முழுத் திமிங்கிலத்தை எழுத்தால் மறைத்த ஹரூண் யாகியா

This entry is part [part not set] of 43 in the series 20061019_Issue

எஸ். அரவிந்தன் நீலகண்டன்


முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். முழு திமிங்கிலத்தை எழுத்தால் மறைத்தது குறித்து கேள்விபட்டதுண்டா? அந்த சாகசத்தை செய்த பெரிய மனிதரின் பெயர் ஹரூண் யாகியா.

அன்னார் எழுதிய ‘Darwinism refuted’ என்கிற நூலில் திமிங்கிலத்தின் பரிணாமம் குறித்து அவர் எழுதியுள்ள கருத்துக்களை அண்மையில் படிக்க நேர்ந்தது. அவற்றில் பலவும் ஏற்கனவே மேற்கத்திய படைப்புவாத அடிப்படைவாதிகள் கூறியவற்றின் மறுபதிப்புதான். என்றாலும் திமிங்கிலத்தின் பரிணாமம் குறித்து தெள்ளத்தெளிவாக ஆதாரங்கள் இருக்கையில் யாகியா விடுகிற வாக்குவன்மை கொண்ட அளப்பு அதிசயத்தை ஏற்படுத்தியது. இந்த வாக்குவன்மை கொண்ட அளப்புக்கு இணையாக சொல்லவேண்டுமென்றால் நாகூர்…சரி சரி வேண்டாம் நமக்கேன் வம்பு! விஷயத்திற்கு வரலாம்.

படைப்புவாதியின் நிலைபாடு என்ன? திமிங்கிலங்களும் டால்பின்களும் ஆதிகாலம் தொட்டே நீரில் வாழும்படியாக இறைவன் (யஹீவா/ஏசு/அல்லா/பிரம்மா) என்கிற எல்லாம் வல்ல எல்லாம் அறிந்த ஆசாமியால் வடிவமைக்கப்பட்டவை. எல்லாம் வல்ல எல்லாம் அறிந்த ஆசாமியாயிற்றே வடிவமைத்தவர் எனவே இவை அனைத்து தகவமைப்பும் கொண்டு
நீரில் வாழ்வதற்கு ஏற்ற அதி-திறமை வாய்ந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன. அப்படிபட்ட ஆசாமியின் வடிவமைப்பில் குருட்டு இயற்கையும் பரிணாமமும் என்ன மேலான மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும்? ஆக அந்த நாள் முதல் இந்த நாள் வரை திமிங்கிலம் மாறவில்லை.

சரி, பரிணாம அறிவியலின் நிலைபாடு என்ன? தரைவாழ் பாலூட்டி விலங்கினங்கள் நீரில் வாழ வேண்டிய நிலைக்கு உள்ளான போது அவற்றில் பரிணாம மாற்றம் ஏற்பட்டு அத்தகைய மாற்றங்களில் நீரில் வாழ்தலுக்கு ஏற்ற தகவமைப்பு பெற்றவைதாம் நீர்வாழ் பாலூட்டி விலங்கினங்களான திமிங்கிலங்கள், டால்பின்கள் ஆகியவை. திமிங்கிலமும் நீர் வாழ் பாலூட்டிகளும் தரைவாழ் பாலூட்டிகளிலிருந்து பரிணாம மாற்றம் பெற்றவை எனும் கருதுகோள் ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக பரிணாம அறிவியலாளர்களால் முன்வைக்கப்பட கருதுகோள் எனினும் அதனை மெய்ப்பிக்கும் ஆதாரங்கள் அண்மைக்காலம் வரை கிட்டிடவில்லை. எனவே 1980களுக்கு முற்பட்ட படைப்புவாத அடிப்படைவாதிகளின் பிரச்சார இலக்கியங்களில் திமிங்கிலத்தின் உதயம் குறித்த பரிணாம விளக்கம் அதீத கற்பனை என்றும் அது வெறும் ஊகமே அன்றி ஆதாரம் அற்றதென்றும் கூறப்பட்டு வரும். ஆனால் 1980களில் இந்த படைப்புவாத கோஷ்டி கானத்துக்கு பலத்த அடி விழுந்தது.

