யாழ்ப்பாணத்துத்தமிழ் -மொழி- இலக்கியம்- பண்பாடு

This entry is part 35 of 38 in the series 20100523_Issue

தி.மயூரகிரி



தமிழர்கள் மிகப்புராதன காலம் தொட்டு வாழும் மண் இலங்கை எனப்படும் ஈழத்திருநாடு.
இந்நாடு மேலைநாட்டு அறிஞர்கள் கூறுவது போல “இலெமூரியா” (டுநஅரசயை) கண்டப்பிரதேசமாக தமிழ்நாட்டோடு இணைந்திருக்கலாம்.
“பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள”
என்று சிலப்பதிகாரம் கூறுவதாலும் இந்த இலங்கையில் தமிழ்மொழியும் பண்பாடும் வளர்ச்சி பெற்றுத் திகழ்வதாலும் இந்நாடு பண்டைக்கால கடல்கோள் அனர்த்தத்தால் பிளவுபட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
எவ்வாறாகிலும் ஈழம் என்று தமிழரால் சிறப்பிக்கப்படும் இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களிலும் மலையகத்திலும் மற்றுமுள பகுதிகளிலும் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழ்வதையும் தம் மொழி பண்பாட்டைப் பேணுவதையும் இன்றும் காணமுடிகின்றது.இந்த வகையில் இலங்கையின் வடபகுதியிலுள்ள ‘யாழ்ப்பாணம் தமிழ் வளர்ச்சியில் பழைய காலம் தொடக்கம் ஆழமான ஈடுபாடுள்ள தமிழ்ப்பிராந்தியமாக இருக்கிறது.
யாழ்ப்பாணம் என்ற பெயர் இப்பிராந்தியத்திற்கு வரக்காரணமாக பல கதைகள் கூறப்படுகின்றன. எனினும் யாழ் என்பது இன்று வழக்கில் இல்லாத பழந்தமிழ் இசைக்கருவி என்பதாலும் யாழ்ப்பாணம் தமிழர் தம் பண்பாட்டுப் பூமி என்பது இதனால் விளங்கும்.
கி.பி 1216ல் உருவான யாழ்ப்பாணத் தமிழ் அரசு கி.பி 1621ல் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் வரை சுமார் நானூறாண்டுகளுக்கு மேலாக சுதந்திர அரசாக விளங்கியிருக்கிநது. இக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட பரராசசேகரன் என்ற மன்னன் ஒரு தமிழ்ச்சங்கத்தை நிறுவித் தமிழ் வளர்த்ததாகவும் அறிய முடிகின்றது. இக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இரகுவம்சம்இ பரராசசேகரன்உலாஇ வியாக்கிரபாதபுராணம்இ வையாபாடல்இ கைலாயமாலைஇ இராசமுறைஇ செகராசசேகரமாலைஇ செகராசசேகரம்இ பரராசசேகரம்இ போன்றனவும் கதிரைமலைப்பள்ளு என்ற பள்ளு இலக்கியமும் கண்ணகி வழக்குரை காதை போன்ற நாட்டார் இலக்கியங்களும் தோற்றம் பெற்றுள்ளன. போர்த்துக்கேய ஒல்லாந்தரின் ஆட்சியின் கீழ் இப்பகுதி இருந்தபோதும் மூடுகூட ஞானப்பள்ளுஇ திருச்செல்வர்அம்மானைஇ அர்ச்.யாகப்பர் அம்மானைஇ கஞ்சன்அம்மானைஇ பறாளாய்விநாயகர்பள்ளுஇ முதலிய பொதுமக்கட் சார்பு இலக்கியங்கள் தோன்றியுள்ளன.
இது போலவே தூது, காவியம், புராணம், நாடகம், போன்ற பல இலக்கிய வடிவங்களும் தோற்றம் பெற்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலங்கை பிரித்தானியரின் ஆளுகைக்கு உட்பட்டது. இக்காலத்திலேயே யாழ்ப்பாணத்து நல்லூரில்; ஆறுமுகநாவலர் பிறந்தார். இக்காலம் அச்சியந்திரம் அறிமுகமான காலம். எனவே பழைய இலக்கிய போக்கு முற்றுப் பெற்று புத்திலக்கியங்கள் உருவாகத் தொடங்கிய காலம். இக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் அதிகளவான புலவர்கள் தோன்றி தமிழ்ப்பணியாற்றினர்.
இதனால் தமிழிலக்கிய வரலாற்றிலேயே யாழ்ப்பாணத்தாருக்குரிய காலமாகப் பதிவு செய்யக்கூடியதாக அமைந்துள்ளது, தமிழ்நூற் பதிப்பிற்குக் சிறப்புச்சேர்த்தவராக ஆறுமுகநாவலரைப் (1822-1879) போற்றுவர். இற்றைக்கு சுமார் இருநூறாண்டுகளுக்கு முன்னரே ஐம்பதிற்கு மேற்பட்;ட இலக்கண இலக்கிய நூல்களை நாவலனார் பதிப்பித்துள்ளார். பழந்தமிழ் நூல்களுக்கு வசன வடிவம் கொடுத்து சாதாரண மக்களும் அறியும் வண்ணம் செய்தமையால் இவர் ‘வசன நடை கைவந்த வல்லாளர்’ என்று போற்றப்படுகிறார்.
நாவலரின் வழி வந்தவர் சி.வை.தாமோதரம்பிள்ளை (1832-1901). இவரே கற்றார் ஏத்தும் கலித்தொகையையும் சூளாமணியையும் கவினுறப் பதிப்பித்து டாக்டர் .உ.வே.சாமிநாதனாருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தார். இவரைப் போலவே ச.தம்பிமுத்துப்பிள்ளை(1857-1934) ச.வைத்திலிங்கம்பிள்ளை(1843-1900) மு.கார்த்திகேசஐயர்(1819-1898) ஆகியோரும் தமிழ் பதிப்புத்துறையில் முன்னோடிகளாக இருந்தனர்.
ஆங்கில-தமிழ் அகராதி முதன்முதலில் யாழ்ப்பாணம் அமெரிக்கமிஷனால் 1842ல் பதிப்பிக்கப்பட்டது. சதாவதானி நா.கதிரைவேலனார் (1874-1907) யாழ்ப்பாணப்பேரகராதியை தொகுத்துப் பெருமை பெற்றார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சேர்.பொன்னம்பலம் இராமநாதன்(1851-1930) ஸ்ரீமத் பகவத்கீதைக்கு சைவசித்தாந்த விளக்கவுரை கண்டார். சுவாமி ஞானப்பிரகாசர்(1875-1947) என்பவர் “தமிழ்ச் சொற்பிறப்பியல் அகராதி” ஆக்கினார்.
இக்காலத்தில் அச்சியந்திரத்தின் பயனாக யாழ்ப்பாணத்தில் பல பத்திரிகைகள் தோற்றம் பெற்றன. இவற்றில் உதயதாரகை(1841)இ இந்துசாதனம்(1889)இ பாதுகாவலன்(1876) ஆகியன இன்று வரை(2010) வெளிவந்து சரித்திரம் படைக்கின்றன. இக்காலத்தவரான சைமன் காசிச்செட்டி என்பார் முதன்முதலாக ‘தமிழ்புலவர் சரித்திரம்’ எழுதியுள்ளார்.

