மோகன்தாஸ் கொலையும், அதற்கு நாதுராம் நிறுவிய நியாயங்களும்

This entry is part [part not set] of 34 in the series 20060113_Issue

மலர் மன்னன்


(காந்திஜி, கோட்ஸே ஆகிய பெயர்களின் சேர்மானம் காலங் காலமாக ஒரு முன்கூட்டிய அபிப்பிராயத்தை மக்களிடையே உருவாக்கி விட்டிருப்பதால் எனது கட்டுரையின் தலைப்பில் இவ்வாறான பெயர்களைப் பயன்படுத்தியுள்ளேன். இவ்வாறு தலைப்பிடுவதன் மூலம் எவ்வித முன் முடிவுகளோடும் கட்டுரையுள் புகும்விதமாக வாசகருக்கு மனத்தடை ஏற்படாது தவிர்க்கலாம் என்ற நம்பிக்கையில்!)

-மலர் மன்னன்-

போர்க்களத்தில் எதிரெதிர் தரப்பு சிப்பாய்கள் ஒருவரையொருவர் எதிர்கொள்கையில், ஒருவரை இன்னொருவர் கொன்றும் போடுகிறபோது, அதில் ஒருவர் நிராயுதபாணியாகவே இருந்தாலும் கூட அது ஒரு கொலைக் குற்றமாகக் கருதப்படுவதில்லையே, ஏன் ?

அந்த இரு மனுஷர்களும் ஒருவரை யொருவர் முன்பின் அறியார். அவர்களில் ஒருவரால் மற்றவருக்கு மரணமே சம்பவித்தாலும், அதற்கு சொந்தக் காரணத்தின் அடிப்படையிலான உள்நோக்கம் ஏதும் இல்லாததால் அது ஒரு கடமையின்பாற்பட்ட கருமமாக அங்கீகரிக்கப்படுமேயன்றி மரண தண்டனை விதிப்பதற்கான குற்றமாகக் கொள்ளப்படமாட்டாது.

பாரத தேசத்துப் பெரும்பாலான அப்பாவி ஹிந்து ஜனங்களும், ஓரளவு கணிசமான கிறிஸ்தவர்களும், மிகமிகக் குறைந்த எண்ணிக்கையிலான முகமதியரும் மஹாத்மா என்றும், பாபு (தந்தையார்) என்றும் அழைக்கும் மாபெரும் சக்தியாக சுதந்திரப் போராட்ட காலத்தில் விளங்கிய, ‘காந்திஜி ‘ என மரியாதையுடன் அறியப்பட்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் அரசியல் நடவடிக்கைகள் தொடக்கத்திலிருந்தே அவருடைய மிகப் பெரும்பாலான பக்தர்களான ஹிந்துக்களின் நலனுக்குப் பாதகமாகவே இருந்தன. நமது தேசம் ஹிந்துக்கள் பெரும்பாலானவர்களாக உள்ள ஹிந்துஸ்தானம் என அறியப்பட்ட தேசமாதலால், அவரது அரசியல் நடவடிக்கைகள் இறுதியில் தேசப் பிரிவினை என்ற உச்ச கட்டமாக, ஹிந்து-முகமதியர் என்று மத அடிப்படையில் இரு நாடுகள் தோன்றி, ஹிந்துஸ்தானத்திற்கு இன்றளவும், இந்த நிமிடம் வரையிலும் பாதகமாகவே அமைந்து போயின.

காந்திஜிக்கு ஹிந்துக்களின் பேராதரவு, அவரே எதிர்பாராத வண்ணம் அரசியல் தலைமை ஸ்தானத்தை எளிிதில் தந்துவிட்டது. எனினும் காந்திஜிக்குத் தேவைப்பட்டது பாரத மக்களனைவர் சார்பிலுமான ஒட்டுமொத்த பிரதிநிதித்துவம், அல்லது தலைமை ஸ்தானம். தம்மை பாரதநாட்டவர் அனைவர் சார்பிலும் பேசும் அரசியல்தலைவராகத்தான் அவர் முன்னிலைப் படுத்திக்கொண்டார். ஆனால் காய் நகர்த்துவதில் சாமர்த்தியம் மிக்க ஆங்கிலேய தர்பார், பெருகிவரும் அவரது செல்வாக்கிற்கு அணைகட்டும் பொருட்டு, சில முகமதியத் தலைவர்களை (ஜின்னாவை அல்ல) கைக்குள் போட்டுக் கொண்டு, ‘நீ பாரத நாட்டு மக்களின் ஒட்டுமொத்தமான பிரதிநிதியல்ல, ஹிந்துக்களின் கட்சியான காங்கிரசின் தலைவர் மட்டுமே. குறிப்பாக ஹிந்துக்களுக்கு அடுத்தபடிப் பெரும்பான்மையினராக உள்ள முகமதியர் உன்னைத் தங்கள் பிரதிநிதியாக ஏற்றிருப்பதாகக் கூறுவதற்கு இல்லை. அதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. எனவே உன்னை ஹிந்துக்களின் பிரதிநிதியாகக் கருத இயலுமே யன்றி பாரத தேசத்தவரின் பிரதிநிதியாக ஏற்கமுடியாது. அதிலும் ஹிந்து சமூகத்திலேயே உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் பிரநிதிதியாகக் கூடக் கருத இயலாது. வேண்டுமானால் இதோபார், இந்த முகமதியப் பிரமுகர்களை, இவர்கள் உன்னைத் தங்கள் பிரதிநிதியாக அங்கீகரிக்கவில்லை ‘ என்று கூறியது. காந்திஜி இதற்கு என்ன சொல்லியிருக்க வேண்டும் ? ‘பாரத தேசத்தவரை மதத்தின் அடிப்படையில் பிரித்துப் பேச நீ யார் ? இங்கே நகரத்திற்கு நகரம், ஊருக்கு ஊர், ஹிந்து, முகமதியர்,

கிறிஸ்தவர் ஆகிய அனைவரும் சேர்ந்தே வாழ்ந்து வருகிறோம். 1857-ல் நடந்த எமது முதல் சுதந்திரப் போர்கூட ஹிந்துக்களும் முகமதியரும் இணைந்து உங்களை வெளியேற்றும் முயற்சியாகத்தான் இருந்தது. மேலும் நீ சொல்கிறாற்போல நான் ஒரு தரப்பு ஹிந்துக்களின் பிரதிநிதியாகவே இருந்தாலும் இது ஹிந்துக்கள் மொத்த மக்கள் தொகையில் தொண்ணூறு சதம் இருக்கிற, ஹிந்துஸ்தானம் என்றே அறியப்படுகிற தேசமாதலால் இந்த தேசம் முழுமைக்குமான பிரதிநிதியாக வாதாடும் உரிமை எனக்கு உண்டு ‘ ‘ என்றுதானே ? ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த பாரிஸ்டர் ஆங்கிலேய தர்பாரின் சூழ்ச்சிக்குப் பலியாகி, முகமதியரின் ஆதரவையும் தமக்குத் தேடிக்கொள்ளும் முயற்சியில் இறங்கிவிட்டார். அதற்காகவே முகமதியர் மனதில் இடம் பெறுவதற்கான முஸ்தீபுககளை மேற்

கொள்ளலானார். அன்றே தொடங்கியது, காந்திஜியால் ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்களுக்குச் சேதாரம். (தாம் தாழ்த்தப்பட்டோரின் தலைமையையும் பெறவேண்டும் என்பது உறைத்ததால்தான் அவர்களின் பக்கமும் அவர் கவனம் செலுத்தத் தொடங்கி, நாமனைவருமே கடவுளின் குழந்தைகளென்ற போதிலும் ஹரியாகிய இறைவனின் ஜனங்கள் என அவர்களுக்குப் பெயர் சூட்டி, முழு மூச்சில் அவர்களுக்கான ஆலயப் பிரவேசம் போன்ற இயக்கங்களையும் ஆரம்பித்துவைத்தார்).