பொதுவாக படைப்புவாதிகளுக்கு பிடித்த ஒரு கோஷம் உண்டு: ‘பொது மூதாதையல்ல பொது வடிவமைப்பு’ (Not common descent But common design). இதே கோஷத்தை நம் மதிப்பிற்குரிய மோசடி படைப்புவாதியும் (talk about redundancy!) எழுப்பிட மறந்திடவில்லை. ஆனால் அத்துடன் மற்றொரு வாதமும் உண்டு. அது என்னவென்றால் இன்று வாழும் எந்த உயிரினத்துக்கும் அவற்றின் பரிணாம வரலாற்றில் இடைநிலை உயிரினங்கள் (transitional forms) இருந்ததற்கு ஆதாரம் இல்லை என்பதுதான் அது. அத்தகைய இடைநிலை உயிரினங்களின் தொல்லெச்சங்கள் இல்லவே இல்லை என்பது படைப்புவாதிகளின் பிரச்சார வாதம்.

1983 இல் ஒரு உயிரினத்தின் தொல்லெச்சங்கள் (fossils) பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டன. பாகிஸீட்டஸ் இனாகஸ் (Pakicetus inachus) என பெயரிடப்பட்ட இந்த அழிந்து போன உயிரினத்தின் தொல்லெச்சத்தைக் கண்டுபிடித்தவர் பிலிப் ஜின்கெரிச். 1995 இல் ஹான் திவிஸன் என்பவர் அம்புலோஸீட்டஸ் (Ambulocetus) என பெயரிடப்பட்ட உயிரினத்தின் தொல்லெச்சத்தைக் கண்டுபிடித்தார். இந்த தொல்லெச்சங்களில் நிலம் வாழ் பாலூட்டிகளின் தன்மையும் நீர் வாழ் வாழ்க்கையின் தன்மையும் (எடுத்துக்காட்டாக மீன்களை தின்றிடும் தகவமைப்பு கொண்ட பற்கள்) இணைந்த நிலையை தொல்-விலங்கியலாளர்கள் கண்டனர். அதாவது நெடுங்காலமாக படைப்புவாதிகள் எழுப்பிய கூச்சலுக்கான விடையை பாகிஸ்தான் மற்றும் பாரதத்திலிருந்து கிடைத்த தொல்லெச்சங்கள் வழங்கிவிட்டன. ஆக, அத்தோடு படைப்புவாதிகள் திமிங்கிலத்தை விட்டுவிடுவார்கள் என்றுதானே எதிர்பார்ப்பீர்கள்? அதுதான் இல்லை. படைப்புவாத அடிப்படைவாதிகள் ஒரு பிரச்சார தாக்குதலை மேலும் தீவிரமாக ஆரம்பித்தனர். இதில் முக்கியமானவர் ஆஷ்பி காம்ப் என்பவர். இவரது ‘The Overselling of whale evolution’ எனும் நூலின் அடிப்படையில் அமைக்கப்பட்டதுதான் திருவாளர் ஹரூன் யாகியாவின் ‘Darwinism Refuted’ நூலின் 122-134 வரையுள்ள திமிங்கிலம் குறித்த விவரணம்.