இவை இவ்வாறிருக்க “புராணம்” என்ற பெயரிலேயே யாழ்ப்பாணத்தார் அக்காலத்தில் பலபுதுமைகள் செய்தனர். இங்கு இக்காலகட்டத்தில் உருவான ‘கோட்டுபுராணம்’ அக்கால ஆங்கிலேய நீதிமன்றங்களில் நடைபெற்ற தில்லுமுள்ளுகளை நகைச்சுவையோடு கவிதை நடையில் சொல்கிறது.; உதாரணமாக இப்புராணத்திலிருந்து
“ஆனைக்கோட்டை இராமலிங்கம் அப்புக்காத்துக் கூலரும்
சேனைத்தலைவராகி நின்ற சிறந்த கோட்டுச் சுப்பரும்
பூனை நாக முத்தரும் புழுகு கந்தப்பிள்ளையும்
ஏனையோரும் பட்ட பாடு இயம்புதற்கு இல்லையே” என்ற பாடலைக் கருத்தில் கொள்ளலாம்.
இக்காலத்தில் இங்கு தோன்றிய “தாலபுராணம்” என்பது பனைமரத்தின் பெருமை பேசுகிறது. கனகிபுராணம் என்பது கனகி என்ற விலைமகளைத் தலைவியாகக் கொண்டு பிரபுக்களின் இழிவைக் கூறுவதாக அங்கதச்சுவையோடு அமைந்துள்ளது.
இப்புராணத்தின் அமைப்பை
“நடந்தாள் ஒருகன்னி மாராசகேசரி நாட்டில் கொங்கைக்
குடம் தானசைய ஒயிலாய் அது கண்டு கொற்றவரும்
தோடர்ந்தார் சந்நியாசிகள் யோகம் விட்டார் சுத்தசைவரெல்லாம்
மடம் தானடைத்துச் சிவபூசையும் கட்டி வைத்தனரே”
என்ற பாடலினூடு அறியலாம். இவ்வாறான புராணங்களின் எழுச்சி தமிழ் இலக்கிய வரலாற்றில் புதியதொரு மரபிற்கு வழிவகுத்தது எனலாம்.
1892இல் தி.த.சரவணமுத்துப்பிள்ளை என்பவர் ‘தத்தைவிடு தூது’ என்றொரு இலக்கியம் படைத்துள்ளார். பெண்ணுரிமையை கடுமையாக வலியுறுத்தும் இலக்கியமாக இது திகழ்கிறது. இவர் பாரதிக்கு காலத்தால் முந்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது, யாழ்ப்பாணத்தில் ‘தொல்காப்பியக்கடல்’.சி.கணேசையர்(1878-1958) தொல்காப்பிய உரைகளை நன்கு பதிப்பித்துச் சிறப்புப் பெற்றார். இவரது பணிகளை தவத்திரு.குன்றக்குடி அடிகளார் போன்றோர் பெரிதும் போற்றினர்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் முதலாக யாழ்ப்பாணத்தில் நன்னூல் வழி நின்று கடுமையான இலக்கணமரபில் இலக்கியங்கள் ஆக்குவதலிருந்து சிறிது புதுமை நிலையாக சிறுகதைஇ நாவல்இ புதுக்கவிதை போன்ற இலக்கிய வடிவங்கள் தோன்றி வளரலாயின. சுp.வை. சின்னப்பப்பிள்ளை 1905ல் எழுதிய ‘வீரசிங்கன் கதை’யுடன் இலங்கையில் தமிழ்நாவல் இலக்கியம் ஆரம்பமானது.
யாழ்ப்பாணக்களத்தில் இக்காலம் முதலாக பல்வேறு நாவல்இ சிறுகதை இலக்கியங்கள் தோற்றம் பெறலாயின. சிறுகதைகளை ஆரம்பத்தில் இலங்கையர்கோன்இ சி.வைத்தியலிங்கம்இ சம்பந்தன் போன்றோர் எழுதினர். இவர்களின் எழுத்துக்களில் தமிழக எழுத்தாளரான கு.ப.ராஜகோபாலனின் சிறுகதைகளின் தாக்கத்தை அவதானிக்கலாம.; அடுத்து வந்த 1950-1960 காலப்பரப்பில் சிறுகதைகளில் மரபுமீறப்படலாமா? ஏன்கிற கேள்வியோடு சிறுகதை எழுத்தாளர்கள் பிரிந்து நின்று தம்வாதத்திற்கு ஏற்ற வகையில் சிறுகதைகளை அமைத்தனர்.
மரபு மீறக்கூடாது என்ற அணியில் பேராசிரியர்.ஆ.சதாசிவம் தலைமையில் இருந்தோர் “எழுத்துவழக்கே சான்றோர் வழக்கு. சான்றோர் வழக்கே இலக்கிய வழக்கு. ஏனையவை இழிசனர் வழக்கு” என்றனர். மரபுகள் மீறப்படலாம் என்ற அணியில் பேராசிரியர் கைலாசபதி தலைமையில் இணைந்தோர் “பேச்சு வழக்கே முதலில் இருந்தது. ஆதன் பின்பே எழுத்து வழக்குத் தோன்றியது. எனவே இலக்கிய வழக்கில் பேச்சு மொழியைக் கையாளலாம்” என்றனர். மரபு தெரிந்தவர்கள் மரபை மீறலாம் என்ற அணியில் பேராசிரியர்.சு.வித்தியானந்தன் தலைமையில் இணைந்தோர் “ஒன்றை நன்றாகத் தெரிந்து புரிந்து தெளிந்து கொண்டவர்களாலேயே அதனை மீறவும் முடியும்” என்று வாதித்தனர்.
இந்நிலைகள் இவ்வாறே இருக்க. சாதீயச்சிக்கல்கள் தலைதூக்கின. தாழ்த்தப்பட்டோருக்காக ஆலயங்கள் திறந்து விடப்படவேண்டும் என்ற வகையில் பல போராட்டங்கள் நடந்தன. இது சார்ந்தும் பல சிறுகதைகள் தோன்றின. 1965ற்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட இனமுரண்பாடு காரணமாக புத்திலக்கியம் யாவும் அதனை பொருளாகக் கொள்ளத் தலைப்பட்டன. ஆகஇ குறிப்பிடத்தக்கோராக யாழ்ப்பாணத்தின் சிறுகதைத்துறையில் வரதர்இ அ.செ.முருகானந்தம்இ டானியல்இ; டொமினிக்ஜீவாஇ சு.வேலுப்பிள்ளைஇ செங்கையாழியான்இ தெணியானஇ; நந்திஇ ஞானசேகரன்இ; பஞ்சாட்சரசர்மாஇ குந்தவைஇ சட்டநாதன்;இ சோ.பஇ சி.யோகேஸ்வரி போன்றோரைக் குறிப்பிடலாம்.
இவற்றுடன் யாழ்ப்பாணத்தமிழ் புதுக்கவிதை வளர்ச்சி பற்றியும் சிறிது சிந்திக்க வேண்டும். இங்கு புதுக்கவிதை படைத்தோருள் முதன்மையானவர் “மஹாகவி” என்ற புனை பெயரில் எழுதிய உருத்திரமூர்த்தி ஆவார்.
‘இன்னவைதாம் கவிதை எழுத ஏற்றபொருள் என்று பிறர்
