வருந்துகிறேன்

This entry is part [part not set] of 29 in the series 20060303_Issue

கற்பக விநாயகம்


****

மலர் மன்னன் அவர்கள், ‘மண்டைக்காடு சம்பவத்தின்போது நான் கன்னியா குமரி மாவட்டத்திலேயே வசிக்கத்தொடங்கி விட்டேன் எனலாம். எமது ஹிந்து சமூகம் எங்கு பிரச்சினைக்குள்ளாக நேரிடினும் முதல் ஆளாக அங்கே போய்ச் சேந்துவிடுவதுதான் இன்றளவும் எனது செயல்முறை ‘ என்றும்,

‘முதலில் இந்த மலர்மன்னனை இங்கிருந்து போகச் சொன்னால் நிலமை அமைதி ஏற்பட்டுவிடும் என்று குன்றக்குடி அடிகளார் ஆலோசனை கூறினார். அதன் பேரில் 24 மணி நேரத்தில் நான் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வெகு தொலைவிற்குப் போய்விடவேண்டும் என ப்ராணேஷ் உத்தரவிட்டார்! அலெக்சாந்தரோ என்னைப் பொது இடத்தில் பிடித்தால் கலவரமாகிவிடும் எனக் கருதியோ என்னவோ மாலையில் என்னை வந்து பாருங்கள் எனக் கேட்டுக்கொண்டார்! நான் எம்ஜிஆருக்கு நிலைமையை போனில் விளக்கினேன். ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. அபீஷியலி யூ ஆர் அண்டர் அரெஸ்ட்! போலீஸ் உன்னை அரெஸ்ட் செய்யத் தேடுவார்கள்! ‘ என்றார். அதன் குறிப்பைப் புரிந்து கொண்டு தலைமறைவானேன். கன்னியாகுமரியிலேயே சுற்றி வந்து, என் கடமையைச் செய்தேன் ‘ என்றும்,

‘சுந்தர ராமசாமி அன்று நான் தலைமறைவாக இருந்து வேலை செய்ய வாய்ப்பளித்தார் என்பதையும் மறக்க மாட்டேன். சுந்தரராமசாமி வீட்டில் தங்கி வேளா வேளைக்குச் சாப்பிட்டுக்கொண்டும், இப்போது காலச்சுவடு ஆசிரியராகவும், பதிப்பாளராகவும் இருக்கும் கண்ணனோடு விளையாடிக் கொண்டும் மறைந்து வாழ்ந்தேன் ‘ என்றும் சொல்லி இருக்கின்றார்.

அவரே அதற்கு ஆதாரமாய் ‘அன்று சுந்தர ராம சாமி வீட்டில் என் மடி மீதிருந்து வாசலில் கொட்டியிருந்த மண்ணில் தாவுவதை அன்றாட விளையாட்டாகக் கொண்டிருந்த கண்ணன் இப்போது இருக்கிறார். கண்ணனின் அம்மாவும் இருக்கிறார், மண்டைக்காடு சம்பவத்தின்போது நான் அவர்களின் வீட்டில் தங்கி இருந்ததை உறுதி செய்ய. தமிழினி வசந்த குமார் போன்றவர்களும் இருக்கிறார்கள், நான் அவர் வீட்டில் தங்கியிருந்ததைப் பார்த்ததாகச் சொல்வதற்கு! ‘ என்றும்

‘காலச்சுவடு ஏற்பாடு செய்த கூட்டத்தில் கடைசி வரிசையில் ஓர் ஓரமாக உட்கார்ந்திருந்து விட்டுக் கூட்டம் முடிந்ததுமே கூட்டத்தோடு கூட்டமாக எழுந்து சென்று விட்டேன். நான் வந்திருப்பதை பிரபஞ்சன் பார்த்துவிட்டு அதனை கண்ணனிடம் சொன்னாராம். ‘எங்கே, எங்கே, என்று கண்ணன் தேடினார், அதற்குள் நீங்கள் போய்விட்டார்கள் ‘ என்று பிற்பாடு ஒருமுறை பிரபஞ்சன் என்னிடம் சொன்னார். அந்த அளவுக்கு என்னைப் பற்றிக் கண்ணனுக்கு நினைவு இருக்க வேண்டுமெனில், அவரது பிள்ளைப் பிராயத்தில் அவரோடு விளையாடும் அளவுக்கு அவர்களின் வீட்டில் தங்கியிருக்கிறேன் என்பதன்றி நான் ஒன்றும் பெரிய பிரமுகன் என்பதால் அல்லவே! ‘ என்றும் தெளிவுபடுத்தி இருக்கின்றார்.

மேலும் இதே விசயத்தில் மற்றோர் ஆதாரமாக அரவிந்தன் நீலகண்டனும் பேராசிரியர் அ.கா. பெருமாள் தனது 1982 நாட்குறிப்பில் பதிவு செய்திருப்பதை நினைவூட்டி இருக்கிறார். அதன் பின்னரே காலச்சுவடு பிப்ரவரி 2006 இதழில் அ.கா.பெருமாளின் கட்டுரையைப் பார்த்தேன். அதில் அவர் ‘ 22.3.1982: மண்டைக்காடு மதக்கலவரம் பற்றிச் செய்தி சேகரிக்க வந்த மலர்மன்னன் சு.ரா. வீட்டில் தங்கினார். நான் அவரை அழைத்துக்கொண்டு ஆயர் இல்லத்துக்குப் போனேன். வழியில் அவர், ‘சு.ரா.வைப்போன்றவர்களிடம் நான் எழுதுகிறேன் என்று சொல்ல முடியாது. நா. பார்த்தசாரதி இவரைப்பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார். இந்த அக்கினி ஜூவாலையில் குளிர் காயும் நீங்கள் கொடுத்துவைத்தவர்கள் ‘ என்றார். மலர்மன்னன் இந்துத்துவச் சார்புடன்தான் செய்திகள் சேகரித்தார். கலவரம் பற்றிய சு.ரா.வின் கருத்து வேறு என்பதை மலர்மன்னன் புரிந்து கொண்டார். அது பற்றி அவரிடம் பேட்டி கேட்கவில்லை ‘ என்று தெளிவாகச் சொல்லி இருக்கின்றார்.

மண்டைக்காடு கலவரத்தின்போது போலீசால் தம்மைக் கைது செய்யத் தேடியதால் தலைமறைவான மலர்மன்னன் அவர்கள், சுந்தரவிலாசத்தில்தான் (மதிப்பிற்குரிய மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்களின் இல்லம்) தங்கி இருந்தார் என்பதை அவர்கள் தந்த ஆதாரங்களின்படி ஏற்றுக்கொள்கிறேன்.

தவறுதலாய் ‘பொய் ‘ என எழுதியதை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.அவ்வாறு எழுதியதில் மனதைப் புண்படுத்த வேண்டும் என்ற உள் நோக்கம் எனக்கு இல்லை.

பெரியவரின் மனம் புண்ணாகி இருந்தால் அதற்காக வருந்துகிறேன்.

****

vellaram@yahoo.com

Series Navigation

கற்பக விநாயகம்

கற்பக விநாயகம்