வரமா, சாபமா ? – மரபு மாற்றப்பட்ட உணவுப் பொருள்கள்

This entry is part [part not set] of 11 in the series 20000618_Issue

வெங்கடரமணன்


தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் மனிதனின் வளர்நிலைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. தொழில் நுட்பம் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியில் தொடங்குகின்றது. இதனை மேற்கொள்ளும் அறிவியலார் குழந்தையைச் சுமக்கும் கர்ப்பிணிப் பெண்ணைப் போன்றவர்கள்; நிறைய எதிர்பார்ப்பும் அதைவிட நிறையக் கவலையையும் சுமக்கின்றார்கள். குழந்தை எப்பொழுது பிறக்கும் ? அது என்ன பண்புகளைக் கொண்டிருக்கும், அதன் நிறம் என்னவாயிருக்கும் – என்பதைப் போன்ற ஆர்வமும் அதனையும் விழுங்குமளவிற்கு அக்குழந்தை நல்லபடியாகப் பிறக்குமா என்பதைப் போன்ற கவலைகளும் அவர்கள் உள்ளத்தை நிறைத்திருக்கும். புதுக்குழந்தையாக அறிவியல் கண்டுபிடிப்பு வெளிவந்தவுடன் எல்லார் கவனமும் அதன் மேல். அதற்குப் பெயரிடுதலும் காண்பவர் எல்லாரிடமும் தன் கண்டுபிடிப்பைக் காட்டி மகிழ்தலுமாக ஒரே மகிழ்ச்சி வெள்ளந்தான். சில நாட்களில் பள்ளிக் குழந்தையைப் போல் அறிவியல் கண்டுபிடிப்பும் பத்தோடு ஒன்றாகி மறக்கப் படுகின்றது. பின்னர் தொடர்ச்சியான அறிவியல் ஆராய்ச்சியால் அது மெல்ல வளரத் தொடங்குகின்றது. மனித வாழ்வைப்போலவே அறிவியலிலும் விடலைப் பருவம் உண்டு, அது சிறுவனாயிருக்கும் அறிவியல் பிறருக்குப் பயனளிக்கக் கூடிய மனிதனாய் – தொழில்நுட்பமாய் – முதிர்ச்சியடையும் தருனம். அக்கட்டத்தில் அது வளர்ச்சிக்கான வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்து நல்ல தொழில்நுட்பமாக,. இளைஞர்களைப் போல சமுதாயத்திற்கு பயன்படும் துடிப்புகொண்டாதாக, மாறுகின்றது. பின்னர், வயோதிகனாகப் பரிணமிக்கிறது, முதிர்காலத்தில் தன் அனுபவத்தால் பிறருக்கு அறிவூட்டும் மூதறிஞன் போல இன்றைக்கு கணிதத்தைக் கூறலாம். இளைஞனாகத் திகழ்பவை நிறைய நம்மில் உண்டு – உதாரணமாக குறைகடத்தித் தொழில்நுட்பம் (semiconductor technology), நோய்த்தடுப்புத் தொழில்நுட்பம் (immunization) , அறுவை சிகிச்சை (surgery), இவற்றைக் காட்டலாம்.

இவை எல்லாவற்றையும் விட சுவையான பருவம் – விடலை. இக்கால கட்டத்தில்தான் எத்தனை விரைவான மாற்றங்கள் – தன்னைத் தானே நிலை நிறுத்திக்கொள்ள வேண்டியமை, பிறரிலிருந்து தன்னை மாறுபட்டவனாகக் காட்டிக்கொள்ளுதல், மற்ற வளர்வனவற்றுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் ஆர்வம் – அப்பப்பா, அதுதான் எத்தனைச் சுவையானது. இன்று இத்தகைய நிலையில் இருப்பவையாக நிறைய உள்ளன – மரபு மருத்துவம் (gene therapy), மின்வனிகம் (e-commerce), வானிலை ஆராய்ச்சி (weather prediction), சூழியல் (ecology) ஆய்வுகள், … இவை தங்களுக்கே உரித்தான விரைவில் மாறும், முதிர்ச்சியடையும் திறனால் பலரது கவனத்தை எளிதில் ஈர்க்கின்றன. இத்தகைய விடலைத் தொழில்நுட்பங்களுள் ஒன்று மரபு மாற்றப்பட்ட உணவுகள் (Genetically Modified Foods, GM Foods), இதற்குத்தான் எத்தனை எதிர்ப்பு. இது வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ள வகுத்துவரும் இன்னொரு ஆயுதமா ? இது சூழலுடன் இயைந்து மாறாமல் தன்னிலையாக மாறுவதால் சூழலைச் சிதைக்க வல்லதா ? இது பணமுதலைகளான பன்னாட்டு நிறுவனங்களின் முற்றிலுமான வியாபார தந்திரமா ? இதற்குத்தான் எத்தனை ஆதரவும் எதிர்பார்ப்பும் – நாம் உண்ணும் உணவுகளையும் அதன் சுவையையும் திறனையும் உயர்த்த வந்ததா ? கட்டுக்கடங்காத மக்கள் பெருக்கத்திற்கு உணவளிக்க வல்ல ஒரே வரப்பிரசாதமா ?

