என் எஸ் நடேசன்
87ம் ஆண்டு சித்திரை மாதம், நான் வாழ்ந்த ராகலையில் உள்ள சூரியகாந்தி தோட்டம் என அழைக்கப்படும், Lydasdale Estate தேயிலை பெருந்தோட்டத்தில் தொழிலாளரின் குடியிருப்புகள் இரவோடு இரவாக எரிக்கப்பட்டன. திட்டமிட்டு செய்யப்பட்ட இவ் வன்முறைச் சம்பவத்தால் நூற்றுக்கணக்கான மலையகத் தமிழர்கள் சில நாட்கள் குழந்தைகளுடன் தேயிலை புதர்களின் அடியிலும், மலைஅடிவாரத்து பாறைகளின் இடுக்கிலும், இரவுகளைக் கழிக்க நேர்ந்தது. இவர்களது குடியிருப்புகள் திருத்தப்பட்டு மீண்டும் அங்கு சென்று வாழ்வதற்கு பல மாதங்கள் சென்றன.
இவ் வன்முறைச் சம்பவம் ஒரு தொழிலாளிக்கும் சின்னத்துரை என அழைக்கப்படும் உதவி முகாமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறினால், ஆரம்பமாகியது. தொழிலாளரின் மனைவியுடன், சின்னத்துரை தகாதமுறையில் நடக்க முற்பட்டதால் அந்தத் தொழிலாளி சின்னத்துரையைக் கத்தியால் குத்திவிட்டதாகக் கூறப்பட்டது.
இந்த சம்பவத்தில் சின்னத்துரை சிங்களவராகவும் தொழிலாளி தமிழராகவும் இருந்ததால், தோட்டத்துக்கு வெளியே உள்ள கிராமங்களில் வசிக்கும் சிங்களவர்கள் சிலர் சின்னத்துரையின் தூண்டுதலில் இக் குடியிருப்புகளுக்குத் தீ வைத்தனர். அதிஷ்டவசமாக உயில் கொலைகள் ஒன்றும் நடைபெறவில்லை. இந்த நிகழ்ச்சியில் காவல்துறையினர் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.
இச் சம்பவம் மலையகத் தமிழரின் பரிதாப நிலைமையை தெளிவாக காட்டுகிறது. இம்மக்கள் சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் அவர்களின் தயவில் வாழ்கிறார்கள்.
இப் பாதுகாப்பற்ற தன்மை இவர்களுக்கே தனித்துவமானது. இவர்களது நிலைக்கு மலையக மக்களோ அல்லது அவர்களை சுற்றி வாழும் சிங்கள மக்களோ காரணமல்ல. இவர்கள் வரலாற்றினால் வஞ்சிக்கப்பட்டவர்கள்.
1815ம் ஆண்டு பிரித்தானியர்கள் கண்டி இராட்சியத்தை கைப்பற்றினார்கள். பிரித்தானியர்கள் அடர்த்தி குறைவான இலங்கையின் மத்திய பிரதேசங்களில் கோப்பி பயிரிடவது எனத் தீர்மானம் எடுத்ததும், 90வீதமான நிலங்கள் முடிக்குரிய காணிகளாக பிரகடனப்படுத்தப்பட்டன. மிகுதியான காணிகள் சிறுதொகை பணத்திற்கு சிங்கள விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டது. கண்டி ராஜதானிியின் கடைசி அரசனும், ஹிவிக்கிரம இராஜசிங்கன் பிரித்தானியர்களினால் கைப்பற்றப்பட்டு, வேலூருக்கு நாடு கடத்தப்பட்டான். கவர்னர் எட்வேட் பாள்ஸ் கோப்பிச் செய்கையின் தானும் ஈடுபட்டதுடன், மற்றய பிரித்தானிய அரசாங்க உத்தியோகத்தர்களையும் உற்சாகமூட்டி கோப்பி செய்கையில் ஈடுபடுத்தினார்.
பிரித்தானிய பிரபுத்துவ குடும்பங்களில் பரம்பரைச் சொத்து அற்றவர்கள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு பெருந்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்தப்பட்டார்கள். இப்படி கோப்பி தோட்டங்கள் உருவாக்கப்பட்ட போது, சிங்கள விவசாயிகள் இங்கு வேலை செய்ய விரும்பவில்லை. இவர்களைக் கட்டாயப்படுத்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
1. அரசுக்கு கிழமையில் ஒருநாள் எவ்வித வேதனம் இல்லாமல் வேலை செய்யும் ‘இராஜகாரியம் ‘ அமூல்படுத்தப்பட்டது.
