மேசை என்றால் மேசை (Ein Tisch ist ein Tisch)

This entry is part [part not set] of 24 in the series 20011215_Issue

ஜெர்மன்மூலம் : பேற்றர் பிக்ஃசெல் (Peter Bichsel) மூலமொழியில் இருந்து தமிழில்: ந.சுசீந்திரன்


பேற்றர் பிக்ஃசெல் (Peter Bichsel, பிறப்பு: 1935, லூசேர்ன்) பிரபலம் வாய்ந்த நவீன சுவிஸ் எழுத்தாளர். ஜெர்மன் மொழியில் எழுதுபவர். சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம் போன்றவற்றை வளம்படுத்தியவர். மந்தித்து அந்நியமாகிக் கொண்டிருக்கும் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையைத் துல்லியமாகத் தன் கதைகளில் கொண்டுவருபவர். தேக்கமடையும் இன்றைய சமூக யதார்த்தம் இவரின் கவித்துவநடையில் சோகமாய்ச் சொல்லப்படுகிறது.

‘உண்மையில் திருமதி புளும் அந்தப் பால்காரனோடுதான் உறவுகொள்ள விரும்புகிறாள் ‘ – அதிகமாகப் பேசப்படும் இவரது பிரபல்யமான கதை.

‘…எழுத்தாலும் கவிதையாலும் அரசியல் பிரச்சனைகளை அணுகுபவன் நான். பத்திரிகைகளின் கலாசாரப்பக்க பத்தி எழுத்துக்களை நான் விரும்பி எழுதுகின்றேன். எழுத்தாளன் என்பவன் இன்றைய சமூகத்திற்கும் அதிகாரத்திற்கும் பிரச்சனையானவன். வாசகர்களோ இன்னும் பிரச்சனையானவர்கள். வாசிப்பதால் மனிதன் அதிகாரத்துடன் இணங்கிப் போவதில்லை. மாறாக வாசிக்காமல் இருப்பதால் தான் மனிதன் அதிகாரத்துடன் இணங்கிப் போக நேர்கிறது… ‘ என்று தன் எழுத்தைப் பற்றிக் கூறுகிறார் இவர்.

சர்வதேசப் புகழ்பெற்ற குழந்தைக்கான கதைகள் பல இவருடையவை. இக் கதை -குழந்தைகளுக்குக் கவிஞர்கள் சொல்லும் கதைகள்( Dichter erzaelen Kindern, G.Middelhauve,Koeln,1966) என்ற ஜெர்மன் நூலில் இருந்து எடுக்கப்படுகிறது.

********************************************************************************

நான் ஒரு வயோதிபனைப் பற்றிச் சொல்லப் போகிறேன். இனி எந்த வார்த்தையுமே பேச மாட்டாத, சிரிக்கவும் கோபப் படவும் கூட சோம்பற் படும் தூங்கிப்போன முகங் கொண்ட ஒரு வயோதிபனைப் பற்றி.

அந்தச் சிறு நகரின் ஒரு தெரு முனைச் சந்திக்கருகில் அவன் வீடு. அவனைப் பற்றி இன்னும் மேலதிகமாகச் சொல்லிக் கொண்டு போவதால் ஆகப்போவது எதுவுமில்லை. மற்றவர்களை விட அவனொன்றும் வித்தியாசமான ஆளுமில்லை.

சாம்பல் நிறத் தொப்பி, சாம்பல் நிறப் பேண்ட், சாம்பல் நிற கோட். நல்ல குளிர்காலமென்றால் நீள சாம்பல்நிற மேலங்கியை அணிந்து கொள்வான். உலர்ந்து சுருக்கம் விழுந்து போன அவனது மெல்லிய கழுத்தில் அவன் அணியும் வெளிளை சேட்டின் காலர் அவனுக்குப் பெரிதாக இருக்கும். அந்த வீட்டின் மேல் மாடியில் அவனுக்கு ஓர் அறை இருக்கிறது. ஒருவேளை அவன் திருமணம் முடித்தவனாயும் இருந்திருக்கலாம். அவனுக்குக் குழந்தைகளும் இருந்திருக்கலாம். அவன் வேறொரு நகரத்தில் வாழ்ந்தும் இருக்கக் கூடும். அவனும் நிச்சயம் ஒருகாலத்தில் குழந்தையாக இருந்திருப்பான்.

