நாகரத்தினம் கிருஷ்ணா
ஒரு பொருளின் மாற்று வடிவங்களில் நிழலுக்கென தனித்துவமுண்டு. சாயல், நகல், பிரதி, படிமம் எனவும் பொருள் கொள்ளலாம். உளப்பகுப்பாய்வியல் நிழலை மனசாட்சியென்கிறது. கருப்புவெள்ளைபடங்களில் கதை நாயகனோ நாயகியோ மனச்சிக்கலுக்கு உள்ளாகிறபோதெல்லாம் அவர்களினும் பார்க்க இருமடங்கு ஆகிருதியுடன் கலகலவென்று நகைப்பதுபோலவோ, இறுக்கமான முகத்துடன் எச்சரிப்பதுபோலவோ திரையில் தோன்றுகிற நிழல்களை நாம் அறிவோம். உள்மனமென்று நம்பப்படும் இந்நிழலுடைய குணத்தினை இணக்கமற்ற, முரண்படக்கூடிய, கலகக்குரலென்று சித்தரிக்கலாம். மனம் எரிமலையாகிறபோது வீசப்படும் எரிமலைக்குழம்பு இந்நிழல். எரிமலைகுழம்பால் அண்டை நிலங்களுக்குப் பிரச்சினை. உளப்பகுப்பாய்வு முன்னிருத்தும் நிழல் புறப்பட்ட இடத்தையே புல் பூண்டற்று போகச் செய்யும் தன்மையது. நிழலோடு கவனம் தேவை, உறவில் எச்சரிக்கை தேவை. உளப்பகுப்பாய்வியல் அறிஞர் கார்ல் யுங்கிற்கு இந்நிழல் நம்மினும் தாழ்ந்தது, பண்படாதது, செம்மையுறாதது, தொடக்க நிலை, முரண்பட்டது ஆனால் தப்பானதல்ல. அற்பாத்மாவுக்குரிய குணமும் சேர்ந்ததுதான் மகாத்மா. சுத்திகரிக்கபட்ட ஒழுகலென்று எதுவுமில்லை. வாழ்க்கையென்பது அப்பழுக்கதற்றதல்ல. ஒழுங்கின்மையும் சேர்ந்ததுதான் உயர்வும் முன்னேற்றமும், ஆக நிழலின்றி ஒளியில்லை என்பதுதான் விதி.
தருமிக்கு ghostwriter யாரென்று கேட்டால் சிவபெருமானைச் சொல்வோம். The Count of Monte Cristo, The Three Musketeers, Twenty Years After புகழ் அலெக்ஸாந்த்ரு துய்மாவிற்கும் ஒரு Ghostwriter உண்டு பெயர் மக்கே என அழைக்கபட்ட ஒகுய்ஸ்த் மக்கே(Auguste Maquet). எட்டுவருடங்களுக்கு முன்பு அலெக்ஸாந்த்ரு துய்மாவை பாந்த்தெயோன் தேவாலயத்தில் மறு அடக்கம் செய்வதென பிரான்சு நாடு தீர்மானித்தபோது இந்த நிழலுக்கு ஆதரவாக ஒலித்த ஒரே குரல் பொதுவுடமைக் கட்சியின் அதிகாரபூர்வ ஏடான ஹ¤மானித்தே தினசரியின் ஆசிரியர் குரல். அவர் தமது தலையங்கத்தில், "துய்மாவின் முக்கிய படைப்புகளுக்குப் பின்புலத்தில் உழைத்த ஒகுய்ஸ்த் மக்கேவை நண்பர் அருகில் மறு அடக்கம் செய்யக்கூடாதா? அதற்கு தேவாலயத்தில் கொஞ்சம் இடமில்லாமல் போய்விட்டதா?" என்று வருந்தினார். துய்மாவின் நிழலாகவிருந்த ஒகுய்ஸ்த் மக்கே 19ம் நூற்றாண்டைசேர்ந்தவர். பெரிய இடத்துப்பிள்ளை, கல்வி அறிவிலும் தேர்ந்தவர். இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று பதினெட்டுவயதில் ஆசிரியப் பணியில் சேர்ந்தார். பணியிலிருந்துகொண்டு எழுதிய சில கவிதைகளும், கதைகளும் இலக்கிய இதழ்களில் பிரசுரமாகின்றன. பிடித்தது சனி. இலக்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர்களின் சினேகிதம் வாய்க்கிறது. மனிதருக்கு இலக்கியத்தில் சபலமுண்டாக ஆசிரியப் பணியைத் துறக்கிறார். ஆசிரியப்பணியிலிருந்துகொண்டு இலக்கிய பணியை செய்யமுடியாதென நினைத்திருக்கிறார். ழெரார்ட் நெவால்(Gerard de Nerval) என்ற கவிஞரின் நட்புகிடைக்கிறது. இருவருமாக இணைந்து கட்டுரைகள் எழுதுகிறார்கள்.
