வாரபலன் – மே 6,2004 – அ.ஜீ.ரணம் , நிறுத்தமுடியாத நோயாளி டி வி ,நச்சுறவு நிராகரணம்

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

மத்தளராயன்


வழக்கம்போல் பால் சக்கரியா தான் தொடங்கி வைத்தார்.

‘அறிவுஜீவிகளால் கால் காசுக்குப் பிரயோஜனம் கிடையாது ‘.

அவர் சொன்னது மலையாள அறிவு ஜீவிகளை. அவருக்கும், கேரளத்தில் பலருக்கும் அறிவுஜீவிகள் என்றால் படைப்பாளிகள். அதாவது எழுத்தாளர்கள், கவிஞர்கள், நாடக ஆசிரியர்கள்.

சக்கரியாவைத் தொடர்ந்து கோவிந்தப் பிள்ளை அறிவுஜீவிகளை ஒரு பிடி பிடித்தார். முதலாவதாக அ.ஜீ டெஃபனிஷனைக் கொஞ்சம் விரிவாக்கினார் – எழுதுவது மட்டுமில்லாமல் கூட்டத்தில் மைக்கைப் பிடித்து அரைமணி நேரம் நிறுத்தாமல், சுத்த மலையாளம் மட்டும் அறிந்த பகுமானப்பட்ட நாட்டுக்காரருக்கு கூடியவரை ஒரு சுக்கும் விளங்காமல், முடிந்தால் வடமொழியும், வழக்கொழிந்த சொல்லும் பயன்படுத்தி அது நடக்காவிட்டால் மூச்சு விடாமல் ஜிலேபி பிழிகிறதுபோல் வளைத்துக்கட்டிப் பேசி – சரி சார், சரி, எங்க ஊருலேயும் அ.ஜிக்கு கிட்டத்தட்ட இதே டெஃபனிஷன் தான் – தோரணையோடு வலம் வருகிறவர்கள்.

கோவிந்தப் பிள்ளை இடதுசாரி சித்தாந்தவாதி. அவர் பாய்ந்து பிடித்தது புரஃபசர் சானு மாஸ்டரை. எந்த சானு மாஸ்டர் ? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேரளச் சட்டசபை உறுப்பினராக இருந்து, அக் கட்சியின் கலை, இலக்கிய நிலைபாட்டை முன்வைக்கும் முக்கியப் பிரதிநிதியாகச் சமீப காலம் வரை அறியப்பட்டவர்.

அப்பேர்க்கொத்த சானு மாஸ்டர் இப்போ பா.ஜ.க பத்திரிகையிலே ‘வாஜ்பேய் மேலே ஒரு குற்றமும் சொல்ல எனக்குத் தெரியலை ‘ என்று எழுதியிருக்கிறாராம். அதுமட்டுமா, கோவிந்தப் பிள்ளையின் பா.ஜ.க அனுதாபி அலையஸ் அ.ஜி லிஸ்டில் கவிஞர்கள் விஷ்ணுநாராயணன் நம்பூதிரி, சாகித்ய அகாதமி தலைவர் சச்சிதானந்தன், கமலா சுரையாவாக மாறிய மாதவிக்குட்டி கூட உண்டு. இப்படி இன்னும் பிரபலத்தையோ, பரபரப்பையோ கருதி சந்தர்ப்ப வாதிகளாகும் அறிவுஜீவிகளால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று இடது சாரியிலிருந்து எக்ஸ்றீம் ரைட் போனவர்களை கோவிந்தப் பிள்ளை சாட, அவரைத் தொடர்ந்து பேனாவைப் பிடித்தவர் எழுத்தாளர் கே.என்.மோகனவர்மா.

‘அறிவு ஜீவிகள் சாதுப் பிராணிகள். இவர்களால் யாருக்கும் எந்த உபத்திரவமும் கிடையாது ‘ என்கிறார் முந்தாநாள் பத்திரிகையில் மோகனவர்மா.