ஆனால் அவன் சிறுவனாய் இருந்த அந்தக் காலம் குழந்தைகளும் பெரியவர்களைப் போலவே உடுத்திய காலம். அந்தக் காலத்துப் பாட்டிகளின் போட்டோ ஆல்பத்தில் அந்த மாதிரிக் குழந்தைகளைக் காணலாம்.

அவனது அறையில் இரண்டு நாற்காலிகள், ஒரு மேசை, ஒரு தரை விரிப்பு, ஒரு கட்டில், ஒரு அலுமாரி, சிறிய மேசை மீது ஒரு கடிகாரம். அதன் அருகில் பழைய பத்திரிகைகளும் ஒரு போட்டோ ஆல்பமும். சுவரில் ஒரு கண்ணாடியும் ஒரு படமும் தொங்குகிறது.

அந்த வயோதிபன் காலையிலும் மாலையிலும் ஒரு நடை வெளுயில் போய்விட்டு வருவான். தன் பக்கத்து வீட்டுக் காரர்களுடன் ஒரு சில வார்த்தைகள் பேசுவான். மாலையில் தன் மேசைமுன் சென்று உட்கார்ந்திருப்பான். இதில் ஒரு போதும் மாற்றமே இருந்ததில்லை. ஞாயிற்றுக் கிழமைகளில் கூட இப்படித்தான். அவன் மேசைக்கருகில் உட்கார்ந்திருக்கும் போது கடிகாரத்தின் சத்தம் கேட்கும் எப்போதும் அந்த சத்தம் அவனுக்குக் கேட்டுக்கொண்டிருக்கும்.

அன்று அது வழமைக்கு மாறாக வேறொரு தினமாக இருந்தது. குளிருமில்லாத வெப்பமுமில்லாத ஒரு மிதமான நாள். இளஞ் சூரியன், பறவைகளின் கீச்சுக்குரல், மகிழ்ச்சி ததும்பும் மனிதர்கள், ஓடியாடித் திரியும் சிறுவர்கள். அந்த நாளின் உன்னதம் என்ன வென்றால், இவையெல்லாம் அந்த வயோதிபனின் கண்களுக்கு திடாரெனத் தெரிய ஆரம்பித்தது தான்.

அவன் சிரித்தான்.

எல்லாமே மாறப்போகின்றது போலும் என்று அவன் நினைத்தான். தன் சட்டையின் காலரைத் திறந்து விட்டான். தொப்பியைக் கைகளில் எடுத்தான். நடையில் துரிதம், முழங்காலின் ஒயிலான அசைவு, மகிழ்ச்சியான நடை. இப்போது அவன் தன் வழமையான தெருவில் நடந்தான். பாதையில் கண்ட குழந்தைகளுக்குத் தலையசைத்தான். தன் வீட்டின் முன்னால் போய் நின்றான். வீட்டின் படிகளில் ஏறினான். தன் சாவியை எடுத்து, சாவிக்கொத்தின் ஓசையில் சந்தோசப்பட்டவாறு தன் அறையைத் திறந்தான்.

ஆனால் அறையில் யாவும் அப்படியே இருந்தன. ஒரு மேசை, இரண்டு நாற் காலிகள், ஒரு கட்டில். எப்போதும் போலவே அந்தக் கடிகாரத்தின் சத்தம் மீண்டும். அவன் சந்தோசம் யாவும் கணப்பொழுதிலேயே கரைந்து போய் விட்டது. என்ன இது ? இங்கு எந்த மாற்றத்தையுமே காணோமே.அவனுக்குக் கெட்ட கோபம் வந்தது. கண்ணாடியில் அவன் தன் முகம் சிவந்ததை, கண்கள் சுருங்கியதைக் கவனித்தான். தன் முஷ்டிகளை மடக்கியவாறே உயர்த்தி மேசையின் மீது ஓங்கிக் குத்தினான். மீண்டும் ஒருமுறை குத்தினான். பின்னர் மேசையில் தாளமிட்டவாறு அவன் மீண்டும் மீண்டும் உரத்துக் கத்தினான்.

