யுவனின் பகடையாட்டம்

This entry is part [part not set] of 33 in the series 20100919_Issue

புதியமாதவி.


—————————

யுவன் சந்திரசேகரின் இரண்டாவது புதினம் பகடையாட்டம்.
குள்ளச்சித்தன் சரித்திரம் வாசித்தப்பின் பகைடையாட்டத்தை வாசிக்கும் போது
இந்த நாவலில் காய்நகர்த்துவது எழுத்தாளன் மட்டுமல்ல சரிசமமாக வாசகனும்
காய்களை வெட்டியும் நகர்த்தியும் ஆட வைக்கும் வித்தை ஒவ்வொரு வாசகனுக்கும்
ஓரு புதிய அனுபவம்.

புதினத்திற்கு வேண்டிய பெரும்பான்மையான உத்திகளை எடுத்துக்கொண்டு
காய்நகர்த்துகிறார் யுவன். புதிய தேசம், அது கற்பனை உலகம்.
கதை மாந்தர்கள் ஐரோப்பிய அகதி முதல் கறுப்பின லும்பா வரை.
இந்தியாவுக்கு தப்பி வந்த திபேத்திய இளம் சந்நியாசி பற்றிய உண்மைச் செய்தி,
கற்பனத் தேசத்தை பற்றிய விவரங்களுக்கு தினத்தாளின் ஞாயிறு இணைப்பு
என்ற The Newsman அத்தியாயம், ஆங்காங்கே கவிதைகளின் இணைப்பு,
உலக யுத்தமும் அதைச் சார்ந்தச் செய்திகளின் பின்புலமும்,
வடமொழியில் சூரிய வழிபாட்டைப் பற்றிய கவிதை வரிகளின் உத்தியையும்
பாரதியின் வசனக்கவிதையையும் சேர்த்துக் கலந்து ஐம்பூதங்களையும்
வாழ்த்தும் வரிகள் ஒரு தனி அத்தியாயமாக.. இப்படியாக பகடையாட்டத்தின்
காய்களை நகர்த்தி இருக்கிறார் யுவன்.
யுவனே சொல்வது போல ” புனைகதைகளின் உயிர் அதன் சாரத்திலில்லை,
உருவத்தில் தான் இருக்கிறது என்று எனக்கு நம்பிக்கை” என்பதற்கான
சோதனை முயற்சிகள் அனைத்தையும் பகடையாட்டத்தில் செய்திருக்கிறாரோ
என்று எண்ணத் தோன்றுகிறது.

சமூகவியலும் தனிமனித இயல்புகளும்
—————————————–

போரும் வீரமும் போர்க்களமும் வீரமரணமும் காலம் காலமாய்ப் போற்றப்பட்டு
இன்றுவரை சமூகம் கொண்டாடும் செயல்களாக மனித வாழ்வியலில்
புகுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் எப்போதும் தனிமனித உணர்வுகள்
பாதிக்கப்படும் போது இரண்டுக்குமான முரண் வெளிப்படுகிறது.
இந்த முரண்பாடுகளை மிகவும் நேர்த்தியாக முன்வைக்கிறது யுவனின்
பகடையாட்டம். இராணுவத்திலிருந்து காலிழந்து வெளியே வந்துவிட்ட
நிலையில் நானாவதியும் அதே இராணுவத்தில் தொடர்ந்து பணியிலிருக்கும்
கேப்டன் கிருஷும் பேசிக்கொள்ளும் உரையாடல் பகுதியும் வெய்ஸ்முல்லரை
தூக்கத்தில் கொலை செய்ய நினைத்த லும்பாவின் மனநிலையும்
அதை அவன் மாற்றிக்கொள்ளும் தருணமும்.

