ராம்ப்ரசாத்
மதிய வெயில் சுரீரென்று காற்றை பொசுக்கிக்கொண்டிருக்க, ஈ.சி.ஆர் ரோட்டில் சற்றே தாழ உள்ளடங்கிய லக்ஸர் ரிசார்டின் வாசலில் ரோட்டோரமானதான ரிசார்டின் தென்னை மரங்களின் நிழலில் கிரீச்சிட்டு நின்றது அந்த போலீஸ் ஜீப். உள்ளிருந்து விரைப்பாய் மிடுக்காய் இறங்கினார் இன்ஸ்பெக்டர் நல்லசிவம்.
‘செல்வம், ஜீப்பை உள்ள போடாத. கொஞ்சம் தள்ளி போட்டுட்டு வா’ திரும்பி ஜீப்பை ஓட்டிவந்த டிரைவர் செல்வத்திடம் சொல்லிக்கொண்டே அகண்ட ரிசார்ட்டின் வாசலை கவனமாக ஊடுறுவ, செல்வம் அதை முன்பே எதிர்பார்த்தவனாய் ஜீப்பை சற்று தள்ளி நிறுத்தக் கடந்து போனான். செல்வத்துக்குத் தெரியும். நல்லசிவத்தின் வழக்கமான செய்கைகள் தான். கொலையாளி ரிசார்ட்டை விட்டு வெளியேறியிருப்பின் நடந்தோ, ஓடியோ அல்லது ஏதொரு வாகனத்திலோ போயிருந்தால், அந்தத் தடங்களை போலீஸ் ஜீப்பின் டயர்கள் அழித்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுதான் காரணம்.
நல்லசிவத்துக்கு அந்த வெயிலோ, அந்த மாதிரியான ரிசார்ட்டோ, அல்லது அங்கே அவர் துப்பு துலக்க வந்த அந்த கொலையோ எதுவுமே புதிதில்லை. அவர் சர்வீஸில் இதைப்போல் எண்ணற்ற கேஸ்களைப் பார்த்திருக்கிறார், முதலில் கான்ஸ்டெபிள், அப்புறம் ஏ.எஸ்.ஐ, பிறகு எஸ்.ஐ, இப்போது இன்ஸ்பெக்டர். எந்த கேஸையும் கண்டுபிடிக்காமல் விட்டதில்லை. அதனால்தானோ என்னவோ இந்தக் கொலையும் இவரது கையிலேயே.
அவரைப் பற்றிய சில மேல்விவரங்கள், அவருக்கு வயது முப்பத்துஒன்பது (கவர்மென்ட் ரிகார்ட்ஸ்ல், உண்மையான வயது நாற்பது). திருமணமாகி இரண்டு பிள்ளைகள். காலேஜில் ஒரு பையனும், ப்ளஸ் ஒன்னில் ஒரு பெண்ணும். விசாலமான அறிவை புத்தகங்களை நாடி அடைந்ததாலோ அல்லது அமைதியான அழகான குடும்பப்பிண்ணனி அமைந்த காரணத்தினாலோ என்னவோ நல்லசிவம் பெயருக்கேற்றார்போல நல்லவர். பழகுவதற்கு மென்மையானவர். இந்த மென்மைத்தன்மை அவரின் தொழிலிலும் தொடர்ந்தது. துப்புதுலக்குவதில் நல்லசிவம் அஹிம்சா பேர்வழி. அமைதியாகவே வேலை செய்வார். மிகத்தெளிவாகக் கேள்வி கேட்பார். ரத்தினச்சுருக்கமாக இருக்கும் அவரின் கேள்விகள். வேலை நேரத்தில் யாரிடமும் அதிகம் பேசவோ, விவாதமோ செய்யமாட்டார். இது ஒரு வகையில் ஒரு நல்ல ஸ்ட்ராடெஜியாகத்தான் இருந்திருக்கிறது. குற்றவாளிகளுக்கோ, குற்றவாளிகளின் கையாள்களுக்கோ அவர் குற்றவாளியை நெருங்கிவிட்டாரா இல்லையா என்பது மர்மமாகவே இருக்கும். அந்த மர்மத்திலேயே அவர் தனது விசாரணையைத் தொடருவார்.
சில நேரங்களில், துப்புத்துலக்குபவரின் தீவிரத்தில், குற்றவாளிகள் மாட்டிக்கொள்ளாமல் இருக்க மேலும் மேலும் தவறு செய்வார்கள், அல்லது சாட்சிகளைக் கலைப்பார்கள். இதனால், துப்புதுலக்குபவருக்கு சிக்கல் அதிகரிக்கும். குற்றவாளி தப்பிவிடும் வாய்ப்புக்கள் அதிகமாகிவிடும். அதனால்தானோ என்னவோ, நல்லசிவத்தின் ஆளுமை அவராலேயே மெளனித்திருக்கும். பதுங்கும் சிறுத்தை போல. பல சமயங்களில், இவரெங்கே பிடிக்கப்போகிறார் என்பதாக நினைக்க வைக்கும். ஒரு துப்புதுலக்குபவரின் பொதுவான குணாதிசயங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும் அவரின் ஒவ்வொரு அசைவும்.
