ம அருணாதேவி கவிதைகள்

This entry is part [part not set] of 34 in the series 20080424_Issue

ம அருணாதேவி


I. தொலைபேசி

1. call is waiting
———————-
எனது தொலைபேசி அழைப்பு
வியாபார நிமித்தம்தான்.
எங்கள் நிறுவன முதலாளியின்
கட்டளைப்படி.

ஆனால்
அதை நீங்கள்
உள்வாங்கிக்கொள்வதோ
விசித்திரமானது.

அன் முகம் பார்க்க ஆசைப்படுவீர்கள்
என் அலுவலகம் வர ஆசைப்படுவீர்கள்
என்னுடன் காலை, மாலை உணவோ
மாலை தேநீரோ. இரவு விருந்தோ
உண்ண ஆசைப்படுவீர்கள்.

என் குரலின் மகத்துவம் சொல்வீர்கள்
எரிச்சலாய் உங்கள் வீட்டுப் பெண்மணியின்
குரலும் இருக்கும்
வசவும் இருக்கும்.

எல்லாவற்றுக்கும் என்னிடம் இருப்பது
சம்பிரதாய பதில்கள்தான்
சம்பிரதாய் புன்னகைதான்
எல்லாம் என் தொழில் நிறுவநரின் கட்டளைதான்.
எனக்கான் ஒரு தொலைபேசி அழைப்பு
என்னிடம் இருந்தோ
உங்களிடம் இருந்தோ
இதோ
காத்துக் கொண்டே இருக்கிறது.

2. நீங்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறீர்கள்
————————————————————————

எனது அழுகைகள் உங்களுக்கு
ஒளிபரப்படாமல் காற்றில் கரைகின்றன.

3. Number is busy- try again
————————————–
என் குரலுக்கான எல்லா காதுகளும்
மூடப்பட்டு விட்டன.
உங்கள் காதுகள் திறக்கப்படும் போது
எனது குரல்கள் தொண்டைக்குள்ளே
அமிழ்ந்து போயிருக்கலாம்.

4. I am sorry
—————-
எனது குரல்களை
நீங்கள் கேட்க முடியாதபடி
இது நிரந்தரமாகப் பதிவாகிவிட்டது.

5. Please wait
——————–
உங்களுக்கான நாற்காலிகளை
உடனே நிரப்பிக் கொள்ளுங்கள்
இல்லாவிட்டால்
உங்களுக்கான சவப்பெட்டிகளும்
கிடைக்காமல் போகலாம்
நாற்காலிகளை நிரப்பிக் கொள்கிறவர்கள்
அதிஸ்டசாலிகள்

6.Switched off
——————–

எல்லா வழிகளும்
அடைக்கப்பட்டிருக்கின்றன.



II விடுதி

————
சில கட்டில்கள் ஒட்டி கிடக்கின்றன.
சில கட்டில்கள் பிரிந்து கிடக்கினறன.

எந்த நேரத்தில் யாருக்கு
தூக்கம் தழுவும்
யாருக்கும் தெரியாது.

விடிவது எப்போது
எப்போது தூங்கினோம்
தெரியாது.

அவரவர் பைகள்
அழுக்கையும் புதுசையும்
திணித்துக் கொண்டு
பல்லிளிக்கின்றன.

மீந்த சோற்றை
எறும்பு மொய்க்கின்றது

கண்ணாடிகள் பல கோடுகளுடன்
பல்லிளிக்கின்றன.

விளக்கு வெளிச்சம்
இருளைத்தான் துப்புகின்றது

மேக்கப் போட மட்டும் நேரம் இருப்பது
எங்களை முகமூடிகளாக்குகிறது.

முகமூடிகளுடன் உலாவருகிறோம்
வீதிகளில்.



III. மனம்
=======
தாழ்ந்து தாழ்ந்து பறவை
நிலத்தில் கொத்தி மோதிப்
பறக்கிறது.

மீண்டும் மீண்டும்
பறத்தல் நிகழ்கிறது.

விதையோ தானியமோ
கிடைக்காமல் போகலாம்

பறவை தாழ்ந்து பறப்பது
நிற்பதில்லை

உன்னிடம் தாழ்ந்து
பறக்கிறது என்மனம்.
விதையோ தானியமோ
கிடைக்காதபோதும்.

arunaa_devi2007@rediffmail.co.in

Series Navigation

ம அருணாதேவி

ம அருணாதேவி