முகமதிய சமயத்தின் பிறப்பிடமான அராபிய தேசமே குப்பையில் தூக்கியெறிந்துவிட்ட, துருக்கியரின் மத ஆளுமைக்கு ஒரு முடிவு வந்தமைக்காக அராபியர் உள்ளூற அகமகிழ்ந்த, ரத்து செய்யப்பட்ட ‘கலீபா ‘ என்கிற நடைமுறையைத் திரும்பப் பெறவேண்டும் எனக் கோரி இங்கே கிலாபத் என்கிற போராட்டத்தை காந்திஜி தொடங்கினார். பாரத தேசத்து முகமதியர்களுக்கு அதில் எவ்வித சம்பந்தமும் இல்லை என்ற போதிலும்! கிலாபத் இயக்கத்தின் மூலம் தாம் முகமதியரின் பிரதிநிதியுங்கூட என்பதை அவர் நிறுவ முற்பட்டதால் ஹிந்துக்களுக்குத்தான் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் கிலாபத் துருக்கியிலேகூட நடந்ததில்லை! அது காந்தியால் காந்திக்காகவே தொடங்கப்பட்ட அரசியல் காய் நகர்த்தல்!

காந்திஜி பாரத தேசத்து ஆங்கில அரசை முன்வைத்து அல்ல, ஒட்டு மொத்த பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராகத்தான் கிலாபத் இயக்கம் தொடங்கினார். ஏனெனில் கிலாபத் என்பது துருக்கி சுல்தானுக்கு கலீபா என்கிற முகமதிய மதத் தலைமை ஸ்தானத்தைத் திரும்ப அளிக்கக் கோரும் இயக்கம்தான். பாரதத்தில் கோலோச்சிய ஆங்கிலேய அரசாங்கத்திற்கு இதில் எவ்விதத் தொடர்பும் இல்லாத போதிலும், பிரிட்டிஷ் சாம்ரஜ்ஜியத்தின் பிரதிநிதியாக அதனை அடையாளப்படுத்தி, அதற்கு எதிராகப் போராட வேண்டும் என்பது காந்திஜியின் திட்டம். ஆங்கிலேய துரைத்தனம் காந்திஜியைவிடப் புத்திசாலித்தனமாக அவரது திட்டத்தை முறியடித்தது. தனது கைக்குள் போட்டுக்கொண்டிருந்த முகமதியப் பிரமுகர்களைத் தூண்டிவிட்டு, ‘நீங்கள் கவனக்குறைவாக இருந்தால் உங்கள் சமுதாயத்தில் மதிப்பிழந்து போவீர்கள். காந்தியை உங்கள் மக்களும் தலைவராக ஏற்றுக்கொண்டு விடுவார்கள். ஆகையால் எப்படியாவது காந்தி தொடங்கியிருக்கிற கிலாபத் இயக்கத்தை முறியடிக்க வேண்டியது உங்கள்

பொறுப்பு ‘ என்று எச்சரித்தது. முகமதியப் பிரமுகர்களும் அதற்கு இசைந்து கிலாபத் இயக்கத்தை ஹிந்துக்களுக்கு எதிராகத் திசை திருப்பிவிட்டார்கள். ஆக, எவ்வித நியாயமும் இன்றி ஹிந்துக்கள் திடாரென முகமதியரின் வன்முறைத் தாக்குதலுக்கு இலக்கானார்கள். இத்தாக்குதல் கேரளத்தில் மிக உக்கிரமாக நடந்தது.

மலையாளம் தவிர வேறு மொழியெதுவும் தெரியாத முகமதியரான மாப்பிள்ளமார்கள், ஹிந்து தறவாடுகளைத் தாக்கிச் சூறையாடுவதற்கும் ஹிந்துப் பெண்களைக் கடத்திச் சென்று பாலியல் கொடுமைகள் செய்வதற்கும் வாகான வாய்ப்பாக காந்திஜியின் கிலாபத் இயக்கம் பயன்பட்டது. சரி, யாரய்யா இந்த மாபிள்ளமார்கள் ? எங்கிருந்து உற்பத்தியானார்கள் இவர்கள் ?

நமது மேற்குக் கடலோரம், எப்போதுமே மேற்கிலிருந்து வரும் மாற்றுச் சமயத்தினர் கரை ஒதுங்கி, ஹிந்துக்களுக்கே இயல்பான சமரச மனப்பான்மை, பெருந்தன்மை, ஆகியவற்றின் பயனாக, அந்நியர்கள் பத்திரமாக வசிக்கத் தொடங்குவதற்கு வசதியான சரணாலயமாக இருந்து வந்துள்ளது. தம் தாயகத்திலிருந்து விரட்டப்பட்ட யூதர்கள், பார்சிகள், வியாபாரம் செய்ய வந்த அராபியர், ஐரோப்பிய வணிகர், கிறிஸ்தவ மதப் பிரசாரகர், இப்படிப் பலதரப்பட்டோருக்கும் நுழைவு வாயிலாக அது இருந்து வந்துள்ளது. இப்படி வந்த அராபிய வியாபாரிகள், அதிக காலம் பெண் வாசனை இல்லாமல் இருக்க மாட்டாமல் உள்ளூர் ஹிந்து மலையாளப் பெண்களுடன் சம்பந்தம் வைத்துக் கொண்டார்கள். தாயகம் திரும்பும் தருணம் வந்ததும் அவர்களை அம்போ என்று விட்டுவிட்டு ஓடியும் போனார்கள்(இப்போதுகூட அராபியர்களிடையே இந்த வழக்கம் தொடர்வது தெரியும்தானே ? தாற்காலிகத் திருமணம் செய்து, தலாக்கும், பிள்ளையும் ஒருசேரக் கொடுத்துவிட்டு அவர்கள் போய்க்கொண்டிருப்பதும், ஹைதராபாத், கேரளம், மேற்கு கர்னாடகம் ஆகிய இடங்களில் தகப்பன் முகம் தெரியாத பிள்ளைகளின் எண்ணீிக்கை முகமதிய சமூகத்தில் அவர்களுடைய காஜிகளின் சம்மதத்துடனேயே அதிகரித்துவருவதும் தெரிந்த விஷயமே அல்லவா ?) இதன் விளைவாகக் கேரளத்தில் தோன்றிய ஒரு புதிய வகை வகுப்புதான் மாப்பிள்ளமார்! அதனால்தான் அவர்கள் பெயரே மாப்பிள்ளைகள்!