தாவரங்களின் தன்மை மாற்றுதல் இன்று நேற்றாக நடந்துவரும் செயலல்ல. இது எப்பொழுது தோன்றியது என்று யாராலும் அறுதியிடமுடியாது. ஒட்டுமாங்கன்றுகளும், பலவண்ண ரோஜாச் செடிகளும் மனிதனால் வடிவமைக்கப் பட்டவை என்பது எல்லோருக்கும் தெரியும். உணவு அறிவியலாளர் டாக்டர் மா. சாம்பசிவம் சுவாமிநாதனின் அயராத முயற்சியால் இந்தியாவிலும் அதைத் தொடர்ந்து சினா முதல் பிலிப்பைன்ஸ் வரை நிகழ்ந்த பசுமைப் புரட்சி அற்புதங்களையும் நாம் அறிவோம். இது எல்லோராலும் எளிதில் உணரப்பட்டது – ஏற்றுக்கொள்ளப் பட்டது. இது தாவர ஒட்டு வளர்ச்சி எனப்படுவது. உயர்குணங்களைக் கொண்ட, சுவையான மாம்பழத்தை அதன் உற்பத்தித் திறனைப் பெருக்க, சுவையற்ற நாரைக்கொண்ட ஆனால் அதிக அளவில் காய்க்கவல்ல நாட்டுப்பழங்களுடன் ஒட்டுப் போட்டு அதன்மூலம் தரமான பழங்களின் உற்பத்தியைப் பெருக்குதல் என்பது நாம் நன்றாக அறிந்ததே.

உயிரிகளின் குணங்களும் தன்மைகளும் அதன் மரபுக்கூறான டி.என்.ஏ எனும் மூலக்கூறினால் நிர்வகிக்கப்படுகின்றது. டி.என்.ஏ, ஒரு நீளமான வாக்கியத்தைப் போன்றது. உதாரணமாக, நெல்மணியின் நீளம் அதன் டி.என்.ஏயின் ஒரு குறிப்பிட்ட சொற்றொடரால் நிர்வகிக்கப் படுகின்றது. இந்த சொற்றொடரை மாற்றி மணிநீளத்தைத் திருத்தியமைக்க இயலும். முன் பத்தியில் சொன்ன தாவர ஒட்டுப் பெருக்கத்திலும் இதுதான் நடைபெறுகின்றது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் மிக எளிதானது, ஒட்டுப் பெருக்கத்தில் விளையும் செடியின் பிற பன்புகளை நம்மால் ஊகிக்கவோ, கட்டுப்படுத்தவோ இயலாது. மரபு மாற்றத்தில் ஒரு குறிப்பிட்ட பண்பைக் குறியாகக் கொண்டு அதற்கான டி.என்.ஏ பகுதியை மாற்றியமைக்க இயலும். உயிர்தொழில்நுட்ப (biotechnology) வளர்ச்சியாலும் மூலக்கூறு உயிரியல் (molecular biology) முன்னேற்றங்களாலும் இத்தகையை அடிப்படை ஆய்வுகள் இப்பொழுது ஏதுவாகியுள்ளன.