நானாவதி போர்வீரர்கள் போரில் சாவதைப் பற்றிச் சொல்லும் போது
“தாங்கள் எதற்காக சாகிறொம் என்பது கடைசிவரைத் தெரியாது. சம்பளம்
வாங்கினோம் அதனால் சாகிறோம், என்னவொரு அபத்தம்.. வாழ்வதற்காகச்
சம்பாதிக்கிறீர்கள், சம்பாதித்தால் சாகிறீர்கள், அபத்தம் தான்’ என்று சொல்வதைக்
குறிப்பிடலாம். ஆனால் கதைப் போக்கில் இந்த வரிகள் எவ்விதமான அழுத்தத்தையும்
எற்படுத்தாமல் போய்விடுகின்றன.

சொற்கள் ஆடும் பகடையாட்டம்
———————————–

வண்ணங்களையும் கோடுகளையும் தன் ஓவியங்களுக்காகப் கையாளும்
ஓவியனைப் போலவே எழுத்தாளனுக்கு அவன் சொற்கள்.
ஓவியத்தில் கோடுகளும் வண்ணங்களும் காணாமல் போய்விடுகின்றன.
அந்த ஓவியம் மட்டுமே நம் பார்வையில் பதிகிறது. ஒன்று மற்றொன்றாகும்போது
அந்த ஒன்று காணாமல் போய்விடுகிற ரசவாதம் கலை.
புதினங்களில் சொற்களைக் கொண்டு தன் கதைப்பாத்திரங்களுக்கு
உயிரூட்டுகிறான் எழுத்தாளன். இங்கே சொற்கள் கதை மாந்தருக்குள்
கரைந்துவிடுகின்றன.
பார்த்தசாரதியின் குறிஞ்சிமலரில் வரும் அரவிந்தன் பொன்மொழிகள் முதல்
காண்டேகரின் கிரவுஞ்சவதத்தில் வரும் தீலிபனின் பொன்மொழிகள் வரை
.. இப்படியாக எழுத்தாளரின் மொழியாளுமை அவன் கதைமாந்தர்களின்
முகத்தை , உணர்வுகளை, கதைத் தளத்தை ரொம்பவும் துல்லியமாகவும்
வாசகனுக்கும் மிகவும் நெருக்கமாக்குவதாகவும் அமைத்து வாசகனுக்கும்
எழுத்தாளனின் கதை மாந்தருக்குமான உறவைப் பலப்படுத்துகிறது.
இதுவே எழுத்தாளனின் எழுத்தாளுமையாக வாசகன் மனசில் பதிந்துவிடுகிறது.

ஜெயமோகனின் நீலி மட்டுமல்ல, காடும் ஒரு கதைப்பாத்திரமாக மாறுகின்ற
அற்புதத்தை ஜெயமோகனின் காடு படைத்திருக்கிறது. மராத்திய இலக்கியத்தில்
மும்பையின் காட்டன் மில்களின் வேலைப்பார்க்கும் தொழிலாளர்கள் குடியிருக்கும்
பகுதி ஆலைகளுக்கு அருகிலேயே இருந்தது. அங்கிருந்து வந்துகொண்டிருக்கும்
அணையாத சிம்னியின் புகை மராத்திய இலக்கியங்களில் சிம்னியை ஒரு
கதைப்பாத்திரமாக்கி இருப்பதைக் காணலாம். இதற்கெல்லாம் துணையாக இருந்தது
அந்தந்த எழுத்தாளனின் மொழியாளுமைதான். ஆனால் இதுவரை எனக்கிருந்த
இம்மாதிரியான வாசிப்பு அனுபவத்திலிருந்து சற்று வேறுபட்டதாக இருந்தது
யுவன் சந்திரசேகர் எழுதியிருக்கும் பகடையாட்டம் நாவல்.
அவருடைய முதல்நாவல் ‘குள்ளச்சித்தன் சரித்திரம் வாசித்துவிட்டு
இரண்டாவதாக இந்த நாவலை வாசித்தப் பின் முதல் நாவலைவிட இரண்டாவது
நாவலான பகடையாட்டத்தில் தூக்கலாக தெரிந்த மொழியாளுமை
என்னை மிரளவைத்தது.
வாசிக்கும் போதே அந்த வரிகள் நம்மை நீண்ட தூரம் பயணிக்க வைத்தது.
ஆனால் அந்தப் பயணம் யுவனின் கதை மாந்தர்களையும் கதைத் தளத்தையும்
தாண்டி இன்னொரு தளத்துக்குள் இழுத்துச் சென்ற அனுபவம் கொஞ்சம்
விசித்திரமான அனுபவமாக இருந்தது.
யுவனின் கதையுலகிலிருந்து அவருடைய மொழியாளுமை இழுத்துச்செல்லும்
பெருவெளி …
ஏன் இப்படி … எது இந்த வசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது?