இந்த மாப்பிளமார்கள் ஹிந்து நிலச்சுவாந்தார்களிடம் குத்தகையாளர்களாகப் பணியாற்றி வந்தனர். உங்களுக்கே நிலம் சொந்தமாகும் என ஆசை காட்டப்பட்டும், சமய உணர்வோடு பொருளதாரக் காரணங்கள் சொல்லப்பட்டும் இந்த மாப்பிள்ளமார்கள் கலவரத்திற்குத் தயார் செய்யப்பட்டார்கள். விளைவு, ஹிந்துக்களுக்கு உயிர்ச் சேதம். பொருள் சேதம், மானச் சேதம்!

மாப்பிள்ளாக் கலவரம் என அறியப்பட்ட இதனை அரசாங்கம் கடுமையாக ஒடுக்கியது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவதைக் காணச் சகியாமல்! இதுதான் ஆங்கில துரைத்தனத்தின் சாதுரியம்! பிள்ளையைக் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுதல்!

ஆக, காந்திஜி தமக்கு முகமதியர்களின் அங்கீகாரமும் கிட்ட வேண்டும் என்பதற்காக மேற்கொண்ட முயற்சி ஹிந்துக்களுக்குப் பெரும் பாதகமாக முடிந்தது. அப்படியும் காந்திஜிக்கு ஆசைவிடவில்லை. போக்கிரித்தனம் செய்த மாப்ப்ிள்ளமார்களை மகத்தான தியாகிகளாக வர்ணித்தார்! அப்படியாகிலும் முகமதியர் மனங்களைக் கவர முடியாதா என்கிற ஆதங்கத்தில்!

(ஒரு தருணத்தில் ஆங்கிலேய தர்பாரை எதிர்க்க ஆப்கானிஸ்தானத்து அமீரை அழைப்பேன் என்றுகூட அவர் சொன்னதுண்டு! ஆனால் அவரே இரண்டாம் உலகப் போரின் போது ஆங்கிலேயரை எதிர்க்க இன்னொரு அன்னிய சக்தியிடம் தஞ்சமடைவதா என்று சுபாஷ் போஸைக் கண்டித்தார்!)

இப்படியாகக் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான முகமதியரின் கலவரத்தைத் தொடங்கிவைத்த புண்ணியம் காந்தியையே சாரும்.

முகமதியருக்கும் சேர்த்துத் தலைமை ஸ்தானம் வகிக்க வேண்டும், ஆங்கிலேயர் ஆட்சி தம்மை பாரத தேசத்து மக்கள் அனைவருக்குமான பிரதிநிதி என்று அங்கீகரிக்க வேண்டும் என்றெல்லாம் தேவையின்றியே தமக்கு அவர் நிபந்தனை விதித்துக்கொண்டு அதற்காக முகமதியருக்கு மேலும் மேலும் பரிவுகள் காட்டிவந்தபோதிலும் முகமதியரின் பிரதிநிதி என்கிற அங்ககாரம் ஜின்னாவுக்குத்தான் கிடைத்தது. தலித்துகளை ஹரியின் ஜனங்கள் எனப் புகழ்ந்து ஆலயப் பிரவேசத்தின் மூலம் அவர்களுக்கு சமூகத்தில் சம அந்தஸ்து கிடைக்கப் பாடுபட்ட போதிலும், தலித்துகளின் பிரதிநிதித்துவங்கூட அம்பேத்கருக்குப் போய்ச் சேர்ந்துவிட்டது. தலித்துகளல்லாத ஹிந்துக்களின் பிரதிநிதியாகவே ஆங்கிலேய அரசு அவரை அடையாளப்படுத்தயது. ஹிந்துக்களின் நலனுக்காக ஏதும் செய்யாதது மாத்திரமல்ல, முகமதியரை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக ஹிந்துக்களை விட்டுக் கொடுத்துக் கூடச் செயல்பட்டவருக்கு ஹிந்துக்களின் பிரதிநிதி என்கிற அடையாளம்! இப்படியொரு விசித்திரமான நிலைமை ஹிந்துக்களைத்தவிர வேறு யாருக்கு வாய்க்கும் ? அப்படியிருந்தும் ‘பாபு, பாபு ‘ என்று ஹிந்துக்கள் அவரைக் கொண்டாடிக்கொண்டுதான் இருந்தார்கள்.

முகமதியர் மனம் கவர்வதற்காக காந்தி வரம்பு மீறியே நடந்துகொண்டிருக்கிறார், பல சந்தர்ப்பங்களில்.

சிரத்தானந்தர் என்ற ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த விடுதலைப் போராளியை ஒரு முகமதியன் கொலை செய்தபோது, அது திடாரென்று ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பில் நேர்ந்துவிட்ட சம்பவம். அதனால் குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கக் கூடாது என்று சொன்ன காந்தி, பிற்காலத்தில் பகத்சிங் விஷயத்தில் மட்டும் தண்டனையைக் குறைக்குமாறு வாதாடவில்லை. பகத்சிங் மக்களிடையே பிரபலமடைந்து விட்டால் தமக்கு செல்வாக்கு குன்றி விடும் என்பதற்காகவே அவர் வாளாவிருந்துவிட்டார் என்று கருதுவோரும் உண்டு. இதை ஊர்ஜிதம் செய்வது போலத்தான் அவர் அதற்குப் பின் சுபாஷ் சந்திர போஸ் விஷயத்திலும் நடந்துகொண்டார். சுபாஷ் பாபுவுக்கு மின்னல் வேகத்தில் மக்கள் ஆதரவு பெருகுவதைக் கண்டு அவரை முடக்கிப் போட்டார் காந்தி, சுபாஷ் பாபுவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியே காந்தியின் சொல்லை மீறித் தலைவராகத் தேர்வு செய்த பின்னரும்! காரியக் கமிட்டி உறுப்பினர்களையெல்லாம் விலகச் செய்து, உனக்கு எங்கள் ஆதரவு இல்லை என்று சொல்லாமல் சொல்ல வைத்தார்.

சுபாஷ் பாபுவும் ஹிந்து–முகமதியர் ஒற்றுமையின் அவசியம் உணர்ந்தவர்தான். ஆனால் முகமதியரைத் தமது பக்கம் வரச் செய்யவேண்டும் என்பதற்காக அவர்களுக்குச் செல்லம் கொடுத்துக் கெடுக்கவில்லை! ஒத்துழைக்க மறுத்து விட்ட காங்கிரசில் இனி இருந்து பயனில்லை எனப் புரிந்து கொண்ட சுபாஷ் தம் வழியில் போர்க்களம் காண ரகசியப் பயணம் மேற்கொள்ளுமுன் நம்பிக்கையுடன் சந்தித்த பாரத நாட்டுத் தலைவர், ஹிந்துத்துவக் கோட்பாட்டை நிறுவிய சாவர்கரைத்தான்! சுபாஷின் முன்னோடியான ராஷ்பிகாரி போஸ் ஒருபடி மேலே போய், ஜப்பானில் ஹிந்து மஹா சபையின் கிளையைத் தொடங்கியவர்!

