மெளனியின் படைப்புலகம்: ஒரு கலந்துரையாடல்

This entry is part [part not set] of 26 in the series 20010910_Issue

அரவிந்தன்


தமிழ்ச் சூழலில் ஒரு வித்தியாசமான சந்திப்பு

மிகவும் குறைவாக எழுதி மிகவும் அதிகமாக மதிப்புப் பெற்ற மெளனி மீதான கவனத்தைப் புதுப்பிக்கும் முயற்சி ஒன்று செப்டம்பர் 1, 2 தேதிகளில் பாண்டிச்சேரியில் தலித் மாத இதழ் மற்றும் காலச்சுவடு அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்றது. சுமார் 50க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களும் விமர்சகர்களும் கலந்துகொண்ட இந்தக் கலந்துரையாடல் தமிழ்ப் படைப்புச் சூழலில் மெளனியின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதி செய்தது. தூய அழகியல், தலித்தியம், பெண்ணியம், அமைப்பியல், கட்டுடைத்தல், முற்போக்கு என்று பல்வேறு பார்வைகளின் விமர்சனபூர்வமான அணுகுமுறைகளைத் தாங்கி நிற்கும் வலு மெளனியின் படைப்புக்களுக்கு இருக்கிறது என்பதை இந்த அரங்கம் நிரூபித்தது.

கருத்தரங்கு நடைபெற்ற இரண்டு நாளும் பாண்டிச்சேரியின் வீதிகளில் அனல் பறந்தது. ஆனால் கருத்தரங்க அறைக்குள் சூடு ஏறாமல் இருந்ததற்கு, அந்த அறையில் குளிர்பதன வசதி செய்ப்பட்டிருந்ததும் அது அவ்வப்போது சிறப்பாக வேலை செய்ததும் மட்டும் காரணமல்ல. சமீபகாலங்களில் தமிழ் மேடைகளிலும் அரங்கங்களிலும் தவறாமல் இடம் பெறும் போலி ஆவேசங்களும் போலி கலகக் குரல்களும் மாற்றுக் கருத்தாளர்களை முத்திரை குத்தி சிறுமைப்படுத்தும் போக்கும் பேச வந்த விஷயத்தை விட்டுவிட்டு மனம் போன போக்கில் பேசும் பொறுப்பின்மையும் அடையாளச் சிக்கலின் வெளிப்பாடான தாறுமாறான நடத்தைகளும் இந்தக் கருத்தரங்கில் காணப்படவில்லை. தமிழ்ச் சூழலில் நிலவும் இதுபோன்ற போக்குகளால் இலக்கிய அரங்குகள் மலினப்பட்டு வரும் பின்னணியில் உருப்படியான அரங்கத்தை உருவாக்கும் அக்கறையுள்ளவர்கள் யாரை அழைப்பது, யாரத் தவிர்ப்பது என்பதில் கவனமாக இருப்பது தவிர்க்க முடியாததாகிறது. இந்த விஷயத்தில் தாங்கள் எடுத்துக்கொண்ட கவனம் பற்றி அமைப்பாளர்களில் ஒருவரான ரவிக்குமார் கருத்தரங்கின் துவக்கத்தில் வெளிப்படையாகவே தெரிவித்தார்.