அறிவியல் முறை

இது எவ்வாறு நிகழ்த்தப் படுகின்றது ? முதலில் தொழில்நுட்பவியலார் ஒரு குறிப்பிட்ட பன்பினை இலக்காக கொள்வார்கள். உதாரணமாக நோய் எதிர்ப்பு சக்தி எனக் கொள்வோம். இதனை நிர்வகிக்கும் டி.என்.ஏ பகுதியை ஆராய்ந்து தெளிவர், இதன் பின் என்ஸைம்கள் எனப்படும் வேதிக்கலவையால் இப்பகுதியை ‘வெட்டி ‘ எடுப்பார்கள். பின்னர் வேறு சில வேதிப்பொருள்களால் பிற உயிரி (தாவரமோ, விலங்கோ) யிலிருந்து எடுக்கப்பட்ட உயர்குண டி.என்.ஏ பகுதியை (இதுவும் ஒரு வேதிக்கலவையே) ‘ஒட்டுவார்கள் ‘. பொதுவில் சேர்க்கப்படும் கலவை, சேருமிடத்திற்கு வேதியிணையாக (chemical pair) இருக்கும், இதனால் இவற்றின் சேர்க்கை உறுதியாகும். இதனை மேலும் நிச்சயிக்க சில என்ஸைம்களைச் சேர்ப்பார்கள்.

இதன்பின்னர் நடைபெற வேண்டியவை எல்லாம் வழக்கமான ஆய்வக மற்றும் நடைமுறை சோதனைகள். உருவாகும் தாவரத்தினைப் பெருக்குவார்கள், அதன் பல்வேறு குணங்களை ஆராய்வார்கள்; குறிப்பாக இலக்காக்கப்பட்ட பன்பின் மாற்றத்தை நன்றாக சோதிப்பார்கள். பின்னர் இச்சோதனையால் பிற பண்புகள் மாற்றமடைந்திருந்தால் அவற்றினை உணர்வார்கள். அதன்மூலம் ஏற்படக்கூடிய குறுகியகால மற்றும் நீண்ட கால விளைவுகளை ஆராய்வார்கள்.

ஏற்கனவே விற்பனையாகும் மாற்றப்பட்ட உணவுகள்

நீங்கள் அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ வசிப்பவரென்றால் உங்களை அறியாமலேயே இந்த உணவு வகைகளை நீங்கள் முன்னரே உட்கொண்டிருக்க 80% சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்தியாவிலோ அல்லது இலங்கையிலோ வசிப்பவரென்றால் இந்த சதவிதம் மிகவும் குறைவு; ஆனால் இல்லை என்று சொல்லிவிட முடியாது.