ஹிந்துக்களின் நலனைக் காவு கொடுத்து முகமதியரின் ஆதரவைப் பெற காந்திஜி மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஏராளமான ஆதாரங்கள் உண்டு. விவரிக்கத் தொடங்கினால் நீண்டுகொண்டே செல்லும். அதன் முற்றுப் புள்ளிதான் தேசப் பிரிவினையில் முடிந்தது என்று பார்த்தால் அதன் பிறகும் அது நீடித்தது!

பாகிஸ்தான் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக 1946-ல் ஜின்னாவின் முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை என்பதாக ஒரு கிளர்ச்சியினை நடத்தியது. கோரிக்கையை முன் வைக்கும் கிளர்ச்சியென்றால் நியாயப்படி அரசுக்கு எதிரானதாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம் லீீகர்களின் கிளர்ச்சி ஹிந்துக்களைக் குறிவைத்துக் கொன்றுகுவிப்பதற்கும், சூறையாடுவதற்கும், பெண்கள் மீது பாலியல் வன்முறையைப் பிரயோகிக்கவும்தான் நடத்தப்பட்டது. அப்போது ஒன்றாக இருந்த வங்காள மாநிலத்தை முஸ்லிம் லீக் கட்சிதான் சுரவர்த்தி என்பவர் தலைமயில் ஆண்டுவந்தது. இந்த வசதியைப் பயன்படுத்திக் கொண்டு முகமதியர் ஹிந்துக்கள் மீது தங்கு தடையின்றித் தாக்குதலைத் தொடங்கினார்கள். அதற்கு சுரவர்த்தியின் அரசும் முழு ஒத்துழைப்புக் கொடுத்தது. ஹிந்துக்கள் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு பதிலடி கொடுக்க முன்வந்தபோது சுரவர்தியின் அரசு விழித்துக் கொண்டு தன் ராஜ தர்மத்தை நிலை நாட்ட முற்பட்டது. போதாக் குறைக்கு காந்தியும் வந்து சேர்ந்தார், சமரசம் என்றபெயரில் முகமதியரைக் காப்பாற்ற! நவகாளி யாத்திரை என்று பேசப்படுகிறதே, அது உண்மையில் ஹிந்துக்கள் முகமதியர் மீது பதில் தாக்குதல் தொடுக்காமல் தடுப்பதற்கு காந்திஜி மேற்கொண்ட முயற்சிதான்!

ஹிந்துக்கள் முகமதியர் மீது பதில் நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுக்க சுரவர்த்தி சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கவும், அவருக்கு காந்தி ஷஹீத் (தியாகி) என்று பட்டம் வழங்கிப் பாராட்டினார். ஹிந்துக்களை செயலிழக்கச் செய்வதற்காகத் தமது வழக்கமான ஆயுதமான உண்ணாவிரத நிர்ப்பந்தததையும் தொடங்கிவிட்டார்!

காந்திஜியை மஹாத்மா என்றும் பாபு என்றும் கொண்டாடியதற்குப் பிரதியாக ஹிந்துக்கள் எதிர்கொள்ள நேர்ந்த அவலங்களுக்கும் கொடுமைகளுக்கும் எழுதி மாளாத அளவுக்கு ஆதாரங்கள் உள்ளன. பாரதம் துண்டாடப் படுமெனில் அது என் சவத்தின் மீதுதான் நிகழமுடியும் என்று பிரகடனம் செய்த காந்திஜி, பிரிவினையைத் தடுக்கத் தமது வழக்கமான உண்ணாவிரத ஆயுதத்தைக் கையில் எடுக்கவில்லை. அந்த ஆயுதம் ஹிந்துக்களிடம்தான் செல்லுபடியாகும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது! தம்மை முகமதியருக்கும் பிரதிநிதியாக முன்னிலைப் படுத்திக்கொண்ட அவர், பிரிவினைக் கோரிக்கையை நீங்கள் கைவிடாதவரை நான் முன்னெச்சரிக்கையாக எனிமா எடுத்துக் கொண்டு, எலுமிச்சைச் சாறு பிழிந்த நீீரை மட்டும் பருகிக்கொண்டு உண்ணாவிரதமிருக்கப் போகிறேன் என்று எச்சரிக்கவில்லை! மாறாக, காங்கிரஸ் காரியக் கமிட்டி தேசப் பிரிவினையை ஏற்றுத் தீர்மானம் நிறைவேற்றியதும், இது தவிர்க்க முடியாத துரதிர்ஷ்டம் என அதற்கு சமாதானம் சொல்லலானார்.

நேருவிலிருந்து காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சத்தியாக்கிரகம்செய்து சோர்ந்துபோய், எப்போதடா பதவியில் நிரந்தரமாய் உட்காருவோம் என்று தவிக்கும் நிலைக்கு வந்துவிட்டிருந்ததால், போதும் போராடியது, இனி ஆள்வதற்கு வழி பார்ப்போம் என்று பிரிவினைக்கு ஒப்புதல் தந்துவிட்டார்கள். காங்கிரஸ் காரியக் கமிட்டியில் பிரிவினை பற்றிய தீர்மானம் விவாதத்திற்குவந்தபோது ஒரே ஒரு குரல்தான் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. என் தாயகம் துண்டாடப் பட்டுத்தான் விடுதலை கிடைக்கும் என்றால் அந்த விடுதலை நமக்கு வேண்டாம். நிலைமை சாதகமாகும் வரை காத்திருப்போம் என்று தனி நபராக வாதாடித் தோற்றவர் புருஷோத்தம்தாஸ் தாண்டன்.ஆக, நம் பாரதம் துண்டாடப் பட்டமைக்குக் காங்கிரஸும்தான் பொறுப்பாளி. அதற்குப் பரிசாக நாம் அதற்குத் தந்த பரிசு, நீீண்ட நெடுங்கால பதவி சுகம்! பிரதமர் பதவி பெறுவதற்காகத் தேசம் துண்டாடடப் படுவதை ஒப்புக்கொண்ட நேருவுக்கு தேசமெங்கணும் சிலைகள், சாலையின் பெயர்கள், குழந்தைகள் பெயரால் பிறந்த தினக் கொண்டாட்டங்கள்! அதனால்தான் சோஷலிஸ்ட்கட்சித் தலைவர் ராம் மனோஹர் லோஹியா, தமது விருப்பம் என்னவென்று கேட்கப்பட்டபோது, ‘ ‘ மக்கள் நேரு இழைத்த குற்றங்களைப் புரிந்துகொண்டு, அதற்குத் தண்டனையாக அவரைச் சிறையில் தள்ளும்வரை அவர் உயிரோடு இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஒரே ஆசை ‘ ‘ என்று சொன்னார்!