அந்த கவனத்திற்கு நல்ல பலன் இருந்ததை இரண்டு நாட்கள் நடைபெற்ற உரைகள் மற்றும் உரையாடல்களில் கண்கூடாகக் காண முடிந்தது. மெளனியின் கதைகளை மிக உயர்வாகக் கருதும் பலர் அங்கு வந்திருந்தார்கள். எனினும் மெளனியின் சில கதைகள் தமிழ் சினிமா இயக்குனர்களுக்குக் கதை சப்ளை செய்யக் கூடியவையாக இருக்கின்றன என்று ராஜேந்திர சோழன் சொன்ன போது யாரும் உணர்ச்சிவசப்படவில்லை. எம்.ஜி.ஆர். படங்களைப் போல ஒரே சூத்திரத்தை வைத்துக்கொண்டு ஒரே விதமான கதைகளை எழுதியவர் மெளனி என்று அ. ராமசாமி சொன்ன போதும் யாரும் பொங்கி எழவில்லை. ஜார்ஜ் லூயி போர்ஹேவை விமர்சித்து ஜெயமோகன் தனது சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் எழுதியிருந்ததை 1993இல் குற்றாலத்தில் நடைபெற்ற இலக்கிய அரங்கில் குறிப்பிட்டு, சாரு நிவேதிதா, டி. கண்ணன் ஆகியோர் ஆவேசமடைந்து கூச்சலிட்ட காட்சி இந்த சந்தர்பத்தில் என் நினைவுக்கு வருகிறது. மெளனியின் ஒவ்வொரு கதைகளும் அற்புதமானவை என்று ஞானக்கூத்தன் சொன்னபோதும் மெளனியைக் கடுமையாக விமர்சித்தவர்கள் யாரும் பதற்றபபட்டு குரல் எழுப்பவில்லை. பதற்றமும் ஆவேசமும் இன்றிக் கருத்து வேற்றுமைகளை எதிர்கொள்ள முடியும் என்பதை இந்த அரங்கம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

மெளனியுடன் பழகியதில் தனக்கேற்பட்ட அனுபவங்களை சுந்தர ராமசாமி பகிர்ந்து கொண்டதிலிருந்து அமர்வு தொடங்கியது. சு.ராவின் வார்த்தைகளில் அவரது அனுபவங்கள் காட்சிப் படிமங்களாக விரிந்தன. மெளனி என்ற மனிதரின் தனிப்பட்ட ஆளுமையின் சில பரிமாணங்கள் சித்திரங்களாகத் துலங்கின. பல எழுத்தாளர்கள் பற்றிய மெளனியின் கூர்மையான அபிப்ராயங்கள், மொழி விஷயத்தில் அவருக்கு இருந்த மிக நுட்பமான பார்வை ஆகியவையும் சு.ராவின் பேச்சினூடே வெளிப்பட்டன. பேச்சினூடே இழையோடிய நகைச்சுவை அந்த அமர்வை மிகவும் கலகல்ப்பனதாக ஆக்கியது. அதன் பிறகு, மெளனியோடு நெருங்கிப் பழகியவரும் அவரது கதைகளின் மொத்தத் தொகுப்பை வெளியிட்டவருமான சச்சிதானந்தம் மெளனியுடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அதற்கடுத்து பேசிய ஞானக்கூத்தனும் மெளனியுடன் பழகிய அனுபவங்களைக் கூறினாலும் அவரது பேச்சின் பெரும்பகுதி மெளனி கதைகளைப் பற்றியதாகவே இருந்தது. பல கதைகளைப் பற்றி விரிவாகப் பேசிய அவர், சமஸ்கிருத இலக்கியக் கோட்பாடுகளின் அடிப்படையிலும் சில கதைகளை அலசினார். ரசனை மற்றும் இலக்கியக் கோட்பாட்டு அடிப்படையிலான அவரது பார்வை மெளனியை அவ்வளவாகப் புரிந்துகொள்ளாதவர்களும் அவரது படைப்புலகிற்குள் நுழைய உதவுவதாக இருந்தது. அடுத்தபடியாகப் பேசிய ராஜேந்திர சோழன் மெளனி பற்றிய தனது விமர்சனங்களை விரிவாக முன்வைத்தார். சமூக நோக்கில் பார்க்கும் போது மெளனியின் படைப்புகளில் பிற்போக்குத்தனங்கள் அதிகம் தெரிவதாகச் சுட்டிக்காட்டினார். கலை நோக்கில் பார்க்கும் போது மெளனி சிறந்த படைப்புகளை எழுதியிருக்கிறார் என்று அவர் ஒப்புக்கொண்டாலும் அவரை மிகச் சிறந்த கலைஞர் என்று ஒப்புக்கொள்ள முடியாது என்றார். அவர் கதைகளில் காணப்படும் மொழி சார்ந்த பிழைகள், குழப்பங்கள், வடிவம் சார்ந்த பிரச்னைகள் முதலிய பல காரணங்களைக் கூறி அவர் இந்த முடிவுகளை முன்வைத்தார்.

