யாருக்காவது ஓட்டு போட்டுதான் ஆக வேண்டுமா ?

This entry is part [part not set] of 52 in the series 20040422_Issue

ஞாநி


ஓ போடு கட்டுரைக்கு வந்த பல எதிர்வினைகளில் சில இந்த இதழில் வேறு பக்கங்களில் தரப்பட்டிருக்கின்றன. அவற்றைத் தொகுத்துப் பார்த்தால் சொல்லப்படும் முக்கியமான கருத்துகள் இரண்டுதான்.

தேர்தல் சீர்திருத்தம் தேவை. எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமை ஓட்டுச் சீட்டிலேயே இயந்திரத்திலேயே சேர்க்கப்பட்டால் நல்லதுதான். விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறைதான் நமக்குச் சிறந்தது. தற்போதைய கூட்டணிக் குழப்பங்களுக்கெல்லாம் அது நல்ல தீர்வுதான்.

ஆனால் தேர்தல் சீர்திருத்தங்களைப் பற்றி இப்போது பேச வேண்டாம். இந்தத் தேர்தலில் மதவெறி பாரதிய ஜனதா – அராஜக அதிமுக கூட்டணி அதிகாரத்தைப் பிடிக்காமல் தடுத்தேயாக வேண்டும். அதற்காக அதன் எதிர் கூட்டணிக்கு ஓட்டு போட்டாக வேண்டும். யாருக்கும் போடாமல் இருந்தால் அது பி.ஜே.பிக்கே சாதகமாக முடியும். தேர்தல் சீர்திருத்தங்களைப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம்.

இந்த வாதங்களுடன் என்னால் உடன்பட முடியவில்லை.

முதல் காரணம் , தி.மு.க, பா.ம.க, ம.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுவதன் மூலம் பிஜேபியைத் தடுத்து விட முடியும் என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்தக் கட்சிகள் தற்போது பி.ஜே.பிக்கு எதிராக இருந்தாலும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தேவைப்பட்டால் மறுபடியும் பி.ஜே.பியுடன் சேர்ந்து கொள்ள மாட்டார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை. அப்படியானால் அவர்களை இப்போது எந்த நம்பிக்கையில் ஜெயிக்கவைத்து அனுப்புவது ?

நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு என் கட்சித்தலைமை பி.ஜே.பியுடன் அணி சேர்ந்தால், நான் என் எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று இந்த வேட்பாளர்கள் யாராவது உறுதிமொழி கொடுக்க முடியுமா ? கொடுக்கக் கூடியவரகளா ? இல்லையே. அப்படி இருக்கையில் இவர்களைக் கொண்டு பிஜேபியைத் தடுத்துவிட முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பி.ஜே.பியை மாறி மாறி வளர்த்த பெருங் குற்றவாளிகள் இவர்கள்.

தேர்தலுக்குப் பின் பி.ஜே.பிஅணியுடன் தி.மு.க, பா.ம.க, ம.தி.மு.க போகாமல் இருப்பது என்பது அவர்களுடைய நேர்மை சம்பந்தப்பட்டதாக இருக்காது. காங்கிரஸ் எந்த அளவுக்கு அதிகமாக தொகுதிகளை வென்று வரும் என்பதைப் பொறுத்தே இவர்கள் எந்தப் பக்கம் சாய்வார்கள் என்பது முடிவாகும், இதுதான் அரசியல் யதார்த்தம்.

இரண்டாவது காரணம், தேர்தல் சீர்திருத்தங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற வாதத்திலும் எனக்கு நம்பிக்கையில்லை. அந்தப் பிறகு எப்போது ? அதை யார் செய்யப் போகிறார்கள் ? இந்த ஓட்டை தேர்தல் முறையில் சுகங்கண்டு கொண்டிருக்கும் இதே கட்சிகளா ? தேர்தல் நேரத்தில்தான் தேர்தல் முறையின் பற்றக் குறைகள் பற்றியும், தேவைப்படும் திருத்தங்கள் பற்றியும் மக்கள் கவனத்தை ஈர்க்க முடியும். மற்ற நேரத்தில் இதில் மக்கள் கவனம் துளிக் கூட கிடையாது. கிடைக்காது.

மக்கள் கவனம் குவிந்திருக்கும் வேளையில், மக்களிடம் இருக்கும் ஒரே அதிகாரம், ஒரே ஆயுதமான ஓட்டிற்காக அவர்களை கட்சிகள் தாள் பணியும் இந்த நேரத்தில்தான், மக்கள் அந்த ஓட்டைக் கொண்டு சட்டத்தையே கேள்விக்குள்ளாக்க முடியும். அதற்கு 49 ஓ பிரிவு ஒரு கருவி. ஓட்டுச் சாவடிக்கு செல்லாமலிருக்கும் எல்லாரும் சென்று 49 ஓவை பிரயோகித்தால், தற்போதைய தேர்தல் முறையே சட்டத்தின் முன்னால் ஸ்தம்பித்துவிடும். இது ஒரு கனவுதான். ஆனால் எல்லா நனவுகளும் ஒரு கனவுப் புள்ளியில்தான் தொடங்கியாக வேண்டும்.

