வாரபலன் நவம்பர் 4,2004 – குஞ்ஞாலுக்குட்டியின் பெண்குட்டி விவகாரம், அமோக விளைச்சல், அந்தத் தெரு, எழுதுங்க , கம்யூனிஸ்ட் கால் பந்த

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

மத்தளராயன்


மக்கத்துக்குப் போனாலும் துக்கம் தொடர்கிறது குஞ்ஞாலிக் குட்டியை. பெண்குட்டி விவகாரம். வயதுக்கு வராத பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் குஞ்ஞாலிக் குட்டி மீது. அவர் கேரள மாநிலத் தொழில் அமைச்சர் என்பதும், முஸ்லீம் லீக் கட்சிப் பிரமுகர் என்பதும், இந்தப் புகார் எட்டு வருடத்துக்கு முன்னால் எழுந்தது என்பதும், அப்போதும் அவர் மக்கத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார் என்பதும், புகார் கொடுத்த பெண்ணான ரஜினா அப்போது அதை வாபஸ் வாங்கிக் கொண்டார் என்பதும், எட்டு வருடம் கழித்து இன்னொரு முறை குஞ்ஞாலிக் குட்டி மெக்கா போயிருக்கிறார் என்பதும், அதே பெண்குட்டி திடாரென்று திரும்பி வந்து குஞ்ஞாலிக் குட்டியின் உறவுக்காரர்கள் தனக்குப் பணம் கொடுத்து அவர் மீது புகார் செய்ததை எட்டு வருடம் முன்னால் வாபஸ் வாங்க வைத்ததாகவும், இப்போது அதையெல்லாம் வெளியே எடுத்துவிடத் தான் முடிவு செய்திருப்பதாகவும் சொன்னதும் எல்லாம் எல்லாம் இந்த வாரச் செய்தி.

முதலமைச்சர் உம்மன் சாண்டியும் சில அமைச்சர்களும் ஹஜ் முடிந்து குஞ்ஞாலி வருவதைக் கவலையோடு எதிர்பார்த்தபடி இருக்க, பழைய முதல்வர் ஆன்றணியும் மிச்ச அமைச்சர்களும் அவர் வரவை மகிழ்ச்சியோடு எதிர்நோக்கி நிற்க, குஞ்ஞாலிக் குட்டி வளைகுடா மலையாளிகளிடம் பேசியபோது தான் நிரபராதி என்று சொல்லியதாகத் தகவல்.

தீவிரவாதியாகத் தொடங்கிப் புயலொன்று பூவானதாக மாறிய அஜிதா, எழுத்தாளர் சாரா ஜோசஃப், கவிஞர் சுகதகுமாரி என்று பெண் மலையாளம் குஞ்ஞாலிக் குட்டியைப் பதவி இறங்கச் சொல்கிறது. லட்சக் கணக்கான அச்சுப் போட்டு மை புரட்டிய பிரதிகளில் மாத்ருபூமியும், தேசாபிமானியும் இதையே சொல்கின்றன. மலையாள மனோரமா பத்திரிகை லே-அவுட்டை கியூபாவிலிருந்து ஒரு நிபுணரைக் கூட்டி வந்து மாற்றிக் கொண்டிருக்கும் மும்முரத்தில் செய்தி வெளியிடுவதோடு இப்போதைக்கு நிறுத்திக் கொண்டுள்ளது. சகாவு அச்சுதானந்தன் குஞ்ஞாலிக் குட்டி பக்கத்து விளக்கத்தையும் கேட்டு முடிவு எடுக்கலாம் என்கிறார். வழக்கம்போல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெளியம் பார்கவன் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்து அறிக்கை விட்டிருக்கிறார்.

குஞ்ஞாலி மீது புகார் கொடுத்த ரஜீனா ஒரு பத்திரிகைக்குத் தொலைபேசி, தான் தற்போது சொன்னதை நிருபர்கள் சரியாக எழுதவில்லை என்பதால் கோபித்துக் கொண்டு மனநோய் மருத்துவமனைக்குப் போகிறதாகச் சொல்லிப் பேச்சைக் கத்தரித்து விட்டார்.

சென்னைவாழ் மலையாளிகள் இதை எல்லாம் பற்றி யோசிக்கவோ, ஆதரவு-எதிர்ப்பு தெரிவிக்கவோ நேரமில்லாமல், சென்னையிலிருந்து மலைநாட்டுக்குப் புறப்படும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டியின் நேரத்தைத் திடுதிப்பென்று மாற்றியதை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

****

சும்மாப் போகிற வண்டைப் பிடித்து அதுக்கு ஊற்றிக் கொடுத்து, தண்ணியடித்த வண்டு தள்ளாடும் என்ற அரிய அறிவியல் உண்மையை விதேசப் பத்திரிகைகள் வெளியிட்டபோது, இந்தப் பக்கத்துச் செய்தியாக லட்சுமிப் பிரபா. இது ஒரு நெல்லின் பெயர். பூச்சி மருந்தோ உரமோ தேவையில்லாமல் அமோக விளைச்சல் தரும் இந்த நெல் விவசாயப் பல்கலைக் கழகம் எதிலும் ஆராய்ச்சி செய்து உருவானதில்லை. அசமன்னூர் செறுகுன்னம் நாராயணன் நாயர் வயலில் அது பாட்டுக்கு வேர் பிடித்து கத்தரிப்பூ நிறத்தில் கதிரும் நிறைந்த நெல்மணியுமாக வளர ஆரம்பித்தது இரண்டு வருடம் முன்பு.