சோன்னவற்றை நீர் திருப்பிச் சொல்லாதீர்! சோலை கடல்
மின்னல் முகில் தென்றலினை மறவுங்கள்! மீந்திருக்கும்
இன்னல் உழைப்பு ஏழ்மை உயர்வு என்பவற்றைப் பாடுங்கள்’
என்று இவர் பிரகடனம் செயது கவிதைகளை யாத்திருக்கிறார்.
நீர்வை முருகையன்இ க.சச்சிதானந்தன்இ பார்வதிநாதசிவமஇ; கல்வயல்.வே.குமாரசாமிஇ வரதர்இ; போன்ற இன்னும் பலரும் கவிதைகளை யாத்தனர். நவாலியூர். சோமசுந்தரப் புலவரால் பல சிறுவர் பாடல்கள் எழுதப்பட்டன. இதற்கு உதாரணமாக கீழ்வரும்
‘ஆடிப்பிறப்பிந்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே
கூடிப்பனங்கட்டி கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே’ போன்ற அவரது பாடல்களினூடாகக் காணலாம். அன்றைய காலத்தில் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் ஆடிப்பிறப்பைக் கூழ் காச்சி ஒருபண்டிகையாகக் கொண்டாடினர் என்பதும் அதை இலங்கை அரசு விடுமுறையாக அறிவித்திருந்தது என்பதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
கூத்து எனப்படும் நாடகமரபும் யாழ்ப்பாணத்தில் சிறப்புப் பெற்றுள்ளது, வசந்தன்கூத்துஇ காத்தவராயன்கூத்து போன்றன பழங்காலம் தொட்டு யாழ்ப்பாணத்தில் பக்தி பூர்வமான சடங்காக ஆடப்பட்டு வருகின்றன. காலத்திற்குக் காலம் நாடகங்களும் உருவாக்கப்பட்டு ஆடப்பட்டன. தமிழ்நாட்டுத் தமிழ்த்திரைப்படங்களின் வருகையோட நாடகம் தன் செல்வாக்கிழந்தது. எனவே இவற்றை அழியாது பாதுகாக்கும் நோக்கில் பல்கலைக்கழகப் பேராசிரியர்களான க.கணபதிப்பிள்ளைஇ வித்தியானந்தன்இ; கா.சிவத்தம்பிஇ சி.மௌனகுருஇ போன்றோர் பல்கலைக்கழக மட்டத்தில் தம்மாணவர்களைக் கொண்டு மேடையேற்றினர். குழந்தை.மா.சண்முகலிங்கனும் இத்துறையில் பணியாற்றிய ஒருவராவார்.
இந்நிலையில் இலங்கையில் பல்கலைக்கழக மட்டத்தில்; உண்டாகி வரும் தமிழ்வளர்ச்சி பற்றியும் சிந்திக்க வேண்டும். யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்இ பேராதனைப்பல்கலைக்கழகம்இ கிழக்குப்பல்கலைக்கழகமஇ; தென்கிழக்குப்பல்கலைக்கழகமஇ; சப்ரகமுவபல்கலைக்கழகம் போன்ற இலங்கைப்பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை உள்ளது, இவற்றில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் கடந்த இருபத்தெட்டாண்டுகளுக்கு மேலாக யாழ்.திருநெல்வேலியில் இயங்கி வருகிறது. பேராசிரியர்களான கைலாசபதிஇ வித்தியானந்தனஇ; சிவத்தம்பிஇ சண்முகதாஸஇ; சிவலிங்கராஜா ஆகியோரின் தமிழ்ப்பணிகளால் இப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மிக்க வளர்ச்சி பெற்றுள்ளது,
இந்த இடத்தில் யாழ்ப்பாணத்துத் தீவகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கலாநிதி. வண.தனிநாயகம் அடிகளாரின்(1913-1980) சிறப்பும் விதந்துரைக்கப்பட வேண்டிய ஒன்றாகும். உலகத்தமிழாராச்சி மாநாடுகள் நிகழ்வதற்கு அடிப்படைக் காரணராய் இருந்தவரும் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரிகள் மற்றும் மு.சி.பூரணலிங்கம் பிள்ளை ஆகியோரைத் தொடர்ந்து தனது எழுத்தாலும் பேச்சாலும் தமிழ் ஒரு தனிச்செம்மொழி என்று அழுத்தம் திருத்தமாக நிறுவியவர் அடிகளார். இவர் தான் சென்ற நாடெல்லாம் தமிழ்பரப்பினார். “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற சங்கப்பாடலடியை ஆங்கிலத்தில் “நஎநசல உழரவெசல ளை அல உழரவெசலஇ நஎநசல அயn ளை அல மiளெஅயn” என்று மொழிபெயர்த்துத் தான் சென்ற இடமெங்கும் சங்கஇலக்கியப் பெருமையைப் பரப்பினார்.
யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் பண்பாட்டோடு கலந்ததாய் இயங்குவது இசைத்தமிழ். யுhழ்ப்பாணத்தில் நாட்டார் வழக்காகப் பேணப்படும் தாலாட்டுஇ ஒப்பாரிஇ நெல்விதைப்புப் ;பாடல்இ கப்பல் பாடல் போன்றவற்றையெல்லாம் தனித்தனியாக ஆய்வு செய்யலாம். விரிவஞ்சி விடுகிறோம். தற்போதும் மாட்டுவண்டில் சவாரிப் போட்டிகள் ஊர்களில் சவாரித்திடல் வெளிகளில் நடப்பதையும் காணலாம்.
கர்நாடக இசையோடு தொடர்புடையதாயிருக்கின்ற தமிழிசை தொடர்பில் யாழ்ப்பாண மரபைத் சிறிது விவரிக்க வேண்டியது அவசியம். ‘கற்பகவல்லியின் பொற்பதங்கள் பிடித்தேன்..’ என்ற பிரபலமான திருமயிலைக் கற்காம்பாள் மீதான பாடலைப் எழுதியவர் யாழ்ப்பாணத்து இணுவிலைச் சேர்ந்த ந.வீரமணிஐயராவார்.(1931-2003) அவர் தமிழில் மேலும் பல கீர்த்தனைகளையும் கிருதிகளையும் வாழ்த்திசைக்கவிகளையும் ஊஞ்சல்ப்பாக்களையும் எழுதி இசையமைத்துள்ளார். இவருடைய அரிய படைப்பு “திருக்கேதீஸ்வரக்குறவஞ்சி” ஆகும்.

