வரலாறும் புனைவும்

This entry is part [part not set] of 24 in the series 20070503_Issue

சூபிமுகமது


ஹெச்.ஜி.ரசூலின் ஏகத்துவம் மற்றும் சமய மரபுகளின் தோற்றுவாய் கட்டுரைக்கு எதிர்வினை ஆற்றிய வகாபியின் விமர்சனத்தை வாசித்தேன். திருகுரான் குறித்த விவாதத்தில் கடைசியாக இடம் பெற்ற எனது வகாபிய விஞ்ஞான நாக்கு பிப்ரவரி 1, 2007
கடிதம் உட்பட்ட 11 குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல முடியாமல் காணாமல் போன வகாபி திரும்பவும் தனது மூக்கை அரைவேக்காட்டுத்தனமாய் நுழைத்திருக்கிறார். சில அடிப்படைகளை தெளிய வைப்பதே எனது இப் பதிவின் நோக்கம்.

1) இபுராகீம் நபி பற்றிய வசனங்கள் திருக்குரானில் இடம் பெறுவதாலேயே இஸ்லாம் நபிமுகமதுவுக்கும் ஏழாம் நூற்றாண்டிற்கும் முன்பே உருவாகிவிட்டது என்று கூற முடியாது.நபிமுகமதுவின் வாழ்வு, அவர் தம் மறைவிற்கு பிறகு இருபதாண்டுகள் கழித்து இறுதி செய்யப்பட்ட திருக்குரான்,ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு பிறகு தொகுத்தறியப்பட்ட ஹதீஸ்கள்
இமாம்கள் உருவாக்கிய மத்ஹபுகள்,பிக்ஹ் சட்டங்கள் அனைத்தும் நபிமுகமதுவின் இஸ்லாம் குறித்த வழிமுறைகளாகும்.

வெறும் இறையியல் சடங்குகள் சார்ந்த கோட்பாடாக மட்டுமல்லாமல் தனிமனித ஒழுக்கம், அறவியல்,சமூக அரசியல், குடும்பவியல், வணிகம் உள்ளிட்ட வாழ்வியல் முறைகளுக்கான வழிகாட்டுதலாகும்.

இபுராகிம்நபியின் சிந்தனைகளில் இத்தகைய யதார்த்தரீதியிலான வாழ்வியல் பரிமாணம் கிடையாது. ஏனெனில் அவருக்கு மூசா,தாவூத்,ஈசாவுக்கு வழங்கப்பட்டது வேதங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. பத்து ஸூஹுபுகள் எனும் கட்டளைகள் மட்டுமே வழங்கப்பட்டன.

2)இபுராகிம் நபியின் கி.மு.2019 காலம் சார்ந்த வரலாற்றிற்கான ஆதாரங்கள் எதுவும் தென்படவில்லை.வரலாற்றின் நெடுக அகழ்வாராய்ச்சிகளின் மூலமாக குகைஒவியங்கள்,பாறைக் கல்வெட்டுகள், மட்பாண்ட சிதிலங்கள், செப்புதகடுகள்,கல்வெட்டியல், நாணயவியல், சிற்பவியல்,கலைகட்டிடவியல், தொல்லியல் ஆய்வுகளென இதற்கான தடயங்கள் இல்லை. அரபுச் சூழலின் தொன்மைவரலாறு ஸபீனியன்,மினீயன்,கடபேனியன் நாகரீகங்கள் குறித்த தரவுகளே கிடைக்கப் பெற்றுள்ளன. இவைகளும் முஸ்லிம் நாகரீகங்களல்ல. இது கிறிஸ்து பிறப்பிற்கு ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான ஆதார குறிப்புகளாகும்.

3)ஒரு மொழி எழுத்துவடிவம் பெற்ற பின்னர்தான் எழுதப்பட்ட வரலாறுகள் உருவாகின்றன. திருக்குரானின் 6666 அரபு வசனங்களின் உருவாக்கம் கி.பி.ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்தது.இது சார்ந்தே முஸ்லிம்கள் உருவாகிறார்கள். இதற்கு முன்பே யூதர்கள், கிறிஸ்தவர்கள், பல நூறு பழங்குடி குழுக்கள்தான் இருந்தனர். முஸ்லிம்கள் எவரும் இல்லை.ஆனால் முற்கால அரபுகள் மற்றும் பழங்குடிகளுக்கு முஸ்லிம் சாயம் பூசப்பட்டது.