”மாற்றம் தேவை, மாற்றம் தேவை”

இப்போது அந்தக் கடிகாரத்தின் சத்தம் கேட்கவில்லை. அவன் கைகள் வலிக்க ஆரம்பித்தது. அவன் குரல் அடைத்துப் போனதுபோல் காணப்பட்டது.!கடிகாரத்தின் சத்தம் மீண்டும் கேட்கிறது. எதிலுமே மாற்றமில்லை.

”எப்போதும் இதே மேசை.”

”இதே நாற்காலி, இதே கட்டில், இதே படம். மேசைக்கு மேசை என்கிறேன். படத்திற்குப் படம் என்கிறேன். கட்டிலுக்குக் கட்டில், நாற்காலிக்கு நாற்காலி. ஏன் தான் இப்படி இருக்க வேண்டும் ?” பிரான்சு தேசத்தவர்கள் கட்டிலுக்கு ‘லி ‘, மேசைக்கு ‘ராப்ல ‘, நாற்காலிக்கு ‘சாஸ் ‘ , படத்திற்கு ‘ரப்லோ ‘ என்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு அது விளங்கிவிடுகிறது தானே. சீன தேசத்தவர்களும் எனக்குப் புரியாத தமது மொழியால் ஒருவரை ஒருவர் விளங்கிக்கொள்கிறார்கள் தானே.

  ‘ஏன் கட்டில் படம் எனப்படுவதில்லை ‘ இவ்வாறு நினைத்தவாறே சிரித்தான். சத்தமிட்டுச் சிரித்தான்.

பக்கத்து வீட்டுக்காரர் நடுச்சுவரில் தட்டி ”சத்தமாயிருக்கிறது” என்று சொல்லும் வரை சிரித்தான்.

”இதோ மாற்றம் நடைபெறப் போகிறது” என்று உரத்துக் குரல் எழுப்பினான். அக்கணத்தில் இருந்து அவன் கட்டிலுக்குப்  படம் என்று புதுப் பெயர் வைத்தான். இதற்கு இசைவாக ” நான் களைத்து விட்டேன், நான் படத்தில் படுக்கப் போகிறேன்.” என்றான். அதி காலைகளில் அடிக்கடி அதிக நேரம் தன் படத்தில் படுத்திருந்தவாறே நாற்காலிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து , பின்னர் நாற்காலிக்குக்  கடிகாரம் என்று சொல்லிக்கொண்டான்.

அவன் தன் படம் விட்டெழுந்து ஆடைகளை அணிந்த பின் கடிகாரத்தில் போய் உட்கார்ந்தான். கைகளை மேசைமீது வைத்தான். ஆனால் மேசை இப்போது மேசையென அழைக்கப்படமாட்டாது. இப்போது அது தரைவிரிப்பாகும். காலை அவன் தன் படம் விட்டெழுந்து ஆடை அணிந்து தரைவிரிப்பின் அருகில் இருந்த கடிகாரத்தில் போய் உட்கார்ந்து, எதற்கு எப்படி எப்படிப் புதுப் பெயர் வைப்பது என்று சிந்திக்கலானான்.