மதிய உணவுக்குப் பிறகு மறுபடியும் கூடிய அமர்வு காலையில் பேசப்பட்ட விஷயங்களின் மீதான விவாதமாக அமைந்தது. அனேகமாக எல்லோருமே ராஜேந்திர சோழனின் கட்டுரையைப் பற்றியே பேசினார்கள். பேசினார்கள் என்பதை விட மறுத்தார்கள் என்று சொல்லலாம். க.வை. பழனிச்சாமி, அப்பாஸ், எம். கண்ணன், ஞானக்கூத்தன், அரவிந்தன், ரவிக்குமார், திலீப் குமார், சா. கந்தசாமி, பஞ்சாங்கம் ஆகிய பலரும் சோழனின் கருத்துக்களைப் பல தளங்களிலும் மறுத்துப் பேசினார்கள். குறிப்பாக பெண்ணடிமைத்தனத்தைப் பேணுவதாகச் சோழனால் சொல்லப்பட்ட சிகிச்சை என்ற கதை விரிவான அலசலுக்குள்ளாக்கப்பட்டது. முற்போக்கு அல்லது சமூக நோக்கில் பார்த்து மெளனியின் கதைகளைப் புறக்கணித்துவிட முடியாது. அவரது கதைக் களமும் தளங்களும் முற்றிலும் வித்தியாசமானவை; நுட்பமானவை என்ற பார்வை அந்த விவாதத்தின் போது வெளிப்பட்டது. மெளனியின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பார்க்கும் போது அவர் பழமைவாதியாகவும் பிற்போக்குவாதியாகவும் இருக்கிறார். ஆனால் அவரது கதைகள் மிகச் சிறப்பானவையாக இருக்கின்றன என்று கூறிய சு.ரா., இந்த முரண்பாடு எளிதில் புரிந்துகொள்ள முடியாத மர்மமாக இருக்கிறது என்றார். மெளனியின் மொழி புதுக்கவிதைக்கு மிகப் பெரிய உந்துதலாக இருந்தது என்றும் அவர் குறிபிட்டார். விவாதத்தைத் தொடர்ந்து யுவன் சந்திரசேகர் மெளனி பற்றிய தன் கட்டுரையை வாசித்தார். முதல் நாள் அமர்வுகளின் இறுதியில் மெளனி பற்றி சச்சிதானந்தன் தயாரித்த விவரணப் படம் திரையிடப்பட்டது. மெளனியை நேரில் பார்க்காதவர்கள் அவர் எப்படி இருப்பார் என்று தெரிந்துகொள்ள உதவியது என்பதைத் தவிர அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இல்லை. படத்தில் இடம் பெற்றிருந்த மெளனியின் பேட்டியும் ஒலிக் கோளாறினால் சரியாகப் புரியவில்லை.

மறு நாள் அ. ராமசாமி, பா. வெங்கடேசன், பாவண்ணன், அப்பாஸ், கிருஷ்ணசாமி, பூர்ணசந்திரன் ஆகியோரின் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. மெளனி கதைகளை எம்.ஜி.ஆர். படங்களுடன் ஒப்பிட்டுப் பேசிய அ.ராவின் கட்டுரை விமர்சிக்கப்பட்டது. இந்தக் கருத்தரங்கை ஒட்டி மெளனி கதைகள், மெளனி பற்றிய கட்டுரைகள் ஆகியவற்றைப் பங்கேற்பாளர்களுக்குத் தர அமைப்பாளர்கள் முன்வந்ததை ‘மெளனியைப் படிக்க வைக்கும் திட்டம் ‘ என்பதாகவும் இது தான் விரும்புவதைப் பிறர் மீது திணிக்கும் அதிகார செயல்பாடு என்றும் அ.ரா. கூறியதைப் பலர் ஆட்சேபித்தார்கள். இது போன்ற ‘சதித் திட்ட ‘ குற்றச்சாட்டுகளின் எந்த அளவுக்கு ‘அர்ததமற்றவை ‘ என்பதை ரவிக்குமார் விளக்கினார். மனக்கோட்டை என்ற கதையைக் கட்டுடைப்பு செய்து ஆரியர்கள் திராவிடர்களை வென்ற வரலாற்றைச் சித்தரிக்கும் கதையாக அதை முன்னிறுத்திய பூரணசந்திரன் கட்டுரைக்கும் நிறைய எதிர்வினைகள் வந்தன. மற்றபடி பா. வெங்கடேசன் கட்டுரையைத் தவிர வேறு எந்தக் கட்டுரைக்கும் குறிப்பிடும்படியான எதிர்வினை எதுவும் வரவில்லை.