யாழ்.நல்லூர் திருஞானசம்பந்தராதீன குருமஹாசந்நிதானமாக விளங்கிய சீர்வளர்சீர்.சுவாமிநாததேசிக பரமாச்சாரியாரும் தன் குரல் வளத்தால் தமிழிசை மற்றும் கதாப்பிரசங்க மரபை உச்சநிலைக்கு இட்டுச்சென்ற பெருமைக்குரியவராவார். ஆன்மீகநிலையில் நின்று இசைப்பணியாற்றிய இவர்களைவிட தமிழ் இனவுரிமைப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களாலும் தம்கொள்கை விளக்கப் பாடல்கள் இயற்றப்பட்;டு; இசையமைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண மக்களுள் அதிகளவினர் சைவசமயிகள் என்பதும் குறிப்பிடத்தக்களவு கத்தோலிக்கர் உள்ளிட்ட கிறிஸ்துவசமயிகளும் இங்கு வாழ்கிறார்கள் என்பதும் மனங்கொள்ள வேண்டியதாகும். இங்குள்ள மக்களின் வீடும் வளவும் சில பழக்கவழக்கங்களும் சேரநாடாகிய கேரளாவை நினைவுபடுத்தும். ய வரதட்சணை என்ற சீதனப்பிரச்சினை மற்றும் சாதீயப்பிரச்சினை என்பவற்றை இங்கும் அவதானிக்கலாம். எனினும் மணமகள் வீட்டில் சென்று மணமகன் தங்கும் வழக்கமிருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த கால யுத்தச்சூழல் சாதிப்பேயின் கொட்டத்தை யாழ்ப்பாணத்தில் சிறிது குறைத்துள்ளதும் குறிக்கத்தக்கது. எனினும் பலமாறுதல்களுடனும் புதிய சில இணைப்புக்களுடனும் யாழ்ப்பாணத்தில் இன்று வரை சாதீயம் இருப்பதை மறுக்க இயலாது. தமிழர்களின் குறிஞ்சித்தெய்வமான முருகனின் வழிபாடு பிரபலமாயுள்ளது.
தமிழகத்தில் காலப்போக்கில் மருவல்களுக்குட்பட்டு இல்லாதொழிந்த கண்ணகி வழிபாடு ஈழத்தில் இன்றும் காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தின் பல்வேறு ஊர்களிலும் கண்ணகி வழிபாட்டைக்காணமுடியும். எனினும் இங்கு வழங்கும் கண்ணகி காதைகளில் சிலப்பதிகாரத்திலிருந்து மாறுபட்ட சில பல செர்க்கைகளையும் காணலாம். அவற்றுள் முக்கியமானது கண்ணகி தேவி பராசக்தியின் அவதாரம் எனக்கருதுவதாகும்.
யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழைப் பற்றியும் நிறைவாகக் கூறவேண்டியுள்ளது, தமிழ்நாட்டார் போலன்றி இங்குள்ளவர்கள் எதற்கெடுத்தாலும் “ஓம்’ “ஓமோம்” என்ற சொற்களைப்பாவிப்பார்கள். (ஆமா ஆமாங்க என்று சொல்வதில்லை) இவ்வாறாக ‘ஆ’ஒலியை ‘ஓ’ஒலியாக்குவதைப் சில இடங்களில் காணலாம். எனவே தமிழக அறிஞர்கள் பலரும் “யாழ்ப்பாணத்துத்தமிழ்” தூயதமிழ் என்று வாயார வாழ்த்தியிருக்கிறார்கள். எது எப்படியாகிலும் யாழ்ப்பாணத்துத் தமிழ் தனித்துவமானது என்பது மறுக்க முடியாதது.
ஒரு சில அறிஞர்களின் யாழ்ப்பாணத்தமிழைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள கூற்றுக்களைக் கவனிப்பது இது தொடர்பான சில தெளிவுகளைத்தரும் என நம்புகிறேன். யாழ் நூல் எழுதியவரும் ஸ்ரீராமகிருஷ்ணமிஷனில் சேர்ந்து துறவியாக வாழ்ந்தவருமான சுவாமி விபுலானந்தர் தனது ‘கலைமகள் கதம்பம்’ என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார்.

