தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்
email id tkgowri@gmail.com
அன்று முழுவதும் வலது காலை லேசாக ஊன்றியபடி நடந்து எப்படியோ சமாளித்தேன். மறுநாள் மாலை ஆகும்போது கால் கீழே வைக்க முடியாத அளவுக்குக் குத்துவலி எடுத்து விட்டது. உள்ளங்காலும் வீங்கியிருந்தது. ராஜேஸ்வரி தொலைவில் இருந்தே என் காலை பார்த்துவிட்டு “முள் உள்ளேயே தங்கியிருக்கும். அதான் வலியும், வீக்கமும் ஏற்பட்டிருக்கு” என்றாள்.
ராஜேஸ்வரி தானே முள்ளை எடுத்து விடுவதாகச் சொன்னாள். ஆனால் அத்தை சம்மதிக்கவில்லை. “இந்த சின்ன விஷயத்திற்கு நீ அவளைத் தொட்டு தீட்டாக்க வேண்டுமா? இப்படி வரச் சொல்லு. நான் பார்க்கிறேன்” என்றாள்.
அத்தை ஆணையிட்டபடி நான் கொல்லைப்புற திண்ணையில் உட்கார்ந்து கொண்டேன். அத்தை முக்காலியைக்கொண்டு வந்து என் முன்னால் உட்கார்ந்துகொண்டு “எங்கே பார்ப்போம்” என்று என் காலை கையில் எடுத்துக் கொண்டு பரிசீலித்தாள். “முள் உள்ளே இருக்கும்போல்தான் இருக்கு” என்று சொல்லிக் கொண்டே சே•ப்டி பின்னை எடுத்துக் கொண்டு முள் இறங்கிய இடத்தில் லேசாக குத்தினாள். நான் வீலென்று கத்தினேன். காலை பின்னால் இழுத்து கொண்டு “பரவாயில்லை அத்தை. முள் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும்” என்றேன் பயந்துகொண்டே.
“என்ன அண்ணீ! சின்னக் குழந்தைபோல் பயப்படுகிறாயே. அது கருவேல முள்ளாகத்தான் இருக்கும். உடனே எடுக்கவில்லை என்றால் இன்னும் உள்ளே இறங்கிவிடும். ஏற்கனவே அசிரத்தை செய்துவிட்டாய். அம்மா! கத்தினால் கத்தட்டும். நீ முள்ளை எடுத்து விடு” என்றாள் ராஜேஸ்வரி.
அத்தை மறுபடியும் என் பாதத்தைக் கையில் எடுத்துக் கொண்டாள். அத்தை என் உள்ளங்காலைத் தொடுவதற்கு முன்பே வீலென்று கத்தினேன். என் கத்தலைக் கெட்டு கிருஷ்ணன் கொல்லைப்புறம் வந்தான். அவன் இன்று மதியம்கூட தோட்டத்திற்குப் போகவில்லை. யாரோ ஆசாரியாம். ராஜேஸ்வரிக்கு நல்ல வரன் இருப்பதாகவும், விவரங்களைத் தெரிவிக்க வரப்போவதாகவும், கிருஷ்ணனை இருக்கச் சொல்லி தகவல் சொல்லி அனுப்பியிருந்தார். மூன்று மணி முதல் கிருஷணனும், அத்தையும் அவருக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். மணி மூன்று… நான்கு… ஐந்தும் ஆகிவிட்டது. மதுவை அழைத்து ஆசாரி மாமாவை கையோடு அழைத்து வரச்சொல்லி அனுப்பிவிட்டு கிருஷ்ணன் தெரு வாசலிலேயே நின்றிருந்தான்.
” என்ன? என்ன ஆச்சு காலுக்கு?” நான் போட்ட கூச்சலைக் கேட்டு பதற்றத்துடன் ஓடிவந்த கிருஷ்ணன் வேகவேகமாகக் கேட்டான்.
“ஒன்றுமில்லை கிருஷ்ணா! காலில் முள் குத்தி பாதி உள்ளேயே தங்கியிருக்கு. எடுப்போம் என்று பார்த்தால் காலை தொடவிட மாட்டேங்கிறாள்” என்றாள் அத்தை.
“முள்ளா? எப்போ குத்தியதாம்?” இந்த மகாராணி செருப்பு இல்லாமல் நடந்தது எப்போ என்பதுபோல் பார்த்துக் கொண்டே கேட்டான்.
“நேற்று உனக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு வரும்போது குத்திவிட்டதாம்.” என் சார்பில் ராஜேஸ்வரி பதிலளித்தாள்.
“ஓஹோ!” புரிந்து விட்டது என்பதுபோல் தலையை அசைத்தான் கிருஷ்ணன்.