உணவுப் பொருள் – மாற்றப்பட்ட குணாதிசயங்கள்

தக்காளி – கெட்டியான தன்மை, அதிக சத்துப் பொருட்கள், நாட்பட சேமிக்கும் திறன்

உருளைக்கிழங்கு – நோய் எதிர்ப்புத்தன்மை

சோளம் – பூச்சிக்கொல்லியால் பாதிக்கப் படாமை

சோயா மொச்சை – களைக்கொல்லி எதிர்ப்புத்திறன்

கனோலா – நோய் தடுப்புத் திறன்

அமெரிக்க அரசாங்கத்தின் உணவுக் கட்டுப்பாட்டுத் துறையின் பரிந்துரைகளின்படி இத்தகையப் பொருட்களின் விற்பனைப் பெட்டியில் இவை ‘மரபு மாற்றப்பட்ட உணவுகள் ‘ எனப் பொறிக்கப்பட வேண்டும். இந்த விதிமுறைகள் இத்தொழில்நுட்பத்திற்கு எதிர்ப்புமிகுந்த ஐரோப்பிய சமுதாய நாடுகளில், குறிப்பாக, பிரிட்டனில் இன்னும் கடுமையானவை. ஆனால் நாளொரு மேனியும், பொழுதொரு தாவரமுமாக வளர்ந்துவரும் இந்தத் தொழில்நுட்பத்தினால் விரைவில் இவைகளுக்கும் வழக்கமான உணவுப் பொருட்களுக்கும் வித்தியாசமில்லாமல் போகக்கூடும். தக்காளியில் வேண்டுமானால் பொறிக்கலாம், தக்காளி கொண்டு தயாரிக்கப்படும் பழச்சாறுகளிலும், பாஸ்டா கலவைகளிலும் சற்றே கவனமாக இருந்து இவ்விதி கடைபிடிக்கப்படுகின்றதா என நோட்டமிடலாம். ஆனால், ஆயத்த உணவுக் கடைகளில் கிடைக்கும் உருளைக்கிழங்கு வறுவலிலும், அதனுடன் வினியோகிக்கப்படும் தக்காளிக் கலவையிலும் எந்தவகையான தாவரம் பயன்படுத்தப்பட்டது எனக் கண்காணிப்பது மிகவும் கடினம். இதற்கான விதிமுறைகளை அரசாங்கங்கள் வகுக்கும்பொழுது, மொன்ஸான்டோ, கால்ஜீன் போன்ற பன்னாட்டு உயிர்தொழில் நுட்ப நிறுவனங்களும், அதனை பெருமளவில் பயன்படுத்தும் கெல்லாக்ஸ், நெஸ்லே, மக்டொனால்ட் போன்ற உணவுத் தயாரிப்பாளர்களிடமிருந்தும் அவர்களின் வணிக சாத்தியக்கூறுகளைப் பாதிப்பதாக பெரும் கூக்குரல் எழுகின்றது. ஒருவிதத்தில் இதற்கும் நியாயம் உள்ளது, இன்றைக்கு நாம் பயன்படுத்தும் தாவர மற்றும் விலங்கு உணவுகளில் 95% க்கும் மேற்பட்டவை ஒட்டுப்போடுதல், மட்டும் தீவிர இனக்கலப்பு செய்தலால் மாற்றப்பட்டவையே, இவற்றைப்பற்றி நாம் கவலைப் படுவதில்லை. நம்மூர் பொன்னி அரிசி மூட்டையில் ‘இது பல்வேறு அரிசித்தாவரங்களை செயற்கை முறையில் ஒட்டி, இனப்பெருக்கம் செய்து உருவாக்கப் பட்டது ‘ – என ஒருக்காலும் பொறிக்கப்படுதில்லை.

இதற்கு எதிர்ப்பு ஏன் ?

இந்தத் தொழில்நுட்பத்தை எதிர்ப்பவர்கள் பின்வரும் காரணங்களை முன்வைக்கின்றார்கள்:

1. சூழலிலின் ஒரு கூறினை அதற்கு முற்றிலும் ஒவ்வாதவகையில் உடனடிமாற்றம் செய்வதால் சூழல் பாதிக்கப்படுகின்றது.

உதாரணமாக, பூச்சிக்கொல்லி எதிர்ப்பு சக்தி மிகுந்ததாக உருவாக்கப்படும் சூரியகாந்திப்பூவில் வழக்கமாக அதில் தேனருந்தும் வண்டு அதற்குப் போதிய தேன் கிடைக்காததாலோ, அத்தேனின் சுவை குறைவாலோ அதனை விரும்பாமல் போகக்கூடும். நாளடைவில் போதிய உணவின்றி அவ்வண்டினம் அழியக்கூடும். அவ்வண்டின் மூலம் அயல் மகரந்தச் சேர்க்கை கொள்ளும் வேறு தாவரங்களும் அழியக்கூடும். இச்சங்கிலி தொடர்ந்து சூழல் பெரிதும் மாற்றியமைக்கப்படக் கூடும். இத்தகைய மாற்றங்கள் தட்பவெப்ப மாறுபாடுகளுக்கு இட்டுச் செல்லக்கூடும்.

2. சூழல் பன்முகம் பாதிக்கப்படும். உதாரணமாக, களைக்கொல்லி எதிர்ப்பு சக்தி மிக்க கோதுமை பயிரிடப்படுவதால் விவசாயிகள் அளவுக்கு அதிகமான களைக்கொல்லிகளை பயன்படுத்தத் துவங்குவார்கள். இது களைகளை முற்றிலுமாக அழிக்கும். எல்லா களைகளும் உபயோகமற்றவை எனக் கருதுவது தவறு. உதாரணமாக கிளைபோஸேட் எனும் களைக்கொல்லி அழிக்கும் களைகளில் சில மண்ணில் நுண்ணுயிரிகள் வளர உதவி செய்கின்றன. இந் நுண்ணுயிரிகள் நைட்ரஜன் எனும் வளியை மண்ணில் நிலைப்படுத்துகின்றன; மண்ணில் நைட்ரஜன் இருத்தல் பல வழிகளில் தாவரங்களுக்கு இன்றியமையாதது. களைகளை முற்றிலுமாக அழித்தலின் மூலம், களைகள் மற்றுமின்றி இதர தாவர வளர்ச்சியையும் பாதிக்கின்றது.

