வழியோரம் நதியூறும்…

This entry is part [part not set] of 32 in the series 20020407_Issue

சேவியர்.


சோகங்களின் பொதிமூட்டை
சுமந்து சுமந்து
கழுதையாகிக் கொண்டிருக்கின்றன
கணக்கில்லா
கம்பீரக் குதிரைகள்.

இவர்களின் இதயங்கள்
கவலை முதலீட்டின்
சோக வங்கிகளாய்
சோர்ந்து கிடக்கின்றன

பார்வை பாணங்களிலேயே
குனிந்து விழும்
பனித்துளி மனிதர்கள்,

மின்னலை கண்களில் வாங்கி
இதயத்தில்
பள்ளம் பறிக்க
இலவசமாய் இடியிறக்கும்
கைத்தடி மனிதர்கள் இவர்கள்.

ரோஜாவைக் கொடுத்தாலும்
பூர்வீகம் பார்த்து
விரல் குத்திக் கொண்டும்,
பல் குத்தும் சோகங்களுக்காய்
கண்குத்திக் கொண்டும்
கவிழ்ந்து கிடக்கும்
கவலையின் கைக்குழந்தைகள்.

வருமென்ற கவலையில்
வரமென்ற நாட்களை
வீணே புதைக்கும்
வீணர்கள்.

தினசரி வாழ்க்கையை
நிர்ணயிப்பது
தினசரி நாள்காட்டியல்ல.
சின்னச் சின்னதான
சந்தோஷ நிகழ்வுகளே.

ஒரு முறை
சிரித்து முடிக்கும் போது
அடுத்த சிரிப்பு
காத்திருக்க வேண்டும்.

எதிர்பார்ப்புகளின் எல்லையை
சிறிதாக்கி,
நிம்மதியின் நாற்காலிகளை
நிரப்பிவைத்தால்
வழியே செல்லும்
வசந்தமும் வந்து
கொஞ்சநேரம் அமர்ந்து செல்லும்.

இதெல்லாம்
முன் வினையின்
பின்விளைவுகளா ?
பின் விளைவுகளின்
முன்னெச்சரிக்கையா ?

எதற்கு இத்தனை கேள்விகள் ?
ஜென்மங்களின் கவலையும்
விதியின் கவலையும்
இன்னொரு ஜென்மத்துக்காய்
ஒத்தி வைத்தாலென்ன ?

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்