“ஈழநாட்டில் பிறந்தேனாயினும் ஈழத்து வழக்குத்தமிழில் எனக்கு அதிக பழக்கம் இல்லை. கற்றது புத்தகத்தமிழ். கலந்து பழகி ஒருசிறிது கற்றுக் கொண்டது சோழநாட்டுத்தமிழ். இலங்கையில் நான் நண்பரோடு உரையாடும் போது என் உரையைக் கேட்டோர் “சாமி பேசுவது வடக்கத்தியத்தமிழ்” என்று சொல்ல நான் பல முறை கேட்டதுண்டு. இலங்கையிலுள்ளோர் தென்னாட்டுத்தமிழரை ‘வடக்கத்தியார்’ என்பது வழக்கம். தேன்னாடு ஈழநாட்டிற்கு வடநாடு தானே? இது இப்படியிருக்க ஒருநாள் சென்னை ஜார்ஜ்டவுனிலே ஒரு கடைக்காரன் என்னை நோக்கி “சாமிக்கு ஊர் பாலைக்காடா?” என வினவியதுண்டு”;.
இந்தச் சுவாரஸ்யமான செய்தி போலவே “யான் கண்ட இலங்கை” என்ற நூலிலே டாக்டர்.மு.வரதராசன் கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறார்.
“இத்தேச ஒலிநீட்டம் ஒலியழுத்தம் முதலியவைகளும் மலையாள ஒலியையே நினைவ+ட்டும். இந்த வேறுபாட்டைக்கண்ட நம்நாட்டுத்(தமிழ்நாட்டு) தமிழ்மக்கள் யாழ்ப்பாணத்தமிழை ‘இலக்கணத்தமிழ்’ என்றும் ‘தூயதமிழ்’ என்றும் புகழத்தொடங்கிவிட்டார்கள். விளங்காத மொழியை உயர்ந்தமொழிஇ என்பதும் எளிதில் விளங்காத பேச்சை அருமையானபேச்சுஇ என்பதும் எளிதில் விளங்காத உரைநடையை சிறந்ததமிழ்நடை என்பதும்இ எளிதில் விளங்காத கருத்தை உயர்ந்தஆராய்ச்சி என்பதுமஇ; நமக்கு வழக்கம் தானே! அது போன்றதே இந்தப் புகழுரையும்.