இது தவிர, உயர் இரகத் தாவரங்களை மாத்திரமே பயிரிடுவதால் ஒரு குறிப்பிட்ட தாவரத்தின் பல்வேறு இனங்கள் அருகிவிட வாய்ப்பிருக்கின்றது. பூவன், தேன்கதளி, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, சிறுமலைப்பழம், செவ்வாழை, மொந்தன், பேயன் என்று ஒருகாலத்தில் விதவிதமாக விளைந்த காவிரிக் கரைகளில் இன்று மொரிஷியஸ் ரொபஸ்டா எனும் பச்சைப் பழம் ஒன்றே பயிரிடப்படுகின்றது, இது நோய் எதிர்ப்புமிக்க, குறுகிய காலத்தில் முதிரக்கூடிய தீவிர ஒட்டு இனமாகும். இதுமாத்திரமே ஆதாயம் கருதி விளைக்கப் படுவதால் வாழையின் பல்வேறு சுவைமிகுந்த இரகங்களை நாம் இழந்து வருவது கண்கூடு. இதைவிட உயிர்தொழில் நுட்பத்தில் கண்டுபிடிக்கக்கூடிய ஒருசில தானியங்களும் தாவரங்களும் பன்மடங்கு விரைவில் மற்றவற்றை நாம் முற்றிலுமாக மறந்துவிடச் செய்யக்கூடிவை

2. மனிதர்களுக்கு உயிரிகளை மாற்றும் உரிமையில்லை. – இது சமூக, சமயம் சார்ந்த கொள்கையாகும். இத்தகைய குற்றச்சாட்டைப் பொதுவில் அனைத்து அறிவியல் முன்னேற்றங்களுக்கும் முன்வைக்கலாம்.

3. எல்லா விளைபொருட்களும் போதுமான அளவிற்கு ஆய்வக மற்றும் களச்சோதனைக்கு உட்படுத்தப் படவேண்டும். இவற்றால் தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் எந்த ஒரு தீங்கும் இல்லை என்பது அறுதியிடப்பட வேண்டும். – இதில் போதுமான என்பதன் வரையறை அவ்வளவு எளிதான காரியமல்ல. இதுதவிர இன்றைக்கு தாவர உயிர்த்தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள முன்னனி அறிவியலாளர்களில் 80 சதவீதத்தினர் உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் மானியம் பெற்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடுபவர்கள். இவர்களின் ஆய்வகச் சோதனைகள் எந்த அளவிற்கு நம்பகத்தன்மை கொண்டனவாக இருக்கும் என்பதிலும் ஐயப்பாடுள்ளது.

4. இதனால் விளையக்கூடிய சமூக, பொருளாதார மாறுபாடுகள் நிச்சயிக்கப் படவில்லை – பெரும்பாலான தொழில்நுட்பங்கள் முன்னேறிய நாடுகளிலேயே உருவாக்கப் படுகின்றன. இவற்றுடன் அவற்றின் வணிக, மற்றும் அரசியல் ஆதிக்கச் சாத்தியக்கூறுகள் இணைந்தே உள்ளன.

உதாரணமாக, மொன்ஸான்டோ நிறுவனத்தின் ஒரு கண்டுபிடிப்பின்படி, மரபு மாற்றப்பட்ட, உயர்குணங்கள் கொண்ட, தானிய வகைகளின் விதைமணிகளை அவர்கள் விற்கின்றார்கள். இவற்றில் ‘இறுக்கும் மரபணுக்கள் ‘ (terminator genes) அடங்கியுள்ளன. இதன்படி ஒருமுறை விதைத்து விளைந்ததும் அப்பயிரின் உயர்குணங்கள் அடுத்த பட்டத்திற்கும் தொடர்ந்து வருவதில்லை. வேறு வகையில் சொன்னால், உங்கள் வயலில் விளைந்த நெல்லிலிருந்து நீங்கள் விதைநெல் திரட்ட முடியாது; அவ்வாறு திரட்டப்பட்ட விதைகள் விளையாது அல்லது அவற்றின் தரம் முதல் தலைமுறை (விதை நேரடியாக வாங்கப்பட்டது) பயிரைப்போல உயர்ந்ததாக இருக்காது. இந்த இறுக்கும் மரபணுக்கள் முதல் விளைச்சலிலேய அவற்றின் பண்புகளை மாற்றிக்கொள்ளத் தெரிந்தவை. இதன்மூலம் தொடர்ச்சியாக நீங்கள் மொன்ஸான்டோவிடமே விதை வாங்குவது உறுதி செய்யப்படும்.