பைபிள் பழைய ஏற்பாடு 39 ஆகமங்கள் கொண்டது.கிறிஸ்து பிறப்பிற்கு நானூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது. கிறிஸ்து பிறந்து 100 ஆண்டுகளுக்கு பிறகானது 27 ஆகமங்கள் கொண்ட புதிய ஏற்பாடு.ஆக மொத்தத்தில் வேதாகமம் 66 ஆகமங்கள் 1189 அதிகாரங்கள் 30745 வசனங்களைக் கொண்டதாகும்.

இதில் இடம் பெற்றுள்ள ஆதாம் ஏவாளை திருக்குரான் ஆதம் ஹவ்வா எனவும் மோசே,மூசா/ சாலொமென்,சுலைமான்/ தாவீது,தாவூது/ ஆபிரகாம்,இபுராகீம் என அனத்து நபிமார்களையும், வரலாறுகளையும் இஸ்லாமிய அடையாளங்களாக மாற்றியுள்ளன.

இந்த வேதாகமங்கள் உருவாகி உத்தேசமாக 1200ஆண்டுகள் கழிந்த பிறகுதான் திருக்குரான் இந்த அடையாளங்களை தனதாக்குகிறது. நபிமுகமது திருக்குரானை அல்லாவின் வார்த்தைகள் என அறிவிக்கிறார்.

யூத கிறிஸ்தவ மற்றும் பழங்குடிகளின் சமய அல்லா என்னும் சந்திரக் கடவுள், ஏமன் மக்களின் அர்ரகுமான் கடவுள்,சாபியீன்களின் ஏழு நேரத் தொழுகை,யூத கிறிஸ்தவ நோன்பு கபாபண்பாடு,கல்வணக்கம்,கல்லெறிச் சடங்குகள் உள்ளிட்ட கதையாடல்களை திருக்குரான் உட்செரித்துக் கொண்டது.

4)திருக்குரானின் புனைவுக் கதையாடல்களை வரலாறாக கூறமுடியாது. குறிப்பாக அல்லா ஆதமை மண்ணால் படைத்து அதில் தன் ரூஹை ஊதியதாய் சொன்னது,ஆதம் ஹவ்வா உலகின் ஆதிமனிதர்கள் சொர்க்கத்தில் இருந்து, இபுலீசின் தூண்டுதலால் விலக்கப்பட்ட கனி உண்டது, பூமியில் வீசப்பட்டது,அனைத்துமே புனைவு கதையாடலாகும்.

மெஸபடொமியா, பாபிலொனியா, சுமேரியா, செமித்தியம் என உலகின் ஒவ்வொரு சமூகமும் நாகரீகங்களும் படைப்பு மூலக்கதைகளை நூற்றுக் கணக்கில் உருவாக்கி வைத்துள்ளன.எனவே திருக்குரானின் ஆதம், நூகு, இபுராகிம் நபிசார் பலப்பல புனைவுக்கதையாடல்களை வரலாற்று ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளமுடியாது.முஸ்லிம்களின் நம்பிக்கைகளாக வேண்டுமெனில் கருதிக் கொள்ளலாம்.

நம்பிக்கைகளுக்கு இரண்டு சாத்தியப்பாடுகள் உள்ளன. ஒன்று அவை உண்மைகளாக இருக்கலாம். அல்லது அறிவுக்கு பொருந்தாத கற்பனைகளாக பொய்த்துப் போகலாம்.இங்கு இரண்டாவது சாத்தியமே மிஞ்சுகிறது.

கடைசியாக கூட்டிக் கழித்து வகாபியின் விமர்சனத்தை மதிப்பிட்டால் அது காலியான வெறும் பெருங்காய டப்பாவாகவே இருக்கிறது.அவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.


tamilsufi@yahoo.com

Series Navigation

சூபிமுகமது

சூபிமுகமது