நல்லசிவம் கவனித்தவரையில், ரிசார்ட்டின் மெயின் கேட்டில் ஏதொரு தடயமும் இருக்கவில்லை. அகலமான மெயின்கேட். ஈ.சி.ஆர் ரோட்டிலிருந்து சற்றே உள்ளடங்கி தாழ்வாக இருந்தது. தென்னை மரங்களின் நிழலில் அத்தனை வெம்மை தெரியவில்லை. கிராமங்களில் ஒரு தென்னந்தோப்பில் நின்று இளநீர் குடிப்பதான உணர்வுதான். ரிசார்ட் மிகக் காஸ்ட்லியானதுதான். தென்னை மரங்களின் நிழலில் இதமாக காற்று வீசுவதை முழுவதும் அனுபவிக்க விடாதபடி பகல் சூரியனும், ஒரு கொலையும் தடுத்துக்கொண்டிருந்தது மனதளவிலும். யாரோ ஒரு அரசியல்வாதியின் பினாமியின் சொத்து. அதனால்தானோ என்னவோ, உயர் அதிகாரிகளிடமிருந்து தகவல் வருவதற்கு முன்னரே அந்த அரசியல்வாதியின் ஆட்களே தொடர்பு கொண்டுவிட்டார்கள். நடுத்தர குடும்பங்கள் சர்வ நிச்சயமாய் இங்கெல்லாம் எட்டிக்கூடப் பார்க்காது. நிச்சயம் பெரிய இடத்து மக்கள் தான் வருவார்கள். அப்படியானால், குற்றங்களுக்கு பஞ்சமே இருக்காது என்று நினைத்துக்கொண்டார்.
வெள்ளை பாண்ட், இன் செய்யப்பட்ட வெள்ளை சர்ட், அதைத் தாண்டியும் பிதுங்கித் தொங்கிய தொப்பை, கறுப்பு பெல்ட், கறுப்பு ஷூ என ஐந்தடியில், இரண்டு கைகளையும் குறுக்கே கட்டி, தோல்கள் குறுக்கி மாநிறத்தில் ஒருவர் நல்லசிவத்தை பார்த்ததும் அவரை வரவேற்கும் தோரனையில் ஓடி வந்தார். அந்தத் தோரணை, வரவேற்கும் தோரணையா, பதட்டமா, பயமா, பணிவா, தன்னடக்கமா, அல்லது வேறு ஏதாவதா என்று தோன்றும் வகைக்கும் ஒரு குழப்பமான உணர்வை வெளிக்காட்டுவதாக இருந்தது. ஓடி வருகையிலேயே விழுந்துவிடுவார் போலிருந்தது.
‘யார் ஃபோன் பண்ணினது?’.
‘சார், நாந்தான் சார். சீக்கிரம் வாங்க சார். அவனைப் புடிச்சி வச்சிருக்கோம் சார்’.
‘யாரை?’.
‘அவந்தான் சார். அந்த பொண்ணைக் கொலை பண்ணினவன’.
அந்த பரபரப்பான நேரத்திலும் நல்லசிவத்துக்கு லேசாக சிரிப்பு வந்தது. எல்லோரும் சி.ஐ.டி வேலை பார்க்கத்தொடங்கிவிட்டார்கள் என்று நினைத்துக்கொண்டார்.
‘ஹ்ம்ம் நீங்க யாரு? உங்க பேரு?’.
‘நான் இங்க மானேஜர் சார். பிரதீபன் சார்’.
‘ஹ்ம்ம் பாடி எங்க?’.
‘வாங்க சார். காட்றேன்’. கொஞ்சம் விட்டாலும் நல்லசிவத்தை நிற்க வைத்து சாஷ்டாங்கமாய்க் காலில் விழுந்துவிடுவார் போலிருந்தது. அத்தனைக் குழைந்தார் அவர். அவர் செய்கைகளைப் பார்க்கையில் ஒரு கொலை செய்யக்கூடிய ஆளாக இருப்பதாகத் தெரியவில்லை என்பதை உணர்ந்தபடியே நல்லசிவம் பின்னால் நடக்க, ரிசப்ஷனை ஒட்டிய போர்டிகோவைத் தாண்டி, இடதுபுறம் அழகாக ஃபென்சிங்குடன் கூடிய தோட்டத்தையும், வலது புறம் வரிசையாய் தங்கக்கூடிய அளவிலான ஓரடுக்கு கொண்ட தங்கும் சொகுசு அறைகளையும் கொண்ட பகுதியினூடே சிமென்ட் கற்கள் பதித்த நடைபாதையில் பிரதீபன் அழைத்துச்சென்றார்.
வலதுபுறம் கீழ்த்தளத்தில் சொகுசு அறை வாசலில் ஃப்ராக்கில் ஒரு பெண்பிள்ளை கையில் பந்துடன் இவரையே பார்த்து நின்றது. முதல்மாடியில் இருந்த சொகுசு அறையின் பால்கனியில் ஒருவர் இடது கையில் சீப்பை பிடித்து, தலைவாரிக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தார்.. அவர் பார்வை, நடப்பதை ஏதோவொரு அசூசையுடன் பார்ப்பது போல் பட்டது நல்லசிவத்திற்கு. இது போல் பல சமயங்களை கடந்திருக்கிறார் அவர். சாமான்யர்களுக்கு என்றோ நடக்கும் இது போன்ற விஷயங்கள் காவல்துறையைப் பொருத்தமட்டிலும் அன்றாட நிகழ்வுகள் தானே. போகிற போக்கில் ஏனைய அறைகளையும் ஒரு பார்வை பார்த்தார். அவைகள் காலியாகவே இருந்தன.
இன்ஸ்பெக்டர் நல்லசிவம் பார்வையாலேயே அந்த இடத்தை மிகக்கவனமாய் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார்.
செல்லும் வழியெங்கும் சிமென்ட் கற்களில் நடைபாதை, அளவாக சீராக வெட்டப்பட்ட புற்கள், அடர்ந்து வளர்ந்த செடிகள் அனைத்தும் கூட சீராக அளவாக அழகாக வெட்டப்பட்டிருந்தது அந்த ரிசார்டின் பராமரிப்பை வியந்து பார்க்கவைத்தது. ஒரு பெரிய தென்னந்தோப்பை குடைந்து, வேண்டிய இடங்களில் தென்னைமரங்களை அகற்றி சீராக்கி ரிசார்ட் கட்டியது போல் நேர்த்தியாக அழகாக இருந்தது.இருபதடி தூரத்தில் வலதுபுறம் ஒரு நீச்சல்குளம். அடுத்து நடைபாதை. இடதுபுறமாக அந்த செயற்கை நீர்வீழ்ச்சி. அதில் சிறியதாய் பாலம் போல அமைத்து, அதன் கீழே சிறியளவில் நீர் தேக்கி, அதில் அழகான தங்க நிறம், கறுப்பு நிறங்களில் மீன்களை அலைய விட்டிருந்தனர். அந்த மீன்கள் நான்றாய் தின்று கொழுத்து சின்ன சைஸ் திமிங்கிலம் போல காட்சியளித்தன. ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தது. ரிசார்டில் அன்றைய தினம் அதிகம் பேர் தங்கியிருக்கவில்லை. ஏனெனில், இந்நேரம் அப்படியிருந்தால், பெருங்கூட்டம் கூடியிருக்கும். விஷயம் வெகு சீக்கிரம் வெளியில் பரவியிருக்கும். விசாரணையை மேற்கொள்வது சற்று கடினமாயிருக்கும். அங்கே அந்த சின்ன பாலத்தில் ஒரு பெண்ணின் உடல் கிடந்தது.
ஐந்தரை அடி உயரம் இருக்கலாம். அந்தச் சின்ன பாலத்தில் ஏனோதானோவென்று விழுந்து கிடந்திருந்தாள். தலை பக்கவாட்டில் சரிந்து கிடந்தது. வெள்ளை நிறத்தில் ஒரு டாப்ஸும், நீல நிறத்தில் பெல் பாட்டம் பாண்டும், ஒயிலாய் நடக்க ஏதுவாய் ஒரு ஹை ஹீல்ஸ் செருப்பும் அணிந்திருந்தபோதிலும் கால்கள் சற்றே அகலமாய் விலகிக் கிடந்தது கொஞ்சம் ஆபாசமாய் இருந்தது ஏனோ, அந்த நொடியில், ஆபாசம் பார்ப்பவர் பார்வையை பொருத்த விஷயமென்று தோன்றச்செய்தது. அவளது வலதுபுறத்து வயிற்றுப்பகுதியில் ரத்தம் கசிந்து அந்த பாலத்திலும் வழிந்து காய்ந்து பரவிக்கிடந்தது. பக்கத்திலேயே அவளின் வெள்ளை நிற தோல் பை கிடந்தது. அதன் எல்லா ஜிப்களும் மூடியிருக்க, பக்கவாட்டில் இருந்த சின்ன ஜிப் மட்டும் திறந்தே இருந்தது. லட்டியால் அதை மெதுவாக நெம்ப, உள்ளிருந்து ஒரு விசிட்டிங் கார்டு எட்டிப்பார்த்தது. அதன் இடது ஓரத்தில் கல்பனா என்று ஆங்கிலத்தில் இருக்க, அதை எடுத்து ஒரு முறை பார்த்துவிட்டு சட்டைப் பையில் போட்டுக்கொண்டார்.
கொஞ்ச தூரத்தில் ஒல்லியாய் உயரமாய் (ஆறடி இருக்கலாம்), மாநிறத்துக்கும் சற்றே அதிகமான சிவப்பில், சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் கட்டம் போட்ட சட்டையும், டெனிம் ப்ளூவில் ஜீன்சும், வெள்ளை நிறத்தில் ஒரு ஷூவும் அணிந்திருந்த ஒருவன் ஒரு தென்னை மரத்தடியில் நாற்காலி ஒன்று போடப்பட்டு உட்கார்ந்திருக்க, அவனருகே இருவர் காவலுக்கு நிற்கும் தோரணையில் நின்றிருந்தனர். பிரதீபன் தொடர்ந்தார்.
‘சார், அந்தப் பொண்ணு அதோ கிடக்கு சார். அதோ அங்க அந்த தென்னைமரத்துக்கு பக்கத்துல உக்காந்திருக்கானே, அவனோடதான் சார் வந்தா. அவங்க வந்தப்போவே எனக்கு க்றுக்னு பட்டுச்சு சார். ஏதோ நடக்கபோகுதுன்னு. ஆனா, இவன் கொலைபண்ணுவான்னு நினைக்கவே இல்ல சார். கொலை பண்ணதையும் பண்ணிட்டு இல்லங்கறான் சார் அவன். நீங்களே கேளுங்க சார்’ எழுதிவைத்த டயலாக்கை மூச்சுவிடாமல் சொல்வதுபோல் சொல்லிவிட்டு அமைதியானார் பிரதீபன்.
‘அவந்தான் கொலை பண்ணினான்னு நீங்க எப்படி சொல்றீங்க. பாத்தீங்களா?’.
‘இ.. இல்லசார். அவனாதான் சார் இருக்கும் சார். அவனோடதான் சார் வந்தா. ரெண்டு பேரும் சேர்ந்துதான் சார் சாப்பிட்டாங்க. அடிச்சிக்கிட்டு, கிள்ளிக்கிட்டு ஒரே கும்மாளம் தான் சார். அப்புறம் நான் கவனிக்கல சார். திடீர்னு பாத்தா அவ செத்துக்கிடக்கிறா. ஒரு ஊகம் தான் சார். சாரி சார்’ கிட்டதட்ட அவர் பிதற்றுவதாகவே தோன்றியது நல்லசிவத்துக்கு.
நல்லசிவம் கையசைத்து பிரதீபனை சற்று தொலைவிலேயே நிற்க வைத்துவிட்டு, மெதுவாக அந்த பெண்ணின் பிரேதம் கிடந்த இடத்தை நெருங்கினார். இரண்டு நிமிடங்கள் அங்கே நின்று அந்தப் பெண்ணை தீர்க்கமாய்ப் பார்த்தார்.
அவள் முகம் வலியைத் துய்த்துவிட்டு கிடந்தது போலிருந்தது. மல்லாந்து கிடந்திருந்தாள். அவளது வலதுபக்க வயிற்றுப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டது போலிருந்தது. வெள்ளை டாப்ஸில் அவளின் இரத்தக்கறை அடர்த்தியாக இருந்தது. ரத்த சேதம் அதிகமாயிருப்பதைப் பார்க்கையில் கத்தி மிக ஆழமாக பாய்ந்திருக்குமென்று அவரால் யூகிக்க முடிந்தது.
பார்த்துவிட்டு நல்லசிவம் திரும்பி அவனை நோக்கி நடந்தார். இவர் தன்னை நோக்கி வருவதை கவனித்துவிட்டு தென்னைமரத்தடியில் அமர்ந்திருந்தவன் எழுந்துகொண்டான். நல்லசிவம் அவனருகே சென்று நின்றுவிட்டு தன் இரண்டு கைகளையும் பின்னே கட்டிக்கொண்டு விரைப்பாய் நின்றுகொண்டார்.
‘உன் பேரென்ன?’.
‘ரமேஷ் சார்’. பயந்த தோரணையில் அவன் பதிலளித்தான். கொஞ்சம் விட்டாலும் அழுதுவிடுவான் போலிருந்தது.
கையிலிருந்த லட்டியை விரல்களால் சுழற்றியபடி பின்னே கட்டிய கைகளை நல்லசிவம் விடுவிக்க லட்டி தவறி அவருக்கும், ராமேஷுக்கும் இடையில் நடுநாயக்கமாய் விழுந்தது. அந்தப் பையன் உடனே குனிந்து தன் வலது கையை நீட்டி எடுத்து பணிவாய் அவரிடம் நீட்டினான். அந்த லட்டியை அவனிடமிருந்து வாங்கிக்கொண்டார் நல்லசிவம். அவன் அப்படிச் செய்தது, பதட்டத்திலும் அவன் சற்று நிதானத்தில் இருப்பதாக அவருக்குத் தோன்றச்செய்தது.
‘இந்தப் பொண்ணு உனக்கு என்ன வேணும்? உன் லவ்வரா?’.
‘அய்யோ இல்ல சார். நாங்க ஃப்ரண்ட்ஸ் சார். ஒரு ட்ரீட்க்காக வந்தோம் சார்’.
‘வேலை பாக்கறியா?’.
‘ஆமா சார், நவாடெல்னு ஒரு சாஃப்ட்வேர் கம்பெனில சார். அவளும் அங்கதான் சார் வேலை பாக்குறா. நாங்க கல்லீக்ஸ் சார். நான் எதுவுமே பண்ணல சார். ரெஸ்ட்ரூம் போய்ட்டு திரும்பி வந்தா இப்படி கிடக்குறா சார். யார் பண்ணாங்கன்னு தெரியல சார். ஹோட்டல்காரங்கலாம் என் மேல பழிபோடுறாங்க சார்’ என்றுவிட்டு அழத்தொடங்கினான் அவன்.
‘ஹ்ம்ம்…’ என்றபடி நல்லசிவம் திரும்பி நடக்க, ‘அய்யோ, சத்தியமா சார், நான் ஒண்ணும் பண்ணல சார்’ என்று அவன் மேலும் விம்முவதை இப்போது அவருக்குப் பின்னால் தெள்ளத்தெளிவாய்க் கேட்க முடிந்தது.
‘சார், மாணிக்கம் சார்’ என்றபடி நல்லசிவம் அருகில் வந்து விரைப்பாய் சல்யூட் அடித்து நின்றார் கான்ஸ்டெபிள் மாணிக்கம்.
‘மாணிக்கம், ஃபோட்டே செஷன் முடிஞ்சிடுச்சில? ஃபாரென்ஸிக் எப்படி போகுது? போஸ்ட்மார்ட்டம்க்கு சொல்லியாச்சா?’.
‘சார், ஃபோட்டோலாம் முடிஞ்சது சார். ஜி.ஹெச் லேர்ந்து நம்ம தீந்தயால் தான் சார்’.
‘ஹ்ம்ம் …’ என்றுவிட்டு சட்டைப்பையிலிருந்து பத்திரப்படுத்திய விசிட்டிங்கார்டை உருவி அவரிடம் தந்துவிட்டு, அவரின் காதில் கிசுகிசுப்பாய் ரமேஷ் காதில் கேட்காத வகைக்கு ஏதோ சொல்ல, கேட்டுவிட்டு, ‘சரி சார்’ என்றுவிட்டு நகர்ந்தார் மாணிக்கம்.
‘சார்’. பவ்யமாய்க் கூப்பிட்டபடி நல்லசிவத்தை அனுகினார் பிரதீபன். பிரதீபனின் முகபாவனை ஏதோ ரகசியம் சொல்ல எத்தனிப்பதான தோரணையில் இருப்பதை உணர்ந்து, தான் ரமேஷ் அருகில் நிற்பதை அப்போதைக்கு தவிர்க்க முனைந்தவராய், பிரதீபனுடன் அங்கிருந்து விலகி நடந்தபடியே
‘ஹ்ம்ம் சொல்லுங்க’. என்றார்.
‘சார், கண்டிப்பா அந்தப் பையன் தான் சார் செஞ்சிருப்பான். வரும்போதே குஷாலா தான் சார் வந்தாங்க. ஒருத்தரை ஒருத்தர் ஒரசிண்டு, பாக்கவே கொஞ்சம் அப்படி இப்படின்னு தான் சார் வந்தாங்க. அவனாதான் சார் இருக்கும். சார், அந்த பையன ஸ்டேஷன்ல வச்சி விசாரிச்சீங்கன்னா….’
‘மிஸ்டர் பிரதீபன்’ சற்றே வெடுக்காய் இடைமறித்தார் நல்லசிவம்.
‘நீங்க எப்படி இவ்ளோ ஷ்யூரா சொல்றீங்க. கண்ணால பாத்தீங்களா?’.
‘இ .. இல்ல சார், ஒரு யூகம்தான். அதுவும் இல்லாம, நேரமாச்சின்னா பிரஸ் அதுஇதுன்னு வந்துடும். அப்பறம் ரிசார்ட் பேரு கெட்டுப்போச்சின்னா எங்க பொழைப்பு நாறிடும் சார். அதனாலதான் சா..’.
நல்லசிவம் அவசரமாக இடைமறித்தார்.
‘கேஸ்னு வந்துட்டா இதையெல்லாம் ஃபேஸ் பண்ணிதான் ஆகணும். கோஆப்ரேட் பண்ணுங்க. முதல்ல போய், போன ரெண்டு நாள்லேர்ந்து இப்போவரை யாரெல்லாம் ரிசார்க்குள்ள வந்தாங்க, யார் மூலமா வந்தாங்க, மெம்பர்ஷிப் இன்ஃபர்மேஷன், கான்டாக்ட் டீடெய்ல்ஸ், எப்போ வகேட் பண்ணி போனாங்கங்கற லிஸ்ட் ப்ரிபார் பண்ணி கொண்டுவாங்க.’.
‘சரி சார். சாரி சார்’. தன்னுடைய வேண்டுகோள் செல்லாது போனதிலும் சற்றே பணிந்து போக வேண்டி வந்ததிலும் அவருடைய ஏமாற்றம் எதிர்பார்த்த ஒன்றுதான் என்பதாக இருந்தது அவர் அவசரமாக அமோதித்து மன்னிப்பு கேட்டதில். அதே வேகத்தில் திரும்பி ரிசப்ஷன் நோக்கி நடந்தார் பிரதீபன்.
நல்லசிவம் கையிலிருந்த லட்டியை ஒரு கையால் (வலது கை) சுழற்றியபடி சிறிது நேரம் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார். உச்சி வெய்யில் தென்னை மரக்கீற்றுகளினூடே வடிகட்டி இறங்கிக்கொண்டிருந்ததில் அத்தனை உஷ்னமாக இல்லை. ரிசார்ட் கதவுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டிருந்தன. வெளிகேட்டை மறைத்தபடி வரிசையாக காட்சிக்கு வைக்கப்படும் சிறிய ரக தென்னங்கன்றுகளை வைத்து வெளியிலிருந்து பார்த்தால் உள்ளே நடப்பது அத்தனை தெளிவாகத் தெரியாத படிக்கு மறைத்திருந்தனர். இது அந்த பிரதீபனின் வேலையாகத்தான் இருக்குமென்று நினைத்துக்கொண்டார். தொழில் சுத்தத்தையும், வேலை சுத்தத்தையும், சரியான நேரத்தில் காட்டுகிறார்கள். தனியார் அல்லவா. ரிசார்ட் பெயர் கெட்டுப்போகாமல் இருக்க எத்தனை வேலைகள் செய்கிறார்கள்?. இவர்களே அரசு வேலைக்கு என்று வந்துவிட்டால் இந்த வேகத்தில் சிந்திப்பார்களா? நடந்துகொள்வார்களா? என்றும் தோன்றியது அவருக்கு.
‘என்ன சிவம், கேஸ் எப்படி போகுது?’.
சத்தம் கேட்டு திரும்பினார் நல்லசிவம். பக்கவாட்டிலிருந்து வெளிப்பட்டார் துரைவேலன். உதவி கமிஷனர்.
‘சார், நீங்க என்ன சார் இங்க, ஒரு ஃபோன் பண்ணியிருக்கலாமே. ஸ்டேடஸ் அப்டேட் பண்ணிருப்பேனே சார்’.
‘அட இருக்கட்டும். மினிஸ்டர் ப்ரஷர். அதான் நானே வந்தேன். சொல்லுங்க. கொலையாளிய கண்டுபிடிச்சிட்டீங்களா? அந்தப் பையன் தானா?’.
அவர் கேட்ட தோரணையில், அவர் தனக்கு முன்பே பிரதீபனை சந்தித்துவிட்டு வந்திருப்பாரோ என்று தோன்றியது.
‘தெரியல சார். ஐ ஆம் ஜஸ் கம்போஸிங் சார்’.
‘ஓகே டேக் யுவர் டைம் பட் ஈவ்னிங் வரை தான் டைம் நமக்கு இங்க இன்வெஸ்டிகேஷன் கன்டின்யூ பண்ண. மினிஸ்டர் ப்ரஷர். என்ன வேணா பண்ணுங்க. ஆனா இங்க பண்ணாதீங்கன்னு. சோ, ஒரு விஷயம் தெளிவாகுது. இதுல மினிஸ்டர் சம்பந்தப்படல.அவ்ளோதான்.’.
சொல்லிவிட்டு சிரித்தார் துரைவேலன். பதிலுக்கோர் சிரிப்பால் அவரை ஆமோதித்தார் நல்லசிவம்.
‘ஆமா, சார். தட்ஸ் ஸ்ட்ரேய்ட் சார்’.
‘ஓகே சிவம். கன்டின்யூ. யார்னு தெரிஞ்சதும் உடனே எனக்கு கால் பண்ணுங்க சரியா?’ சொல்லிவிட்டு நல்லசிவத்தை ஏறிட்டார் துரைவேலன்.
‘ஓகே சார்’. அமோதித்துவிட்டு அமைதியாய் சிரித்தார் நல்லசிவம். அவரின் புன்னகையை பார்த்துவிட்டு திரும்பி நடந்தார் துரைவேலன். கேஸில் நல்லசிவம் ஒரு நல்ல க்ரிப்பில் இருப்பதாகத் தோன்றியது அவருக்கும். அவர் இதைத்தெரிந்து கொள்ளத்தான் இத்தனை தூரம் நேரில் வந்திருந்தார் என்பது நல்லசிவத்துக்குத் தெரியும். இந்தப் புன்னகையைத்தான் துரைவேலன் எதிர்பார்க்கிறார் என்பது நல்லசிவத்துக்கும் தெரியும்.
கடந்து போய்க்கொண்டிருந்த துரைவேலனுக்கு மரியாதையாய் கையை முகத்துக்கு நேராய் தூக்கி வணக்கம்சொல்ல, அதை கவனிக்காமல் போன துரைவேலனை சுருங்கிய நெற்றியுடன் பார்த்துக்கொண்டே நல்லசிவத்திடம் வந்தார் பிரதீபன். அவர் கையில் சில காகிதங்கள்.
‘சார்’.
‘சொல்லுங்க பிரதீபன், லிஸ்ட் ரெடியா?’.
‘எஸ் சார், தோ’. என்றபடி நீட்ட பெற்றுக்கொண்டு ‘நீங்க போலாம். தேவைப்பட்டா கூப்பிடறேன்’ என்றபடியே அவர் தந்த காகிதங்களில் ஆழ்ந்தார் நல்லசிவம்.
‘சரி சார்’ என்ற பிரதீபனோ இவரிடமும் இருந்த அலட்சியத்தை துரைவேலனிடமிருந்ததோடு ஒப்பிட்டுவிட்டு என்ன தப்பு செய்தோம், ஏனிப்படி என்று நினைத்தபடியே ஒரு வித ஆயாசத்துடன் திரும்பி நடந்தார்.
நல்லசிவம் லிஸ்டைப் பார்க்கத்துவங்கிய கொஞ்ச நேரத்திலேயே, மாணிக்கம் கையில் திறந்திருந்த ஒரு லாப்டாப்புடன் நல்லசிவத்தின் அருகில் வந்து நின்று நல்லசிவத்தின் காதுகளில் சில விவரங்களைப் பனித்தார். அவற்றை லாப்டாப்பில் சரிபார்த்துக்கொண்டே வெகு நேரம் அந்த லிஸ்டையே பார்த்துவிட்டு, ஒரு முடிவுக்கு வந்தவராய் ஒரு நீண்ட பெருமூச்சுடன் திரும்பி சற்று தொலைவில் அந்த சொகுசு அறைகள் இருந்த திசையில் நடந்தார் நல்லசிவம். லாப்டாப்பை மூடி கக்கத்தில் சொருகிக்கொண்டே மாணிக்கம் தொடர போகும்வழியில் இன்னும் சில போலீஸ்காரர்களையும் கையசைத்து வரவழைத்துக்கொண்டார் நல்லசிவம். நேராக, ரிசார்டின் வெளிகேட்டருகே இருந்த முதல்தள சொகுசு அறை நோக்கி நடந்து, மாடி ஏறி, கதவருகே நின்று கதவைத் தட்டினார். கதவைத்திறக்க சற்று நேரமாவதை அவதானித்தபடியே அவர் அங்கு நிற்கையில் கதவு மெதுவாகத் திறந்தது. உள்ளிருந்து மாநிறத்தில் ஆறடி உயரத்தில் தொந்தியுடன் ஒருவர் வெளிப்பட்டு
‘எஸ்,…. சொல்லுங்க’ என்றுவிட்டு கதவை முழுக்கத்திறந்துவிட்டார்.
‘ஹலோ சார், ஐ ஆம் சிவம், இன்சார்ஜ் ஆஃப் திஸ் மர்டர் கேஸ். சாரி, உங்க ஹாலிடேல தொந்தரவு பண்றதுக்கு’ உள்ளே செல்லாமல் நின்ற இடத்தில் நின்றபடியே சொல்லிவிட்டு சிரித்தார் நல்லசிவம்.
‘அதனால என்ன பரவால்ல சார், சொல்லுங்க’. என்ற சங்கரின் முகம் சற்று அசூயையுடன் இருப்பதாகத் தோன்றியது.
‘சங்கர்ங்கறது நீங்கதானே?’
‘ஆமா சார்’.
‘சங்கர், நீங்க கொஞ்சம் ஸ்டேஷனுக்கு வரமுடியுமா?’.
‘ஸ்டேஷனுக்கா? நானா? ஏன் சார்’.
‘இங்க ஒரு கொலை நடந்திருக்கு. எனக்கு உங்க மேல சந்தேகமா இருக்கு. அதனால’.
‘என்ன!! சார், எது பேசறதா இருந்தாலும் யோசிச்சுப்பேசுங்க’.
‘கரெக்ட், யோசிச்சுப் பார்த்தா நீங்கதான் கொலையாளின்னு தோண்றது’.
‘வாட், என்ன சார், விளையாடுறீங்களா?’.
‘யாரு நானா? இல்ல நீங்களா?’.
‘நீங்கதான். எதை வச்சு சார் என்ன கொலைகாரன்னு சொல்றீங்க?’.
‘உங்க கைய வச்சித்தான்’
‘என்ன!!.. கையா? என்ன சொல்றீங்க?’.
‘ஆமா, உங்க கைதான் உங்கள காட்டிக்கொடுத்துடிச்சி’.
‘என்ன உளருரீங்க நீங்க. எப்படி சார். அந்தப் பொண்ண எனக்கு சுத்தமா தெரியாது. அப்புறம் எப்படி அவ்ளோ ஷ்யூரா சொல்றீங்க நாந்தான் கொலை பண்ணினேன்னு’.
‘ஹ்ம்ம் குட் கொஸ்டின். அந்தப் பொண்ணு வயித்துல கத்தியால குத்தப்பட்டு செத்திருக்கா. அதுவும் வலது பக்கத்துல. ஒரு வலதுகைப்பழக்கத்துக்காரனால குத்தினா, அவளுக்கு இடது பக்கமாதான் குத்த முடியும். அதுவும் இல்லன்னா நடுவுல குத்தலாம். வலது பக்கமா குத்தனும்னா குத்தினவன் இடதுகை பழக்கக்காரனாதான் இருக்கணும். இந்த ரிசார்ட்ல இன்னிக்கு யாருமே அப்படி இல்ல உங்களத்தவிர. யு ஆர் த ஒன்லி லெஃப்ட் ஹான்டர்.’
‘சோ!!.. சோ வாட் இஃப் ஆம் எ லெஃப்ட் ஹான்டர்?.. நாந்தான் கொன்னிருக்கணுமா? அந்தப் பொண்ண எனக்கு தெரியவே தெரியாது. நான் எதுக்கு கொல்லணும்?’.
‘குட். ரெண்டாவது ரீஸன். அந்தப் பொண்ண உங்களுக்குத் தெரியும். ஆனா, இப்ப தெரியாதது மாதிரி நடிக்கிறீங்க. கொலை நீங்க பண்ணலன்னா ஏன் நடிக்கனும்? பொய் சொல்லனும்?’.
‘வாட் டு யூ மீன்?’.
‘ஐ மீன், உங்களுக்கு அந்தப் பொண்ண ஏற்கனவே தெரியும். ஒரு வருஷம் முன்னாடி பாக்பேன்னு ஒரு கம்பெனில நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா வொர்க் பண்ணிருக்கீங்க. கம்பெனி மூலமா கிடைச்ச கார்போரெட் ஆஃபர்ல தான் இந்த ரிசார்ட்ல கோல்டன் மெம்பர் ஆகியிருக்கீங்கன்னு இந்த ரிசார்ட்ல பதிவாகியிருக்கு. உங்க கம்பனி பேர்ல மெயில் ஐடி யூஸ் பண்ணி அந்தப் பொண்ணு கூகிள் க்ரூப் தொடங்கியிருக்காங்க. அதுல நீங்க மெம்பர் ஆயிருக்கீங்க. போன மாசம் , அந்த கம்பெனிய விட்டு உங்கள வெளியேத்தியிருக்காங்க. அதுக்குக் காரணம் அவுங்க உங்க மேல கொடுத்த செக்ஸுவல் ஹராஸ்மென்ட் கம்ப்ளெய்ன்ட்ன்னு அந்த க்ரூப்ல அப்டேட் பண்ணிருக்காங்க. அது பிற்பாடு டிலிட் பண்ணப்பட்டிருக்கு. ஆனா, கூகிளோட இன்டெக்ஸ்ல அது அப்டேட் ஆகல. சோ இப்பவும் சர்ச் ரிசல்ட்ஸ்ல அது வருது. இது போதாதா? அந்தப் பொண்ண பழிவாங்க நினைச்சிருக்கீங்க. அவுங்க நீங்க தங்கியிருக்கிற ரிசார்ட்லயே ட்ரீட்க்கு வந்தது உங்களுக்கு தோதா போயிடிச்சி. அந்தப் பையன் ரெஸ்ட்ரூம் போய்ட்டு வர பத்து நிமிஷத்துக்குள்ள ஒருத்தனால கொலைப் பண்ண முடியும்னா அது இந்த ரிசார்ட்டுகுள்ள இருக்குற ஒருத்தனாலதான் முடியும். கொலையாளி ஒரு லெஃப்ட் ஹாண்டர். இந்த ரிசார்ட்ல இன்னிக்கு உங்களைத் தவிர வேற லெஃப்ட் ஹான்டர்ஸ் இல்ல. கொலைப்பழி யார் மேலயாச்சும் விழட்டும்னு நீங்க கொலை பண்ணிருக்கீங்க. ஆனா, நீங்க கொலைப்பண்ணும்போது அந்தப் பையன் ரமேஷ் ஒரு வலது கை பழக்கக்காரன்ங்கறத கவனிக்காம விட்டுட்டீங்க.’ என்றுவிட்டு மாணிக்கத்திடம் திரும்பினார் நல்லசிவம். அதிர்ச்சியாய் சங்கர் நல்லசிவத்தையே பார்த்தபடி நின்றிருந்தான்.
‘மாணிக்கம், இவரை அரெஸ்ட் பண்ணி ஜீப்ல ஏத்துங்க. அப்டியே இந்த ரூமை தரோவா செக் பண்ணுங்க. கொலைக்கு பயன்படுத்தின கத்திய இவரு வேற எங்கேயும் தூக்கி போடலன்னா அது இங்க தான் இருக்கணும். இங்க இல்லன்னா இவரு எங்கயாச்சும் தூக்கிப் போட்டிருக்கலாம். அத லாக்கப்ல வச்சி விசாரிச்சா தெரிஞ்சிடும். கோ அஹெட்’ என்றார் நல்லசிவம்.
‘நோ, திஸ் இஸ் அப்சர்டு. யு கான்ட் டூ திஸ். என் வக்கீல கேட்டுத்தான் நான் பேசுவேன். லீவ் மீ….’ என்றவாறே திமிறிய சங்கரை சில காக்கிச்சட்டைகள் வலுக்கட்டாயமாக போலீஸ் ஜீப்பை நோக்கி தள்ளிக்கொண்டு போக, பாண்ட் பாக்கேட்டில் கைவிட்டு செல் ஃபோனை எடுத்து துரைவேலனுக்கு லைன் போட்டார் நல்லசிவம்.
முற்றும்.
– ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 35
- இலக்கு
- 2007 இல் நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கம், அணு உலை விபத்து, அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் பாதுகாப்பு உளவுகள் -3 (ஜூலை 17, 2007)
- செம்மொழித் தமிழின் பொதுமை
- புலம்பெயர்தலும் , புலம்பெயர் இலக்கியமும் தமிழரும்!
- நிறைய அமுதம். ஒரு துளி விஷம். வைரஸின் கவிதைகள் எனது பார்வையில்.
- அலை மோதும் நினைவுகள்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 9
- பறவையின் தடங்கள் மலாய் மொழிக்கவிதைகள்
- பூர்வீக நிலம் அபகரிக்கப்பட்ட உலகின் வரலாற்றை புரட்டிய ஆதிமனிதன்
- தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பழக்கத் தொடர்பை விட்டுவிடு ! (Wean Yourself) (கவிதை -34)
- தேடும் உள்ளங்கள்…!
- சிலர் வணங்கும் கடல்
- சுயபரிசோதனை
- என் மூன்றாம் உலகம்!
- கவலை
- அறை இருள்
- அதனதன் தனிமைகள்
- அப்படியாகிலும் இப்படியாகிலும் …
- பிரச்சாரம்
- ஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு கடைசி பகுதி – நான்கு (4)
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் – 10
- இவர்களது எழுத்துமுறை – 37 ஹெப்சிபா ஜேசுதாசன்
- மனசு
- யார் கொலையாளி? – துப்பறியும் சிறுகதை
- விஸ்வரூபம் சில வாரங்களுக்கு பிறகு மீண்டும் தொடரும்
- ஊட்டவுட்டுத் தொரத்தோணும்
- யுத்தத்தில் வெளிவராதவை இன்னும் அதிக காலத்திற்கு இருக்கும்
- கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்,அவர்தம் குடும்பத்தின்மீதான தக்கலை அபீமுஅ ஜமாத்தின் ஊர்விலக்கு நடவடிக்கை சட்டவிரோதமானது
- வந்தே மாதரம் – தோற்றமும் இன்றைய பின்னடைவும்
- கணையாழியும் கஸ்தூரிரங்கனும்
- பெருங்கிழவனின் மரணம்
- அஞ்சலி: கி. கஸ்தூரி ரங்கன் 1933-2011)
- இரட்டை ரோஜா இரவு
- குதிரைகள் இறங்கும் குளம்
- என் மண்!
- அதுவரை பயணம்.
- களங்கமில்லாமல்..
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -4)
- மரணத்தின் தூதுவன்
- நெய்தல் போர்