அப்படியானால் உடனடியாக இந்தத்தேர்தலில் என்னதான் செய்யச் சொல்கிறாய் ? 49 ஓ தானா ? பாசிச சக்திகள் மறுபடியும் தேர்தலில் வெல்லும் அபாயம் உள்ள சூழ் நிலையில், 49 ஓ பற்றி பரவலாக மக்களிடையே எந்த விழிப்புணர்வும் ஏற்படாத தருணத்தில், அதைப் பயன்படுத்துவது பாசிச பூதத்தின் உடலில் ஒரு சிறு கீறலைக் கூட ஏற்படுத்தாதே ? வேறு வழி இல்லையா என்று இந்தப் பிரச்சினை குறித்து தொடர்ந்து என்னுடன் விவாதித்து வரும் பல நண்பர்கள் கேட்கிறார்கள்.

பி.ஜே.பியை தேர்தல் அரசியல் மூலமாக மட்டுமே வீழ்த்தி விட முடியாது என்பதுதான் எல்லாரும் சந்திக்க மறுக்கிற, தயங்குகிற உண்மை.

அன்றாட வாழ்க்கையில், ஒவ்வொரு அம்சத்திலும், முஸ்லிம்- கிறித்துவ எதிர்ப்புணர்வையும், பொருளாதார சுயநல உணர்வையும், போலி தேசபக்தியையும் ஆர்.எஸ்.எஸ்சின் பலவேறு அவதாரங்கள் மக்கள் மனதில் விதைத்து வந்திருக்கின்றன. அதன் அறுவடைத் திருவிழாவாகவே தேர்தல் களம் அவர்களால் பார்க்கப்படுகிறது.

அன்றாட வாழ்க்கையில் மக்கள் மனங்களில் வேலை செய்யும் எந்த நடவடிக்கையையும் உறுதியாகவோ, தொடர்ச்சியாகவோ மேற்கொள்ளாத இடதுசாரி, ஜனநாயக சக்திகள் தேர்தல் களத்தில் மட்டும் பி.ஜேபியை உறுதியாக எதிர்த்து பெரிய பயன் வந்து விடாது என்பதைத்தான் அண்மைக் கால தேர்தல்கள் நிரூபித்திருக்கின்றன.

என்றாலும் தேர்தலும் முக்கியம்தான். யாருக்கு ஓட்டு போடுவது, சொல்லித் தொலை என்கிறார்கள் நண்பர்கள். சொல்லிவிடுவோம்.

பி.ஜே.பியோடு தேர்தலுக்குப் பின்னர் போய் சேர்ந்து கொள்ள மாட்டார்கள் என்று நான் இப்போதைக்கு கணிக்க கூடிய கட்சிகள் – காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மட்டுமே.

எனவே காங்கிரஸ் போட்டியிடும் மயிலாடுதுறை, சிவகங்கை, கோபி, பழநி,ராசிபுரம், திண்டுக்கல், பெரியகுளம், திருநெல்வேலி, சேலம், நீலகிரி ஆகிய பத்து தொகுதிகளிலும், கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தென்காசி, கோவை தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடும் மதுரை, நாகர்கோயில் தொகுதிகளிலும் ஆக 14 தொகுதிகளில் மட்டுமே 49 ஓவைப் பயன்படுத்த வேண்டாம் என்று கருதுகிறேன்.

இந்த வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டளித்து பி.ஜே.பி- அ.தி.மு.க அணியை முறியடிக்கலாம்.

பி.ஜே.பி போட்டியிடும் ஆறு தொகுதிகளில் இடதுசாரிகள் எதிர்க்கும் இரண்டைத் தவிர, மற்ற நான்கில் மூன்றில் பா.ம.கவும்,ஒன்றில் தி.மு.கவும் .பிஜேபியை எதிர்க்கின்றன. இங்கெல்லாம் பி.ஜே.பிக்கு சார்பாக மூன்றில் பா.ம.கவை எதிர்க்கிறது ரஜினி மன்றம். இந்த ரஜினிகாந்த் ஒரு அரசியல் சக்தி என்ற மாயையை வளர்த்தவர்களில் முன்னோடி முக்கியமானவர் கலைஞர் கருணாநிதிதான். இன்று அதன் விளைவை அவரது அணியே அனுபவிக்கிறது.

முதலில் குறிப்பிட்ட பதினான்கு தொகுதிகளைத் தவிர தமிழகம், பாண்டிச்சேரியில் மற்ற எல்லாவற்றிலும் என் பரிந்துரை 49 ஓ தான்.

தீம்தரிகிட ஏப்ரல் 2004

dheemtharikida @hotmail.com

Series Navigation

ஞாநி

ஞாநி