யாதும் ஊரே….

This entry is part [part not set] of 27 in the series 20021027_Issue

ஆர்.உஷாராணி


புலம் பெயர்த்தல் பற்றி இலங்கை தமிழர்கள் பக்கம், பக்கமாய் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.பிழைப்புக்காக இடம் மாறுதல் ஒன்று, அகதிகளாய் பிறந்த மண்ணை விட்டு வருவது வேறு.அடுத்த தலைமுறையினர் பிறந்த மண்ணையே தங்கள் தாய் நாடாக நினைக்க தொடங்கி விடுவர்.ஆனால் அதை உள்ளூர்காரர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது வேறு விஷயம்.

என் மூதாதையினரும் இப்படித்தான் பல தலைமுறைக்கு முன்பு கர்நாடகத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து குடியேறியவர்கள். அதனால் என்னுடய தாய் மொழி கன்னடம் என்று சொல்லப்பட்டது.ஆனால் இந்த மொழியில் எழுத படிக்க யாருக்கும் தெரியாது.

இப்போது போல் மின்னணு தொடர்பு சாதனங்கள் அந்த காலத்தில் இல்லாததால் பிறந்த மண்ணின் தொடர்ப்பு முழுவதும் அறுந்துபோயின.

எங்கள் திருமண உறவுகளும் தமிழ்நாட்டு கன்னடியர்களுடன் தான். எங்களுடைய கன்னடம் தமிழருக்கு நன்கு புரியும்.அத்தனை தமிழ் வார்த்தைகள் கலந்து இருக்கும். யாராவது ஒரிஜினல் கன்னடக்காரர்கள் நாங்கள் பேசுவதைக்கேட்டால் அலறி அடித்துக்கொண்டு ஓடுவார்கள்.

இப்படி தாய்மொழி ஓன்று,தாய் மண் வேறு என்ற வித்தியாசம் சென்னையில் வசிக்கும் அதிகமாய் பாராட்டபடவில்லை.

ஆனால் சென்னையை விட்டு பிழைப்புக்கு துபாய்க்கு வந்த பிறகு, இந்த முரண்பாட்டை பற்றி கேட்காதவர்கள் இல்லை. கன்னடக்காரர்கள் ஆர்வத்துடன் ,பேச தொடங்கினால் நாங்கள்பேசுவது அவர்களுக்கு புரியாது,அவர்கள் பேசுவது எங்களுக்கு புரியாது. இதில் விசேஷம் என்னவென்றால் தூய கன்னடத்தில்,அதாவது மேடை பேச்சு போல பேசினால் ஓரு வார்த்தை கூட புரியாது.

எங்கள் பிள்ளைகளோ பள்ளியில் படிப்பது ஆங்கிலம்,துணை பாடம் பிரஞ்சு,கட்டாய அரபி, தொலைகாட்சி தமிழ், தாய் மொழி என்கிற கன்னடம்,இந்திபட்த்தை பார்த்து கற்றுக்கொண்ட ஹிந்தி. இதில் சோகம் என்ன வென்றால் ஆங்கிலம் தவிர மற்றவை எல்லாமே அறைகுறைதான்.

துபாயில் எத்தனை வருடங்கள் இருந்தாலும் குடியுரிமை கிடைக்காது, இவ்வூர் ஆட்களின் ஜனதொகையே அதிகரித்துக்கொண்டு இருப்பதால், நாளை எங்கள் பிள்ளைகளுக்கு இங்கு வேலை கிடைக்கபோவதில்லை,எந்த நாட்டுக்கு போனாலும், இந்தியா உட்பட இரண்டாம்தர குடியுரிமையினராய் நடத்தபடுவார்களே என்ற கவலைப்பட்டுக்கொண்டு இருந்தோம்.

ஆனால் அந்த கவலை இப்போது அடியோடு அகன்று விட்டது.இந்தியாவுக்கு போனால் எந்த மொழி பிரச்சனையும் இல்லை. எல்லா நகரங்களிலும் , படித்தவர்களின் தொடர்ப்பு மொழி ஆங்கிலம் என்று ஆகிவிட்டதே! தாய் மொழி என்று ஓரிருவர் பேசினாலும்,பேச்சு மட்டுமே வழக்கில் இருக்கில் இருக்கிறது. மேலும் தாய் மொழி தெரியாது என்பதுதானே இப்போது பேஷன்!இந்த பேஷன் நம் தமிழ்க்கு மட்டும் அல்ல, எல்லா இந்திய மொழியினருக்கும் உள்ளது. இன்னும் ஐம்பது வருடங்களில் சமஸ்கிருதத்திற்கு ஏற்பட்ட கதிதான் எல்லா இந்திய மொழிக்கும்!

***

ramachandranusha@rediffmail.com

Series Navigation

ஆர். உஷாராணி (U.A.E.)

ஆர். உஷாராணி (U.A.E.)