மெளனியின் எழுத்துக்கள் எடிட் செய்யப்பட்டது பற்றி அரங்கில் அதிக விவாதம் எழுந்தது. மெளனி கதைகளை பி.எஸ். ராமையா எடிட் செய்தது, அவரது கதைகளுக்குத் தலைப்புகளைப் பிறர் கொடுத்தது ஆகிய விஷயங்களும் விவாதத்தில் அடிபட்டன. இப்போது நம் கைக்குக் கிடைப்பதில் எந்த அளவு அவருடைய அசல் எழுத்து என்று தெரியாமல் மெளனியின் படைப்புகளைப் பற்றிய மதிப்பீடுகளை எப்படி மேற்கொள்வது என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. எடிட்டிங் பற்றிய செய்திகள் மிகவும் மிகைப்படுத்தப்பட்டவை என்று ஞானக்கூத்தனும் சச்சிதானந்தனும் கூறினார்கள். மெளனி சில சமயம் ஒரு கதையைப் பல விதமாக எழுதிப் பார்த்திருக்கிறார் என்றும் அந்த எழுத்துக்கள் அனைத்தும் தன்னிடம் இருப்பதாகவும் சச்சி கூறினார். மெளனியின் பிரசுரமாகாத எழுத்துக்கள் சுமார் 2000 பக்க அளவுக்குத் தன்னிடம் இருப்பதாக அவர் தெரிவித்தபோது அதை வெளியிடவேண்டும் என்ற விருப்பம் பலரிடமிருந்தும் வலுவாக வெளிபட்ட்டது. ஏதேனும் ஃபவுண்டேஷன் மூலம் பண உதவி கிடைத்தால் அதைச் செய்வதாக சச்சி தெரிவித்தார். பணத்திற்குத் தான் ஏற்பாடு செய்வதாகக் காலச்சுவடு கண்ணன் உறுதியளித்தார்.

தலித்துகளின் பார்வையில் மெளனியின் கதைகளைப் பற்றிப் பேசிய ராஜ் கெளதமன், மெளனியின் அக உலகம் தலித்துகளால் உணரப்பட முடியாததாக இருக்கிறது என்றார். ரவிக்குமாரும் எம். கண்ணனும் இதை மறுத்துப் பேசினார்கள். இப்படியாக உணவு இடைவேளை வரை சென்ற கலந்துரையாடல் மதியத்திற்குப் பிறகு அதுவரை பேசாத பலரும் (ராஜ மார்த்தாண்டன், நாஞ்சில் நாடன், ஜி. முருகன்) மெளனி பற்றிய தத்தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் அமர்வாக மாறியது. ஒப்புக்கொண்டபடி கட்டுரை எழுத முடியாமல் போனதன் கரணத்தையும் அதன் விளைவான குற்ற உணர்வையும் மனுஷ்ய புத்திரன் பகிர்ந்து கொண்டார். இப்படியாக முடிந்த இரண்டு நாள் கருத்தரங்கின் ஒட்டுமொத்த அனுபவம் என்ன என்று யோசிக்கும் போது கீழ்க்காணும் அம்சங்கள் நினைவுக்கு வருகின்றன:

ஃகுறிப்பிட்ட ஒரு படைப்பாளியின் படைப்புக்களை மையமாக வைத்து நடத்தப்படும் கலந்துரையாடல்கள் வெற்றி பெறாமல் போவதற்குக் காரணம், அந்தப் படைப்புகளைத் தேடிப் பிடித்துப் படிக்க முடியாததால் பலரும் விவாதத்தில் கலந்துகொள்ள முடியாமல் போவதுதான். ஆனால் கருத்தரங்க அமைப்பாளர்கள், மெளனியை வாசிப்பதற்குத் தேவையான நூல்களின் பிரதிகளைத் தேவைப்பட்டவர்களுக்கு அவர்களது கோரிக்கையின் பேரில் அனுப்பி உதவினார்கள். இதன் விளைவாக, வந்திருந்தவர்களில் கிட்டத்தட்ட அனைவருமே மெளனியை இந்தக் கருத்தரங்கிற்காகப் படித்துவிட்டு வந்திருந்தார்கள். இது விவாதத்தை செழுமைப்படுத்தவும் பலரும் விவாதத்தில் பங்கேற்கவும் உதவியது.

