பாவண்ணன்
பவா என நட்போடும் உரிமையோடும் நண்பர்களால் அழைக்கப்படும் பவா.செல்லதுரையின் சிறுகதைகள் பெரும்பாலும் காடுகளையும் மலைப்பகுதிகளையும் கிராமங்களையும் அங்கே வசிக்கிற எளிய மனிதர்களையும் களனாகக்கொண்டவையாக உள்ளன. பச்சை இருளன், பொட்டு இருளன், ஜப்பான் கிழவன், ராஜாம்பாள், தொந்தாலி, பண்டாரி, ரங்கநாயககிக்கிழவி என அவர் தீட்டிக்காட்டும் பல பாத்திரங்கள் முதல் வாசிப்பிலேயே நமக்கும் நெருக்கமானவர்களாக மாறிவிடுகிறார்கள். இவரது சிறுகதைகளில் கோட்டாங்கல் பாறையும் சிங்காரக் குளமும் உயிருள்ள பாத்திரங்களுக்கு இணையான துடிப்போடு சித்தரிக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.
தொகுப்பின் முக்கியமான சிறுகதையாக “சத்ரு” சிறுகதையைச் சொல்லலாம். எளிய சித்தரிப்புகள் வழியாக தன் உச்சத்தை அடையும் இச்சிறுகதை போகிறபோக்கில் மானுட மன ஆழத்தையும் தொட்டுக் காட்டி முடிகிறது. மாரியம்மனின் படையலுக்காக சேகரித்து வைக்கப்பட்டிருந்த கேழ்வரகைத் திருட முயற்சி செய்த பொட்டு இருளன் ஊரார்கள் கைகளில் அகப்பட்டு தண்டிப்பதற்காக காசிரக்கா நாரினால் கயிற்றுக்கட்டிலோடு கட்டப்பட்டு கிடக்கும் காட்சிமுதல் “போ, போய் பொழச்சிக்கோ” என்று ஊர்மக்களாலேயே விடுவிக்கப்பட்டு அனுப்பப்படும் காட்சிவரையிலான சித்திரங்கள் இச்சிறுகதையில் முன்வைக்கப்படடிருக்கின்றன. தண்டிக்க முனைந்த மனம் இரக்கப்பட்டு மன்னிக்கவும் முனையும் சித்தரிப்பு மகத்தான திருப்பம்.
சத்ரு யார் என்பது முக்கியமான கேள்வி. ஒரு முனையில் வறுமைக்கொடுமையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மார்iயம்மனுக்குப் படையலிட வைத்திருந்த கேழ்வரகைத் திரட்டிவைத்து காத்திருக்கும் ஊர்மக்களும் இன்னொருமுனையில் தன் பசிக்காக அந்தக் கேழ்வரகைத் திருட முனைந்து அகப்பட்டுக்கொண்ட பொட்டு இருளனும் நிற்பவர்களாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும் இவர்களில் யாருமே உண்மையில் சத்ருக்கள் அல்லர். இந்த இரண்டு தரப்புகளையும் இப்படி அல்லாட வைத்து, ஆத்திரமூட்டி, உயிரையே பறிக்கமுனைகிற அளவுக்கு சீற்றத்துக்கு ஆளாக்கிய வறுமையே உண்மையான சத்ரு. வானம் வழங்கும் அமுதமாகிய மழையின் துளிகள் மண்ணில் பட்டதுமே மனிதர்கள் கருணையுள்ளவர்களாக மாறிவிடுகிறார்கள். அவர்களை அந்த நொடிவரைக்கும் கருணையற்றவர்களாக ஆக்கி வைத்திருந்த மழையின்மையையும் அதனால் உண்டான வறுமையும்தான் என்பதை அவர்களுக்கே அத்தருணம் உணர்த்திவிடுகிறது. அதுதான் மழை பொழிந்துமுடித்ததுமே இருளனை விடுவிக்கும் தௌiவை அவர்களுக்கு வழங்குகிறது.
“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக இவ்வுலகியற்றியான்” என்று படைத்தவனையே சபிக்கிற திருக்குறள் வரிகள் நினைவுக்கு வருகின்றன. பிச்சையெடுத்து வாழ்வதையே திருவள்ளுவரால் சகித்துக்கொள்ள இயலவில்லை. திருடி வாழ்கிற நிலையைக் கண்டிருப்பின் அவரது சாபம் இன்னும் கடுமையான வார்த்தைகளால் ஆனதாக இருக்கக்கூடும். நெஞ்சில் பொங்கும் சீற்றத்தோடு எழுதப்படும் இந்த வரிகளுக்குப் பின்னால் இந்த உலகத்தின்மீது வறுமையின் கரிய நிழல் கவிழ்ந்துவிடக்கூடாது என்கிற பரிவும் பதற்றமும் மறைந்திருக்கின்றன. வறுமை பசியைத் தரும். பசி மானுடர் பண்புகளை அழிக்கும். சமநிலைகளைக் குலைத்து சமூகத்தையே அழிவுக்கு அழைத்துச் செல்லும். வறுமை சமூகத்தின் மிகப்பெரிய எதிரி. வள்ளுவர் கண்டுணர்ந்து உரைத்த அந்த எதிரியின் சித்திரத்தை பவா செல்லத்துரை தன் சிறுகதையில் வேறொரு விதமாக தீட்டிக் காட்டுகிறார்.