இனி இந்த பகுதியில் யாகியா அளந்துள்ள விஷயங்களை காணலாம்:

1. பாகிஸீட்டஸ¤க்கு திமிங்கிலத்துடன் எவ்வித ஒற்றுமையும் இல்லை என்பதற்கு ஆதாரமாக யாகியா நேஷனல் ஜியாகிரபிக் பத்திரிகையில் பாகிஸீட்டஸ் குறித்து வெளியான செய்தியை மேற்கோள் காட்டி அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். நேஷனல் ஜியாகிரபிக் பத்திரிகை பாகிஸீட்டஸ் ஏன் ஒரு தொல்-திமிங்கிலம் என வகைப்படுத்தப்பட்டது என்பதற்கு பின்வரும் காரணங்களை மேற்கோள் காட்டியிருந்தது : “கடைவாய் பற்களின் மேல் அமைப்பு, நடுக்காதில் ஏற்பட்டுள்ள ஒரு மடிப்பு, காது எலும்புகள் மண்டையோட்டின் உள் அமைக்கப்பட்டிருக்கும் விதம் ஆகியவை மற்ற நிலம்-வாழ் பாலூட்டிகளில் இல்லாதவை ஆனால் ஈயோஸீன் கால திமிங்கிலங்களுக்கே உரியவை.” இதனை யாகியா எப்படி மறுக்கிறார்? “ஏதோ பல்லிலும் காதிலும் சில விஷயங்களைச் சொல்லி ஓநாய் போன்ற நாலுகால் உள்ள நிலம் வாழ் விலங்கு ஒன்றை நிலத்தில் நடமாடும் திமிங்கிலமாக நேஷனல் ஜியாகிரபிக் பத்திரிகை மாற்றலாம் என நினைத்துவிட்டது. ஆனால் இந்த விஷயங்கள் எல்லாம் எந்த விதத்திலும் திமிங்கிலத்துக்கும் பாகிஸீட்டஸ¤க்கும் தொடர்பு ஏற்படுத்த முடியாதவை.” (Darwinism Refuted 124-125)

ஆனால் உண்மை என்ன? மேலே கூறப்பட்ட வாதத்தில் யாகியா ‘ஏதோ பல்லிலும் காதிலும்’ என புறந்தள்ளும் விஷயங்கள் குறித்து ஏதும் சொல்லவில்லை என கவனியுங்கள். உண்மை என்னவென்றால் நேஷனல் ஜியாகிரபிக் எனும் தரம் வாய்ந்த பொதுஜன அறிவியல் பத்திரிகை தன்னுடைய பாகிசீட்டஸ் குறித்த விவரணத்தை பாகிஸீட்டஸ் தொல்லெச்சத்தை கண்டெடுத்த விஞ்ஞானிகளின் ஆழ்ந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் அமைத்திருந்தது. மேலும் 2001 இல் நடத்தப்பட்ட கார்பன்-ஆக்ஸிஜன் ஐசோடோப் பரிசோதனைகள் பாகிஸீட்டஸின் நீர் சார்ந்த உணவு உட்கொள்ளும் வாழ்க்கையை உறுதிப்படுத்தின. 2003 இல் தமது Darwinism Refuted நூலை வெளியிட்ட யாகியா தமது நூலின் தாளின் தரத்துக்கு காட்டிய சிரத்தையை அந்த தாளில் பிரசுரிக்கப்படும் விஷயங்களுக்கு காட்டியிருந்தால் “இந்த விஷயங்கள் எல்லாம் எந்த விதத்திலும் திமிங்கிலத்துக்கும் பாகிஸீட்டஸ¤க்கும் தொடர்பு ஏற்படுத்த முடியாதவை.” என்று எழுதியிருக்க மாட்டார்.

நேஷனல் ஜியாகிராபிக் பத்திரிகைக்கு ஆதாரமாக விளங்கிய ஆய்வுத்தாள் ‘Origin of Whales in Epicontinental Remnant Seas : New Evidence from the early Eocene of Pakistan’ (பிலிப் ஜின்கெரிச், நெயில் வெல்ஸ், டொனால்ட் ரஸ்ஸல் மற்றும் இப்ராகிம் ஷா) ஆகியோரால் எழுதப்பட்டது. இது ‘சயின்ஸ்’ எனும் புகழ்பெற்ற அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளை கறாரான விமர்சனங்களுக்கு உட்படுத்தி வெளியிடும் பத்திரிகையில் வெளிவந்தது. இக்கட்டுரையில் தெள்ளத்தெளிவாக தொல்-விலங்கியலாளர்கள் விஷயங்களை விளக்குகிறார்கள்.