2. பாரம்பரியமாக காடுகளை எரித்து செய்யப்படும் ‘சேனா விவசாயம் ‘ சட்ட பூர்வமாக நிறுத்தப்பட்டது.
3. நெற்பயிற் செய்கை, ரோட்டு பாவனை மட்டுமல்லாமல் சிங்கள விவசாயிகளின் நாய்களின் மீதும் வரி அறவிடப்பட்டது.
இப்படியான செயல்கள் சிங்கள விவசாயிகளைப் பட்டினி நிலைக்குத் தள்ளியது.
கோப்பி தோட்ட முதலாளிகளான பேச்சாளரான J.R. போக்சன் அந்நாளில் சிங்கள விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதை நியாயமானது எனக் கூறினார்.
இவர்களின் இப்படியான நடவடிக்கைகள் சிங்கள விவசாயிகளின் மனநிலையில் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இதற்கான காரணங்கள் :
1. மிகக் குறைந்த சிங்கள விவசாயிகளே இந்த கோப்பி தோட்டம் உள்ள பகுதிகளில் வசித்தார்கள். உதாரணம் : கண்டியில் 1815ம் ஆண்டு 3000 பேர் மட்டுமே வசித்தார்கள்.
2. நிறைவேற்றிய சட்டங்களை அமுல்படுத்துவதில் பல சிக்கல்கள் இருந்தன.
மேற்கூறிய காரணங்களினால் பிரித்தானியர்கள் இலங்கைக்கு அருகாமையில் தங்களது ஆதிக்கத்தின் கீழ் உள்ள இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தொழிலாளர்களைத் தேடினார்கள். இக்காலகட்டத்தில் தமிழ் நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது. விவசாயக் கூலிவேலை செய்யும் தாழ்த்தப்பட்ட நிலமற்ற மக்களில் பலர் பட்டினியால் இறந்தார்கள். பிரித்தானயர்களால் பஞ்சம் செயற்கையாக உருவாக்கப்பட்டது என கூறுபவர்களும் உள்ளனர். அவர்களுக்குச் சார்பான நில சுவான்தார்களிடம் தேவையான அளவு தானியம் இருப்பில் இருந்தும், அவை மக்களுக்கு வழங்கப்படவில்லை.
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் பிரித்தானியர்கள் அகம்படியர், மறவர் எனப்படும் தற்போதைய முக்குலத்தவர்களை இடைத்தரகர்களாக நியமித்து நிலமற்ற தலித் மக்களை தொழிலாளர்களாகத்; திரட்டினார்கள். தமிழ்நாட்டில் நில உடமை சமூகத்தில் ஊடுருவி இந்த தரகர்கள் இலங்கை சொர்க்கபுரியெனக் கூறி ஆட்களைச் சேர்த்தனர்.
பலகாலம் அமைச்சராகவும் தொழிலாளர் அங்கத்தலைவராகவும் இருந்த தொண்டமான் இம் முக்குலத்தவர் வழிவந்தவராகும்.
ஆரம்ப காலத்தில் ஆண் தொழிலாளர்கள் காடுகளை அழிக்கவும், ரோடுகளை போடவும் தேவைப்பட்டனர். பின்பு தோட்டங்களில் வேலை செய்ய பெண்களும், கொண்டுவரப்பட்டார்கள். இவ்வாறு பெண்கள் வந்ததால் ஆண் தொழிலாளர் தமிழ்நாட்டுக்கு திரும்பிச் செல்வது நிறுத்தப்பட்டது,
மன்னாரில் இறக்கப்பட்டு, புத்தளம் ஊடாக மலையகம் செல்லும்போது, பலர் மலேரியாவுக்கும், பாம்புகடிக்கும் மட்டும் அல்லாது பட்டினிக்கும் பலியானார்கள்.
1871 1881ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 240,000 தொழிலாளர்கள் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார்கள். இந்த பத்துவருட காலத்தின் பின் கோப்பி பயிர் பங்கஸ் (Fungus) நோய் தொற்றி அழிந்தபடியால் தேயிலை தோட்டங்கள் உருவாக்கப்பட்டதுடன் 1930 ஆண்டுவரையும் தமிழ்நாட்டு தொழிலாளர்களின் வருகை தொடர்ந்து இருந்தது,
கோப்பி தோட்டங்கள் உருவாகியபோது இலங்கையில் முதலாளித்துவ அமைப்பும் ஆரம்பமாகியது. இத் தொழிலாளர்களே இலங்கையில் முதலில் உருவாகிய தொழிலாளவர்க்கமாகும். மத்தியவர்க்கமும், கோப்பித் தோட்ட முதலாளிகளைச் சேர்ந்ததே. இதன் முன்பு இலங்கையில் சிறுவிவசாயிகளும் மட்டுமே இருந்தனர்.
