வானவில்

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

வை.ஈ.மணி


விண்ணில் இயற்கை வரையும் வடிவம்
…..விளக்கும் இனிய வாழ்வின் விதிகள்
மண்ணில் வாழும் மனிதன் முயன்றால்
…..மிகவும் எளிதில் மனதில் பதியும் (1)

வில்லைக் கண்டால் வானில் புலரி
…..விரைவில் வெளியே வந்து முகில்கள்
மெல்லச் சிதறி மழையும் ஓய்ந்து
…..வெப்பத் துடனே வெளிச்சம் கூடும் (2)

புலரி தோன்றின் புதிய உணர்வும்
….பின்னர் பிறக்கும் என்று பகரும்
வலந்தம் போன்ற வடிவில் விளங்கும்
…..வில்லின் கருத்தை ஒக்கும் சிரிப்பு (3)

மனதின் கவலை மாற்றி உள்ளம்
…..மகிழச் செய்ய மிளிரும் சிரிப்பு
அனைத்து துயர மகற்றும் என்று
…..அறிந்து வாழ்வோர்க் கமைதி திண்ணம். (4)

Series Navigation

வை ஈ மணி

வை ஈ மணி