ரியாத் கலை விழா – 2006-12-08

This entry is part [part not set] of 33 in the series 20061228_Issue

இப்னு ஹம்துன்


“தாய்மொழி தாயைப் போன்றது. ஒவ்வொருவரும் தத்தம் தாயை நேசிக்கத்தான் வேண்டும். அதற்காக பிறர் தாயை பழிக்கவேண்டுமென்றோ, வெறுக்கவேண்டும் என்றோ யாரும் நினைக்கக் கூடாது”- தேன்குரல் அறிவிப்பாளர் பி.ஹெச்.
அப்துல்ஹமீதுடைய பொன்மொழி தான் இது.

இந்திய – இலங்கை நட்புணர்வினை பிரதிபலிக்கும் மாபெரும் கலாச்சார நிகழ்ச்சி சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்-தில்
வெள்ளி மாலை சிறப்பாக கொண்டாடப்பட்ட பொழுது அவர் இவ்வாறு கூறினார். “தமிழன் முடிந்தவரை, நிறைய மொழிகளைத்
தெரிந்துக் கொள்ளவேண்டும்”.

தமிழ் கலை மனமகிழ்மன்றத்தார் (தஃபர்ரஜ்) ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில், சவூதி அரேபியாவுக்கான இந்தியத் தூதர் திரு. எம்.ஓ.ஹெச். பாஃரூக், இலங்கைத் தூதர் திரு. ஏ.எம் .ஜே. சாதிக் முன்னிலையில் உலகப்புகழ் பெற்ற வானொலி அறிவிப்பாளர் பி.ஹெச். அப்துல் ஹமீது, தமிழகத்தின் புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்
.

அப்துல் ஜப்பார் இயக்கி நடித்த ‘ஆக்ராவின் கண்ணீர்’ வானொலி நாடகம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. சுமார் 2000க்கும் மேற்பட்ட இந்திய இலங்கை மக்கள் திரண்டிருந்த கூட்டத்தில் பி.ஹெச். அப்துல் ஹமீது நடத்திய ‘வெல்ல முடிந்தால் வெல்லுங்கள்’ ‘ பாட்டுக்குப் பாட்டு’ ஆகிய நிகழ்ச்சிகள் மக்களின் ரசனைக்கு நல்ல விருந்தாக அமைந்தன. முன்னதாக, மாணவ மாணவியருக்கு வினாடி -வினா நிகழ்ச்சிகளையும் திரு.அப்துல் ஜப்பார் நடத்தினார். ‘ பாவ மன்னிப்பு’ பற்றிய அவருடைய ஒரு பாடல் பார்வையாளர்களின் மனங்கசிய செய்தது .

தஃபர்ரஜ் மன்றத்தின் தலைவர் திரு. அஹமது இம்தியாஸ் வரவேற்புரை ஆற்றினார். லக்கி குழுமத்தலைவர் திரு. லக்கி காதர் மற்றுமுள்ள வணிகப் புரவலர்கள் விழா சிறப்பாக நடைபெறுவதில் பெரும் பங்கு அளித்தனர். மாணவப் பருவத்தில்
தம்மை வந்தடைகிற தீயப் பழக்கங்களை தூசுகளை உதறித் தள்ளுவதுப் போல உதறித் தள்ள வேண்டுமென்று மாணவர்களுக்கு
திரு. அப்துல் ஹமீது உவமைக் கதையுடன் அறிவுரை வழங்கினார்.”கற்கும் போது கிடைக்கும் அனுபவம் தான் உங்கள் எதிர்கால வாழ்க்கையை வடிவமைக்கும்” .

“வெளிநாட்டவர் கண்டுபிடித்த படைப்புகளுக்கு உரிய பெயர்களைத் தமிழில் தேடிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக
தமிழர்களே புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி அதற்கு தமிழில் பெயர் வைத்து உலகமெல்லாம் தமிழ் பரவும்
வகை செய்ய வேண்டும் ” என்ற அவரது கருத்து ஒரு பெரிய விவாதத்தை சூல் கொண்டதாகும் என்பது உண்மையே.

முன்னதாக வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கென்று மாநில அளவில் ஒரு அமைச்சகம் வேண்டும் என்ற பேச்சாளர் ஒருவரின்
கோரிக்கைக்குப் பதிலளித்த இந்தியத் தூதர் திரு. எம்.ஓ.ஹெச். பாஃரூக், மாநில அரசு அதனை ஏற்று செயல்படுத்தும் பட்சத்தில் தாமும் உதவ தயாராக இருப்பதாகக் கூறினார்.

– இப்னு ஹம்துன் (fakhrudeen.h@gmail.com)


H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953
www.ezuthovian.blogspot.com

Series Navigation

இப்னு ஹம்துன்

இப்னு ஹம்துன்