ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)
ஒரு வினோதமான விதத்திலே வம்பு பேச்சுக்கும் (gossip) கவலைக்கும் எவ்வளவு ஒற்றுமையிருக்கிறது! இரண்டுமே சஞ்சலமான – அமைதியற்ற – மனத்தின் விளைவுகள் ஆகும். அமைதியைத் தொலைத்து சஞ்சலத்திலே சிக்கிக் கொண்ட மனத்திற்கு தொடர்ந்து மாறுகிற தோற்றங்களும் வெளிப்பாடுகளும் செயல்களும் தேவைப்படுகின்றன; அது தொடர்ந்து அடைக்கப்பட்டிருக்க வேண்டும்; ஆக்ரமிக்கப்பட்டிருக்க வேண்டும்; நாள்தோறும் வளர்கிற கிளுகிளுப்பான கிளர்ச்சிகளையும், நிலைக்காத ஈடுபாடுகளையும் கொண்டிருக்க வேண்டும். வம்பு பேச்சானது மேற்சொன்ன எல்லாவற்றையும் உட்கொண்டிருக்கிறது.
செறிவின் (intensity), கருமமே கண்ணான கருத்துடைமையின் (earnestness) நேரெதிர்க் கோட்பாடு வம்பு பேச்சாகும். தன்னிடமிருந்து தான் தப்பிக்கும் பொருட்டே ஒருவர் அடுத்தவரைப் பற்றி இனிமையாகவோ வன்மமாகவோ பேசுகிறார்; தப்பித்தல், அமைதியற்ற தன்மைக்குக் காரணமாகும். தப்பித்தல் – அதன் அடிப்படை இயல்பிலேயே அமைதியற்றதுதான். அடுத்தவர் விஷயங்களைப் பற்றிய சிரத்தையும் ஈடுபாடும் பெரும்பாலோர் மனங்களை ஆக்ரமிக்கிறது. அத்தகைய ஈடுபாடே – விதவிதமான பத்திரிகைகளையும், எண்ணற்ற நாளேடுகளையும் – அவற்றின் மலிவான கிசுகிசுக்களோடும், கொலைகள் பற்றிய வர்ணனைகளோடும், விவாகரத்துகள் பற்றிய விவரங்களோடும் என்றெல்லாம் அவர்களைத் தேடிப் பிடித்துப் படிக்க வைக்கிறது.
மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்றறிய நாம் ஆர்வமும் முனைப்பும் காட்டுவது போல, மற்றவர்களைப் பற்றிய எல்லா விஷயங்களையும் முழுமையாக அறிய நாம் ஆவலுறுகிறோம். இதனால் – பகட்டில் இச்சை கொள்கிற தன்மையும், வெளித்தோற்றம் கண்டு மற்றவரை மதிப்பிடுகிற குணமும், அதிகாரத்தை வழிபடுகிற போக்கும் – மெல்லிய நுண்ணிய வடிவிலோ அல்லது மோசமான அநாகரிகமான வடிவிலோ – உண்டாகிறது. அதனால், நாம் மேலும் மேலும் புறவயப்படுத்தப்பட்டு, புறத்தோற்றங்களுக்கு மயங்கி, அகத்திலே வெறுமையும் சூன்யமுமாகிப் போகிறோம். எந்த அளவிற்குப் புறவயப்படுத்தப் படுகிறோமோ அந்த அளவிற்கு கிளுகிளுப்பான கிளர்ச்சிகளும், மனத்தடுமாற்றங்களும் எழுகின்றன. இதனால் – மனமானது ஒருபோதும் அமைதியடையாமல் அலைகிறது. அமைதியற்ற மனமானது பெரிதினும் பெரிதைத் தேடவோ, கண்டுபிடிக்கவோ வலுவற்றதாகும்.
வம்பு பேச்சு அமைதியற்ற மனத்தின் மொழியே ஆகும். ஆனால், வெறுமனே மெளனமாக இருப்பது மனச்சாந்தியின் அடையாளமும் இல்லை. சலனமற்ற அமைதியானது (Tranquillity) இச்சையை அடக்குகிற உபவாசமான புலனடக்கத்தாலோ, மறுதலிப்பினாலோ வருவதில்லை; அது, ஒவ்வொன்றைப் பற்றியும் ‘இது என்ன ‘ என்று புரிந்து அறிந்து கொள்வதால் வருகிறது. ‘இது என்ன ‘ என்பதனை அறியவும் புரிந்து கொள்ளவும் துரிதமான விழிப்பு நிலை தேவை. ஏனெனில், ‘இது என்ன ‘ என்பது மாறாத அசைவற்ற ஒன்றல்ல.