மலையாள அ.ஜி மட்டுமில்லை, சராசரி மலையாளியே பரம சாது. தமிழனைப் போல் போர்க்குணம் இல்லாதவன் என்பது இவருடைய வாதம். மிஞ்சி மிஞ்சிப் போனால் பெரிய மனிதர்களின் பின்னால் இருந்து, அவர்களுக்குச் சேவகம் செய்து வாழ்நாளைக் கழிப்பவர்கள் தான் சேட்டர்களில் பலரும் என்பது இவருடைய கட்சி. கொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாஜி கொள்ளைக்காரியுமான பூலான் தேவி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்னும் பல அரசியல் தலைவர்களுக்கு காரியதரிசிகள் எல்லாம் மலையாளிகள் தான். ஆனால் கேரளத்திலிருந்து கிளம்பி அகில இந்திய அளவில் தலைவரானவர்கள் எத்தனை பேருண்டு என்று கேட்கிறார் மோகனவர்மா.

இன்னொரு விஷயத்தையும் சொல்கிறார். அது மலையாளியின் சாதுர்யம் பற்றியது. நாட்டு விடுதலைக்குப் பிறகு வெளிவிவகாரத் துறையின் முதல் காரியதரிசியாகப் பணியாற்றியவர் சர் என்.ஆர்.பிள்ளை. காஷ்மீர் ஏன் இந்தியாவின் பகுதியாகவே இருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு வலுவான ஆதாரங்களோடு எழுத வேண்டிய பணியை நேரு இந்த ஐ.சி.எஸ் காரரிடம் ஒப்படைத்தார்.

ஐ.நா சபைக்கு அது போய்ச் சேர்ந்து அங்கேயிருந்து பாகிஸ்தானுக்கு அந்த அறிக்கையை அனுப்பி, ‘நீங்க என்னய்யா சொல்றீங்க ‘ என்று ஐ.நா விசாரித்தது. பாகிஸ்தானின் முதல் அதிபரான ஜின்னா யார் யாரையோ ஏவி எத்தனை முயற்சி செய்தும் இந்தியத் தரப்பு வாதத்துக்கு எதிராக, ஏன் காஷ்மீர் இந்தியாவின் பாகமாக இருக்கக் கூடாது என்பதற்கு ஆணித்தரமான வாதங்களை பாகிஸ்தான் சார்பில் முன்வைக்க அந்த நாட்டில் ஒரு புத்திஜீவியும் கிடைக்கவில்லை.

ஆயிரம் அரசியல் வேறுபாடு இருந்தும், ஜின்னாவுக்கு நேருவோடு தனிப்பட்ட நட்பு இருந்த காரணத்தால் அவர் உடனே நேருவுக்குத் தொலைபேசி, இந்தியாவிலே இந்தப் பதிலை எழுதிக் கொடுக்க ஆள் இருந்தா கொஞ்சம் ஏற்பாடு பண்ணி உதவுங்களேன், புண்ணியமாப் போகும் என்றாராம். நேருவும் உடனே கைகொடுத்தார்.

வெகு விரைவில், ஜின்னாவுக்கு முழுத் திருப்தி தரத்தக்க விதத்தில் காஷ்மீர் ஏன் இந்தியாவில் இருக்கக் கூடாது என்று தலைகாணி சைஸ் அறிக்கை இங்கேயிருந்து தயாரித்து இஸ்லாமாபாத்தை அடைந்து அங்கேயிருந்து ஐ.நா போக, மேற்படி பிரச்சனையோ இழுக்க இழுக்க ஓய்கிற வழியே இல்லாமல் இன்னும் நீள்கிறது.

பாகிஸ்தான் தரப்பு வாதத்தை இப்படி புஷ்டியாக எழுதிக் கொடுத்தது யார் தெரியுமா ? இந்தியா சார்பில் அறிக்கை தயாரித்த அதே சர்.என்.ஆர்.பிள்ளை ஐ.சி.எஸ் தான்!

சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை ‘ நாவலில் ஒரு நகரசபை உத்தியோகஸ்தர் வருவார். வீட்டு வரி கட்டாதவர்களை எப்படிக் கிடுக்கிப் பிடி போட்டு வரி வசூல் செய்வது என்று நகரசபை தலைவருக்கு யோசனை சொல்வார் இவர். அப்படி வரி வசூலுக்கு வந்தால் எப்படித் தப்பிப்பது என்று வீட்டுக்காரருக்கு யோசனை சொல்வதும் இவர்தான். முன்னது வாங்குகிற சம்பளத்துக்காகவும், பின்னது சம்பளம் போதாமல் குடும்பச் செலவுகளைச் சமாளிக்கவும் அவருக்கு வழி செய்யும்.