* ஒரு நட்சத்திரத்துக்கும் இன்னொன்றுக்கும் உள்ள அதே அளவு இடைவெளி
ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடையிலும் இருக்கிறது.

இந்த வரிகள் கதையில் இடம்பெறுமிடம் ரொம்பவும் எளிதாக எல்லோரும்
புரிந்து கொள்ளும் இரு கதை மாந்தர்களுக்கான இடைவெளியைக் காட்ட
சொல்லப்படும் வரிகள். அதுவும் இருவரும் கதைப்போக்கில் எதிரெதிர்
தளத்தில் நிற்கும் கதை மாந்தர்கள். ஒருவன் அந்தச் சிறுவன், சோமிட்ஸியவின்
அரசன், இன்னொருவன் ஈனோங்கிழவன்.
சினிமாக்களில் கூட கதாநாயகனும் வில்லனுக்கும் இடையில் இருக்கும்
இடைவெளி பூதகரமானதாகவே காட்டப்படும். இப்படியாக ஒரு வலுவான
மொழியாளுமை ரொம்பவும் சாதாரணமான செய்தியைப் பதிவு செய்ய
கையாளப்பட்டிருப்பதால் சொல்லப்பட்ட இடமும் கதைமாந்தர்களும்
மங்கலாகி அந்த சொற்கள் மட்டுமே வாசகனை வேறு எங்கோ இழுத்துச்
செல்லும் வித்தையை செய்துவிடுகிறது.

பழைய கள்ளும் புதிய லேபுளும்
———————————–
சிறுவனுக்கும் வாலிபனுக்கும் இடைப்பட்ட வயதில் ஓர் ஆண்மகனுக்கு
ஏற்படும் மனக்கிலேசம் என்பது பலர் பலவிதமாக சொன்னதுதான்.
தாயின் வாசம் மறந்து அவன் இன்னொரு பெண்ணின் வாசத்தை நோக்கி
நகரும் பருவம். அந்த தருணத்தை உணர்த்தும் யுவனின் எழுத்துகளில்
புதிய ‘கிக்’ இருக்கத்தான் செய்கிறது. மற்றவர்கள் சொன்னதைத் தன்னால்
எப்படி இன்னொரு விதமாகச் சொல்லமுடியும் என்று சொல்லும் போது
யுவனின் எழுத்து தனித்து நிற்கிறது.