5. அறிவியல் கண்டுபிடிப்புகள் காப்புரிமை பெற்றவை. இதன்மூலம் நிறுவனங்கள் ‘உயிருக்கு உரிமை ‘ பெறும் அபாயம் இருக்கின்றது.

இதனால் என்ன பயன்கள் ?

உலகின் மக்கள்தொகையில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஏழை நாடுகளில் வசிப்பவர்களே. இதில் கனிசமான பங்கினர் ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ளனர். இந்நாடுகளின் நிலங்களில் பெரும்பங்கு பயிரிடப்படுவதில்லை அல்லது பயிரிடுவதற்கு ஏற்றதல்ல. தரமான உணவுப்பயிர்களை குறைந்த செலவில் உற்பத்தி செய்யமுடியுமென்றால் இவற்றின் பஞ்சம் தீருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இன்னும் தீவிரமாகச் சொல்லப்போனால் உயிர்தொழில்நுட்பம் போன்ற முற்றிலும் புரட்சிகரமான கருவிகள் இல்லாமல், மக்கள் வெள்ளத்தின் இந்த பெரும்பங்கிற்குப் பசி தீர்ப்பதென்பது முற்றிலும் இயலாத காரியம். கடந்த சில ஆண்டுகளாக உலகில் சிசுச்சாக்காடு (infact mortality) அதிகரித்து வருகின்றது (குறிப்பாக மத்திய ஆப்பிரிக்கா), இது அரைநூற்றாண்டுகளாகத் தொடர்ச்சியான ஆரோக்கிய நிலைக்குத் தலைகீழாக உள்ளது – பெரிதும் கவலையைத் தரக்கூடியது. சமீபத்திய ஐக்கிய நாடுகளின் ஆய்வறிக்கை ஒன்று இந்தியாவை தர்மசங்கடமான நிலையில் காட்டுகின்றது – இந்தியக் குழந்தைகளில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கீகரிக்கப்பட்ட சத்துணவு அளவினைப் பெறுவதில்லை. இது தவிர பெருகிவரும் இயற்கையின் சீற்றத்தாலும் வழக்கமான பயிர்முறைகள் பலனில்லாமல் போய்வருகின்றன. இந்நிலையில் வளர்ந்துவரும் நாடுகளுக்கு உயிர்த்தொழில் நுட்பம் ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையில்லை.

பன்னாட்டு நிறுவனங்கள் காட்டும் நிலவரம் மிகவும் அற்புதமாக உள்ளது. உலகில் நீரும், விளைநிலமும் உயரப்போவதில்லை, இந்நிலையில் மும்மடங்கு விளைச்சளைத் தரவல்ல புதிய இரகங்கள் உலகின் பசிதீர்க்க இன்றியமையாததாகின்றன. இருக்கும் விளைநிலத்தை முற்றிலுமாகப் பயன்படுத்துவதன் மூலம் காடுகளை அழித்து விளைநிலமாக்களைத் தடுக்கலாம்; இது உயிர்பன்முகத்தை (biodiversity) நிலைசெய்யும். குறுகியகால அறுவடையை உறுதிசெய்வதன் மூலம் கட்டுக்கடங்காது தப்பிவரும் பருவங்களைப் பற்றிய கவலையைக் குறைத்துக் கொள்ளலாம். வளரும் பயிர்களை மேலும் சுவையானதாகவும் சத்துள்ளதாகவும் மாற்றுவதன் மூலம் உலகின் உணவுத்தேவையை எளிதில் நிறைவேற்றலாம். சேமிப்புத்திறனைப் பெருக்குதல் மூலம் தேவையான நாடுகளுக்கு எளிதில் ஏற்றுமதி செய்யலாம். குறைந்த பூச்சிகொல்லி மற்றும் களைக்கொல்லியைப் பயன்படுத்துவதன் மூலம் இயற்கையான விவசாய முறைகளுக்கு மாறாலாம். தங்கள் முன் வைக்கப்படும் எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் இந்நிறுவனங்கள் அநேகமாகச் சரிவர பதிலளிக்கின்றன, முடியாத இடங்களில் பதிலற்ற எதிர்கேள்விகளை எழுப்புகின்றன. உதாரணமாக, ‘உயிரிகளை மாற்றும் உரிமை மனிதனுக்குக் கிடையாது ‘ எனும் சமயநெறி சார்ந்த கடுமையான வாதத்திற்கு, ‘நீங்கள் உட்கொள்ளும் உணவுவகையில் மனிதானால் ஒருபொழுதும் மாற்றியமைக்கப்படாத தானியங்களோ, பழவகைகளோ என்னவிருக்கிறது எனக்காட்டுங்கள் ‘ என்று கேட்கின்றார்கள்.

