விக்ரமாதித்யன்
மேல்வானில்
முக்கால்நிலா
மிச்சம்மிஞ்சாடியாய்
நட்சத்திரங்கள் சிதறித்தெறித்து
இருளோ சமுத்ரமோ
என்றிருக்கும் மரநிழல்
தன்னந்தனியே நிற்கும் தேர் அம்சமாய் அழகாய்
திருவாரூர்விட்டு வந்ததுபோல
திராவிடர்நாகரிகத்தின் சாட்சியமாக
சாலையில் வேகவேகமாய் கார்கள் ஆட்டோக்கள்
சற்றேனும் நின்றுபார்க்க யார்தான் ஆள்
கட்டியவனுக்கே அழைப்பில்லை அன்று
காலச்சுழற்சியில் மீண்டுமவன் ஆண்டான்
கால்பரப்பி நிற்குமது கட்டளையிடுது
கவியெழுதச் சொல்லி
பார்வைக்குப் பெண்ணின் வடிவம்
பார்க்கப் பார்க்க பரவசம்
நின்றநிலையிலேயே நின்றால் எப்படி
நெடுகவும் ரதவீதி சுற்றிவர வேண்டும்
உற்சவர் இல்லை ஐயர் இல்லை
ஒருவடமுமில்லை ஓட்டமுமில்லை
இது மட்டும் வீம்புக்கு இருந்த இடத்திலேயே
இருக்கும் என்றென்றைக்கும்
***
(வித்யாஷங்கருக்கு)
***
கிரகயுத்தம் – விக்ரமாதித்யன் கவிதைகள்
***
திண்ணை நவம்பர் 20, 1999
திண்ணை
|