பிரித்தானியர்கள் தோட்டத் தொழிலாளர்களை சிங்கள விவசாயிகளிடம் இருந்து பிரித்து வைத்தார்கள்.
‘ ‘நெல்கழஞ்சியம் ‘ என கூறப்பட்ட இலங்கைக்கு இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்தனர். தரகர்களாக வந்தவர்களை தொழிலாளர்களை முகாமைத்துவம் செய்யும் பணியில் ‘ ‘கங்காணிகள் ‘ ‘ என்ற பெயரில் ஈடுபடுத்தினார்கள். சிங்கள மக்களுக்கு எவ்வித பணியும் கொடுக்கப்படவில்லை. கங்காணிகளுக்கு தொழிலாளர்களின் ஊதியப் பணத்தில் இருந்து ரோயல்ரி கொடுத்தார்கள். இந்தமுறை 1970 ஆண்டில் பெரும் தோட்டங்களை தேசிய மயமாக்கும் வரையும் தொடர்ந்தது,
1927ம் ஆண்டு, டொளமூர்ச் ஆணைக்குழு திருத்தப்படி இலங்கையில் வதியும் அனைவருக்கும் வாக்குரிமை சிபார்சு செய்யப்பட்டது, ஆரம்பத்தில் சிங்கள செல்வந்தர்கள் மலையக மக்களுக்கு வாக்குரிமை கொடுப்பதை எதிர்த்தார்கள். இடதுசாரிகளுக்கு தோட்ட மக்களிடம் செல்வாக்கு இருந்ததால் இடதுசாரிகளின் பலம் கூடிவிடும் என்பதே இவ் எதிர்ப்பின் அடிப்படைக் காரணமாகும். 1927ம் ஆண்டு இலங்கையில் நடந்த தேர்தலில் Ceylon State Council க்கு மலையகத் தமிழர்களும் 9 இடதுசாரிகளும் தெரிவானார்கள். இது சிங்கள செல்வந்தர்களின் பயத்தை உறுதி செய்தது,
இலங்கை 1948ம் ஆண்டு பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றபோது, 70வீதமான வருமானம் பெரும்தோட்டப் பயிர்கள் மூலமே கிடைத்தது,
இக்காலகட்டத்தில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் நிலை எப்படி இருந்தது ?
1. இவர்களது சம்பளம் முறை மற்றய இலங்கையரிடம் இருந்து வேறுபட்டதுமல்லாமல் கொடுக்கப்பட்ட சம்பளமும் சொற்பமானது.
2. ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபட்ட வேதனம் கொடுக்கப்பட்டது.
3. மிகவும் தரக்குறைவான சுகாதார, கல்வி வசதிகள் இருந்தன. உதாரணம் : குழந்தைகள் இறப்பு வீதம் இலங்கையின் தேசிய இறப்பு வீதத்துடன் பார்க்கும் போது நாலுமடங்கு அதிகமாகும்.
4. உலகத்திலேயே வினோதமான வீடமைப்பு முறையான ‘ ‘லைன் ‘ ‘ Lines) எனப்படுவது பிரித்தானியரால் ஏற்படுத்தப்பட்டு இன்னும் இலங்கை அரசாங்கத்தால் பராமரிக்கப்படுகிறது.
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பு மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. அது அப்பொழுது இந்தியப் பிரதமரான ஜவகர்லால் நேருவால் கண்டிக்கப்பட்டது. பிற்காலத்தில் இந்திய பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியுடன் சிறீமாவோ பண்டாரநாயக்க ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார்.
இவ் உடன்படிக்கை பிரகாரம் மலையக மக்களை இருநாடுகளும் பகிர்ந்து கொண்ட போதும், 150, 000 பேர் எந்த நாட்டையும் சேராத நாடற்ற மக்களாக்கப்பட்டனர்.
1987ம் ஆண்டு ராஜீவ் – ஜே ஆர் ஒப்பந்தத்தில் நாடற்றவர்களுக்கு இலங்கைப் பிரஜா உரிமை கொடுப்பதென முடிவு செய்யப்பட்டது. முன்னைய ஒப்பந்தங்களில் இந்தியர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் இலங்கையில் இருந்தபோது அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் மீண்டும் ஓர் நாடற்ற பரம்பரையை உருவாக்கியது. தற்போதைய அரசாங்கம் இவர்களையும் இலங்கையர்களாக ஏற்றுக் கொண்டது.
மலையக மக்களின் தலைவர்களாக இருந்தவர்கள் இம்மக்களின் பெயரால் பலசலுகைகளையும், மந்திரி பதவியையும் பெற்று இருக்கிறார்கள். இவர்களின் போராட்டங்கள் செயல்பாடுகள் எவ்வளவு தூரம் இம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி உள்ளது என்பது கேள்வி குறியாகும்.