பிச்சைக்குப் பாத்திரமேந்தி வருபவளுக்கு ஊர்ப்பெண்கள் மாவளிப்பதும் அவர்கள் அள்ளஅள்ள உரல்குழி தானாக நிறைந்துகொள்வதும் மனநிறைவின் தளும்பலில் அவள் கண்களில் கசியும் நீர்த்துளி மறுகணமே மலையில் மழையாகப் பொழிவதுமாக சித்தரிக்கப்படும் காட்சிகள் கவித்துவ நுட்பத்துடன் வெளிப்பட்டுள்ளன. குறைந்த சொற்களில் அவற்றை உணர்த்தும் பவா.செல்லத்துரையின் ஆளுமை பாராட்டுக்குரியது.
“ஏழுமலை ஜமா” மற்றொரு முக்கியமான சிறுகதை. சமூக கௌரவத்துக்குப் பாத்திரமான கூத்துக்கலைஞன் அதே சமூகத்தின் புறக்கணக்கப்புக்கு ஆளாகும்போது அடைகிற மனஉளைச்சல்களையும் சிதைவுகளையும் சித்தரிக்கிறது இச்சிறுகதை. ஊர்த்திருவிழாக்களில் கூத்து ஒதுக்கிவைக்கப்பட்டு வீடியோ திரைப்படத்துக்கு முக்கியத்துவம் பெருகிய தருணங்களில் கூத்துக்கலைஞர்கள் போக்கிடமற்றவர்களாகப் போய்விடுகிறார்கள். வயிற்றுப் பாட்டுக்காக வெவ்வேறு ஊர்களில் சிறுசிறு தொழில்களைச் செய்ய ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் போய்விடுகிறார்கள். வாத்தியாரான ஏழுமலை மூட்டைதூக்கிப் பிழைப்பதற்காக பெங்களூருக்குச் செல்கிறார். சக தொழிலாளிகளின் எள்ளல்களுக்கும் பகடிகளுக்கும் ஆளாகி மனம்நொந்து ஊருக்கே திரும்பிவருகிறார். வெறும் வயிற்றை நிரப்பிக்கொண்டு வாழ்கிற வாழ்க்கையால் மனிதர்களின் மனம் நிறைவாடவதில்லை. சமூக கௌரவத்தால் கிடைக்கிற மனநிறைவ,ம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. ஊருக்குத் திரும்பிய வாத்தியாரைச் சந்திக்கவரும் பிற கலைஞர்கள் பக்கத்திலேயே உழைத்துப் பிழைக்க வெவ்வேறு வழிகளை முன்வைக்கிறார்கள். “கூத்து நடத்தலாம் வா” என்று முன்வைப்பவர்கள் யாருமே இல்லை. கூத்து தேவைப்படாத ஒரு சமூகத்தின் முன் கூத்தாடியாக மீண்டும் வேஷம்கட்டிக்கொண்டு நிற்பதில் அவர்களுக்கு உடன்பாடில்லை. ஆனால் சமூகத்துக்கு வழங்க கூத்தைத் தவிர வேறு எதையுமே கொண்டிராத கலைஞன் அவமதிப்புகளையும் மீறி அதே சமூகத்தின்முன் கூத்துக்கலைஞனாகவே நிற்கவே விழைகிறான். முன்னகர்ந்துபோய்விட்ட சமூகத்தின் கவனத்தைத் தன்பால் திருப்பிவிடமுடியும் என்கிற நம்பிக்கையில் அவன் மனம் மறுபடியும் மறுபடியும் மிதக்கிறது. அத்தகைய வாய்ப்புகளுக்கு இடம்தராத சமூகத்தின் அவமதிப்பு ஒருபுறம். இழந்த கௌரவத்தை மீட்டுக்கொள்ள வழியில்லாமல் மனம்குமுறி தளரும் கலைஞன் இன்னொரு புறம். இரண்டு புள்ளிகளையும் மாறிமாறிக் காட்டுகிறது சிறுகதை.