கட்டிலுக்கு படம்

மேசைக்கு தரைவிரிப்பு

நாற்காலிக்கு கடிகாரம்

பத்திரிகைக்கு கட்டில்

கண்ணாடிக்கு நாற்காலி

கடிகாரத்திற்கு போட்டோ ஆல்பம்

அலுமாரிக்கு பத்திரிகை

தரைவிரிப்புக்கு அலுமாரி

படத்திற்கு மேசை

போட்டோ ஆல்பத்திற்கு கண்ணாடி

இப்போது:

காலையில் அந்த வயோதிபன் நீண்ட நேரம் தன் படத்தில் படுத்திருக்கும் போது ஒன்பது மணிக்கு போட்டோ ஆல்பம் அலறியது. அவன் படம் விட்டெழுந்து கால்களில் குளிர்ஏறிவிடக்கூடாது என்பதற்காக அலுமாரியில் ஏறி நின்றான். பின்னர் தன் உடைகளைப் பத்திரியையினுள் இருந்து எடுத்து அணிந்து கொண்டான். சுவரில் தொங்கும் நாற்காலியில் தன்னைப் பார்த்தான். தரைவிரிப்புக்கு அருகிலிருக்கும் கடிகாரத்தில் போய் அமர்ந்து அன்றைய கண்ணாடியைப் புரட்டினான். அவன் தாயின் மேசையைக் கண்ணாடியில் கண்டான்.

சிலவேளை உங்களுக்கு இது வேடிக்கையாகவும் நகைப்பாகவும் இருக்கலாம். அவனுக்குங் கூட இது நல்ல வேடிக்கையாகத்தான் இருந்தது. இவற்றை நாள் முழுதும் சொல்லிச் சொல்லிப் பார்த்தான். புதிய சொற்களுடனேயே தன்னைப் பரிச்சயப் படுத்திக் கொண்டான். இப்போது எல்லாமே மறுபெயரிடப்பட்டு விட்டன. அவன் இப்போது மனிதன் அல்ல. கால் எனப் படுகிறான், அவனது கால் இப்போது காலையாகிவிட்டது. காலையோ அவனிடத்தில் மனிதனாகிவிட்டது.

இது உங்களுக்குப் பிடித்துக் கொண்டு விட்டால் இந்தக் கதையை நீங்கள் தொடர்ந்து எழுதலாம். இந்த வயோதிபனைப் போலவே வேறு வார்த்தைகளை மாற்றிப் பார்க்கலாம்:

சத்தமிடல் வைத்தல் எனப்படுகிறது

குளிர்ந்து போதல் பார்த்தல் எனப்படுகிறது

படுத்தல் சத்தமிடல் எனப்படுகிறது

நிற்றல் குளிர்ந்து போதல் எனப்படுகிறது

வைத்தல் புரட்டுதல் எனப்படுகிறது

இப்போது அதிமனிதனில் அந்த வயோதிபக் கால் அதிக நேரம் படத்தில் சத்தமிட்டுக் கிடந்தான். ஒன்பது மணிக்கு போட்டோ ஆல்பம் வைத்தது. அந்தக் கால் குளிர்ந்து போனது. பின் காலையைப் பார்த்துவிடாமல் இருக்க அலுமாரியின் மீது புரட்டினான். அந்த முதியவன் நீலநிறத்தில் குறிப்புப் புத்தகம் ஒன்றை வாங்கித் தன் புதிய வார்த்தைகளை அக் குறிப்புப் புத்தகம் முழுவதும் எழுதினான். இதனால் செய்ய வேண்டியவை அவனுக்கு நிறையவே இருந்தன. அவன் இப்போது அரிதாகத்தான் வீதியில் காணக்கிடைத்தான். எல்லாப் பொருட்களுக்கும் அவன் சூட்டிய புதிய பெயர்களை பாடமாக்கிக் கொண்டான். இதன் மூலம் பொருட்களின் உண்மையான பழைய பெயர்கள் அவனுக்கு மறந்தே போய்க்கொண்டிருந்தன. இப்போது அவனுக்கே சொந்தமான ஒரு புதிய தனி மொழி அவனிடம் இருந்தது. அவனுக்கு மட்டுமே புரியக்கூடிய மொழி. அங்குமிங்குமாக அவன் தன் புதிய மொழியிலேயே கனவுகள் கண்டான். தன் பால்யகாலப் பள்ளிப் பாடல்களை தன் புதிய மொழியில் மொழிமாற்றம் செய்துகொண்டான். மாற்றஞ்செய்யப்பட்ட பாடல்ளை தனக்குள் மெதுவாகப் பாடவுஞ் செய்தான். போகப் போக அவனால் மொழிமாற்றஞ் செய்யமுடியவில்லை. தன் முன்னைய மொழியை அவன் முற்றாகவே மறந்து விட்டான். உண்மையான பழைய பெயர்கள் தேவைப்படும் போதெல்லாம் அந்த நீலநிறக் குறிப்புப் புத்தகத்தையே அவன் புரட்டிப் பார்க்கவேண்டியிருந்தது. ஏனைய மனிதர்களோடு உரையாட அவனுக்கு அச்சமாக இருக்கிறது. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று விளங்கிக்கொள்ள அவன் நீண்ட நேரம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