யாழ்ப்பாணத்தமிழிலும் நம் பேச்சுத் தமிழில் உள்ளது போல் கொச்சைச் சொற்களும் திரிபுகளும் தவறுகளும் உள்ளன. ஆயினும் ஒன்று மட்டும் உறுதியாகக் கூறலாம். ஆவர்கள் தமிழ்ப்பற்றிலும் தமிழ்த்தொண்டிலும் முன்னிற்கிறார்கள் என்பது கண்கூடு”
இவற்றினூடாக யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழை அறிமுகஞ்செய்யலாம் என நம்புகிறேன். ஆயினும் யாழ்ப்பாணத்தமிழ் இயல்பாக தமிழ்நாட்டார் யாவருக்கும் விளங்கும் என்றே நான் நம்புகிறேன். ஆனால் பயிற்சியின்றி யாழ்ப்பாணத்தார் போலப் பேசிவிட இயலாது என்பது மறுக்கவியலாதது.
இன்னும் சிலவும் கூற வேண்டும் யாழ்ப்பாணம் என்பது முற்று முழதாகத் தமிழர்கள் வாழும் பூமி. எனவே இங்குள்ள சிறு சிறு பகுதிகளிலும் கூடத் தனித்துவமாக அந்தப்பிரதேச பேச்சு வழக்கிருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் இன்று அவற்றைக் காணமுடியவில்லை. மாதிரிக்காக ஒருசில யாழ்ப்பாணக்கிராமிய மரபுச் சொற்களைக் கவனிக்கலாம்.
பறைதல்(பேசுதல்) எடுப்பு(படாடோபம்) ஊர்த்தொழவாரம்(ஊர்வேலை) கந்தறுந்த(எல்லாம் இழந்த) அலக்கமலக்க(அந்தரப்பட்டு) அசுமாத்து(சந்தடி) எம்டன்(ஏமாற்றுக்காரன்) போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். “பனைமரத்தில் படவாள் பார்ப்பது” என்பது போன்ற சில பழமொழிகளும் விடுகதைகளும் கூட யாழ்ப்பாணத்தில் தனித்துவமாக உள்ளன.
யாழ்ப்பாணமக்களின் நம்பிக்கைகளாக கண்ணேறுபார்த்தல், சகுனம் பார்த்தல், பல்லிசொல்லல், காக்கை கரைதல், கனவுகாணுதல் போன்றன பலவும் உண்டு. கரகம்இ காவடிஇ கூத்துஇ பொய்க்கால்குதிரையாட்டம் போன்ற கிராமியக்கலை வடிவங்களும் உள்ளன. எனினும் ஆதரிப்பார் இன்மையால் நலிவுற்றுக்கிடப்பதையும் காணலாம். நாதஸ்வர தவில் வாத்தியகாரர்கள் இசைவேளாளர் குலத்திலிருந்து பரம்பரையாக மங்கல இசை வாசிப்பதை இங்கும் காணலாம்.
இவ்வாறாக தமிழ்நாட்டோடு இணைந்தும் சில தனித்துவங்களைப் பேணியும் யாழ்ப்பாணத்தில் தமிழ்மொழியும் இலக்கியமும் பண்பாடும் இருந்துள்ளதையும் இன்றும் நிலவி வருவதையும் காணலாம். பல்லாண்டுகளாகத் தொடர்ந்து நடந்து ஆயிரக்கணக்காக உயிர்களைக் காவு கொண்ட போரின் கோரப்பிடியிலிருந்து தப்பித்துத் தமிழ் வளர்ந்திருப்பது பெருமைக்குரிய ஒரு விஷயமே. சேய்நாடான இலங்கை நாட்டுத் தமிழரின் மொழி-இலக்கியம்-பண்பாடு போன்றவற்றை பாதுகாக்கவேனும் தாய்நாடாகிய தமிழகப் பெரியோர் அவசரமாக முன்வரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
கடந்த காலப்போரால் ஏராளமான யாழ்ப்பாணத்தவர்கள் தமது சொந்த நாட்டை விட்டு வெளியேறி உலகெங்கிலும் பல்வேறு குடியேறியுள்ளனர். தாம் குடியேறிய நாடுகளிலெல்லாம் இவர்கள் திருக்கோவில்கள் சமைத்தும் திருமுறைகள் பாடியும் தமிழ் நிகழ்ச்சிகள் செய்தும் தமிழ் மணம் கமழச்செய்கிறார்கள். இருந்த போதிலும் இயல்பான பண்பாடும் மொழியும் இவர்களின் அடுத்தடுத்த தலைமுறைகளிடம் சென்று சேருமா? என்பது கேள்விக்குறியே… இதை மாற்ற வேண்டிய பொறுப்பும் நம்மதே.
1970களில் தனிநாயகம் அடிகளார் இது பற்றிக் கூறியுள்ள சில செய்திகள் இன்றைக்கும் சிந்திக்கத்தக்கனவாயுள்ளன.
‘வேற்று நாடுகளில் குடியேறியிருக்கும் தமிழர் தமிழை ஒருவாறு மறப்பதற்கு அவர்கள் சூழ்நிலை காரணமாக இருப்பதால் அந்நாடுகளின் மொழிகள் வாயிலாகவும் தமிழின் புகழைப் பரப்புவது நமது கடமையாகும். வேற்றுநாடுகளுக்கு தமிழ்நாட்டிலிருந்தும் ஈழநாட்டிலிருந்தும் கல்விப்பொருட்டாகவும் வணிகப்பொருட்டாகவும் அரசியற்பொருட்டாகவும் செல்லும் தமிழரனைவரும்தமிழ் வரலாற்றையும் தமிழிலக்கியங்களையும் நன்குணர்ந்து செல்வாராகில் அவரும் தமிழ்க்கலைத்தூதைப் பெரிதும் நிகழ்த்துவதற்கு வழிகளைக் காண்பார்…..’ என்று கூறுகிறார்.
கடந்த காலங்களில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டு நம் நாடுகளில் அதிகளவில் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்கள் உருவாகிய போது. யாழ்ப்பாணத்தில் ஏரானமான சிக்கல்கள் இருந்தன. போரும் போர்சார் சூழலும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. ஆகவே யாழ்ப்பாணத்தாரின் பங்களிப்பால் உருவாகி அவர்களால் வழிநடத்தப்பெற்ற தொலைக்காட்சிகளோ வானொலிகளோ கூட கொழும்பைத் தளமாகக் கொண்டே இயங்க வேண்டியிருந்தது. இக்காலத்தைய பகழ்பூத்த இலங்கை ஒலிஇ ஒளி பரப்பு அறிவிப்பாளர்களாக அப்துல்ஹமீத், முகத்தார் ஜேசுரட்ணம்,அப்புக்குட்டி ராஜகோபால், சிறீதர் பிச்சையப்பா, உபாலி செல்வசேகரன், கே.எஸ்.பாலசந்திரன், எஸ்.எஸ்.கணேசபிள்ளை, கே.எஸ்.ராஜா, கமலினி செல்வராசன், சானா போன்ற பலரை அடையாளம் காணலாம். இருந்த போதிலும் இக்காலத்தில் தமிழ் விடுதலைப் போராட்ட அமைப்பொன்றினால் யாழ்ப்பாணத்திலிருந்து வானொலி ஒலிபரப்பு ஒன்று நடத்தப்பட்டமையும் யாழ்.பலாலியிலிருந்து கொழும்பு தேசியசேவை ஒரு உபசேவையை நடாத்தியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது சக்திஇ டான்இ வசந்தம் போன்ற சில தொலைக்காட்சி நிலையங்கள் யாழ்ப்பாணத்திலும் உள்ளன. ஒரு சில திரைப்படங்களை தயாரிக்கும் முயற்சிகளும் நடக்கின்றன. கடந்த காலத்திலேயே யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டு பல குறும்படங்களும் ஆவணப்படங்களும் உருவாக்கப்பட்டு உலகெங்கும் பல உணர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. தவிரவும் யாழ்ப்பாணத்தில் சில வானொலி நிலையங்களும் உள்ளன.
யாழ்ப்பாணத்திலிருந்து கடந்த காலத்தில் ஏராளமான தினசரிப்பத்திரிகைகள் வெளியாகியுள்ளன. இப்பத்திரிகைகளுக்கு யாழ்ப்பாண மக்கள பண்பாட்டிலேயே தனியிடமுண்டு. திருமணமாகட்டும் மரணஅறிவித்தலாகட்டும் பத்திரிகையில் பார்த்துக் கொள்வது இங்குள்ள மக்கள் வழக்கம். முன்பு யாழ்ப்பாணத்திலிருந்து சுதந்திரன் (1947-1982) ஈழநாடு(1959-2006) ஈழகேசரி(1930-1958) ஈழநாதம்(1986-2005) நமது ஈழநாடு(2002-2006) ஆகியன வெளிவந்து காலகதியில் நின்று போயின.