என்.ஆர்.பிள்ளைக்கு நேரு சம்பளத்தை ஒரு தம்பிடி போலும் குறைத்துக் கொடுத்திருப்பார் என்று தோன்றவில்லை. ஜின்னா அவருக்கு என்ன கொடுத்தார் என்பதும் தெரியவில்லை. ஆனாலும் என்.ஆர்.பிள்ளையின் அறிவு ஜீவிதம் ஜவஹர்லால் நேருவாலும், முகமதலி ஜின்னாவாலுமே பாராட்டப்பட்டது என்பதை மறுக்க முடியாது. அது சரி, மலையாள அ.ஜிக்கும் தமிழ் அ.ஜிக்கும் ஆறு வித்தியாசம் என்ன ?

****

பிரிட்டனில் தேசிய ஆரோக்கிய சேவை (என்.எச்.எஸ்) மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு டெலிவிஷன் வசதி செய்து கொடுத்தால் என்ன என்று போன வாரம் அரசாங்க அதிகாரிகளுக்குத் திடார் ஐடியா.

எப்படியும் இந்த நோயாளிகளோட மருந்து மாத்திரை, உப்பில்லாத சூப், ஆரஞ்சுப் பழம், மில்க் ஓஃப் மெக்னீஷியா இன்னோரன்ன செலவை எல்லாம் கவர்மெண்ட் தானே கொடுக்கப் போறது. ஆனை காரியத்துலே சேனை காரியமா, மாசா மாசம் கேபிள் டிவிக்காக மூணே கால் பவுண்ட் வசூலிச்சு இப்படி டெலிவிஷனை மருத்துவ மனைக்குள்ளே கொண்டு போனால் என்ன ?

இந்த யோசனை வருவதற்கு முன் ஏதாவது சர்வே எடுத்து, மாதக் கணக்கில் ஆஸ்பத்திரியில் பத்தியச் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டு படுத்துக் கிடக்கிற நோயாளிகளின் எண்ணிக்கையை நாலைந்து மாதம் மாய்ந்து மாய்ந்து எடுத்துப் பகுத்துத் தொகுத்து விளக்கி அறிக்கை சமர்ப்பித்திருப்பார்களாயிருக்கும்.

ஆக, நாடு முழுக்க முப்பத்திரெண்டு அரசாங்க மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட பதினெட்டாயிரம் படுக்கைகள் பக்கத்திலே பெட் பான் இருக்கோ என்னமோ, டிவி வந்தாச்சு. காலையிலே ஆறு மணியிலேருந்து ராத்திரி பத்து வரை நோயாளிகளுக்குப் பொழுது போக இதை விட சிறந்த ஏற்பாடு என்ன இருக்க முடியும் சொல்லுங்க.

பிரச்சனை இங்கே தான் ஆரம்பமானது. டி.வி பாட்டுக்கு தினம் பதினாறு மணி நேரம் ஓடிக்கிட்டே இருக்கும். சரி, அதை நிறுத்திட்டுக் கண் அயரலாம் என்றால் சான்சே இல்லை. சனியனை நிப்பாட்டிப் போட சுவிட்ச்சே இல்லாம ரொம்பவே ஸ்பெஷலா உண்டாக்கிவிட்ட பொட்டி அதெல்லாம்.

நர்சம்மா, துன்பம் தாங்கலே, கொஞ்சம் உதவி செய்யுங்க என்று முக்கி முனகிப் பிரலாபித்த நோயாளிகளுக்காக மருத்துவமனைத் தாதிகள் செய்யக் கூடியதான ஒரே காரியம் படுக்கைப் பக்கத்து டிவியை சுவரைப் பார்க்கத் திருப்பி வைப்பதுதான். டிவி வைத்த புண்ணியவான்கள் அந்த சவுகரியமாவது செய்திருக்கும் நிம்மதியோடு கம்பளியைக் காதைச் சுற்றிப் போர்த்துக் கொண்டு சீக்காளிகள் கூட்டுப்புழு போல் சுருண்டு கிடப்பதாகக் கேள்வி.