தொகுப்பில் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறுகதை “வேறுவேறு மனிதர்கள்”. எங்கோ ஏற்பட்டுவிட்ட கோளாறுகளால் ஓய்வூதியத் தொகையைப் பெறமுடியாத ஆசிரியருக்கு அடுfத்தடுத்து ஏற்படும் நலிவுகளையும் அவமானங்களையும் காலமெல்லாம் அவரோடு இருந்து பழகிய சக ஊழியர்களே அவரைப் புறக்கணித்து செய்யும் பகடிகளையும் மாறிமாறிக் காட்டுகிற சிறுகதை நம்பிக்கை குலையாத ஆசிரியரின் மனைவியைக் காட்டிவிட்டு நிறைவடைகிறது. ஒரு அன்பளிப்புப்பொருளாக கதையில் இடம்பெறும் குடை இறுதிக்காட்சியில் ஆசிரியருடைய மனைவியின் கையில் இருப்பதைக் காட்டும்போது, ஆதரவின் குறியீடாகவும் பாதுகாப்பின் குறியீடாகவும் மாற்றமடைகிறது. மொழியால் நிகழ்த்த இயலும் இத்தகு மகத்துவங்கள்தாம் ஒரு சிறுகதையை மிகச்சிறந்த படைப்புகளாக மாற்றுகின்றன.
மற்ற சிறுகதைகள் ஏதோ ஒருவகையில் வலிமை குறைந்தவையாக உள்ளன. மிகச்சிறந்த நிலக்குறிப்புகள், தகவல்கள், அறிந்திராத முகச்சித்திரங்கள் என சாதகமான பல அம்சங்கள் இருந்தும்கூட வாசித்து முடித்ததும், இன்னும் சிறப்பாக முன்வைக்கப்பட்டிருக்கலாம் என்கிற எண்ணம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.
( நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை, சிறுகதைகள். பவா.செல்லதுரை. வம்சி புக்ஸ், 19, டி.எம்.சரோன், திருவண்ணாமலை-1. விலை.ரூ 60)
paavannan@hotmail.com
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அகிலத்தை மர்மான ஈர்ப்பியல் எப்படி ஆள்கிறது ?(கட்டுரை: 21)
- வெள்ளித்திரை
- சி புஸ்பராஜா இரண்டாவது நினைவு பகிர்தலும் நூல் அறிமுகமும்
- திருச்சியில் பன்னாட்டுக் கருத்தரங்கு (டிசம்பர் 2007)
- நஸீம்
- சம்பந்தமில்லை என்றாலும் – தமிழ்நாடு-நேற்று இன்று நாளை (எடிடர்: என். முருகானந்தம்)
- எல்லாமே சிரிப்புத்தானா?
- வெடிக்காய் வியாபாரம்
- The Kite Runner – பட்டம் ஓட்டி
- காற்றினிலே வரும் கீதங்கள் – 11 சரண் புகுந்திடுவாள் !
- தாகூரின் கீதங்கள் – 22 கவிஞனைத் தேடுகிறாயா ?
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 3
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
- எழுத்துக்கலை பற்றி இவர்கள் …….16 தொ.மு.சி.ரகுநாதன்
- ஒட்டுக் கேட்க ஆசை
- அகண்ட பஜனை
- அஞ்சலியிலும் சாதி துவேஷமா?
- கிழிபடும் POAக்கள்
- வார்த்தை – ஏப்ரல் 2008 இதழில்…
- பன்முக நோக்கில் திருக்குறள் – தேசியக்கருத்தரங்கம்
- கி ரா ஆவணப்பட வெளியீடு
- தமிழ் பிரவாகம் – இலக்கியப் போட்டி
- Tamilnadu Thiraippada Iyakkam
- காக்கை எச்சமிட்டும் களங்கமடையாத பாரதி சிலை
- அநங்கம் சிற்றிதழ்-மலேசியா
- சகோதரர் வஹ்ஹாபியுடன் நேசகுமார் நடத்திக் கொண்டிருக்கும் விவாதம்
- மொழியால் நிகழும் மகத்துவம் நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை- பவா.செல்லதுரை சிறுகதைகள்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 3
- சங்க இலக்கியத்தில் மேலாண்மை – முனைவர் ஆ. மணவழகன் நூல் மதிப்புரை
- சுடர்விடும் வரிகள் – பர்த்ருஹரியின் சுபாஷிதம் (தமிழாக்கம் : மதுமிதா)
- சுஜாதாவோடு..,
- சம்பள நாள்
- இரண்டு கடிதங்கள்
- மாட்டுவால்
- வளர்ப்பு
- ஜீன்களைச் சிதைத்துக் கொண்டு மீண்டும் பிற
- போய் வா நண்பனே
- கவிதைகள்
- விபச்சாரியை பெண்ணென்று ஆங்கீகரிப்பதும், சூசானும்*
- ‘தன்னுணர்வு’: பெருஞ்சித்திரனாரின் தமிழாக்கம்
- ஹிந்துக்களின் குரலை எதிரொலிக்கும் மலேசியத் தேர்தல்