யாரும் இங்கு மரணிக்கவில்லையே!

This entry is part [part not set] of 29 in the series 20050902_Issue

ம.ஜோசப்


நான் ஒரு மன நோயாளி என்று
ஒப்புக் கொள்ளவே விரும்புகிறேன்.
என் மன நோய்க் கூறுகள் நான்
தெளிவாக உணரும்படியே உள்ளன.

மரணபயம் மிக அதிகமாகிப் போனது.
எப்போதும் நான் இறந்துவிடுவேனோ ?
என மிகவும் பயப்படுகிறேன்.
பேருந்தில் பயணிக்கும் போது
பெரும் விபத்து ஏற்பட்டோ,
எங்கிருந்தாவது கீழே விழுந்தோ,
இடி விழுந்தோ,
பேரலையில் சிக்கியோ,
அல்லது ஏதாவது ஒரு உயிர்க் கொல்லியால்
இறந்து போவேனோ என பயம் கொள்கிறேன்.

என சக பணியாளர் இன்னேரம்
இறந்திருப்பாரோ என திடாரென நினைக்கிறேன்.

என் மனைவி இன்று இறந்துவிடுவாளோ ?
என் குழந்தையும் அப்படித்தானோ ?
எனவும் மிகவும் பயந்து சாகிறேன்.
பணி முடிந்து மாலையில் அவர்களைப்
பார்த்த பின்பே சமாதானம் அடைகிறேன்.
இரவுகளில் திடாரென எழுந்து
அவர்களை தீர்க்கமாய் உற்று நோக்குகிறேன்.
அவர்களின் சீரான மூச்சை
உறுதிப்படுத்திய பின்பே ஆசுவாசமடைகிறேன்.

திடாரென எங்காவது எழும் அலறல் சத்தம்
மரணத்தின் ஓலமா ?, என பதைபதைக்கிறேன்.

பாதி உணவு அருந்திக் கொண்டிருக்கையில்
உணவு தொண்டையில் சிக்கி சாவதைப் போல்,
ஒரு நாள் தந்தையை ,
இதயத்தை அமுக்கி அழைத்துச் சென்றது மரணம்.
அதிகாலை சூர்யோதயத்திற்கு காத்திருந்த போது-
எங்கும் இருள் அடைத்துக் கொண்டது போல்,
புதிதாய் பிறந்த என் மகன்
அரை நாளிலேயே இறந்து போனான்.

இவைகளுக்கும், மன நோய்க்கும் இருக்கும்
தொடர்புகள் குறித்து எனக்கு
அதிகம் தெரிந்திருக்கவில்லை, நண்பர்களே!.

ம.ஜோசப்.
17.6.2005.

Series Navigation

ம.ஜோசப்

ம.ஜோசப்