இப்படி மூணே முக்கால் பணம் கொடுத்து ஆட வைத்து, எத்தனை பணம் அழுதாலும் நிறுத்த முடியாத டிவி எழவே வேண்டாம் என்று கையெடுத்துக் கும்பிட்ட நோயாளிகளையும் ஆஸ்பத்திரிகள் விட்டுவைக்கவில்லை. சும்மா உங்க படுக்கைப் பக்கம் இருந்துட்டுப் போகட்டும் என்று அவர்களுக்கும் தொல்லைக்காட்சிப் பெட்டி. அதில் நிகழ்ச்சி வராதே தவிர, வரிசையாக டிரெயிலர்கள், விளம்பரங்கள்.

புஷ்ஷோடு கூட்டுக் களவாணியானபோதே டோனி பிளேருக்கு அஷ்டமத்தில் சனி பிடித்தது. இந்த மாதிரி எல்லாம் நாட்டு மக்களைக் கஷ்டப்படுத்தினால் அடுத்த எலக்ஷனில் அவருடைய லேபர் பார்ட்டி ஆஸ்பத்திரி லேபர் வார்டுகளில் தொடங்கிக் குறைப்பிரசவமாக வெற்றியைப் பெற்றெடுக்க வேண்டி நேரலாம்.

இது இப்படி இருக்க, உலகம் முழுக்க சகல விதமான மனுஷப் பிராணிகளுக்கும் கிட்டத்தட்ட அறுபது வருடத்துக்கு மேலாக டெலிவிஷனில் பிலிம் காட்டி அலுத்துப் போயோ என்னவோ பி.பி.சி இப்போது பிராணிகளின் பக்கம் திரும்பி இருக்கிறது. மே ஒண்ணு முதல் நாய், பூனை போன்ற வளர்ப்பு மிருகங்களுக்காக பி.பி.சி டி.வி நிகழ்ச்சி ஆரம்பித்திருக்கிறதாகச் செய்தி.

சும்மா எலியையே பிடிச்சுட்டுக் கிடந்தா பூனைக்கெல்லாம் போர் அடிக்காதா ? டிவியிலே அதுகளுக்காக ஸ்பெஷலா தண்ணி விழற சத்தம். கூட்டமா மீன் நீந்திப் போறது அப்படின்னு காட்டப் போறோம். அதுங்களுக்கு நிச்சயம் சுவாரசியமா இருக்கும். அதுபோல, பந்து வரிசையா உருளறது நாய்களுக்கு பேவரைட் ஷோவாக ப்ரைம் டைம்லே தூள் கிளப்பப் போறது பாருங்க.

சுறுசுறுப்பான பிபிசி அதிகாரிகள் இதோடு நிறுத்திக் கொள்ளப் போவதில்லையாம். பிராணிகள் கண்டு களிக்க கார்ட்டூன் படங்களும் ஒளிபரப்பில் இடம் பெறுமாம். பின்னே வேணாமா ? நீங்க கிளி வளர்க்கறீங்களா ? டி.வி கார்ட்டூன்லே வர கிளி இங்கிலீஷ் பேசறதைப் பார்த்து உங்க வீட்டுக் கிளிக்கும் ஆர்வம் ஏற்படலாமே.

அப்புறம் சீரியல்கள். ஈஸ்ட் எண்டர் போன்ற பிரபலமான தொடர்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் கிள்ளி எடுத்து பிராணி ஸ்பெஷல் டிவியிலே வருமாம்.

போகிற போக்கில் ராத்திரி குங்குமமோ, கடமட்டத்துக் கத்தனாரோ, மாலினி ஐயரோ பார்க்க நாம் உட்காரும் முன்னால், டாமி, பிங்க்கி, சுவர்லே பல்லி, செருப்பு விடற இடத்துலே கரப்பான் பூச்சி எல்லாம் டிவிக்கு முன்னால் ஆஜராக வாய்ப்பு உண்டு.

மிருகங்களைச் சித்திரவதைப் படுத்த இது ஒரு புது வழி என்பதால் உடனே தடை செய்ய வேண்டும் என்று மனேகா காந்தி நம்ம ஊர் எலக்ஷன் முடிந்து பத்திரிகையில் காலம் எழுதவும் காலம் கனிந்து கொண்டிருக்கிறது.