ராஜாஜியின் வக்கீல் மூளை, தேசம் என்பது ஏதோ ஸ்தவர ஜங்கம சொத்து என்பதுபோல, சகோதரர்களுக்கிடையே மனவேற்றுமை வந்து விட்டால் பாகப் பிரிவினை செய்துகொள்வதுதான் உத்தமம் என்று அதன் பங்கிற்கு அனைவரையும் முந்திக்கொண்டு பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கைக்கு ஆதரவும் தெரிவித்துவிட்டது! பாகப்பிரிவினை செய்துகொண்டு விட்டால் பங்காளிகளுக்கிடையே பகைமை மறைந்துவிடும், நல்லது கெட்டதுக்கு ஒன்று சேர்ந்துகொள்வார்கள் என்பது ராஜாஜியின் வாதம். அதற்குப் பரிசாக வரப் போகும் பாகிஸ்தானில் அவருக்கு ஓர் உயர் பதவி கொடுக்க ஜின்னாவும் தயாராக இருந்தார்! ராஜாஜிக்கும் திருவிதாங்கூர் திவான் சர் சி.பி. ராமஸ்வாமி அய்யருக்கும் உருவாகப் போகும் பாகிஸ்தானில் ஜின்னா பதவி நாற்காலிகளைத் தயாராகப் போட்டு வைத்திரு ந்தார்! அய்யருக்கு நாற்காலி போடக் காரணம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தைப் பாகிஸ்தானத்துடன் இணைப்பேன் என்று அவர் மிரட்டியதற்காக! அய்யரின் முதுகெலும்பை முறித்துப் போட்டார், வல்லபாய் பட்டேல்!

சீக்கிரம் எப்படியாவது பிரச்சினைக்குத் தீர்வு வரவேண்டும் என்பதற்காக இறுதியில் காங்கிரஸ் பொறுமையிழந்து பிரிவினயை ஏற்றுக்கொள்ளத்தான் செய்தது. எனவே ராஜாஜி சொற்படி முன்கூட்டியே அதற்கு உடன்பட்டிருந்தால் ஒருவேளை பெருமளவுக்கு உயிர், பொருள் மானச் சேதாரங்களைத் தவிர்த்திருக்க முடிந்திருக்கலாம். ஆனால் எப்படியும் பாகிஸ்தானாக வரையறுக்கப்பட்ட பகுதியில் ஹிந்துக்களின் என்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதற்காக அவர்கள் அடித்துக் கொல்லப்பட்டோ, துரத்தப்பட்டோதான் இருப்பார்கள். ஏனென்றால் ஜிஹாத் முகமதியருக்கு மிகவும் அவசியமான சமயக் கடமையாகும்.

பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகும் காந்தியால் ஹிந்துக்களுக்கு சோதனை தொடர்ந்தது. பாகிஸ்தானிலிருந்து குற்றுயிரும் குலையுயிருமாகத் தப்பி வந்த ஹிந்துக்கள் இருக்க இடமின்றி தில்லியில் பாழடைந்து கிடந்த முகமதிய மன்னர்களீன் சமாதிகள், இடிபாடுகளுடன் சிதைந்து போன, வழிபாடு ஏதுமற்ற பள்ளிவாசல்கள் ஆகியவற்றில் ஒண்டிக்கொண்டார்கள். குளிர்காலம் வேறு வந்துவிட்டிருந்தது. குழந்தைகளும் முதியோரும் உடல் நலம் குன்றியவர்களும் சரியான பாதுகாப்பின்றி அவதிப் பட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் முகமதியருக்குச் சொந்தமான கட்டிடங்களை ஹிந்துக்கள் ஆக்கிரமித்துக்கொண்டிருப்பது தவறு; அவை கவனிப்பாரற்றுக் கிடந்தாலும் சரியே. எனவே ஹிந்துக்கள் உடனே அந்த இடங்களைக் காலி செய்து வெளியேறவேண்டும் என காந்தி அறிக்கையிட்டார். அரசுக்கும் ஹிந்துக்களை அக்கட்டிடங்களிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்தினார். ஹிந்துக்கள் வேறு வழியின்றி சாலை ஓரங்களுக்குக் குடிபெயர்ந்தனர். குளிருக்குச் சரியான பாதுகாப்பின்றிப் பலர் இறந்தனர்.

முகமதியர் புறக்கணித்த இடங்களை ஹிந்துக்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாகாது என்று சொன்ன காந்தி, நிர்கதியாக வந்த ஹிந்து அகதிகளுக்கு ஒரு மாற்றிடம் கொடுக்க வற்புறுத்தியிருக்கலாகாதா ? கூடரங்கள் பல அமைத்திருந்தும் அவை போதாததால்தானே அகதிகளய் வந்தவர்கள் பாழடைந்த சமாதிகளிலும் மசூதிகளிலும் ஒண்ட நேர்ந்தது ? காந்திதான் பாரதத்தில் அரசாளுவோருக்கு மாளிகைகள் இருக்கலாகாது என்றவராயிற்றே! பிரதமர் நேருவின் இல்லத்தையும் கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன் வசித்த வைசிராய் மாளிகையையும் அகதிகளுக்கு ஒழித்துக் கொடுக்கச் சொல்லியிருக்கலாமே!

அகதிகள் முகாமைப் பார்வையிடத் தம் அருமை மகள் இந்திராவுடன் நேரு ஒருமுறை சென்றபோது, அகதி ஒருவன் இந்திராவின் சேலைத் தலைப்பை லேசாகப் பற்றி இழுத்தான். உடனே நேரு சீறிப் பாய்ந்து அவன் கன்னத்தில் அறைந்தார்.

‘பண்டிட்ஜீ, உங்கள் மகளின் சேலைத் தலைப்பை லேசாகப் பிடித்து இழுத்ததற்கே இவ்வளவு ஆத்திரப்படுகிறீர்களே, எங்கள் தாயை, சகோதரியை, மனைவியை, மகளை, எங்கள் கண் எதிரில் பலர் கதறக் கதறப் பாலியல் பலாத்காரம் செய்தார்களே, எங்களுக்கு மட்டும் பொறுமை காக்க உபதேசம் செய்வது சரிதானா ? ‘ ‘ என்று அந்த அகதி கேட்டதற்கு நேருவால் பதிலிறுக்க இயலவில்லை.

இவையெல்லாம் பத்திரிகைச் செய்திகளாக வந்தவைதாம், கற்பனை அல்ல.

ஒன்றுபட்டிருந்த பாரத கஜானாவிலிருந்து பாகிஸ்தானின் பங்காக அறுபது கோடி ரூபாய் தர பாரத சர்க்கார் ஒப்புக்கொண்டிருந்தது. ஆனால் அத்தொகையைக் கொடுத்தால் பாகிஸ்தான் அதனை பாரதத்திற்கு எதிராகப் போர் புரிவதற்குத்தான் பயன்படுத்தும் எனத் தெரிந்ததால் அதனைக் கொடுக்க அப்போதைய துணை பிரதமர் வல்லபாய் பட்டேல் முட்டுக்கட்டை போட்டார். கொடுத்த வாக்கை மீறலாகாது, உடனே அறுபது கோடியைப் பாகிஸ்தானுக்குக் கொடுக்க வேண்டும் என்று காந்தி அடம் பிடித்து உண்ணாவிரதமும் தொடங்கிவிட்டார். அவர் பட்டினி கிடப்பதைக் காணச் சகியாது அரசாங்கம் அவரது விருப்பத்திற்கு அடிபணிந்தது.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் இன்னொரு காரியமும் செய்தார், காந்தி. பாகிஸ்தானிலிருந்து ஹிந்துக்களும் சீக்கியர்களும் ஓடிவந்தது தவறு, என்ன நேர்ந்தாலும் சரி, எமது உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று அங்கேயே இருந்திருக்க வேண்டும். ஆகவே நான் பிப்ரவரி முதல் தேதி அகதிகளாய் வந்த ஹிந்து, சீக்கியர்களையெல்லாம் அழைத்துக்கொண்டு பாகிஸ்தானுக்குப் போய் அவர்களை அங்கே விட்டுவிட்டு வரப் போகிறேன் என்று அறிவித்தார்!

