மெய்மையின் மயக்கம்-8

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

சோதிப் பிரகாசம்


(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து…)

அயோத்தி தாசப் பண்டிதர்

மனிதனின் வாழ்க்கையைக் குணவரைப் படுத்துவது (கேரக்டரைஸ்) எது ?

தொடர்ச்சியான அறிவுத் தேடல்!

மிருகத்தின் வாழ்க்கையைக் குணவரைப் படுத்துவது எது ?

தொடர்ச்சியான உணவுத் தேடல்!

மனிதனுக்கும் மிருகத்திற்கும் இடையே உள்ள முக்கியமான வேறுபாடு இதுதான் என்று ஜெய மோகன் கூறுகிறார்.

மிருகம் என்றதும் இங்கே நமக்குப் புத்தரும் அவரது சீட கோடியான அயோத்தி தாசப் பண்டிதரும்தாம் நினைவுக்கு வருகிறார்கள்.

‘புத்தரது ஆதி வேதம் ‘ என்னும் தமது நூலின் முன்னுரையிலேயே தமது புரட்சிகரமான பான்மையினை வெளிப் படுத்தி விடுகிறார் அயோத்தி தாசப் பண்டிதர்!

சீனாக் காரர்கள் முதலிய அயல் நாட்டுப் பயணிகளின் வாயிலாகப் புத்த மதத்தினைத் தெரிந்து கொள்வதை விட, சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, முதலிய தமிழ் இலக்கியங்களில் இருந்து அதனை நாம் தெரிந்து கொள்வதுதான் சிறந்தது என்பது அவரது கருத்து.

புத்த மதத்தினரின் முந்தைய பெயர் ‘ஆழ்வார்கள் ‘ என்பதுதான் என்று உ. வே. சாமி நாதர் கூறி இருப்பதும் ஈண்டு நாம் கவனித்திட வேண்டிய ஒன்று.

மரங்களுக்கு அடியில் தெய்வச் சிலைகளை வைத்து வழி படுவது முதலிய புத்த மதச் சடங்குகளும் மரபுகளும்தாம் பின்னர் இந்து மதச் சடங்குகள் ஆயின என்னும் கருத்து மிகவும் வலுவாக அயோத்தி தாசரின் நூலில் வெளிப் படுத்தப் படுகிறது.

குயவுச் சக்கரத்தைப் பயன் படுத்தி மண் பாண்டங்களை வனைந்து கொண்டு வந்து இருந்த முன்னவர்கள் தென் திரவிடர்கள்தாம் என்பதாலும் சுழற்சி, அதாவது, ஆழித் தொழில் நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்து வந்து இருந்த கோட்பாடுகளின் ஒரு தொகுப்புதான் புத்தம் என்பதாலும், தென் திரவிடத்தில் தோன்றிய ஒரு கோட்பாடாகப் புத்தக் கோட்பாடு இருந்து இருப்பதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆழ்வார்கள் என்றும் அறவாழி அந்தணர்கள் என்றும் ஆழிக் கோட்பாட்டாளர்கள் அழைக்கப் பட்டு வந்து இருந்ததில் வியப்பும் எதுவும் இல்லை.

இந்த ஆழி, அல்லது சுழற்சிக் கோட்பாடுதான் மறு பிறப்பு மற்றும் முன் வினைப் பயன் போன்ற கோட்பாடுகளுக்குக் காரணம் எனலாம். இந்த மறு பிறவிக் கோட்பாட்டுடன் மும் மலக் கோட்பாட்டினைச் சேர்த்து வளர்த்து எடுத்து, அதனைத் தன்வயப் படுத்திக் கொண்ட ஒரு மதமாகவே சிவ மதமும் இருக்கலாம். எனினும், ஆய்வாளர்கள் கவனித்து நோக்கிட வேண்டிய ஓர் ஊகம்தான் இது.