கவலைப்பட வில்லையென்றால், நம்மில் பெரும்பாலோர் தாம் உயிருடன் இல்லையென்று உணர்கிறார்கள்; ஒரு பிரச்சினையாலோ, ஒரு பிரச்சினையுடனோ வதைபடுவது நம்மில் பெரும்பாலோர்க்கு உயிர்த்தன்மையின் அடையாளம் ஆகும். பிரச்சினை இல்லாத வாழ்க்கையை நம்மால் கற்பனை செய்ய இயலாது. எந்த அளவிற்கு ஒரு பிரச்சினையால் ஆக்கிரமிக்கப்பட்டு அல்லலுறுகிறோமோ, அந்த அளவிற்கு விழிப்புடனும் எச்சரிக்கையாகவும் இருப்பதாக நாம் நினைத்துக் கொள்கிறோம். பிரச்சினையைக் குறித்து, எண்ணம் உருவாக்குகிற நிலையான இறுக்கமும் படபடப்பும் – மனத்தை மங்கச் செய்து – உணர்ச்சிகளை உணராது மரத்துப் போனதாகவும், களைப்புற்றுத் தளர்ச்சியடைந்ததாகவும் மாற்றுகிறது.
ஏன் இடைவிடாத முன்யோசனையிலும், கவலையிலும் மூழ்கித் தவிக்கிறோம் ? கவலை பிரச்சினையைத் தீர்த்து விடுமா ? அல்லது, மனமானது அமைதியாக இருக்கும்போது, பிரச்சினைக்கான தீர்வு பிறக்குமா ? சொல்லப்போனால், பெரும்பாலோர்க்கு அமைதியான மனம் என்பது அவர்களைப் பயமுறுத்துகிற விஷயமாகும்; அவர்கள் அமைதியாக இருப்பதற்கு அஞ்சுகிறார்கள். ஏனெனில், அமைதியாக இருந்தால், அவர்களால் அவர்களுக்குள்ளே என்னென்ன தேடி கண்டடைய இயலும் என்பதை அந்த வானமே அறியும்! எனவே, கவலை தடுக்கிறது. கண்டுபிடிக்கத் தயங்குகிற – கண்டுணரத் தயங்குகிற – மனமானது எப்போதும் தற்காப்பு என்கிற நிலையிலேயே நீடிக்கிறது. அமைதியற்றத் தன்மையே அதன் தற்காப்பாகும்.
நிலையான பிரயாசையாலும், தொடர்ந்த பழக்கத்தாலும், சூழ்நிலைகளின் தாக்கத்தாலும் – மனத்தின் சுயநினைவுமிக்க படலங்கள் – சலனத்தால் கிளர்ச்சியுற்றும், அமைதியற்றும் உழல்கின்றன. தற்காப்பின் இன்னொரு வடிவமான – இத்தகைய மேலெழுந்தவாரியான ஆழமற்ற செயல்களையும், தடுமாற்றங்களையும் – நவீன வாழ்க்கை மேலும் ஊக்குவிக்கிறது. தற்காப்பு என்பது புரிந்து கொள்வதையும், அறிவதையும் தடுக்கிற எதிர்ப்பு விசை ஆகும்.
கவலையானது, வம்பு பேச்சைப் போலவே, செறிவான, கண்ணும் கருத்துமான வெளித் தோற்றமுடையது. ஆனால், கூர்ந்து நெருக்கமாக கவனித்தால், கவலையானது கவர்ச்சியினால் பிறக்கிறது என்பதையும், கண்ணுங் கருத்துமுடைமையால் அல்ல என்பதையும் ஒருவர் அறியலாம். கவர்ச்சியானது தினமும் மாறிக் கொண்டே இருக்கிறது. அதனால்தான், வம்பு பேசுகிற, கவலை கொள்கிற விஷயங்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன. மாறுதல் என்பது வெறும் முரண்பட்ட தொடர்ச்சிதான். மனத்தின் அமைதியற்ற தன்மையைப் புரிந்து கொள்ளும்போதே, வம்பு பேச்சும் கவலையும் கைவிட்டுப் போகும். வெறும் புலனடக்கமோ, கட்டுப்பாடோ, ஒழுக்கமோ சலனமற்ற அமைதியைக் கொணர்வதில்லை. அவை, மனத்தை மேலும் சோர்வடையச் செய்து, மனத்தை உணர்வுகள் மரத்துப் போனதாகவும், குறுகிய வரையறைகளுக்குள் அடைக்கப்பட்டதாகவும் ஆக்கிவிடுகிறது.