மஹாத்மா சொல்லைத் தட்டாத சில ஹிந்துக்களும் அதற்குத் தயாராக, பாபுதான் சொல்லிவிட்டாரே, அவர்கூடப் போகலாம் என்று துணிந்திருக்கக் கூடும். அப்படி அவர்கள் திரும்பிச் சென்றிருப்பின் என்ன நேர்ந்திருக்கும் ? காந்திஜி அவர்களைப் பாகிஸ்தானில் விட்டு வந்த மறுகணமே அவர்களின் மானம் மூதலிலும் உயிர் அதன் பிறகும் பறிக்கப்பட்டிருக்கும் என்பதல்லாமல் வேறென்ன ?

பாரதத்தில் முகமதியரின் உயிர், உடமைகளுக்குப் பாதுகாப்பளிக்க நேருவும் பட்டேலும் அவர்களுக்குமேல் காந்தியும் உண்டு. அதுபோல் பாகிஸ்தானில் ஹிந்துக்களின் உயிர், உடமைகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்க யார் உண்டு ?

காந்தியின் பின்னால் போய் ஹிந்துக்களும் சீக்கியரும் மீண்டும் ஒரு கொடிய தாக்குதலுக்கு இரையாகும் அசம்பாவிதம் நிகழாதுதடுக்க என்ன வழி ? காந்தியோ பிடிவாதக்கார மனிதர். தம் பேச்சைத் தான் மற்றவர்கள் கேட்கவேண்டுமேயன்றிப் பிறர் சொல்லைத் தாம் கேட்கத் தேவையில்லை என்று இருந்தே பழகிப் போனவர்.

இந்நிலையில் ஹிந்துக்களுக்கு நிச்சயமாக நேரவிருந்த அசம்பாவிததைத் தவிர்க்க நாதுராம் வினாயக கோட்ஸேவுக்கு ஒரு வழிதான் தெரிந்தது. அந்த வழியை அவர் மேற்கொண்டார்.

தமது வாக்குமூலத்தில் கோட்ஸே விடுதலைப் போரில் காந்தியின் பங்களிப்பைப் பெரிதும் போற்றிப் பேசத் தவறவில்லை. அதற்காக காந்திக்கு அஞ்சலி செலுத்தவும் தயங்கவில்லை.

காந்திஜியைக் கொன்ற செயலுக்குத் தாம் மட்டுமே பொறுப்பு என்று நாதுராம் வினாயக கோட்ஸே நீதிமன்றத்தில் குற்றம் முழுவதையும் தாமே ஏற்றுக்கொண்டார். எனினும், வழக்கை ஜோடிப்பதற்காகக் காவல் துறை அதற்கே உரிய வழக்கப்படி, வேறு பலரையும் குற்றவாளிகளாகச் சேர்த்து நாதுராமுடன் கூண்டில் ஏற்றி, கூட்டுச் சதியெனக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. அவர்களில் சிலர் நாதுராமின் திட்டத்தை அறிந்திருந்ததோடு அதற்குத் துணை புரியவும் முன்வந்தவர்கள்தான்.ஆனால் சாவர்கரையும் கூடக் கொலையில் பங்குபெற்றவர் எனக் குற்றப் பத்திரிகை கூறியது. விசாரணை முடிவில் அவர் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டார். கவனியுங்கள், குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று அல்ல (குற்றத்தைக் காவல்துறை சரிவர நிரூபிக்கத் தவறிவிட்டது, தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் சட்ட நுணுக்க ரீதியாகப் பிழை உள்ளது என்கிற காரணங்களுக்காகக் குற்றவாளிகள் விடுதலை செய்யபட்டால்கூட, நீதிமன்றமே எங்கள் மீது தவறு இல்லையென விடுதலை செய்து விட்டது என்று அரசியல்வாதிகள் தீர்ப்பைத் திருத்திப் பேசுவது இக்காலத்தில் வழக்கமாகிவிட்டிருக்கிறது! அரசியல் நிர்ப்பந்தம் காரணமாகக் காவல் துறை வேறு வழியின்றி வேண்டுமென்றே குற்றப் பத்திரிகையைச் சரிவரத் தாக்கல் செய்யாமல் விடுவதும், குற்றத்தை உறுதிசெய்வதற்கான சாட்சியங்களை முன்னிறுத்தாமல் வழக்கை நீர்த்துப் போகச் செய்வதுமான முறைகேடுகள் இன்று சர்வ சகஜமாகிவிட்டிருக்கின்றன! ராஜீவ் காந்தி மீதான போபர்ஸ் வழக்கு இப்படித்தான் குற்றம் நிரூபணமாவதற்குப் போதிய சான்றுகளைத் தரப் ப்ராசிக்கியூஷன் தவறிவிட்டது என்கிற அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் அதைத் தங்களின் வெற்றியாகக் காங்கிரஸ் கொண்டாடுகிறது ).

1949 நவம்பர் 15 அதிகாலை, தற்போதைய ஹரியாணா மாநிலத்தி லுள்ள அம்பாலா சிறைச்சாலையில் நாதுராம் கோட்ஸேயும் அவருடைய சகா நாரயண் ஆப்தேயும் தூக்கிலிடப்பட்டனர். நாதுராமின் தம்பி கோபால் கோட்ஸே, பஞ்சாபிலிருந்து தப்பி வந்த அகதி மதன்லால் ப ?வா, தில்லி விடுதி உரிமையாளர் விஷ்ணு கர்கரே ஆகியோர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர். ஆயுத வியாபாரி திகம்பர் பட்கே அப்ரூவராக மாறி சர்கார் தரப்பு சாட்சியம் கூறி, விடுதலையானார். பட்கேயின் பணியாள் சங்கர் கிஸ்தயா தண்டிக்கப்பட்டுப் பின் மேல் முறையீட்டில் விடுதலை செய்யப்பட்டார்.

ஆக, இது ஒரு கூட்டுச் சதி போலத் தெரிந்தாலும், நாதுராம் தாமே எடுத்த முடிவுக்கு மற்றவர்கள் துணையாக இருந்ததாகக் கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும். மதன்லால் பருவா, தமது கண் எதிரில் தம் தந்தை முகமதியரால் சித்ரவதை செய்து கொல்லப்பட்டதால் இதற்கெல்லாம் மூல காரணம் காந்தியே என ஆத்திரமுற்றுத் தாமும் காந்திஜியைக் கொலை செய்ய முடிவு செய்து எறிகுண்டு சகிதம் அலைந்து பின்னர் கோட்ஸேயுடன் சேர்ந்து கொண்டவர். எனவே இது கூட்டுச் சதியல்ல; ஒத்த சிந்தனையுள்ளவர்களின் ஒருங்கிணைப்பேயாகும். எனவேதான் நாதுராம் முழுக் குற்றத்தையும் தாமே ஏற்றுக் கொண்டார். அதற்கு இணங்கவே நானும் கோட்ஸே தாமாகவே எடுத்த முடிவு எனப் பதிவு செய்துள்ளேன்.