அதே நேரத்தில், வாய் மொழிப் பாடல்களாகப் பாது காக்கப் பட்டு வந்தனவாகச் சொல்லப் படுகின்ற புத்தரின் போதனைகள் எழுத்தில் வடிக்கப் பட்டது இலங்கையில் கி. பி. 85-ஆம் ஆண்டில்தான் ஆகும் என்பதை ஐயம்-திரிபு அற நிருபித்து இருக்கிறார் ரைஸ் டேவிட்ஸ்!

ஆனால், இவை எல்லாம் இங்கே நமக்கு முக்கியம் அல்ல. மாறாக, மிருகங்களைக் கொன்று உண்டு விடுவதன் மூலம் அவற்றின் மறு பிறவி வாய்ப்புகளை—-மனிதர்களாக அவை பிறந்திடக் கூடிய வாய்ப்புகளை—-தடுத்து நாம் நிறுத்தி விடுகிறோம் என்று அயோத்தி தாசர் கூறுவதுதான் முக்கியம்.

மிருகங்களுக்கு மட்டும்தாம் இது பொருந்துமா ? புல்-பூண்டுகளுக்குப் பொருந்தாதா ?

ஒரு மதத்தின் எல்லைக்குள் நின்று கொண்டு அதனை ஆய்கின்ற பொழுது நமக்கு ஏற்பட்டு விடுகின்ற ஓர் இடர்ப்பாடு இது! ‘இந்து மதத்தில் பிறந்து தொலைத்து விட்டேனே ‘ என்று சலித்துக் கொள்ள வில்லையா, ஜோதிர்லதா கிரிஜா!

‘பெருமையும் சிறுமையும் பிறப்பினில் இல்லை ‘ என்பதைத்தான் இவ்வாறு அவர் குறிப்பிடுகிறார் போலும்! எல்லா மதங்களையும் போல இஸ்லாம் மதமும் மூட நம்பிக்கைகள் நிறைந்த ஒரு மதம்தான் என்பதைத்தான் நாகூர் ரூமியும் நமக்கு அறிமுகப் படுத்தி வைக்கிறார்.

எனினும், புல்-பூண்டுகள் முதல் மனிதர்கள் வரை, ஒன்று முதல் ஆறு வரையிலான அறிவின் வளர்ச்சி ஏறு முகமாகக் காணப் படுகின்ற மெய்மையினையும் சுழற்சிக் கோட்பாட்டினையும் மையமாகக் கொண்டு உருவாகி வந்து இருப்பதுதான் ‘மறு பிறவி ‘க் கோட்பாடு எனலாம்.

சரி, ஜெய மோகனின் மிருகங்களுக்கு நாம் வருவோம்.

மிருகங்களும் மனிதர்களும்

வெறுமனே பிழைத்து இருப்பது மட்டும்தான் மிருகத்தின் வாழ்க்கை; தொடர்ச்சியான அறிவுத் தேடல்தான் மனிதனின் வாழ்க்கை; என்று கூறுகின்ற ஜெய மோகன், மிருகங்களை இழிவு படுத்திட முயல்கிறாரா ? என்பது தெரிய வில்லை.

ஆனால், முன்-எச்சரிக்கையாகத்தான் மிருகங்கள் செயல் பட்டுக் கொண்டு வருகின்றன.

முட்டை இடப் போகின்ற பறவைகளுக்கு முன் கூட்டியே அது தெரிந்து விடுகிறது; தாங்கள் இடுகின்ற முட்டைகளை மனிதர்களோ அல்லது மிருகங்களோ திருடிக் கொள்ளலாம் என்பதும் குஞ்சுகள் பொறிக்கப் பட்டதும் அவை பாது காக்கப் பட வேண்டும் என்பதும் குறிப்பிட்ட ஒரு காலம் வரை குஞ்சுகளுக்கு உணவு அளித்து அவற்றை வளர்த்து வருவது தங்களின் பொறுப்பு என்பதும் கூட பறவைகளுக்குத் தெரிந்து இருக்கின்றன. எனவேதான் கூடுகளை அவை கட்டியும் கொள்கின்றன.

ஒரு வேளை, நமக்காக ஜெய மோகன் பரிதாபப் பட வேண்டியது இருப்பதைப் போல, ‘தெரிந்து கொள்ளுகின்ற எந்திரங்களாக ‘ இருப்பதற்கு அவை விரும்பிட வில்லை போலும்! எனவேதான், வீடுகளைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று அவற்றிற்குத் தோன்றிட வில்லை. ஆனால், குயில்களுக்கோ கூடுகளைக் கூட கட்டிக் கொள்வதற்குத் தெரிந்திட வில்லையாம்—வருத்தப் படுகிறார் கவிஞர் இன்குலாப்!

ஆக, மிருகங்களிடம் அறிவுத் தேடல் இல்லையாம்; மனிதர்களிடம் அது இருக்கிறதாம்—-ஜெய மோகன் கூறுகிறார்.

ஆனால், கதை-கவிதைகளினால் மனிதர்களின் அறிவு வளர்ந்து விடுகிறதா ? என்னும் கேள்விக்கும் மிருகங்களுக்கு அறிவு இருக்கிறதா ? என்னும் கேள்விக்கும் இடையே

அப்படி என்னதான் ஒரு சம்பந்தம் இருந்திட முடியும் ? என்பதுதான் நமக்குப் புரிய வில்லை.

எனினும், சம்பந்தம் இல்லாமல் மிருகங்களைப் பற்றி இங்கே ஜெய மோகன் பேசிட வில்லை. ‘நுகர்ச்சி ‘ வாழ்க்கைக்குள் அடிமைப் பட்டுக் கிடப்பவை மிருகங்கள் என்றால், ‘உற்பத்தி ‘ வாழ்க்கையில் விடுதலை பெற்று இருப்பவர்கள் மனிதர்கள் என்பதும் அவருக்கு முக்கியம் இல்லை.

அப்படி என்றால், கதை-கவிதைகளை மிருகங்கள் படிப்பது இல்லை என்பதை நமக்குச் சுட்டிக் காட்டுவதற்காகத்தான் மிருகங்களைப் பற்றி இங்கே அவர் பேசுகிறாரோ ? அல்லது ‘அவர் அறியாமல் ‘ அவருக்குள் நுழைந்து விட்ட அறிவினை நம்முடன் பகிர்ந்து கொள்வதற்காக மிருகங்களைப் பற்றி அவர் பேசுகிறாரோ ? ஊகங்கள்தாம் மிச்சம்!

ஹே:கலும் கார்ல் மார்க்சும்

‘தொடர்ச்சியான ஓர் அறிதல்தான் ‘ மனித வாழ்க்கை என்று ஜெய மோகன் கூறுகிறார்.

கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது.

அறிதல்!

அதுவும், இடை விடாத ஓர் அறிதல்!

இதுதான் நமது வாழ்க்கை என்றால், எவ் அளவு அறிவினை இன்று வரை மனித இனம் சேர்த்து வைத்துக் கொண்டு இருக்க வேண்டும்!

எனினும், அறிவைத் தேடுவதைத் தவிர நமக்கு வேறு வேலையே இல்லையா ?

எழுத்தாளர்களின் வேலை வேண்டும் என்றால் அதுவாக இருக்கலாம்; ஆனால், மற்றவர்களுக்கு வேறு வேலை-வெட்டிகள் இல்லாமல் இருப்பது இல்லை.

அதே நேரத்தில், மேல் தட்டுச் சிற்றுடைமைச் சிந்தனைக்குச் சிறந்தது ஓர் எடுத்துக் காட்டு இது எனலாம். உடல் நோகாத உழைப்பு; மூளை நோகாத ஞானம்! என்று வாழ்ந்து விடுகின்ற வாய்ப்புப் பெற்றவர்கள் ஆயிற்றே அவர்கள்!