நூறுமேனி விளையும் நெல்லைப் பற்றிப் பெருமையோடு பேசும் நாயர், பசு மூத்திரம், சாணம், நெய், பால், நெய் என்ற ஐந்தும் கலந்த பஞ்ச கவ்யத்தில் இளநீரும் சர்க்கரையும் சேர்த்துப் பயிருக்குத் தெளித்தால் வேறே பூச்சி மருந்தே தேவையில்லை என்கிறார்.

இப்படி எங்கே செய்தி முடிந்து எங்கே தனிப்பட்ட அபிப்பிராயம் தொடங்குகிறது என்றே புரியாமல் தினசரி செய்தி தருவதில் மாத்ருபூமிக்கு இணையே இல்லை.

****

மத்தளராயன் குடித்தனம் மாறிய செய்தி கேட்டு, ‘அட, அந்தத் தெருவா ‘ என்று பகவந்தம் குப்தா தெருவுக்குக் கவிதை மேப் போட்டு மின்னஞ்சலிட்டார் கவிஞர் வைதீஸ்வரன்.

அதிலிருந்து –

பகவந்தம் தெரு —பலவந்தமற்ற நினைவுகள்…

—-

திருப்பதி வாசனைக்கு

மரியாதையான உயரத்தில்

பகவந்தம் —-

பார்வைக்கு சுறுசுறுப்பான

பாமர சூழலில்

அமோக சுப்ரபாதம் ‘

அன்பு விலாஸம்.

தெருமருங்கில் ….

பான் பராக் தோரணத்துக்குள்

பதுங்கி விற்கும் பையன் முகங்கள்.

உண்டியலை திறந்து வைத்து

உதவியற்று நிற்கும் குட்டைக் கோயில்

துவார பாலகர்கள்

நாலடிக்கு ஒரு நாயாகத்

தூங்கும் நடை பாதைகள்

‘ ‘வருவண்டி…வருவண்டா ‘ ‘யென்று

வாசலில் புடைத்து நிற்கும்

கன்னிக் கலர் குடங்கள்…

கட்டிட முகப்பில்

சக்கரை நோயாளியை கை நீட்டி

வரவேற்கும் அக்கரை வைத்தியரின்

அன்றாட தரிசனம்….

புதுக்கவிதை முதலாழ்வார்களில் ஒருவரால் மங்களாசாசனம் செய்விக்கப் பெற்ற தலமாக்கும்!

****

மாத்ருபூமி வார இதழின் முன்னாள் ஆசிரியரும் புத்தகப் பதிப்பாளராகவுமிருந்த என்.வி.வாரியர் பற்றி மூத்த இலக்கியவாதி எஸ்.குப்தன் நாயர் சொன்ன ‘பலிதம் ‘ – அதாவது துணுக்கு – இது.

எழுதப் படிக்கத் தெரிந்த யாரைப் பார்த்தாலும் வாரியர் உடனே ‘ஒரு புத்தகம் எழுதிக் கொடுங்களேன் ‘ என்று கேட்பாராம். அவர் வீட்டில் ஒரு தடவை களவு நடக்க, விசாரணை செய்து எஃப்.ஐ.ஆர் தயாராக்கிய கான்ஸ்டபிளின் அறிக்கையில் அசந்து போய், ‘காவல்துறை பற்றி ஒரு புத்தகம் எழுதுமே ஓய் ‘ என்று கோரிக்கை விடுத்தாராம்.

தமிழ் வாரியர்கள் அரபிக் காசுக்காக வளைகுடாவை வளைக்க முனைந்திருப்பதாகக் கேள்வி.

****

மில்லியன் டாலர் வியாபாரக் கம்பெனிகள் இந்தியா தோற்றாலும் வென்றாலும் கிரிக்கெட்டுக்கு ஆதரவளித்தால், கால்பந்து விளையாட்டுக்குக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு. தில்லியில் சந்தோஷ் ட்ராஃபி கால்பந்தாட்ட இறுதிச் சுற்றில் கேரளமும் பஞ்சாபும் மோதுவதற்கு முந்திய சனிக்கிழமை மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் எல்லாரும் தில்லி போய் கேரள ஆட்டக்காரர்களை வாழ்த்தி இருக்கிறார்கள். அச்சுதானந்தனும், பிணராயி விஜயனும் பொலிட்பீரோ – மாநிலக் குழு சர்ச்சைகளை மறந்து ஒற்றுமையாகச் செய்த காரியம் இது.

கம்யூனிஸ்டுகளோடு கமலஹாசனும் தில்லியில் கேரள விளையாட்டுக் குழுவைச் சந்தித்து உற்சாகப்படுத்தியிருக்கிறார். சீனாவில் அடுத்த திரைப்படத்தை எடுக்க ஏற்பாடு செய்துவரும் கமல், கேரளா ஹவுஸில் அச்சுதானந்தனையும் சந்தித்துப் பேசியதாகச் செய்தி. சீனாவில் படம் எடுக்க பிரம்புத் திரை விலக வேண்டும். பிரதமரை விடத் தோழர் சொல்லுக்கு அங்கே அதிக மதிப்போ என்னமோ.

எல்லோரும் வாழ்த்திய சந்தோஷத்தில் மூணுக்கு ரெண்டு கோல் கணக்கில் கேரளம் சந்தோஷ் டிராஃபியை இந்த வாரம் சொந்தமாக்கிக் கொண்டதோடு முடித்துக் கொள்ளலாம்.

****

மத்தளராயன்

eramurukan@yahoo.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்