ஒகுய்ஸ்த் மக்கேவும் தரித்திரமும் இரட்டையர்கள் என்றாலும் தரித்திர சகோதரர் இவரை முந்திக்கொண்டிருக்கவேண்டும். மூன்று அங்கங்கள் கொண்ட நாடகமொன்றினை எழுதி எடுத்துக்கொண்டு வாய்ப்புத்தேடி நாடக அரங்கு பொறுப்பாளர்களைப் பார்க்கச் சென்றிருக்கிறார். வியாபாரிகள் "கூட்டம் சேர்க்கிற பெயராக இல்லையே" எனப் பதில் கூறியிருக்கிறார்கள். ஏமாற்றத்துடன் வீட்டிற்குத் திருப்பிய மக்கே நான்கைந்து படிகளெடுத்து அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த சஞ்சிகைகளுக்கு அனுப்பிவைத்திருக்கிறார். படைப்பாளரின் பெயரைப் பார்த்துவிட்டு படைப்பை தெரிவு செய்யும் மகானுபாவர்கள் சரக்கு எங்களுக்கு முக்கியமில்லை ஐயா, செட்டியார் முடுக்காக இருக்கவேண்டுமென அருள்கூர்ந்திருக்கிறார்கள்: எங்களுக்கு வேண்டியதெல்லாம் எழுதியிருப்பவர் யார்? என்ன எழுதப்பட்டிருக்கிறதென்பது எங்களுக்கு முக்கியமல்ல என்று பதில் வந்திருக்கிறது. மனிதருக்குப் பொறுமையில்லை நண்பரும் கவிஞருமான ழெரார் நெவால் பெயரில் தமது படைப்பினை அனுப்பிவைக்க பிரசுரமாகிறது. படைப்பில் தமது பெயர் இல்லாவிட்டாலும் தமது படைப்பு பிரசுரமாகிறதே என்ற அற்ப சந்தோஷம்.
இந்த ழெரார் நெவாலுக்கு அலெக்ஸாந்த்ரு துய்மா சினேகிதர். 1838ம் ஆண்டு டிசம்பர் மாதத்து குளிர் நாளில் துய்மாவை ஒகுய்ஸ்த் மக்கேக்கு அறிமுகப்படுத்திவைக்கிறார். தம் கைவசமிருந்த படைப்பொன்றை திருத்தி எழுதிக்கொடுக்கும்படி துய்மா இப்புதிய நண்பரைக்கேட்கிறார். அவரும் திருத்திக்கொடுக்கிறார். அன்று தொடங்கிய இருவருக்குமான நட்பு 18 ஆண்டுகாலம் நீடிக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ‘நீக்ரோ’வாக மாறுகிறார். பிரெஞ்சு படைப்புலகில் ‘Gostwriter’ ஆக இருப்பவர்களுக்கு அதாவது நிழல்படைப்பாளிகளாக இருப்பவர்களுக்குப் பெயர் நீக்ரோ. இந்த நிழலை வெளிச்சத்திற்கு வந்திடாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டவர் அலெக்ஸாந்த்ரு துய்மா. ஒக்குய்ஸ்த் மக்கேக்குவுக்கு அவருக்குண்டான ஊதியத்தை கொடுக்க தொடக்கத்தில் ஒப்புக்கொண்ட துய்மா தவறியதால், பிரச்சினை நீதிமன்றத்திற்குபோகிறது. ஒகுய்ஸ்த் மக்கே தமது படைப்புக்கான ஊதியத்தை மட்டுமல்ல, படைப்புகளில் தமது பெயரும் இடம்பெறவேண்டுமென்று கோரிக்கை வைக்கிறார். நீதிமன்றம் துய்மா மக்கேவுக்குக் கொடுக்கவேண்டிய பணத்தை கடன்தொகையாக பார்த்ததே அன்றி படைப்பின் அடிப்படையில் செய்துகொண்ட ஒப்பந்த ஈட்டுத் தொகையாக பார்க்கத் தவறுகிறது. 145200 பிராங் மக்கேவுக்குத் துய்மா கொடுக்கவேண்டுமென தீர்ப்பு வழங்கியபோதிலும், படைப்புரிமைபற்றி நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை என்பதைக் இங்கே குறிப்பிட்டாகவேண்டும். 1851ம் ஆண்டில் நடந்த வழக்கும் தீர்ப்பும் பிரெஞ்சு படைப்புலகிற்கு மிகப்பெரிய அவப்பெயரினை ஏற்படுத்தித் தந்ததென சொல்கிறார்கள்.
