ரமேஷ் பிரேம் இணைந்து வெளியிட்டிருக்கும் “உப்பு” கவிதைத் தொகுப்பு

This entry is part [part not set] of 28 in the series 20090319_Issue

வா.மணிகண்டன்


ரமேஷ் பிரேம் தமிழ் இலக்கியத்தில் உருவாக்கி வைத்திருக்கும் தடம் சாதாரணமாக தாண்டிச் செல்ல முடியாதது. படைப்பு ரீதியாக தமிழ் சிற்றிதழ் உலகில் இந்த இரட்டையர்களின் வீரியமான இயக்கம் நவீன தமிழ் இலக்கியத்தோடு அடிப்படையான பரிச்சயம் உள்ள வாசகனுக்கும் தெரிந்து இருக்கும்.

ரமேஷ் பிரேம் இணைந்து வெளியிட்டிருக்கும் “உப்பு” கவிதைத் தொகுப்பை வாசித்து முடிக்க கொஞ்ச நாட்கள் பிடித்தன. தொகுப்பில் பல கவிதைகள் சிறப்பானவை. ஒரே ஒரு கவிதையை மட்டும் வாசிப்பதே ஒரு நாளைக்கான‌ ஆழ்ந்த வாசிப்பனுபவத்தை கொடுப்பதாகச் சொல்ல முடியும்.

எறும்புகளுக்கு
தற்கொலை செய்து கொள்ளத்
தெரிவதில்லை
எனக்குத் தெரிந்த எறும்பொன்று
மூன்று முறை தோல்வி கண்டது
எதேச்சையாக ஒரு நாள்
என்னைக் கடித்தபோது
தன் இறுதி முடிவுக்கான வழியை
அறிந்து கொண்டது.

இந்தக் கவிதையில் எளிமையான பகுதி இறுதி நான்கு வரிகள். புரிந்து கொள்ள குழம்ப வேண்டியதில்லை. ஆனால் ஆரம்ப வரிகள் புனைவான வரிகள். எறும்புகள் தற்கொலை செய்து கொள்ளுமா? இருக்கலாம். தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று என்ன நிச்சயம். இந்தக் குழப்பங்கள் ரமேஷ் பிரேமின் கவிதைகள் முழுவதுமாக உண்டு.
இந்த அனுபவம்த்திற்காகத்தான் கவிதையைத் தேடும் கையில் ஒரு தீக்குச்சியோடு கவிதையின் பெரும் வனத்தின் இருளுக்குள் வாசகன் அலைந்து கொண்டிருக்கிறான் என்று நான் சொல்வேன்.

கவிதையைப் பற்றி எழுதும் போது எழுதுபவன் முக்கியமாகச் செய்ய வேண்டியது எந்த‌ இடத்திலும் அவன் என்ன அந்தக் கவிதையில் புரிந்து கொண்டான் என்று சொல்லாமல் இருப்பது. அது வாசகனுக்கான களம். அவன் புரிந்து கொள்ளுதலில்தான் அந்தக் கவிதைக்கும் வாசகனுக்குமான உறவு அமைகிறது. இந்த அடிப்படையை முந்தைய பத்தியில் மீறுவதற்கான சரியான காரணத்தை சொல்லத் தெரியவில்லையென்றாலும் உப்பு போன்ற தொகுப்பில் அதைச் செய்வது பெரிய தவறாகத் தோன்றவில்லை.

எளிமையான கவிதைகள் எனக்கு வெகுவாக பிடிக்கின்றன‌. எந்தச் சிக்கலும் இல்லாமல் காட்சிப்படுத்தும் கவிதைகள், சொற்களைத் திருகாத, வாசகனை குழம்பச் செய்யாத கவிதைகள் என்று இவைகளைச் சொன்னாலும், சிக்கலான கவிதைகளும் பிடிக்கின்றன. சிக்கலோ, எளிமையோ பிடிப்பது என்று சொல்வது “கவிதைகளை” மட்டும் தான்.
திருகலான, எளிமையான என இரண்டு வகையான கவிதைகளும் விரவிக்கிடக்கும் இந்த தொகுப்பில் சில கவிதை வரிகளை சுட்டிக் காட்ட வேண்டும். மேலும் கவிதைப் புத்தகத்தை பற்றி எழுதும் போது , ப‌ல கவிதைகளை சில பத்திகளுக்கூடாக செருகி விடுவதுதான் தமிழ் கூறும் நல்லுலகின் மரபும் வழக்கமும்.

மிக எளிமையான கவிதையொன்று

கனவில் வந்த அப்பா
நான் அதிகமாகக் குடிப்பதாகக்
குறைபட்டுக் கொண்டார்
தனக்கு சாராயம் வைத்துப்
படையலிடாததையும் நாசூக்காகச்
சொல்லிவிட்டுப் போனார்

எளிமையான அதேசமயம் மிக நுணுக்கமான கவிதை இது. தமிழ்ச் சமூகத்தில் தந்தைக்கும் மகனுக்குமான உறவு கொண்டிருக்கும் பரிமாணங்கள் நுட்பமானவை. அப்பாவோடு சேர்ந்து ‘பியர்’ குடிக்கும் ஒரு வகை, எதிரில் அமர்வதற்குக் கூட தயங்கும் ஒரு வகை, சால்னா கடையில் இருந்து அப்பாவை தூக்கி வரும் வகை. தந்தை மகன் உறவினை மையமாக்கிய, பரவலாக பேசப்பட்ட(தமிழ்க் கவிதையில் ‘பரவலாக பேசப்படுவது’ என்பது ஓரிரண்டு கட்டுரைகளில் சுட்டிக்காட்டப்படுவை. தமிழ் படிக்கத் தெரிந்த எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைத்தால் அதற்கு யாரும் பொறுப்பல்ல) கவிதைகளை எண்ணிவிட முடியும்.

