தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்
email id tkgowri@gmail.com
தாமதம் செய்யாமல் உடனே ராஜேஸ்வரிக்குக் கடிதம் எழுதிவிட்டேன். அதன் சுருக்கம் இதுதான்.
“உங்க அண்ணன் தோற்றுப் போனதற்கு எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இன்னொரு விஷயத்திலும் நாம் இருவரும் சேர்ந்து உங்க அண்ணாவை தோற்கடிக்கணும். அதுதான் உன் திருமண விஷயம். ராஜி! நீ என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள். உனக்கு நல்ல கணவன் கிடைப்பான் என்றும், இதைவிட நல்ல வாழ்க்கை உனக்குக் கிடைக்கும் என்றும் என் மனதில் ஆழமாக தோன்றுகிறது. என் பேச்சில் நம்பிக்கை வைத்து இந்த மாப்பிள்ளையை பண்ணிக் கொள்ளமாட்டேன் என்று உங்க அண்ணாவிடம் சொல்லிவிடு. இந்தக் கல்யாணம் நடக்காமல் இருந்தால்தான் உன் குடும்பத்திற்கு உதவி செய்தவள் ஆவாய். அண்ணனுக்கு சுமையாக இருக்கிறோமே என்ற எண்ணத்தை உடனே விட்டுவிடு. எப்படிப்பட்ட மனிதர்களுடன் உன் வாழ்க்கை பிணையப் போகிறதோ நீ சரியாக யோசிக்கவில்லை. அவர்கள் உன்னையும், உங்க அண்ணனையும் அட்டையைப் போல் உரிஞ்சு விடுவார்கள். அதை முதலில் புரிந்துகொள்.”
என் கடிதத்திற்கு ராஜியிடமிருந்து உடனே பதில் வந்தது.
“அண்ணி! உன் கடிதம் என்னுள் எப்படிப்பட்ட புயலை கிளப்பியதோ உனக்குத் தெரியாது. யோசித்துப் பார்க்கவும் பயமாக இருக்கிறது. நீ எழுதியதை திரும்பத் திரும்ப படித்துப் பார்த்தேன். எனக்கு ஏனோ குழப்பமாக இருக்கிறது. எந்தப் பக்கம் போகணும் என்று தெரியவில்லை. என்னால் என் குடும்பத்திற்கு, முக்கியமாக அண்ணாவுக்கு உபகாரம் நடக்கும் பட்சத்தில் நெருப்பில் குதிக்கவும் தயாராக இருக்கிறேன்.
அண்ணனுக்கு நான் சுமையாக இருக்கிறேன் என்று யார் உன்னிடம் சொன்னது? இந்த ஒரு விஷயத்தில் மட்டும் நீ தவறாகப் புரிந்து கொண்டு இருக்கிறாய். அண்ணனுக்கு சுமையாக இருப்பது அந்தத் தோட்டம். அந்தத் தோட்டத்திற்காகத்தான் அண்ணா சுந்தரியைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளான். சுந்தரியைப் போன்ற நபரை அண்ணன் கல்யாணம் செய்து கொள்வதைவிட வாழ்நாள் முழுவதும் அவன் பிரம்மச்சாரியாகவே இருந்து விடலாம் என்பது என் அபிப்பிராயம். ஆனால் எதுவும் செய்ய முடியாத நிலைமை உலகத்தில் என்னைப் போன்ற எத்தனையோ பெண்கள் எதற்கும் பிரயோஜனப்படாமல் பிரச்னைகளை உண்டு பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். அதை நினைக்கும்போது தான் வருத்தமாக இருக்கிறது.”
இந்த கடிதத்திற்கு பதில் எழுதும்போது பெரிய மனுஷியைப் போல் அவளைக் கடிந்து கொண்டு காரசாரமாக எழுதினேன்.
“அடி பைத்தியக்காரி! நான்தான் ஒரு பைத்தியம் என்றால் நீ என்னையும் மிஞ்சி விட்டாய். எந்த நேரமும் அண்ணா… அண்ணா … என்ற ஜபத்தைத் தவிர உன்னைப் பற்றி யோசிக்க மாட்டேன் என்கிறாயே? உண்மையாக யோசித்துப் பார்த்தால் உங்களுக்காக உங்க அண்ணன் அப்படி என்ன கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறானோ எனக்குப் புரியவில்லை. என்னைக் கேட்டால் சுந்தரியைப் போன்ற பெண்ணை மனைவியாக அடையப் போவதால் உங்க அண்ணனுக்கு எந்த நஷ்டமும் இல்லை. அவன் பார்வையில் சுந்தரியோ, சூர்ப்பணகையோ இல்லை இடும்பியோ, எந்தப் பெண்ணாக இருந்தாலும் ஒன்றுதான். நாளைக்கு இன்னொரு குண்டோதரி வந்து வரதட்சணை அதிகம் தருகிறேன் என்று சொன்னால் உங்கள் அண்ணன் மறுபேச்சு பேசாமல் சம்மதிப்பான் என்பது என்னுடைய நம்பிக்கை. பணத்திற்காக அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான்.