ஃவழக்கம் போல அரங்கிற்கு வெளியே நிறைய கூட்டங்கள் நடந்தாலும் அமர்வு நடக்கும் நேரத்தில் இது போன்ற கூட்டங்கள் நடப்பது இந்தக் கருத்தரங்கில் மிகவும் குறைவாக இருந்தது. பாண்டிச்சேரி வெயிலையும் அறையில் இருந்த குளிர்பதன வசதியையும் தாண்டிய சில காரணங்கள் இதற்கு இருந்தன. வெற்று அலட்டல்கள், சவடால்கள், ஆவேசங்கள், விரோத மனப்பான்மை ஆகியவை இல்லாமல் விவாதம் நடப்பதற்கான சூழல் அங்கு இருந்தது மிக முக்கியமான காரணம்.

ஃபல ஆண்டுகள் கழித்து இபோது மெளனியைப் படிக்கும் போதும் அவரது எழுத்து மிகவும் தங்களைக் கவர்வதாகப் பெரும்பாலானவர்கள் கூறினார்கள். பிரம்மராஜனும் பூர்ணசந்திரனும் மெளனி முன்பு தங்களைக் கவர்ந்தது போல இப்போது கவரவில்லை என்றார்கள்.

ஃசமூக, அமைப்பியல் மற்றும் அரசியல்ரீதியான விமர்சனங்களுக்கு எழுந்த எதிர்வினைகளோடு ஒப்பிட்டால் அழகியல்ரீதியான விமர்சனங்களுக்கு எதிர்வினையே இல்லை என்று சொல்லலாம். அமைப்பியல் போன்ற பார்வைகள் எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களை அதிகம் சலனப்படுத்தவில்லை என்பதன் அடையாளமாகவே இது தெரிகிறது. அல்லது அழகியல் சார்ந்து படைப்புகளை அணுகுபவர்கள்தான் இதில் அதிகம் கலந்துகொண்டார்கள் என்பதன் அடையாளமாகவும் இதைப் பர்க்கலாம்.

ஃமெளனி இலக்கியத் தடம் என்ற நூலில் உள்ள கட்டுரைகள் பற்றுயும் மெளனி பற்றி திலீப்குமார் எழுதிய நூல் பற்றியும் எதிர்பார்த்த அளவுக்கு எதிர்வினைகள் வரவில்லை.

ஃசிகிச்சை கதையைப் போலவே அத்துவான வெளி, மனக்கோலம், அழியாச்சுடர் போன்ற கதைகள் பல்வேறு கோணங்களில் அலசலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தால் மெளனி பற்றிய சமகால மதிப்பீடு மேலும் கூர்மை பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

தனது முன்னோடிகளின் படைப்புகளை மறு வாசிப்பு செய்து சம காலப் பின்னணியில் அந்தப் படைப்பாளி பற்றிய தனது மதிப்பீடுகளைத் தொடர்ந்து மறு பரிசீலனை செய்வது உயிரோட்டமுள்ள ஒரு சூழலின் அடையாளம். அதற்கான வாய்ப்பையும் தூண்டுதலையும் உருவாக்குவதில் இதுபோன்ற சந்திப்புகள் ஆற்றும் பணி மிகவும் முக்கியமானது. அதிலும் சுமுகமான சூழ்நிலையிலும் ஆதார நோக்கத்திலிருந்து பிறழாத வகையிலும் நடத்தப்பட்டால் அது தமிழ்ப் பின்னணியில் மிகவும் அரிய விஷயம். அந்த வகையில் இந்த சந்திப்பை முக்கியமான அரிய நிகழ்வு என்று கூறலாம்.

Series Navigation

அரவிந்தன்

அரவிந்தன்