இந்தக் கவிதை கொண்டு வரும் காட்சியும், அதில் தந்தை மகனுக்குமான உறவின் அடிப்படையும், இந்தச் சமூகத்தில் இந்தக் குடும்பம் எப்படியிருந்திருக்கும் என்ற பெரும்பான்மையான கேள்விகளுக்கு இந்தக் கவிதையின் ஐந்து வரிகள் துல்லியமாக பதிலைக் கொண்டு வந்துவிடலாம்.

கவிதைகள் ஒவ்வொன்றாக எழுதி அதைப் பற்றி நான்கு வரிகளைச் சொல்லி இதுதான் ‘உப்பு’ என்ற வடிவத்தில் எழுதிவிடக்கூடாது என்ற வைராக்கியம் இருந்தாலும் பாழாய்ப்போன மனம் அப்படித்தான் போகும் போலிருக்கிறது.

பொதுவாக நான் இந்தக் கவிதைகளை வாசித்த‌ வரையில் சொன்னால், ஸுடோக்கூ போன்றது இந்தக் கவிதை தொகுப்பு. கொஞ்சம் யோசிக்க வேண்டும், சொற்களையும் வரிகளையும் பொருத்த வேண்டும், வாசிப்பவனின் வாழ்வின் ஒரு அனுபவத்தோடோ அல்லது காட்சியோடோ கவிதையை இணைக்க வேண்டும். மிகச் சிறந்த கவிதானுபவம் கிடைக்க இதுதான் இந்தத் தொகுப்பின் சூட்சமம்,

இந்த மழை எனக்கு வேண்டாம்
விருப்பம் இருந்தால் எனது
சமாதி மீது பொழியட்டும்.

வாழ்வின் கசகசப்பும், தீராத வன்மமும் கசடுகளாக கவிதையின் வடிவங்களில் திரிந்து கொண்டிருக்கும் இந்தத் தொகுப்பிலிருந்து, வலிகள் கவிதைகளாக கசிந்து கொண்டிருக்கின்றன. இந்த வலிகளை கொண்டாட்டங்களாக மாற்றிவிடும் பெரும் வித்தைக் காரர்கள் ரமேஷ் பிரேம் என்பது எனக்குள் உண்டாகியிருக்கும் பிம்பம்.

வாழ்க்கையின் வலிகளையும், துக்கங்களையும் பாட எனக்குக் கவிஞன் தேவையில்லை. என் அமத்தா அவற்றை சொல்லிவிடக்கூடும் கண் கசக்கலிலும், அழுத பின் சிந்தும் மூக்குச் சளியிலும்.

என்னைப் போலவே துக்கங்களை அனுபவித்த கவிஞன், என்னைப் போலவே துயரங்களில் கசங்கிய கவிஞன், அந்தத் துயரங்களை சொற்களின் கொண்டாட்டமாக மாற்றித் தருவான், அந்தக் கொண்டாட்டத்தின் கண்ணீர்க் கசிவில் என் வாழ்வின் துளிகளைக் கண்டறிவேன். அந்தக் கணம் நான் அந்தக் கவிதைகளைக் கொண்டாடுவேன்.

இந்தக் கணம் நான் ‘உப்பு’ கவிதைகளைக் கொண்டாடுகிறேன்.

தொகுப்பில் உள்ள மேலும் இரண்டு கவிதைகள்:

ஒவ்வொரு தீக்குச்சிகளாக உரசி
விரல்கள் சுடும்வரை எரியவிடுவது
சிறுவயதிலிருந்து பழக்கம்

அபூர்வமாக சில சமயம்
எரியும் சுடரில்
யாரோ பார்ப்பது தெரியும்

முகமற்ற பார்வை

========
கவிதைக்குள் வராத
எந்தவொன்றும் உலகில் இல்லை

உன்னை நான்
முத்தமிட்டு உயிர்பெற்ற‌
எனது காலத்தின்
முதற்கணத்தை தவிர.

குறிப்பு 1: இந்தத் தொகுப்பில் குறை எதுவுமில்லையா என்று கேட்டால் என் பதில் இருக்கிறது. ஏன் சொல்லவில்லை என்றால் சொல்லத் தேவையில்லை என்று தோன்றியது.

குறிப்பு 2: தமிழ் நாட்டின் கலக எழுத்தாளரின் படைப்புகள் எல்லாம் ரமேஷ் பிரேமின் கைங்கரியம் என்று எழுத்தாளர் மாலதி மைத்ரி தனது வலைப்பதிவில்(பார்வை – மீள் பார்வை) எழுதியிருக்கிறார்.

vaamanikandan@gmail.com

Series Navigation

வா.மணிகண்டன்

வா.மணிகண்டன்