சாதாரணமாக நிலத்தில் வாழும் பாலூட்டிகள் ஒலிகளைக் கேட்பதற்கான உபகரணத்தின் செயல்பாடு செவியின் உள்ளிருக்கும் சிலபகுதிகளின் அடர்த்தி (density) ஒலி கடத்தப்படும் ஊடகத்தின் (இங்கு: காற்றின்-) அடர்த்திக்கு இணையாகவும் -எடுத்துக்காட்டாக நிலம் வாழ் பாலூட்டிகளின் நடுக்காது பகுதியிலிருக்கும் குழி வளிமண்டல அடர்த்தியைக் கொண்டது- வேறு சில பகுதிகளின் அடர்த்தி இந்த ஊடக அடர்த்தியினின்றும் மாறுபட்டும் அமைவதைப் பொறுத்தது ஆகும். நிலத்தில் வாழும் பாலூட்டிகளில் இடது மற்றும் வலது நடுக்காதுகளில் காற்றடைத்த அறைகள் உள்ளன. இவை காற்றைக்காட்டிலும் அடர்த்தி உடைய திசுக்களாலும் எலும்புகளாலும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்பே நிலம்-வாழ் பாலூட்டிகளில் ஒலியினை அது வரும் திசை சார்ந்து கேட்பதை (directional hearing) சாத்தியமாக்குகிறது.

ஆனால் நீர்வாழ் பாலூட்டிகளில் இந்த திசை சார்ந்த கேட்டல் என்பதற்கு வேறுவித தகவமைப்புகள் தேவைப்படுகின்றன. ஏனெனில் வளி மண்டல அடர்த்தியினின்றும் வேறுபடும் திசுக்களின் அடர்த்தி பொதுவாக நீரின் அடர்த்திக்கு பெரிதும் மாறுபடுவதில்லை. எனவே இது அதீத அடர்த்தி கொண்ட அமைப்பான ஒரு அடைப்பாக நீர் வாழ் பாலூட்டிகளில் காணப்படுகிறது. இந்த அமைப்பு நிலத்தில் வாழ் பாலூட்டிகளின் காதுக்குள் காணப்படும் சில எலும்புகளும் இணைவதால் உருவாக்கப்படுகிறது.

இந்த இணைதலுக்கான தொடக்கம்தான் பாகிஸீட்டஸில் காணப்படுவது. உதாரணமாக மாலியஸ் (malleus) என்பது நிலத்தில் வாழ் பாலூட்டிகளில் நடுக்காதுக்குள் இருக்கும் மூன்று சிறு எலும்புகளுக்குள்ளேயே (நடுக்காதுக்கு) பெரியதும் வெளிப்புறமுள்ளதுமாகும். பாகிஸீட்டஸில் இது மிகவும் சிறிதாகத் தொடங்கிவிடுகிறது. பாகிஸீட்டஸின் மாலியஸ் எலும்பு டிம்பானிக் அடைப்புடன் பகுதி இணைப்பு அடைந்துள்ளது. இதனால் நிலம்வாழ் பாலூட்டிகளின் டிம்பானிக் அமைப்புடன் ஒப்பிடுகையில் பாகிஸீட்டஸின் டிம்பானிக் அடைப்பு அடர்த்தி அதிகமானதாக உள்ளது. இதுவே பாகிஸீட்டஸ் நீரில் ஓரளவு கேட்கும் திறம் பெற்றிருந்தது என்பதனைக் காட்டுகிறது. அதே நேரத்தில் நீரில் கேட்கும் திறமை அதற்கு முழுமையாக ஏற்பட்டிடவில்லை.

(நீரில் ஒலி கேட்கும் திமிங்கிலங்களுக்கு உரிய மற்றொரு முக்கிய அமைப்பும் பாகிஸீட்டஸில் தொடக்க நிலையில் உள்ளது. அதன் பெயர் இன்வலுக்ரம் என்பது.)

ஆக ‘சயின்ஸ்’ இதழுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுத்தாள் மிகத்தெளிவாக தனது முடிவினைக் கூறியது: “குறுகிய கடலின் நீர் பரப்பில் மீன்களை உணவாகக் கொள்ளத்தக்க உபகரணங்களைக் கொண்டதாக பாகிஸீட்டஸ் விளங்கியதையும் அதே நேரத்தில் முழுமையான நீர் வாழ்க்கைக்கான தகவமைப்பு செவிப்புலனில் ஏற்பட்டிடாததையும் பாகிஸீட்டஸின் தலையமைப்பும் பல்லமைப்பும் காட்டுகின்றன.” மேலும் அந்த ஆய்வுத்தாள் கூறுவதாவது: “படிப்படியான பரிணாம மாற்றம் அடைந்து நிலத்திலிருந்து நீருக்கு வந்த திமிங்கில பரிணாம வளர்ச்சியில் பாகிஸீட்டஸ¤ம் தொடக்க ஈயோஸீன் காலத்தினைச் சார்ந்த இதர திமிங்கிலங்களும் நீர்-நிலம் இரண்டும் சார்ந்த வாழ்க்கையினை வாழ்ந்த நிலையை பிரதிநிதித்துவப்படுத்துவதாக சான்றுகள் கூறுகின்றன.”

ஆனால் இந்த சான்றுகளையெல்லாம் யாகியா எவ்விதக் காரணமும் இன்றி புறந்தள்ளிவிடுகிறார்.
2. அடுத்த முக்கியமான தொல்லெச்சம் ஆம்புலோஸீட்டஸ் நடன்ஸ் (Ambulocetus natans) என்பதாகும். நடமாடும் நீந்தும் திமிங்கிலம் என்பது இந்த தொல்லெச்சத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பெயரின் பொருளாகும். ‘பரிணாமவாதிகளின் பாதிப்பான பார்வைக்கு அப்பால் இது நீந்தியது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை'(Darwinism Refuted’ பக்.125) என்பது யாகியாவின் வாதம். ஆனால் பரிணாம அறிவியலாளர்கள் முன்வைக்கும் வாதங்களை அவர் ஏறெடுத்தும் பார்க்காமல் அம்புலோஸீட்டஸ் நிலத்தில் வாழும் பிராணி என்பதற்கான ஆதாரங்களை அடுக்குகிறார். ஆனால் பரிணாம அறிவியலாளர்கள் இதனை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அம்புலோஸீட்டஸ் நிலத்திலும் நீரிலுமாக வாழ்ந்த பிராணி என்பது பரிணாம அறிவியலாளர்கள் ஒத்துக்கொள்ளும் வாதம். ஆனால் முழுக்க முழுக்க நிலத்தில் வாழும் பாலூட்டிகளிலிருந்து மாறுபட்ட தன்மைகள் பாகிஸீட்டஸிலும் பின்னர் அம்புலோஸீட்டஸிலும் இருப்பதையும் இந்த மாறுபட்ட தன்மைகள் திமிங்கிலங்களில் இன்றிருக்கும் தன்மைகளுக்கு ஒப்ப பரிணாம படிநிலைகளில் இருப்பதையும் காட்டுகின்றனர். இதனை பொய்யாக்க வேண்டுமென்றால் யாகியா செய்ய வேண்டியது என்ன? இந்த திமிங்கில ஒற்றுமைகள் என அறிவியலாளர்கள் காட்டிய விஷயங்களை பொய் என நிரூபித்தால் போதுமே! ஆனால் யாகியா அதை மட்டும் செய்யாமல் தவிர்க்கிறார். ஏனெனில் அப்போதுதான் குட்டு உடைந்துவிடுமே!

உதாரணமாக யாகியா குறிப்பிடுகிறார்: “அம்புலோஸீட்டஸின் முதுகெலும்பு இடுப்பெலும்பு பகுதியில் (pelvis) முடிவடைகிறது. அதிலிருந்து ஆற்றல் மிக்க கால்கள் நீளுகின்றன. இது நிச்சயமாக நிலத்தில் வாழும் பாலூட்டியின் உடலமைப்புதான். ஆனால் திமிங்கிலங்களில் முதுகெலும்பு வால் வரைக்கும் நீள்கிறது. அதில் இடுப்புலெம்பு பகுதி (pelvis) கிடையாது.” (‘Darwinism Refuted’, பக்.126) இப்போது யாகியா அளிக்கும் தகவல்களின் உண்மை நிலை புரிந்திருக்கும் என நினைக்கிறேன். உண்மையில் அதன் தொடை எலும்பின் (femur) ஒட்டமைப்பு என்ன காட்டுகிறது என்றால் அதற்கு நடக்கமுடிந்தாலும் நடப்பதை விட நீந்துவதற்கே அது ஏற்றதாக இருந்தது என்பதையே. அவ்விதமே இந்த தொல்-விலங்கெச்சத்தின் அமைப்பினை முழுமையாக ஆராய்ந்ததில் அதன் பற்களின் அமைப்பு அதன் செவி அமைப்பு ஆகியவற்றிலும் அதன் திமிங்கிலத்தன்மையே தூக்கலாக இருப்பதைக் காணலாம்.

ஆக, யாகியா செய்யவேண்டியதெல்லாம் பாகிஸீட்டஸையோ அல்லது அம்புலோஸீட்டஸையோ நிலத்தில் மட்டுமே வாழக்கூடிய மிருகங்கள் என நிரூபிக்க இங்கு அவை கொண்டுள்ள நீர்-வாழ் தகவமைப்பு குறித்த தரவுகள் பொய் என நிரூபிக்க வேண்டியதுதான். ஆனால் யாகியா அதைத்தவிர மற்றதெல்லாவற்றையும் செய்கிறார்.

இறுதியாக வழக்கம் போல ஒரு சிதைக்கப்பட்ட மேற்கோளையும் காட்ட தயங்கவில்லை யாகியா. இறுதியாக வழக்கம் போல ஒரு சிதைக்கப்பட்ட மேற்கோளையும் காட்ட தயங்கவில்லை மனிதர். யாகியா கூறுகிறார்: ‘முடிவாக, பரிணாமவாதிகளின் பிரச்சாரத்திற்கு அப்பால், உண்மை என்னவென்றால் நிலம் வாழ் பாலூட்டிகளுக்கும் நீர் வாழ் பாலூட்டிகளுக்கும் இடைப்பட்ட நிலை உயிரினங்கள் இல்லவே இல்லை என்பதும் அவை இன்றிருக்கும் அதே தன்மைகளுடன் தோன்றின என்பதுமே உண்மை. எந்தவித பரிணாமத்தொடர்பும் இல்லை. ராபர்ட் காரோல் இதனை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் பரிணாமவாதிகளின் மொழியில் ஏற்றுக்கொள்ளுகிறார்: “நேரடியாக திமிங்கிலங்களுக்கு இட்டுச்செல்லும் ஒரு தொடர்ச்சியான மெசோனைசிட்களினை நாம் காணமுடியாது”‘ (Darwinism Refuted, பக்.127)