இந்தப் பேச்சுக்கு நடுவில் அத்தை மறுபடியும் முயற்சி செய்யப் போனாள். வீலென்று கத்திவிட்டு அத்தையைத் தள்ளிவிடாத குறையாக என் காலை இழுத்துக் கொண்டேன். காமேஸ்வரி, மணி வேடிக்கை பார்ப்பதுபோல் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“என்னவோ ஏதோன்னு நினைத்தேன். இவ்வளவு சின்ன விஷயத்திற்கா இவ்வளவு ரகளை? அம்மா! நீ எழுந்துகொள். நான் பார்க்கிறேன்.” கிருஷ்ணன் சொன்னான்.
“வேண்டாம்… வேண்டாம்.” பாதங்களை புடவை கொசுவங்களால் மறைத்துக் கொண்டேன். அவன் என் காலை தொடுவதாவது? நினைக்கும் போதே எனக்குக் கூச்சமாக இருந்தது.
“என்னவோப்பா. இந்தப் பெண்ணின் கூச்சலுக்கு முள் விஷயம் இருக்கட்டும். முதலில் எனக்கு நெஞ்சு படபடப்பு வரும்போல் இருக்கு” என்று சொல்லிக் கொண்டே அத்தை எழுந்துகொண்டாள். அத்தை காலி செய்த இடத்தில் கிருஷ்ணன் வந்து உட்கார்ந்து கொண்டான்.
“அண்ணீ! பாதத்தைக் காட்டு. அண்ணன் எடுத்தால் கொஞ்சம்கூட வலியே தெரியாது. ஒருதடவை எனக்கு முள் குத்தியபோது எடுத்திருக்கிறான்.” ராஜேஸ்வரி பாதி தைரியம் சொல்லுவது போலவும், பாதி வேண்டுகோள் விடுப்பது போலவும் கெஞ்சினாள்.
நான் சம்மதிக்கவில்லை.
கிருஷ்ணன் என் ஆட்சேபணையை லட்சியம் செய்யவில்லை. என் சம்மதத்திற்காகக் காத்திருக்கவும் இல்லை. என் காலை தன் கையில் எடுத்துக் கொண்டு சே•ப்டி பின்னைக் கொடுக்கச் சொல்லி அத்தையிடம் கேட்டான்.
அவன் என்னைத் தொட்டதும் என் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததுபோல் அதிர்வு ஏற்பட்டது. அவன் தொடுகை கிச்சுகிச்சு மூட்டுவதுபோல் இருந்தது. அவன் பக்கம் பார்க்க விரும்பாதவளபோல் முகத்தைத் திருப்பிக் கொண்டு ராஜேஸ்வரியின் பக்கம் பார்த்தேன். ராஜி பார்வையாலேயே எனக்கு தைரியம் சொன்னாள். கிருஷ்ணன் சே•ப்டி பின்னால் முள் குத்திய இடத்தை நெரடினான். உரத்தக் குரலில் சத்தம் போட்டு காலை பின்னால் இழுத்துக் கொள்ளப் போனேன். சற்றுமுன் நான் அப்படி கத்தியதும் அத்தை மிரண்டுபோய் சட்டென்று காலை விட்டுவிட்டாள். ஆனால் கிருஷ்ணன் அப்படி விடாததோடு இடது கையால் என் காலை அசைய முடியாதபடி அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு முள்ளுக்காக தேட ஆரம்பித்தான். எனக்கு உயிர் போகும் அளவுக்கு வலித்தது. தரையில் விழுந்த மீனாகத் துடித்தேன்.
அத்தையும், ராஜேஸ்வரியும் ஆறுதல் சொல்லிக் கொண்டிர்தார்கள். மணி, காமேஸ்வரி இருவரும் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு இரக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“இந்தச் சின்ன முள்ளுக்கே யாராவது இப்படி கத்துவார்களா? இந்த சின்ன வலியைக்கூட பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?” கிருஷ்ணன் என்னை கேலி செய்வது போல் பேசிக் கொண்டே தான் பாட்டுக்கு வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தான்.
ஒரு கட்டத்தில் என்னால் வலியைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இரு கைகளாலும் அவனைத் தள்ளிவிடப் போனேன். சாத்தியப்படவில்லை. காலை இழுத்துக் கொள்ள முயன்றேன். அதுவும் முடியவில்லை. கடைசியில் என் விரல் நகங்கள் ஆழமாக பதியும் அளவுக்கு பலமாக அவன் தோள்களை பலமாக பற்றிக் கொண்டேன். என் நெற்றியில் வியர்வை அரும்பியது.
இரண்டு நிமிடங்களில் நான் ஊகித்ததை விட நீளமாக இருந்த முள் வெளியே வந்தது.
“இதோ! எவ்வளவு நீளமாக இருக்கு பாரேன்.” கிருஷ்ணன் முள்ளை எடுத்துக் காண்பித்தான்.
“எங்கே பார்ப்போம்.” எல்லோரும் பார்த்தார்கள்.
அதற்குள் மது “அண்ணா! ஆசாரி மாமா வந்துவிட்டார்” என்று சொல்லிக் கொண்டே ஓடி வந்தான்.
“கமலாம்மா! என்ன கலாட்டா இங்கே?” என்று கேட்டபடி நெற்றியில் வீபூதி பட்டையும், பின்தலையில் குடுமியுமாக ஆசாரிமாமாவும் கொல்லைப்புறம் வந்தார்.
“ஒன்றுமில்லை மாமா.” பதில் சொன்ன கிருஷ்ணன் மதுவை அழைத்து தன் அறையில் இரண்டாவது பிறையில் இருந்த ஒரு மருந்தின் பெயரைச் சொல்லி எடுத்து வரச் சொன்னான். என் காலை விடாமல் பிடித்துக் கொண்டே ஆசாரி மாமாவுடன் பேசத் தொடங்கினான்.
அத்தை உள்ளேயிருந்து நாற்காலியைக் கொண்டு வந்து போட்டாள். “உட்காருங்கள்” என்றாள் பணிவுடன்.
எனக்கு சற்று தொலைவில் அமர்ந்துகொண்ட ஆசாரிமாமா சிட்டிகையால் மூக்குப்பொடியை எடுத்து மூக்கில் திணித்து ஆழமாக மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டார். பிறகு வரன் பற்றிய விவரங்களை சொல்ல ஆரம்பித்தார். அவருடைய பேச்சலிருந்து முக்கியமாக தெரிந்து கொண்ட என்னவென்றால்….
பையன் ஸ்கூல் ¨•பனல் வரையில் படித்திருந்தாலும் பிரைவேட் கம்பெனியில் மூவாயிரம் சம்பளம் வாங்குகிறான். வீட்டுக்கு இவன்தான் மூத்தவன். இவனுக்குப் பிறகு நான்கு தங்கைகள், மூன்று தம்பிகள் இருக்கிறார்கள். தந்தை ஹெட்மாஸ்டராக இருந்து ரிடையர் ஆகிவிடார்.
“வரதட்சணை எவ்வளவு எதிர்பாரக்கிறார்கள்?” கிருஷ்ணன் கேட்டான்.
“வரதட்சணை அதிகமாக எதிர்பார்க்கவில்லை. கல்யாணம் மட்டும் நல்லபடியாக, சீர்வரிசைகளுடன் நடத்தினால் போதும்.”
“சீர்வரிசை என்றால்?” கிருஷ்ணனின் நெற்றிப் புருவம் உயர்ந்தது.
“முதலில் அவர்கள் வந்து பெண்ணை பார்த்து விட்டுப் போகட்டும். பெண்ணைப் பிடித்திருக்கு என்று சொன்ன பிறகு மற்றதை பேசிக் கொள்வோம். மாப்பிள்ளை வீட்டார் எனக்குத் தெரிந்தவர்கள். பெண்ணை அவர்களுக்கு நிச்சமாக பிடிக்கும் என்ற நம்பிக்கையில்தான் இந்த வரன் பற்றி பேச வந்தேன்.”
“பெண்ணைப் பார்க்க எப்போ வருவார்களாம்?”
“உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால் நாளை மறுநாள் நல்ல நாளாக இருக்கு. நாளை காலையில் கும்பகோணம் போகிறேன். நீ சரி என்று சொன்னால் அவர்களைக் கூடவே அழைத்துக் கொண்டு வருகிறேன்.” மற்றொரு முறை மூக்குப்பொடியைத் திணித்துக் கொண்டே ஆசாரி மாமா சொன்னார்.
கிருஷ்ணன் உடனே பதில்சொல்லவில்லை. மது கொண்டு வந்த பவுடர் மருந்தை முள் குத்திய இடத்தில் வைத்து ஜாக்கிரதையாக கட்டு கட்டினான். கட்டு போடுபோது அவன் விரல்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். மெலிதாக, நீளமாக இருந்த அவன் விரல்களில் ஒருவிதமான சுறுசுறுப்பு வெளிப்பட்டது.
“அவனைக் கேட்பானேன்? அழைத்துக் கொண்டு வாங்க” என்றாள் அத்தை.