கோட்ஸே காந்தியைத் தவிர வேறு எவரையும் காயப்படுத்த விரும்பவில்லை. எனவே சுடுவதற்குமுன் காந்தியுடன் மிக நெருக்கத்தில் இருந்த ஆபா காந்தி, மனு காந்தி ஆகிய இருவரையும் தள்ளி, காந்தியைத் தனிமைப் படுத்தினார். நீதிமன்றத்தில் தமது மனச்சாட்சி தமது செயல் குறித்து உறுத்தவில்லை என்றும் தமது தரப்பு நியாயங்களை எதிர்காலத்தில் நேர்மையான சரித்திர ஆசிரியர் எரேனும் முறையாகப் பதிவு செய்வார்கள் என்று தாம் நம்புவதாகவும் கூறினார்.

தீர்ப்பளித்த நீதிபதி கோஸ்லா, இங்கு அமர்ந்துள்ளவர்கள் ஜூரிகளாக இருப்பின் கோட்ஸே குற்றமற்றவர் எனத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டியிருக்கும் எனத் தமது தீர்ப்பில் பதிவு செய்தார்.

கோட்ஸேயின் வாக்குமூலம் ‘மே இட் ப்ளீஸ் யுவர் ஹானர் ‘ என்பதாகும். இது பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது. இணைய தளத்திலும் படிக்கக் கிடைக்கிறது.கூகிள் மூலம் ‘கோட்ஸே ‘ எனத் தேடினால் ஏராளமான விவரங்களும், நீதிமன்ற விசாரணை, கோட்ஸே வாக்குமூலம் ஆகியவை கிடைக்கும். இருபது ஆன்டுகளுக்கு முன் இந்த வசதி இல்லை. ஆகையால் நான் மிகவும் சிரமப்பட்டுத் தகவல்களை நேரில் திரட்ட வேண்டியதாயிற்று. எனினும் நாதுராமின் தம்பி கோபால் கோட்ஸே போன்றவர்களை நேரில் சந்திக்கும் அரிய வாய்ப்பும் பிறகு கடிதத் தொடர்பும் அதன் பயனாகக் கிட்டியது. கோபால் கோட்ஸே தற்சமயம் புணேயில் எண்பது பிராயம் கடந்தவராகப் புற்று நோயால் அவ்திப் பட்டுக் கொண்டும் போதிய பொருளாதார வசதியின்றியும், சாவின் நிழல் படிந்தவராக வாழ்ந்துவருகிகிறார்.

இது குறித்து இன்னொரு தகவலையும் பதிவு செய்ய விழைகிறேன், இதற்காக நான் தூற்றப்படுவேன் என்றாலும்!

காந்திஜி மறைவதற்குச் சில நாட்கள் முன்புதான் அவருக்கு உதவியாகத் தட்டச்சு எழுத்தர் ஒருவர் நியமிக்கப் பட்டார். தமிழரான அவர் பெயர் கல்யாணம். அவரை நான் அறிவேன் என்பது மாத்திரமல்ல, பிற்காலத்தில் சென்னை தி.நகரில் அவரது திருமண மண்டபம் ஆரோவில் ஊதுபத்தி முகவர் ஒருவரால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தபோது கல்யாணத்திற்கு உதவியாக ஒரு சிறு குழுவுடன் இரவு பகல் திருமண மண்டபத்தில் தங்கியிருந்து, கல்யாணத்திற்கு எதிராகத் தாக்குதல் நடந்தபோதெல்லாம் அடிதடியில் பங்கு வகித்தேன்!

காந்திஜி சுடப்பட்ட போது அவரது அருகில் இருந்தவர்களில் கல்யாணமும் ஒருவர். குண்டு பட்டதும் முதியவரான காந்தி சிறு முனகலுடன் கீழே சாய்ந்தார். அந்த முனகலைத்தான் பிற்பாடு ‘ஹே ராம் ‘ என்ற அழைப்பாகப் பதிவு செய்துவிட்டார்கள்! காந்திஜி ‘ஹே ராம் ‘ என்றெல்லாம் சொல்லவில்லை என்பதற்கு கல்யாணம் சாட்சி! மக்கள் மத்தியில் காந்திஜியை ஒரு மஹானாக நிறுவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட கற்பிதங்களுள் இந்த ‘ஹே ராம் ‘ சமாசாரமும் ஒன்று!

இந்திரா காந்தி படுகொலையின் போது அதனையும் காந்திஜி படுகொலையினையும் ஒப்பிட்டு துக்ளக்கில் ஒரு கட்டுரை வந்தது. நான் எனக்குத் தெரிந்த நியாயங்களைக் குறிப்பிட்டு அதற்குப் பதில் கட்டுரை எழுதி அனுப்பினேன். ஆனால் துக்ளக் அதனை வெளியிடவில்லை. எனது கட்டுரை ஒரு நல்ல ஆவணம்தான். இப்போது அது இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். துரதிர்ஷ்டவசமாக அதன் நகல் என்னிடம் இல்லை.

இந்திரா கொலையையும் காந்திஜி கொலையையும் ஒப்பிடமுடியாது. உளவுத் துறையினர் பிரதமர் இந்திரா காந்தியிடம் அவரது மெய்க்காப்பாளர் குழுவில் சீக்கியர் இடம்பெறுவது வம்பை விலைக்கு வாங்குவது போலாகும் என்று வலியுறுத்திய போது, அப்படி அவர்களை ஒதுக்கி வைத்தால் சீக்கியர்களை நாம் புறக்கணிக்கிறோம் என நாமே ஒப்புக்கொள்வது போலாகிவிடும். எனவே எனக்குப் பாதுகாப்பு அளிப்பவர்களில் சீக்கியர்களும் இருக்கட்டும் என்று சொல்லித் துணிச்சலுடன் அதற்கு உத்தரவிட்டார், இந்திரா. அதற்குப் பரிசாக அவர் அவரது மெய்க் காப்பாளர்களாலேயே சுடப்பட்டு இறந்தார். இது கடைந்தெடுத்த பச்சை நம்பிக்கைத் துரோகமே அல்லவா ? கோட்ஸே எனது செயலுக்கு மன்னியுங்கள் என்பதுபோல் முன்கூட்டியே காந்திஜியை வணங்கிவிட்டு காந்திஜிக்கு மட்டும் படுகிறாற்போல் சுட்டார். துவேஷமோ வெறியோ, இந்தக் காரியத்தை முடித்தால் உன் குடும்பத்தைக் காப்போம், இவ்வளவு சன்மானம் தருவோம் என்ற ஆசைகாட்டுதலோ ஏதுமின்றி, தமக்குத் தாமே எடுத்த சொந்த முடிவின் பிரகாரம்,