அகதியாய் நிற்கும் ஐம்பூதங்கள்
————————————–
வாங்யே பிரபுவும் வெய்ஸ்முல்லரும் சந்திப்பு நிகழ்வுக்குப் பின் வரும்
“பூர்வ கிரந்தம் 6” ஐம்பூதங்களின் வழிபாட்டை முன்வைக்கும் கவிதைகள்.
ஸோமிட்ஸிய பூர்வ கிரந்தங்கள் பஞ்ச பூதங்களை வழிபடும்
மதாசாரத்தை முன்னிறுத்தும் நூல் என்று ஆரம்பத்தில்
(the newsman அத்தியாயத்தில்) சொல்லியாகிவிட்டது.
எந்த வகையிலும் கதையோடு ஒட்டாத ஒரு பகுதி. கற்பனைத்தேசத்தின்
பூர்வகிரந்தங்களில் இருந்த வழிபாட்டு நம்பிக்கைகள் என்ற ஊகத்தை
வாசகன் வலிந்து ஏற்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது அத்தியாயத்தின்
தலைப்பை வைத்துக்கொண்டு.. இந்தப்
பூர்வகிரந்தம் கற்பனைத் தேசத்தைப் பற்றிய வர்ணனைக்குப் பின்
வரும் அத்தியாயமாக இருந்திருந்தால் ஒருவேலை வாசகனுக்கு
மிரட்சி ஏற்படாமல் இருந்திருக்குமோ ?
கதையில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் என்னால் கண்ணிகளைத்
தொடுக்க முடியும் என்று உத்திகளைக் கையாள்வது வாசகனைப்
பக்கங்களைப் புரட்டிச் செல்லும் (skipping the pages) தளத்துக்குள் தள்ளிவிடும்
அபாயம் உண்டு.

கிரந்தங்களை வீழ்த்தும் காய்கள்
——————————–

* குரூரச் சதுரங்கத்தில் உயிருள்ள ஒரு காயாக இறங்கியாகிவிட்டது.
ஆட்டவிதிகளின்படி, இயக்கும் கைக்கு ஆட்பட வேண்டுயதுதான். சதுரங்க
காய்களுக்குச் சுயசிந்தனை கூடாது என்பது முதல்பாடம்.

*முகமற்ற பரிவென உணர்வின் அடியாழங்களில் வண்டலாகப் படிந்திருந்த
அம்மாவின் பிம்பத்தை முற்றாக இடம் பெயர்த்துவிட்டது புதிய பிம்பம்.
… அந்தப் பிம்பத்தின் மடியில் படுத்துக் கொள்வதற்கு அல்ல, வெளிவந்த
வழியாகவே கருப்பைக்குள் நுழைந்துவிட வேண்டும் என்று பல்வேறு மார்க்கங்களைப்
பரிசோதித்துக் கொண்டிருந்தான்……
அன்றி திறந்து கொண்ட உடல் இன்னமும் மூடவில்லை.

*பிரபஞ்சத்தின் உடம்பிலிருந்து ஒரு மணல் துகளை அகற்றிவிட்டாலும்
போதும், பிறகு அது பழைய பிரபஞ்சமாவதில்லை.

*இப்போது வரையிலான எல்லா தருணங்களையும் இழந்து இழந்துதான்
இந்தத் தருணத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறேன்.

*மழை ஓயந்தப் பிறகுதான் தெரியும், குடையை யார் முதலில் மடக்குகிறார்கள்
என்று.

*காய்களை வெட்டாமலும் டெட்டுக்கொடுக்காமலும் சதுரங்கம் ஆடுவது எப்படி?

ஊசலாடும் உயிர்
——————

“சொல்லித் தீர்ந்துவிட்டன எல்லாக் கதைகளும். மறுகூறலுக்குத் தேர்ந்தெடுக்கப்படும்
புனைவு, சொல்லலின் நூதனத்தில் மட்டுமே தன் உயிரை வைத்திருக்கிறது ”
யுவனின் புனைகதைகள் பற்றிய பிரகடனம் இது.
நூதனமாகச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.
ஆனால் அந்த நூதன முறை எந்தளவுக்கு அந்தப் புனைவின் உயிரோட்டமாக
கலந்திருக்கிறது என்பது தான் பகடையாட்டத்தில் பன்முக வாசிப்புக்குப் பின்னும்
வாசகன் முன் எழுந்து நிற்கும் கேள்வி.,

ஸோமிட்ஸிய பூர்வ கிரந்தம்
—————————-

“ஆட்டங்கள், எதிர் ஆட்டங்கள், பிறழ் ஆட்டங்கள் என, பூமித்தலத்தின்
பொழுதுகள் மெல்ல மெல்ல நிரம்பின” புனைவுகளின் பூமியில்
மாறி மாறி வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் ..

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை