வெங்கடரமணன்.
ஒரு பெங்குவின் தமிழ் கற்றுக்கொள்கிறது – 4
கடந்த மூன்று வாரங்களாக நான் எழுதிவந்த லினக்ஸ் இயக்குதள அறிமுகத்தில் ‘தளையறு மென்கலன் ‘ எனும் வார்த்தை அடிக்கடி காணப்படும்; சிலர் என்னிடம் லினக்ஸைப் பற்றித் தொடர்ந்து எழுதுமுன் தளையறு என்பது என்ன ? அதற்கும் வர்த்தக முறையிலான மென்கலன்களுக்கும் என்ன வித்தியாசம் என்று விளக்கும்படி கேட்டிருந்தார்கள். அதன் தொடர்ப்பாக சில கட்டுரைகள் வெளிவரும், பிறகு லினக்ஸ் இயக்குதளத்தின் வளர்ச்சியும் அதன் வருங்காலமும் பற்றித் தொடரும். கடந்த வாரங்களில் எழுதிய கட்டுரைகளில் ‘இலவசம் ‘ என்னும் சொல்லை அதிகதடவைப் பயன்படுத்திவிட்டேன். லினக்ஸ் இயக்குதளத்தின்மீது உணர்வுபூர்வமான பற்று கொண்டவர்கள் சிலர் (ஆமாம், சிலருக்குத் தாங்கள் பயன்படுத்தும் கருவிகளின்மீதும், தொடர்புடையனவற்றிலும் உணர்வுபூர்வமான பற்று தோன்றும்; தமிழ்த் திரைப்படக் கதாநாயகன் தான் வசதி மேம்பட்ட நிலைக்கு இடைவேளைக்குப் பின் மாறினாலும், முந்தைய பழைய காரையோ ஆட்டோவையோ தினமும் காதலுடனும், பக்தியுடனும் கொஞ்சுவதைப் பல படங்களில் கண்டிருப்பீர்கள்தானே! இத்தகைய லினக்ஸ் அன்பர்களுக்கு இலவசம் எனும் வார்த்தை அடிக்கடி லினக்ஸ் தொடர்பாக வருவது அதன் பெருமைகளை மட்டுப் படுத்துவதாகத் தோன்றுவதாகக் கூறுகின்றார்கள். ஏன் எனக்கே சென்ற வாரக் கட்டுரையைத் திரும்பப் படித்ததில் அப்படித்தான் தோன்றியது. எனவே, கருத்துரீதியாக இத்தகைய மென்பொருட்கள் எப்படி உயர்ந்தன என்று விளக்குவது என்னுடைய கடமையாகின்றது.
ஆங்கிலத்தில் Free Software என்று அறியப்படுபவை இவை; இதற்கு நேரடி மொழிபெயர்ப்பு இலவச மென்கலன் எனப்படும். ஆனால் ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு; There is no such thing as a free lunch – உன்னுடைய கூழுக்கு நீ உழைத்தாக வேண்டும் எனும் அடிப்படை உண்மை இது. நாமும் ஏற்பது இகழ்ச்சி என அறிந்தவர்கள்தாம். உண்மையில் இதில் வரும் free எனும் சொல்லுக்கு free of bounds, free of obligations எனும் பொருள்தான் பொருத்தம். பிரெஞ்சு மொழியில் libre என்பார்கள்; இதை அடியொட்டிதான் நானும் தளையறு என்று வழங்குகின்றேன். தளையறு மென்பொருள் கழகத்தின் அடிப்படைக் கருதுகோளில் பின்வரும் நால்வகைத் தளையின்மைக் கையாளப்பட்டுள்ளது;
0. தடையின்றி மென்கலனைக் கணினிகளில் கையாளல்
1. தடையின்றி அதன் செயற்பாட்டை அறிதல்; தேவையெனில் மாற்றியமைத்தல்
2. தடையின்றி பிரதியெடுத்து பிற பயனர்களுக்கும் வழங்கல்
3. தடையின்றி அதனை மாற்றியமைத்தல், செயற்பாட்டை மேம்படுத்தல். மாற்றப்பட்ட கலனை தடையின்றி வினியோகித்தல்.
தளையறு மென்கலன் கழகத்தால் வெளியிடப்படும் எல்லா நிரல்களும் இந்த அடிப்படை கருதுகோளை முன்னிறுத்த வேண்டும். இதற்கு வசதியாக அவற்றின் மூல ஆணைநிரல் (source codes) தொகுப்புகள் எல்லோருக்கும் தெரியும் வகையில் வெளியிடப்பட்டாக வேண்டும்.
இதன் அறிவுபூர்வமான, நாகரீகத்தால் மேம்பட்ட கருத்துக்களை அறிந்துகொள்ள நாம் வாங்கும் வணிகரீதியிலான மென்பொருள்கள் நமக்கு என்னென்னத் தடைகள் விதிக்கின்றன என்பதை முதலில் உணர்தல் அவசியம். உதாரணமாக மிகவும் பிரபலமான மைக்ரோஸாப்ட் ஆபீஸ் எனும் செயலித்தொகுப்பின் படியுரிமைப் பத்திரம் பின்வருமாறு வலியுறுத்துகின்றது. மென்கலன் கொண்ட குறுவட்டுப் பெட்டியைத் திறக்கும்பொழுது சட்டபூர்வமாக இவற்றின் தளைகளுக்கு நீங்கள் கட்டுப்படுகின்றீர்கள் ‘
1. இந்த மென்கலனை ஒரேயொரு கணினியில் மட்டும்தான் நீங்கள் பயன்படுத்தலாம்.
2. இதை எந்த கணினிகளின் தொகுதியிலும் (உங்கள் நிறுவனத்தில் உள்ள சிறு வலையமைப்பில்) நீங்கள் வலையில் பயன்படுத்த என்று உள்ள பிரத்தியேக அனுமதியின்றி சேமிக்கக் கூடாது.
3. இந்தக் குறுவட்டை நீங்கள் பாதுகாப்பிற்காக இல்லாமல் பிரதியெடுக்கக் கூடாது
4. இதை நீங்கள் கல்வி நிறுவனத்திற்கான சிறப்புச் சலுகைவிலையில் வாங்கியிருந்தால் பிற இடங்களில் பயன்படுத்தக் கூடாது
5. இதை நீங்கள் மறு விற்பனை செய்யக்கூடாது. வேறு யாரிடமாவது இலவசமாகவோ, பணத்திற்கோ மாற்றினால் உங்கள் கணினியின் புழக்கத்திலுள்ளதை நீங்கள் நீக்கி விடவேண்டும்
6. இந்தச் செயலியை நீங்கள் மாற்றியமைக்கக் கூடாது
7. தொகுப்பாக உள்ள செயலியை நீங்கள் வாங்கியிருந்தால் அதன் பகுதிகளை ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளில் பயன்படுத்தக் கூடாது
8. இதை குறுகிய காலத்திற்கு வாடகைக்கு விடக்கூடாது.
நம்மில் பெரும்பாலானவர்கள் இதையெல்லாம் படிப்பதில்லை. இவற்றினால் உண்டாகக் கூடிய சில மோசமான சூழ்நிலைகளைப் பார்ப்போமா!!
உங்களிடம் இரண்டு மேசைக்கணிகள் உள்ளன; நீங்கள் தனியாள்; இரண்டு கணினிகளையும் நீங்கள் ஒருவர்தான் பயன்படுத்துவீர்கள் என்றாலும் கூட உங்கள் வீட்டிலும், அலுவலிலும் ஒரே செயலியை இரண்டுமுறை பணம் தந்து வாங்காமல் சேமித்தல் தவறு.
நீங்கள் மேலாளர் என்றால், நீங்களும் உங்கள் செயலாளரும் இரண்டுமுறை பணம்தந்து வாங்காமல் ஒரே செயலியை உபயோகிக்கக் கூடாது
நீங்கள் மாணவராக இருக்கும்பொழுது உங்கள் கடின சேமிப்பில் நீங்கள் கல்வி நிறுவனத்திற்கான சிறப்புச் சலுகை விலையில் ஒரு மென்பொருளை வாங்கி இருந்தால் வேலை கிடைத்ததும் அதைப் பயன்படுத்தும் உரிமையை நீங்கள் இழக்கின்றீர்கள்.
நீங்கள் ஒரு புதுக் கணினி வாங்குகின்றீர்கள்; அப்பொழுது உங்கள் பழையதை குறைந்த விலைக்கு விற்கின்றீர்கள் அல்லது பள்ளி செல்லும் உங்கள் மகளுக்குத் தருகின்றீர்கள் என்றால் பழையதில் உள்ள செயலியை முற்றிலுமாக நீக்கிவிட நீங்கள் கடமைப்பட்டவர்.
சிறு மாற்றத்தின்மூலம் அந்தச் செயலியைச் சிறப்பாகப் பயன்படுத்த முடியும், உங்களுக்கு அந்தத் திறமை உண்டு என்றாலும் அதை நீங்கள் செய்யக்கூடாது (பெரும்பாலும் செய்ய இயலாது, அதை மாற்ற மூல ஆணைக்குறியீடுகள் தேவை அதை நிறுவனம் ஒருக்காலும் வெளியிடாது). அதாவது உங்கள் அறையில் உள்ள மேசையையும் கட்டிலையும் இடம் மாற்றினால் உங்காளால் வசதியாக இருக்கமுடியும் என்றாலும் மேசையை விற்றவர்தான் அதை இடம்மாற்றம் செய்ய உரிமையுண்டு; அவரைக் கூப்பிட்டு அவரால் அதை இடம்மாற்றச் செய்ய வேண்டும் – பெரும்பாலும் அவருடைய அந்த சேவைக்கு நீங்கள் எக்கச்சக்கம் பணம் தரவேண்டியிருக்கும்.
இன்னும் உதாரணமாக நீங்கள் மைக்ரோஸாப்ட் ஆபீஸ் தொகுப்பை வாங்குகின்றீர்கள். அதிலுள்ள வேர்ட் எனும் தட்டச்சுச் செயலி உங்கள் செயலாளருக்கும், எக்ஸல் எனும் கணக்கீட்டுச் செயலி உங்கள் கணக்கருக்கும் பயன்படும் என்றாலும் நீங்கள் அவ்வாறு இரண்டு இடங்களில் இரண்டு பகுதிகளைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம்.
ஒரு நான்கு மாதம் வெளியூருக்குச் செல்லுகின்றீர்கள்; உங்கள் இல்லத்தை ஒருவருக்கு அணைத்துப் பொருட்களுடனும் வாடகைக்கு விடுகின்றீர்கள் (இதுபோன்ற சூழ்நிலை இப்பொழுது சர்வசாதாரணமாகி வருகின்றது, நிறையபேர் ஒரு வருடம், ஆறுமாத காலத்த்திற்கு வெளிநாட்டில் வேலைசெய்யச் செல்கின்றார்கள்; அவர்கள் வீட்டை அப்படியே வாடகைக்கு விடுகின்றார்கள்) அதில் உங்கள் கணினியும் அடக்கம் என்றாலும் அதில் உள்ள செயலியை நீங்கள் அப்படி வாடகைக்குத் தரமுடியாது, அதை கணினியிலிருந்து நீக்கி விட்டு பின்னர் உங்களுக்கு வேண்டும்பொழுது அதை ஏற்றிக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு.
இதில் இவ்வளவு சட்டபூர்வ இடைஞல்கள் இருப்பது நம்மில் பலருக்குத் தெரியாது, ஏனென்றால் இவைகளைப் பலர் படிப்பதில்லை. படித்தாலும் மதிப்பதில்லை. (கொடுங்கோலனின் ஆட்சியில் விதிமுறைகளை எப்படிக் குடிமக்கள் மதிப்பதில்லையோ அப்படித்தான் இதுவும்.).
இவ்வளவு அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகள் இருப்பது தேவைதானா ? இதனால் உண்மையில் யாருக்கு இலாபம் ? பல்வேறு இராட்சத மென்பொருள் நிறுவனங்கள் இத்தகையக் கட்டுப்பாடுகள் இருப்பது உண்மையிலேயே அவசியம் என்று அமெரிக்க அரசாங்கத்தையும் அதைத் தொடர்ந்து வலியவன் எளியவனின் கையை முறுக்குவதுபோல் ஏழைநாட்டு அரசுகளையும் கூட நம்பவைத்து விட்டன. பெரும்பாலான நாடுகளில் இந்த வணிக நிறுவனங்கள் தங்கள் விலைபொருள்களில் அச்சிடும் இந்த முரட்டுத்தனமான கட்டுப்பாடுகள் சட்டபூர்வமாகச் செல்லுபடியாகும், இவற்றிலுள்ள முரண்களையும் நியாயமின்மையையும் தெரிந்தாலும் சட்டரீதியாக இதற்கு நீங்கள் கட்டுப்பட்டவர்.
வணிக நிறுவனங்கள் இதற்கு முன்னிறுத்துவது இரண்டு வகையான காரணங்கள்; ஒன்று உணர்ச்சி பூர்வமானது, மற்றது பொருளாதார ரீதியானது. உணர்ச்சி பூர்வமாக அவர்கள் காட்டுவது தனிப்பட்ட நிரலர்களை; ‘இது என்னுடைய கடின உழைப்பில் வந்தது, இதன்முலம் என்னுடைய பொருளாதார நிலை உயர்வதுதான் நியாயமானது. என்னுடைய கடின உழைப்பிலும் திறமையிலும் உருவானதற்கு எனக்கு உரிமையுண்டு ‘. தனிப்பட்ட நிரலர்களை முன்னிருத்தும் அவர்கள் செயல் எவ்வளவு நியாயமற்றது என்பதை மேம்போக்காகச் சிந்திக்கும் பலர் உணரமாட்டார்கள். அதே உணர்ச்சி பூர்வமான அந்த நிரலர்கள் ஒரு குறைந்த மாத சம்பளத்திற்கு தங்கள் கடின உழைப்பின் காப்புரிமையை எழுதித்தரத் தயங்கமாட்டார்கள். அவருடைய ஒரு மாதச் சம்பளம் ஒரு தகப்பனும் மகளும் அதே செயலியைப் பயன்படுத்துவதால் குறையப் போவதில்லை; அவருடைய உழைப்பில் உருவான ஒரு செயலித்தொகுப்பைத் தனித்தனியாக மேலாளரும் கணக்கரும் தங்கள் கணினிகளில் பிரித்துப் பயன்படுத்தினால் அவருக்குப் பொருளாதார ரீதியாக எந்த இழப்புமில்லை. இது வணிக நிறுவனங்கள் தங்கள் சுயதேவைக்காகவும் பேராசைக்காகவும் உருவாக்கிய ஒரு மாய வாதம்.
இந்தியா, சீனா போன்ற மூன்றாவது உலக நாடுகளிலிருந்து வரும் கடின உழைப்பாளிகளுக்கும் திறமைசாலி நிரலர்களுக்கும் இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் தரும் சம்பளத்தையும் மதிப்பையும் அறிந்தவர்களுக்கு அவர்கள் தங்கள் நிரலர்களை முன்னிருந்தி வலியுறுத்தும் இந்தக் கோட்பாட்டின் முரண்பாடு எளிதில் விளங்கும்.
இரண்டாவது, ‘மென்பொருள்களை விலைகொடுத்து வாங்காவிட்டால் யாரும் மென்பொருள் எழுத முன்வர மாட்டார்கள். நிரலர்களின் வயிற்றில் அடித்தால் அவர்கள் வேறு வேலைகளுக்குப் போய்விடுவார்கள். பின்னர் கணினித் தொழில்நுட்பத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் உலகளாவியப் பொருளாதாரத் தேக்கம் ஏற்படும் ‘. உலகப் பொருளாதாரத்தைப் பற்றிய இந்த வணிக நிறுவனங்களின் அக்கறை ஆடு மழையில் நனைகின்றதே என்று அழும் ஓநாயைப் போன்றதுதான். இதில் இவர்கள் ஒரு அடிப்படை உண்மையை மறைக்கின்றார்கள். மென்பொருள் எழுதுபவர்கள் எல்லோரும் காசுக்கு எழுதுபவர்கள்தான்; காசின்றி மென்பொருள் இல்லை என்று ஒரு முழுப் பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கின்றார்கள். தளையறு மென்பொருள் கழகமும், லினக்ஸ் இயக்குதளமும் எங்கிருந்து வந்தன ? இவற்றை எழுதியவர்களுக்கு எந்த வணிக ஆதாயம் கிடைக்கிறது – சொல்லப்போனால் இவர்கள் எந்த வணிக ஆதாயத்தையும் தேடுவதில்லை. இன்றைக்குத் தொழில்நுட்பத்தில் உயர்ந்ததாகக் கருதப்படும் லினக்ஸ் இயக்குதளம் உருவானதும் இந்தப் பத்தாண்டுகளில் தகவல் நுட்பப் புரட்சியை நிகழ்த்திக்காட்டிய இணையமும் இத்தகைய தன்னலம் கருதா நிரலர்களின் உழைப்பினால் வந்தவைதான். இதற்கு வணிக நிறுவனங்களிடமிருந்து எத்தனை தடைகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது என்பது இப்பொழுது வரலாறில் ஒரு பகுதியாகிவிட்டது.
இதற்கு மறுவாதமாக பின்வருவதை கவனித்துப்பாருங்கள். என்னுடைய நண்பன் ஒருவன் பன்னாட்டு வங்கியொன்றில் வேலை செய்கின்றான். அவர்கள் வங்கியில் ஒரு வலை அச்சுப்பொறி (network printer) முப்பதுக்கும் மேற்பட்ட அறைகளில் இருக்கும் பலருக்கும் பொதுவாக முகப்பில் இருத்தப்பட்டிருந்தது. அந்த அச்சுப்பொறியை வினியோகித்த நிறுவனம் ஒரு செயலியையும் தந்திருந்தது (அதன் அடிப்படை ஆணை நிரல்கள் உட்பட) அதை அவர்கள் மாற்றியமைத்து அச்சுப்பொறியின் தற்பொழுதைய நிலை என்ன, அதில் தேவையான அளவிற்கு மை உள்ளதா ? அதில் காகிதம் சிக்கிக் கொண்டிருக்கின்றதா ? அதில் இன்னும் எத்தனை பக்கங்கள் அச்சிடக் காத்திருக்கின்றன, போன்ற பலவிபரங்களை எல்லோரும் அறியும் வகையில் செய்திருந்தார்கள். ஒருவர் அளித்த அச்சுக் கட்டளையில் ஏதாவது தவறு இருந்தால் அந்த வரிசை அப்படியே நின்று போகும், என் நண்பன் மாற்றியமைத்த ஆணைத் தொடர்களினால் தவறான அந்தப் பக்கங்களை வரிசையில் பின்னுக்குத் தள்ளிவிட்டு யார்வேண்டுமானாலும் வரிசையைத் தொடரலாம் அது பழையதானவுடன் ஒரு புதிய லேசர் அச்சுப்பொறியை அந்த இடத்திற்கு வாங்கினார்கள். வரிசையை யார்வேண்டுமானாலும் மாற்றியமைக்கும் வசதி புதிய அச்சுப்பொறியின் நிரலில் இல்லை. அது பிழையை அறிவிக்கும்; ஆனால் ஒரே ஒருவர் (பொதுவில் சர்வ வல்லமை பொருந்திய தலைமை நிரலர்) மாத்திரம்தான் அதை மாற்ற முடியும். இத்தகைய கட்டுப்பாடு பொதுவில் நல்லதுதான், ஆனால் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படும் அலுவலர்களிடையே இது தேக்கத்தைத்தான் விளைவித்தது. தலைமை நிரலர் அறையில் இல்லாத சமயங்களில் அந்த அச்சுப்பொறியை யாரும் பயன்படுத்த இயலாது. பிழையான அச்சுக் கட்டளையை அளித்தவர் எல்லோருடைய திட்டுகளையும் சுமந்துகொண்டு கையாலாகமல் உட்கார்ந்திருப்பார். அந்த நிறுவனத்தில் என் நண்பன் மாற்றியமைத்திருந்த முந்தைய வழக்கத்திற்கு அணைவரும் அடிமைப்பட்டிருந்தனர். இந்த முறை மாற்றியமைப்பது எப்படி எனத் தெரிந்த என் நண்பனாலும் முடியாது, ஏனெனில் அவனுக்குப் புதிய செயலியின் அடிப்படை ஆணைநிரல்கள் தரப்படவில்லை.
அச்சுப்பொறி தயாரித்த நிறுவனத்தை அணுகினால் அவர்கள் அந்தச் செயலியை மாற்றவியலாது என்று கையை விரித்துவிட்டார்கள் (அது அவர்களின் இயலாமைதான், முடியாது என்று இல்லை). மாறாக இதுபோன்ற கஷ்டநேரங்களுக்கு என்று இன்னொரு அச்சுப்பொறியை துணைக்கு வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்கள். என் நண்பன் இதற்கான ஒரு முற்றிலும் புதிய செயலியைத் தன்னால் எழுதமுடியும் என்று வங்கி மேலாளரிடம் கூறினான். அவர்கள் அனுமதியுடன் அதைப் ஒருமாதத்தில் எழுதி முடித்தான், அவனிடம் அதற்கு அச்சுப்பொறி தயாரிப்பாளர் எழுதிய ஆணைத்தொகுப்புகள் கையில் கிடைத்திருந்தால் அதை மூன்று நாட்களில் மாற்றியமைத்திருப்பான். இது ஒரே செயலை இருவர் திரும்பத் திரும்பச் செய்வது, இதனால் தொழில்நுட்பத்தில் எந்தவிதமான முன்னேற்றமும் இருக்கப்போவதில்லை. எல்லா அறிவியளாலர்களூம் தங்கள் கண்டுபிடிப்பை ஆராய்ச்சி இதழ்களில் கட்டுரைகளாக வெளியிடுகின்றார்கள், அதன் அடிப்படையில் அடுத்தவர் தனது ஆராய்ச்சியைத் தொடர்கின்றார். ஆனால் கணினி மென்கலன் உலகில் மட்டும் இது ஒரு மூடுமந்திரம். இப்படி இணைத்தை ஆரம்பித்துவைத்த அறிவியலாளர்கள் நினைத்திருந்தால் அதன்முலம் தகவல் மற்றும் வணிகத்தில் ஏற்பட்டுவரும் இந்தப் புரட்சிகளை நாம் இழந்திருப்போம்.
அப்படியே பார்த்தாலும் வணிக நிறுவன்ங்களின் செயலிகள் முற்றிலுமாக அவர்களின் சொந்தக் கண்டுபிடிப்பு என்று கூறிவிடமுடியாது, அவர்களுக்கு முந்தைய எத்தனையோ கணிதவியலாரின் அடிப்படைக் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தித்தான் தங்கள் நிரல்களை வடிக்கின்றார்கள். அவர்களுக்கு என்ன பங்கைத் தருவார்கள், அல்லது தரமுடியும்.
ஐயா, இந்தக் காப்புரிமை என்பது எல்லா தொழில்துறைகளிலும்தானே இருக்கின்றது என்று புருவங்களை உயர்த்துபவர்களுக்கு ஒரு விடை. கணினி மென்கலன்களைச் செலவின்றி நகலெடுக்கலாம், ஒரு காரையோ, விமானத்தையோ முழுச் செலவின்றி நகலெடுக்க முடியாது. ஒரு கணினியில் மாத்திரம் சேமித்தாலும் பத்து கணினிகளில் சேமித்தாலும் நிரலர் அதை எழுத ஒரே அளவு நேரம்தான் எடுத்துக்கொள்வார், ஆனால் இரண்டு கார்களைத் தயாரிக்க இரண்டு மடங்கு நேரமாகும், இரண்டு மடங்கு பொருள் தேவை. இதுதான் மென்கலன் நுட்பத்திற்கும் மற்ற தொழில்நுட்பங்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு. சொல்லப்போனால் இதைத் தொழில்நுட்பத்தில் சேர்ப்பது தவறு, இது அடிப்படை அறிவு. அடிப்படை அறிவுக்குத் வணிகத்தடை விதிக்கும் எந்த சமுதாயமும் முன்னேற முடியாது, அதற்குத் துணைபோகும் அரசுகள் கொடுங்கோல் அரசுகளாகவே கருதப்பட வேண்டும்.
அப்படியானால், நிரல் எழுதுபவர்களெல்லாம் அதை இலவசமாகக் கொடுத்துவிட்டு தங்கள் அடிவயிற்றில் ஈரத்துணியுடன்தான் உட்கார்ந்து கொள்ள வேண்டுமா என்று ஒரு கேள்வி எழலாம். மீண்டும் ஒருமுறை ஆரம்பத்திலிருக்கும் நான்கு வகை சுதந்திரங்களைப் படித்துப்பாருங்கள். அதில் எங்கேயும் உங்கள் உழைப்பை இலவசமாகத் தாருங்கள் என்று கூறப்படவில்லை, சொல்லப் போனால் தளையறு மென்கலன்களை விற்பதற்கும் ஆதாயம் ஈட்டுவதற்கும் எந்த ஒரு தடையுமில்லை. இவர்களின் அடிப்படைக் கோட்பாடு ஒன்றுதான், – ‘தகவலுக்கு வணிகத்தடை விதிக்காதீர்கள் ‘. நீங்கள் விற்கும் பொருளை இப்படித்தான் பயன்படுத்த வேண்டுமென்று கட்டுப்பாடு விதிக்காதீர்கள். உங்கள் (மற்றும் எல்லோரின்) உழைப்பின் அடிப்படைப் பலனும் சமுதாயத்தைச் சேரவேண்டும், உங்கள் சிந்தனையில் உருவான அடிப்படைக் கருத்துகளின் மேல் கட்டிடம் எழுப்ப எல்லாருக்கும் அனுமதியுடன் உங்கள் பொருள்களை விற்பனை செய்யுங்கள். இது இந்த வணிக உலகில் நடைமுறை சாத்தியமானதா ? ஆம், இதற்கான விடை லினக்ஸை விற்பனை செய்து இலாபம் (நியாயமான) ஈட்டும் ரெட்ஹாட் போன்ற வணிக நிறுவனங்கள். இவற்றைப் பற்றிச் சிறிது விவாதிக்குமுன் தளையறு மென்கலன் நிறுவனம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது, அதன் சாதனைகள் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம்.
தோக்கியோ,
31 செப்டம்பர் 2000
naadodi@hotmail.com
- சுந்தர ராமசாமியின் ‘குழந்தைகள், பெண்கள், ஆண்கள் ‘ நாவல் விமரிசனம்
- தேவன் வருவாரா ?
- மக்களை ஈர்த்த மகராசர்
- இந்த வாரம் இப்படி அக்டோபர் 2, 2000
- திலகபாமாவின் இரண்டு கவிதைகள்
- சங்ககாலத்திய முருகன் பாட்டு
- மென்கலன் காப்புரிமை – தர்க்கரீதியிலான சில முரண்பாடுகள்
- ஜெயகாந்தன் திண்ணைக்கு அளித்த பேட்டி