எனினும் தற்போது உதயன்இவலம்புரி ஆகிய நாளேடுகள் யாழ்ப்பாணப் பிரதேசப்பத்திரிகைகளாக வெளிவந்து கொண்டுள்ளன. இவற்றை இணைய முகவரிகளுடாகவும் பார்க்க முடியும். இதை விட கொழும்பிலிருந்து வெளியாகும் வீரகேசரிஇ தினக்குரல் ஆகியன யாழ்ப்பாணத்திற்கென்று தனிப்பதிப்புக்களை வெளியிடுகின்றன. இவற்றினூடாக யாழ்ப்பாணச் செய்திகளை தினசரி பார்க்க முடியும்.
தற்போது இணையத்தளங்களை உருவாக்க முடிவதால் யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டு பல இணையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் சில
இணையங்கள் எங்கிருந்து எவர் நடாத்துகின்றார் என்பதெல்லாம் அறியமுடியாதிருப்பதால் ; நம்பகத்தன்மை குறைந்தனவாயுள்ளதும் வருத்தத்தோடு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. எனினும் இணையத்தின் நன்மையால் யாழ்ப்பாணத்தின் சிற்றூர் ஒன்றில் நடக்கும் சிறுசம்பவம் கூட அருகிலுள்ள ஊரார் அறிய முன்னரே எங்கோ ஐரோப்பாவிலும் பனிபடர்ந்த நாடுகளிலும் வாழும் உறவுகள் விiவாக அறியமுடிவது மகிழ்ச்சிக்குரியது.
தவிர தற்போது யாழ்ப்பாணத்தின் ஊர்களைப் பிரதிபலிக்கும் வண்ணம் ஒவ்வொரு ஊருக்கும் கூட அவ்வூர் சார்ந்தோரால் இணையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றது. கோவில்கள், கல்விநிலையங்கள் போன்ற பொதுஸ்தாபனங்களின் பெயரிலும் பல்வேறு இணையங்களைக் காணலாம். எவ்வாறாகிலும் யாழ்ப்பாணத்தின் புதிய இளந்தலைமுறை தம் மொழி மற்றும் பண்பாடு தொடர்பாக நம்பிக்கை இழக்காமல் இருக்க வழிசமைக்க வேண்டியுள்ளது.
தமிழ் நாட்டின் தொலைக்காட்சித் தொடர்களை தம் கருமங்களை எல்லாம் மறந்து பார்த்திருக்கும் பெண்களையும் புதிதாக வெளிவரும் தமிழ் படத்திற்காக திரையரங்குகளில் அலை மோதும் இளம் சமூகத்தையும் தமிழ்நாட்டுப்படங்களால் யாழ்ப்பாணத் தமிழ்ப்பண்பாடு சீரழிகிறதே என்று அங்கலாய்க்கும் பண்பாட்டு ஆர்வலர்களையும் கூட கடந்த சில தசாப்தங்களாக யாழ்ப்பாணத்தில் காணலாம். யாழ்ப்பாணத்திலும் கடந்த காலங்களில் சதனித்துவமான சினிமாபடங்களை எடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவை போராலும் இன்ன பிற காரணங்களாலும் இன்று வரை சாத்தியமற்றனவாகவே இருக்கின்றது. இருந்த போதிலும் ஆவணப்படங்கள்இ குறும்படங்கள் சில வெளிவந்துள்ளன.
ஆகவே இன்றைய சூழலில் இவை பற்றி நீண்ட ஆழமான ஆய்வுகள் செய்யப்படவேண்டும். இதற்கு முன்னோட்டமாக பரவலான ஒரு அறிமுகமாக இக்கட்டுரை அமையும் என நம்புகிறேன்.
தனித்தமிழ் என்றும் செந்தமிழ் என்றும் முத்தமிழ் என்றும் தீந்தமிழ் என்றும் தேன்தமிழ் என்றும் அமுதத்தமிழ் என்றும் தண்டமிழ் என்றும் வண்டமிழ் என்றும் கோதில்தமிழ் என்றும் தீதில்தமிழ் என்றும் பலவாறு போற்றப்படும் தமிழை வளர்ப்பதே நமக்கு இவ்வினிய செம்மொழியைத் தாய்மொழியாய்த் தந்த இறைவனுக்குச் செய்யும் நன்றிக்கடனாகும்.
‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’