பணத்திற்காக தம்மையே விற்கத் தயாராக இருப்பவர்கள், வாழ்க்கையைப் பணயம் வைக்கத் துணிந்தவர்கள்… இவர்களிடம் எனக்கு மதிப்பு குறைவு. நான் உன்னை யோசிக்கச் சொன்னது உன் வாழ்க்கையைப் பற்றி.
பதிலுக்கு ராஜியிடமிருந்து பெரிய கடிதம் வரும் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமளிப்பது போல் சுருக்கமான மடல் வந்தது.
அண்ணி!
உன் கடிதம் கிடைத்தது. என்னைப்பற்றி உனக்கு இருக்கும் அக்கறைக்கு நன்றி. அண்ணன் விஷயமாக இனி நாம் பேசிக்கொள்ள வேண்டாம். அவனை நீ முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. புரியும் விதமாக எடுத்துச் சொல்லவும் எனக்குத் தெரியவில்லை.
அண்ணாவை யாராவது குறை சொன்னால் அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. அவனை மதிக்கத் தெரியாதவர்களிடமிருந்த ஆயிரம் மைல் விலகியே இருப்பேன். உன் விஷயத்தில் நான் சங்கடத்தில் மாட்டிக் கொண்டு விட்டேன். நாமிருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வோம். இனி நாம் கடிதங்களில் அண்ணனைப் பற்றி பேச்சை எடுக்க வேண்டாம். நம்முடைய விஷயங்களை மட்டுமே பகிர்ந்து கொள்வோம். சரிதானே.
உன் ராஜி
அந்தக் கடிதத்தைப் படித்ததும் எனக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. ராஜிக்கு அண்ணாவிடம் பிரியம் அதிகம் என்று எனக்குத் தெரியும். ஆனால் ராஜியின் மனதில் எனக்கு இரண்டாவது இடம்தான் என்று தெரிந்த போது கொஞ்சம் ஏமாற்றம் ஏற்பட்டது. அதனால் உடனே கோபமாக கடிதம் எழுதினேன்.
ராஜி!
உன்னை விட முட்டாள் இந்த உலகில் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். நாமிருவருக்கும் நடுவில் உங்க அண்ணன் விஷயமாக கருத்து வேற்றுமை வருவதில் எனக்குக் கொஞ்சம்கூட விருப்பமில்லை. நீ சொன்னது போல் உங்க அண்ணனைப் பற்றிய பேச்சே எனக்குத் தேவையில்லை. கும்பகோணம் வரனை பண்ணிக் கொள்ள மாட்டேன் என்று உன் அண்ணனிடம் சொல்லிவிட்டாயா இல்லையா? ஒரே வார்த்தையில் பதில் எழுதிவிடு. அந்த ஒரு வார்த்தையிலேயே என் பேச்சை நீ எந்த அளவுக்கு மதிக்கிறாயோ புரிந்து கொண்டு விடுவேன். என் வார்த்தையின் மீது உனக்கு குறியில்லாத போது நான் இதைப் பற்றி திரும்பத் திரும்ப பேசுவது அனாவசியம்.
நான் எழுதியதெல்லாம் வெற்றுப்பேச்சு என்று உன் மனதிற்கு பட்டால் “அண்ணாவின் பேச்சை என்னால் மீற முடியாது” என்று ஒரு வரி எழுதிப் போடு போதும். உன்னைப் போன்ற கோழைகள் தங்களுடைய வாழ்க்கையை பலி கொடுக்க வேண்டியதுதான் என்று மனதை திடப்படுத்திக் கொண்டு உன்னை மறக்க முயற்சி செய்கிறேன்.
இப்படிக்கு மீனா.
ராஜேஸ்வரியிடமிருந்து உடனே எனக்கு பதில் வரவில்லை. எனக்கு எப்படியோ இருந்தது. நான் தோற்றுப் போய் விட்டேனோ என்ற உணர்வு என் மனதை துளைத்துக் கொண்டிருந்தது. அளவுக்கு மீறி உரிமையை எடுத்துக் கொண்டு விட்டேனோ என்ற சந்தேகம் என்னை ஆட்டிப் படைத்தது. ராஜேஸ்வரியை உயிருக்கும் மேலாக நேசிக்கிறேன். அவளுடைய நலனை விரும்பும் நபராக அந்தத் திருமணத்திலிருந்த அவளைக் காப்பாற்றுவது என் கடமையாக நினைத்தேன். அந்த வரனை மறுத்துவிடு என்று ஒரு பக்கம் அவளை ஊக்கப் படுத்திக் கொண்டே இன்னொரு பக்கம் எனக்கு தெரிந்தவர்களில் அவளுக்கு ஏற்ற பையன் யாராவது இருக்கிறானா என்று தேடிக் கொண்டிருந்தேன்.
அத்தையின் வீட்டில் விலை மதிக்க முடியாத அன்பை, ஆதரவை பெற்றுக் கொண்டு வந்தேன். அதை என்னால் எப்படியும் திருப்பித் தர முடியாது. ராஜிக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளையைப் பார்த்து அந்த நன்றிக் கடனை ஓரளவுக்காவது தீர்த்துக் கொள்ளணும் என்று விரும்பினேன். அப்பாவிடம் இந்த விஷயத்தைச் சொன்னபோது “அது உன்னால் நடக்கக்கூடிய காரியம் இல்லை. கல்யாணம் என்பது ரொம்ப பெரிய விஷயம். இனிமேல் அத்தை வீட்டுக்குக் கடிதங்கள் எழுதாதே. சும்மாஇரு போதும்” என்றார்.
நானும் வந்தது முதல் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அப்பா என்னை மெலட்டூருக்கு அனுப்பி வைத்ததற்கு இப்போ அவ்வளவாக சந்தோஷமாக இருப்பதுபோல் தெரியவில்லை. மெலட்டூரில் நடந்த விஷயங்களை எல்லாம் அப்பாவிடம் சொல்லத் தொடங்கியபோது ஆர்வம் இல்லாததுபோல் பேச்சை நடுவிலேயே துண்டித்துவிட்டார். கடைசியில் ஒரு தடவை ராஜி பற்றி பேச்சு வந்த போது “டாடீ! நாம் எப்படியாவது ராஜிக்கு நல்ல வரனாக பார்க்கணும்” என்றேன். அப்பாவின் முகம் சீரியஸாக மாறியது. “மீனா! நமக்கு சம்பந்தம் இல்லாத விஷயத்தில் தலையிடுவது சரியில்லை. நீ ஏதோ நான்கு நாட்கள் சந்தோஷமாக அவர்களுடன் இருந்துவிட்டு வருவாய் என்று நினைத்தேனே ஒழிய இப்படி அவர்களுடைய பிரச்னைகளில் மூக்கை நுழைக்கும் அளவுக்கு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வாய் என்று நினைக்கவில்லை. இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் உன்னை அங்கே அனுப்பியிருக்கவே மாட்டேன். மீனா! ராஜிக்குக் கடிதம் எழுதுவதை நிறுத்திவிடு. அப்படியே எழுதினாலும் சாதாரணமாக எழுது. இதுபோல் உன் வயதிற்குப் பொருந்தாத பிரச்னைகளில் தலையிடாமல் இரு” என்றார் கண்டிப்பான குரலில்.
அப்பா இப்படிப் பேசி நான் இதற்குமுன் கேட்டதே இல்லை. இந்த விஷயத்தில் அப்பாவின் உதவியும், ஒத்துழைப்பும் இருக்கும் என்று ஆழமாக நம்பியிருந்த எனக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது.
வாடிப்போன முகத்துடன் தலை குனிந்தபடி அறையை விட்டு வெளியே வரும்போது அப்பா பின்னாலிருந்து அழைத்தார். திரும்பிப் பார்த்தேன்.
“மீனா! உதவி செய்யணும் என்று நீ நினைத்தாலும் அதை அவர்கள் பெற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த உண்மையை எவ்வளவு சீக்கிரம் புரிந்த கொள்கிறாயோ அவ்வளவு நல்லது” என்றார்.
நான் கண்ணிமைக்காமல் அப்பாவை பார்த்தேன். அவருடைய கண்களில் கடந்தகால வேதனை ஏதோ நிழலாடியதை என்னால் உணர முடிந்தது.
*********
மனநிலை சரியாக இல்லாத போதெல்லாம் பட்டா மாமியின் வீட்டுக்குப் போய், மாமியின் நிழலில் ஆறுதல் அடைவது பழக்கமாகிவிட்டது. அம்மா கிளப்புக்கு போயிருந்தாள். கிளப் ஆண்டுவிழா ஏற்பாடுகள் ரொம்ப பெரிய அளவில் நடந்து கொண்டிருந்தன. சாரதியை வரச்சொல்லி கடிதம் எழுதியிருப்பதாகவும், விழாவுக்குக் கட்டாயம் வருவான் என்றும் அம்மா சமீபத்தில் அப்பாவிடம் இரண்டு மூன்று தடவை சொல்லும்போது கேட்டேன்.
சமீபகாலமாக எங்கள் வீட்டில் எதைப் பற்றிப் பேசினாலும் உரையாடல் சாரதியின் பக்கம் திரும்பிக் கொண்டிருந்தது. அம்மாவுக்கு இருபத்தி நான்கு மணி நேரமும் சாரதியின் நினைப்புதான். அம்மாவின் மனதில் அவ்வளவு பிரியத்தை சம்பாதிப்பது சாதாரண விஷயம் இல்லை. நாள் ஆக ஆக எனக்கு சாரதியிடம் பொறாமை ஏற்படத் தொடங்கியது.
அன்று மாமியின் வீட்டுக்குப் போனேன். மாமி மல்லிகைப்பூக்களை பறித்தபடி வாசலிலேயே தென்பட்டாள். என்னைப் பார்த்ததும் முறுவலுடன் வரவேற்றாள். மாமியின் மலர்ந்த முகத்தைப் பார்க்கும்போதே என் வேதனையில் பாதி குறைந்து விட்டதுபோல் இருந்தது.
“இன்னிக்குத்தான் உன் பிரண்டிடமிருந்து கடிதம் வந்தது. அதை எப்படி உன்னிடம் சேர்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்” என்றாள் மாமி.
இருவரும் உள்ளே சென்றோம். மாமி கொடுத்த கடிதத்தை உடனே பிரித்தப் படித்தேன்.
அண்ணி!
உன் கடிதத்தைப் படித்ததும் எனக்கு மூளையே கலங்கிவிட்டது போல் இருந்தது. இரண்டு நாட்கள் சரியாக சாப்பிடவில்லை. உறங்கவும் இல்லை. இரவும் பகலும் நீ சொன்ன விஷயங்களை யோசித்துப் பார்த்தேன். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். நீ சொன்னது போலவே இந்த கல்யாணத்திற்கு நான் சம்மதிக்கப் போவதில்லை.
இந்தத் திருமணத்தை நான் மறுப்பதால் எங்கள் குடும்பத்திற்கு கடுகளவு உபகாரம் நடந்தாலும் எனக்கு சந்தோஷமாக இருக்கும். இந்தக் கல்யாணம் நடைபெறாமல் போனதால் எனக்கும், குடும்பத்திற்கும் நல்லதுதான் நடந்தது என்று அம்மாவும், அண்ணாவும் நினைக்கும் நாள் என்றாவது வரணும் என்று மனப்பூர்வமாக விரும்புகிறேன்.
நேற்று மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து கடிதம் வந்து. தாம்பூலத் தட்டை மாற்றிக் கொள்ளவும், முகூர்த்த நாள் குறிக்கவும் அடுத்த வாரம் வரப் போவதாக எழுதியிருந்தார்கள். இன்று இரவே அண்ணாவிடம் என் மறுப்பைத் தெரிவிக்கப் போகிறேன்.
உன் ராஜி.
கடிதத்தைப் படித்து முடித்ததும் என் மனம் ராஜியின் பால் இரக்கத்தால் நிரம்பிவிட்டது. என்னுடைய தூண்டுதல் இருப்பதால் ராஜி தன் அண்ணனிடம் திருமண விஷயத்தில் மறுப்பு தெரிவிக்கப் போகிறாள். அதாவது என்னுடைய பொறுப்பு இருமடங்காகிவிட்டது. ஆனால் அப்பாவோ இந்த விஷயத்தில் எந்த விதமான உதவி செய்யவும் தயாராக இல்லை. சங்கடத்தில் மாட்டிக் கொண்டது போல் இருந்தது என் நிலைமை.
எதிரகாலத்தில் இதைவிட இக்கட்டான நிலைமையில் நான் சிக்கிக் கொள்ளக்கூடும் என்றும், ஏதோ பெரிய ஆபத்து எனக்காகக் காத்திருப்பது போலவும் தோன்றியது.
யார் என்ன சொன்னாலும், எப்படிப்பட்ட பிச்னைகள் வந்தாலும் ராஜிக்கு ஒரு வழி காட்ட வேண்டும் என்று திடமாக முடிவு செய்து கொண்டேன். மனம் இருந்தால் வழி கிடைக்காமல் போய் விடுமா என்ன?
********
ராஜிக்கு தைரியம் சொல்லி கடிதம் எழுதி தபாலில் சேர்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வரும்போது வழியில் போட்டோ ஸ்டூடியோ திறந்திருப்பது கண்ணில் பட்டது. போட்டோக்களை பற்றி மறந்து போயிருந்த நான் என்னையும் அறியாமல் அந்தப் பக்கம் போனேன். புதிய முதலாளியின் நிர்வாகத்தில் ஸ்டூடியோ மறுபடியும் தொடங்கப் பட்டிருந்தது. கடையில் புதிதாக வேலைக்கு சேர்ந்த ஆள் என்னிடம் இந்த விவரத்தைத் தெரிவித்தான். போட்டோ ரீல் கொடுத்த தேதியைச் சொன்னதும் உள்ளே போய் கால் மணி நேரம் தேடிவிட்டு எடுத்துக் கொண்டு வந்தான்.
“ஒரே ஒரு போட்டோவைத் தவிர மற்ற எதுவும் சரியாக வரலைங்க” என்றான்.
ஆர்வத்துடன் போட்டோக்களை பார்க்கத் தொடங்கினேன். ராஜேஸ்வரியும், அத்தையும் பவழமல்லி செடிக்குக் கீழே நின்றபடி எடுத்த போட்டோவில் வெயில் கண்களில் விழுந்ததால் இருவரும் கண்களை மூடிவிட்டார்கள். ராஜேஸ்வரியின் புடவை காற்றில் பறந்ததால் வயிறு பூசினாற்போல் தென்பட்டது. குழந்தைகளுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோவில் மது, காமேஸ்வரி கண்களை இமைத்து விட்டார்கள். வெளிச்சம் போறாததால் மற்ற போட்டோக்களும் திட்டு திட்டாக வந்தன.
போட்டோ எடுப்பதில் ஓரளவுக்கு திறமை பெற்று இருந்த எனக்கு இந்த போட்டோக்கள் முகத்தில் கரியை பூசியதுபோல் இருந்தன. அங்கேயே போட்டுவிட்டு திரும்பி விடலாமா என்றுகூட நினைத்தேன்.
என் முகத்தில் தென்பட்ட உணர்வுகளை படித்து விட்டானோ என்னவோ, “அந்தக் கடைசி போட்டோவை பாருங்க மேடம். நன்றாக வந்திருக்கு” என்றான்.
கடைசி போட்டோவை எடுத்துப் பார்த்தேன். அது கிருஷ்ணனின் போட்டோ. மார்பளவு எடுக்கப் பட்டிருந்தது. உலகத்தையும் மறந்து போனவள்போல் அந்த போட்டோவைக் கணணிமைக்காமல் பார்த்தேன்.
அன்று நான் போட்டோ எடுத்தக் கொண்டிருந்த போது எடுக்கக் கூடாது என்று கிருஷ்ணன் என்மீது கல்லை எரியப் போனான் இல்லையா. நான் பயந்துபோய் நகர்ந்து கொண்டதும் கிருஷ்ணன் கல்லை கீழே நழுவவிட்டு வாய்விட்டு சிரித்த போது எடுத்த போட்டோ அது. நான் ஊகித்தும் பார்த்திராத அளவுக்கு அழகாக வந்திருந்தது. பற்கள் தெரிய சிரித்தால் பார்க்க நன்றாக இருக்காது என்று நினைத்திருந்த எனக்கு, அப்படி சிரிப்பதுகூட ஒரு விதமான அழகுதான் என்று நிரூபிப்பதுபோல் அந்த போட்டோ இருந்தது. செதுக்கியது போல் இருந்த மூக்கும், ஒளிவீசும் கண்களும் அவன் அழகை மேலும் அதிகப்படுத்தியிருந்தன.
“ரொம்ப நன்றாக வந்திருக்கு இல்லையா” என்றான்.
ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தேன். “உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால் பர்மிஷன் கொடுங்கள். பெரிதாக டெவலப் செய்து ஷோகேஸில் வைத்துக் கொள்கிறோம்” என்றான். “அடுத்த தடவை வரும்போது சொல்கிறேன். இந்த போட்டோ மட்டும் காபி போட்டுக் கொடுங்ள். நாளைக்கு வந்து வாங்கிக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.
அப்பா இந்நேரம் வீட்டிற்கு வந்திருப்பார். ராஜேஸ்வரிக்குக் கடிதம் எழுதுவதை நான் நிறுத்தப் போவதில்லை என்று சொன்ன பிறகு அப்பா என்னிடம் முகம் கொடுத்து பேசவில்லை. அம்மாவுக்கு என்மீது எவ்வளவு கோபம் வந்தாலும் எனக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அப்பா என் விஷயத்தில் கொஞ்சம் சுணக்கம் காட்டினாலும் ரொம்ப வருத்தமாக இருக்கும் மறுபடியும் அப்பா சாதாரணமாகப் பேசும் வரையில் எனக்கு இருப்பு கொள்ளாது. அப்பாவிடம் இந்தப் போட்டோவைக் காண்பித்து, மனம் விட்டுப் பேசி அப்பாவின் மூடை சரிசெய்து, எங்கள் இருவருக்கும் நடுவில் ஏற்பட்ட இந்தச் சின்ன கருத்து வேற்றுமையைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.
நான் வீட்டுக்கு வந்தபோது அப்பா அப்பொழுதுதான் கோர்ட்டிலிருந்து வந்திருந்தார். உடைகளை மாற்றிக் கொண்டு முகம் அலம்புவதற்காக பாத்ரூம் பக்கம் போய்க் கொண்டிருற்தவர் என்னைப் பார்த்ததும் நின்றுவிட்டு என்ன விஷயம் என்பதுபோல் பார்த்தார்.
“டாடீ! உங்களுக்கு ரொம்பப் பிடித்தமான ஒரு விஷயத்தை காட்டப் போகிறேன். பதிலுக்கு என்ன தருவீங்க?” கைகளை பின்னால் வைத்துக் கொண்டே உற்சாகமாக சொன்னேன்.
அப்பா உடனே பதில் சொல்லாமல் என்னை கூர்ந்து பார்த்தார்.
“உண்மையாகவே காட்டுகிறேன். சொல்லுங்கள், என்ன தருவீங்க?”
“நீ எது கேட்டாலும்.”
“வாக்குக் கொடுத்து விட்டாற்போல்தானே?”
அப்பா சந்தேகமாகப் பாத்தார். பிறகு யோசித்து சொல்வது போல் “உன் நன்மைக்குக் கெடுதல் வராதவரையில் நீ எது கேட்டாலும் தருகிறேன்” என்றார்.
“கொடுத்த வாக்கை மீற மாட்டீங்களே?”
“கொடுத்த வாக்கை என்றாவது நான் தவறி இருக்கிறேனா?”
இல்லை என்பதுபோல் தலையை அசைத்தேன்.
“இப்பொழுதாவது அந்தப் பொருளைக் காட்டலாம் இல்லையா?”
பின்னால் வைத்திருந்த கைகளை முன்னால் நீட்டி போட்டோவை காண்பித்தேன்.
“போட்டோவா? யாருடையது?” அப்பா சட்டென்று கையில் வாங்கிக்கொண்டு பார்த்தார். அதைப் பார்க்கும்போதே அவருடைய முகத்தில் பலவிதமான உணர்ச்சிகள் மின்னல்போல் தோன்றி மறைந்தன. நிமிர்ந்து பார்த்துக் கொண்டே “எங்கிருந்து கிடைத்தது உனக்கு?” என்றார்.
“மெலட்டூருக்குப் போனபோது நான்தான் எடுத்தேன். ரொம்ப நன்றாக இருக்கு இல்லையா?”
“ஊம். டூத் பேஸ்ட் விளம்பரத்திற்காக எடுத்தாற்போல் இருக்கு.” போட்டோவை திருப்பிக் கொடுத்துக் கொண்டே சுருக்கமாகச் சொன்னார்.
“டாடீ! நீங்க வாக்குக் கொடுத்திருக்கீங்க. எனக்கு தேவைப்பட்ட போது கேட்கிறேன். மறந்து போகாதீங்க.”
“நீ எது வேண்டுமானாலும் கேள். ஆனால் இந்த போட்டோவில் இருக்கும் நபரை மட்டும் கேட்டு விடாதே.” கம்பீரமான குரலில் சொன்னார் அப்பா.
“டாடீ!” திகைப்புடன் பார்த்தேன்.
“ஆமாம் மீனா! நீ மட்டும் அப்படி கேட்டு விட்டால் அது என் கழுத்திற்குத் தூக்குக் கயிறாக மாறும் என்பதை மறந்து விடாதே.” அந்த வார்த்தைகளை அவர் நகைச்சுவையாக சொல்வது போல் சொன்னாலும் வலிய வரவழைத்துக் கொண்ட அந்த சிரிப்புக்குப் பின்னால் ஏதோ இயலாமை, ஏமாற்றம், வேதனை இருப்பதை என்னால் உணரமுடிந்தது.
“ஆனால் டாடீ…” ஏதோ சொல்லப் போனேன். வெளியிருந்து “மீனா!” என்ற அழைப்பு கேட்டதும் நின்று விட்டேன். வாயிலிருந்து வெளியே வரப்போன வார்த்தைகளை வலுக்கட்டாயமாக அடக்க வேண்டியதாயிற்று. அப்பாவும் திடுக்கிட்டாற்போல் பார்த்தார்.
ஒரு நிமிடம் என் கையிலிருந்த போட்டோவை எங்கே மறைத்து வைப்பது என்று தெரியவில்லை. அப்பாவின் பக்கம் பார்த்தேன். அப்பா “என்ன?” என்று கேட்டுக் கொண்டே வாசலை நோக்கிப் போனார். பீரோவை திறக்கப் போனேன். அதற்கும் நேரம் இருக்கவில்லை. சட்டென்று போட்டோவை பிளவுசுக்குள் மறைத்து விட்டேன்.
நான் மறுபடியும் வாசல் பக்கம் திரும்பியபோது அம்மா உள்ளே வந்திருந்தாள். அம்மாவின் கையில் பெரிய பாக்கெட் இருந்தது. மிஸெஸ் ராமனும் பின்னாலேயே வந்தாள்.
“மீனா! சாரதி உனக்காக என்ன அனுப்பியிருக்கிறானோ பாரு.” அம்மா உள்ளே வந்து மேஜைமீது பாக்கெட்டை வைத்தாள்.
ஏற்கனவே பாக்கெட் பிரிக்கப் பட்டிருந்தது. உள்ளே சிவப்பு நிறத்தில் ஜார்ஜெட் புடவை இருந்தது. புடவையை எடுத்து மேஜை மீது பிரித்துப் போட்டாள். புடவையின் பார்ட்ரிலும், ஆங்காங்கேயும் ஜரிகையால் பூக்களும், கொடிகளுமாக எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது.
“இந்த டிசைனை அவன் ஸ்பெஷலாக செய்யச் சொல்லி வாங்கி அனுப்பியிருக்கிறான். ரொம்ப நன்றாக இருக்கு இல்லையா?”
மகிழ்ச்சியால் மின்னிக்கொண்டிருந்த அம்மாவின் முகத்தைப் பார்க்கும்போது சாரதி இந்தப் புடவையை அம்மாவுக்கு அனுப்பியிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அம்மா, அப்பா, மிஸெஸ் ராமன் மூன்று பேரும் புடவையின் விலையை, ஜரிகையின் வேலைபாட்டைப் பற்றி பேசிக் கொண்டார்கள்.
திடீரென்று அம்மா வாட்ச்சைப் பார்த்துக் கொண்டே “மைகாட்! நேரமாகி விட்டது. அங்கே ரிகார்சலுக்கு ஆட்கள் காத்திருப்பார்கள்” என்று சொல்லிக் கொண்டே அப்பாவின் பக்கம் திரும்பினாள். “மீனாவை எங்களுடன் அழைத்துப் போகிறேன். காரில் எங்களை கிளப்பில் இறக்கிவிட்ட பிறகு திரும்பி வருவாள். மிஸ்டர் ராமன் காரை எடுத்துக் கொண்டு எங்கேயோ போய்விட்டார். நாங்கள் இப்போ டாக்ஸியில் வந்தோம்” என்றாள்.
அப்பா சம்மதிப்பது போல் தலையை அசைத்தார்.
நாராயணனை வேலைக்கு வைத்துக் கொண்டது முதல் புதிய இடைஞ்சல் உருவாகிவிட்டது. நாராயணன் டிரைவ் செய்தால் அந்தக் காரில் தான் ஏறமாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்துவிட்ட அம்மா, அந்த சபதத்தைத் தீவிரமாக கடைப் பிடித்தாள். ஆகையால் அம்மா கிளப்புக்கும், வெளியே எங்கேயாவது போகும் போதும் டிரைவ் செய்யும் பொறுப்பு என் மீதும், அப்பாவின் மீதும் விழுந்தது. அப்பா கோர்ட் வேலைகளில் பிசியாக இருப்பதால் பெரும்பாலும் நான்தான் டிரைவிங் பொறுப்பை ஏற்க வேண்டியிருந்தது. அது மட்டுமே அல்லாமல் சாரதி எப்பொழுதோ பேச்சுவாக்கில் காரை டிரைவ் செய்யும் பெண்கள் என்றால் தனக்குப் பிடிக்கும் என்று சொன்னானாம். ஏற்கனவே நான் டிரைவிங் கற்று இருந்தாலும் எப்போதும் டிரைவர் இருந்து விட்டதால் நான் காரை ஓட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. கார் ஓட்டும் பழக்கமும் விட்டுப் போய்விட்டது. அதனால் அம்மா சமீபகாலமாக நான் அடிக்கடி டிரைவ் செய்யும் விதமாக பார்த்துக் கொண்டாள்.
அம்மா என்னையும், மிஸெஸ் ராமனையும் ஹாலில் உட்காரச் சொல்லிவிட்டு புடவை பார்சலை எடுத்துக் கொண்டு மாடிக்குப் போனாள். புட¨யை என்னிடம் கொடுத்து மாடிக்கு போய் வைத்துவிட்டு வா என்று என்னிடம் சொல்லுவாள் என்றும், அந்த சாக்கில் கிருஷ்ணனின் போட்டோவையும் பீரோவில் வைத்துவிட்டு வரலாம் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம்தான் கிட்டியது. அம்மா அந்தப் புடவையை தன்னுடைய பீ§¡வில் பத்திரப்படுத்தி விட்டு வந்தாள்.
அன்று மாலை அம்மாவுடன் கிளப்புக்குச் சென்றேனே தவிர நினைத்தாற்போல் உடனே வீட்டுக்குத் திரும்பி வரமுடியவில்லை. அம்மாவும், மிஸெஸ் ராமனும் நாடகத்திற்கு வேண்டிய உடைகளை வாங்க வேண்டுமென்று கடைத்தெரு முழுவதும் என்னை அலைய வைத்து விட்டார்கள்.
ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி வீட்டுக்கு வந்து சேருவதற்குள் இரவு பத்து மணியாகிவிட்டது. என் அறைக்கு வந்து உடைகளை மாற்றிக் கொள்ளும்போது இதயத்தின் அருகில் பத்திரமாக வைக்கப் பட்டிருந்த கிருஷ்ணனின் போட்டோவை எடுத்துப் பார்த்தேன்.
‘இந்த போட்டோவில் இருக்கும் நபரை மட்டும் கேட்டு விடாதே.’ அப்பா சொன்ன வார்த்தைகள் என் காதில் எதிரொலிப்பது போல் இருந்தது. கன்னத்தில் இரத்தம் வேகமாகப் பாய்ந்ததுபோல் சூடாக உணர்ந்தேன். அப்பா என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்? கிருஷ்ணனுக்கும் சுந்தரிக்கும் நிச்சயமாகியிருக்கும் விஷயம் தெரியாதா? இன்னொருத்திக்கு முடிவு செய்யப்பட்டவனை விரும்பும் அளவுக்கு நான் என்ன முட்டாளா?