குறுகுறுப்பான ஆர்வம் (curiosity) புரிந்து கொள்வதற்கான வழி அல்ல. புரிந்து கொள்ளுதல் சுய-அறிவினால் பிறக்கிறது. எவர் துன்புறுகிறாரோ அவர் குறுகுறுப்பான ஆர்வமுடையவர் அல்ல. மேலும், யூகிக்கத் தூண்டும் அதனின் உட்குறிப்போடு வெறும் குறுகுறுப்பான ஆர்வமானது சுயஅறிவிற்கான தடைக்கல்லே ஆகும். யூகித்தலும் – குறுகுறுப்பான ஆர்வத்தைப் போலவே – அமைதியற்ற தன்மையின் அடையாளம் தான். எனவே, அமைதியற்ற மனமானது, அது என்னதான் வரமும் திறமும் பெற்றிருந்த போதிலும், புரிந்து கொள்வதையும், அறிவதையும், அதனால் பிறக்கிற பேரின்பத்தையும் அழித்துவிடுகிறது.
(மூலம்: வாழ்க்கை குறித்த வர்ணனைகள் – வரிசை: 1 – ஜே. கிருஷ்ணமூர்த்தி [Commentaries on living – Seris: 1 – J. Krishnamurthi])
- கடற்கரை
- அன்புள்ள அம்மாவுக்கு
- புள்ளிவிவர அறிவியல் (statistics) நகைச்சுவை துணுக்குகள்
- வெப்ப இயங்கியலின் (thermodynamics) மூன்று விதிகள் (எளிய தமிழில்)
- தமிழிசை – ஒரு பின்னோக்கிய பார்வை
- ஜெயமோகனின் பிரகடனமும் பின் தொடரும் வைதீக வெறியும்
- அழகி(யல்) பார்வை
- திசைகளும் பயணங்களும் (இந்தப் புத்தகத்தைப் படித்து வீட்டார்களா ?-2 – ‘என்னைக் கேட்டால் ‘ -என்.எஸ்.ஜகந்நாதன்)
- வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம்
- தர்பூசணி சோர்பே
- ஆண்டிபயாட்டிக்ஸ் என்னும் மருந்துகளை உற்பத்தி செய்யும் பாக்டாரியத்தின் மரபணுவை பிரிட்டிஷ் அறிவியலாளர்கள் முழுக்கப் பிரித்து படித்
- பிளாஸ்டிக் என்னும் பூமியின் எதிரி
- நிலாவில் குதித்து உலாவிய பூலோக வாகனங்கள்
- மறைந்த உருது கவிஞர் கைஃபி ஆஸ்மி – கவிஞரும் கவிதையும்
- துயர்நிலம்
- ஒட்டைச்சிவிங்கி
- உருவமற்ற நிழல்கள்.
- வெளிதாண்டிய வெளிதாண்டாத் தவளைகள்.
- உன் போலத்தான் இந்த கவிதையும்.
- நீ… உனக்கான வரம்.
- சுவர்களின் கவிதைகள்.
- வெள்ளி
- தமிழிசை – ஒரு பின்னோக்கிய பார்வை
- ஜெயமோகனின் பிரகடனமும் பின் தொடரும் வைதீக வெறியும்
- தினமணி பத்திரிக்கை நிருபர் தற்கொலையும் தமிழ் ஊடகங்களின் மனித மதிப்பீடுகளும்
- குஜராத் கலவரங்களை முன்வைத்து
- வம்பு பேச்சும் கவலையும்
- இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 4 அத்தியாயம் 4 – இந்துத்துவம் : தலித்கள் பெண்கள்
- ஊதுகிற சங்கு
- பொன்னையா