விளைவினை அறிந்தே கோட்ஸே வினையாற்றினார். இதனைச் செய்து முடித்தால் சுவர்க்கத்தில் பல அழகியர் பணிவிடை செய்ய, சுக போகம் அனுபவிக்கலாம் என்கிற ஆசைகாட்டுதலுக்கு மயங்கியதாலும் அல்ல! மேலும், எழுதிவைத்துக் கொள்ளுங்கள், இந்த வித்தியாசத்தை — இந்த விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரியக்கமோ, ஹிந்து மஹா சபையோ, சாவர்கர்ஜியோ எடுத்த முடிவை அவர் செயல் படுத்தவில்லை. பழிவாங்கும் குரோதம் அவரது செயலுக்குப் பின்னணியாக இருக்கவுமில்லை. அரசாங்கத்தையே சங்கடப்படுத்திப் பணியச் செய்யும் அளவுக்கு முரட்டுப் பிடிவாதமும், தாம் செய்வதுதான் சரி, மற்றவர்கள் சொல்வதெல்லாம் தவறு என்று சாதிக்கிற சுபாவமும் கொண்ட ஒரு செல்வாக்கு மிக்க தலைவரை ஹிந்துக்களின் நலனை முன்னிட்டு அரசியல் களத்திலிருந்து உடனடியாக அப்புறப்படுத்த இதைவிட்டால் வேறு வழியில்லை எனக்கருதியதால் கோட்ஸே தமக்குச் சரியெனப்பட்ட முடிவின் பிரகாரம் நிறைவேற்றிய செயல்தான் காந்திஜி படுகொலை (இந்தத் தகவலை நான் பதிவு செய்வதால் காந்திஜியின் கொலையை நியாயப்படுத்துவதாகக் கருதலாகாது. எந்த உயிர்க்கொலையையும் நியாயப் படுத்தும் மனப்போக்கு எனக்கு இல்லை. ஆனால் அதே சமயம், கீதையின் சாரம் தெரிந்தவனாய் இருப்பதால் எமது கீதாசாரியன் அறிவுரைப் பிரகாரம் இம்மாதிரியான நிலைமைகளைப் புரிந்துகொண்டு அவற்றை அவை உருவாகும் அவசியத்தின் பிரகாரம் ஏற்கவும் செயலாற்றவும் தெரிந்தவன்).

இந்திராவைக் கொலை செய்தவர்கள் விஷயத்தில் கோட்ஸேயின் செயலை ஒப்பிடுவது பொருந்தாது என்று நான் எழுதிய கட்டுரையை துக்ளக் ஏனோ நிராகரித்துவிட்டது.

இன்னொரு விஷயமும் இப்போது குறிப்பிட விரும்புகிறேன்: நமது புண்ணிய தேசத்தில் நம்பிக்கைத் துரோகம் செய்து இந்திராவை உடனிருந்தே கொன்றவர்களை ஆண்டுதோறும் தியாகிகள் எனக் கொண்டாட அனுமதியுண்டு. ராஜீவ் காந்தியைச் சதி செய்து கொல்வதற்காக அவரை மட்டுமின்றி ஏராளமான அப்பாவிகளைக் கொன்றும், ஊனப்படுத்தியும் வினையாற்றியவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு மேடையேறிப் புகழ்ந்து பேச வாய்ப்பு உண்டு (பிற்பாடு அப்படிபட்டவர்களுக்கு மத்திய மந்திரிசபையிலேயே இடமும் கிடைத்தது!). ஆனால் கோட்ஸேவுக்கு மாத்திரம் வெளிப்படையாக நினைவு தினம் கொண்டாடவோ அவர் செயலை அவரது கோணத்தில் ஆராய்ந்து மேடை போட்டுப் பகிரங்கமாகப் பேசவோ அனுமதி கிடைக்காது!

காந்திஜி கொலைச் சம்பவம் இது நாள் வரை ஒருதரப்பிலிருந்தே அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது. கொலையாளியை வெகு எளிதில் ஒரு மதவெறியராகச் சித்திரிப்பதோடு விஷயம் முற்றுப்பெற்றுவிடுகிறது. இதை வைத்துக் கொண்டு எவரும் எப்படியும் மனம் போன போக்கில் தூற்றித் திரிய முடிகிறது. இனியாகிலும் இவ்வாறான மேம்புல் மேய்தல் குறைந்த பட்சம் விவரம் மிக்க வாசகர்கள், வரலாற்றுப் பார்வை உள்ள பதிவாளர்களுக்கேனும் இருக்கலாகாது என்பதாலேயே மிக விரிவாக இதுகுறித்து எழுதினேன்.

சொந்தச் செலவில் தில்லியில் போய் காந்திஜி அமைதி நிறுவன விடுதியிலேயே தங்கியிருந்து ஆவணக்காப்பகங்களிலிருந்தும், நாதுராம் வினாயக கோட்ஸேயின் தம்பி கோபால் கோட்ஸேயிடம் உரையாடியும் திரட்டிய ஆதாரங்களின் அடிப்படையில் பதிவுசெய்யப்படும் தகவல்கள் இவை. வீட்டில் உட்கார்ந்துகொண்டு மேற்கொள்ளும் அரட்டை அல்ல. பாரதத்தின் பத்திரிகைகளுக்கு இம்மாதிரியான ஆய்வுகளை வெளியிடும் திராணியோ பொறுப்புணர்வோ இல்லாததால், ஆர்.எஸ்.எஸ். ஆதரவு இதழான ஆர்கனைசர் கூட ‘காந்திஜி கொலையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்குப் பங்கு இருப்பதுபோல் கண்மூடித்தனமாக அவப் பெயர் கற்பிக்கப்பட்டு வருவதால் இது பற்றிய ஆய்வுக்கட்டுரையைப் பிரசுரிப்போமாயின் காந்திஜியின் கொலையை நாம் நியாயப்படுத்துவதாகத் திசை திருப்பி விடுவார்கள் என்று சொல்லி, என்னை ஊக்குவிக்கவில்லை. இந்த ஆய்வுக்காக நான் உழைத்துச் சம்பாதித்த பணத்தில், இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் பத்தாயிரம் ரூபாய்க்கும் அதிகமாகவே செலவழித்து என் குடும்பத்தைக் கஷ்டப்படவைத்தேன்! எழுத்துத் துறையில் பலவாறாக உழைத்து ஏராளமாகச் சம்பாதிக்கத் தெரி ந்தவன். ஆனால் அப்படிச் சம்பாதிப்பதைக் குடும்பத்திற்கு ஒதுக்காமல் இவ்வாறெல்லாம் செலவழித்துவிட்டுப் பிறகு

சிரமப்படுபவனுங்கூட!

இறுதியாக இன்னொரு தகவலையும் தந்து முடிக்கிறேன்:

காந்திஜி கொல்லப்பட்டபோது அவரது மறைவுக்கு அதிகாரப் பூர்வமாக இரங்கல் தெரிவிக்காத ஒரேநாடு ஸ்டாலின் ஆளுகையில் இருந்த சோவியத் யூனியன்தான். அந்த சோவியத் யூனியனுடன்தான் காந்திஜியின் அரசியல் வாரிசான நேரு கூடிக் குலாவி, பாரதத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுவதும், சர்வதேச அரங்கில் பாரதம் ரஷ்யாவின் எடுபிடி என்று ஏளனம் செய்யப்படுவதற்கு ஏற்றாற்போல் வினையாற்றுவதுமாக இருந்தார்!

—-

malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்