இழப்பதற்கு எதுவும் அற்ற இம்மலையக மக்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டார்கள். இதேவேளையில் சிங்கள இளைஞர்கள் இருமுறை ஆயுதம் தரித்து போராடினார்கள். வடகிழக்கு தமிழர்களும் கடந்த கால்நூற்றாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இவர்கள் யாரும் மலையக மக்களை அணி திரட்டவோ அல்லது சேர்ந்து போராடவோ இல்லை. இதற்கான விளக்கத்தை வரலாற்று ஆசிரியர்களிடம் தான் கேட்க வேண்டும்.
—-
என் எஸ் நடேசன் அவுஸ்திரேலியா
uthayam@ihug.com.au
- பெண்கள் சந்திப்பு மலர் – 2004 -ஒரு பறவைப் பார்வை
- எம்.எஸ் – ஒரு வரலாற்றுப் பதிவு
- நபிகள் நாயகத்தின் வாழ்வு – அன்னை ஜைனப்பின் மணம் – இறுதி நபி : சில விளக்கங்கள்
- வஞ்சிக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வரலாறு
- ராஜ் டி.வி Vs தயாநிதி மாறன் : உள் நோக்கம் ?
- ஜயேந்திரர் : மனித உரிமை, மீடியா பிரச்சினைகள்
- விளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது – சே ராமானுஜம் பெறுகிறார்
- மதுரை ஷண்முகவடிவு சுப்புலஷ்மி – 1916-2004 – ஒரு அஞ்சலி
- இசை அரசி எம்.எஸ்.
- ச.சுரேந்திர பாபுவின் ‘தமிழகத்தில் பாரதப்போர் ‘நூலில் இருந்து….ஆய்வுப் பான்மை
- ஓவியப்பக்கம் ஒன்பது – ரொமேர் பியர்டன் – ஓவியமும் எழுச்சியும்
- தமிழின் மறுமலர்ச்சி – 8 தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி ‘ என்ற கட்டுரையிலிருந்து…பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை
- எம் எஸ் :அஞ்சலி
- வாரபலன் டிசம்பர் 16,2004 – நாடாளுமன்றச் சிலைகள், கும்பாரன் குரல், கோல்கீப்பரின் மரணம், தோசை சப்பாத்தி ஐஸ்கிரீம்
- உயர் பாவைக்கு ஒரு முன்னுரையும் விளக்கமும்
- அழுதாலும் பிள்ளை அவள் தான் பெற வேண்டும்
- மெய்மையின் மயக்கம்-30
- மக்கள் தெய்வங்களின் கதைகள் – 14. வன்னிராசன் கதை
- விடுபட்டவைகள் -1
- ஜோதிர்லதா கிரிஜா: தியாகு: ஜெயேந்திரர்: ஆதி சங்கரர்
- விளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது – சே ராமானுஜம் பெறுகிறார்
- கடிதம் டிசம்பர் 16,2004
- ஜெயமோகனின் இவ்வருடத்திய நூல்கள்
- டிசம்பர் 16,2004 – இரு கடிதங்கள்
- நடேசனின் இரு நூல்களின் வெளியீடு
- கடிதம் 16,2004
- மாந்தரென்றால்….
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -50
- அக்கரையில் ஒரு கிராமம்
- பேயும் பேயோட்டியும் சேர்ந்த கூட்டணி
- ஒரு சிறுவனின் கனவு
- மாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)
- கவிக்கட்டு 40-உள்ளத்தை மட்டும் !
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 7-அது..அவன்..அவள்.!
- இறைத்தூதர்
- என்ன சொல்ல…. ?
- பிரியாதே தோழி
- நாற்காலி
- பூமியின் கவிதை
- அறிவியல் புனைகதைவரிசை 5 – பித்தம்
- மாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)
- கவிதைப் பம்பரம் -கூ ற ா த து கூ ற ல் – 1
- குருஷேத்ரம்
- கீதாஞ்சலி (8) கானம் இசைக்கும் தருணம்-மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- பெரியபுராணம் – 22
- பேன்
- பரமேசுவரி
- தெரு நாய்
- மண்ணெண்ணெய்
- தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? இப்பேரணையைக் கண்ணீரால் கரைத்தோம்! கனிவு, கவனம், கண்காணிப்பு, கட்டுப்பாடுடன் பேரணைகள் கட்டப்பட வேண்டு
- சரித்திரப் பதிவுகள் – 5 : நார்மண்டி தாக்குதல் (D Day Landing)
- மலேசிய மகுடம்