****

மாங்காட்டு வேளாளன் மகளை மருமகன்பால்

போங்காட்டில் இன்பம் புணர்ந்தானே – ஆம்காணும்

மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

என்று இரட்டைப் புலவர்கள் பாடிய ஒரு தனிப்பாடல். முதல் இரண்டடியை ஒருத்தரும் அடுத்த இரண்டை இன்னொருத்தரும் பாடிய வகையில் அமைந்த இந்தச் செய்யுளில் விஷயம் இருப்பதோடு விஷமும் இருப்பதாக மலேசிய எழுத்தாளர் டாக்டர் ரெ.கார்த்திகேசு குறிப்பிட்டிருந்ததைப் படிக்க நேர்ந்தது.

உண்மைதான். தகப்பனே சொந்த மகளோடு உடலுறவு கொள்வது பற்றி முதல் இரண்டு அடியில் உருவாக்கும் எதிர்பார்ப்பு அந்த நச்சு. பாட வந்த சமாச்சாரம் அது இல்லீங்க என்று அடுத்த இரண்டு வரியில் திருவள்ளுவர் தலையில் அடித்துச் சத்தியம் செய்ததில் தென்படும் சாமர்த்தியத்தில் இந்த விஷத்தை உப்புத் தொடாமல் விழுங்க வைத்து ஜீரணமாகப் பழைய இலக்கியச் சீரக வெள்ளம் கொடுத்து விடுகிறார்கள் புலவர்கள்.

பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் இப்படியான தகாத உறவுமுறைகள் கிளர்ச்சியூட்டும் நோக்கத்தோடு பாடுபொருளாக அமைவது நிறைய நிகழ்ந்திருக்கிறது.

காளமேகப் புலவரின் இந்தப் பாடல் உதாரணம் –

எட்டி குளத்தில் இருந்து சரக்குவிற்கும்

குட்டிசெட்டி தன்மகளைக் கொண்டுபோய் – நொட்டுதற்கே

ஆயிரம் யானை எழுநூறு கூன்பகடு

பாயும் பகடெண்பத் தைந்து.

போர்னோகிராஃபியில் இன்செஸ்ட் சார்ந்த அசிங்கங்கள் ஆங்கிலத்தில் பிரபலம் ஆனாலும், தமிழிலும் திராவிட மொழிகளிலும் தற்காலத்தில் இவ்வகை குறைவுதான். செக்ஸ் ஈடுபாட்டில் யாருக்கும் சளைக்காத தமிழ்ச் சமுதாயத்தில், அருவருப்படைய வைப்பதாக இதெல்லாம் பெரும்பான்மை மக்களால் ஒதுக்கப்பட, இங்கே பரவலான மலினப்படுத்தப்பட்ட கலை வெளிப்பாடுகள் கூட தந்தை – தாய் – மகன் – மகள் போன்ற பிறப்பு சார்ந்த அடிப்படை குடும்ப உறவுகளை மறைமுகவாகவேனும் மேன்மைப்படுத்தியதே காரணம். தமிழ் மைண்ட்செட்டில் ஆயிரத்தெட்டு ஓட்டை உடைசல் இருந்த போதும் கூட, இந்தத் தலையாய உறவுகள் இன்னும் மதிக்கப்பட்டும் அவை சார்ந்த ஒழுக்கம் எந்தக் கேள்விக்கும் இடமளிக்காமல் பின்பற்றப்படவும் நம்முடைய நாலாந்தர சினிமாக் கூட உதவித்தான் இருக்கிறது என்பது அழுத்தமானதோர் சமூகவியல் உண்மை.

மாமனார் மருமகள் உறவு போன்ற திருமணம் சார்ந்த உறவு முறைகள் மட்டும் நாட்டார் கதை மரபிலும் சில புத்திலக்கியங்களிலும் இன்னும் கொச்சைப் படுத்தப்படுவது குறிப்பிடப்பட வேண்டியது. நாட்டார் கதைகளில் வாய்வழிப் புணர்ச்சி பற்றிய குறிப்பீடுகள் நிறைய உள்ள காரணமும் ஆராயப்பட வேண்டியதே.

மத்தளராயன்

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்