கடற்கரை வாக்கிங்
- வட்டத்தின் வெளி
- வேங்கூவர் – கனடா
- வேகத் தடுப்புகள்
- வாழ்வும் கலையும் (இறுதிப்பகுதி)
- சிந்து சமவெளி நாகரிகம் : ஒரு மறு பார்வை
- எஸ் என் நாகராஜன் 75 ஆண்டு நிறைவு : மலர் வெளியீடு
- என் குர் ஆன் வாசிப்பு
- சுற்றம்
- அரிசிபால்தீ
- நாங்கள் பேசிக்கொள்கிறோம்