உதவியன-
சிவத்தம்பி கார்த்திகேசு. (1978) ஈழத்தில் தமிழ் இலக்கியம், சென்னை, தமிழ்ப்புத்தகாலயம்.
கைலாசபதி.க (1986) ஈழத்து இலக்கிய முன்னோடிகள், சென்னை, மக்கள் வெளியீடு.
மனோகரன்.துரை (1997) இலங்கையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி,கண்டி, கலைவாணி புத்தக நிலையம்.
வரதராசன்.மு (1955) யான் கண்ட இலங்கை, சென்னை, பாரிநிலையம்.

சிவலிங்கராஜா.எஸ் (1983) யாழ்.குடாநாட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு பாரம்பரியக்கல்வி முறை, சிந்தனை(1-2), யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.

செல்வநாயகம்.வி (1973) தமிழ் இலக்கிய வரலாறு, யாழ்ப்பாணம், ஸ்ரீலங்கா புத்தகசாலை.

செல்வன் தி.மயூரகிரி, மாணவன், யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் .;

Series Navigationமுப்பது ஆண்டுகளில் பரிதி மண்டல விளிம்பைக் கடந்த நாசாவின் வாயேஜர் விண்கப்பல்கள் ! (Voyager 1 & 2 Spaceships) >>

தி.மயூரகிரி

தி.மயூரகிரி