ராபர்ட் காரோல் மேற்கோளுக்கு சான்றாதாரத்தை திரு.யாகியா பின்வருமாறு கொடுத்துள்ளார். அது. ராபர்ட் கரோலின் “Patterns and Processes of vertebrate evolution” காம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பிரசுரம், பக்.329. ஆனால் ராபர்ட் காரோல் கூறுவது பிறிதொரு பொருளில் என்பது அவர்கூறுவது முழுமையாக படித்தால் விளங்கும். நமது நண்பர் காட்டும் வரிகளுக்கு அப்பால் அவர் கூறுகிறார்: “மெசோனைசிட்களிலிருந்து தொன்மையான ஆனால் நீரில் மட்டுமே வாழமுடிந்த திமிங்கிலங்களுக்கான மாற்றம் தொடர்ச்சியான இடைநிலை விலங்குகளால் நன்றாக காட்டப்படுகிறது. இந்த இடைநிலை விலங்குகள் கீழ் ஈயோஸீன் காலத்தின் மேல் நிலைகளிலும், நடு-ஈயோஸீன் கால கீழ் நிலைகளிலும் பாகிஸ்தானிலும், பின்-நடு மற்றும் மேல் ஈயோஸீன் எகிப்திலும், தென்கிழக்கு அமெரிக்காவிலும் கிடைக்கின்றன. இத்தொடர்ச்சி 10-12 மில்லியன் வருடங்களுக்கு தொடர்கின்றன…பல மேலும் மேலும் நீர்வாழும் இயல்பினைக் கொண்ட இம்மாற்றங்களை காட்டும் (நீந்த பயன்படும்படியான வாலின் மாற்றம், நடுக்காதில் பலவித அமைப்பு மாற்றங்கள் ஆகியவை) ஜெனிராக்கள் இன்று அறியப்படுகின்றன. (“Patterns and Processes of vertebrate evolution”, பக்.329-330)

ஆக எந்த பாகிஸீட்டஸை நீர்-நில வாழ் இடைநிலை திமிங்கிலம் இல்லை என மறுக்கிறாரோ அதே பாகிஸீட்டஸை இடைநிலை உயிரினமாக அறிவிக்கும் ராபர்ட் கரோலினையே திமிங்கில பரிணாம இடைநிலை இல்லை என சொன்னதாக (அதுகூட இல்லை, ஒத்துக்கொண்டதாக) கூற எத்தனை துணிவான நேர்மை-திறமின்மை வேண்டும்!

ஒருவேளை ஈமான் இருந்தால் திமிங்கிலத்தின் வயற்றில் வசிப்பதென்ன திமிங்கிலத்தையே எழுத்தில் மறைக்கலாம் போலும். மற்றபடி நேர்மை, உண்மை என்பதெல்லாம் ஈமானுக்கு முன் எம்மாத்திரம்! இதற்கு ஹரூன் யாகியா ஒரு நித்திய உதாரணம்.

[பாகிஸீட்டஸ் குடும்பத்தைச் சார்ந்த அதனை விட முந்தைய தொல்-திமிங்கில தொல்விலங்கெச்சம் சுனில் பாஜ்பாய் முதலிய பாரத தொல்-விலங்கியலாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பின்னர் எழுதுகிறேன்.]

* Ernst Mayer, ‘What is Evolution?’ Phoenix, 2002

* Origin of Whales in Epicontinental Remnant Seas: New Evidence from the Early Eocene of Pakistan, Philip . Gingerich, Neil.A.Wells, Donald E.Russell, S.M.Ibrahim Shah, (Science, Vol.220.Iss.4595, Apr. 22, 1983) p. 403-406

* ‘Just What Do They Say, Dr Morris?’ by Troy Britain Reports of the National Center for Science Education, vol. 19 No. 1 Jan./Feb. 1999. (உரல்: http://www.ncseweb.org/resources/rncse_content/vol19/6803_just_what_idoi_they_say__12_30_1899.asp)

* Evoution of the whale ear: http://scienceblogs.com/pharyngula/ (Thursday, August 12, 2004)

* Harun Yahya, ‘Darwinism Refuted’, Good word books, 2003.

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்