ஆசாரி மாமா ஏதோ பதில் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் அந்தப பேச்சு என் காதுகளில் விழவில்¡ல. என் பார்வை முழுவதும் எதிரே முக்காலி மீது உட்கார்ந்து கொண்டு, மடியில் என் பாதத்தை வைத்துக் கொண்டு லேசாக தலை குனிந்தபடி கட்டு கட்டிக் கொண்டிருந்த கிருஷ்ணன் மீதே பதிந்திருந்தது.
பக்கவாட்டில் பார்க்கும்போது கன்னமும், மூக்கும் செதுக்கிய சிற்பம் போல் இருந்தன. சீரியஸாக எதையோ யோசித்துக் கொண்டிருப்பதுபோல் இதழ்களை இறுக்கி, கன்னத்தை இழுத்துப் பிடித்தாற்போல் இருந்த அந்த தோற்றம் ரொம்ப அழகாக இருந்தது. வந்தது முதல் நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆடைகள் விஷயத்திலோ, தலையை வாரிக்கொள்வதிலோ கிருஷ்ணன் எந்த விதமான சிரத்தையும் எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. அப்படியிருந்தும் அவன் தோற்றத்தில் ஒருவிதமான அழகும், கம்பீரமும் பளிச்சிட்டன.
இந்த மாலை வேளையில், மங்கி வரும் வெயிலின் கிரணங்கள் அவன் மீது பட்டு பிரதிபலித்துக் கொண்டிருந்தபோது, நான் உலகத்தையே மறந்து போனவளாக கிருஷ்ணனையே பார்த்துக் கொண்டு இருந்தேன். ஏனோ தெரியவில்லை. என் கண்களுக்கு அவன் புது மனிதன்போல், மறுபடியும் மறுபடியும் பார்க்கத் தூண்டும் அளவுக்கு தனித்தன்மை படைத்தவன்போல் தென்பட்டான்.
அத்தையும் ஆசாரி மாமாவும் ராஜேஸ்வரியின் திருமணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். திருமணப் பேச்சு வந்ததும் ராஜேஸ்வரி அங்கிருந்து நழுவினாள். சற்று நேரம் கழித்து நானும் மெதுவாக காலை ஊன்றியப் அந்த இடத்தை விட்டு வெளியேறினேன்.
நான் கிருஷ்ணனின் தோள்களை பலமாக பற்றிக் கொண்ட போது, என் பாதத்தை அவன் பிடித்துக் கொண்டபோது ஏற்பட்ட சிலிப்பை, அந்தத் தொடுகையை என்னால் ரொம்ப நாட்கள் வரையில் மறக்க முடியவில்லை.
- உற்றுழி
- ஊடக ரவுடிகளும், ஊரை ஏமாற்றும் குருவி ஜோஸ்யக்காரர்களும்
- ‘பிரான்சு கம்பன் கழகம் பொங்கல் விழா பற்றி
- யார் முதலில் செய்வது?
- அணுயுகப் புரட்சி எழுப்பிய ஆஸ்டிரிய மேதை லிஸ் மையிட்னர் (1878-1968)
- சினிமா விமர்சனம் பேசித்தீராத தனது சொற்களால் ஆன ஓர் இஸ்லாமியனின் பயணம் (My name is khan)
- மனத்தின் நாடகம் வளவ.துரையனின் “மலைச்சாமி”
- சீதாம்மாவின் குறிப்பேடு — ஜெயகாந்தன் -4
- இணையதமிழின் ஒருங்கிணைப்பு
- பரிபாடலில் முருகன் வரலாறு
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -2
- சுஜாதா அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும் சுஜாதா நினைவு விருதுகள்
- ஆசிரியருக்கு
- அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி.
- கவிதைகள்
- இதுவும் கடந்து போகும்!!?
- மீட்பாரற்ற கரையும் நண்டுகளின் நர்த்தனமும்
- கைமாத்து
- ஆடம்பரமாய் செலவழிக்கப்படும் பல லட்சம் கோடிகள் – தீர்வு யார் கையில்??
- நைட் ட்யூட்டி
- கியான்
- பாசத்திற்காக ஓர் ஏற்பாடு
- பொல்லாதவன்
- என் வயிற்றில் ஓர் எலி
- முள்பாதை 19
- நித்தியானந்தா விவகாரம் குறித்து சில சிந்தனைகள்
- மொழிவது சுகம்: ஒரு ‘போ(Po)’ன மொழியின் கதை
- வேத வனம் விருட்சம்- 75
- கூண்டுச் சிறுமி
- கே ஆர் மணி.
- கடன்
- காதலின் பெயர் பரிசீலனையில்..
- கவிதைகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம் கவிதை -23 பாகம் -4
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -7