யார் கூப்டதுங்க…?

This entry is part [part not set] of 26 in the series 20100212_Issue

உஷாதீபன்


அவனை அழைத்தது என் தவறு. ஆம்! என் தவறுதான்!!

ஒரு கணம் இப்படி நினைத்தபொழுதில்,”ஊஉற_ம், இல்லையே, நான் அழைக்கவில்லையே?” – சட்டென்று மனதிற்கு இப்படித் தோன்றியது.

அவன்பாற்பட்டு மனதில் ஏற்பட்;ட அந்தக் கணத்திலான இரக்கம், என் கண்கள் கண்ட காட்சி, உடனடியாக என் நினைப்பைப் புரட்டிப்போட்டது.

அவனை அழைக்கவில்லை நான். அது உண்மைதான். ஆனாலும் என்னால் நிகழ்ந்த நிகழ்வதானே அது?

குற்றவுணர்ச்சி தலையைடுத்தது. அட, ஆண்டவனே! ஏன் இப்படியெல்லாம் இந்த மனதுக்குத் தோன்றுகிறது? ஒரு கணத்தில் நிகழ்ந்துவிட்ட இந்தச் சம்பவத்துளி;க்கு, துளி என்றுகூடக் கூறலாமா கூடாதா? ஏன் இத்தனை சங்கடம் கொள்கிறது? இந்த மனது ஏனிப்படி மயிலிறகாய் நின்று வருடி உறுத்துகிறது? “நான் வேண்டாம்னு சொன்னேன். அது உங்க காதுல விழலை. நானென்ன பண்ணட்டும்…” -உள்ளேயிருந்து லலிதா கத்தினாள். ஜன்னல் வழியாக அங்கிருந்து அவள் கண்ட காட்சி அவளையும் உறுத்தி விட்டதோ என்னவோ? வரிசையாக நின்ற நெட்டுலிங்க மரங்களின் இடையே அவன் தன் சைக்கிளையும், அதன் காரியரில் உயரமாக நிறுத்தி வைத்துக் கட்டப்பட்டிருந்த மூட்டையையும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த காட்சி கண்ணில்பட்டது. உள்ளே போவதாஅல்லது அங்கேயே நிற்பதா? என்று எனக்குத் தெரியவில்லை. என்னால் நிச்சயம் அப்படி அந்தரத்தில் விட்டுவிட்டு உள்ளே போக முடியாது. போய் எனக்கென்ன என்று உட்கார முடியாது. அது பண்பாடாகவும் எனக்குத் தோன்றவில்லை. அந்த மாதிரி மனசும் எனக்கில்லை.

என் பெற்றோர் என்னை அப்படி வளர்க்கவில்லையே? நான் என்ன செய்யட்டும்? உள்ளே போய் அக்கடா என்று உட்கார்ந்துவிடலாம்தான். மனசாட்சி உறுத்துமே! மனசு ப+ராவும் வெளியிலேயே இருக்குமே? சக மனிதனை, அவனது உணர்வுகளை, உழைப்பை , மதிக்காத தன்மையல்லவா அது? அப்படியிருக்க என்னால் முடியாதே?

“உப்பு வேணுமா…?” –அப்படித் திண்ணையில் அமர்ந்துகொண்டு உள்ளே பார்த்துக் கத்திக் கேட்டது என் தவறுதான். வீட்டைக் கடந்து கொஞ்ச தூரம் போய்விட்ட அவன், சைக்கிளிலிருந்து பொத்தென்று கீழே குதித்தான். அவன் வைத்திருக்கும் பின் பாரத்திற்கு அப்படித்தான் குதிக்க முடியும். சாவகாசமாய் இறங்க முடியாது. குதித்த ஜோரில் வண்டியைத் தாங்கிப் பிடிக்க வேண்டுமே? …….2……….. – 2 – ; அவன் அப்படி வண்டியைத் தாங்கிப் பிடித்தது ஒரு கணம் என்னை உலுக்கித்தான்விட்டது. பின்னால் நாலு ஆள் கனமுள்ள அந்த உப்பு மூட்டையைக் கட்டிக்கொண்டு அதில் எப்படி ஏறினான் அவன் என்று ஆச்சரியமாயிருந்தது. ஏறின பின்னால் உழட்டாமல் பாலன்ஸ் செய்து, எதிர்வரும் நபர்களையும் வாகனங்களையும் சமாளித்து ஒதுங்கி எப்படி ஓட்டி வந்தான்? எங்;கிருந்து, எவ்வளவுதூரம் இப்படி ஓட்டி வருகிறான்?

அங்கங்கே இறங்கி, ஏறி, இறங்கி ஏறி, இந்த உப்பு அத்தனையையும் படிபடியாய் அளந்து போட்டு, விற்று முடித்து, சாக்கை மடித்துக் கட்டிக் கொண்டு அவன் எப்பொழுது திரும்ப வீடு போய்ச் சேருவான்? சே! நான் ஒரு முட்டாள்! தெருத் திரும்பும்பொழுதே, அந்த முதல் வீட்டில் வாங்கியபோதே இறங்கியவனை, அப்படியே அழைத்திருக்கலாம். மூன்றாவதாக இருக்கும் தனது வீட்டிற்கு அப்படியே உருட்டிக் கொண்டாவது வந்திருப்பான்? அதல்லாமல் அங்கிருந்து அவன் ஏறிய பிறகு, கொஞ்ச தூரத்தில் அவன் மறுபடியும் இறங்கவேண்டி வந்துவிட்டதே? அப்பொழுதே கேட்டிருக்க வேண்டும் லலிதாவிடம். கேட்டதுதான் கேட்டோம். உள்ளே போய் கேட்டிருக்கக் கூடாதா? அதென்ன திண்ணையில் இருந்தமேனிக்கே கத்துவது? சுவாரஸ்யமாய்ப் படித்துக் கொண்டிருந்த தினசரிக்கு மத்தியில், இருந்தபடிக்கே யதார்த்தமாய்க் குரல் கொடுக்கப் போக, அவன் கீழே பொத்தென்று குதித்து வைக்கப் போக…என்ன தர்ம சங்கடம் இது? உனக்கு வாழ்க்கையின் ஒரு நாள் பொழுது இப்படி இதமாய்த் துவங்குகிறது. இடது கையில் தினசரி, வலது கையில் டிகாக்ஷன் காபி என்று? எல்லோருக்கும் அப்படியா? உழைத்து, உருகி, செத்துச் சுண்ணாம்பாகி வீடு திரும்பி, பிறகு உலை வைத்து, அதற்குப்பின் உயிரை உயிர்ப்பித்துக் கொள்ள அல்லவா வேண்டியிருக்கிறது பல பேருக்கு? மனசாட்சி உறுத்தி உருக்குலைத்தது என்னை!

யார் அழைத்தது என்று தெரியாமல் அவன் இன்னும் நின்று கொண்டிருப்பது புரிந்தது. இறங்கியது இறங்கியாயிற்று. இறங்கி இறங்கித்தானே விற்றாக வேண்டும். அதற்கு இணங்கித்தானே கிளம்பி வந்தது? மனம் சம்மதித்துத்தானே சுமந்து புறப்பட்டது? “உப்பு…கல் உப்ப+!…உப்ப+…..கல்லுப்ப+!!…” – குரல் ஓங்கி ஒலித்து அந்த வீதியையே எதிரொலித்தது.

“யம்மா…கூப்டீங்களா…? அய்யா கூப்டீங்களா சாமி…..? யார் கூப்டது தெரியலியே…?” – அடுத்தடுத்த வீடுகளின் வாசல்களில் அவன் குரலின் எதிரொலி. இவள் வேறு வேண்டாம் என்று விட்டாள்! என் குரல் கேட்டுத்தானே அவன் இறங்கினான்?

திருடனைப்போல் மறைவாய் நின்று கொண்டிருந்தேன். ‘உள்ளேதாம்ப்பா கேட்டேன்…நீ சத்தம் கேட்டுப் படக்குன்னு இறங்குவேன்னு கண்டேனா?’ – எப்படிச் சொல்லுவேன்? யாரென்று தெரியாமல்தானே நிற்கிறான். அப்படியே கொஞ்ச நேரம் கேட்டுவிட்டுக் கிளம்பிப் போய்ச் சேரட்டும்…வேறென்ன செய்வது? எது எதெற்கெல்லாம்தான் மனிதன் வருத்தப்படுவது? எழுந்தேன். அடிமடியில் மூத்திரம் முட்டுவதுபோல் ஒரு பிரமை. செய்தித்தாளை ஓரமாய் வீசிவிட்டு, கழிப்பறையை நோக்கி ஓடினேன். ….3…… – 3 – “மெதுவாய்ப் போக வேண்டிதானே? இதுக்கெதுக்கு இவ்வளவு அவசரம்?” “அவசரமா வருதுடி…உனக்கென்ன தெரியும் என் கஷ்டம்…?”

எதற்கோ ஓடி ஒளிந்துகொள்வதுபோல் இருந்தது. உள்ளுணர்வு உறுத்தியது. இன்னும் நின்றுகொண்டுதான் இருப்பானோ? ஒரு முறை வண்டியில் இருந்து இறங்கிவிட்டால் அதுவே அவனுக்குப் பெருத்த ஆசுவாசமோ?

“இறங்குவது பயனுள்ளதாக இருக்க வேண்டும். இறங்கினால் உப்பு விற்க வேண்டும். அதுதான், அப்பொழுதுதான் பலன். உழைக்கும் உழைப்புக்குப் பலன். அப்படித்தானே? அங்கங்கே அந்தப் பலமான, சுமையான, பின் மூட்டையுடன் சைக்கிளிலிருந்து இறங்காமல் வெறுமே காலூன்றி நிற்க முடியாதே? செய்துதான் பார்க்கட்டுமே யாரேனும்? அவனுக்கல்லவா தெரியும் அந்தக் கஷ்டம்? அப்பாடா…! என்ன சுகம்…? என்ன சுகம்…? பெருத்த ஆசுவாசத்தோடு கழிப்பறையைவிட்டு வெளியே வந்தேன். கை, கால் அலம்பிக்கொண்டேன். எனக்குக் கிடைத்த இந்த ஆசுவாசம், அவனுக்கு எப்பொழுது கிடைக்கும்? இன்று மதியமா? மாலையா? அல்லது இரவாகுமா? அந்த உப்பு மூட்டை முழுவதும் விற்று முடிய இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் அவனுக்கு? இன்னும் எங்கெங்கெல்லாம் போக வேண்டியிருக்கும் அவன்? அவனை நினைக்க நினைக்க எனக்கு நெஞ்சு கனக்க ஆரம்பித்தது. இறைவா! இந்த மனதை ஏனிப்படிப் படைத்தாய்? படைத்ததா? வந்ததா? இருக்கட்டுமே! நல்லதுதானே? முகமறியா ஒருவனுக்காகக் கூட இரக்கம் கொள்வது பெருத்த நேய உணர்வு அல்லவா? அந்தப் பண்பாட்டு அசைவைப் பெற்றதே பெரும் பேறல்லவா? மீண்டும் தினசரியை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தேன். லலிதா கையில் ஜாடியோடு திரும்பிக் கொண்டிருந்தாள். மேலே கும்மாச்சியாக உப்பு நிரம்பியிருந்தது. அது சரிந்துவிடாமல் அவள் கை அதை அணைத்து மூடியிருந்தது. “இருக்குன்னு சொன்னே…?” – அவளைப் பார்த்துக் கேட்டேன்.

“இருக்குதான்…யார் இல்லைன்னு சொன்னா? நீங்க வேறே கூப்பிட்டுட்டீங்க…ரொம்ப நேரமா நிக்கிறான் அவன்…யாரும் வாங்குறாப்புல இல்லை…பாவமா இருந்தது…உப்பென்ன கெட்டா போகப் போறது? கூடக் கொஞ்சம் கெடந்தா கெடந்துட்டுப் போறதுன்னு வாங்கிட்டு வந்தேன்…உப்பு நல்லா வெள்ளை வெளேர்ன்னு இருக்குங்க…சில பேர்ட்டக் கொஞ்சம் கலங்கலா இருக்குமாக்கும்…” “உன் மனசு போல இருக்குன்றே…? “ –என் மனதில் ஏற்பட்ட சட்டென்ற ஒரு திருப்தியில் இப்படிப் புகழ்ந்தேன் அவளை. காதில் வாங்கிக் கொண்டாளா தெரியவில்லை. இப்பொழுது தைரியமாய்த் தெருவில் இறங்கி, முழுசாய் என்னைக் காண்பித்துக்கொண்டு, அவனை நன்றாய் நிமிர்ந்து பார்த்தேன். உப்பு மூட்டையை உடம்பில் சாத்தித் தாங்கினமேனிக்கு,வலது முழங்காலை சற்றே மடித்து நின்றுகொண்டு, வழிந்தோடிய வியர்வையை அழுந்தத் துடைத்துவிட்டுக் கொண்டிருந்தான் அவன்!!

Series Navigation

உஷாதீபன்

உஷாதீபன்