துய்மாவை விமர்சிப்பவர்கள் ஸ்க்ரீப்,லாபிஷ்(Scribe, Labiche)போன்ற படைப்பாளிகளை சுட்டிக்காட்டுகிறார்கள். ஸ்கிரிப் ஐநூறுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியவர். தாம் தனித்து எழுதியதில்லை என ஒத்துக்கொண்டவர் பிற்காலத்தில் தமக்காக எழுதியவர்கள் பெயர்களை சுவற்றில் பொறித்துவைத்தார். லாபிஷ் என்ற நாடக ஆசிரியரும், தமது படைப்புக்குக் காரணமான நண்பர் மார்க் மிஷெல் அருகிலேயே தம்மை அடக்கம் செய்யவேண்டுமெனக் கேட்டுக்கொண்டவர். துய்மா தமது நிழல் எழுத்தாளருக்கு அவ்வாறான நன்றிக்கடன் ஆற்றியதாக செய்திகளில்லை. மாறாக The Count of Monte Cristo, Twenty Years After என்ற இருநாவல்களையும் எழுதிய ஒகுய்ஸ்த் மக்கே என தமது கல்லறையில் எழுதிக்கொண்டு திருப்தி அடைந்ததுதான் அவர் கண்ட பலன்.
இம்மாதம் (பிப்ரவரி) பத்தாம் தேதி வெளிவந்துள்ள திரைப்படத்தின் பெயர் ‘L’autre Dumas – வேறொரு துய்மா. அலெக்ஸாந்த்ரு துய்மாவின் மற்றொரு முகத்தை இத்திரைப்படம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. படத்தில் மேற்கண்ட பிரச்சினகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவகையில் இத்திரைப்படம் ஒகுய்ஸ்த் மக்கேவுக்கு செலுத்தப்படும் அஞ்சலியெனலாம். நடு நிலையாளர்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் நேர்மையாக திரைக்கதை சொல்லப்பட்டிருக்கிறது. ஒகுய்ஸ்த் மக்கே பாத்திரம் துய்மாவுக்கு இணையாகச் சொல்லப்ட்டிருக்கிறது. இப்படத்தினை முன்வைத்து பிரான்சு நாட்டு கறுப்பரின தலைவர் பத்ரிக் வொசே என்பவர் சில கேள்விகளை முன்வைக்கிறார். அவருக்கு அலெக்ஸாந்த்ரு துய்மா பாத்திரத்தை ஒரு கறுப்பர் ஏற்று நடித்திருக்கவேண்டும், தலைமுடியை சுருள்சுருளாக மாற்றிக்கொள்வது மட்டும் போதாதென்பது அவர் கருத்து. காரணம் அலெக்ஸாந்த்ரு துய்மாவின் தந்தை கலப்பின ஆசாமி, ஹைத்தியைச் சேர்ந்த அடிமை. அவரது தாயாரும் ஒரு கறுப்பின பெண்மணி, ஹைத்திநாட்டில் அடிமையாக இருந்தவள். துய்மா தமது வாழ்நாளில் இனவெறியினால் பாதிக்கப்பட்டதையும் இவர் நினைவுகூர்கிறார். குறைந்தபட்சம் துய்மாவாக நடித்த நடிகருக்கு ஒப்பனையிலாவது அவர் கறுப்பரினத்தைச் சார்ந்தவரென்பதை காட்டியிருக்கவேண்டுமென்கிறார். பிரெஞ்சு திரையுலகம் கவனமானதுதான், எப்படி தவறியிருப்பார்களென தெரியவில்லை. அவர்களுக்கு துய்மாவாக நடித்த ழெரார் தெபார்தியே கச்சிதமாக பாத்திரத்துக்குபொருந்துவது காரணமாக இருக்கலாம். எதிர்காலத்தில் பராக் ஒபாமாவாகவோ, மார்ட்டின் லூதர் கிங்காகவோ ஒரு வெள்ளையரை நடிக்க வைப்பார்களா அல்லது ஜூலியர் சீசராக ஒரு கருப்பரை நடிக்க வைப்பார்களா என்ற கறுப்பரினத் தலைவர் எழுப்பும் கேள்விகளும் நியாயமானவையே.
