வார்த்தைகளாய் மாறிய சூபியின் ரத்தம்

This entry is part [part not set] of 34 in the series 20070419_Issue

ஹெச்.ஜி.ரசூல்



1)
இருள் கானகமீதேறி
நானை முற்றுமழித்துச் செல்லும்
விசித்திரப் பயணம்
புலன்களும் புறவெளிகளும் மறந்த
ஆன்மாவின் தனிமைக்குள்
ரகசிய தூது.
பத்து நூறாயிரம் வருசங்களாய்
உறைந்துறைந்து கிடக்கும்
எதுவுமற்று மிஞ்சி பனாவாகிப் போனது
கவிதைச் சடலமொன்று
2)
நானை பிளந்து அதனுள் தேடி
ரூஹின் திரவத்துளிகளுக்குள் மிதந்து
அனல் ஹக்காய் உருமாறிய
அதிசயக்குரலின் மர்மங்கள்
மெளனம் ததும்ப நீடித்தது
ஆதமைப் படைத்ததில்
ரூஹை ஊதியதாய் சொன்ன
வார்த்தையின் மீது
வாள்முனை குத்திநாட்டப்பட்டது.
கதறக் கதற
கண்டதுண்டமாய் வெட்டி வீசப்பட்ட
சூபியின் உடல் துண்டுகள் ஒவ்வொன்றும்
ரத்தம் வடிய வடிய
வார்த்தைகளாய் மாறி
வந்து உட்கார்ந்ததென் கவிதைமீது.


mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்