உண்மை நிலை

ஆனால் உண்மை நிலை வேறுவிதமாகக் காட்சியளிக்கின்றது. களைக்கொல்லி எதிர்ப்புதிறன் தம் தாவரங்களுக்கு உண்டென்பதால் அதிகக் களைக்கொல்லியைப் பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்க முயலுகின்றனர். உலகின் பெரும்பகுதிக் காடுகளும், பன்முகம் கொண்ட சூழலும் பெரிதும் வளரும் நாடுகளிலேயே உள்ளன (உதாரணத்திற்கு பரப்பளவில் குறைந்த இந்தியாவின் தாவர மற்றும் விலங்குப் பன்முகத்தை அமெரிக்காவுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். கிரீன்பீஸ் எனும் தன்னார்வ சூழியல் பாதுகாப்புக் குழுவின் அறிக்கைப்படி இந்தியாவில் 50,000 க்கும் மேற்பட்ட அரிசி வகைகள் பயிரிடப்படுகின்றன, அல்லது ஒருகாலத்தில் பயிரிடப்பட்டன). பன்முகப் பாதுகாப்பு எனும் பெயரில் பயிரிடும் உரிமையையும் திறமையையும் தமக்குள்ளே பங்கிட்டு குழுவுரிமையாக்க முயற்சி செய்கின்றன. மாற்றியமைக்கப்பட்ட தாவரங்கள் முற்றிலும் எக்காலத்திலும் சிறந்ததாக விளங்கும் எனச் சொல்லுவதற்கில்லை. உதாரணமாக பசுமைப்புரட்சி காலத்தில் நெல்லைப் பாதிக்கும் எட்டு முக்கியமான வியாதிகளுக்கும், கிருமிகளுக்கும் எதிர்ப்பு கொண்டதாக அறிவிக்கப்பட்டு ஐ.ஆர்-36 எனும் நெல் வெளியிடப்பட்டது. விரைவிலேயே இதுவரை நெல்லைத் தாக்காத இரண்டு கிருமிகளால் பாதிக்கப்பட்டு அது குட்டையாகின்றது எனத் தெரியவந்தது.

மனிதனால் மாற்றப்படாத உணவுப்பொருளைக் காட்டச் சொல்லிக் கேட்கும் நிறுவனங்களின் வாதத்தில் ஒரு அடிப்படை முரண் பொதிந்துள்ளது. இதுவரை செயற்கையாகச் செய்யப்பட்டவை எல்லாம் மரபுத்தொடரில் மேலிருந்து கீழாகச் செய்யப்பட்டவை. இரண்டு பயிர்களை ஒட்டுவதன் பலன் அடுத்த தலைமுறையில் கிடைக்கும், அதன்பின் தலைமுறைகளில் அவை மரபுவிதிகளுக்குக் கட்டுப்பட்டுத் தொடரும். உயிர்தொழில் நுட்ப மாற்றங்கள் இவ்வாறில்லை. இது இணைக்கப்பட்ட உயிர் அந்த தலைமுறையிலேயே மாற்றம் காணும். இறுக்கும் மரபணு தொழில்நுட்பம் போன்றனவற்றால் அது அடுத்த தலைமுறைக்குத் தொடராது – ஆனால் நம்மால் ஊகிக்க முடியாத பிற பக்கவிளைவுகள் தொடரக்கூடும் – அவை சில தலைமுறைகளுக்குப் பின் முற்றிலும் அபாயகரமானவையாக மாறக்கூடும்.