எனக்குப் பிரச்சினை, துய்மாவாக யார் நடித்தார்கள் என்பதல்ல? மக்கேவை ஏமாற்றிப்பிழைத்த துய்மாவின் சாமர்த்தியம். இன்றைக்கு எழுத்து பணி அல்ல பிறவற்றைப்போல ஒரு தொழில். தொழில்களின் தலைவிதியை தொழிலாளர்கள் தீர்மானிப்பதல்ல பணமுதலீட்டார்கள் தீர்மானிக்கிறார்கள், பணம் தீர்மானிக்கிறது அது சார்ந்த கோட்பாடுகள் தீர்மானிக்கின்றன. முதலாளிய உற்பத்தி சமுதாயத்தில் இலாபத்தை அடைவதே குறிக்கோள் என்கிறபோது எல்லாதுறைகளையும் போலவே எழுத்துங்கூட தர்மம் அற்றுபோய்விட்டதென்கிற வருத்தம். புகழ் தரும் போதையும் சுகமும் எத்தனை பெரிய மனிதர்களையும் சிறுமைபடுத்தக்கூடியதுதான், துய்மாவும் மனிதர்தானே? இதுதான் எதார்த்தம் என்ற வியாக்கியானமும் வலுசேர்க்க துணையிருக்கிறபோது யாரை இங்கே குற்றஞ்சொல்ல முடியும்?
————————————————————-
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -4 பாகம் -1
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) கவிதை -23 பாகம் -1 ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம்
- சீதாம்மாவின் குறிப்பேடு ஜெயகாந்தன் -1
- மொழிவது சுகம்: ஒளியும் நிழலும்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -4
- ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 17 வது குறும்பட வட்டம். (பதிவு எண்: 475/2009)
- முள்பாதை 16
- எழுத்தாளர் எஸ். அர்ஷியாவின் ‘ஏழரைப் பங்காளி வகையறா’ நாவல் வெளியீட்டு விழா
- வேலிகளைத் தாண்டும் வேர்கள் -கவிதை நூல் வெளியீட்டு விழா.
- முஹம்மது யூனூஸ் அவர்களுக்குப் பாராட்டு விழாவும் நூல் வெளியீட்டு விழாவும்
- பன்முகத் தமிழறிஞர் ஈழத்துப்பூராடனார்
- ஹெச்.ஜி.ரசூல் எழுதிய புதிய திறனாய்வு பின்நவீனத்துவ வாசிப்பில் இஸ்லாம்பிரதிகள்
- நிரப்பிச் செல்லும் வாழ்க்கை அசோகமித்திரனின் “நினைவோடை”
- ஒளிமழை
- சிதறிய கவிதைகள்
- மற்றுமொரு மாலைவேளைக்கான காத்திருப்பு
- ஊமை மொழிகள்..
- வேத வனம் -விருடசம் 72
- இடர்மழை
- முன்னறிவிப்பின் பழுத்த மஞ்சள் நிறம்..!
- மார்க்ஸை தலை கீழாக நிற்க வைத்த போலந்தில் – ஒரு விலாங்கு மீன்
- கடைபிடி; முதல் படி!
- கலைஞர் தாக்கரே ஜெயராம் – இல்லாத வெளிக்குழுவும் எப்போதும் நம் குழுவும்
- யார் கூப்டதுங்க…?
- கலியாணம் பண்ணிக்கிட்டா……