திடீரென்று மனதில் ஒரு மூலையில் கேள்வி ஒன்று தலைதூக்கியது. ஒருக்கால் கிருஷ்ணனுக்கும் சுந்தரிக்கும் நிச்சயம் ஆகாமல் இருந்திருந்தால்? ச்ச… ச்ச… அந்த யோசனை எனக்கு இல்லவே இல்லை. கிருஷ்ணனின் அழகைவிட அவனுடைய தனித்தன்மைதான் என்னைக் கவர்ந்தது. நட்பு கலந்த சுபாவம் என்பதால் யாருமே அவனை விரும்பாமல் இருக்க மாட்டார்கள்.
போட்டோவை கையில் வைத்துக் கொண்டே அதை எங்கே மறைவாக வைப்பது என்று அறை முழுவதும் தேடிக் கொண்டிருந்தேன். அம்மாவின் கண்ணில் படாத இடம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. கடைசியில் என் கட்டிலுக்கு பக்கத்தில் மேஜைமீது அப்பா, நடுவில் நான், இன்னொரு பக்கம் அம்மா என்று மூவரும் தனித்தனியாக இருக்கும் போட்டோ ·ப்ரேம் இருந்தது. அதில் என்னுடைய போட்டோ இருந்த ·ப்ரேமை எடுத்து என்னுடைய போட்டோவின் பின்னால் வைத்து விட்டேன். அந்தப் போட்டோ அங்கே இருப்பது என்னைத் தவிர யாருக்கும் தெரியப் போவதில்லை. ·ப்ரேமிலிருந்து போட்டோவை வெளியில் எடுத்து யார் பார்க்கப் போகிறார்கள்?
கட்டில் மீது படுத்துக் கொண்டே கையை நீட்டினால் அந்த ·போட்டோ ·ப்ரேம் என் கைக்கு எட்டும் தூரத்தில் தான் இருந்தது. அன்று இரவு படுத்துக் கொள்ளும் முன்பு இன்னொரு தடவை போட்டோவை எடுத்து சிரித்துக் கொண்டிருந்த கிருஷ்ணனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
- கொருக்குப்பேட்டை: தனிநாடு கோரிக்கையின் தார்மிக நிலைப்பாடு (ஒரு கற்பனை ரிப்போர்ட்)
- யாரிடமும் சொல்லாத சோகம்
- ஜன்னல் பறவை:
- தொலைவானில் சஞ்சரிக்கும் ஒற்றைப் பறவை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் – காதல் என்பது என்ன ? கவிதை -28 பாகம் -4
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -10
- ஆ·பிரிக்காவின் ஓக்லோ யுரேனியச் சுரங்கத்தில் இயங்கிய பூர்வீக இயற்கை அணு உலைகள் கண்டுபிடிப்பு ! (Fossil Reactor & Geo-Reactor)(கட
- நிகண்டு = எழுத்தின் அரசியல்
- பார்வை: பல நேரங்களில் பல மனிதர்கள்/ பாரதி மணி
- பத்துப்பாட்டுணர்த்தும் மலர்ப்பண்பாடு
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -15
- நற்றமிழ் வளர்த்த நரசிம்மலு நாயுடு
- தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம்(சிங்கப்பூர்) வழங்கும் இம்மாதத்திற்கான பட்டிமன்றம்
- கம்பராமாயண முற்றோதல் நிறைவு விழா
- அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் நடத்திய சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப்போட்டி முடிவுகள்
- பாரிசு நகரில் தமிழ் இலக்கிய விழா 12 -ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்
- திரு. மு. சிவலிங்கம் அவர்களின் விழி வேள்வி (விகடன் பிரசுரம்) என்னும் நூல் வெளியீடு விழா
- வேத வனம் விருட்சம் 86
- வலி
- விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபtத்திரெண்டு
- அன்பாலே தேடிய என்…
- பெறுதல்
- முள்பாதை 30
- கிடை ஆடுகள்
- பொது நீராதாரத்தில் பாகிஸ்தானின் குயுக்தி
- A Travel to Grand Canyon (ஃக்ராண்ட் கன்யானுக்குள் ஒரு பயணம்)
- புறத் தோற்றம்
- கால்களின் அசமகுறைவு
- மலேசியா ஏ.தேவராஜன் கவிதைகள்
- யாழ்ப்பாணத்துத்தமிழ் -மொழி- இலக்கியம்- பண்பாடு
- முப்பது ஆண்டுகளில் பரிதி மண்டல விளிம்பைக் கடந்த நாசாவின் வாயேஜர் விண்கப்பல்கள் ! (Voyager 1 & 2 Spaceships)
- நினைவுகளின் சுவட்டில் -(48)
- விநோதநாம வியாசம்
- இரண்டாவது முகம்
- களம் ஒன்று – கதை பத்து -முதல் கதை -உதட்டோடு முத்தமிட்டவன்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -18
- அம்மாவின் கடிதம்
- நண்டு