இன்னமொரு முற்றிலும் புரட்சிகரமான, அபாயகரமான வேறுபாடும் உள்ளது. இதுவரைப் புழக்கத்திலிருக்கும் ஒட்டுதல் முறையில் மரபு சம்பந்தமுள்ள இரண்டு உயிரிகளையே இணைக்க முடியும் – உதாரணமா நெற்பயிருடன் மாங்கன்றை ஒட்டிட முடியாது. ஆனால் உயிர்தொழில் நுட்பத்தில் இது சாத்தியம், ஏன், இதற்கு ஒருபடி மேலேயே போய் தாவரங்களின் டி.என்.ஏ-வைப் பிளந்து அதில் மனித டி.என்.ஏ துண்டை ஒட்டிட இயலும். இதன்மூலம் எண்ணிப்பார்க்கவியலாத சாத்தியங்கள் புலப்படுகின்றன. விளையும் தாவரம் பலதலைமுறை இயற்கை மரபு மாற்றங்களுக்குப் பிறகு என்னவாக மாறும் என்பது யாராலும் ஊகிக்க முடியாதது.

கட்டுரைத் தொடக்கத்தில் குறிப்பிட விடலைத் தொழில்நுட்பம் எனும் தொடருக்கு இப்பொழுது விளக்கம் கிடைத்திருக்கும் என நம்புகின்றேன். உயிர்தொழில் நுட்ப வளர்ச்சியில் இது முக்கியமான கட்டமாகும் – நல்லனவாகவும் தீயனவாகவும் மாறுவது இந்தப் நிலையில்தான். இதில் நாளொரு வளர்ச்சியும், பொழுதொரு வேதனையும் தவிர்க்க முடியாதவை. எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் ஆக்கமும் உண்டு அழிவும் உண்டு. பலசமயங்களில் நாம் ஆபத்தைத் தெளிந்து தவிர்க்கின்றோம். சிலசமயங்களில் ஹிரோஷிமா, நாகசாகி போன்ற விலைகளைக் கொடுத்து உண்மைகளை அறிந்து கொள்கின்றோம். எனினும் இயற்கையை அறியும் மனிதனின் அடிப்படை உணர்வுக்கு எப்பொழுது அழிவு கிடையாது. இது மனிதனுக்கும் இயற்கைக்குமான ஓட்டப்பந்தயம் எனக்கருதுவதைவிட மனிதனும் இயற்கையுமாக கால்களைப் பிணைத்துக்கொண்டு மூன்றுகால் ஓட்டம் ஓடுவதாகவே கொள்ளவேண்டும், மனிதன் வேகமாக ஓடினால் இயற்கை அவனைப் பின்னுக்கிழுக்கின்றது. சக்திமிக்க இயற்கை இழுக்கும் திசையில் அவன் செல்லாவிடில் அவனுக்கு கால்வலி நிச்சயம். எல்லா கட்டங்களிலும் இயற்கைக்கு எதிராக ஓடத்துவங்கினால் கால்வலி ஏற்பட்டு ஓட்டம் மட்டுப்படுத்தப்படுவது உறுதி.

தோக்கியோ

2.6.2000

தொடர்புள்ள இணையப் பக்கங்கள்

கலியோர்னிய பல்கலை (டேவிஸ்) தாவர உயிர்த் தொழில்நுட்பம் குறித்த தகவல் பக்கங்கள் ccr.ucdavis.edu/biot/index.html

மரபுமாற்றப்பட்ட உணவுகள் – உண்மைகள் www.newscientist.com/nsplus/insight/gmworld/gmfood/gmfood.html

மரபுமாற்றப்பட்ட உணவுகள் குறித்த ஒரு பன்னாட்டுத் தன்னார்வ முனைப்பின் நிலையறிக்கை www.greenpeace.org/~commns/cbio/geperil.html

உயிர்த் தொழில்நுட்பம்குறித்த அணைத்து விபரங்களுக்கும் www.biotechknowledge.com

அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்துக்கட்டுப்பாட்டுத் துறையின் நிலையறிக்கை vm.cfsan.fda.gov/~lrd/bioeme.html

பன்னாட்டு உயிர்த் தொழில்நுட்ப நிறுவனம் – மொன்ஸான்டோ www.monsanto.com

பன்னாட்டு உயிர்த் தொழில்நுட்ப நிறுவனன் – கால்ஜீன் www.calgene.com

 

 

  Thinnai 2000 June 18

திண்ணை

Series Navigation

வெங்கடரமணன்.

வெங்கடரமணன்.