அவனுடைய படம் அவர்களுக்கு கட்டில்

அவனுடைய தரைவிரிப்பு அவர்களுக்கு மேசை

அவனுடைய கடிகாரம் அவர்களுக்கு நாற்காலி

அவனுடைய கட்டில் அவர்களுக்கு பத்திரிகை

அவனுடைய நாற்காலி அவர்களுக்கு கண்ணாடி

அவனுடைய போட்டோ ஆல்பம் அவர்களுக்கு கடிகாரம்

அவனுடைய பத்திரிகை அவர்களுக்கு அலுமாரி

அவனுடைய அலுமாரி அவர்களுக்கு தரைவிரிப்பு

அவனுடைய மேசை அவர்களுக்கு படம்

அவனுடைய கண்ணாடி அவர்களுக்கு போட்டோ ஆல்பம்

சக மனிதர்கள் பேசுவதைக் கேட்கும் போது இவனுக்கு இப்போது மிகுந்த வேடிக்கையாக இருந்தது. அந்த அளவிற்கு அவன் தன் சொந்த மொழியில் ஊறிப்போயிருந்தான். ”நாளைக்கு நீங்களும் உதை பந்தாட்டப் போட்டிக்குப் போகிறீர்களா ?” என்றோ அல்லது ”இரண்டு மாதங்களாக ஒரே மழையாக இருக்கிறது” என்றோ அல்லது ” அமெரிக்காவில் எனக்கு ஒரு மாமா இருக்கிறார்” என்றோ யாராவது சொன்னால் அவன் விழுந்து விழுந்து சிரிக்கிறான்.

அவனுக்கு இவற்றில் எதையுமே புரிந்து கொள்ள முடியாதமையினால் சிரிக்கத்தான் வேண்டியிருக்கின்றது. எப்படியிருப்பினும் இதனை ஒரு வேடிக்கையான கதை யென்று சொல்லிவிட முடியாது. சோகத்தில் தொடங்கிச் சோகத்திலேயே முடிகிறது இக்கதை. சாம்பல் நிறக் கோட் அணிந்து வரும் அந்த வயோதிபனால் இப்போது மனிதர்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதுகூடப் பரவாயில்லை. ஆனால் அந்த வயோதிபனை மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாது போனது தான் இன்னும் பரிதாபத்திற்குரியது. இதனால் அவன் எதுவுமே பேசுவதில்லை. அவன் மெளனமாகிவிட்டான். தானே தனக்குள் மட்டுமே பேசுகிறான். எதிர்ப்படும் மனிதருக்கு எந்தவிதமான உபசாரவார்த்தையொன்றைக் கூறத்தானும் இப்போது அவனால் முடிவதில்லை.

Series Navigation

ஜெர்மன்மூலம் : பேற்றர் பிக்ஃசெல் (Peter Bichsel) மூலமொழியில் இருந்து தமிழில்: ந.சுசீந்திரன்

ஜெர்மன்மூலம் : பேற்றர் பிக்ஃசெல் (Peter Bichsel) மூலமொழியில் இருந்து தமிழில்: ந.சுசீந்திரன்