‘அறிவை அறிவால் அறிந்தே அறியும் அறிவு ‘ பற்றிச் சித்தர் பத்திர கிரியார் பேசுகிறார் என்றால், ‘மறந்து மறந்து அறிதல் இன்றி அறிந்தவாறே அறிந்து நிற்கும் பேரறிவு ‘ பற்றி சிவ ஞான சுவாமிகள் பேசுகிறார் என்பது எல்லாம் சரிதான்.

ஆனால், இடைப்பாடு (மீடியம்) எதுவும் அற்ற தொடர்ச்சியான அறிவு என்று எதுவும் இருப்பதற்கு அணுவளவும் வாய்ப்பு இல்லை. தன்னுள் இருந்து, தன்னைச் சுற்றி, தன்னால்தானே அறிவு வளர்வதும் இல்லை.

ஏனென்றால், அறிவு—செயல்—-சிக்கல்—-புதிய அறிவு—-புதிய செயல்—-புதிய சிக்கல்—-என்பதுதான் அறிவு வளர்ச்சியின் தொடர்ச்சியான இயக்கம் ஆகும். பழைய செயற்பாடுகளின் போதாமையும் புதிய செயற்பாடுகளின் தேவையும்தாம் அறிவு வளர்ச்சியினை அவசியப் படுத்தவும் செய்கின்றன.

இனி, நாம் வளர்த்துக் கொண்டு இருக்கின்ற நமது அறிவு சரியானதா, இல்லையா ? என்று நமக்கு நிருபித்துக் காட்டுவதும் நமது செயற்பாடுதான்!

மனிதனையும் மிருகத்தையும் வேறு படுத்திக் காட்டுவது சிந்தனைதான் என்று எத்தனையோ சிந்தனையாளர்கள் கூறிக் கொண்டு வந்து இருக்கலாம்.

ஆனால், ஹே:கலும் அப்படித்தான் கருதினார் என்பதால், அவரது கருத்துகளில் ஈடுபாடு கொண்டு அவரை விள்ளனம் செய்து கொண்டு வந்து இருந்தவர் என்கின்ற வகையில், பின் வருமாறு கார்ல் மார்க்ஸ் கூறுகிறார்:

‘உணர்மையைக் கொண்டோ, மதத்தைக் கொண்டோ அல்லது நீங்கள் விரும்புகின்ற வேறு எதனையும் கொண்டோ, விலங்குகளிடம் இருந்து மனிதர்களை வேறு படுத்த முடியும். ஆனால், தங்கள் வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்திக்கத் தொடங்கிய உடன், விலங்குகளிடம் இருந்து தாங்களே அவர்கள் வேறு படத் தொடங்கி விடுகிறார்கள்; அவர்களது உடல் அமைப்பினால் நிலவரப் படுத்தப் படுகின்ற ஒரு முன்னேற்றம் இது… ‘ (பார்க்க: வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் ஒன்று; அடிக் குறிப்பு-17, பக்.95.)

ஆக, எப் பொழுதோ விடை இறுக்கப் பட்டு விட்ட ஒரு கேள்விக்குதான் விடை ஒன்றினை ஜெய மோகன் தேடிக் கொண்டு இருக்கிறார் என்பது தெளிவு.

முக்கியமான முந்திய சிந்தனை வளர்ச்சிகளைப் புரிந்து கொள்வதற்குக் கொஞ்சமும் முயன்றிடாமல், பிந்திய சிந்தனைச் சிதறல்களை மட்டும் பற்றிப் பிடித்துக் கொண்டு தம்பட்டம் அடித்துக் கொள்கின்ற ஒரு மூளைச் சோம்பலின் விளைவு இது எனலாம்!

இனி, நமக்குக் கட்டி விடுவதற்கு முழு மூச்சுடன் ஜெய மோகன் முயன்று கொண்டு இருக்கின்ற ‘முட்டாள் ‘ பட்டத்தினை நாம் ஏற்றுக் கொள்வதா, கூடாதா ? என்பதைப் பற்றிச் சிறிது நாம் பார்ப்போம்.

29-06-2004

(தொடரும்)

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்